புதுப்பித்துக்கொள்ளும் மலையாள சினிமா

1950-கள் வாக்கில் இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களின் தொடர் பங்களிப்பு காரணமாக ஒரு புதிய அலை தோன்றியது. சத்யஜித் ரே, ரித்விக் கடக், மிருனாள் சென், குரு தத் சாந்தாராம் உள்ளிட்ட இயக்குநர்கள் தீவிரமாக பணி செய்த நாட்கள் இந்திய சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம். 1960-90 வரையிலான காலக்கட்டத்தில், அரசியல், அழகியல் மிகவும் அடர்த்தியான, அர்த்தப்பூர்வமான, அரசியல் பொதிந்த படங்கள் சற்றேரக்குறைய அனைத்து மொழிகளிலும் வெளிவந்தன. இந்தக் காலக்கட்டத்திலும், இதற்கு சற்று முன்பின்னாகவும் மலையாள சினிமாவிலும் புதிய அலை என்று சொல்லத்தக்க வகையிலான படங்களை கே.ஜி.ஜார்ஜ், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், பத்மராஜன், பரதன் போன்ற இயக்குநர்கள் உருவாக்கினர். அவை வெகுஜன ஈர்ப்புக்காக அன்றி அரசியல்-சமூகவியல்-பொருளியல் சார்ந்த படங்களாகவும் வெளிவந்தன. சினிமா ரசிகர்களும் அப்படியான படங்களுக்கு பெரும் ஆதரவு அளித்தனர். அதனால் தான் 1986இல் அற்புதமான படைப்பாக இன்றளவும் போற்றப்படும் ”அம்ம அறியான்” படத்தை ஜான் ஆப்ரஹாம் மக்கள் பங்களிப்புடன், மக்களை பங்குதாரர்களாகக் கொண்டு, மக்களின் படைப்பாக எடுக்க முடிந்தது. மக்கள்திரள் நிதி மூலமாக ஒரு அரசியல்-கலைப்படத்தை எடுப்பதை இன்று நாம் கற்பனையும் செய்து பார்த்து விட முடியாது.

தமிழ் –மலையாளம் இரண்டு திரையுலகுகளையும் ஒப்பிட்டு நோக்கும் போது 1960-90களின் மலையாளப்படங்கள் மிகுந்த கலையமைதியையும், அர்த்தமிக்க பேசுபொருட்களையும் கொண்டிருந்தது. மெதுவாக நகரும் உண்மைக்கு மிக நெருக்கமான காட்சிகளைக் கொண்ட மலையாளப் படங்கள் கலைப்படங்கள் என்றே பெரிதும் அறியப்பட்டன. ஆர்ட் பிலிம் என்ற வார்த்தை அப்போது பரவலாக இருந்தது. பெரும்பாலான அந்தக் காலக்கட்ட மலையாளப்படங்கள் ஆர்ட் பிலிம் என்றே தமிழ் நாட்டில் பார்த்தனர். விருதுக்கான அல்லது விருது பெற்ற படங்கள் மட்டுமன்றி பொதுவாக வணிக நோக்கில் எடுக்கப்பட்ட படங்களும், தமிழ் தெலுங்கு இந்தி படங்களைப் போலன்றி மிகவும் எளிமையாக, இயல்பான காட்சிகளுடன் எடுக்கப்பட்டன. மண்ணின் மனம் மாறாத காட்சிகள் நிறைய இருந்தன. மலையாள சினிமா நல்லது; மலையாள சினிமாவுக்கு நல்ல ரசிகர்கள் உண்டு என்கிற ரீதியில் இருந்த மலையாளப்படங்கள் 2000க்குப் பிறகு ஏனைய இந்திய மொழிகளைப் போல முற்றிலும் வணிக ரீதியிலான மசாலா கலந்த நாயக வழிபாடு பொதிந்த படங்கள் வர ஆரம்பித்தன. நகைச்சுவைக்காகவும் சில படங்கள் எடுக்கப்பட்டன. இவை எல்லாமும் மலையாள சினிமா மீதிருந்த ஆர்ட் பிலிம் என்ற பிம்பத்தை உடைத்தன. மம்மூட்டி, மோகன்லால், திலீப், சுரேஷ்கோபி போன்ற பெரும்பாலான நடிகர்கள் இப்படியான படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் நட்சத்திர அந்தஸ்தை பெருக்கிக்கொண்டனர். தமிழ் தெலுங்கு இந்தி என்கிற மொழிப்பாகுபாடு இன்றி எல்லா மொழிகளிலும் முற்றிலும் வணிக நோக்கில் மசாலாப்படங்கள் அதிகம் வந்துகொண்டுள்ளன.

