
மாநிலப் பட்டியலில் இருந்த பள்ளிக்கல்வி மேனாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அவசரநிலை கொண்டுவந்த போது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்க முடியாத சிக்கலுக்குள் இருப்பதற்கு கல்வி மாநில பட்டியலில் இல்லாததும் ஒரு முக்கியக் காரணம். நீட் முதலான தேர்வுகள்தான் இதற்கு உதாரணம். இன்றைக்கும் ஒன்றிய அரசின் மாநிலங்கள் மீதான தாக்குதலில் கல்வித்துறை முக்கியமாக அமைகிறது. இத்தகைய சூழலில் மாநில சுயாட்சியைப் பேசுகின்ற ஒரு அரசு தன் கல்வித்தரத்தை எவ்வாறு வைத்திருக்க வேண்டும்.
ஒன்றிய அரசு கொண்டுவரும் “ஆல்.பாஸ் எதிர்ப்பு, மும்மொழிக் கல்வி முதலான பலவற்றை நெஞ்சுறுதியோடு எதிர்கொள்ளும் தமிழ்நாடு அரசு தன் பள்ளிக்கல்வியில் அத்தகைய சிந்தனையை வளர்த்தெடுக்கும் களத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறதா? அதிகாரிகள் எந்த சித்தாந்தத்தை மனம் கொண்டிருக்கிறார்கள்? பள்ளி வளாகத்திற்குள் நடப்பதை ஊடகங்கள் சொல்லுமா?
கள யதார்த்தம்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பள்ளிக்கல்வி சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து காட்டப்படுகிறது. உண்மையில் அத்தகைய தேர்ச்சிக்கு தகுதியான மாணவர்கள் உருவாகி இருக்கிறார்களா என்பது அத்துறைக்குத்தான் வெளிச்சம். ஆனால் ஒப்பீட்டளவில் இந்திய அளவில் கல்வி வளர்ச்சியில் முதன்மையான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்பதும் இங்கு பல்வேறு சமூக நீதி சார்ந்த திட்டங்கள் கல்விக்காக முன்னெடுக்கப்படுகின்றன என்பதும் மறுப்பதற்கு இல்லை. வடநாட்டை ஒப்பிடுவதாலேயே நாம் முன்னுக்கு நிற்கிறோம் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இங்கு வலியுறுத்தப்படும் கல்வியில் எதார்த்தத்தில் ஆழமான கற்றல் நடைபெறுகிறதா என்பது சந்தேகத்திற்குரியது.
செம்மையான பாடத்திட்டம்
பாடத்திட்டத்தை வகுக்கக் கூடிய வள அறிஞர்கள் குழு மிகச் சிறந்த பாடத்திட்டத்தை இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சிறந்த பாடத்திட்டத்தை தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறார்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை .அதற்குச் சிறந்த உதாரணமாக ஒன்றிய அரசு நடத்தக்கூடிய குடிமைப்பணி தேர்வுகளுக்கான பாடப்புத்தகத்திற்கு மத்திய அரசின் பாடத்திட்டத்தைக் காட்டிலும் இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்தையும் தவிர்த்து தமிழ்நாட்டு பாடநூல்களை படிக்குமாறு பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் வலியுறுத்துவதிலிருந்து இதனை புரிந்து கொள்ள முடியும். மிகச்சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கக் கூடிய பல அறிஞர்களுக்கும், தமிழக கல்விச் சூழல் குறித்து ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொது சமூக கல்வியாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் பள்ளி வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பது துளியும் தெரியவில்லை என்பதுதான் முரண் .
அதிகாரிகளின் கடிவாளம்
உண்மையில் பள்ளிக் கல்வியை நடத்துகின்ற அதிகாரிகள் சமகாலப் பிரச்சனைகளை இந்தக் கல்விமுறையில் பயிலும் மாணவர்கள் புரிந்து கொண்டு எதிர்வினை ஆற்றக்கூடிய தன்மையை வளர்த்துக் கொள்கிறார்களா? அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் செயல்பட மாநில மாவட்ட அதிகாரிகள் அனுமதிக்கிறார்களா என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய முக்கியமான நேரம் இது.
