வேர்களுக்கு நீர் வார்த்து….. சிறகுகளுக்கு வானம் தந்து…

 குழந்தை வளர்ப்பு என்பது அவசரகதியில் கடந்து செல்ல பாதை அல்ல.அது ஓர் உயிரின் பரிணாமத்தை உற்றுநோக்கும் பயணம். “விதை மண்ணில் தங்கும் மௌனத்திலிருந்து, வானில் சிறகடிக்கும் வரை நீளும் இந்தப் பயணத்தின் மையப்புள்ளியாய் நிற்பவர்கள் பெற்றோரே”…

வேருக்கு நீர்

​          ஒரு குழந்தை கருவில் சுமக்கப்படும் பொழுதே அதனுடைய உடல் மனம் அனைத்தும் தாயினால் கட்டமைக்கப்படுகிறது. நேர்மறை சிந்தனைகளால் கட்டமைக்கப்படும் குழந்தை இந்த மண்ணில் பிறக்கும் பொழுது இந்த மண் தரும் அனைத்தையும் எதிர்கொள்வதற்கான பலம் பெறுகிறது….

      இன்றைய காலங்களில் குழந்தை வளர்ப்பு என்பது இன்றைய மகளிர் சந்திக்கக்கூடிய பெரும் சவாலாக நிற்கிறது. குழந்தை என்பது தங்களுடைய வாழ்வின் வெற்றியினை தடுக்கும் தடை கற்களாக பார்க்கும் பெற்றோர்கள் உண்டு. சிறு அளவில் துணிகளை வேறு இடங்களிலிருந்து எடுத்து வந்து விற்கக்கூடிய பெண்மணி அவருக்கு குழந்தை பிறந்ததினால் வியாபாரம் மூன்று வருடங்கள் பின்னடைவை சந்தித்ததாக வருத்தப்படுகிறார்…

    இன்று அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் தங்களின் குழந்தைகளிடம் நேரத்தை செலவிடுவதற்கு தங்களுடைய தங்களுடைய அலுவலக பணி வாய்ப்புகளும் அதன் மூலமாக கிடைக்கும் பொருளாதாரமும் தங்களின் கைவிட்டு போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர் .

       எனவே குழந்தை பராமரிப்பை வேறு ஒரு பெண் அவர் பெண்மணியின் தாயாக இருக்கலாம் அல்லது பணிப் பெண்ணாக இருக்கலாம் அவர்களிடம் விட்டுவிட்டு அலுவலகப் பணியில் இணையும் பெண்களை இன்று  நாம் காண்கிறோம் 

      அவர்கள் கோணத்தில் தங்களுடைய எதிர்காலம் பணி பணப்பலன் ஆகியவை குழந்தை வளர்ப்பினால் பாதிக்கப்படுவதனால் அதற்கான மாற்றினை சந்திப்பதாக தெரிவிக்கின்றனர் 

நியாயமாகுமா? 

    குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்க வேண்டியது நம்முடைய கடமை 

 “நான் எங்கு விழுந்தாலும் தாங்கிக் கொள்ள என் பெற்றோர் இருக்கிறார்கள்” என்ற ஆழமான பாதுகாப்புணர்வு அவர்களுக்குள் வேர்விட வேண்டும்.

    அந்த நம்பிக்கையின் மீது விழும் முதல் அடியாக பாதுகாப்பிற்கு நாம் அருகில் இல்லாமல் நம்முடைய தாயையோ அல்லது வேறு யாரையோ நியமிப்பது மாபெரும் தவறு..

 கணவன் மனைவி இருவரும் இணைந்து இது குறித்த புரிதலோடு பொருளாதார தேவையை பின்னுக்குத் தள்ளி குழந்தையின் ஆரோக்கியம் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தந்து குழந்தை பிறந்து இரண்டு வருடங்களுக்கு குழந்தையுடன் தாயோ அல்லது தந்தையோ உடன் இருப்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும் 

   இவ்வாறு உருவாகக்கூடிய குழந்தைகள் சமூகத்தின் அனைத்து தளங்களிலும் தங்களுடைய மிகச் சிறப்பான தன்மையினை வெளிப்படுத்தி சமூகத்தினரோடு ஒத்து வாழும் தன்மையினை பெறுவார்கள்

    மரபு, மனிதநேயம் போன்ற நற்பண்புகள் சிறுவயதிலேயே மனங்களில் விதைக்கப்பட வேண்டும். அந்த வேர்கள் உறுதியாக நிற்கட்டும்

சாமரச் சொற்கள் :

     கண்டிப்பு என்ற பெயரில் வீசப்படும் கடுமையான சொற்கள் குழந்தைகளின்  மனங்களை எளிதில் உடைத்துவிடும். அதற்குப் பதிலாக, அவர்களின் தவறுகளைப் புரியவைத்து அவர்களின் தன்னம்பிக்கையை மீட்டெடுக்கும்.

