உணவு டெலிவரிக் கதைகள்

கார்ப்பரேட் வலையில் சிக்கிய சிலந்தி மனிதர்கள்
 பெருநகரச் சாலைகளில் உச்ச வேகத்தில் குறுக்கும் நெடுக்குமாய்ப் பயணித்து பல்வேறு வாகன ஓட்டிகளின் சாபத்தோடும் வசவோடும் பயணிக்கும் உணவு டெலிவரி மனிதர்கள் நமக்கு நன்றாக அறிமுகமானவர்கள்தான். ஆனால் இவர்களின் வேகத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் இம்மனிதர்களின் வாழ்க்கைத் துன்பங்களும் மன அழுத்தமும் இன்னமும் நாம் அறியாதவையாகவே உள்ளன. ‘தற்காலிகக் கூலித் தொழிலாளர்கள்‘ என அழைக்கப்படும் இந்த உணவு டெலிவரி மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும் பணியிடம் சார்ந்த சிக்கல்களையும் வெகுஜன சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவரும் நோக்குடன் முனைவர் அ.இருதயராஜ் அவர்கள் ‘உணவு டெலிவரிக் கதைகள் – நாகரீக வாழ்வில் நவீனச் சுரண்டல்‘ என்ற இந்த நூலை எழுதியுள்ளார்.
 நுகர்வு கலாச்சார வளர்ச்சியின் ஒரு அங்கமான உணவு டெலிவரி நிறுவனங்கள் தன் தொழிலாளர்களை எவ்வளவு லாவகமாகச் சுரண்டுகின்றன என்பதை இந்நூல் தெளிவாக விவரிக்கிறது. இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள சி.ஐ.டி.யு.வின் சென்னை செயலாளர் கே.சி. கோபிகுமார் தமிழில் கிக் பொருளாதாரம் (Gig Economy) அல்லது கிக் தொழில் பற்றி வெளியான முதல் நூல் இதுவாகத்தான் இருக்கும் எனக் கருதுகிறார்.
கார்ப்பரேட் வலையில் சிக்கிய சிலந்தி மனிதர்கள்
 ஸ்விக்கி, சொமோட்டோ, ஊபர் ஈட்ஸ், ஃபுட் பாண்டா எனப் பல்வேறு உணவு டெலிவரி நிறுவனங்கள் அவசர யுகத்தின் தேவையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு கொழுத்த லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால் இவர்கள் பணியமர்த்தும் இளைஞர்களுக்கு அந்த லாபத்தின் மிகச் சிறிய அளவே சம்பளமாக வழங்கப்படுகிறது.
 ஆண்டு தோறும் 30 சதவீதத்திற்கும் மேலான லாப வளர்ச்சியை இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அடைவதாக கூறப்படும் நிலையில் அந்தத் தொழில்துறையின் முதுகெலும்பாய் இருக்கும் தொழிலாளர்களின் பொருளாதார நிலை மட்டும் இன்னும் மோசமான நிலையில்தான் இருக்கிறது. பெரிய கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை என்பதும் கடுமையான நேர்காணல்கள் இல்லாததும் இளைஞர்கள் பலரும் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. வெறும் ஓட்டுநர் உரிமமும் சொந்தமான இருசக்கர வாகனம் வைத்திருப்பதும் இத்தொழிலுக்கு பிரதான தகுதியாக இருக்கிறது. தங்களின் ஒருநாள் உழைப்பின் கூலி உடனுக்குடன் தங்களின் அக்கவுண்டில் சேர்தல், வாரமானால் சம்பளம் பெறும் வசதி, ஊக்கத் தொகைகள் என இதன் கவர்ச்சியில் மயங்கி இந்த வேலைக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. உணவு டெலிவரிக்காக வேகமாக பைக்கில் செல்வது இளைஞர்களுக்கு ஒரு சாகச மனநிலை மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். வேறு நல்ல வேலை கிடைக்காத சூழலில் பொறியியல் போன்ற உயர்கல்வி படித்த இளைஞர்களும் இந்த உணவு டெலிவரித் தொழிலுக்கு வருகின்றனர். தங்கள் செலவுக்காக பகுதி நேரமாக இத்தொழிலில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.
