
நமது சமுதாயத்தில் மட்டுமல்லாமல், உலகில் உள்ள பெரும்பான்மையான சமுதாயங்களிலும் மிகவும் குறிப்பிடத்தக்க சமூக, சமுதாய மாற்றங்களை நிகழ்த்தியவர்களாக வழக்கறிஞர்கள் இருந்துள்ளார்கள். அதற்கு முக்கியக் காரணம் அன்று இருந்த (சட்டக்) கல்வி கற்பிக்கப்பட்ட முறையும், கல்லூரிகளின் தரமும்தான். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு ஒரு வழக்கறிஞர் – அல்லது இருவர் – என்று இருந்த காலம் மாறி, இப்பொழுது தெருவுக்கு ஒரு வழக்கறிஞர் என்ற நிலை இருப்பதை பார்க்கிறோம். 10,15 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரிகளில் படித்து பார் கவுன்சிலில் பதிவு செய்த பெரும்பான்மையான வழக்கறிஞர்களின் தரமும், தற்பொழுது புற்றீசல்களாக பல்கிப் பெருகியுள்ள பல்வேறு வகையான சட்டக் கல்லூரிகளில் பயின்று வழக்கறிஞர்களாக பார் கவுன்சிலில் பதிவு செய்து வரும் பெரும்பான்மையான வழக்கறிஞர்களின் தரமும் நிச்சயம் ஒப்பிட முடியாத நிலையிலே இருக்கிறது என்றால் மிகையாகாது. எண்ணிக்கையில் மிகுதியாகிவிட்ட காரணத்தினால் மட்டும் வழக்கறிஞர்களின் தரத்தைப் பற்றி யோசிக்காமல், வழக்கறிஞர்களை உருவாக்கும் களமாக உள்ள சட்டக் கல்லூரிகளின் வகைகளையும், அவற்றின் தரம் ஆகியவற்றையும், நாம் சற்று ஆழமாக ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
1980-ம் ஆண்டுகளில் 3 ஆண்டு சட்டப் படிப்பு மட்டுமே சாத்தியம். அதாவது பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு மூன்று ஆண்டுகள் ஒரு பட்டப் படிப்பை படித்துவிட்டு அதன் பிறகு மட்டுமே சட்டப்படிப்பை படிக்க இயலும் என்ற நிலை இருந்தது. இந்த நிலை கல்வியில் எப்பொழுதும் கை ஓங்கி இருந்த சில குறிப்பிட்ட சமூகத்திற்கும் தொழிலில் முன்னோடிகளாக இருந்த சில குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் ஆன இடமாகவே சட்டக் கல்லூரிகள் இருந்து வந்தன.
சட்டக் கல்வி முறையில் பெரிய அளவில் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டி மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளின் அடிப்படையில், தேசிய அளவில் ஐந்து (5) ஆண்டு சட்டப் படிப்பு முறை 80களின் பிற்பாதியில் கொண்டுவரப்பட்டது. சட்டக் படிப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவரும் நோக்கத்தோடு, 1988ல் இருந்து, மேனிலைப்பள்ளிப் படிப்பு முடித்த பின், நேரடியாக ஐந்து (5) வருடங்கள் படித்து பட்டம் பெறும் வகையில் அரசு சட்ட கல்லூரிகளில் 5 வருட சட்டக் கல்வி பயிலும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாற்றம், அதிகமாக பெண்கள் சட்டக் கல்வியை பயில ஏதுவாக அமைந்தது. இந்த காலகட்டத்தில், சட்டக் கல்வி தொடர்ந்து அரசாங்கம் நடத்தக்கூடிய அரசு சட்டக் கல்லூரிகளிலேயே அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வந்தது. இக்கல்லூரிகளில் தரமான பயிலும் முறையும், பெறப்படும் கல்விக் கட்டணங்களும் மிகவும் குறைவானதாகவும் அனைவரும் சட்டக் கல்வி பெறக்கூடிய வகையிலும் அமைந்திருந்தது. அரசு சட்டக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அரசாங்கம் செய்திருந்தது. இந்த விடுதி கட்டணங்களும் மாணவர்கள் செலுத்தக்கூடிய வகையில் குறைந்த கட்டணமாகவே இருந்தது. இக்கல்லூரிகளில் அனைத்து தரப்பு – ஜாதி, மதம், பல தரப்பட்ட வர்க்கத்தை சார்ந்த – மாணவர்களும் படிக்கும் ஒரு சூழலும் இருந்தது.
