
எதற்கு கல்வி?
கேடில்லாத விழுச்செல்வம் என்று வள்ளுவர் கல்வியைக் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் வாழ்வதற்கான அறிவையும் சக மனிதர்களோடு இயங்குவதற்கான சூழலையும் இலகுவாக்குவதற்கு கல்வி அவசியம்.
இன்றைய கல்வி….?
இங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் என்று ஒரு பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்று பட்டப்படிப்பு முடித்தவர்களை அவர்கள் பெற்ற கல்வி அறிவின் அடிப்படையில் அமைந்த பணியைத் தான் செய்து கொண்டிருக்கிறார்களா என்று கேட்டால் அவர்களுடைய கல்லூரி படிப்பிற்கும் வேலை வாய்ப்பிற்கும் சம்பந்தமில்லாமல் இருப்பவர்களைத் தான் அதிகம் காண்கிறோம். பல மாணவர்களுக்கு ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ பிழையின்றி எழுதத் தெரியாத நிலை இருக்கிறது.
அப்படியானால் தங்களுடைய 15 வருட வாழ்வில் தாங்கள் பெற்ற கல்வியினால் வேலைவாய்ப்பும் அவர்களால் பெற இயலவில்லை கல்வியின் அடிப்படைப் பயனான எழுத படிக்க தெரிந்தலையும் பிழையின்றி செய்ய முடிவதில்லை. வாசிப்பு என்பது அறவே அவர்களின் வாழ்வில் இல்லை. சரியாகச் சொல்வதென்றால் புலனம், முகநூல் உள்ளிட்ட சமூக தளங்களில் அவர்களின் வாசிப்பு(!?)மேம்போக்காகத் தொடர்கிறது. குறிப்பாக வலையொளி (YouTutbe)பக்கங்களில் செய்தியை வெளியிடும் தலைப்புகளில் கூட தமிழ் பிழையோடு தான் காணப்படுகிறது. இது தமிழுக்கு மட்டுமல்ல உலகளாவிய அனைத்து தாய் மொழிகளுக்கும் நேரக்கூடிய இயல்பான ஒரு நிலையாக மாறிவிட்டது.
காந்தியின் கல்விச் சிந்தனைகள் பொருந்துமா?
காந்தியின் கல்விக் கோட்பாடுகள்.
- தாய் மொழியில் தான் கல்வியைப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் காந்தி உறுதியாக இருந்தார்.
- 7-14 வயது வரை இலவசமாகவும் தரமானதாகவும் கட்டாயமாகவும் கல்வி வழங்கப்பட வேண்டும்.
- பொறுப்புள்ள குடிமகனுடைய சக்திகளை அது வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பெற்றிருக்க வேண்டும்.
- உடல் மனம் இதயம் ஆன்மாவின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகக் கல்வி அமைய வேண்டும்.
- கைவினை என் கணிதம் சமூகவியல் பொது அறிவியல் கலை இசை இவற்றை இணைத்துத் தர வேண்டும்.
- கல்வி என்பது புத்திசாலித்தனத்தையும் கைவினைப் பயிற்சியையும் இணைத்து, குழந்தைகள் தங்கள் வாழ்வாதாரத்தை தன்னிறைவு அடையத் தூண்ட வேண்டும் (Craft-Centric Education).
- கல்வி என்பது மாணவர்களைக் கூட்டு வாழ்வின் நோக்கத்திற்கும் மனித நேயத்தின் வழியிலும் வழிநடத்த வேண்டும்.
- புத்திசாலித்தனம் மட்டுமல்லாது மாணவர்களில் நல்லுணர்வு, நேர்மை, மற்றும் ஒழுக்கம் வளர்க்க கல்வி முக்கியமாக இருக்க வேண்டும்.
நைதலிம் (1942) புதிய கல்வி முறை (மகாத்மா காந்தியால் பரிந்துரைக்கப்பட்ட கல்வி முறை)
- கற்றல் கற்பித்தல் பேதம் கூடாது.
- ஆசிரியர் மாணவர் பேதம் கூடாது.
- செயல் அறிவு மகிழ்ச்சி பிணைதல் வேண்டும்.
- சுதந்திரமானதாகவும் அடிமை தலையில் இருந்து விடுவிப்பதாகவும் கல்வி அமைய வேண்டும்.
