
பாமர வாழ்வின் அழுகையையும் அழுத்தத்தையும், ஒரு சராசரி ஆணின் ஏக்கங்களையும் கவிஞர் வெ.அஜீத்குமாரின் “ஞாபகத்தில் மிதக்கும் புல்லாங்குழல்” என்னும் இக்கவிதைத் தொகுப்பு விவரிக்கிறது. இந்நூல் இவரின் ஐந்தாவது நூல். இதனை ஆழினி பதிப்பகம் அக்டோபர் 2026இல் முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளது. வெளிச்சத்தின் வாக்குமூலம் (2020), கனவுகளின் தேசம் (2020), நம்பிக்கையின் நறுமணம் (2021), துப்புரவு (2022) ஆகியன இவரது முந்தைய தொகுப்புகள்.
”கஜலுக்கு மிக நெருக்கமாய்ச் சில கவிதைகள்” என்னும் கவிஞர் கலாப்ரியா அவர்களின் முன்னுரையோடு நூல் வாசிப்பின் வசீகரத்திற்குள் அழைக்க நூல் நமக்குள் அறிமுகமாகிறது. கஸலைப் பற்றி இந்நூலின் முன்னுரையில் கவிஞர் கலாப்ரியா அவர்கள் கூறுகிறபோது, ”1973இல் நான் முதன்முதலாக அப்துல்ரகுமானை வாணியம்பாடியில் வைத்து, பா.செயப்பிரகாசத்தின் திருமணத்தின்போது சந்தித்தேன். அப்போதுதான் அவர் கஜல் பற்றி முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். அவர் சொன்ன கஜல்,
“இந்தக் கண்ணீர் உன்
கண்களை விட்டுப் பிரிவதற்காக
அழுகின்றது “
இதை அவர் சொன்னதுமே நான், அறிவுமதி (என்று நினைவு) மற்றும் அவரைச் சூழ்ந்திருந்த பல வாணியம்பாடிக் கல்லூரி மாணவர்களும் ஆஹாவென்று பாராட்டினோம்.” என்று தனது கஸல் கவிதைப் பற்றிய அனுபவத்தை அப்துல்ரகுமானிடமிருந்து நினைவுகூர்ந்து தருகிறார்.
வெ.அஜீத்குமாரின் இத்தொகுப்பில் சிறந்த கவிதையெனக் கவிஞர் கலாப்ரியா அவர்கள்,
“காலத்தின் உதட்டிற்கு
ஈரம் பரப்பும் உரிமையை
இசைக்குக் கொடுப்பதா?
கவிதைக்கு வழங்குவதா?“
என்னும் கவிதையைச் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதியாக அவர், ”கஜலின் இலக்கணங்கள் நம் பூமிக்கு அந்நியமானவை என்ற பிரக்ஞையோடு இவை கஜலுக்கு அருகே நெருங்குகின்றன என்ற ஆறுதலோடு வாசித்தால் இது ஒரு நல்ல தொகுப்புத்தான்” என்று கவிஞர் வெ.அஜீத்குமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துத் தனது மதிப்பீட்டை வழங்கியுள்ளார்.
”ஞாபகத்தில் மிதக்கும் புல்லாங்குழல்” இசைக்கும் கஸல் கவிதைகள் மனத்திற்கு மிகவும் நெருக்கமானவை. நடுத்தர வர்க்கத்தினர் இரசிக்க மட்டுமல்ல, அவை தாம் அனுபவித்த வலிகளின் நினைவுகளைக் கூறுவனவாகவே உள்ளன.
கஸல் (Ghazal) என்பது அரபு இலக்கியத்தில் தோன்றி, பின்னர் பாரசீக மற்றும் உருது மொழிகளில் முழுமையடைந்த ஒரு பாரம்பரிய கவிதை மற்றும் இசை வடிவமாகும். இது காதலின் வலி, வாழ்வின் வலி, சூஃபி தத்துவங்கள் ஆகியவற்றைப் பேசக்கூடியதாக அமைந்ததாகும். கவிஞர் வெ.அஜீத்குமார் அவர்கள் இக்கவிதை வடிவத்தினை,
”இலக்கிய உலகிற்கு
உருது வழங்கிய
காதல் கொடை கஸல்…!