 பொருளாதார நிபுணர்கள் இத்தொழிலை தற்காலிக பொருளாதாரம் என வரையறுத்தாலும் இதில் உள்ள தொழிலாளர்கள் பலருக்கும் இத்தொழில் ஒரு நிரந்தர வருமானத்திற்கான ஆதாரமாகவே பார்க்கப்படுகிறது.
 ஆனால் ஒரு நிரந்தர தொழில் களத்தில் கிடைக்கும் பணிப்பாதுகாப்போ தனிப்பட்ட வாழ்க்கையில் பொருளாதார உயர்வோ எதுவும் இல்லாத சூழலில் தங்கள் வாழ்க்கை குறித்த அச்சத்துடனேயே இத்தொழிலாளர்கள் உழல்கின்றனர்.
யானைப் பசியும் சோளப் பொரியும்
 தற்காலிகத் தொழிலாளிகளான இவர்களைப் பணியமர்த்தும் பெரு நிறுவனங்கள் ஆரம்பத்தில் கவர்ச்சியான ஊக்கத் தொகைகளை வழங்கி தொழிலாளர்களை ஈர்க்கின்றன. ஆனால் அதன் பின் இவர்களின் வருமானம் ஒரு மந்தமான நிலையிலேயே தொடர்கிறது. ”பத்தாண்டுகள் இதிலேயே பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் பெரிய அளவுக்கு முன்னேறியதாகவும் பொருளாதாரத்தில் வளர்ந்ததாகவும் உதாரணங்கள் இல்லை. வரவுக்கும் செலவுக்கும் சரியாய் போய்விட்டது என்கிற நிலைதான் இருக்கின்றது. இதில் வேலை செய்கின்றவர்கள் வாய்க்கும் கைக்குமான வாழ்க்கையைத்தான் நடத்துகின்றார்கள். எனவே அப்பட்டமாக ஒரு உழைப்புச் சுரண்டல் இந்தப் பணியில் நடைபெறுகின்றது.” என நூலாசிரியர் கூறுகிறார். இந்த ஆய்விற்காக 50 நபர்களிடம் தரவுகளை ஆசிரியர் சேகரித்த போது பெரும்பான்மையோரின் கருத்து இதுவாகவே இருக்கிறது.
 உணவு டெலிவரி தொழிலாளர்கள் 3 முதலாளிகளின் கீழ் பணிபுரிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.
உணவு வணிக செயலியை இயக்கும் கண்ணுக்குத் தெரியாத நபர்.
அதை நடத்தும் முதலாளி
உணவைப் பெறும் வாடிக்கையாளர்கள் 
இந்த மூன்று நிலையில் இருந்து வருகின்ற மேலாதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இத்தொழிலாளர்களுக்கு உண்டு.
உடல்நிலை ஒத்துழைக்காத சூழலில் ஒரு டெலிவரி பாய் தனக்கு வரும் ஆர்டரை கேன்சல் செய்தால் சிலமுறை எச்சரிக்கையும் இறுதியில் அவரது கணக்கை முழுமையாக முடக்கி வேலையிலிருந்து வெளியேற்றவும் செய்கின்றனர். இந்த முதலாளித்துவ அராஜகத்தை எதிர்த்துக் கேட்க இதுவரை எந்தத் தொழிலாளர் நலச் சட்டமும் இயற்றப்படவில்லை. 
தொழிலாளர்களின் உடல், மன சிக்கல்கள்
 ஆர்டர் செய்தால் அரைமணி நேரத்திற்குள் டெலிவரி அல்லது நாற்பது நிமிடங்களுக்குள் டெலிவரி என நுகர்வாளர்களிடம் (Consumers) கவர்ச்சியாக விளம்பரம் செய்யும் பெருநிறுவனங்கள் இதற்குப் பின் இருக்கும் டெலிவரி பாய்களின் சிரமத்தைக் கண்டு கொள்வதில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு டெலிவரி செய்ய வேண்டும் என்பதால் இவர்கள் அதிவேகமாக சாலைகளில் பயணிக்கின்றனர். இதனால் இவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது. இவர்களின் இந்த தொடர்ச்சியான அவசரப் பயணம் இவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. ஒரே மாதிரியான பணி சுழற்சி முறை இவர்களின் மூளையையே மழுங்கடிக்கிறது என்கிறார் ஆசிரியர். தொடர்ச்சியாக விரைந்து வாகனம் ஓட்டுவதால் உடல்வலி, செவித்திறன் பாதிப்பு, தசைவலி ஏற்படுவதோடு உணவு டெலிவரி செய்ய தாமதமானால் வாடிக்கையாளர்கள் இவர்களை அவமானப்படும் படியாக பேசுவதும் ஆங்காங்கே நிகழ்கிறது. சொந்த வாழ்விலும் இந்த டெலிவரி பாய்கள் பல்வேறு அவமானங்களை எதிர்கொள்கின்றனர். இது ஒரு நிரந்தரமற்ற வேலை என்பதாலும் உணவு டெலிவரி தொழிலை தாழ்வானதாகக் கருதும் சமூகப் போக்காலும் இத்தொழிலில் ஈடுபடும் ஆண்களுக்கு பலரும் பெண் கொடுக்க விரும்புவதில்லை. இவர்களின் உறவினர்களும் இவர்களைத் தாழ்வானவர்களாகவே கருதி ஒதுக்குகின்றனர். இது இத்தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலை உண்டாக்குகிறது.
