
இந்த புத்தகம் பீட்டர் வோலிபென் என்ற ஜெர்மானிய வானியலாளர் இயற்றிய நூல். தன்னுடைய வாழ்நாளில் காட்டில் மரங்களுடன் தாவரங்களுடனுமே வாழ்ந்து அவைகளை அவதானித்து இயற்கையின் தொடர் சங்கிலியை புரிந்து கொண்டு எழுதிய அற்புதமான புத்தகம். “The hidden life of trees” என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் மொழியாக்கம். லோகமாதேவி என்ற தாவரவியாளர் மிக அற்புதமாக மொழிப்பெயர்த்து தந்திருக்கிறார். இந்த புத்தகத்தின் கூடுதல் சுவாரசியம், ஏதோ காடுகளை பற்றியும் காட்டு மரங்களைப் பற்றியும் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை மட்டுமே கொண்டிராமல் தன் பிள்ளைகளின் கதைகளை சொல்வது போல் பீட்டர் வோலிபென் கூறுவது மிக அற்புதமான வாசிப்பனுபவமாக இருக்கிறது.
“ஒரு விதையானது மண்ணில் விழுந்து அது வசந்தத்தின் முளைக்க தொடங்கிவிட்டால் அதன் பின்னர் அதன் வாழ்வெனும் சூதின் பகடைகள் உருட்டப்படுகிறது.”
ஒரு மரமானது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான விதைகளை உருவாக்கினாலும் அவற்றில் ஒரு விதை தான் முளைக்கும் சாத்தியம் பெறுகிறது. அப்படி முளைத்த ஒரு விதையும் தன்னை உறுதியான மரமாக பல்வேறு தடைகளைத் தாண்டி நிலைநிறுத்திக் கொள்ள மேலும் 20 ஆண்டுகள் போராட வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு விஷயமாக படிக்க படிக்க மனித வாழ்க்கை மட்டும் போராட்டம் நிறைந்தது அல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மரங்கள் ஒருபோதும் தன் வாழ்க்கையை சலித்துக் கொள்ளாமல் தொடர்ந்து போராடுகிறது. தற்கொலைச் செய்துக் கொள்ளாமல் இயன்றவரை தற்காத்துக் கொள்கிறது. வெட்டிச் சாய்த்த மரங்களின் அடித் துண்டிலிருந்து வளரும் துளிர்களை அவதானித்தாலே போதும் இதனை அறிந்து கொள்ளலாம். பூஞ்சை காளான்களாலும், அஸ்வினி பூச்சி போன்ற பல்வேறு உயிரினங்களால் வேர்களையும், இலைகளையும் ஆரோக்கியத்தையும் இழந்துபோகும் மரங்கள் கூட தனக்கு தேவையான உணவையும் சக்கரையையும் பெற எப்படியெல்லாம் போராடுகின்றன. உயிரினங்கள் மட்டுமா, சூழ்நிலை மாற்றங்களும், இயற்கை சீற்றங்களும் ஒரு மரத்தின் அழிவுக்கு எப்படியெல்லாம் பங்காற்றுகின்றன என படிக்க படிக்க கண்கள் விரிகிறது. உறைபனி காலங்களில் தன்னை காத்துக் கொள்ள கூம்பு மரங்கள் இலைகளையெல்லாம் உதிர்த்துக் கொண்டு எவ்வளவு அறிவார்ந்த முறையில் செயல்படுகிறது.
மனித உடலில் காயம் ஏற்படும் போது நமது நோய் எதிர்ப்பு மண்டலம் எவ்வாறு விழித்துக் கொண்டு செயல்படுகிறது. அதேபோல தான் தாவரங்களும் தன்னுடைய உடலில் வேதியியல் மாற்றங்களை நிகழ்த்தி நச்சு வாயுக்களை வெளியிட்டு தன்னை தற்காத்துக் கொள்கிறது.
இனப்பெருக்க காலங்களில் தான் மகரந்தச் சேர்க்கை நடைபெற நிறைய வாய்ப்புகள் இருந்தும் அதையெல்லாம் மிக்க அறிவியல் பூர்வமாக தவிர்த்து விட்டு எவ்வளவு சமயோசிதமாக செயல்படுகின்றன என படிக்கும் போது வியப்போதுகின்றன.
தாவரங்களின் ஆச்சரியமான தகவமைப்புகள் சிலவற்றை படிக்கும்போது கண்கள் விரியத்தான் செய்கின்றன. தாவரங்கள் வாயில்லாத போதும் ஒலியை (மீயொலி) வெளிவிடுகின்றனவாம். மூளையே இல்லாமல் போனாலும் தகவல்களை சேகரித்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல தாவரங்கள் செயல்படுவது அற்புதமான வாசிப்பு. தாவரங்கள் தாகமாக இருக்கும்போது கதறுகின்றனவாம். மனிதனின் குரல்வளையில் காற்று இறங்கும்போது உண்டாகும் அதிர்வினை ஒத்த ஒலியை காணமுடியும் என்கிறார்.
“ஒரு கைப்பிடி காட்டு மண்ணில் இந்த பூமியில் இருக்கும் அனைத்து மனிதர்களை விடவும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன.”