ஏனெனில் இங்கு கல்வி என்பது மனப்பாடம் செய்து 35 மதிப்பெண் எடுப்பது மட்டுமே போட்டியாக நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களின் மதிப்பெண்ணை மிகப்பெரிய விளம்பரங்கள் செய்து உருவாக்கி வந்தது எல்லோரும் அறிவோம். குறிப்பாக “நாமக்கல் மாடல்” என்று சொல்லக்கூடிய மதிப்பெண்ணை மட்டுமே நோக்கிய ஓட்டம் அங்கிருந்து தொடங்கியது
தனியார் பள்ளிகள் செயல்படுத்தக்கூடிய இந்த மதிப்பெண் சார்ந்த ஓட்டம் தற்போது அரசு பள்ளிகளுக்கு தேர்ச்சி சதவீதம் என்னும் வடிவில் முழுமையாக பாடத்திட்டத்தை புரிந்து நடத்துவதற்கு இல்லாத சூழலை உருவாக்கி இருக்கிறது.
உதாரணமாக ஒரு மாவட்ட கல்வி அதிகாரி பார்வையிடுவதற்காக பள்ளிக்கு வரும் பொழுது அவர் சொல்கிறார் “ஓர் ஆண்டுக்கு 300 சிறு தேர்வுகளை ஆசிரியர்கள் நடத்தி வைத்திருக்க வேண்டும் .அதனைப் பாடக்குறிப்பு ஏட்டில் பதிவு செய்திருக்க வேண்டும் ” கட்டாயம் உயர் அதிகாரிகளுக்கு அச்சப்படக்கூடிய ஆசிரியர்கள் இவற்றை செய்வதற்கும் தயாராக இருக்கிறார்கள் என்பது மிக கசப்பான உண்மை .
பள்ளிகள் இயங்கும் முறைமை
பள்ளி எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பொது சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக மேல்நிலைப் பிரிவில் மொழிப் பாடங்களுக்கு ஒரு வாரத்திற்கு நான்கு பாட வேளையும் இதர அறிவியல் மற்றும் வரலாறு, புவியியல் கணக்குப்பதிவியல் போன்ற பாடங்களுக்கு ஏழு பாட வேளையும் ஒதுக்கப்படுகிறது .
ஒரு ஆண்டில் மொத்தம் 210 நாட்கள் மட்டுமே பள்ளி வேலை நாள். விடுமுறைகள் தவிர்த்து இந்த 210 நாட்களுக்குள் தான் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு ,மூன்று இடைப்பருவத் தேர்வுகள் ,திருப்புதல் தேர்வு செய்முறை தேர்வு ஆகியவற்றை நடத்தி முடிக்க வேண்டும் .
இவ்வளவையும் வைத்துக்கொண்டு தான் உயர் அதிகாரிகள் இத்தனை சிறு தேர்வுகள் நடத்த வேண்டும் என்று வாய் வழியாக ஒரு உத்தரவிடுகிறார்கள். இப்படியான உத்தரவுகள் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும். இவற்றைத் தாண்டி பள்ளிக்குள் மாணவர்களை ஒழுங்கு செய்வதற்காக ஆசிரியர்களால் எதுவும் செய்ய முடியாத சூழல் மனித உரிமை களம் சார்ந்தும், விழுமியங்கள் சார்ந்தும் ஆசிரியர்களுக்கு போதிக்கப்படுகிறது .
