சா’- குறு நாவல் வாசிப்பனுபவம் -சாவின் மணமும் சாமந்திப்பூவின் மணமும்.

இப்பிரபஞ்சத்தில் வாழ உரிமை பெற்ற அனைத்து உயிரிகளும் வாழ்வின் இருத்தலியல் முடிவான இறப்பை  நோக்கித்தான் பயணிக்கின்றன.பிற உயிரினங்களை விட உயிர் வாழ்தல் குறித்த  அக்கறையும் ஆசையும் அதிகமாக இருப்பது மனிதனுக்குத்தான்,வாழ்க்கையை ஆராய்ந்த மனிதன் தனக்கு எப்போதும் மறை பொருளாகவும் அச்சுறுத்தக் கூடியதாகவும், ஆச்சர்யமூட்டக்கூடியதாகவும் அதற்குப் பின்னால் என்ன என்ற கேள்வியை எழுப்பக்கூடியதாகவும் உள்ள மரணம் குறித்த ஆராய்ச்சியை எப்போதும் செய்து கொண்டே இருக்கிறான்.

நவீன மருத்துவம், மரணத்தை இரத்த ஓட்டம் மற்றும் சுவாசச் செயல்பாடுகள் மீளமுடியாதபடி நின்றுபோதல் அல்லது மூளையின் அனைத்துச் செயல்பாடுகளும் மீளமுடியாதபடி நின்றுபோதல் (மூளை இறப்பு) என வரையறுக்கிறது. இது, செல்கள் உடனடியாக அல்லாமல், பல மணிநேரங்களில் படிப்படியாக இறக்கும் ஒரு செயல்முறை என்பது தற்காலத்தில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது; இது போன்ற ஆராய்ச்சிகள் போன உயிருக்கும் மீண்டும் உயிர் அளிப்பதற்கான சாத்தியமான சூழல்களுக்கு வழிவகுக்கும் நம்பிக்கையை அளிப்பதாகக் கருதலாம்..

இருத்தலியல்வாதிகள், மரணத்தை  மனித வாழ்வின் இறுதி, தனிப்பட்ட மற்றும் தவிர்க்க முடியாத எல்லை என்று கருதுகின்றனர்; இது பெரும்பாலும் ஒரு நபரின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

பல கலாச்சாரங்கள், மரணத்தை வெறும் முடிவாகக் கருதாமல், மறுபிறவிச் சுழற்சியில்  ஒரு மாறுதல் புள்ளியாகவும், கர்மவினை அடிப்படையிலான ஒரு பயணமாகவும் பார்க்கின்றன.

ஆனால் எழுத்தாளர்கள் முற்றும் துறந்த முனிவர்கள் போல் மரணம் என்பது அஞ்சத் தேவையில்லாத ஒரு இயற்கையான செயல்முறை என்றும், ஏனெனில் அந்த நிகழ்வை விட அது குறித்த அச்சமே பல நேரங்களில் மோசமானது என்றும் குரலெழுப்பிப் படைப்புகளைத் தந்திருக்கிரார்கள்.

இவ்வாறு மருத்துவ உலகினர்,உளவியல் அறிஞர்கள்,ஆன்மிகவாதிகள்,பண்பாட்டு அடையாளத்தை மதங்களின் வழியே முன்னிறுத்துவோர் போன்றோர் மரணத்தைக் குறித்து விசாரம் செய்தாலும் இலக்கியத்தின் வழியே,எழுத்து ஊடகத்தில்  புனைவின் வழியாக படைப்பாளிகள் முன் வைக்கும் மரணம் குறித்த விசாரம் எப்போதும் வசீகரமுடையது.அதன் காரணம் எழுத்து என்பது வாழ்க்கையை எழுதுவது,வாழ்விலிருந்து எழுதுவது,,வாழ்வென்பது மனிதனுடைய மரணத்தையும் உள்ளடக்கியதுதான்.இலக்கியம் எவ்வாறு வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையிலான எல்லையை ஓர் உரையாடலாகப் பிரதிபலிக்கிறது என்பதைப் படைப்பாளிகள் தொடர்ந்து  உரையாடிக்கொண்டேயிடருக்கிறார்கள்.

