வெய்யில் உகந்தாள்

சில புத்தகங்களில் மட்டுமே ஏற்கனவே நம்முள் மறைந்து கிடக்கும் அனுபவங்களுக்கு மொழி கிடைக்கும். அப்படியான ஒரு புத்தகம் தான் எம்.ஏ. சுசீலாவின் “வெய்யில் உகந்தாள்” .எங்கோ என் உள்ளத்தின் அடுக்குகளில் மெல்லத் தங்கி இருந்த பெயரில்லாமல், குரலில்லாமல் இருந்த நுண்ணிய உணர்வுகள் இந்தக் கதைகளின் வழியாக மீண்டும் வெளிச்சம் பெற்றன.

இத்தொகுப்பு வெய்யிலையும் மழையையும் சமமாகப் பார்க்கும் பெண் மனங்களின் உளவியல் வரைபடம். நட்பு, நினைவு, உடைப்பு, மீட்பு, முரண், அடையாளம், அன்பு, பாச வன்முறை, சமூகச் சாடல் — இவை அனைத்தையும் சுசீலா சொற் சிக்கனத்தோடு, ஆனால் ஆழமான உளவியல் நுண்ணறிவுடன் பதிவு செய்கிறார். இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் தனித்தனி அனுபவங்களாக இருந்தாலும், அவற்றை இணைப்பது , பெண்களின் உள்ளக உலகம்.

சிறுகதை என்ற வடிவத்தின் அடிப்படை கூறுகள் — துல்லியம், ஒருமுகத் தன்மை, படிமம், உளவியல் ஆழம், திறந்த முடிவு — இவை அனைத்தும் சுசீலாவின் எழுத்துக்களில் இயல்பாகக் கலந்துள்ளன. தேவையற்ற விவரங்கள் இல்லாமல், ஒரு தருணத்தை மட்டும் துல்லியமாக பிடித்து நிறுத்தும் திறன் அவருக்கு கைவரப்பெற்றிருக்கிறது . ஒரு கண்ணாடியின் கருப்பு புள்ளி, ஒரு வெய்யிலின் வெப்பம், ஒரு நினைவின் சறுக்கு — இத்தகைய சிறிய படிமங்கள் வழியே, அவர் முழு மனித அனுபவத்தையும் வெளிக்கொணர்கிறார்.

அவருடைய சொல் ஆட்சி மிக எளிமையானது. ஆனால் அவை சொற்கள் நேராக மனதிற்குள் சென்று அமர்கின்றன. வெளிப்படையாக அமைதியான வரிகள், உள்ளுக்குள் ஒரு மெதுவான அதிர்வை உருவாக்குகின்றன. வாசித்த பின்பும் நீண்ட நேரம் நம்முள் இருந்து கொண்டே இருப்பதே இத்தொகுப்பின் வெற்றிக்காண அடையாளம்.

இந்தத் தொகுப்பின் இன்னொரு முக்கிய அம்சம் — பெண்ணிய பார்வை. பெண்கள், பெண்களின் உணர்வுகளை எழுதுவது ஏன் அவசியம் என்ற கேள்விக்கு இந்தக் கதைகள் தாமாகவே பதில் அளிக்கின்றன. பல காலமாக, பெண்களின் வாழ்க்கை வெளிப்புறக் கண்களில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. அந்தக் கண்கள் பல நேரங்களில் அவர்களின் வலியை “நிகழ்வு” ஆக மட்டுமே பார்த்துள்ளன .ஆனால் அந்த வலியின் உள் அமைப்பை உணரவில்லை. பெண்கள் தங்கள் அனுபவங்களை தாங்களே எழுதும்போது, அந்த உள் அமைப்பு குரல் பெறுகிறது.

ஒரு பெண் மட்டும் தான், ஒரு பெண்ணின் மௌனத்தின் ஒலியை சரியாகக் கேட்க முடியும்.
ஒரு பெண் மட்டும் தான், ஒரு சமரசத்தின் உள்ளிருக்கும் எதிர்ப்பை அடையாளம் காண முடியும்.
ஒரு பெண் மட்டும் தான், அன்பு எப்படி பாச வன்முறையாக மாறுகிறது என்பதை நுணுக்கமாக சொல்ல முடியும்.

