இன்று பெரும்பாலானோர் மாற்றத்தை விரும்பாத மனிதர்களாகவே இருக்கிறார்கள். தாங்கள் வாழும் சூழல் சிறிது மாறினாலும் அவர்களால் அதை ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை.
வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை.............. வான்மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை..........
மனிதன் மாறிவிட்டான் …… மதத்தில் ஏறி விட்டான்……. “
என்ற திரைப்படப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
ஆனால் உண்மையில் வானம், பூமி, நதி, காற்று, மரங்கள், பறவைகள் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.
நாம் சிறுவயதில் பார்த்த உலகம் வேறு இப்பொழுது பார்க்கும் உலகம் வேறு. நாமும் மாறிவரும் உலகுக்கு ஏற்றார் போல் நம்மை மாற்றிக் கொண்டு தான் வருகிறோம்.
அனைத்தும் மாறும்போது நாம் மாறாமல் இருப்பது தான் பிரச்சனைகளின் தொடக்கம்.
அறிவியல் அனுதினமும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
புதிய அண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
பூமியை விடுத்து பிற கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்று ஆராய்ச்சியில் எப்போதோ இறங்கி விட்டோம்.
இந்தப் பிரபஞ்சத்தில் நாமும் இருத்தலில் கண்ணுக்குத் தெரியாத ஒரு புள்ளியாகத் தான் இருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை.
ஆனால், நம் அனைத்து பிரச்சனைகளுக்கும்....
” நாம் இந்த உலகில் மிகவும் முக்கியமானவர்கள் என்றும் உலகமே நம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்றும் நம் உடையில் ஒட்டிக் கொள்ளும் சிறு அழுக்கு கூட அவர்களால் கவனிக்கப்படுகிறது” என்றும் நினைக்கும் மனப்பான்மையால் தான் உண்டாகிறது….
உண்மையில் யாரோ சிலரின் பார்வையில் உயர்ந்து நிற்பதற்காக நாம், நம் தனித் தன்மை எல்லாம் உதறி எறிந்து விட்டு, அவர்கள் விரும்பிய
மனிதர்களாக மாறி வாழ நினைத்து, நம் சுயத்தை விழலுக்கு இறைத்த நீராக வீணடிக்கிறோம்.
இந்த சமூகத்திற்கு என்று நிலையான கொள்கையோ ஒருமித்த பார்வையோ இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உண்டு என்பதை மறுக்க முடியாது.
இந்த பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியாத அணுவைப் போல நாம் இருக்கிறோம். இந்த வாழ்க்கை ஒரே நொடியில் நம்மை கடந்து செல்லக்கூடியது.
இதற்காக நாம் கவலைப்பட்டு மற்றவர்களை திருப்தி செய்வதற்காக பிரயத்தனங்கள் செய்து அல்லும் பகலும் அரிதாரங்களை பூசிக்கொண்டு வாழ முற்படுவோமேயானால் இறுதித் தருணத்தில், இனிமையான அனுபவங்களை எல்லாம் இழந்துவிட்டோமே என்று கன்னத்தில் கை வைத்து கண்ணீரை வடித்து கவலைப்பட வேண்டியதுதான்.
நாம் எப்போதும் மற்றவர்களை மாற்ற முயற்சி செய்கிறோம். நாம் மாற வேண்டியது இல்லை என கருதுகிறோம்.
நாம் இன்னும் செதுக்கப்பட வேண்டியவர்கள் தான், நம்மில் பல பக்கங்கள் இன்னும் பாறையாகவே இருக்கிறது என்பதை முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும்.
நம்மிடம் இருக்கிற குறைகளை யாராவது சுட்டிக்காட்டினாலும்
அதை நியாயப்படுத்துகிறவர்களாக நாம் இருக்கிறோம், இந்த மனப்பான்மையை முதலில் உடைத்தெறிய வேண்டும்.
வாழ்க்கையை நாம் எப்படி ஆக்கிக் கொள்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது.
எப்போது நாம், நம்முடைய வாழ்க்கையை நமக்கானது மட்டுமே………..
நம்முடைய உள்ளுணர்வின் படி வாழ்வதற்காக மட்டுமே…..
என்று திடமாக வாழ தொடங்குகிறோமோ….
அப்பொழுது புதியதோர் உலகம் புலப்பட தொடங்குகிறது.
எந்த போதி மரத்தடியில் இருந்து எனக்கு
இந்த ஞானம் கிடைத்தது என்று தானே யோசிக்கிறீர்களா…….. 🤔🤪
வெ. இறையன்பு அவர்கள் எழுதிய
” புதியதோர் உலகம் செய்வோம்” என்ற நூலை வாசித்த பின்பு தான் பெற்றேன்.
இந்த நூலை கற்பகம் புத்தகாலயம் அக்டோபர் 2020 இல் முதற்பதிப்பாக வெளியிட்டுள்ளது.
இந்த நூல் கொரோனா பெருந் தொற்று காலத்தில்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த இணையதள உரையில் ( 25/07/2020)
வெ. இறையன்பு அவர்கள் பேசியதன் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நாமும் இந்த நூலை படித்து புதியதோர் உலகம் செய்யலாம் வாருங்கள்