சமூக சூழலின் வெளிப்பாடுதான் மாணவர்கள் பல்வேறு முரண்களோடு இருப்பார்கள் என்பதை சமூக அறிவியல் உள்ள ஒரு ஆசிரியர் புரிந்து கொள்கிறார் என்றாலும் மாணவனை எதுவுமே கேட்க முடியாத சூழல் நிலவுகிறது.உதாரணமாக மாணவர்களின் சிகை அலங்காரம், போதைப் பொருட்கள், அவர்களுடைய ஆடை போன்ற விஷயங்களில் ஒழுக்கம் சார்ந்த போதனையைப் பள்ளிக்கூடம் தான் கொடுக்க முடியும் என்பது யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. ஆனால் இன்றைக்கு எந்த ஆசிரியரும் ஒரு மாணவனை ஒழுக்கவியல் சார்ந்து கண்டிப்பதைக் கூட இளம் தலைமுறை ஏற்க மறுப்பதும், கெடு வாய்ப்பாக நம் மாணவர்களின் பெற்றோரும் தன் மகனை எதுவும் குறை சொல்லி விடக்கூடாது என்கிற நோக்கத்திலேயே செயல்பட்டு வருவதும் ,ஆசிரியரும் பெற்றோரும் இணைந்து உருவாக்க வேண்டிய இளம் தலைமுறை தறிகெட்டு நிற்கிறது.
ஒரு பக்கம் விழுமியங்கள் சார்ந்து ஒழுக்கங்களை கண்டிக்க முடியாத சூழலில் ஆசிரியர்களும், இன்னொரு பக்கம் மதிப்பெண்ணை நோக்கி மட்டுமே அதாவது மிகச்சிறந்த பாடத்திட்டம் கையில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் அதனை மாணவர்களுக்கு முழுமையாக புரிய வைப்பதற்கு வாய்ப்பில்லாத தேர்ச்சி சதவீதம் நோக்கிய கல்விச் சூழலில் எப்படி ஒரு மாணவனை சமூகப் பொறுப்புள்ள குடிமகனாக கற்பித்து வெளியே அனுப்ப முடியும் என்பது மிகப்பெரிய கேள்வியாக நிற்கிறது .
மாணவர்களின் வருகைப்பதிவும் ஒழுக்கமும்
ஒருகாலத்தில் இவ்வளவு நாட்கள் பள்ளிக்கு வந்தால்.மட்டுமே தேர்வெழுத முடியும் என்ற நடைமுறை இருந்தது.ஆனால் இன்று ஒருநாள் மட்டுமே மாணவன் வருகைதந்திருந்தாலும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்.மாணவர்கள் ஆசிரியர் மீதான எந்த மரியாதைக் குறைவு செயல்களையும் நிகழ்த்தினாலும் இங்கே நடவடிக்கைக்கு சாத்தியங்கள் இல்லை.வளரிளம் பருவ மாணவர்களின் உளவியலை நாம் புரிந்துகொள்ள முடியுமென்றாலுமே கூட சொல்வது எதையும் செவிமடுக்காத பண்பு கற்றலில் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதை தமிழ்ச்சமூகம் உணரவேண்டும்.
அரசு கொடுக்கின்ற பாடநூல்களை இன்றைக்குப் பல மாணவர்கள் பள்ளியிலே விட்டுச் செல்கிறார்கள்.வீட்டில் சென்று படிப்பதற்கு நூல்கள் தேவை என்பதை அவர்கள் உணர்வதேயில்லை. இதை மாணவனிடம் கேட்டபோது “இரண்டு செட் புக் கொடுக்கச் சொல்லுங்க சார்”என்பதே பதிலாக இருக்கிறது.இவ்வளவையும் மீறித்தான் மேல்நிலைக் கல்வியில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது
மாவட்டங்களின் வளர்ச்சிப் பட்டியல்
மாணவர்களுடைய தேர்ச்சி மதிப்பெண்ணை பொதுவில் தரப்படுத்தி சொல்லக் கூடாது என்று செய்த அரசாங்கம் தற்போது மாவட்ட அளவில் ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தைப் பட்டியலிட்டு வரிசைப்படுத்தும் பொழுது அந்தந்த மாவட்டத்தினுடைய முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு அழுத்தம் தரப்படுகிறது
. அவர்கள் மேலிருந்து கீழாக மாவட்ட கல்வி அலுவலர் ,தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் என்று தேர்ச்சி, தேர்ச்சி,, என்கிற ஒற்றை கடிவாளம் கட்டப்பட்ட குதிரையைப் போல மாணவர்களை நடத்துவதற்குத் தயாராகிறார்கள்.