அதனால் தான் பெண்களே எழுதுவது முக்கியம். அது பிரதிநிதித்துவத்திற்காக மட்டுமல்ல ,உண்மையின் வடிவமாக விளங்கவும் பெண் எழுத்து முக்கியமானது . சுசீலாவின் கதைகளில், பெண்கள் பாத்திரங்களாக மட்டுமல்லாமல் அனுபவங்களாக இருக்கிறார்கள். அவர்கள் பேசும் போது, அது ஒரு தனிமனித குரல் என்பதையும் தாண்டி ஒரு தலைமுறை அடக்கி வைத்திருந்த குரலாக ஒலிக்கிறது.

இந்தக் கதைகள் சமூகத்தையும் கேள்வி கேட்கின்றன. புராணங்களில் புதிய அர்த்தங்களை தேடுகின்றன. சீதா, ஊர்மிளா, தேவந்தி போன்ற பாத்திரங்கள் இங்கு பேசுகிறார்கள், கேள்வி கேட்கிறார்கள், சில சமயம் எதிர்க்கிறார்கள். இந்த படைப்புகள், பெண்களின் குரலை மீண்டும் நிலைநிறுத்துகின்றன.

இவ்வாறு, சிறுகதை வடிவத்தின் துல்லியத்தையும், பெண்ணிய எழுத்தின் அவசியத்தையும், உளவியல் ஆழத்தையும் ஒரே நேரத்தில் சுமந்து செல்லும் தொகுப்பாக “வெய்யில் உகந்தாள்” திகழ்கிறது.

வெயில் உகந்தாள் இரண்டு பேரிளம் பெண்களுக்கான walking நட்பு, வெயில் பற்றிய அவர்கள் பார்வைகள் வெயிலையும் மழையையும் சமமாக பாவிக்கிற, வெயிலுகந்த அம்மன்கள் என்று கொண்டாடப்படும் பழம் விற்கும் பெண்கள் ,கீரைக்காரி, மாமியாரிடம் உரிமையான அன்பு செலுத்தும் ரேஷ்மி, ரயில் சிநேகம் போன்றே பிரிந்து போகும் வெயில் சிநேகம் என வெயிலுக்கு குளிர்ச்சியாய் இதமான சம்பவங்களால் கட்டமைக்கப்பட்ட கதை .

ஒரு கணம் ஒரு யுகமாக,சூழலியலில் கல்வியாளராக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற சுலோச்சனா , சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வில் அவளை துரத்தும் தருணங்களிலிருந்து எப்படி தன்னை மீட்டெடுக்கிறாள் என்று சொல்லும் கதை. நாம் எல்லோருமே ஒரு கணத்திலிருந்து நம்மைத் துண்டித்துக் கொள்ள முனையும் பொழுது பிடிவாதத்தோடு படர்தலைத் தொடர்கின்ற பழங்குளத்து நீர் பாசியாக ஒவ்வொரு முறையும் மனம் முண்டியடித்தபடி முன்னை விட வீரியத்தோடு மனம் அதில் உட்புகுவதை அனுபவித்திருப்போம் .அதை அழகான வார்த்தைகளில் வடித்த, கடந்து போதல் சாத்தியம் என்று நம்பிக்கையூட்டும் படைப்பு. அது என்ன தருணம் அதில் இருந்து மீட்சி எப்படி பெற்றாள் என தெரிந்து கொள்ள நிச்சயம் இந்த கதையை வாசியுங்கள் .

விரிசல் கதை கண்ணாடியில் இருக்கிற கருப்பு புள்ளியை ஒரு படிமமாகக் கொண்டு புனையப்பட்ட அழகான கதை. அதைத் தாண்டி மனிதர்களின் அன்பு ,பாசம் இவற்றையும் கொண்டு நெய்யப்பட்ட சிறுகதை.
தன்னைப் பற்றிய பிம்பங்களே இல்லாத போது உடைபடுவதற்கும் எதுவும் இல்லை என இக்கதையைப் படித்தபின் தோன்றியது.

மனிதர்களை புரிந்து கொள்வதில் பல சமயங்களில் நாம் தோற்றுவிடுகிறோம் . அந்நியரிடமிருந்து அன்பும் அக்கறையும் கிடைக்கும் பொழுது சந்தேகமும் பயமும் கூடவே மனதுள்ளே தோன்றி விடுகிறது. புற முகமூடி மட்டுமே அணிந்த அகத்தில் அன்பான ஒரு மனிதனை கேதார்நாத் போன இடத்தில் இரு சகோதரிகள் காண நேர்ந்த கதை முகமூடி.

