‘குழலினிது யாழினிது’ என்மனார்போல் மழலைக் குரலுக்கு ஒரு மகத்துவம் உண்டு. அது தட்டுத்தடுமாறித் தன்வசப்படுத்தும் மொழிக்குள் ஆயிரமாயிரம் அழகுணர்ச்சிக் கொட்டிக்கிடக்கும். அதுபோலவே ஒரு மழலையின் எழுத்தும். ஆனால், கமநிதா தடுமாற்றமின்றி மொழியைத் தன்வசப்படுத்திக்கொண்டார். சேலத்தைச் சார்ந்த கவிஞர் சுகபாலா அவர்களது குழந்தைதான் கவிஞர் கமநிதா. அவர் ‘கசங்கிய மரம்’ என்னும் கவிதைத்தொகுப்பொன்றை வெளிக்கொண்டு வந்துள்ளார். 2024 டிசம்பரில் முதற்பதிப்பாக பரிதி பதிப்பகம் இந்நூலைப் பதிப்பித்துள்ளது. சொற்கூட்டின் நிகழ்வொன்றில் இக்குழந்தை சில கவிதைகளைப் பாட நேரில் கேட்டதுதான் எனக்கு முதல் அறிமுகம். பின்னர் கவிஞர் அறிவுமதிக்கான பாவலர் பவளவிழா மேடையில் இன்னும் பல கவிதைகளைத் தந்து கவிஞர் அறிவுமதி, கவிஞர் பழநிபாரதி, கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோரது பாராட்டைப்பெற்றார். கவிஞர் சுகபாலாவிடம் இரண்டு, மூன்றுமுறை நான் சொல்லியதுண்டு குழந்தையின் கவிதைகளை நூலாக்குங்கள் என்று. அவரும் கவிஞர் என்பதால் விரைவில் அப்பணியை அவர் செய்வாரென்று நம்பினேன். ஓரிரு மாதங்களுக்கு முன்பு அவரது முகநூல் பக்கத்தில் நூலின் அட்டைப் படத்தைப் பார்த்தபோது அவ்வளவு மகிழ்வாக இருந்தது. இப்போது நூலும் கைகளில். ஆறாம் வகுப்புப் பயிலும் குழந்தைக்கு இவ்வளவு அழகிய கவிதை மொழியென்றால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆரம்பத்தில் நானும் அப்படித்தான் வியந்தேன். அவர் கவிதையொன்றில் இப்படிக் கேட்கிறார்.
“முதன்முதலாக
காகிதத்தைக் கண்டுபிடித்ததை
எந்தக் காகிதத்தில் எழுதியிருப்பார்கள்” என்று.
“காகிதத்தில்
இசைக்குறிப்பை எழுதியவர்களுக்குக்
கேட்டிருக்குமா
மரத்தின் கதறலோசை?”
“வகுப்பறையின்
குப்பைத்தொட்டியில் கிடந்தது
கசக்கி எறிந்த மரம்”
“காகிதத்தைக்
கிழித்தபோது கேட்டது
மரத்தை அறுக்கும் சத்தம்”
“என்னையே
என்னை வைத்து எரித்தார்கள்
தீக்குச்சியாய்”
“மரத்தின்
காய்ந்த இரத்தம்
காகிதம்”
“காகிதத்தில்
கண்ணீர்த்துளி வரைந்தேன்
காகிதம்
ஈரமாகியது”
“கனக்கிறது
புத்தகப்பை
முதுகில் சுமந்து செல்கிறேன்
மரங்களை”
என்றவாறு அடுக்கடுக்கான உவமைகளும் உருவகங்களும் கமநிதாவின் கவிதைகளில் உலவுகின்றன. சங்கப் புலவர்கள் முதல் சமகால கவிஞர்கள் வரை எல்லோரும் மரங்களைப் பாடியிருக்கிறார்கள். ஆனால், கமநிதா மரத்தின் குரலில் பாடியிருக்கிறார். கவிதைகள் அனுபவத்தின் ஏற்ற இறக்கங்கள். கமநிதா தான் நாள்தோறும் பழக்கிக்கொண்ட வகுப்பறை அனுபவத்தைக் கவிதைகளாகத் தந்துள்ளார். வாசிக்கும் வயதில் இருக்கும் நம்வீட்டுப் பிள்ளைகளுக்கு நாம் வாங்கித் தரவேண்டிய தரமான நூல் இது. அவர்களும் வாசித்தும் எழுதியும் பழகட்டும். இந்நூலின் பின் அட்டையில் கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் அறிவுமதி, கவிஞர் பழநிபாரதி ஆகியோரது வாழ்த்துக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. பதிப்புரையைப் ப.இளம்பரிதியும், வாழ்த்துரைகளைக் கவிஞர் பழ.புகழேந்தியும், கவிஞர் பாபுசசிதரனும் தந்துள்ளார்கள். என்னுரையை “எழுதிக்கொண்டே இருப்பேன்” என்னும் தலைப்பில் கமநிதா எழுதியுள்ளார். நானும் அதைத்தான் சொல்ல விழைகிறேன். கமநிதா அவர்களே நீங்கள் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்… வாழ்க… வாழ்க….