வசதிகளின் நடுவே வலிமையை இழக்கும் தலைமுறை

என்றும் பசுமை இழையோடும் பச்சைப் பசேலென்ற ஒரு கிராமம். அதில், ஆண்டு முழுவதும் ஓடும் வற்றாத ஒரு ஓடை. அந்த ஓடையின் கரையருகே குட்டிக் குட்டி வீடுகள். அங்குள்ள குடும்பங்கள் தங்கள் தினசரி வேலைகளில் மும்முரமாக மூழ்கியிருக்க, குழந்தைகள் சிரிப்புச் சத்தத்துடன் ஆரவாரமாக, சிறுசிறு குழுக்களாக சேர்ந்து கொண்டு, விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்தக் காட்சியைக் கேட்பதற்கும் கற்பனை செய்வதற்குமே அவ்வளவு இனிமையாக இருக்கிறதல்லவா? உண்மையில், இனி இக்காட்சியை நம்மால் கற்பனை மட்டும்தான் செய்யமுடியும் என்பதே நிதர்சனம். அந்த அளவிற்கு, வாழ்க்கையென்னும் ஒட்டப்பந்தயத்தில், நாம் அனைவரும் நகர்ப்புறக் குடியிருப்பிற்கு தள்ளப்பட்டுவிட்டோம். அக்கம்பக்கத்தினருடன் நட்பு பாராட்டி வந்த சிறு சிறு வீடுகள் எல்லாம் இப்போது பங்களாக்கள், வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி, அண்டை அயலார் என்ற உணர்வே இல்லாத நிலைக்கு வந்துவிட்டன.
சரி, இவை நம் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம்தான் என்ன?

மேலோட்டமாகப் பார்த்தால், இந்த கேள்வி சாதாரணமானதாகத் தோன்றலாம். ஆனால் இக்கேள்வி உண்டாக்கிய பாதிப்பு மிகவும் ஆழமானது. ஆடம்பரமும் வசதிகளும் நிறைந்த வாழ்க்கையை நோக்கி ஓடும் அவசரத்தில், அண்டை அயலார் இல்லாத வாழ்க்கை நம் குழந்தை வளர்ப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்.  ஒருகாலத்தில் “குழந்தை வளர்ப்பு” (parenting) பற்றி யாரும் பெரிதாக பேசியதோ, சிந்தித்ததோ கூட இல்லை. அந்த நாட்களில் சமூகக் கட்டமைப்பும், குடும்ப அமைப்பும் குழந்தை வளர்ப்பை மிக இயல்பாகவும் சுமூகமாகவும் செய்து வந்தன. அதனால், தனியாக “குழந்தை வளர்ப்பு’ பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இருந்ததில்லை. ஆனால், இப்போதோ, காலத்தின் ஓட்டத்தில், அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன. இன்றைய பரபரப்பான, நவீனமான, நாகரிகமான உலகில், சுய முயற்சியுடனும், விழிப்புணர்வுடனும் மேற்கொள்ளப்படும் பெற்றோர் வளர்ப்பு, ஒரு கட்டாயத் தேவையாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குழந்தையின் வளர்ப்பு முறையானது, அதன் ஆளுமையில் பல்வேறு விதமாக பிரதிபலிக்கிறது. அக்குழந்தை இந்த உலகத்தைப் பார்க்கும் விதத்திலிருந்து,  மன அழுத்தத்தை சமாளிக்கும் திறன், சமூகத்துடன் அது கொள்ளும் உறவு, முடிவெடுக்கும் திறன், அக்குழந்தை வாழ்க்கையின் அர்த்தமாக எதைக் கருதுகிறது என்பது வரை அனைத்தையும் அதன் வளர்ப்பு முறை தீர்மானிக்கிறது. 

விதிவிலக்காக, எந்த முறையில் வளர்ந்தாலும், ஒரு சில குழந்தைகள் மட்டும் சுயம்புவாக உருவெடுக்கின்றனர். அவர்கள், தான் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கின்றனர். எனினும், துரதிருஷ்டவசமாக, இப்படிப்பட்டவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளனர். எனவே பெரும்பான்மையினருக்கு, கைப்பிடித்து வழிகாட்டுதல், முன்னுதாரணமாக இருத்தல், பெற்றோர்களின் நேரம் முதலான உணர்வுசார் விஷயங்கள் பெருந்தேவையாக இருக்கின்றன.

