ஸிட்னி ஷெல்டனின் ஜெனிபர்

கனவு நகரமான நியூயார்க்கில் இளம் வழக்கறிஞராகக் களம் இறங்கும் ஜெனிஃபரின் சவாலான வழக்குகள், அவளது திறமை, இரக்க குணம், காதல், தாய் பாசம் மற்றும் நன்றி உணர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டே இக்கதைக்களம் நகர்கிறது. அமெரிக்காவின் மாஃபியா கும்பல் மற்றும் கள்ளக்கடத்தல் உலகத்தில், நேர்மையான வழக்கறிஞரான ஜெனிஃபர் எவ்வாறு சிக்கித் தடம் மாறுகிறார் என்பதை ஆசிரியர் ஸிட்னி ஷெல்டன் விறுவிறுப்பாக விளக்கியுள்ளார். ஆங்கிலத்தில் இருந்த இதன் சுவை சற்றும் குறையாமல் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ரா.கி. ரங்கராஜன்.

ஜெனிபர் பார்க்கர் பேரழகி, சுறுசுறுப்பும் குழந்தை மனமும் கொண்டவள், இரக்கமும் நேர்மையும் படைத்தவள். தன் தந்தையைப் போல் சிறந்த வழக்கறிஞராக வேண்டும் என்ற எண்ணத்தில், நியூயார்க்கின் பிரபல வழக்கறிஞர் டிசில்வாவின் உதவியாளராகச் சேருகிறாள். ஆனால், சேர்ந்த முதல் நாளிலேயே மாரெட்டி என்பவனின் சதியால் ஒரு வழக்கில் சிக்கிக் கொள்கிறாள். இதனால் அவளது வழக்கறிஞர் பணிக்குப் பல தடங்கல்கள் ஏற்பட்டு, டிசில்வாவிடமிருந்தும் வெளியேற்றப்படுகிறாள்.

அச்சமயத்தில், வார்னர் என்பவனின் உதவியுடன் அந்தப் பிரச்சினையிலிருந்து சிறிது சிறிதாக வெளியேறுகிறாள். முதல் பார்வையிலேயே வார்னர் மீது காதல் வயப்படுகிறாள். ஏற்கனவே திருமணமானவன் என்றபோதிலும், வார்னருக்கும் ஜெனிஃபர் மீது அதே அன்பு ஏற்படுகிறது. அவளது உயர்வுக்கு மறைமுகமாகப் பல உதவிகளைச் செய்கிறான் வார்னர்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் அளவற்ற காதல் கொள்கின்றனர். காதலின் பரிசாக ஜெனிஃபர் கர்ப்பமடைகிறாள். வார்னரும் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஜெனிஃபருடன் வாழ முற்படுகிறான். ஆனால், விதியின் சதியால் வார்னரின் முதல் மனைவி மேரி அனைத்தையும் சதி செய்து இருவரையும் பிரிக்கிறாள்.

அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் வார்னர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறான். அவனது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஜெனிஃபர் அவனிடமிருந்து முற்றிலும் விலகுகிறாள். ஆரம்பத்தில் குழந்தையைக் கலைக்கவே முற்பட்டாலும், பின்பு தன் காதலின் சாட்சியான அக்குழந்தையை வார்னரின் மறுஉருவமாகவே எண்ணிப் பெற்று வளர்க்கிறாள். தன் உலகமும் உயிருமாக மகன் ஜோசப்பை பற்றி வாழ்கிறாள்.

வார்னர் சூழ்நிலை காரணமாக ஜெனிபரைக் கைவிட்டாலும், அவளது இடத்தை வேறு எந்தப் பெண்ணாலும் நிரப்ப இயலவில்லை. உயிரற்ற ஜடமாகவே அவன் வாழ்வைத் தொடர்கிறான்; ஜெனிபரின் நினைவுகள் அவனை அலைக்கழிக்கின்றன. இறுதி வரை வார்னருக்கு ஜெனிஃபர் உதவியாகவே இருக்கிறாள். ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள காதலும் மரியாதையும் சிறிதும் குறையவே இல்லை.

