டால்ஸ்டாய் எழுதிய கடைசி நாவல் இது.

இந்த நாவலின் விற்பனையில் கிடைக்கும் இலாபத்தை அன்றைய ரஷ்யாவின் கிறிஸ்துவ மதத்திலிருந்த டியுகோபர் எனும் பிரிவினருக்கு லியோ டால்ஸ்டாய் வழங்கிட விரும்பினார் ரஷ்ய மரபு வழி திருச்சபை இப் பிரிவினரை ஏற்றுக்கொள்ள மறுத்து பழிவாங்கியது. இதனால் டியூகோபர்கள் ரஷ்யாவில் இருந்து தப்பிச் சென்று கனடா நாட்டிற்கு புலம்பெயர முடிவெடுத்தனர் இதற்காகச் செலவாகும் பணத்தைத் திரட்டிக் கொடுக்க டால்ஸ்டாய் விரும்பினார் இந்த நாவல் விற்பனையில் கிடைத்த லாபம் முழுவதையும் இவர்களுக்குக் கொடுத்து உதவினார்.

செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடும் ஒரு செல்வந்தனின் கதை இதில் எழுதப்பட்டுள்ளது. பாவம் பாவத்திற்கான பிராயச்சித்தம் என்னும் இரண்டு வினைகளுமே இந்த நாவலின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.

நெக்லுத்தாவ் என்ற பணக்கார கணவான் தான் இளைஞனாக இருந்தபோது செய்த தவறுக்காக வாழ்நாள் முழுவதும் வருந்துவதைச் சித்தரிக்கும் மிகை உணர்ச்சியியல் நாவலாக எழுதப்பட்டிருக்கிறது.

கல்லூரி மாணவனாக நெக்லூதாவ் விடுமுறை நாட்களை தனது இரு அத்தைகளுடன் கழித்திட பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வருகிறார் செல்வச் செழிப்பில் வாழும் அத்தைகள் சோபியா மரியா இருவரும் அவர் மீது மிகுந்த பாசத்தையும் அன்பையும் பொழிகின்றனர். அந்த வீட்டின் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார் நெக்லுதாவ்.. அந்த வீட்டில் நிறைய வேலைக்காரர்கள் வேலை செய்து வருகின்றனர். அதில் ஒருவர் 16 வயது நிரம்பிய பேரழகி மஸ்லோவா. அவளை சோபியா தனது குழந்தை போல அரவணைத்து வளர்த்து வருகிறார். மஸ்லோவாவின் இளமை அழகு துடிப்பு அனைத்தும் நெக்லுத்தாவை கவர்கின்றன. அவரது மனதில் காதல் துளிர் விடுகிறது. மாஸ்லோவா மனதிலும் சலனம் ஏற்படுகிறது. விடுமுறை முடிந்து காதலர்கள் பிரிகின்றனர் மூன்று ஆண்டுகள் கழித்து படிப்பு முடிந்ததும் மீண்டும் பீட்டர்ஸ்பெர்க் வருகிறார். விரைவில் ராணுவத்தில் சேரவிருக்கும் அவர் இம்முறை 4 நாட்கள் மட்டுமே தனது அத்தைகள் வீட்டில் தங்குகிறார்.

ஈஸ்டர் திருவிழா கொண்டாட்டத்தில் காதலர்கள் திகைக்கின்றனர். அன்று இரவு தூக்கமின்றித் தவிக்கிறார் காதல் நோய் தீவிரமடைகிறது வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் நெக்லூதவ் சென்று மாஸ்லோவாவின் அறைக்குள் நுழைகிறார் அவரைப் போகச் சொல்லி கெஞ்சும் மாஸ்லுத்தாவ் அவரது ஆசைக்கு இணங்க மறுத்து அவரை வெளியே துரத்துகிறாள். இருளும் தனிமையும் அவர்களின் காதல் தீபத்தை தூண்டிவிட்டு எரிய வைக்கின்றது அன்று இரவு அவர்களை அறியாமலேயே நடந்த பெரிய தவறு என்பதையும் உணராமலேயே இருவரும் பிரிகின்றனர்.

மறுநாள் ராணுவத்தில் சேருவதற்கு அந்த நகரத்தை விட்டு நெக்லூதாவ் வெளியேறுகிறார் தான் நடத்திய காதல் களியாட்டம் அனைத்தையும் மறந்து விட்டு ராணுவப் பணியில் ஈடுபடுகிறார் ஆனால் மாஸ்லோவாவின் வயிற்றில் அவரது சிசு வளர்கிறது இது தெரிய வந்ததும் அத்தைகள் அவளை வீட்டை விட்டு துரத்துகின்றனர் எங்கும் அடைக்கலம் கிடைக்க வழி இல்லாமல் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள். அடைக்கலம் கேட்டுச் செல்லும் இடமெல்லாம் அவள் சொல்ல முடியாத துயரங்களுக்கு இலக்காகிறாள். இறுதியில் ஒரு விபச்சார விடுதியில் சேர்ந்து பாலியல் தொழிலாளியாக மாறுகிறாள்.