இவ்வாறு கல்வி கற்பிக்கும் முறை, கற்பிக்கும் ஊடகம், குறித்து காந்தியடிகள் குறிப்பிடுகிறார்.
நடைமுறையில் சாத்தியமா?
காந்தியின் கூற்றுகள் நடைமுறையில் சாத்தியப்படுத்தப்பட்டால் அவருடைய கோட்பாடுகள் உயிர் பெறுமா என்ற கேள்வி நம்முள் எழுவது இயல்பு.
காந்தியடிகள் தாய்மொழி வழியில் கல்வியை கற்றுக் கொடுக்கச் சொல்லுதல் தாகூர், நேரு, அறிஞர் அண்ணா உள்ளிட்ட பல ஆளுமைகளின் கருத்தையும் அடியொட்டியது. தாய்மொழி வழி கல்வியால் தான் அனைத்தையும் மாணவர்கள் மனதில் சேர்க்க முடியும் என்பது ஐநா சபையின் கல்விக் கொள்கைகளிலும் ஒன்று
தாய்மொழி வழிக் கல்வி கல்வியை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் இருக்கக்கூடிய நடைமுறை சிக்கல்கள் தேவையான பாடநூல்கள் கிடைக்காமை, புதிய கண்டுபிடிப்புகள் பழைய வரலாற்று ஆய்வுச் செய்திகள் உள்ளிட்ட அனைத்தும் ஆங்கிலம் போன்ற உலக மொழிகளில் மட்டும் கிடைத்தல், அந்த கட்டுரைகளை உடனடியாக மொழியாக்கம் செய்வதற்கான முயற்சிகளை நாம் எடுக்காமல் இருத்தல், தமிழில் வழங்க கூடிய கலைச் சொற்களின் கடினத்தன்மை, இவை அனைத்தும் தாய்மொழி வழி கல்வியை பாதிக்கின்றன அல்லது ஊக்குவிப்பதில்லை. கவிஞர் தாரா பாரதி குறிப்பிடுவது போல தமிழும் எப்பொழுது சோற்றுக்கான (பிழைப்பிற்கான) மொழியாக மாறுகிறதோ அப்பொழுதுதான் தமிழ் மக்கள் அதனை இயல்பாக கற்றுணர விரும்புவர்.
தாய்மொழி வழி கல்வியின் இன்றைய நிலையை அதில் உள்ள சிக்கல்களைக் கண்டோம்.
கல்வியோடு சேர்ந்த பிற செயல்கள்.
கல்வி கற்கும் பொழுதே அந்த மாணவனுக்கு கைவினைப் பொருள்களின் உற்பத்தி வாழ்வியலுக்கு தேவையான தொழில்கள் அனைத்தையும் கற்றுக் கொள்ளுதல், செயல்முறைகள் அடிப்படையிலான கல்வி தர வேண்டும் என்பது காந்திஜியின் கொள்கை.
7 வயதில் தொடங்கி 14 வயது வரை அடிப்படைக் கல்வி, அதற்குப் பின்னர் தொழில்கல்வி, முதியோர் கல்வி என்கின்ற நிலைகளில் கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தேசப்பிதா சிந்திக்கிறார்.
கல்வி அனைவருக்கும் தேவையா?
கல்வி பயின்றவர்களால் மட்டும் தான் இந்த உலகில் வாழ முடியுமா? என்ற வினாவை சந்திக்கும் பொழுது கல்வி இல்லாமல் பலர் விவசாயிகளாக தொழிலாளர்களாக தங்கள் வாழ்வை வெற்றிகரமாகவே நடத்தியிருக்கிறார்கள் அப்படி எனில் இந்த பொது கல்வி என்பது ஏன் மாணவர்களுக்கு சுமையாக திணிக்கப்படுகிறது. இந்த திணிக்கப்படக்கூடிய கல்வி முறையை மேலை நாடுகள் கைவிட்டு விட்டன கல்வி என்பது எவர் கற்றுக் கொள்கிறாரோ அவர் பொருளீட்டுவதற்கும் தங்களுடைய அறிவினை விரிவு செய்து கொள்வதற்கும் உகந்ததாக அமைய வேண்டும் என்பது காந்தியின் கொள்கை.