பெண்களும் உணவு டெலிவரி தொழிலும்
 பெண்களுக்கு உணவு டெலிவரி தொழிலில் பல்வேறு சாதக அம்சங்கள் இருப்பதைக் காணமுடிகிறது. இந்தியா போன்ற நாட்டில் பெண்ணின் வருமானம் குடும்பத்தின் கூடுதல் லாபமாகவே பார்க்கப்படுகிறது. எனவே இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஊக்கத் தொகை போன்ற Target நெருக்கடிக்குள் சிக்க வேண்டிய தேவையில்லாமல், வரும் வருமானத்தில் பெரும்பாலும் மனநிறைவு கொள்கின்றனர். பல பெண்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பார்ட் டைம் பணியாக இதனைச் செய்கின்றனர். நினைத்தால் வேலைக்குப் போவதும் குழந்தைகளோடு இருக்க வேண்டிய நேரத்தைத் தானே தீர்மானிக்கும் வசதியும் இத்தொழிலில் இருப்பதால் பெண்களில் ஒரு பகுதியினருக்கு இது ஒரு நெகிழ்வான (Flexible) தொழிலாகவே இருக்கின்றது.
 அதே நேரம் இத்தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஆண்களைப் போலவே விரைவான பயணத்தால் எழும் மன அழுத்தம் உடல் வலி போன்ற தொல்லைகளுக்கு ஆளாவதோடு உணவு டெலிவரி கொடுக்கும் இடத்தில் சிலநேரம் ஆண்களால் பாலியல் வக்கிரங்களுக்கும் ஆளாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். கழிப்பறையைப் பயன்படுத்துவதே இவர்களின் பெரும் சவாலாக இருக்கின்றது எனப் பல பெண்கள் பதிவு செய்துள்ளனர். முக்கியமான பெட்ரோல் பங்குகள் மற்றும் உணவு விடுதிகளில் பெண்கள் கழிப்பறையைப் பயன்படுத்த வசதி செய்யப்பட்டுள்ள போதிலும் அதில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடு இவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
 நாள் முழுவதும் வாகனப் பயணம் செய்யும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேர்கிறது. மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் உடல் உபாதையோடு பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதோடு தங்களின் நாப்கினை மாற்றிக் கொள்ளத் தனி இடம் தேட வேண்டியுள்ளது.
  மேலும் இத்தொழிலுக்கு வர முக்கியத் தகுதியே சொந்த வாகனம் வைத்திருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நம் நாட்டில் பல பெண்களும் சொந்த வாகன உரிமை அற்றவர்களாக இருப்பதே இத்தொழிலில் அவர்களுக்கான பெரும் சிக்கலாகவும் இருக்கின்றது.
மாற்றுப் பாலினத்தவரும்/ மாற்றுத் திறனாளிகளும்
 இந்தியச் சமூக அமைப்பில் மாற்றுப் பாலினத்தவர் எனப்படும் திருநர்கள் இன்றளவும் சமூகத்தின் ஏளனத்திற்கும் புறக்கணிப்புக்கும் ஆளானவர்களாகவே இருக்கின்றனர். இவர்களை வெறுப்பு நிறைந்த மனநிலையுடனேயே அணுகும் மக்கள் இவர்களை வேலைக்கு அமர்த்துவதை விரும்புவதில்லை. அதனாலேயே இவர்களில் பலரும் பிச்சையெடுப்பதையும் பாலியல் தொழிலையும் கைக்கொள்ள வேண்டியுள்ளது.
