
கல்வி பற்றிய பேச்சு எழும் இடங்களில் எல்லாம் தவறாமல் ஒரு வாதம் அல்லது அரதப்பழசான ஒரு வரி வந்துவிடும் “சிஸ்டம் சரியில்லை” என்பதே. ஆனால் ஒருகாலும் சிஸ்டம் என்றால் என்னவென்றே தெரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ள முற்படாத சமூகமாகத்தான் நாம் இருக்கின்றோம். அது என்ன என்று புரிந்தால் மட்டுமே அதில் இருக்கும் சிக்கல்களும் வழிகளும் நமக்குப் புலப்படும். முற்போக்கு பேசுகின்ற இயக்கத் தோழர்களிடமும் இதே வாதத்தினைக் காணமுடிகின்றது. ஒரு புறம் இப்படி இருக்க மறுபுறம் “கல்வியே ஆயுதம், கல்வியே மாற்றங்களுக்கு வித்து” என்ற புகழாரத்தையும் காண்கின்றோம். கல்வியே ஆயுதமெனில் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாகக் கல்வி பெற்று வரும் சமூகம் இன்று வேறு மாதிரியாக அல்லவா இருந்திருக்க வேண்டும்? வளர்ந்துள்ளோம் என்பது உண்மையே. ஆனால் கல்வி என்ற ஆயுதம் ஏன் எல்லோர் கைகளிலும் போய்ச் சேரவில்லை? ஏன் எல்லோரும் அடுத்தடுத்த படிநிலைகளுக்குச் செல்லவில்லை? அதே கல்வியை உள்வாங்கியவர்களில் எத்தனை சதவிகிதத்தினர் கல்வி நினைக்கும் அடைவை அடைந்துள்ளனர்?
சமூகத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் கல்வி பெற்றுவிட்டனர். கல்வி என்பது வெறும் எண்ணறிவும் எழுத்தறிவும் மட்டுமல்ல. எழுதத்தெரிந்தால், எண்களைத் தெரிந்தால் கல்வி பெற்றுவிட்டதாக அர்த்தம் அல்ல. அது ஓர் அங்கம் மட்டுமே. ஆனால் இதனை அடையவே படாதபாடு வேண்டியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் அனைவரையும் வரவழைக்கச் சலுகைகளும் ஏற்பாடுகளும், வகுப்பறைகளில் பசியின்றிக் கல்வி பெற ஏற்பாடு, பள்ளிகள் அருகாமையில் இருக்க ஏற்பாடு, பாடப்புத்தகங்கள் இலவசம் என எண்ணில் அடங்காத நடவடிக்கைகள். முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனாலும் இன்னும் முழுமையை நோக்கி நகரவேண்டியுள்ளது.
கல்வியை அரசினால் மட்டும் முழுமையாக எடுத்துச் செல்ல இயலாது என்பதே உண்மை. அதுவும் பல அடுக்கு சிக்கலைக் கொண்டுள்ள நமது சமூக அமைப்பில் அது மிகப்பெரிய சவால். நம் நிலமும் ஒன்றுபோல இல்லை. அனைவருக்கும் ஒற்றை வழிமுறை என்பது சாத்தியமே இல்லை. அப்படியெனில் எதுவும் நகராதா? மாறாதா? நிச்சயம் மாறும், மாற்ற வேண்டும்.
உரையாடல்கள்:
எங்கிருந்து உரையாடல்களைத் துவங்குவது? குழந்தைகளிடம்தான். அங்கே நமக்கான விடை கிடைக்கும். அவர்களின் உரையாடல்கள் சில சமயம் நம்மை உறைய வைக்கும். அவர்களிடம் அணுகும் ஒவ்வொரு குரலும் அதிகாரத்துடனே இருக்கின்றன. கொஞ்சம் கீழிறங்கி அவர்களுடன் நின்று கவனித்தால் நிறையச் சிக்கல்கள் புலப்படும். அவர்களின் பயங்களும் இயலாமைகளும் விளங்கும். எளிமையான அக்கறையான உரையாடல்கள் அவர்களிடம் மிக அவசியம். அது வகுப்பு வாரியாக வித்தியாசப்படும், பள்ளி வாரியாக வித்தியாசப்படும், பகுதி வாரியாக மாறுபடும், நிலப்பரப்பு சார்ந்து மாறுபடும். ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் ஒரே மாதிரியான சிக்கல்கள் இருக்காது. அவற்றைப் பட்டியலிட்டு ஒவ்வொன்றாகத் தீர்க்கத் துவங்க வேண்டும்.
