
சமீபத்தில் பக்கத்து ஊரின் திருவிழாவிற்கு சென்றிருந்தேன் .அங்கு திருவிழாவைக் காண வரும் பக்தர்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் அவர்களை கவரும் விதமாக பலவிதமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பொம்மை கடையில், ஒரு அப்பாவும் அவரது ஐந்து வயது மதிக்கத்தக்க மகனும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்க நேர்ந்தது. அப்பா, தன் மகனிடம், இந்த கடையில் உள்ள பொம்மைகளில் உனக்கு எந்த பொம்மை வேண்டுமானாலும் வாங்கிக்கொள் என்கிறார். அவன் ஒவ்வொரு பொம்மையாக எடுத்து கையில் வைத்துக்கொண்டு முன்னும் பின்னும் ஆக பார்த்துவிட்டு அதனை பிடிக்காதவனாய் கீழே வைத்து விடுகிறான். அந்த சிறுவனால் தனக்கு எந்த பொம்மை வேண்டும் என்பதை தீர்மானம் செய்வதில் அதிக குழப்பம் இருக்கிறது. இப்படியே ஒரு அரை மணி நேரம் சென்று விடுகிறது. அருகில் இருந்த, அந்த சிறுவனின் தாய் பொறுமை இழந்தவராய், “சீக்கிரம் ஒரு பொம்மையை வாங்குடா…….இன்னும் எத்தனை கடைகள் இருக்கு…. இந்த ஒரு கடையில் மட்டும் இவ்வளவு நேரம் செலவிட்டால் மற்ற கடைகளை பார்க்க நேரம் இருக்காது” என்கிறார். ஆனால் அந்த சிறுவனின் தந்தை, அவன் பொறுமையாக யோசித்து தேர்வு செய்யட்டும் அவனுக்கு சிறிது நேரம் கொடுப்போம் என சொல்கிறார்….
இதை பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் ஒரு கேள்வி எழுகிறது….
அந்த சிறுவனின் தந்தை செய்தது சரியா……? தவறா…..?
அவர் தன் குழந்தையை வளர்க்கும் முறை சரியா….? தவறா…..?
என யோசித்து பார்க்கிறேன்.
பறவைகளும் விலங்குகளும் தங்கள் குட்டிகளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பாதுகாத்து வழி நடத்துகின்றன. பின்பு அந்த குட்டிகள் தங்களின் தேவைகளை தாங்களாகவே முயன்று பூர்த்தி செய்து கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் மட்டுமே தன் பிள்ளைகளை இறுதிவரை தன் தோளில் சுமக்க நினைக்கிறான். அதிலும் நம் நாட்டில் குழந்தை வளர்ப்பில் நாம் பல படிநிலைகளை கடக்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.
ஜப்பான் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் குழந்தை வளர்ப்பு முறைகள் சிறப்பானதாக உள்ளது எனவும் ஒழுக்கம், சமூக பொறுப்புணர்வு, பிறரை மதித்தல், சுயாதீனத்தை மதித்தல், மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுதல், அன்புடன் கூடிய கண்டிப்பு, பிரச்சனைகளை பொறுமையாக கையாளுதல், கூட்டு குடும்ப கலாச்சாரம், குழுவாக ஒரு வேலையை செய்தல் போன்ற பல நல்ல பழக்கங்களை பள்ளியிலும் வீட்டிலும் ஜப்பானியர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள் எனவும் ஒரு ஆய்வு சொல்கிறது. குழந்தைகள் போன்ற சிறந்த கவிதை எதுவும் இல்லை. குழந்தைகளை வளர்ப்பது, ஒரு தொட்டியில் உள்ள ரோஜா செடியை வளர்ப்பது போன்றது. அளவுக்கதிகமாக தண்ணீர் ஊற்றினாலும் தவறு, தண்ணீர் ஊற்றாமல் இருந்தாலும் தவறு.
குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமான அன்பும் அக்கறையும் கொடுத்து கண்டிப்பும் கண்காணிப்பும் இல்லாமல் வளர்ப்பது நல்லதல்ல… அதே சமயத்தில் , அன்பும் பாசமும் கொஞ்சம் கூட இல்லாமல் கண்டிப்பு மட்டுமே கொடுத்து வளர்ப்பதுவும் நல்லதல்ல…
குழந்தைகள் வளர்ப்பது பற்றிய பெரிய பொறுப்பினை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம். குழந்தைகள் ஒன்றும் அலங்கார பொருட்களோ விலை உயர்ந்த ஆபரணங்களோ இல்லை, பூட்டு போட்டு பாதுகாத்து வளர்க்க…….. அவர்களை அடக்குமுறையின் அடையாளங்களாக வளர்க்காமல் உயிருள்ள உணர்வுள்ள ஜீவன்களாக வளர்ப்பது மிக அவசியம்.