ஓ.டி.டி. எனும் தனித்த திரைத்தளங்களின் வருகைக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கடந்த பத்தாண்டுகளில் எல்லா மொழிகளிலும் நிறைய புதிய இயக்குநர்கள் புதிய கதை சொல்லல் முறைகளோடும் தொழில்நுட்ப புதுமைகளோடும் அற்புதமான படைப்புகளை கொடுத்து வருகின்றனர். இப்படியான இளைய இயக்குநர்களின் பங்களிப்பு மலையாள சினிமாவில் மிகவும் வீரியமாக உள்ளது. இப்படியான புதிய இயக்குநர்களின் வருகை மசாலா சினிமாக்களிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலோட்டமாகச் சொன்னால் மலையாள சினிமா தனது பழைய கலைப் போக்குக்கு திரும்பியுள்ளது.

2010இல் தொடங்கியிருந்தாலும் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பெரும் வீச்சு கண்ட ஓ.டி.டி எனும் திரைத்தளங்கள் இயக்குநர்களுக்கு மிகப்பெரும் உதவியாக அமைந்தன. பரிட்சார்த்த முயற்சிகளையும் மிகவும் நெடிய கதைகளையும் மிகவும் குறுகிய கதைகளையும் திரையில் கொண்டு வரும்  சாத்தியங்களை அதிகப்படுத்தியது. பார்வையாளர்களும் ரிமோட்டை கையில் வைத்திருப்பதால் சினிமா பார்ப்பதை எளிதாக்கிக் கொண்டனர். இந்தப் போக்கு ஓ.டி.டி மட்டுமல்ல திரையரங்குகளில் படங்கள் ஓடுவதற்கும் ஒரு காரணியாக அமைந்தது. அதனால் தான் ஒழிவு திவசத்தே களி போன்ற மிக மிக மெதுவாக நகரும் சம்பவங்களின் தொகுப்பைச் சொல்லும் படங்களும் கவனிப்பு பெறுகின்றன. லிஜோ ஜோஸ், சணல்குமார் சசிதரன் போன்ற மாறுபட்ட பாணியிலான இயக்குநர்களின் படங்களும் தற்போது ஆர்ட்பிலிம் என்ற பாவனையைக் கடந்து வெகுமக்கள் தளத்திலும் பேசப்படுகின்றன. இந்த ரசனை மாற்றம் கடந்த பத்தாண்டுகளில் மிகவும் பண்பட்டுள்ளது. தி கிரேட் இண்டியன் கிச்சன் போன்ற படங்கள் இந்த வரவேற்பின் காரணமாகவே தைரியமாக எடுக்கப்பட்டது. எதிர்ப்பார்ப்பைப் போலவே கவனிப்பும் பெற்றது.