மேலும், தென்னிந்திய குடும்பங்களில், கடுமையான எதிர்பார்ப்புகள் நிலவுவது ஒரு கசப்பான உண்மை. அதிலும், பெரும்பாலான பெற்றோர், தங்களின் கனவுகளை குழந்தைகள் மூலமாக நிறைவேற்ற விரும்புகிறார்கள். அதற்காக பல காரணங்களையும் முன்வைக்கிறார்கள். உண்மையில், ஒவ்வொரு பெற்றோருக்கும், “என் குழந்தை என்னைவிட உயர்ந்த வாழ்க்கையை வாழ வேண்டும்” என்ற ஆழ்மன ஆசை இருப்பது இயல்பானதும் நியாயமானதும் தான். ஆனால், பெற்றோரின் விருப்பமும், குழந்தையின் ஆர்வமும் வேறு பாதையில் செல்லும் போது தான் பிரச்சினைகள் தொடங்குகின்றன.
NEET தேர்வுக்காக குழந்தைகளை பயிற்றுவிக்கும் ஒரு கல்வி நிறுவனத்தின் தலைவராக, நான் அடிக்கடி உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், பல சமயங்களில் பெற்றோரின் ஆசைகள், குழந்தைகளின் ஆசைகளைவிட மிக அதிகமாக இருக்கின்றன. எனவே கல்வியாளர்கள் மற்றும் ஆலோசகர்களாகிய நாங்கள், குழுவாக இணைந்து, குழந்தைகளின் உண்மையான ஆர்வத்தை கவனமாகப் புரிந்து கொண்டு, மதிப்பெண்களைத் தாண்டி, அவர்களின் மனநிலைக்கும், ஒழுக்க வளர்ச்சிக்கும் முழுமையான ஆதரவை வழங்க முயல்கிறோம்.

மேலும், சமீபகாலமாக, குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயான உறவு மெதுவாக மங்கிக் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. பல நேரங்களில், அந்த உறவு “குழந்தை வாழ்க்கையில் எப்படி உயர வேண்டும்?” என்ற விவாதத்திற்குள் மட்டுமே சுருங்கி விடுகிறது. அதனால் அவர்களின் ஆளுமையை வளர்ப்பது பற்றி பேசுவதற்கே நேரம் இல்லாமல் போகிறது.ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமைவது, அதன் ஆளுமைத்திறனே தவிர வேறொன்றும் இல்லை. எனினும் அது ஓரிரு நாட்களில் உருவாகும் விஷயமும் இல்லை. பல
ஆண்டுகள், காலங்கள் எடுத்தே அது உருவாகும்.

இன்னும் தெளிவாகக் கூறினால், உண்மையானக் குழந்தை வளர்ப்பு என்பது, எப்போதும் கண்காணிப்பது, அதிகமாக பாதுகாத்து வளர்ப்பது, குழந்தையின் செயல்திறனை மீறிய எதிர்பார்ப்பை அவர்களிடம் சுமத்துவது, அல்லது குழந்தைக்கு தேவை என்று தோன்றுவதற்கு முன்பே அனைத்தையும் செய்து கொடுப்பது போன்றவைகளால் உருவாவது அல்ல.மாறாக, பெற்றோர் தங்களின் எதிர்பார்ப்புகளை குழந்தையிடம் தெளிவாகச் சொல்லி, அது அக்குழந்தையின் ஆர்வத்துக்கும் திறனுக்கும் பொருந்துகிறதா என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்து, தாங்களே முன்மாதிரியாக வாழ்வதன் மூலம்தான் அது வலுப்பெறுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானதே! ஆனால், துரதிருஷ்டவசமாக, இன்றைய போட்டி நிறைந்த உலகில், அனைத்து குழந்தைகளும் “மதிப்பெண்கள்” மற்றும் “கல்வியில் செயல்படும் திறன்” என்ற அளவுகோல்களில் மட்டும்தான் மதிப்பிடப்படுகிறார்கள். இன்றைய தகவல் களஞ்சியங்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு கிளிக்கில் அனைத்தும் கிடைத்துவிடும் சூழலில், குழந்தைகளுக்கு வழிகாட்டல் தேவைப்படுவது, அறிவைப் பெறுவதற்காக அல்ல; வாழ்க்கைத் திறன்களைப் பெறுவதற்காக மட்டுமே!

