கவிஞர் துரை. ஜெய்சங்கர் அவர்கள் சமூக செயற்பாட்டாளர். வேலூர் மாவட்டம் சேத்துவண்டை கிராமத்தில் வசிக்கிறார். தீவிர வாசிப்பாளர், கல்லூரிக் காலங்களிலிருந்தே கவிதை எழுதுவதிலும் இலக்கிய கூட்டங்களிலும் பங்கேற்று வருபவர்.
தலித் முரசு, புதிய கோடாங்கி, மக்கள் களம், DYFI இளைஞர் முழக்கம் மற்றும் தூரிகை இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கிறது.
எகிஜாமம் கவிஞர் துரை. ஜெய்சங்கர் அவர்களின் முதல் கவிதை தொகுப்பு. காத்திரமான, ஒடுக்குமுறைகளுக்கு எதிரான, சமூக நீதியை வலியுறுத்தும், அரசியல் தெளிவும், சமூகத்தில் நடைப்பெறும் எதிர்மறையான நடவடிக்கைகள் என சமூக அறத்தை பேசும் கவிதை தொகுப்பாக எகிஜாமம் அமைகிறது.
கேள்விக்கணைகளுடன் சில குறுங்கவிதைகள்:
வானத்தை
காற்றை
நீரை
நெருப்பை
உன் சிறிய
மரக்காலில் அளக்க நினைக்கிறாய்.
நாங்கள் கும்பிடப் போனால்
தனிக் கோவில்
நாங்கள் அரசியலுக்குப் போனால்
தனித் தொகுதி
நாங்கள் பிழைக்கப் போனால்
தனி இடம்
நாங்கள் செத்துப் போனால்
தனி சுடுகாடு
பிறகெப்படி இது நம்நாடு ?
சிலைகளின் ஊர்த் தெருவில்
விமர்சையாய்
தேர்த் திருவிழா
பலத்த போலிஸ் பாதுகாப்பு
சேரியில்.
நீ
பூசிய வர்ணங்களை
கழுவிச் செல்கிறது
ஞானமழை.
எங்கள் ஊர்
மாரியாத்தாவை
ரொம்பப் பிடிக்கும்
அவளுக்குப் பிடிக்காது
ஜாதிமல்லி.
இந்த கவிதைகள் வாசிக்கின்ற பொழுது கவிஞரின் கவிப்புலமும் சொற்சிக்கனமும், எளிய வார்த்தைகளை வைத்து சொற்சிக்கனத்தோடு சமூகத்தில் நடைபெறும் ஒடுக்குமுறைகளையும், அரங்கேற்றப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் கவிதையாக எழுதும் திறமை கவிருக்கு சிறப்பாக இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
கவிஞரின் கவிப்புலத்தை காட்டும் மேலும் சில குறுங்கவிதைகள்:
நிறைய பூக்கள்
உதிர்ந்திருக்கின்றன
மண்டியிடவில்லை மரம்.
இரும்பு மனங்கொண்டு
பிரிந்திருந்தாலும்
எத்தனையோ பேரை
கரை சேர்கிறது
தண்டவாளம்.
செத்து மிதக்கின்றன
விண்மீன்கள்
ரசாயனம் கலந்த வானம்.
மேலும், கவிதை தொகுப்பில் நீள் கவிதைகளில் சமூக கருத்துகளை, ஒடுக்கப்படுவர்களின் வாழ்வியலை கவிதைகளையும் நிறைய எழுதியுள்ளார். அதில் குறிப்பாக, #உங்கள் கழிவுகளைச் சுத்திகரித்தோம், பாடையில் இறையும் காசுகள், பரதேசிக் காக்கவும் கண்ணசந்த நானும், சேரியம்மா போன்ற கவிதைகள் சிறப்பாக அமைந்திருகிறது.
எகிஜாமம் என்கிற சிறப்பான கவிதை தொகுப்பை தந்த சமூக செயற்பாட்டாளரும் கவிஞருமான துரை. ஜெய்சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் சமூக அறத்தோடு தொடர்ந்து இது போன்ற சமூக அறம் சார்ந்த கவிதை தொகுப்புகளை வெளியிட்டு வரும் #சொற்பறவை பதிப்பகம், எழுத்தாளர். அழகிய பெரியவன் அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
நூல்: எகிஜாமம்
ஆசிரியர்: கவிஞர் துரை. ஜெய்சங்கர்
வெளியீடு: சொற்பறவை பதிப்பகம்
ஆண்டு: 2022
விலை: 70.