கஸல், நறுமணம் மறையாத
கண்ணீர்ப்பூ..!
புதுமைகளை வரவேற்கும்
தமிழின் தங்க வாசற்படிக்குப்
புதியதாய் முளைத்த சிறகுகளோடு
வானத்தையே இழுத்து வந்த
சோகக்குயில்…!
மறைந்திருக்கும் இறைமையை
வீதிக்கு அழைத்து வந்து
பூட்டப்பட்ட இதயத்தைத்
தூய்மையாய் மலர வைத்த
ஏழையின் தங்கச் சாவி…!
காதலின் இரகசியத்தில் விளக்கேற்றும்
கடவுளின் கையில் மருதாணி வைத்து,
தன்னைத் தீக்குச்சியாக
மாற்றிக்கொண்டதும்
அதே கஸல்தான்.”
என்றெல்லாம் பாராட்டுப் பாமாலையை அணிவித்துக் கஸல்மீது தான் வைத்துள்ள காதலை வெளிப்படுத்துகிறார்.
அடர் மூங்கில் காடுகளில் வண்டுகள் துளைத்த மூங்கில்கள் தென்றலின் தூண்டுதலால் இசைப்பதுபோல், ஒரு சராசரி ஆணின் மனதைக் காதலால் துளையிட்ட தென்றல் பெண்ணிடம் ஞாபக இசையை மீட்டெடுத்து ஞாபகத்தில் மிதக்க வைக்கும் புல்லாங்குழலாய் எப்போதும் இசைத்துக்கொண்டே இருக்கின்றன இத்தொகுப்பின் கவிதைகள்.
“ஒவ்வொரு நதியும்
கடல் தாகத்தோடு
இளைப்பாறாமல் ஊர்ச்சுற்றுகிற
நாடோடிப் பாடகன்தான்”
என்ற கவிதையிலிருந்து ஆரம்பமாகிறது ஒரு சோகக் குழலின் இன்னிசை.
வாழ்வில் பற்றுக் கோடாக வரவிருக்கும் கனவுகளை மனிதனின் காதல் கட்டவிழ்க்கும். அதனை,
“உறக்கத்திலிருந்து விடுதலையான
என் கனவுதான்
உன் வானத்தின் கீழ்
ஊரைச் சுற்றும் பறவையாகிறது”
என்று தன் காதலை வலசையாக்குகிறார் இந்தக் கவிஞர்.
காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் இனிதென இருந்தாலும் அது தருகின்ற வலியை விளக்க ஏதுவாக,
“காதலென்பது
முள்மரத் தேன்கூடுதான்”
என்று முள்ளின் இரணத்தைக்கூடத் தேனின் சுவையாக்கித் தருகின்றார் இக்கவிஞர்.
“என் பாடல்தான்
உனக்குக் கிடைத்த
மூங்கில் ஏணி
எந்தவொரு தயக்கமில்லாமல்
அன்பின் கனிகளைப்
பறித்து உண்”
என்னும் இக்கவிதையை இசைக்க இசைக்க எப்போதோ எங்கோ காதில் கேட்ட ஒரு பழைய காதல் பாடல்தான் வாசகனின் இதயத்தை எட்டிப் பார்க்கிறது.
வாககர்கள் இக்கவிஞனுக்கு அவரது கவிதையையே பரிசாக அளிக்க விரும்பினால்,
“உனது சொற்களே
நான் இளைப்பாறும்
அரசமர நிழல்”
என்னும் கவிதையை விலையின்றிக் கொடுத்து மகிழலாம்.
கஸல் அரேபிய பாலைவனத்தில் பிறந்தநாள் கொண்டாடியதைக் கவிஞர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“பாலைவனம் என்பது
புலம்பெயருகிற
வெய்யிலின் சரணாலயம்”
எல்லோரும் வெறுக்கும் வெயிலை இப்படி இரசிக்கும்படியாக இன்பமாக்க முடியுமா? ஆனால் இவரது கஸலால் முடிகிறது.