ஆசியர்களுடனான உரையாடல்கள்:
குழந்தைகளைப் போலவே ஆசிரியரிடம் உரையாடல்கள் அவசியம். இவர்களிடம் சிக்கல்களை மட்டுமல்ல கல்வி குறித்த கற்பிதங்களையும் பேச வேண்டியுள்ளது. உண்மையில் இந்த உரையாடல்கள் அனைத்து ஆசிரியர் பயிற்சியின்போதே தொடங்கப்பட வேண்டும். கல்வி “சிஸ்டம்” பற்றிய ஆழமான புரிதல்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. பாடத்திட்டம் என்றால் என்ன? எதற்கு இட ஒதுக்கீடு? ஏன் ஆல்பாஸ்? எதற்குச் சலுகைகள்? தேர்வுமுறை என்ன? என்னென்ன மாறுதல்கள் கல்வியில் நிகழ்கின்றன? கல்விக்கொள்கை என்ன செய்யும்? என்ன கொள்கை வேண்டும்? கல்வி மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா? அதனால் சாதகம் பாதகம் என்ன? மேலாண்மைக்குழுவின் செயல்பாடுகள், குழந்தைகளின் உரிமைகள் என உரையாடி உரையாடி அடுத்தகட்டத்திற்கு நகர வேண்டியுள்ளது. ஒரு விஷயத்தின்மீது பல்வேறு கருத்துக்கள் ஆசிரியர்கள் மத்தியில் இருக்கும். இருக்க வேண்டும். ஆனால் கல்வி எதற்கு? கல்வி எல்லோர் கைகளில் செல்ல வேண்டும், அதற்கான வழிமுறைகளில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இயங்க வேண்டியுள்ளது. அதே போல வெளிப்படையாக என்ன சிக்கல்களை வகுப்பறைகள் சந்திக்கின்றன என்பதையும் பொதுச் சமூகத்துடன் உரையாட வேண்டியுள்ளது.
பெற்றோர்களுடான உரையாடல்கள்:
குழந்தைகளுடனும் ஆசிரியர்களுடன் கல்வி குறித்த உரையாடல்கள் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவிற்குப் பெற்றோர்களுடன் (பொதுச் சமூகம் என்றும் சேர்த்துக்கொள்ளலாம்) உரையாடுவது மிக அவசியம். மாணவர்களுக்கும் ஆசிரியர்களும்கூட ஏதோ பெயருக்கு எனச் சில மேடைகளும் களங்களும் இருக்கின்றன, ஆனால் பெற்றோர்களுக்குக் கல்வி குறித்த உரையாடல்களை நிகழ்த்தவும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் ஒரு களமும் இல்லை. பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் வெறும் கோரிக்கை வைக்கும் இடங்களாக மாறிவிட்டன. இன்னும் சொல்லப்போனால் தனியார்ப் பள்ளிகளில் பெற்றோர்களைத் தனித்தனியே மட்டும் சந்திக்கின்றனர்.
சில ஆண்டுகளாகப் பள்ளிக்கல்வித்துறையில் பள்ளி மேலாண்மைக்குழுக்களை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரோக்யமான முன்னெடுப்பு. அங்கும் பள்ளியில் சிக்கல்கள் குறித்து மட்டுமே பேசப்படுகின்றன. அல்லது ஒரு விழாவிற்கு என்ன செய்யலாம், யாரை அழைக்கலாம், பட்ஜெட் என்ன போன்ற விஷயங்களைப் பேசுகின்றனர். அது வரவேற்கத்தத்து ஆனால் அது போதாது.
தேசிய கல்விக்கொள்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது, மாநில கல்விக்கொள்கையின் வரைவினை மாநில அரசு வெளியிட்டது. உண்மையின் கல்வியின் முக்கிய பங்கேற்பாளர்கள் பெற்றோர்கள். அவர்களிடம் இது குறித்தான வாதங்கள் நிகழவே இல்லை. அவர்களுக்கு அப்படி ஒரு கொள்கை என்றால் என்ன என்றே தெரியவில்லை என்பதே உண்மை.
எந்தப் பள்ளியில் சேர்ப்பது, என்ன வகையான பள்ளிகள் இருக்கின்றன, மாநில பாடத்திட்டத்திற்கு சி.பி.எஸ்.சிக்கு என்ன வித்தியாசம், என்னென்ன பாடத்திட்டம், அருகமைப்பள்ளியின் அவசியம், தேர்வு முறையில் மாற்றங்கள். கல்விக்கொள்கையால் வரும் மாற்றங்கள், எப்படிக் கல்லூரியில் சேர்ப்பது, பெற்றோர்களின் குழந்தைகளின் உரிமைகள், என்னென்ன சலுகைகள் உண்டு, பாடத்திட்டம் என்றால் என்ன? கலைத்திட்டம் என்றால் என்ன? ஏன் பள்ளி மேலாண்மைக்குழுக்கள் அமைக்கப்பட்டன, கல்வி உரிமைச் சட்டம் என்ன சொல்கின்றது, கலைகள் பள்ளியில் ஏன் அவசியம், பயணங்கள் ஏன் அவசியம் எனப் பலவிதப் பொருண்மையில் பெற்றோர்களிடம் பேச வேண்டியுள்ளது.
பெற்றோர்களிடம் இவற்றையும் இவற்றைத் தாண்டியும் பேச வைத்துவிட்டால் பெரும் அதிர்வுகளையும் தேவையற்ற மாற்றங்களை ஒன்றிய அல்லது மாநில அரசு கொண்டு வரும்போது பெற்றோர்களிடம் உரையாடல் நிகழ்த்தும். மேலும் அதனைத் தடுக்கப் பெற்றோர்கள் குரல் கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு அரணாக நிற்பார்கள்.
இப்படி எல்லா நிலைகளிலும் காட்டமான கல்வி குறித்தான உரையாடல்களை அமைப்பது காலத்தின் அவசியம். எந்தச் சிக்கலான தலைப்பினையும் பேச அது தளம் அமைக்கும். பல பெயர்களில் இந்த மேடைகள் அமைய வேண்டும். நெகிழ்வுத்தன்மையுடன் ஆனால் காட்டமான உரையாடல்களுக்கு வித்திடுமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.