 இந்நிலையில் உணவு டெலிவரி தொழில் இவர்களுக்கு மிகவும் வசதியான ஒரு தொழிலாக இருக்கிறது. இத்தொழிலில் இவர்களின் பாலினம் பற்றிய விமர்சனம் பெரிதாக எழாமல் இருப்பதே இவர்களுக்கு ஆசுவாசமான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலைத் தருகிறது.
 இவர்களைப் போலவே குடும்பத்திலும் சமூகத்திலும் பாரமானவர்களாகப் பார்க்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு டெலிவரித் தொழில் சாதகமான சூழலையே கொண்டுள்ளது. இவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் பயணித்து இவர்கள் தனக்கான வருமானத்தை ஈட்டும் வசதியை உணவு டெலிவரி தொழிலின் மூலமாகப் பெறுகின்றனர். அதே நேரம் அடுக்குமாடி குடியிருப்புகளில் படிக்கட்டு ஏறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் இவர்கள் ‘உன்னால் நான்காவது மாடிக்கு வர முடியாத போது ஏன் இத்தொழிலுக்கு வருகிறாய்‘ என்ற வாடிக்கையாளரின் ஏளனப் பேச்சுகளையும் எதிர்கொள்கின்றனர். ஆனால் மனிதநேயத்தோடு இவர்களை அணுகும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதையும் இத்தொழிலில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகள் உறுதிசெய்கின்றனர். மேலும் சிறைப்பட்டதைப் போன்ற இல்லச்சூழலில் உழன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு சுதந்திரமான உலகை உணவு தந்துள்ளது என்பது உண்மையே.
சட்டப் பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும்
 நிலையான ஊதியமற்ற இவர்களுக்கென இவர்தம் நலனை முன்னிறுத்தும் தனி சங்கங்கள் எதுவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
 ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் முறையாக இணையவழி தொழிலாளர்களுக்கென்று தனி சிறப்பு சட்டம் 2023-ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமானது இணையவழி தொழிலாளர்களுக்கான நலவாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் அதில் அரசு அதிகாரிகள், இணையவழித் தொழிலாளர்கள் மற்றும் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் உறுப்பினர்கள் ஆக வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.
 தமிழகத்தில் 1982-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலச்சட்டத்தின் கீழ் இணையவழி தொழிலாளர்க்கான நலவாரியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் இணயவழித் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும் என்ற நெறிகாட்டுதல் உள்ளது. ஆனால் தொழிலாளர்கள் பலருக்கும் இவ்வாரியம் குறித்த புரிதல் ஏற்படாததால் இதுவரை வெறும் 7 சதவீதத்தினர்தான் பதிவு செய்துள்ளனர் என்கிறார் ஆசிரியர். மின்சார இருசக்கர வாகனத்திற்கான மானியம், குழு காப்பீடு திட்டம், விபத்தில் உடல் உறுப்பை இழந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை, போன்ற திட்டங்களை இவ்வாரியத்தின் மூலம் பெற முடியும். ஆனால் இது பற்றிய விழிப்புணர்வு இத்தொழிலாளர்களிடம் பெரிதாக இருப்பதில்லை.
 ஆசிரியர் இந்த நூலுக்காக தகவல்களை சேகரிக்க உணவு டெலிவரி செய்யும் இளைஞர்களை அணுகிய போது ஒருவர் முகத்திலும் ஒருபோதும் சந்தோஷத்தையும் சிரிப்பையும் புன்னகையையும் கண்டதில்லை சோகம் மட்டுமே அப்பியிருந்தது என்கிறார்.
 தற்கால நவநாகரிக யுகத்தின் தவிர்க்க முடியா சமூக அங்கமாக மாறிப்போயிருக்கும் உணவு டெலிவரித் தொழிலாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்வது எத்துணை இன்றியமையாததோ அதே அளவு அவர்களுக்கான சமூகமதிப்பை நிலைநிறுத்தும் பொறுப்பு பொதுமக்களுக்கும் உரியதாகிறது. அப்போது இத்தொழிலாளர்களின் முகத்தில் மகிழ்ச்சியின் அடையாளமான சிரிப்பு அரும்பவும் வாய்ப்பிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!