கே (க்கும் )காதுகள்:

குழந்தைகள் எதையாவது பேசும்போது, செவிமடுக்க வேண்டும். “உன் உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன்” என்ற தலையசைப்பு மிகவும் முக்கியம். இந்த புரிதல் இல்லாததினால் குழந்தைகள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேறு புகலிடம் நாடுவதே அனைத்து தீய எண்ணங்களுக்கும் அடிப்படையாகும்

​சிறகுகளுக்கு வானம்…

​வேர்கள் உணவளித்தாலும், ஒருநாள் அந்தப் பறவை தன் சொந்தச் சிறகுகளைக் கொண்டு வானில் உயரப் பறந்தே தீர வேண்டும். குழந்தை வளர்ப்பின் உச்சம் அதுவே..

     நம் கனவுகளைக் திணிக்காமல் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்கு வித்திடுவது அவர்கள் காத்திரமாக வர வளர்வதற்கு வழிவகுக்கும். வாழ்வில் இன்றைய சூழலில் செய்திகளையும் நாடகங்களையும் பார்க்காமல் இருந்தாலே நல்ல மனிதர்களாக வாழலாம் என்று நினைத்து அதனை கடைபிடித்து வருகிறேன்…

இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள் ஊடக பதிவுகள் இவை எல்லாம் சரியான நோக்கில் செல்லாமல் தேவையற்ற பதிவுகளை நம் மனதில் உருவாக்குகின்றன. புகழ் குறித்த போதையை நாம் குழந்தை பருவத்திலேயே ஏற்படுத்தி விட்டால் லைக்கள் ,கமெண்ட்கள் என சமூக ஊடகங்களுக்கு நம் குழந்தைகள் அடிமையாகிவிடும்  இதனை தடுக்க வேண்டியது தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

       இதற்கு  குழந்தைகளின் சுய சிந்தனை வளர வேண்டும் .அதற்கு நல்ல நூல்களைப் படிக்க கொடுக்க வேண்டும் .நல்ல திரைப்படங்களை பார்ப்பதற்கு அவர்களோடு இணைந்து நாம் அமர வேண்டும். முதலில் குழந்தை திரைப்படம். பின்னர் அதிலிருந்து உயர்ந்த நல்ல தரமான திரைப்படங்களை அறிமுகப்படுத்த வேண்டும் . இவை குழந்தைகளின் ஆழமான அழுத்தமான சிந்தனைகளுக்கு வழிவகுக்கும் 

​தோல்விகள் நல்லவை:

        பறக்கும்போது ஒருமுறை கீழே விழுந்தால் தான் எழுந்து பறக்க முடியும். தோல்விகளைக் கண்டு அஞ்சாமல், அவற்றை அனுபவப் பாடங்களாக மாற்றும் பக்குவத்தை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும். பெற்றோர் கைத்தாங்கலாகவே வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாது; இன்னாரின் மகன் இன்னாரின் மகள்  என்ற நிலை மட்டும் இல்லாமல்  இன்னாரின் பெற்றோர்  என்ற நிலையை அடைவதற்கான மாற்றத்தை நம் வளர்ப்பு தர வேண்டும்..

டிஜிட்டல் டீடாக்

      கர்நாடகாவில் அலகா என்னும் கிராமத்தில் அவ்வூர் பெரியவர்கள் இணைந்து ஒரு முடிவு எடுத்துள்ளனர் இரவு ஏழு வில் இருந்து 9 மணி வரை அங்குள்ள தொலைக்காட்சிகள் அலைபேசிகள் அனைத்தும் அணைக்கப்பட்டு அருகில் இருக்கும் வீடுகளில் இருப்பவர்களிடம் பேசி சிரித்தல் இணைந்து பழகுதல் என்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது . சைரன் ஒலிக்கும் ஒலி கேட்டவுடன் குழந்தைகள் தங்களின் வீட்டு பாடங்கள் அன்றாட கல்வி உள்ளிட்டவற்றை விரைவில் முடித்து விடுகின்றனர்.

அதைப்போலவே மெய்வழிச் சாலை என்ற ஒரு கிராமம் தமிழகத்திலேயே உள்ளது இங்கு தேவையற்ற மின்சார விளக்குகள் ஊடகங்கள் எதுவுமே அந்த ஊரிலேயே இல்லை . இது புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான ஆன்மீகக் கிராமம். சாதி, மத பேதங்களைக் கடந்து அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு ஆன்மீகச் சமூகக் கட்டமைப்பை உடையது. உலகின் எந்த போர்களோ அல்லது எந்த சூழலோ இந்த ஊரை எதுவும் செய்து விட முடியாது. 