தோட்டத்தில் பூக்கள், காய்கள், கனிகள் எனப் பலவும் பூத்துக் காய்ந்து கனிந்து கிடப்பதை எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் இக்கவிஞர்,
“உன் தோட்டத்தில்
பூப்பதெல்லாம்
என் காயங்கள்”
என்கிறார். வலியைப் பிரசவிக்கும் இடத்தைக்கூட பூந்தோட்டமாகப் பாவிக்கும் இவரது இதயத்திற்குக் காயங்களைத் தந்தது யார் என்றே நம்மைக் கேட்கத் தூண்டுகிறது.
“கொஞ்சம் அடக்கி வை!
உன் நிழல்
உயிர்த் திமிரெடுத்து
ரொம்பவும்தான் ஆடுகிறது”
என்னும் கவிதை மனிதக் கற்பனையின் ஊற்றாகவும், சொற்களால் நிழலுக்கே உயிர்கொடுக்கும் விந்தையாகவும் அமைகிறது.
“கனவில் குதித்து
கவிதையோடு கரையேறுகிறேன்”
என்று கஜலால் கவிஞர் மீண்டும் மீண்டும் காதல் காயங்களை அடையாளப்படுத்துகிறார் இந்தக் கவிஞர்.
இறைவனுக்கும் காதலிக்கும் பொதுமைப்படுத்தும் கச்சிதமான கஸலாகப் பின்வரும் கவிதை அமைகிறது. அது,
“இசையின்
திருவிளையாடல்
நீ”
என்பதுதான். இரண்டுமே பக்தர்களைச் சோதித்துப் பார்ப்பவைதான்.
நெடுங்காலமாய்த் தான் சுமந்த உட்பொதி ஒன்றினைக் கஸல் என்னும் கவிதைத் தாங்கியின்மீது இறக்கி வைத்துள்ளார் இந்தக் கவிஞர்.
”நீ
நிரம்பியதால்
நான்
காலியானவன்”
என்னும் கவிதையில் வேறொரு எந்தப் பொருளும் என்னுள் நிரம்ப முடியாது என்னும் அழகியல் முரணைக் கவிஞர் இக்கவிதைக்குள்ளே வடித்துள்ளார்.
“பூ உதிர்ந்தாலும்
மரத்திற்கு
அது பாரம்தானே”
உறவுகள் பல இன்பமும் தருவன; துன்பமும் தருவன. மரத்திற்குப் பூக்கள் உறுப்பென்றாலும் அவற்றைச் சுமந்தால் மரத்தின் உடலுக்குப் பாரம்தான். அவை உதிர்ந்தாலும் மரத்திற்கு இழப்பு என்கிற பாரம்தான் என்னும் தத்துவத்தை இக்கவிதை வெளிப்படுத்துகிறது.
“கனவு என்பது
கற்பனைகளின் பள்ளத்தாக்கு…!
இரண்டு பெரும் மலைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கு என்பது ஆவேசமாகப் பாய்ந்துவரும் ஆற்றுக்குச் சொந்தமானது. கனவும் கற்பனையும் அப்படியான கட்டுக்கடங்காத தடுப்புகள் இல்லாதவை என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது
“நதி என்பது
பசித்த கடலின்
தண்ணீர் நாக்கு”
இந்தக் கவிதை மிகச்சிறந்த படிமம் ஆகிறது. உலகிலுள்ள ஆயிரக் கணக்கான நதிகள் கடலில் சங்கமிக்கின்றன. கடலின் நாக்குகளாக ஆறுகளை உருவகப்படுத்தியிருக்கின்ற பாங்கு மிகவும் அபாரமானது. கடல் மற்றும் நதிகளை வர்க்கப் போராட்டமாகவும் பார்க்கிற பார்வையை இக்கவிதை தருகிறது.
காயம், காதல், இசை, பூ, ஆசை, கடல், காடு என எல்லோராலும் பொருத்திப் பார்க்கக்கூடிய உவமைகள் இக்கவிதைத் தொகுப்பிற்கு மேலும் அழகினைச் சேர்க்கின்றன. இத்தொகுப்பிலுள்ளவை அனைத்தும் வாழ்வின் வலியை உணர்த்தும் கவிதைகள். தங்களைத் தாங்களே ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்வதைப் போன்றதொரு மனநிலையை அல்லது வாய்ப்பை இந்தக் கவிதைத் தொகுப்பு வாசகர்களுக்கு நிச்சயம் வழங்கும்.