அவ்வகையில் கல்வி கற்காமலேயே ஒரு மனிதர் விவசாயியாக இருக்கிறார். அவர் செய்யும் விவசாயத்திற்கு அனுபவக் கல்வியே போதுமானதாக இருக்கிறது. அந்த விவசாயிடம் கல்வி கற்ற ஒருவர் சென்று உரையாடும் பொழுது கல்வி அறிவு அவருக்கு இல்லை என்பதை வைத்தது அவரை அறிவில் குறைவானவராக நினைக்க வைக்கிறாது.
வாழ்வின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட அடுத்தவரின் கைகளை எதிர்பார்க்கும் கற்றல் முறை எவ்வகையில் மக்களுக்கு பயனளிக்க போகிறது என்று வினாவி இருக்கிறார் காந்தி.
காந்தியின் இந்த வினா மிக முக்கியமானது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. ஒருவர் மகிழுந்தை பயன்படுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம் ஒருவேளை அந்த வண்டி வரும் வழியில் நின்று விட்டால் அடிப்படையாக அதில் என்ன நாம் பார்க்க வேண்டும் என்னும் அறிவு அவருக்கு அவசியம்.
பிரச்சனைகளை தாங்களாகவே சரி செய்து கொள்ளக்கூடிய மகிழுந்து குறித்த அறிவும், ஆற்றலும் இருந்தால் மட்டுமே அது உண்மையான கல்வி. இன்று சமூகத்தில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் இல்லாத பொருள்கள் இவற்றில் ஏற்படக்கூடிய சிக்கல்களை தீர்க்கும் திறன் நம்மிடம் இருக்கிறதா என்று கேட்டால் கண்டிப்பாக 95 சதவீத மக்களிடம் இந்த தீர்க்கும் திறன் இல்லை என்று கூறலாம்
- அன்றாட வாழ்வியலுக்கு பயன்படாத பொருளாதார தேவைக்கும் அடிப்படையாக இல்லாத அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கக்கூடிய அறிவியல் செய்திகளை எடுத்துக்காட்டாக தாய்மொழியில் சரியாக எழுதவோ படிக்கவோ வைக்க முடியாத கல்வி இன்றைய சூழலில் சிக்கிக் கொண்டுள்ளது இதை மீட்க முடியுமா??
காந்தியின் முன் வைத்த திட்டங்கள்
- தாய்மொழி வழிக் கல்வி
- ஆன்ம வளர்ச்சி
- அறிவு வளர்ச்சி
- சிந்தித்தல்
இந்த திட்டங்களை முன் வைத்துள்ள காந்தியவர்களின் கனவு நனவாகவே இல்லை தற்போதைய புதிய கல்வி கொள்கையும் பெரிய மாற்றங்களை கொண்டு வரவில்லை. திறமையான கல்லூரி மாணவர்கள் சீக்கிரம் தங்களின் பட்டப் படிப்பை முடித்துக் கொள்ளலாம் என்பது போன்ற சில மாற்றங்களோடு தொடர்கிறது. காந்தி, மாணவர்களிடம் தகவல்களை மூளைக்குள் நிரப்பி தேர்வில் எழுத வைக்கும் முறையை எதிர்த்தார். தேர்வு என்பது மாணவர்களின் அறிவையும் திறனையும் அளவிடுவதற்கான பயனற்ற முறையாகவே அவர் கருதினார். கற்றல் என்பது மகிழ்ச்சியான மற்றும் திறன் வளர்த்தலுக்கான செயலாக இருக்க வேண்டும் என்பதே அவரது கருத்து. ஆனால் தேர்வுமுறை அதற்கு நேர் எதிராக இருந்தது. மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி, சமூக பங்களிப்பு, மற்றும் வாழ்வாதார நம்பிக்கைகளை அளவிடும் முறை தேவை என்று கருதினார். மகாத்மா காந்தியின் கல்வி தத்துவம் நமது சமூகத்தின் அடிப்படைகளை மறுமலர்ச்சி செய்ய முயன்றது என்றாலும், அதன் நடைமுறைச் சிக்கல்களும் சில முரண்பாடுகளும் காணப்படுகின்றன. அவருடைய தத்துவத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது இன்றைய தொழில்நுட்ப மற்றும் உலகளாவிய போட்டி நிலைகளுக்கு சவாலாக இருக்கும். எனவே, காந்தியின் கோட்பாடுகளின் நன்மைகளைப் பேணியிருந்தும், அதை இன்றைய உலகிற்கு பொருத்தமாக மாற்றுவதில் சமநிலையுடன் அணுகுவதற்கான முயற்சி தேவை.