சில தசாப்தங்களுக்கு முன், “வாழ்க்கைத் திறன்” என்ற கருத்தே ஒரு விவாதப் பொருளாக இருந்ததில்லை. ஏனெனில், அன்றாட வேலைகள், வாழ்க்கை முறை, சமூக உறவுகள், என பல காரியங்களை குழந்தைகள் தாங்களே செய்ய வேண்டிய கட்டாயம் இருந்ததால், இவையனைத்தும், இயல்பாகவும், அமைதியாகவும் அவர்களுக்கு வாழ்க்கைத் திறன்களை கற்றுக் கொடுத்தன. முரணாக, இன்றைய தலைமுறையில் நான் மிகப் பெரிய ஆபத்தாகக் காண்பது, குழந்தைகளின் மனவலிமை குறைந்து வருவதைத்தான். தேர்வை எதிர்கொள்ள பயப்படுவது, சின்னஞ்சிறு தோல்விகளுக்கு அஞ்சி பின்வாங்குவது, உச்சக்கட்டமாக தற்கொலை எண்ணங்கள் வரை செல்வது என அது வெளிப்படுகின்றது.

ஒரு கல்வியாளராக, இதற்கான அடிப்படை காரணம்,இந்தக் குழந்தைகளிடம், ‘பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன் இல்லாது போனதுதான்’ என்றே நான் நினைக்கிறேன். இன்று, குழந்தைகளின் பிரச்சினை தீர்க்கும் முறையானது, தன்னைச் சார்ந்து( Intrinsic)இல்லாமல், வெளியுலகைச் சார்ந்ததாகவே(Extrinsic) இருக்கிறது.  அதாவது, ஒரு பிரச்சினையைத் தீர்க்க, தங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்கும் காரணங்களையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை ஒரு சம்பவம் மூலம் விளக்குகிறேன்.

நீங்கள் ஒரு நாற்காலியில் உட்கார முயல்கிறபோது, அதன் கால் சற்றே ஆடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.இன்றைய பெற்றோர்கள், அதாவது, இன்றிலிருந்து 20–30 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளாக இருந்தவர்கள், உடனே ஒரு காகிதத்தை எடுத்து அதைப் பலவாறாக மடித்து, அந்த ஆடும் காலுக்குக் கீழே வைத்து, நாற்காலியை நிலைப்படுத்துவார்கள். ஆனால், இன்றைய குழந்தைகளோ, உடனே ஒரு ஷாப்பிங் appல் புதிய நாற்காலியை ஆர்டர் செய்வதோ,
அல்லது பொருட்கள் பழுது பார்க்கும் appல் ஒரு ஸ்லாட் புக் செய்வதோ தான் செய்வார்கள். தாங்களே ஏதாவது செய்து பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று அவர்கள் முயன்று கூட பார்ப்பதில்லை. 

இங்குதான் பிரச்சினைத் தீர்க்கும் இருவேறு முறைகளின் வித்தியாசம் புலப்படுகிறது. மேலும் அது ஒரு விவாதத்திற்குத் தொடக்கப் புள்ளியாக அமைகிறது. அன்றைய தலைமுறை,“நேரமும் பணமும் மிச்சம்” என சொல்கிறது. இன்றைய தலைமுறை,“இது நிலையான தீர்வு; எதிர்கால கவலை இல்லை” என சொல்கிறது. உண்மையில், இரண்டுமே சரியான வாதங்கள் தான்.
ஆனால், நான் கேட்கும் கேள்வி – “இதில் கட்டுப்பாடு எங்கே? தன்னிடமா? அல்லது தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையிடமா? 

இன்றைய தலைமுறையில், ஒரு பிரச்சினையின் தீர்விற்கானக் கட்டுப்பாடு முழுவதும் வெளியுலகின் மேலதான் உள்ளது. அந்த வெளிப்புற ஆதாரம் தோல்வியடைந்தால், அவர்கள் முழுமையாக திசை தெரியாமல் தவிக்கிறார்கள். முந்தைய தலைமுறையின் தீர்வுகள் தற்காலிகமாக இருந்தாலும், அவை தன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. அதனால், சூழ்நிலையை கையாளும் திறனும், பிரச்சனையைத் தாங்கும் மனவலிமையும் அவர்களிடத்தில் அதிகமாகவே இருந்தது. 

