
பொதுவாக என்னிடம் வரும் என் இளம் பெற்றோருக்கு நான் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் என்று கூட வைத்துக்கொள்ளலாம் …. Parenting is not a rocket science என்பது. இப்பொது சமீபகாலமாக நான் அதை சொல்லுவதே இல்லை.. ஆம் Parenting is way beyond rocket science என பல குழந்தைகள் காட்டி விட்டனர். சமீப காலமாக நான் சந்திக்கும் குழந்தைகளிடம் குழந்தை தனத்தை பார்ப்பது என்பது அரிதாகி விட்டது. குழந்தைகள் சாதரணமாக தெரியலாம் , ஆனால் அவர்களின் வயதிற்கு ஏற்ற முதிர்ச்சி என்பது அதிகமாக உள்ளது. ஒரு 6 வயது குழந்தைக்கு இருக்கும் முதிர்ச்சி 20 வருடங்களுக்கு முன் 12 வயதில் இருந்து கூட இருக்குமா என்பது ஆச்சர்யம்தான். எப்போதாவது தேநீர் தோழியோடு உக்காந்து இருக்கையில் யோசிப்பது உண்டு… இந்த பிஞ்சுகள் தங்களை எங்கே தொலைக்கின்றன ?எது இவர்களின் அந்த அழகான குழந்தை பருவத்தை களவாடி சென்றது ? அனைத்துக்கும் பதில் தேடும்போது இந்த சமூகத்தின் அசுர வளர்ச்சி …..கைபேசி திரைகளில் வேடிக்கையை இந்த பிஞ்சுகள் பார்க்கும் அத்தனையும் ஒரு வித பருவ முதிர்ச்சியை ஏற்படுத்திவிடுவதாவே தெரிகின்றது.
நான் சந்தித்த இரண்டு மறக்க முடியாத சம்பவங்கள் மூலம் இந்த புதிய Parenting சிக்கல்களை பகிர்ந்து கொள்கிறேன்.இதில் இரண்டு பருவங்களில் குழந்தைகள் உளவியலை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு 6 வயது சிறுமி , தாய் தந்தை திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார்கள். இந்த குழந்தையை பக்கத்தில் இருக்கும் பள்ளியில் சேர்க்கிறார்கள் .. அவளும் அவள் தம்பியுமுமாக பள்ளிக்கு சென்று வருகிறார்கள் நன்றாக போய் கொண்டு இருப்பதாக இளம் தம்பதியினர் தங்கள் வாழ்கையின் அன்றாட சுழற்சியில் சுழன்று கொண்டு இருக்கிறார்கள். ஒரு நாள் அந்த பெண் குழந்தை …அம்மா இன்று ஒரு நாள் மட்டும் ஸ்கூலுக்கு லீவு போட்டுக்குறேன் என்று கேட்கிறது. பெற்றோர்களும் ஒரு நாள் தானே என்று சரி என்கிறார்கள்… ஆனால் அவள் அதற்கு பிறகு பள்ளிக்கே போக விரும்பவில்லை ,பள்ளிக்கே போகவில்லை. ஏன் என்று கேட்டால் அழுகையும் ஆர்பாட்டமும் சில நாட்கள் தொடர்கின்றது.. நாம் பெற்றோர் நம்முடைய பேச்சை இவள் எப்படி தட்டலாம் , நாங்க எல்லாம் இப்படி வளரவில்லையே என்ற வழக்கமான பெற்றோரின் குணம் தலை தூக்க குண்டுக்கட்டாய் குழந்தையை வகுப்பில் உட்கார வைக்கிறார்கள்… அடுத்த ஒரு மணி நேரத்தில் குழந்தை மயங்கி விட்டதாய் பள்ளியில் இருந்து அலைபேசிவர பதறி அடித்து ஓடிய பெற்றோர்க்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை .அந்த குழந்தையின் பத்து நாள் போராட்டத்திற்கு பிறகே இதில் எதோ பிரச்சனை இருப்பதாகவே அந்த இளம் பெற்றோர் உணர்கின்றனர். அப்போது தான் குழந்தையை உட்கார வைத்து உனக்கு என்ன பிரச்சனை என கேட்கின்றனர் .. குழந்தை அதற்கு தன் மௌனமும் , அழுகையுமாக பதில் சொல்கிறது. எவ்வளவு கேட்டும் பதில் சொல்ல மறுக்கிறது. பெற்றோருக்கு உண்மையான பயம் தொற்றுகிறது. அதன் பிறகே மருத்துவரை பார்க்கலாம் என்ற முடிவிற்கு வந்து என்னை அணுகினர்.