ஒரு கணக்கு பாடத்தில் பத்து பாடங்கள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் அந்த மாணவனுக்கு 10 பத்து பாடங்களையும் நடத்தி முடித்து புரிய வைத்து தேர்விற்கு அந்த ஆசிரியர் தயாரித்தாரா என்று மேற்பார்வை செய்தல் இல்லாமல் அம் மாணவனை வெறும் 35 மதிப்பெண் வாங்க வைத்தால் மட்டுமே அவர் சிறந்த ஆசிரியராக இங்கு கொண்டாடப்படக்கூடிய சூழலும் தவிர்க்க முடியாமல் நிலவி வருகிறது. இதே தான் அனைத்து பாடங்களுக்கும் பொருந்தும். இப்படி தேர்ச்சி சதவீதத்தை நோக்கி அவர்கள் செயல்படக்கூடிய ஒரே காரணத்தினால் மாணவர்களுடைய இணை செயல்பாடுகள் 10 ,11 ,12 ஆம் வகுப்புகளில் முழுமையாக தடைபடுகிறது.
வறுமையும் கிராமப்புற சூழலும்
மாணவர்களின் தேர்ச்சிதான் முதன்மையானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.ஆனால் அதனைத் திடீரென்று எவ்வாறு கொண்டுவர முடியும்?இன்றைக்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களால் சரளமாக வாசிக்க முடியாத சூழலும் இருக்கிறது.இது கீழிருந்து செய்யவேண்டிய அறுவைசிகிச்சை.
மாணவர்கள் தேர்ச்சிக்காக காலை நேர வகுப்பு, மாலை நேர வகுப்பு இன்னும் பல பள்ளிகளில் இரவு வகுப்பு வரை தொடங்கி இருக்கிறார்கள். பொது சமூகத்திற்கு இதனை பார்க்கும் பொழுது அரசு அல்லது மாவட்ட நிர்வாகம் சிறந்த முயற்சியை தானே மேற்கொள்கிறது என்கிற ஒரு பார்வை இருப்பதை புரிந்து கொள்ள முடியும் ஆனால் கிராமப்புற மாணவர்கள் காலை பேருந்து பிடித்து 8:30 மணிக்கு சராசரியாக பள்ளிக்கு வருகிறார்கள் அவர்களுக்கான காலை உணவை பெரும்பாலும் தவிர்த்து விட்டு வருகிறார்கள் .மதிய உணவும் மேல்நிலை மாணவர்களுக்கு சத்துணவு கிடையாது என்பதால் சிறு பொட்டலங்கள் வாங்கி சாப்பிடக்கூடிய பெரும்பான்மை மாணவர்கள் தான் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள். அவர்கள் மாலை பள்ளி முடிந்தும் மாலைநேர சிறப்பு வகுப்பு இரவு வகுப்பு வரை நீளக்கூடிய சூழலுக்குள் தள்ளப்படுகிறார்கள் .
இந்த இடத்தில் ஆசிரியர்கள் தானாகவே விரும்பி வகுப்பெடுக்கும் சூழலும் உருவாகிறது .ஆக தேர்ச்சி சதவீதம் என்ற ஒன்றை நோக்கி மட்டுமே தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் செல்ல வேண்டிய கெடுவாய்ப்பான சூழலை அதிகாரிகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
உளவியல் தாக்குதல்
ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி சதவீத கூட்டத்தில் தேர்ச்சி குறைவாக உள்ள ஆசிரியரை பல அதிகாரிகள் ஒருமையில் பேசுவதும் அவர்கள் பெறும் ஊதியம் குறித்து எல்லாம் விமர்சனம் செய்வதும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மாவட்ட அலுவலர் தேர்ச்சி சதவீதம் குறைந்த ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்தார்.அதனை பார்க்கக்கூடிய ஒரு ஆசிரியர் முழுமையாக பாடம் நடத்த விரும்புவாரா அல்லது தேர்ச்சி சதவீதம் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் வகுப்பெடுக்க விரும்புவாரா என்பதை பொது சமூகத்தின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
கல்வியாளர்களின் பொதுப்பார்வை
இந்த இடத்தில் பொது மேடைகளில் தமிழக கல்விச் சூழல் குறித்தும், ஆசிரியர்கள் குறித்தும் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்யும் எழுத்தாளர்களும் ,கல்வியாளர்களும் உண்மையில் பள்ளிக்குள் இவ்வாறு நடைபெறுவதை ,இந்த அதிகாரிகள் தேர்ச்சியை நோக்கி மட்டுமே மாணவர்களை செலுத்துவதை ,அரசு கண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருப்பார்களேயானால் அதாவது அரசை நோக்கி இவ்வாறான கேள்விகளை பொது சமூகத்தினர் எழுப்பி இருப்பார்கள்ளேயானால் கல்விச்சூழல் இன்னும் தரமானதாக மேம்பட்டு விடும். இதனைச் செய்யத்தான் கல்வியாளர்கள்,எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள் இல்லை.