சமகால மலையாளப் படங்கள் இந்திய சினிமாவின் வெகுஜன ஓட்டத்தில் இருந்து விலகாமல் தமது மரபார்ந்த இயல்பான கதை சொல்லும் போக்கினை தக்க வைத்துக்கொண்டும் வணிக ரீதியான படங்களையும் பரிட்சார்த்த படங்களையும் கலந்து கட்டி கொடுத்து வருகிறது. ஓ.டி.டி. திரைத்தளங்கள் ஒரு நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களையும் பொதுவெளியில் பரந்த விவாதத்துக்கு இட்டுச் செல்கிறது. பொதுவான சினிமா பார்வையாளர்கள் கூட ஒரு பேய்ப்படம் என்ற ரீதியில் இந்தப் படத்தைப் பார்க்கின்றனர். இவையெல்லாம் ஓ.டி.டி. தளங்கள் சினிமாவை பார்க்க வைக்கும் சாத்தியங்களை அதிகப்படுத்துகின்றன என்பதற்கான சான்றுகள். குற்றங்களை கண்டறியும் புலனாய்வுப் படங்கள், மனிதர்களுக்கு இடையேயான ஆளுமைச் சிக்கல்கள் ஈகோ போன்றவற்றை சொல்லும் படங்கள், குடும்ப உறவுகளின் சிக்கல்களைப் பேசும் படங்கள், அரசியல் படங்கள் என எப்போதும் கலவையான படங்களை கலைத்தன்மையுடன் கொடுக்கும் சமகால மலையாள சினிமாவின் பொது அம்சமாக நாம் அவர்களின் கதை சொல்லும் உத்தியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைச் சொல்லலாம். மிக மெதுவாக நகரும் காட்சிகளே என்றாலும் கூட, திறமையான நடிகர்கள், காட்சியின் அழகியல் அல்லது காட்சிக்கான காரண காரியங்கள் போன்றவை காட்சிகளை அல்லது படங்களை பார்க்க வைக்கின்றன. இரண்டு தனிப்பட்ட மனிதர்களின் ஈகோவைப் பேசும் படமாக இருந்தாலும் அய்யப்பனும் கோஷியும் படம் அதன் கதை சொல்லும் விதத்துக்காகவே கவனிப்பைப் பெற்றது. ஜெல்லிக்கட்டு என்கிற படம் மிகச் சிறிய சம்பவத்தைச் சொல்லும் படம் . ஆனால் கவனிப்பைப் பெற்றது. எந்தப் புதுமையும் இல்லாத புலனாய்வுப் படங்களான இரட்ட, அஞ்சாம் பாத்திரா போன்ற படங்களும் மிகச்சிறப்பான காட்சியமைப்புகள் மற்றும் தேர்ந்த நடிப்பால் நல்ல காட்சியனுபவம் மிக்க படங்களாயின.

சமகால மலையாளப் படங்கள் இந்திய சினிமாவின் வெகுஜன ஓட்டத்தில் இருந்து விலகாமல் தமது மரபார்ந்த இயல்பான கதை சொல்லும் போக்கினை தக்க வைத்துக்கொண்டும் வணிக ரீதியான படங்களையும் பரிட்சார்த்த படங்களையும் கலந்து கட்டி கொடுத்து வருகிறது” என்பதற்கு இரண்டு படங்களை முன் வைக்கலாம். முதலாவது படம், மின்னல் முரளி. பசில் ஜோசப் இயக்கம்; டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் முதன்மை பாத்திரங்கள் ஏற்று 2021 ஆம் ஆண்டில் வெளியான படம். பேட்மேன், ஸ்பைடர்மேன் போல, சூப்பர் ஹீரோ மாதிரியான ஒரு பரிட்சார்த்த படம்.  முகமூடி போன்ற சில சூப்பர் ஹீரோ படங்கள் அவ்வப்போது முயற்சி செய்யப்படுகின்றன. ஆனால் மின்னல் முரளி அந்த முயற்சியில் வெற்றியடைந்துள்ளது. சூப்பர் ஹீரோ டெம்ப்ளேட் தான் என்றாலும் காட்சி அமைப்புகள் உள்ளூர்த்தன்மையுடன் இருப்பதால் படம் குறிப்பிடத்தக்க படமாகிறது. வழக்கமான சூப்பர் ஹீரோ சூப்பர் வில்லன் சிலபல நகைச்சுவைக் காட்சிகள் என்றாலும் படம் கேரளாவின் மண்வாசனையை தக்கவைத்துக்கொள்ளும் காட்சியமைப்பில் தனித்துத் தெரிகிறது. ஒரு அரிய வானியல் நிகழ்வு நாளில் மின்னல் தாக்குண்ட இருவருக்கு அபூர்வ சக்திகள் கிடைக்கின்றன. வெளிநாட்டுக்குப் போவதையே  குறிக்கோளாகக் கொண்ட காதலில் தோல்வியுற்ற இளைஞர் ஒருவருக்கும், மனநலம் குன்றிய தாய்க்கு பிறந்த காரணத்தால் ஊரின் புறக்கணிப்புக்கு ஆளாகுவதோடு காதலையும் வெற்றிகொள்ள முடியாத நடுத்தர வயதுள்ள ஒருவருக்கும் மின்னல் மூலமாக வியக்க வைக்கும் சக்திகள் கிடைக்கின்றன. சூழ்நிலை காரணமாக ஒருவர் அதை நல்ல விதமாகவும் இன்னொருவர் பழிவாங்கவும் பயன்படுத்த நேர்கிறது. சிறிய கிராமத்தில் கதை நடக்கிறது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கதைதான் டெம்ப்ளேட்;  காட்சிகள் அல்ல. சூப்பர் ஹீரோ தனது துண்டினால் முகத்தை மூடிக்கொண்டு காரியங்களைச் செய்கிறார். சூப்பர் வில்லன் சோளக்காட்டு பொம்மையின் பிய்ந்த சாக்கை முகமூடியாக்கிக் கொள்கிறார். இருவரும் கைலியுடன் ஓடுகிறார்கள். பாய்கிறார்கள். சண்டையிடுகிறார்கள். மினி பஸ்ஸில் ஏறுகிறார்கள். இப்படியாக நமது பக்கத்து ஊரிலோ உள்ளூரிலோ சூப்பர் ஹீரோவும் சூப்பர் வில்லனும் இருந்தால் எப்படியோ அப்படி கேரளாவின் உள்ளூர்த்தன்மையோடு காட்சிப்படுத்தியுள்ளனர். மலையாளப்படங்கள் பாத்திர வார்ப்புக்கு பேர் போனவை. இந்தப் படமும் நாயகன் வில்லன் இருவருக்கும் மிகுந்த வலுவான முன்கதைப் பின்னணி உள்ளது. முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ள டோவினோ தாமஸ் குரு சோமசுந்தரம் இருவரும் அருமையாக நடித்துள்ளனர். அதனால் தான் படம் ஈர்க்கிறது.