குழந்தையை அருகில் அழைத்தேன். ஒரு வித பதட்டத்துடன் வந்தது. எப்போதும் போல் மிட்டாய் குடுத்தே பேச வைத்து விடலாம் என்ற எண்ணத்தில் மிட்டாய் குடுத்தேன் வாங்கி வைத்து கொண்டு, இது எனக்கு பிடிக்காது ஆனால் பரவாயில்லை நன்றி என்றது. சரி குழந்தை சகிப்பு தன்மை கொண்டது தான் என்றமுடிவுக்கு வந்தேன். மெல்ல ஏன் ஸ்கூல் போகல என்றவுடன் முகம் மாறி விலகி அழுகையை தொடர்ந்தது.. எவ்வளவு முயன்றும் அழுகையை நிறுத்தவில்லை.. சரி என்று 3 நாட்கள் கழித்து அழைத்து வர சொன்னேன். திரும்ப வந்தது.. ஏங்க வர மாட்டேன் னு அடம் புடிக்கலியா? என்று கேட்டேன்.. அதற்கு ஸ்கூல் தவிர ஏங்கவேனா வரேன் என்றதாம் குழந்தை. சரி அப்போ பள்ளிக்கூடத்துல தான் எதோ பிரச்சனை , அதும் பெண் குழந்தை , சற்று யோசித்து முழு உடல் பரிசோதனை மேற்கொண்டேன். ஏதும் பாலியல் அத்து மீறல் நடந்ததாக தெரியவில்லை. பின் குழந்தையிடம் பள்ளியில் யாராவது அடித்தார்களா ?திட்டினார்களா ?என கேட்டால் இல்லை என்றே பதில் வந்தது. சற்று அந்த குழந்தைக்கு பிடித்தது பிடிக்காத விஷங்கள் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு, மீண்டும் மறுமுறை ஆலோசனைக்கு அழைத்தேன்.. இந்த முறை கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து சிரிப்போடு சந்தித்தது. அவளுக்கு பிடித்த மிட்டாய் அவளிடம் நீட்ட,உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு இது பிடிக்கும்னு கண்கள் மலர வாங்கி கொண்டது. கொஞ்சம் ஒட்டிக்கொண்டது…மீண்டும் பள்ளியை பற்றி பேச தயங்கியது..சரி மா அந்த ஸ்கூல் வேண்டாம் வேற ஸ்கூலுக்கு போறியான்னு கேட்டேன்.. குழந்தை சொன்ன பதில் சற்றே யோகிக்கவைத்தது . குழந்தை கேட்டது அந்த ஸ்கூல்ல கேமரா இருக்குமா என்றது.
ஏன்டா இப்படி கேக்கறாய் ? என்று கேட்டபோது அந்த கேமரா என்ன பாத்துட்டே இருக்கு, எனக்கு பயமா இருக்கு , நான் ஒழுங்கா சாப்பிடலான அந்த கேமரா என்னை போட்டோ எடுத்து அம்மாட்ட சொல்லிடும், என்னால அது கிட்ட இருந்து தப்பிக்க முடியாது என்றது. ஒரு நிமிடம் ஆடி தான் போனேன், பெற்றோரை அழைத்தேன் , அவள் ஸ்கூல் தவிர மத்த எடத்துல எப்படி இருக்க ன்னு கேட்டேன். அவள் ஸ்கூல் கேம்பஸ்க்கு போனாலே ஒரு மாதிரி இறுக்கமா யார்கிட்டயும் பேசமாட்டா என்றார்கள். கேமரா தான்அவளுக்கு பயம் என்றேன்.. அவர்கள் கிட்டத்தட்ட என்னை கோமாளியை பார்ப்பது போல் பார்த்து சிரித்தே விட்டார்கள்.. என்ன டாக்டர் போன்ல போட்டோ எல்லாம் எடுத்துக்கற , கேமரானா பயப்படுவாளா ? என்றார்கள். நான் கொஞ்சம் அமைதியா ஒக்கந்து உங்க குழந்தை சொல்றத உண்மையா பொய்யானு ஆராய்ச்சி பண்ணாம கேளுங்க என்றேன். அதன் பிறகு உங்கள் குழந்தை பள்ளியில் இருக்கும் சமயங்களில் நம் எப்போதும் கண்காணிக்க படுகிறோம் என்ற எண்ணத்தில் பயந்தே இருக்கிறது என்று எடுத்து சொன்னேன். நாமும் அந்த பெற்றோரின் இடத்தில் இருந்தால் இப்படி தான் யோசித்து இருப்போம்
. அறிவியலின் வளர்ச்சி கேமரா அதை குழந்தையின் பாதுகாக்கவே பொருத்தப்பட்டு உள்ளது என்றாலும்.. அதை பற்றி குழந்தை என நினைக்கிறது, அதற்கு எத்தகைய மனமாற்றம் நிகழ்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு உதாரணம். கேமரா வைக்கக்கூடாது என்று சொல்ல வரவில்லை குழந்தைக்கு பய உணர்வை தந்தால் அதனை சரி செய்வது நம் பொறுப்பு . இப்போது குழந்தை வேறு பள்ளிக்கூடத்தில் கேமரா கண்கள் கவனிப்பில் இல்லாமல் ,ஆசிரியரின் கவனிப்பில் இரண்டாம் வகுப்பு படிக்கிறது .