அந்த வகையில் கு.ஜெயப்பிரகாஷ் எழுதிய ‘சா’ குறுநாவல் மரணத்தை உள்ளடக்கிய வாழ்க்கையைப் பற்றியதுதான்.வாழ்வின் இறுதியைப் பிரதிபலிக்கும் மரணத்தைப்பற்றிய ஓர் உரையாடல்தான் எனலாம்.

“சா’ எனும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் சாவு .இந்த ஓரெழுத்து ஒரு மொழியை இலக்கிய படைப்பாக நான் முதன் முதலில் கண்டது கவிஞர் கண்டராதித்தணின் “சா’ எனும் நெடுங்கவிதையில்தான்.அக்கவிதையை இந்த திருவள்ளுவர் இறப்பைச் சாக்காடு என்றார்.உலகில் தோன்றிய அனைத்து உயிரிகளும் சாகின்றன.மனிதன் மட்டும் மரணத்தைக் கண்டு ஐயுறுகிறான் .சமயங்களில் கொண்டாடுகிறான் .அரிதாக மரணம் குறித்து விசாரணை செய்கிறான்.’சா’ வில் இந்த விசாரனை தொடர்கிறது.

இக்குறுநாவல் மரணம் பற்றிய விசாரனையை, உரையாடலை ஒரு நடுத்தர வர்க்கத்தினருக்குக் கீழான ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவனது தனிமையான வாழ்க்கைப் பயணத்தின் மூலமாக முன் வைக்கிறது .

நாவலின் தொடக்கம் Protoganist ன் ஒரு தற்கொலைக்கான முயற்சியில் தொடங்கி அது குறித்த தொடர்ச்சியான சிந்தனைகளுடன் அமைகிறது. பத்தாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயலும்போது கீழே பார்க்கையில் பெரியவர் சிறியவர் என்றெல்லாம் வித்தியாசம் தெரியாமல் எல்லோரும் ஒன்றுபோலவே தெரிகிறார்கள் .இது மரணத்தின் முன் எல்லோரும் ஒன்றுதான் என்றும், மரணம் மேலானது .அதன்முன் மனிதர்கள் கீழானவர்கள் என்பதைக் குயீடாகச் சொல்கிறார் ஜெயபிரகாஷ்.

தனது சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடிப்போன, புத்தி பேதலித்த அப்பாவின் பிரிவு, குடும்ப சிதைவுக்குக் காரணமாக மாறுகிறது .அதைத் தொடர்ந்து அம்மாவின் இறப்பு, அக்கா சாந்தியின் இறப்பு(protoganist விபரம் தெரிந்த பிறகு சந்தித்த முதல் மரணம் ) .மனைவி சாவித்திரியின் இறப்பு .மகள் சாதனாவின் இறப்பு,சாமி சாரின் தனித்துவிடப்பட்ட வாழ்வு,பால்யம் தொட்டுத் தொடர்கிற சாமந்தி தோட்டத்துச் சாமந்திப் பூவின் மணம் ஆகியவற்றால் தொடர்ந்து அலைக்கழிக்கபட்ட நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த ஒருவனின் வாழ்க்கைப் பயணத்தை  நேர்க்கோட்டு எழுத்து முறையில் எழுதிச் செல்கிறார். 

ஒரு மரணம் அது நிகழ்ந்த இடச்சூழல்களின் இறுக்கத்திலிருந்து வெளியேற அம்மரணத்தோடு தொடர்புடையவர்களை இளகிய சூழலைத்தேடச்சொல்லி விரட்டியடிக்கும். .இங்கே கதைநாயகன் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம்பெயர்கிறான் .சூழல் இளகியதா இல்லை மேலும் இறுகியதா என்பதை வாசிப்பில் தெரிந்து கொள்ளலாம் .