இப்போது, இன்றைய மற்றும் வருங்கால தலைமுறைக்கு பெரிதானத் தேவையாக இருப்பது, தன்னிச்சையாக எடுக்கும் உடனடி தீர்வையும் ,நிலையான தீர்வையும் மனவலிமையுடன் ஒருங்கே இணைத்துப் பயன்படுத்தும் திறன். அதுவே, ஒரு குழந்தையை தனித்துவமாக உயர்த்தும் உண்மையான திறன். ஆனால், இது ஒரே இரவில் நிகழும் மாயம் அல்ல.”ஒரு பெற்றோர், தினசரி வாழ்க்கையில் எந்த அளவிற்குத் தங்கள் குழந்தையை இந்த மாதிரி விஷயங்களில் ஈடுபடுத்துகின்றனர்?”, “ஒரு பிரச்சினையைத் தன் பெற்றோர் தீர்க்கும் முறையை அக்குழந்தை எவ்வளவு தூரம்அறிந்து வைத்திருக்கிறது? “, “தனக்கென இருக்கும் பொருளாதார சுதந்திரம் பற்றி அந்தக் குழந்தைக்கு எந்த அளவு புரிதல் உள்ளது?”- இந்த கேள்விகள், இன்றைய காலத்தில், பற்பல வசதிகள் கிடைப்பதாலும் அல்லது “குழந்தைகள் கவலைப்பட வேண்டாம்” என்ற பெற்றோரின் மனப்பாங்காலோ முக்கியத்துவம் இழந்து வருகின்றன.

இங்கு நான் பெற்றோர் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் குழந்தைகளுக்குத் தெரியவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், சில பிரச்சினைகளை நியாயப்படுத்தி (rationalize) விளக்கி, அவற்றைத் தீர்க்கும் செயல்முறையில் குழந்தைகளைச் சேர்ப்பது, அவர்களை சுயாதீனமாகவும், தன்னம்பிக்கையுடனும், நிலையான சிந்தனையுடனும் வளர்க்க, அத்தியாவசியமாக அமைகிறது. மேலும் பெற்றோர்கள் தங்கள் தொடர்ந்து குழந்தைகளுடன் தினசரி செலவிடும் அந்த மதிப்பான நேரம்தான் காலப்போக்கில் அவர்கள் வாழ்க்கைக்கான மந்திரமாக மாறுகிறது.

இங்கு நேரம் செலவிடுதல் என்பது, வருடத்தில் சில நாட்கள் சுற்றுலா போவதோ
அல்லது மணிக்கணக்கில் வெளியே செல்வதோ அல்ல. மாறாக, ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம் என குழந்தைகளுடன் பெற்றோர்கள் தினசரி செலவழிக்கும் நேரத்தையே குறிக்கிறது. ஒரு நாளில் சில நிமிடங்கள் கைபேசி இல்லாமல், ஊடகத் தொடர்பு இல்லாமல், வேறு எந்த கவனச்சிதறலும் இல்லாமல், ஒருவரின் அன்றைய அனுபவத்தை மற்றொருவருடன் பகிர்ந்து கொள்வது, குழந்தையின் மனவலிமைக்கும், பிரச்சினை தீர்க்கும் திறனுக்கும் உறுதியான அடித்தளமாக அமையும்.

பெற்றோர் கண்டிப்பாக ஒரு நேரம் ஒதுக்கி, தாங்கள் கடந்து வந்த நல்ல விஷயங்களோடு சேர்த்து, அவர்கள் சந்திக்கும் சவால்களையும் தங்கள் குழந்தைகளுடன் பகிர்ந்து, அதை அவற்றை எப்படிக் கையாள்கிறார்கள் என்று பேசித் தெளிய வேண்டும். அப்போது, குழந்தைகள் தாங்களே சில யோசனைகளையும் தீர்வுகளையும் முன்வைக்கத் தொடங்குவார்கள். பிறகு, தங்களின் சொந்த பிரச்சினைகளையும் அதே முறையில் எதிர்கொள்ள ஆரம்பிப்பார்கள். இதுவே, சவால்கள் நிறைந்த உலகை தைரியமாக எதிர்கொள்ளவும் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் அவர்களுக்கு உதவும்.

பெற்றோர் சேர்த்த சொத்துகளையும், அவர்கள் விட்டுச் செல்லும் வசதிகளையும் தாண்டி, ஒரு குழந்தைக்கு, வலுவான, விவேகமான, மனவலிமைக் கொண்ட ஆளுமையை உருவாக்கித் தருவதில், பெற்றோர்களின் பங்கு இருப்பது, தவிர்க்க முடியாதது.

ஒரு நாளுக்கு 30 நிமிடங்கள் ஒதுக்கத் தொடங்குவோம் – குழந்தையின் ஆளுமை வளர்ச்சிக்காக நாம் கொடுக்கும் விலைமதிப்பில்லாத நேரம் அதுவே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version