குழந்தைகளின் எதிர்கால நலனிற்கு நாம் செய்பவை அனைத்தும் அவர்களின் விருப்பு வெறுப்பு கேட்க தேவைப்படுகிறது.. ஏன் என்றால் இந்த தலைமுறை நம்மை காட்டிலும் சிந்தனை திறன் அதிகம் கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தை என்னிடம் கேட்ட கேள்வி என்னை சில நாட்கள் தூங்க விடவில்லை. நான் எந்த தப்பும் பண்ணலயே என் என்னை கண்காணிக்கிறார்கள்? என்றது அந்த பாப்பா. கேமரா வைப்பது தவறில்லை. அதை குழந்தையின் காணோட்டத்தில் காண தவறியதே தவறு.
19 வயது இப்ராஹிம் ஒரு நாள் என்னிடம் வந்தான் கையில் தற்கொலை தழும்புகளுடன் தலையை கீழே குனிந்தவாறு குற்ற உணர்ச்சில் உட்கார்ந்து இருந்தான். அருகில் அவன் பெற்றோர் சொல்ல முடியாத துயரத்தில். ஏற்கனவே பழக்கப்பட்ட பிள்ளை . ஐந்து முறை தொழுக கூடிய தீன் முறைப்படி வளர்க்கப்பட்ட குழந்தை. ஏன்டா இப்டி பண்ணி வச்சி இருக்கானு கேட்டால் காதல் தோல்வி என்றார்கள். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. என்னடா வயசாவுது ?அதுக்குள்ள ஒரு காதல் ! அதுல ஒரு தோல்வி !என்று சாதாரணமா அவனிடம் பேச .. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். அவன் பெற்றோர் ஒரு விதத்தில் சொந்தம் என்பதால்.. அவனை இங்க வீட்டுல விடுங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பொறுப்பேற்றுக்கொண்டேன்.
வீட்டில் அமைதியாய் அழுவதும் ஆட்களைப்பார்த்தால் மறைப்பதும் என ஒரு நாள் கடந்தது. பின் அருகில் அமர வைத்து என ஆச்சு ?என்று கேட்டால், காதல் இருந்தது உண்மை தான்அது தோல்வி அடைந்ததும் உண்மை தான் , அதற்காக இப்டி பண்ணிக்கல என்றான்வேற என்னப்பா பிரச்னை என்றேன். நீண்ட மௌனத்திற்கு அப்பறம் மௌனம் களைத்தான்.அவர்களை பார்த்தேன் என்றான். யாரை என்றேன்.. அப்போது தான் ஏழாம் வகுப்பு பயின்ற பொது ஏற்பட்ட கசப்பான நீண்ட நாள் மனவலியை பகிர்ந்தான். உள்ளுக்குள் உடைந்து போனேன். தன்னை விட இரண்டு வயது மூத்த பிள்ளைகள் தன்னிடம் பாலியல் வன்புணர்வு செய்ததை பற்றி சொல்லி வாய்விட்டு வெடித்து அழுதான்.அந்த அழுகைக்கு நடுவிலும் தன் பெற்றோரிடம் கூற வேண்டாம் என்று குமுறினான். இரவு பதினோரு மணி நிசப்தத்தில் அவன் விசும்பல் இந்த கேவலமான சமுதாயத்தின் கோர முகத்தை இன்னும் பூதாகரமாக காட்டியது.இதை சொல்லி முடித்து விட்டு அம்மா என்னை தப்பா நெனச்சிக்காதிங்க என்றான். என் வீட்டுக்குழந்தை இத்தனை நாள் இதை எப்படி எங்களிடம் மறைத்தது. சகஜமாக பழகியது ஒன்றும் புரியவில்லை எனக்கு. முதலில் என்னை ஆசுவாச படுத்திக்கொண்டேன்.