அங்கும் அவளை துரத்துகிறது பிரச்சனை. அவருடைய வாடிக்கையாளர் ஒருவரைக் கொலை செய்து விட்டதாக அவள் கைது செய்யப்படுகிறாள் நீதிமன்றத்தில் அவள் உள்ளிட்ட மூன்று குற்றவாளிகளின் மீதான வழக்கு விசாரணை வரும்போது அங்கே இருக்கும் ஆண்கள் மாஸ்லோவாவை பாலியல் ரீதியாக துன்புறுத்த பார்க்கிறார்கள் அன்றைய ரஷ்யாவில் நீதிமன்ற நடைமுறையில் நீதிபதிகளுக்குத் துணையாக நின்று நீதியை நிலைநாட்ட ஜூரிகளாக சமூகத்தின் பெரிய மனிதர்கள் நியமிக்கப்படுவர் இவர்கள் சட்டம் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவர்களது சமூக அந்தஸ்து இவர்களுக்கு அந்தப் பதவியைத் தருகிறது. அப்படியான ஒரு ஜூரியாக நெட்லுதாவ் இடம்பெறுகிறார் மாஸ்லோபாவின் வழக்கை விசாரிக்கும் வழக்கறிஞர் விடிய விடிய குடித்தும் சீட்டு விளையாடியும் பொழுது கழித்த காரணத்தினால் அவளது வழக்கு பற்றிய எந்த குறிப்புகளையும் படிக்காமலேயே தப்பும் தவறுமாக நீதிமன்றத்தில் வழக்காடுகிறார். மாஸ்லோவாவின் தோற்றத்தில் வறுமையின் பிடியிலும் காமக் கயவர்களின் கரங்களிலும் சிக்கித் தவித்த அவளது வாழ்வு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவளைக் கண்டதும் நெக்லூதாவும் மனம் பதறுகிறார். தான் குற்றமற்றவள் என்பதை மாஸ்லோவா எவ்வளவோ எடுத்துரைத்தும் அவளது சொல் நீதிமன்றத்தில் ஏறவே இல்லை. சைபீரியாவில் நான்கு மாதங்கள் கடும் உழைப்புக்கான தண்டனை வழங்கப்படுகிறது.

 தான் மாஸ்லோவாவுக்கு செய்த பாவச் செயலே அவளது வாழ்வைச் சீரழித்தது எனவே இந்தத் தண்டனையிலிருந்து எப்படியாவது அவளை விடுவித்து அவளுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும் என்று நெக்லூதாவ் துடிக்கிறார். தனக்குத் தெரிந்த வழக்கறிஞர்கள் அனைவருடனும் கலந்து ஆலோசிக்கிறார் மாஸ்லோவாவை முதலில் அழைக்கிறார்கள். தினமும் சிறைக்குச் சென்று அவளை சந்திக்கிறார். அவர் காட்டும் பரிவையும் அன்பையும் கண்டு மாஸ்லோவா வெறுக்கிறாள். தன் வாழ்வைச் சீரழித்து தன்னை நடுத்தெருவில் அலையவைத்த அவரை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

பிறந்ததிலிருந்து செல்வத்தில் திளைத்த நெட்லூதாவ் சிறையில் நிலைமைகள் அறிந்து மனம் கொதிக்கிறார். மாட்டுக் கொட்டடி போன்ற இடத்தில் நிறையக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். பல கைதிகள் நோய்வாய்ப்படுகின்றனர் குறைவான இடத்தில் நிறைய கைதிகள் மொத்தமாக விலங்குகளைப் போல அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்படுவதை கண்டு அவர் மனம் வெதும்புகிறது.. தன் தாயுடன் சிறையில் அடைக்கப்பட்ட சிறு குழந்தையின் சிறையில் படும் துன்பத்தைக் கண்டு சிறை வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்

தொடர்ந்து தன்னை சிறைக்கு வந்து பார்க்கும் நெக்லுதாவின் அன்பு உண்மையானது என்பதை மாஸ்லோவா சிறிது நாட்களில் புரிந்து கொள்கிறாள். தனக்கு எந்த உதவியும் கேட்காமல் சிறையில் இருக்கும் மற்ற பெண்களுக்கு உதவிடச் சொல்கிறாள். அவளது வேண்டுகோளையே வேதவாக்காக ஏற்று அவள் சொல்லும் அனைத்தையும் நிறைவேற்றுகிறார் நெக்லூதாவ். ஒருநாள் தனது காதலை அவளிடம் நெக்லூதாவ் சொல்கிறார் அவளைத் திருமணம் செய்து தான் செய்த பாவத்தை கழுவ நினைப்பதற்காக நெக்லுதாவ் இநத செயலை செய்ய முன் வருகிறார். ஆனால் மாஸ்லோவா அவளது காதலை ஏற்க மறுத்து விடுகிறாள்