ஒவ்வொரு அத்தியாத்திலும் மரணம் குறித்து ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள தமிழ்ச் செய்யுள் வரிகள் (தொல்காப்பியம்,புற நானூறு,திருக்குறள்,நாலடியார்)  நவீன தமிழ் இலக்கியவாதிகளின் வரிகள்(கல்யாண்ஜி,விக்கிரமாதித்யன்,வன்ண நிலவன்) மேற்குலகின் பல்வேறு ஆளுமைகளின் மேற்கோள்கள் (செனகா,சிசரோ,தாமச் பிரவுன்,ரால்ஃப் வால்டோ எமர்சன்,எட்கார் ஆலன் போ,சார்த்தர், தாஸ்தயாவெஸ்கி போன்றோர்) கவனத்தை ஈர்க்கின்றன.இதற்குப் பெரும் வாசிப்புப் பரப்பு வேண்டும்.இம்மேற்கோள்களின் பின்வரும் பிரதியின் பகுதிகள் சூழலில் ஒரு நிகழ்வாகவோ நிகழ்வின் தொடர்ச்சியாகவோ இருக்கின்றன.மேற்கோள்களுக்கும் அத்தியாயங்களின் உள்ளடக்கத்திற்கும் சில இடங்களில் பொருந்திப் போகின்றது .சில இடங்கள் பொருந்தாமலும் .

கதைநாயகனின் தற்கொலைகள் முயற்சிகள் ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகும் சமயங்களில் தனக்குள் தான் மூழ்கி உரையாடிக்கொள்ளும் தருணங்கள் சுயதரிசனத்திற்கானவை.

நாவலின் காலம் தற்காலம்தான் .களம் எளிய நடுத்தர வர்க்கத்துக் குடும்பம் ஒன்றின் கிராம -நகர இடப்பெயர்வுக் களம் .இடம்பெயர்ந்த நகரத்தில் பசிக்கு உணவளித்த சிற்றுண்டிக் கடைக்காரர் மனதைக் கவர்கிறார் .

கிராமத்தை விட்டு நகரத்திற்கு ஓடி வந்துவிட்டவர்கள் ஏதோ ஒரு பிடிப்பினால் நகரத்தின்  விரைவு வாழ்க்கைக்குத் தம்மை ஏதோ ஒருவகையில் ஒப்புக் கொடுத்துவிடுகின்றனர்.நாவலில் அபார்ட்மெண்ட் வாட்ச்மேனின் அன்றாடச் சித்திரம் நன்றாகப் பதிவாகியிருக்கிறது .

கதை சொல்லி தன்னிலை ஒருமையிலிருந்து உரையாடும் (Dramatic monologue,I person narrative text )பாணியில் நாவலை நகர்த்துகிறார் .

பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் கலந்த மொழிநடை .தமிழகத்தின் எப்பகுதி வாசகரும் சரளமாக வாசிக்கலாம் என்ற வகையில் எளிமையான சொற் பிரயோகம்.சிறு சிறு வாக்கியங்கள் வாசிப்பதன் விரைவுத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.சுவரஸ்யத்தையும்

அக்காள் சாந்தி வளர்த்த நாய்க்குத் திடீரென அரசு எனப் பெயர்வைத்து அதன் செயல்பாடுகளைப் பற்றி சொல்லும்போது அது அரசு என்ற பெயர்கொண்ட ஒரு நாயின் செயல்பாடுதானா என்றும் அதற்கு வைக்கும் பட்டப்பெயர்களும் அதற்கே உரித்தானதுதானா என யோசிக்க வைத்த இடங்கள் சுவாரஸ்யமானவை .அத்தியாத்தின் இறுதியில் அந்நாயும் செத்து விட்டது என முடிகிறது என்பது உருவகப் பகடியன்று (Satire through metaphor) வேறேது .

மனத்தைப் பிசாசாக உருவகித்து மனப்பிசாசுடனான உரையாடல்கள் தனிமனித உள் உரையாடல்களாக உள்ளன.இவை யதார்த்தத்திற்கும் அதைக் கடந்து போக இயலாத குரூரத்திற்குமான இடையில் ஊசலாடும் சிந்தனைகளாக உள்ளன.

நாவலின் இரண்டாவது பகுதியில் கதை மாந்தர்களான சாந்தி,சாவித்திரி,ராஜபாண்டி மாமா ஆகிய எல்லாருமே இறந்துவிடுகிறார்கள்.சாதனாவின் இறப்புக்கான காரணமாகத் தமிழ்ச் சமூகத்தின் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் சிறு எதிர்பார்ப்பான பள்ளி பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தல், அது இல்லாதபோது நடக்கும் பெற்றோர்களின் கண்டிப்பும் வசை மொழியும் எனச் சொலப்படுகிறது.இது சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் அழுத்தம் காரணமாக ஏற்படுகிறது என்பதை அமைதியாகச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் கதை சொல்லி.சாதனாவின் துயர முடிவுக்குத் தான்தான் காரணமென எண்ணும்  சாந்தியின் குற்றவுணர்வு அவளைப் பிடிவாதமாக மரணத்திற்கு இட்டுச் செல்கிறது.