மாரெட்டியுடன் நன்றிக் கடனுக்காக ஏற்பட்ட உறவு. ஒரு கட்டத்தில் தன் மகன் ஜோசப்பின் உயிரைக் காப்பாற்றியதற்காகவே, மாரெட்டியின் வழக்குகளை ஏற்று நடத்த ஆரம்பிக்கிறாள் ஜெனிபர். எந்தப் பெண்ணையும் பெரிதாக மதிக்காத மாஃபியா தலைவன் மாரெட்டி, ஜெனிஃபரின் அழகு, வசீகரம் மற்றும் தைரியத்தைப் பார்த்து பிரமித்து அவளை அதிகமாக விரும்பவும் நம்பவும் செய்கிறான். அந்த நம்பிக்கைக்கு முற்றும் தகுதியானவளாகவே ஜெனிபர் இறுதி வரை இருக்கிறாள்.

தன்னை நடுத்தெருவில் விட்டுவிட்ட வார்னரை விட, எல்லா சந்தர்ப்பங்களிலும் ஜெனிபருக்கு உறுதுணையாக இருந்த மாரெட்டி சற்றே சிறந்தவனாகத் தோன்றினாலும், அவனது முன்கோபமும் முரட்டுத்தனமும் ஒரு கட்டத்தில் ஜெனிபரை சந்தேகப்பட வைக்கிறது. இறுதியில் ஒரு கொலைகாரக் கும்பலின் தலைவனுக்கு என்ன நேருமோ, அதே முடிவுதான் மாரெட்டிக்கும் நிகழ்கிறது.

‘Rage of Angels’ என்ற சிட்னி ஷெல்டனின் நாவல், 1980-களில் வார இதழில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. விறுவிறுப்பான பல திருப்பங்களையும் சம்பவங்களையும் வழக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. காதலுக்கும் இதில் பஞ்சமில்லை.

கதாநாயகியான ஜெனிபரை, வார்னர் மற்றும் மாரெட்டி ஆகிய இருவருமே உருகி உருகிக் காதலிக்கின்றனர். ஜெனிபரும் இருவரையும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் விரும்பவே செய்கிறாள். காதல் தோல்வி ஏற்படும்போது சோர்ந்து வீழாமல், வேலையில் தன்னை மூழ்கடித்து மீண்டு வருகிறாள். அதேபோன்று, தன் வாழ்க்கையின் ஒரே ஆதாரமாக வளர்த்த மகனின் மரணத்திலும், காதலித்தவனின் வெறுப்பிற்கு ஆளாகி மரணத்தின் விளிம்பு வரை செல்லும்போதும், மீண்டும் தன் வாழ்வை முதலிலிருந்து தொடங்குகின்ற ‘பீனிக்ஸ்’ பறவையாகவே ஜெனிபர் மிளிர்கிறாள்.

ஆரம்ப கட்டங்களில் ஏழை எளிய மக்களுக்குக் கட்டணமின்றி இலவசமாகவே வழக்கறிஞராகச் செயல்படுகிறாள். அத்தகைய இரக்க குணம் நாவல் முழுவதுமே அவளிடம் பிரதிபலிக்கிறது. தன் தொழிலை மிக தீவிரமாக நேசிக்கிறாள். இறுதியாக, தன்னைப் பிணைத்து வைத்திருந்த அனைத்து உறவுகளிலிருந்தும் விடுபட்டு, ஒரு தனிப் பெண்ணாகத் தன் வாழ்வியல் பயணத்தை நோக்கி முன்னேறுகிறாள் ஜெனிஃபர். வாசிப்பில் விறுவிறுப்பையும் அடுக்கடுக்கான திருப்பங்களையும் விரும்பும் ஒவ்வொருவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த புத்தகம்!

நூல்: ஸிட்னி ஷெல்டனின் ஜெனிபர்
ஆசிரியர்: தமிழில் ரா.கி.ரங்கராஜன்
பக்கங்கள்:665
பதிப்பகம்: கிண்டில் பதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!