இந்த நுண்ணுயிரிகள் எல்லாம் சேர்ந்து எப்படி ஒரு கூட்டு சங்கிலி தொடராக செயல்படுகிறது. அதற்கு காரணம் “பூஞ்சை இளையங்கள்” (Mycorriza). பரிணாம வளர்ச்சியின் அடிப்படைத் தத்துவம், “தக்கன உயிர்வாழும்”என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தாவரங்கள் அனைத்தும் இதனை தலையை ஆட்டி மறுக்கின்றனவாம். அதாவது ஒரு ஆரோக்கியமான மரத்தின் ஆயுள் என்பது அது கூட்டு வைத்திருக்கும் மரங்களின் அமைப்பின் நல்வாழ்வை பொறுத்து அமைகின்றனவாம். இவை சத்துக்களை ஒன்றுக்கொன்று பகிர்ந்து கொள்வதில் தான் சமத்துவம் நிகழ்கிறது. எனவே மரங்களுக்கு இடையில் உள்ள மரங்களை வெட்டுவதால் அவை பலவீனமடைகின்றன.
பழங்காட்டில் பட்டுப்போன மரங்கள் மண்ணோடு மண்ணாக மட்கி சில நூற்றாண்டுகள் கழித்து, எரிவாயு, நிலக்கரி, எண்ணெய்களை உருவாக்குகிறது. ஆனால் இன்று மரங்களை வெட்டுவதால் அதன் சாத்தியம் குறைந்துவிட்டது. பூமியில் இருக்கும் அத்தனை வளங்களையும் வெட்டி எடுக்கும் நாசக்கார கும்பலாக மாறிவிட்ட இன்றைய நவீன உலகம் மீண்டும் மீண்டும் இப்படி கிடைத்துக் கொண்டே இருக்க அதிக வயதான மரங்களைக் கொண்ட காடுகள் வேண்டுமென்பதன் முக்கியத்துவத்தை உணராமல் இருக்குமா? அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்ல என்ன இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது எவ்வளவு சுயநலம். அதுதான் புதிது புதிதாக மரங்களை நட்டு வளர்கிறோமே என்று காலரையெல்லாம் தூக்கிவிட அவசியமே இல்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட நவீன காடுகள் இயற்கையான காடுகளை ஒத்த தொடர் சங்கிலியால் பிணைக்கப்படுவதே இல்லை என்பது தான் உண்மை.
உண்மையிலேயே காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் காடுகளை பயன்படுத்துவோம் என்றால் அதற்கு நாம் முதுமரங்களை வாழவிட வேண்டுமென்கிறார். கடற்கரையை ஒட்டியுள்ள காடுகளில் நீராவி சுழற்சி நடைபெறும்போது மழை உண்டாகிறது என்பதனை நாம் அனைவரும் அறிவோம். அப்படி நடக்கையில் கடலிலும் கடற்கரையைச் சுற்றி மட்டும் தானே மழைப்பொழிவு நிகழும். மற்ற இடங்கள் மழைப்பொழிவை பெறுவது எப்படி? முதுமரங்களின் மேல் பகுதியிலுள்ள இலைப்பரப்பு என்பது நிலப்பரப்பை விட 27 மடங்கு அதிகமாம். மழைப்பொழியும் போது மரத்தின் மேற்பரப்பில் தேங்கிய தண்ணீரில் மறுசுழற்சி முறையில் நீராவி சுழற்சி நடைபெற்று மீண்டும் மழையை பெறுகிறது. மழை பெற வேண்டுமென்றால் கடற்கரை காடுகள் எவ்வளவு பரந்து விரிந்திருக்க வேண்டும்?
காட்டு மரங்களை நகரத்தில் நட்டு வளர்க்கும்போது அவைப்படும் பாடுகளை மிக தெளிவாகச் சொல்லி இருக்கிறார். இப்படி வளர்க்கப்படும் மரங்களை ஆதரவற்ற தெருப்பிள்ளைகள் என்ற அடைமொழியுடன் வர்ணிக்கிறார். இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே. எந்தவித மனித செயல்பாடுகளும் இன்றி வளரும் காடுகளே உண்மையான காடுகள். இன்றைய சூழலில் அத்தியாவசியமானவை. புரிந்தவன் புத்திசாலி.
ஒரு காட்டின் சூழிலியல் முக்கியத்துவத்தை அறியாத வரையில் காடழிப்பு என்பது வெறும் டாலர்களை கொட்டிக்கொடுக்கும், அதனால் கொழிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் செய்தியாக மட்டும்தான் பார்க்கப்படும். நம்முடைய நல்வாழ்வு என்பது காடுகளுடனும் நீராதாரத்துடனும் தான் நெருங்கியத் தொடர்புடையது. இந்த தொன்மையான காட்டறிவையும் ஞானத்தையும் பாதுகாத்தால் மட்டுமே அவை எதிர்காலத்தில் நம்மை பாதுகாக்கும். இந்த பேரறிவினை மக்கள் முழுவதாக அறிந்து கொண்டால் மட்டுமே இயற்கை சூழலில் தன்னுடைய பங்கும் அத்தியாவசியமானது என்பதை உணர முடியும். அருமையான முழுமையான புத்தகம் இது. மரங்கள் குறித்தும் காடுகள் குறித்தும் நிறைய எழுதி ஒரு தெளிவான அறிவைப் பெற வேண்டுமென்ற நோக்கத்திலே இந்த புத்தகத்தை மொழிபெயர்த்து வாசகர்களுக்கு பரிசளித்த மொழிப்பெயர்பாளர் லோகமாதேவியை மனதாரப் பாராட்டி வாசகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மரங்களின் மறைவாழ்வு
பீட்டர் வோலிபென்
தமிழில் லோகமா தேவி
காலச்சுவடு பதிப்பகம்
விலை 390