தண்டித்தல் என்பது குழந்தைகளை வளர்க்கும் முறையின் ஒரு அங்கம் தானே தவிர அது ஒன்று மட்டும் வழியாகாது. அதிகமாக அடித்து வளர்க்கப்படும் குழந்தைகள் அல்லது வேறு விதமாக தண்டனைகள் பெற்று வளரும் குழந்தைகள் மனப்பிறழ்வு உள்ள குழந்தைகளாக வளர்கின்றனர். அதே நேரத்தில் ஒரு சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் செய்யும் அனைத்து தவறுகளையும் கண்டு கொள்ளாமல் இருப்பதுடன் பிறர் முன்னிலையில் அவர்களை விட்டுக் கொடுக்காமல் தாங்குவதை பார்க்கும் போது, மிகுந்த அச்சத்தை தருகிறது. இது போன்று அதிகமான பாசத்தால் வளர்க்கப்படும் குழந்தைகள் ஒரு சிறு புறக்கணிப்பை கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தளர்ந்து விடுவதோடு
தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.
குழந்தைகளுக்கு இன்று இருக்கும் இன்னொரு பிரச்சினை *தனிமை* …. நம் நாட்டில் கூட்டு குடும்பங்கள் சிதைந்து தனி குடும்பங்கள் பெருகிவிட்ட நிலையில். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட, பிள்ளைகள் பூட்டிய வீட்டில் தனிமையை அனுபவிக்கின்றனர்.
கைப்பேசியில் காலத்தை கரைத்து சிந்திக்கும் அறிவை இழக்கின்றனர். தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதோடு தங்கள் எதிர்காலத்தையும் அழித்துக் கொள்கின்றனர். இது போன்ற சூழலில் வளரும் குழந்தைகளுக்கு, அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வரும் விதமாக ஓவியம், இசை,நடனம் என கற்றுக் கொடுக்கலாம். புத்தக வாசிப்பு, கவிதை, கதை எழுதுதல் போன்றவற்றிலும் அவர்களின் ஆர்வத்தை தூண்டலாம். நீச்சல், ஓட்டப்பந்தயம் ஸ்கேட்டிங், துப்பாக்கி சுடுதல், வில் வித்தை, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் போது அவர்களின் ஆரோக்கியம் மேம்படுவதோடு தவறான செயல்களில் ஈடுபடாமல் ஒழுக்கத்தோடு வளர்கிறார்கள் .
குழந்தைகளுக்கு முதல் இரண்டு வருடங்களில், அவர்களை அறிவாளிகளாக்க நினைத்து நாம் ஏதேதோ சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக உடலைப் பற்றி, தூய்மை பற்றி, நல்ல உணவு வகைகளைப் பற்றி, ஆரோக்கியத்தை பற்றி, நல்ல பழக்கவழக்கங்களை பற்றி, இயற்கை பற்றி சொல்லிக் கொடுப்பது தான் அவசியம் என நான் நினைக்கிறேன்.
குழந்தைகள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாக வளர்தல் கூடாது. அவ்வாறு
உணர்ச்சிவயப்படும் பொழுது குழந்தைகளின் அறிவு அறுந்து போகும்… சிந்திக்கும் திறன் சிதைந்து போகும்….
எனவேதான் குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு சிறு சிறு தோல்விகளையும் அவமானங்களையும் எவ்வாறு கடந்து போவது என கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில், எப்போதும் பாராட்டுகளையும் வெற்றிகளையும் மட்டுமே வாழ்க்கை அவர்களுக்கு வழங்கப் போவதில்லை….
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எத்தனை நாள் தான் இடுப்பில் தூக்கிக் கொண்டு நடக்க முடியும். குழந்தைகளே நடக்கப் பழகட்டும்…
அவ்வாறு நடக்கும் போது ஏற்படும் காயங்களும் சிராய்ப்புகளும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக அமைய வழி வகுக்கும்.
எத்தனை வேலைபளு இருந்தாலும் குழந்தைகளோடு மனம் விட்டு பேச சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.. அப்போதுதான் அவர்களின் மனதில் எத்தனை மகிழ்ச்சிகள், சோகங்கள், காயங்கள், கோபங்கள் மற்றும் திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன… என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.
அதிலும் பதின்ம வயது குழந்தைகளை கையாளுவது கண்ணாடிக் குவளையை கையாள்வது போன்றது. கண்ணாடி உடைந்து விட்டால் அது நம் கைகளையே பதம் பார்த்துவிடும்…… பதின்ம வயது பிள்ளைகளின் உடல், உள்ள, ஆளுமை வளர்ச்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது…
கட்டுப்பாடுடனான சுதந்திரமும், கண்டிப்போடு கலந்த கனிவும், பொறுப்பை உணர்ந்து செயல்படக்கூடிய ஆற்றலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
மொத்தத்தில் குழந்தை வளர்ப்பு என்பது பள்ளியை தாண்டிய, வசதி வாய்ப்புகளை தாண்டிய நற்பழக்கங்களை கற்றுத் தரக்கூடிய வாழ்க்கைப் பாடம். அதனை சரியாக கற்றுத் தருகின்ற பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள்…..