தமிழர்உணவும்கரிசல்உணவும்

மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் . இதில் உணவு தான் முதலிடம் பிடிக்கிறது. ஆதி மனிதன் காடுகளில் சுற்றித் திரிந்ததும், விலங்குகளை வேட்டையாடியதும், ஓரிடத்திலிருந்து வேறிடம் நகர்ந்ததும், ஆற்றங்கரை நாகரிகம் உருவாகிய காலத்தில் விவசாயம் செய்ததும் உணவிற்காக மட்டும் தான். 

நாடோடியாக சுற்றித்திரிந்த காலத்தில் கூட தனக்கு கிடைத்த உணவை தனது குழுவில் பகிர்ந்து உண்டிருக்கிறான் மனிதன். காலப்போக்கில் குடும்பம் என்ற அமைப்பு உருவான பின்பும் விருந்தோம்பல் பண்பு மனிதனை விட்டு அகலவே இல்லை. 

தமிழர்களின் உணவு பற்றியும் உணவை சமைத்தல், பாதுகாத்தல் உணவு செய்யத் தேவைப்படும் கருவிகள், விருந்தோம்பல் இப்படி சங்க இலக்கியங்களில் இருந்து நவீன இலக்கியங்கள் வரை உணவு குறித்த ஏராளமான தகவல்கள் நமது இலக்கியங்களில் உள்ளன. 

பெரும்பாணாற்றுப்படை பாணன் விருந்தினர்களுக்கு கருப்பஞ்சாற்றை அளித்தான் என்ற குறிப்புகளை நம்மால் காண முடிகிறது. சாமை, திணை, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம், கம்பு, அரிசி என்று சங்ககாலம் தொட்டு தமிழர்கள் தானியங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். தானியங்கள் மட்டுமல்லாது பயிர்கள், காய்கறிகள், இறைச்சி, கடல் உணவுகள்,கிழங்குகள் முதலியவையும் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 அம்மி, குழவி, உரல், உறி, ஆட்டுக்கல், திருகைக்கல், மண்ணடுப்பு, உலக்கை ,மத்து, அரிவாள்மனை , முறம், அகப்பை போன்ற கருவிகள் சமையலுக்கு உதவியாக பயன்படுத்தப்படுகின்றன .

அருந்துதல், உண்ணல், உறிஞ்சுதல் குடித்தல், தின்றல் துய்த்தல் என்று உணவு உண்ணும் முறைகளைக் கூட தமிழர்கள் வகை வகையாகப் பிரித்து வைத்துள்ளனர்.

 நீரிலிட்டு அவித்தல், வறுத்தல் சுடுதல், வற்றலாக்குதல் எண்ணெயிலிட்டு பொரித்தல், ஊற வைத்தல் போன்ற பல்வேறு உணவு முறைகளையும் சங்க இலக்கியங்கள் நமக்கு முழுமையாக அறிமுகம் செய்கின்றன.

 தமிழர்களின் இயற்கையான உணவு முறையில் உணவே மருந்தாகவும் இருந்துள்ளது. சுக்கு, மிளகு, ஜாதிக்காய், பெருங்காயம், வெந்தயம், சீரகம், ஓமம், மஞ்சள் போன்றவை சமையலில் ருசிக்காக பயன்படுத்தும் அதே வேளையில் நோய்கள் தீண்டாமல் நலமாக வாழ்வதற்கு உறுதுணையாக உள்ளது. 

இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு கொழுத்தவனுக்கு கொள்ளைக் கொடு, பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம், விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு, ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ, உற்றார் தின்றால் புற்றாய் விளையும் ஊரார் தின்றால் பேராய் விளையும் , நொறுங்கத் தின்றால் நூறு வயது, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு, பதம் பசி வந்திடப் பத்தும் பறந்து போகும், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் , உப்பிட்டவரை உள்ளளவும் நினை, உப்பில்லா பண்டம் குப்பையிலே, வெந்து கெட்டது முருங்கை வேகாமல் கெட்டது அகத்தி என்று இன்றும் நம் தமிழ்நாடு முழுவதும் உணவு குறித்து வாழ்விற்கு நெருக்கமான பழமொழிகள் புழக்கத்தில் உள்ளன.

கரிசல் நிலம் என்னும் வானம் பார்த்த பூமியின் நிலப்பரப்பில் மிக முக்கியமான ஒரு மாவட்டம் விருதுநகர் மாவட்டம் . இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் அனைத்தும் தொழில் நகரங்களே. பருப்பு எண்ணெய் மிளகாய் வற்றல் சார்ந்த தொழிற்சாலைகள் நிரம்பிய விருதுநகர் தீப்பெட்டி பட்டாசு மற்றும் அச்சகம் சார்ந்த தொழிற்சாலைகள் நிரம்பிய சிவகாசி, நெசவாளிகள் நிரம்பிய அருப்புக்கோட்டை , பஞ்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் நிரம்பிய ராஜபாளையம் . 