எல்லோரையும் தவறானவர்களாகவோ எல்லாவற்றிலும் சரியானவர்களாகவோ நாம் கற்பிதம் செய்து கொள்கிறோம்.அப்படி ஒருமைக்குள் மனிதர்களை அடக்க முடியாது . எல்லோரிடமும் சின்ன சின்ன குறைகள் உண்டு, shades of grey உண்டு. எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களும் எல்லாம் சரியாக செய்ய முயல்பவர்களும் சில இடங்களில் சறுக்குபவர்கள் தான் .அதேபோல பொய்மையும் வாய்மை இடத்து. சிம்மாசனத்தில் இருப்பவர்கள் ஒருபோதும் சரிவை விரும்புவதில்லை. அதற்காக இக்கதையில் சொல்லப்படும் பொய் அறிவும் அன்பும் கலந்தது.

ஊர்மிளா கதையில் மறுபடியும் காட்டிற்கு லட்சுமணனால் அழைத்துச் செல்லப்படும் சீதா அதை அறியாமல், கூட வரும் ஊர்மிளாவிடம் தன் அனுபவங்களை ,லட்சுமணன் அவளுக்காக ஏங்கி இருந்ததை வார்த்தைகளில் வடிக்கிறாள். சங்கடமான சூழ்நிலையில் எதிர்கொண்ட காட்சிகளும் அனுபவங்களும் ஞாபகங்களின் சுகமான வருடல்கள் ஆகி விடுவதை, சித்திரக்கூடம் தண்டக்காரணயம், அசோகவனம் என்று தன் நினைவுச் சேமிப்பின் பக்கங்களை திறந்து காட்ட ஆரம்பிக்கிறாள் சீதா. ஊர்மிளை அப்போது எடுக்கும் முடிவுதான் கதையின் உச்சம். எனக்கு இந்த கதை சமீபத்தில் வாசித்த ஓல்கா அவர்கள் எழுதிய மீட்சியை ஞாபகப்படுத்தியது.

மானிடவர்கென்று பேச்சுப்படில் வாழ்கின்றேன் கண்டாய் என்ற நாச்சியார் திருமொழி பாடல் அற்புதமானது அல்லவா? Mythology யை சாதியம் பார்க்கும் சமுதாய சாடும் கருவியாக கையாண்டுள்ள விதம் வெகு சிறப்பு.

தேவார மூவர்களில் ஒருவரான சுந்தரர் கயிலையில் இருந்த போது அங்கிருந்த தேவ மாதர்களான கமலினி அநிந்திதை இருவர் மீதும் காதல் கொள்ள அவர்கள் மூவரையும் மண்ணுலகர்க்கு அனுப்பி வைக்கும் ஈசன் அருளால் ஆ௹ரர்,பரவை சங்கிலியாக பிறக்கிறார்கள்.ஆரூரரின் மணம் சடங்கவிச் சிவாச்சாரியார் என்பவரின் மகளோடு ஏற்பாடாகிறது . முதியவர் வேடத்தில் அங்கு வரும் ஈசன் சுந்தரை தடுத்தாட்கொண்டு அந்த திருமணத்தை நிறுத்துகிறான் .அதன்பின் எங்குமே குறிப்பிடப்படாத சடங்கவிச் சிவாச்சாரியாரின் மகளுக்கும் திருமணத்திற்கு முந்தைய நாள் சங்கிலி நாச்சியாருக்குமான உரையாடலை விவரிக்கும் கதை .உணர்வுபூர்வமான பெற்றோரின் தாக்குதல், பாச வன்முறை ,பெண்கள் அடையாளம் இன்றி சிறுவயதில் ஒருவரின் மகளாகவும் பின்னர் வேறொருவரின் மனைவியாகவும் ஆவதை திணிப்பாக இல்லாமல் இயல்பான மொழியில் அதேசமயம் காத்திரமாக சொல்லும் பாணி அருமை. இருதார மனதிற்கு தேவலோக அங்கீகாரம் தருவதற்காக மனிதர்களின் கற்பனைக் குதிரை கட்டறுந்து ஓடி புனைவுகளை சித்தரிப்பதை அழகாகச் சாடி இருக்கிறார் .

தேவந்தியின் கணவனுடைய core beliefs எப்படி அவளுடைய வளர்ப்புத்தாய் மாலதியால் கட்டமைக்கப்படுகிறது என்று தேவந்தியின் வாயிலாக விவரித்து அவளுடைய பரந்து பட்ட பார்வையையும் அறிவையும் நம் முன் வைக்கிறார் சுசீலா. நம்மால் தேவந்தியின் கணவனுடைய identity split ஐஉணர முடிகிறது.