இரண்டாவதாக ஒரு தெக்கன் தள்ளு கேஸ். எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் அவர்களின் ‘அம்மிணிபிள்ளை வெட்டு கேஸ்’ என்ற சிறுகதையை தழுவி ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’ படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீஜித்.என் இயக்கியுள்ளார்.அய்யப்பனும் கோஷியும் படத்தைப் போலவே இரு தனிநபர்களின் ஈகோவினால் நடக்கும் சம்பவங்களே படம்.இரண்டு படத்திலும் பிஜு மேனன் முக்கிய கதாபாத்திரம் வகித்தாலும் நடிப்பில் பெரும் வேறுபாடு காட்டியுள்ளார். கதைக்களம் வேறாக உள்ளது. காட்சிகளின் போக்கு வேறாக உள்ளது. பிஜு மேனன் அம்மிணி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். பாத்திர வடிமைப்பு நமக்கு பிஜு மேனனைக் காட்டுவதில்லை. அம்மிணி எனும் அசகாய உள்ளூர் சூரனைக்காட்டுகிறது. அல்லது பிஜு மேனன் அப்படியாக நடித்துள்ளார். மெலிதான நகைச்சுவையை உள்ளிட்டு, ஈகோ போட்டியை முன்வைக்கும் காட்சியமைப்புகளால் படம் கவனிப்பை பெறுகிறது. பரபரப்பான கதையோட்டத்திலும், விறுவிறுப்புக்கு மத்தியிலும் நகைச்சுவை இழையோடும் காட்சிகள் படத்தின் சிறப்பு.

மேற்சொன்ன இரண்டு படங்களும் மிக நீளமான இழுவையான காட்சிகளைக் கொண்டவை. மலையாள சினிமாவில் இது தொன்று தொட்டு தொடரும் ஒன்று. ஆனால் இரண்டிலும், வெகுமக்களைக் கவரும் நகைச்சுவைக் காட்சிகள், படத்தை தொடர்ந்து பார்க்க வைக்கும் கதை சொல்லல் முறை, நடிகர்களின் அற்புதமான நடிப்பு, உண்மைக்கு நெருக்கமான காட்சிப்பின்புலம் (இடங்கள்) ஆகியவை தற்போதைய மலையாள சினிமாவின் போக்கை முன்னிறுத்தும் காரணிகள் என்று சொல்லலாம். ஆக, மலையாள சினிமா தனது தனித்துவத்தை இழந்து விடாமலும், தற்போதைய வணிகப்போட்டியில் நிற்கும் விதமாகவும் தனித்த சினிமாக்களை அவ்வப்போது கொடுத்து தன்னைப் புதுப்பித்தும் தக்க வைத்துக்கொண்டும் வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version