இவன் ஏழாம் வகுப்பில் இருந்து பள்ளி செல்ல விரும்பாததும். பத்தாம் வகுப்பில் பள்ளிக்கே போகமாட்டேன் என்றும் அடம் பிடித்தது நினைவிற்கு வந்தது. ஆம்பிளை பையன் அழக்கூடாது அசிங்கம் என்ற பழைய பஞ்சாங்க மனிதர்கள் இந்த சமயத்தில் உன் உச்ச பட்ச வெறுப்புக்கானவர்களால் ஆனார்கள், அமைதியை அழுதுக்கொண்டே உறங்கி போனான் என் மகன் இப்ராஹிம். காலையில் அவன் அருகில் ஒரு கடிதத்தை வைத்தேன் ….
அன்பு மகனே இப்ராஹிம் . முதலில் என்னை மன்னித்து விடு.. இதனை ஆண்டுகள் உன் சிரித்த முகத்தையும் , உன் மரியாதையும் மட்டுமே பார்த்து கொண்டு இருந்த நான் இன்று உன் ரணத்தை கண்டு கலங்கி போய்விட்டேன் மகனே. நேரில் உன்னிடம் இந்த விஷங்களை உன் முகம் பார்த்து பேச தலை குனிவாய் உள்ளது. ஏதோ சில நாய்கள் கடித்து விட்டதால் நீ எங்கள் பிள்ளை இல்லை என்று ஆகுமா? அந்த கொடூர நாய்களே சமுதாயத்தில் சில பொறுப்புடன் சந்தோசமாக சுற்றி திரியும் போது நீ என் உயிர் மாய்க்க துணிந்தாய் என் செல்வமே? இந்த குடும்பத்தில் நீ மூத்த எங்கள் முத்தான பிள்ளை. உன்னை கவனிக்காமல் உன் உடல் வலியை உணராமல், மனவலியை உணராமல் உள்ள குற்ற உணர்ச்சியே போக வில்லை. நீ உன் உயிர் மாய்த்து எங்களை மீளா துயரில் ஆழ்த்தி இருப்பாய் மகனே. அந்த இருள் சூழ்ந்த உலகில் இருந்து மீண்டு வா என் மகனே. உன்னை போன்ற பிள்ளைகள் இந்த உலகில் பிறப்பது கடினம் . நீ எங்களுக்கு முக்கியமானவன். உனக்காக நாங்கள் இருக்கிறோம். யாருக்கும் பயப்படாதே உனக்கு நடந்தது உன் உடலை மட்டும் பாதித்து இருக்குமே தவிர உன் உள்ளம் எப்போதும் நீ நினைவில் கொள்ளும் இறையை விட தூய்மையானது. நிமிர்த்து நட . நாய்கள் தூர ஓடும். ———- அன்பு அம்மா
மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் ஒன்றை தான் வலியுறுத்துகின்றன. பெறோர்களே பிள்ளைகள் சொல்வதை எந்தவித சந்தேகமும் இன்றி prejudgemental இன்றி கேளுங்கள். அவர்கள் நம்மால் வந்தவர்களே இல்லாமல் நம் கவுரவத்தை உயர்த்தி பிடிக்கவும் நம் கனவுகளை துரத்தி பிடிக்கவும் வந்தவர்கள் இல்லை. ஒரு குழந்தை தனக்கு நேர்ந்ததை சொல்ல , தனக்கு பிடிக்காததை சொல்ல இடம் கொடுங்கள். இந்த உலகம் எல்லாருக்கும் ஒரே பார்வையோடு இருப்பது இல்லை. என் குழந்தைக்கு இது தான் பிடிக்கும், இப்படி தான் இருக்கும் என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள்.இன்று என நடந்தது என்பதை தோழமையோடு கேளுங்கள் , மாறாக தோரணையோடு கேட்காதீர்கள்.கேமராக்கு பயப்படும் குழந்தையும் இருக்கு என்பதை உணருங்கள். 7 வருட வலியை மறைத்து நம்மோடு வாழும் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பைதும் தெரிந்து கொள்ளுங்கள்.