புதுமைப்பித்தனின் சாப விமோசனத்தை நினைவூட்டும் கதையான புதிய பிரவேசங்கள் மற்றுமொரு Wow!புகை படிந்த ஓவியமாக, தூசு படிந்த சிற்பமாக மாற்றான் மனையிலேயே சிறை இருந்த சீதை ராமனால் தீக்குளிக்க சொல்லப்பட்ட போது எடுத்த முடிவு வரலாற்றின் பக்கங்களை கறை படுத்திவிடக்கூடாது என்ற அவளின்
தீர்க்கதரிசனம் உண்மையாக இருக்கக் கூடாதா என ஏங்கச் செய்யும் அருமையான மீட்டு ருவாக்கம் .பாவப்பட்ட மானுட சீதைகளை, தவறே செய்யாத செய்யாத பெண்கள் மீது களங்கம் சுமத்தி கழிவிலேற்ற துடிப்பதை தடுக்க அவள் எடுக்கும் முடிவு அருமை.

இந்தத் தொகுப்பில் வரும் ஒவ்வொரு கதையும் வெய்யிலின் வெப்பத்தில் கருகி நிற்கும் தருணங்கள் போலத் தோன்றினாலும், அடிப்படையில் அவை அனைத்தும் தொடர்ச்சியான மீட்சியின் வடிவங்கள்.
சுலோச்சனாவின் மனப் போராட்டம் — மீள முடியாதது போலத் தோன்றும் நினைவுகளிலிருந்து சற்றே விலகிக் கொள்ளும் மீட்சி.
“முகமூடி” — சந்தேகத்திற்குள் கூட அன்பை அடையாளம் காணும் ஒரு சிறிய மீட்சி.
“பொய்மையும் வாய்மை இடத்து” — மனிதனின் சறுக்கல்களை ஏற்றுக் கொள்ளும் புரிதலின் மீட்சி.
Mythology கதைகளில் இந்த மீட்சி இன்னும் ஆழமாகிறது.
சீதாவின் நினைவுகள் — வலியை சுகமாக மாற்றிக் கொள்ளும் மீட்சி.
சங்கிலி நாச்சியார் மற்றும் மற்ற பெண்களின் உரையாடல்கள் — அடையாளமற்ற வாழ்க்கையிலிருந்து குரலை உருவாக்கும் மீட்சி.
தேவந்தி — தன்னைச் சுற்றியுள்ள உளவியல் கட்டமைப்புகளைப் புரிந்து கொள்ளும் அறிவின் மீட்சி.
“புதிய பிரவேசங்கள்” — வரலாற்றின் களங்கத்தை மறுபடியும் எழுத முயலும் ஒரு வலுவான மீட்சி.
இந்த எல்லா கதைகளிலும் மீட்சி ஒரு பெரும் வெற்றியாக இல்லாமல் மெதுவாக, கண்ணுக்குப் புலப்படாத அளவில் நிகழ்கிறது.
மீட்சி என்பது வெய்யிலிலிருந்து தப்பிப்பது அல்ல,
அந்த வெய்யிலுக்குள் நின்றபடியே
தன்னை இழக்காமல் இருக்கக் கற்றுக்கொள்வது.
வாசிக்கும் எல்லோரையும் வெயிலுகுகந்த அம்மன்களாக மாற்றுவதில் எம் ஏ சுசிலா வெற்றி பெற்றிருக்கிறார்.
11 கதைகளுமே 11 முத்துகள் .சொற்சிக்கனத்தோடு எளிமையான ஆனால் காத்திரமான வார்த்தைகளால் நிகழ்கால கதைகள் புனையப்பட்டு அதே சமயம் Mythology based கதைகளை மீட்டுருவாக்கம் செய்யும்பொழுது சுசிலாவின் தமிழ்ப்புலமையும் வியக்க வைக்கிறது.இத்தனை காலம் அவரை ஒரு மொழிபெயர்ப்பாளராகவே அறிந்திருந்த நான் இந்த புத்தகத்தின் மூலம் அவருடைய எழுத்துக்களின் ஆழத்தை தரிசிக்கும் வாய்ப்பு பெற்றேன்.அவருடைய பிற எழுத்து வடிவங்களை படிக்க ஆவலைத் தூண்டுவதாக அமைந்தது இந்தத் தொகுப்பு .இதை அழகாக வடிவமைத்துவெளியிட்ட Her Stories குஎன் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் உரித்தாக்குகிறேன்.நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!