மாஸ்கோ சென்று தண்டனையைக் குறைக்க வலியுறுத்தும் கருணை மனு போடுவதற்கு தன்னுடைய செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தி அவளின் தண்டனையை குறைக்க பெரும் முயற்சிகளை நெக்லூதாவ் மேற்கொள்கிறார். அவரது தொடர் முயற்சியின் காரணமாக தண்டனை குறைக்கப்படுகிறது. சைபிரியாவில் கடின உழைப்புத் தண்டனை என்பது குறைக்கப்பட்டு வெறும் நாடு கடத்தப்படுதல் என்றாகிறது.

சைபிரியாவுக்கு கடத்தப்படவிருக்கும் கைதிகள் ரயில் நிலையத்திற்கு கை விலங்கிட்டு நடத்தியே இழுத்துச் செல்கின்றனர். அங்கேயும் அவர்களைப் பின்தொடரும் நெக்லூதாவ் அந்த கைதிகளுக்கு முடிந்த அளவு உதவி செய்கிறார் அவர்களுடனேயே மூன்றாம் வகுப்பு பெட்டியிலும் பயணிக்கிறார் இந்த பயணத்தின் போது ரஷ்ய நாட்டின் சமூகம் பொருளாதாரம் அரசியல் பண்பாடுகள் மற்றும் சிறைக் கைதிகள் தொடர்பான பல விஷயங்களை அவர் கற்றுக் கொள்கிறார் சிறைக் கைதிகளின் புரட்சிகர எண்ணம் பேச்சு செயல்பாடுகள் அனைத்தும் அவருக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தான் விரும்பும் மாஸ்லோவா புரட்சியாளர் சைமன்சன் என்பவரை காதலிப்பது அறிந்து அவர்கள் இருவரையும் மனமாற வாழ்த்துகிறார். அவர்களது தண்டனைக் காலம் முடியும் வரை தொடர்ந்து தனது காதலியைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே சைபீரியாவிலேயே குடியேறுகிறார் நெக்லூதாவ்.


 செல்வமும் செல்வாக்கும் அதிகாரமும் படைத்த குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன் சிறுவயதில் தான் அறியாமல் செய்த தவறு ஒரு பெண்ணின் வாழ்வில் எப்படி எல்லாம் சீர்குலைக்கிறது என்பதை ஒருபுறம் காட்டிச் செல்லும் இந்த நாவல் மறுபுறம் அந்த தவறுக்கு பிராயச்சித்தமாக அவனது பிற்பகுதி வாழ்வு முழுவதும் சிறைத் தண்டனை கைதிகளை பார்ப்பதிலேயே முடிகிறது.  ரஷ்ய நாட்டில் அன்றைய சமூக பொருளாதார பண்பாட்டை முழுமையாக எடுத்துக்காட்டும் இந்த நூலில் சிறைக் கைதிகளின் நிலை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப்படுகிறது என்பதும் விவரிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் சிறைக் கைதிகளாக எப்படியெல்லாம் நடத்தப்படுகிறார்கள் நாடு கடத்தும் தண்டனையில் அவர்களுக்கு எப்படி எல்லாம் கொடுமை இழைக்கப்படுகின்றன என்பதையும் ஒரு பணக்கார இளைஞன் தான் செய்த தவறுக்காக எத்தனையோ மனிதர்களின் பின்னால் அலைந்து திரிந்து தலக்கான தண்டனையை தானே அனுபவிப்பதையும் நாவல் விவரிக்கிறது.


நெக்லுத்தவ் சோஷலிச எண்ணங்கள் படைத்த இளைஞனாக காட்டப்படும் இந்த நூலில் தன்னுடைய நிலங்கள் அனைத்தையும் குத்தகை விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்.

மன்னிப்பு வெறும் வார்த்தை அல்ல அது ஒரு மகத்தான செயல் என்பதை இதில் நெக்லூதாவ் மூலம் டால்ஸ்டாய் நிரூபித்திருக்கிறார். . தனது இறுதி நாவலில் அன்பையும் கருணையையும் எல்லோருக்கும் விதைத்துச் செல்வதே மனித குலத்தின் முக்கியமான பணி என்பதையும் சட்டத்தை விடவும் அதிகாரத்தை விடவும் ஒரு மனிதனின் மனசாட்சி மேலானது என்பதையும் மிகச் சிறப்பாக நிரூபிக்கிறார் லியோ டால்ஸ்டாய்.

புத்துயிர்ப்பு

நாவல்

லியோ டால்ஸ்டாய்

தமிழில் ரா கிருஷ்ணையா

வெளியீடு நற்றிணை பதிப்பகம்

பக்கம் 736

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version