1987-ல் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் பெங்களூரில் அமைக்கப்பட்டது. அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து 1998 இல் நல்சார் (NALSAR) ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டது. இந்த தேசிய பல்கலைக்கழகங்கள் மாநில அளவில் அந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை வேந்தராக (Chancellor) நியமித்து இயங்கி வந்தது. இந்த தேசிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை பொது நுழைவு தேர்வு அடிப்படையில் நடந்து வந்தது. 2007 வரை, தனித் தனியாக இதுபோன்ற பொது தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக பொது தேர்வு எழுதுவது என்பது மாணவர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்றும் அனைத்து சட்ட பல்கலைக்கழகங்களும் இணைந்து பொதுவாக ஒரு தேர்வினை நடத்த வேண்டும் என்று கோரி வருண் பகத் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அந்த கோரிக்கையினை அரசு ஏற்று பொதுத் தேர்வு முறையினை மைய அரசாங்கம் CLAT நுழைவுத் தேர்வினை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் 2008ல் இருந்து தேசிய பல்கலைக்கழகங்களில் சட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு பொது நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இப்பொழுது தேசிய அளவில் 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் சமுதாயத்தின் கிரீமி லேயர் என்று சொல்லக்கூடிய உயர் தட்டு குடும்ப பின்னணியில் இருந்து வரக்கூடிய மாணவர்களாகவே இருக்கின்றனர். இந்த கல்லூரிகளில் கட்டணம் வருடத்திற்கு லட்சங்களில் பெறப்படுகின்றது.
இது போன்ற தேசிய பல்கலைக்கழகங்கள் அல்லாமல் 90களில் தனியார் பல்கலைக்கழகங்களும், சட்டக் கல்லூரிகளும் பல தோன்ற ஆரம்பித்தன. அது 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு பல மடங்கு உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் மட்டும் 19 தனியார் பல்கலைக்கழகங்களும் 9 அரசு சட்டக் கல்லூரிகளும் 8 தனியார் சட்டக் கல்லூரிகளும், ஒரு தேசிய சட்டப் பல்கலைக்கழகமும் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு தனியார் சட்டக் கல்லூரியும், பல்கலைக்கழகமும் ஒரு விதமாக கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து இயங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் தேசிய பல்கலைக்கழகங்கள் இலட்சக்கணக்கில் கல்வி கட்டணம் பெற்று இயங்கி வருகிறது. அரசு சட்டக் கல்லூரிகளில் மட்டுமே ஏழை எளிய மக்கள் சென்று சட்டம் பயில கூடிய வகையில் கல்வி கட்டணம் ஒரு லட்சத்திற்குள் உள்ளது.
இன்றைய சட்டக்கல்வி என்பது சமுதாயத்தின் கீழ்த்தட்டில் உள்ள மக்கள் அரசு சட்டக் கல்லூரிகளிலும், நடுத்தர வர்க்க மக்கள் தனியார் சட்டக் கல்லூரிகளிலும், உயர்த்தட்டு மக்கள் தனியார் சட்டப் பல்கலைக்கழகங்களிலும்/ தேசிய பல்கலைக்கழகங்களிலும் படிக்கக்கூடிய நிலையில் உள்ளது.
சட்டக் கல்வியின் தரமும், கற்பிக்கும் முறைகளும், கல்லூரிகளுக்குள்ளும் பல்கலைக்கழகங்களுக்குள்ளும் மாறுபட்டு தான் உள்ளது. அரசு சட்டக் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களிலும், தேசிய பல்கலைக்கழகங்களிலும் பாடத் திட்டங்களும் வேறுவேறாக உள்ளது. அடிப்படையில் கற்க வேண்டிய சட்டங்கள் என்பன அனைவருக்கும் பொதுவாக இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்டப் பாடங்கள் -elective papers- என்பன தனியார் பல்கலைக்கழகங்களிலும் தேசிய பல்கலைக்கழகங்களிலும் உயர்தரமாக உள்ளன. அங்கு, உலக அளவில் வரும் சட்ட மாற்றங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் வரும் மாற்றங்கள் போன்றவை அதிகமாக விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. இது போன்ற வாய்ப்புகள் அரசு சட்டக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அரசு சட்டக் கல்லூரிகள் பாட திட்டத்திலும் கற்பிக்கும் முறைகளிலும் மாற்றத்தை நடைமுறைபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
உயர் குடிமக்கள் படிக்கும் உயர்த்தட்டு பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சமுதாய மாற்றத்திற்கு சட்டத்தை பயன்படுத்துவது குறித்த விவாதங்களும் கல்வி முறைகளும், வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. ஆனால் எப்படிப்பட்ட சமூக மாற்றத்தை நோக்கி அவர்கள் தயார் படுத்தப்படுகின்றனர் என்பதும் கேள்விக்கு உட்படுத்த வேண்டி உள்ளது. பல லட்சங்கள் செலுத்தி படித்து வரும் மாணவர்கள் எந்த சமுதாயத்தினருக்கு வேலை செய்யப் போகின்றனர் என்பதிலும் நிறைய கேள்விகள் உள்ளன. சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ள தொழிலாளர்கள், பெண்கள், ஆதிவாசி மக்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த மக்கள், வழக்கறிஞர் கட்டணம் செலுத்த இயலாத கைதிகள், மாவட்ட அளவில் உள்ள நீதிமன்றங்களில் வழக்காடும் நபர்களுக்கான வழக்கறிஞர்கள், சமுதாய வளர்ச்சிக்கு தேவையான சிந்தனையுடன் வழக்காடும் வழக்கறிஞர்கள் இன்று மிக அரிதாகவே உள்ளனர்.