ஏற்கனவே இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல, முற்போக்கான மரபை உடைய நம் அரசு பல்வேறு வகைகளில் பள்ளிக் கல்வியில் கல்வி இணை செயல்பாடுகள் சார்ந்து சிறப்பான திட்டங்களை உருவாக்கி இருக்கிறது .உதாரணமாக கலைத்திருவிழா ,உலகத் திரைப்படங்கள் திரையிடுதல், மாணவர்களுக்கு வெளிநாடு கல்விச் சுற்றுலா போன்ற பல்வேறு விஷயங்களை செய்திருக்கக் கூடிய சூழலில் அதற்கான முக்கியத்துவங்கள் உணர்ந்து மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள களத்தை அதிகாரிகள் அமைத்துக் கொடுப்பது இல்லை.
ஏட்டளவில் இவ்வளவு திட்டங்கள் இருக்கின்றன என்பது மட்டுமே பெருமையாக நினைக்க முடியாது.இவற்றோடு இணைந்த தேர்ச்சியும் கவனம் கொள்ள வேண்டும். அல்லாமல் மதிப்பெண் சார்ந்த தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே முதன்மைப்படுத்தக்கூடிய சூழலை மாற்றுவார்களேயானால் ,சமூக நீதி புரிதல் பெற்ற ,அரசியல் அறிவுபெற்ற ஒருதலைமுறை வேண்டுமென்ற அரசின் நோக்கம் நிறைவேற வாய்ப்பு இல்லை.
புள்ளிவிபரம் எனும் புலி
மின்னூடகங்கள் வந்த பிறகு கற்றல் கற்பித்தல் பணி எளிமையாகியிருக்க வேண்டும். மாறாக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களை புள்ளிவிபரங்களை கணிணியில் ஏற்றும் சுமையை எமிஸ் (EMIS) எனும் திட்டத்தின் வழி கூடுதலாக்கியிருக்கிறது. இவையனைத்தையும் ஆசிரியர்களே செய்யவேண்டுமென்பதுதான் எழுதப்படாத விதி.
நிறைவாக,
இந்தியாவிலேயே சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கக் கூடிய தமிழக அரசின் செயல் திட்டத்தை இளம் தலைமுறைக்கு ,வருங்கால அறிவு சார் சமூகத்திற்கு ஒரு பெரிய பட்டாளத்தை தமிழக ஆசிரியர்கள் உருவாக்கிக் கொடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமில்லை. அரசு விழித்துக் கொண்டு ஆசிரியர்கள் “பாடம் நடத்த” வேண்டிய சூழலை வலியுறுத்தினால் இளம் தலைமுறை புரிதலோடும் அரசியல் அறிவோடும் சமூகப் பொறுப்போடும் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.
தேவை பாடத்திட்டங்கள் முழுமையாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறதா என்பதை சோதிக்கும் அதிகாரிகளும் தேர்ச்சி சதவீத அளவுகோலை தூக்கியெறியும் சிந்தனையும் மட்டுமே.