ஏனெனில் அம் மக்களின் வாழ்வியல் முறை…

        மாற்றங்கள் என்பவை நம்மில் இருந்து தான் தொடங்க வேண்டும்..

      தம்மைக் காப்பாற்றிக் கொள்ள பொருளாதாரத்திற்காக ஓடி தன்னுடைய ஆகச்சிறந்த அமைப்பான உடல் ஆரோக்கியத்தையே இழந்து எதற்காக ஓடுகிறோம் என்று தெரியாமல் பேரன்பு பெட்டகமான குழந்தை செல்வங்களை இவ்வாழ்வின் அர்த்தங்களை தவற விட்டுக் கொண்டிருக்கிற இத்தமிழ் சமுதாயம் எப்போது மாறும்…??

மதூரி கதிர்வேல் பிள்ளை

      இந்த சிறுகதை சமீபத்தில் நான் வாசித்தது. அஜோனன் என்னும் எழுத்தாளர் மதூரி என்னும் கதை தலைவியின் வாயிலாக சமூக ஊடகங்களில் தன்னை இழக்கும் பெண்ணின் வாழ்வியலை மிக அற்புதமாக பதிவு செய்துள்ளார். அவள் தன்னை இழப்பதற்கு சமூகமும் அவளுடைய குடும்பமும் அடிப்படை காரணங்களாக உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்தாலும் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தன் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியமான ஒன்று

   தலை துண்டிக்கப்பட்ட கோழி – ஹொரேஷியோ குய்ரோகா – தமிழில் அவை நாயகன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இச் சிறுகதை நடுகல் இதழில் வெளிவந்துள்ளது. மனநிலை சரியில்லாத நான்கு மகன்கள் நல்ல மனநிலையை உடைய ஒரு மகள். பெற்றோர் இருவருக்கும் புரிதலின்மையால் இந்த நான்கு குழந்தைகளை பாதுகாப்பது குறித்த சண்டைகள் நாளுக்கு நாள் பெருக ஒரு தலை துண்டிக்கப்பட்டு கோழியை பார்த்த நான்கு மனநிலை சரியில்லாத மகன்களும் தனியே கிடைத்த தன்னுடைய தங்கையை அதைப்போல செய்து பார்ப்பதே இக்கதை. படித்து முடித்த உடன் பெரும் அதிர்வை ஏற்படுத்திய கதை இது. எனினும் நீண்ட நேரம் அந்த அதிர்விலிருந்து என்னால் வெளிவர இயலவில்லை …மற்றவர்களை நம்பி மட்டுமே அந்த சின்னஞ்சிறு உயிர்கள் இந்த உலகத்தை நோக்கி பயணிக்கின்றனர் அவற்றை மிகச் சரியாக வளர்த்து இவ்வுலகம் செழிக்க வைப்பதும் ஓர் அறமே…

“​மணமிக்க, பூச்சூடிக் கொள்கிறேன்

கூடுதலாய், முகப்பவுடரும், புடவைகளுக்குக்கூட, 

வாசனை திரவியம் ,பூசி வைத்துள்ளேன்., 

வியர்வையை, கழுவிக்கழுவி, சுத்தமாய் வைத்திருப்பதாய், நினைத்துக் கொள்கிறேன், 

என்னை, அத்தனையும் மீறி, ஆடைகளுக்குள்ளிருந்து, 

தாயின் வாசம், சொட்டு சொட்டாய், கோப்புகளில் இறங்குகிறது, 

அவசரமாய், அலுவலக கழிப்பறையில் நுழைந்து, 

பீச்சி விடப்படும் பாலில் தெறிக்கிறது, 

பசியைத் தின்று அலறும், குழந்தையின் அழுகுரல்”

1990களில் வந்த வெண்ணிலாவின் கவிதை இது. அன்று சிலரிடமிருந்து இந்நிலை என்று பலரிடம் இருக்கிறது. 

​குழந்தை வளர்ப்பு என்பது பொறுமையின் மறுவடிவம். அவசரப்பட்டுப் பூவைக் கசக்கினால் அதன் வாசம் வராது; காத்திருந்து கவனித்தால் அதுவாக மலரும். வேர்களுக்கு அன்பின் நீரை ஊற்றி, நேசமான சொற்களால் காயங்களை ஆற்றி, முடிவற்ற இந்த வானில் பறக்கச் சிறகுகளை விரித்துத் தரும்போது, பெற்றோர் என்ற அந்த உயர்ந்த ஸ்தானத்தின் அர்த்தம் முழுமை அடைகிறது

​இப்பயணத்தில் அன்பும் பொறுமையும் மட்டுமே நம் கைகளில் இருக்கும் ஒப்பற்ற ஆயுதங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version