விருதுநகர் மாவட்டத்தின் தொழில் நகரங்களின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் காலை, மாலை இடைவேளைப் பொழுதுகளில் தங்களை உத்வேகப்படுத்திக் கொள்ளவும் உற்சாகமூட்டிக் கொள்ளவும் தேநீருடன் ஏதேனும் நொறுவைகள் எடுத்துக் கொள்வது வழக்கம். கரிசல் நிலத்தில் பரவலாக விளையக்கூடிய உளுந்தில் செய்யப்படும் உளுந்தவடைகள் இப்பகுதியில் வெகு பிரசித்தம்.

தொழிற்சாலை பணியினால் உண்டாகும் உடல் வெப்பத்தை தணிக்க அவ்வப்போது  வீடுகளில் செய்யும் சூழல் அமையாத பொழுதுகளில் கடைகளிலும் வெந்தயக்களி வாங்கி உண்பது மக்களின் வழக்கம் வெந்தயக்களி உளுந்தங்களின் உளுந்தங்கஞ்சி இப்படி உணவே மருந்தாக உடலுக்கு ஆரோக்கியமும் பலமும் தரும் உணவுகளை தேடி தேடி உண்பது அவர்களை அறியாமலேயே நடைபெற்று வருகிறது. 

சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற நகரங்களின் பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள கடைகளில் அதிகாலை நான்கு மணிக்கே வகை வகையான வடைகளும், அவித்த மொச்சை பயறோடு மசாலா கலந்த கலவையும், ரவை மற்றும் சேமியா கேசரியும் சூடாகக் கிடைக்கும். 

அரசு அலுவலகங்களின் அருகே கம்மங்கூழ், கேழ்வரகுக் கூழ் கடைகள் துவரம் பருப்புத் துவையல், ஊறுகாய்,வெடி மிளகாய்,மோர் மிளகாயோடு வாடிக்கையாளர்களின் பசி போக்கிச் செல்கின்றன.

மதிய நேரங்களில் சைவ உணவில் கரிசலில் விளையும் கீரை வகைகளும் சமயங்களில் மல்லித் துவையலும் இடம் பெறும். கார்த்திகை மாதத்தில் கரிசல் மண்ணில் மட்டுமே கிடைக்கக் கூடிய அதலக்காய் உணவகங்களில் தவறாமல் இடம் பெறும்.

மாலை நேரத்தில் வழக்கமான வேலை நேரம் முடிந்த பின்பு கூடுதலாக வேலை செய்ய உடலுக்கு ஆற்றல் பெறவும், இரவு உணவை வீட்டிற்கு சென்று உண்ணும் வரை பசியைத் தாங்குவதற்காகவும் உண்ணப்படுவதில் சிவகாசியின் பெரும்பாலான தொழிலாளர்களின் முதல் விருப்பம் சிறுதானிய உணவு வகை உணவுகளே. 

அவித்து தாளித்த சிறுதானிய உணவுகளோடு, போளி, வறுத்த கடலை, முட்டைக்கோஸ், அவித்து தாளித்த சுண்டல், முட்டைசுண்டல், சோன்பப்டி, ரவா லட்டு,அவல் லட்டு , பொறித்த காலிஃப்ளவர் மற்றும் காளான் போன்ற நொறுவைகள் மாலை நேரங்களில் தொழிலாளிகளின் பசி போக்கும் அமிர்தங்கள். 

இருபாலரும் உழைத்துக் களைத்து வீடு சேரும் போது சமைக்க நேரமும் உடல் பலமும் இல்லாத ஆற்றாமையைப் போக்கி குடும்பத்தின் பசிப்பிணிக்கு சிகிச்சை தருகிறது பரோட்டா கடைகள். 

சாதா பரோட்டா, சில்லி பரோட்டா, கொத்து பரோட்டா, வீச்சு பரோட்டா ஆகியவற்றோடு சால்னாவும் சுக்கா வகைகளும் சாப்சும் வலியலும் உணவின் மீது நமக்கு வாஞ்சையைத் தருகின்றன.

சைவம்,அசைவம்,உணவு,நொறுவைஇதில் எது நமக்கு விருப்பமோ அதை 

விடியற்காலை தொடங்கி நள்ளிரவு வரை கையில் காசிருந்தால் வயிறு நிரம்ப மனது நிரம்ப உண்ணலாம். 

முன்னரே சொன்னது போல வானம் பார்த்த பூமியான கரிசல் மண்ணில் அந்தந்த சமயங்களில் கிடைக்கும் தானியங்கள், கிழங்குகள், பயறு வகைகள் பெரும்பாலும் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

துவரம் பருப்பு துவையல், மல்லித் துவையல், அதலக்காய் பொரியல், கருணைக் கிழங்கு புளிக்குழம்பு முதலிய உணவுகள் கரிசல் மக்களை சுவையால் ஈர்ப்பவை.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் எப்படி அதிகமாக உணவக உணவுகளை பயன்படுத்தும் சூழலில் வாழ்கிறார்களோ அது போல விவசாயக் கூலிகள் காட்டில் கிடைக்கும் வெங்காயம், மிளகாய் போன்ற உணவுகளை பச்சையாக உண்ணும் சூழலில் வாழ்கிறார்கள். 

கரிசல் நிலம் கடலுக்கு வெகு தொலைவில் இருப்பதால் இங்கு கடல் மீன்களை விட கண்மாய் மீன்களும் கருவாடும் தான் இப்பகுதி மக்களால் உட்கொள்ளப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!