சிறு வயதில் காணாமல் போன தந்தை குறித்த நினைவுகள் மங்கலாக நினைவிலாடி அடிக்கடி நாயகனின் நினைவுக்குறிப்புகளாக வந்து போகின்றன,அந்த நினைவுக்ளோடு சாமந்தித் தோட்டமும் சாமந்திப்பூவின் மணமும்  நாவலில் தொடர்ச்சியாக வந்துகொண்டேயிருக்கிறது.சாக விரும்பியவனுக்குச் சாவு அலர்ஜியாகத் தெரியவில்லை.மாறாகச் சாமந்திப் பூவின் மணம் தான் அலர்ஜியாகத் தெரிகிறது.சாமந்தியின் மணம் கதை  நாயகனின் மரணம் குறித்த நினைவின் குறியீடாகத் தொடர்கிறது. 

சமண சமயத்தின் ‘சல்லேகனை’’என்பது நோன்பிருந்து வடக்கிருந்து உயிர் நீத்தலைக் குறிக்கும் .இதன் நோக்கம் கர்மாவை அழிப்பது.தமிழில் இதனை வடக்கிருத்தல் என்கிறோம்,  நாவலில் வடக்கிருத்தல் என்னும் அத்தியாயத்தில் சாவித்திரியின் நோயுற்று வாதையுற்ற வாழ்வும்,அவளது அந்திம காலமும் அருவருப்பின் அழகியலோடு வெளிப்பட்டுள்ளது.அவளது கர்மாவை அழிப்பதற்காக அவளே எடுத்துக்கொண்ட முடிவாக இதைக் கட்டமைக்கிறார் கதை சொல்லி. 

வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான தனி மனித மனத்தின் ஊசலாட்டம் நாவலின் இறுதி அத்தியாயங்களில் சாமி சார் எனும் பாத்திரப்படைப்பின் வழியே கதை நாயகனுக்குச் சொல்லப்பட்டாலும் கதை நாயகனின் மனம் பேசிக்கொள்ளும் எதிரெதிரான முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் நாவலில் சில முறை திரும்பவும் சொல்லப்படுவதாகத் தெரிகிறது .

காடுகளில், மலைப் பிரதேசங்களில் நீர்நிலைகள் மாசுபடுதலையும்,உயிரினப் பல்வகைமை சீர்கேடடைவதையும் ,குடியினால் வீசப்படும் கண்ணாடி பாட்டில்களால் பாதிக்கப்படும் விலங்குகளையும் மனிதர்களையும் பறவைகளையும் பற்றிச் சொல்லப்படும் அத்தியாயம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை உடையதுதான் என்றாலும் .இக்கதைக்குத் தொடர்பு அல்லாத ஒரு பகுதியாகவே தெரிகிறது .

நாவலின் முடிவு circular ending ஆக இருப்பது எதிர்பார்த்துதான் .இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்  நானும் நண்பன் இரஞ்சித்தும் இறந்து போன நண்பன் இரவியும் பர்வதமலைக்குச் சென்று சந்தித்த மௌன சாமியாரை நாவலின் வழியே நிசப்த சாமிகள் பாத்திரத்தின் மூலம் நினைவுக்குக் கொண்டு வரச் செய்திருக்கிறார் நாவலாசிரியர்  கு.ஜெயப்பிரகாஷ். 

தமிழில் சாவு குறித்த நவீன நாவல்களின் பட்டியலில் இடம் பெறக்கூடிய யதார்த்தவாத நடையில்  எழுதப்பட்ட தத்துவார்த்த உரையாடல் கொண்ட நாவலாகச் “சா” வைக் கருதலாம்.

 

புத்தகம் : சா (குறுநாவல்) 

பதிப்பகம் : புழுதி 

விலை :150/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!