குழந்தைகளை வளர்ப்பதல்ல, வளர அனுமதிப்பது

“குழந்தைகள் உங்கள் உடன் இருக்கின்றனர். எனினும் உமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வந்தனர் எனினும் உங்களிடமிருந்து வரவில்லை. “

  •  கலீல் ஜிப்ரான் 

இந்த வரிகளை நான் பெற்றோர்களிடம் பேச நேரும்போதெல்லாம் சொல்வேன். எனக்கும் சொல்லிக் கொண்டேன். இதோ இந்த கட்டுரையிலும் சொல்லி விட்டேன். ஏன். குழந்தைகள் இந்த பிரபஞ்சத்திற்கு சொந்தம். நமக்கு பின் இந்த பிரபஞ்சத்தின் காப்பாளர்கள்.

“இந்த பூமி நம் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்டதல்ல. நம் குழந்தைகளிடமிருந்து கடன் பெறப் பட்டது.” இது மேற்கிந்திய பழமொழி. இந்தப் புரிதல் இருப்பின், நாம் பெற்ற குழந்தைகளுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைத்து விடும்.

பொதுவாக நம் உடல் வழியாக பெற்றாலும் சரி, வாடகை உடல் எடுத்து பெற்றாலும் சரி.எங்கிருந்து முறையாக தத்தெடுத்தாலும் சரி. நம் வீட்டில் , நம் தெருவில், நம் கண்காணிப்பில், குழந்தைகள் இருப்பின், நாமும் பெற்றோரே. நாம் எனில்?

23 வயதில் ஓரளவிற்கு நாம் வளர்ந்த இளைஞர் களாகிவிடுகிறோம். adult என்று சொல்லக்கூடிய வயது வந்தோர் ஆகிவிடுகிறோம். அதனாலேயே, நாம் பெற்றோராவது என்று முடிவு செய்தால், 25 வயதிற்கு பிறகு செய்வது நலம். ஏனெனில் அதுவரை நாமும் வளர்ந்து கொண்டிருப்பவர்கள் தான்.

அப்படியா? என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு, சமீபமாக வளர் இளம் பருவத்தின் வயதும் வளர்ந்து விட்டது என்று அறிவிக்க விரும்புகிறேன். 18 ஆனால் வயது வந்தோர் என்று சட்டம் சொன்னாலும், 23 வயது வரை, நமது மூளை வளர்ச்சி முழுமை அடைவதில்லை. குறிப்பாக mylienation என்று சொல்லப்படும், (மூளையின் நரம்பு நார்கள் பாதுகாப்பு உறை), உணர்வு கட்டுப்பாடு பிரேக், ஒரு முதிர்ச்சியான மனநிலை, முழுமையாக முன்மூளை வரை வளர்ந்து முடிக்க, 23 வயதாகி விடுகிறது, சமீப காலங்களில்.

Working memory (வேலை நினைவகம்) அதாவது விவரங்களை சேர்த்து, நினைவுபடுத்தி நாம் செய்யும் காரியங்களுக்கு உபயோகப் படுத்துதல், flexibility (அறிவாற்றல் நெகிழ்வுத்தன்மை) அதாவது ஒரு காரியத்திலிருந்து இன்னொரு காரியத்திற்கு கவனத்தை மாற்ற முடிகிற, ஒரு விஷயத்தை பல்வேறு புதிய கோணங்களில் சிந்திக்க முடிகிற தன்மை, திட்டமிடுதல், முடிவெடுத்தல், inhibitory control (தடுப்பு கட்டுப்பாடு) அதாவது மனம் போகும் போக்கில் செல்லாமல், கட்டுப்பாட்டுடன், கவனச் சிதறல் இல்லாமல், எடுத்த வேலையை செய்யும் ஆற்றல் . இதெல்லாம் முன் மூளை செய்யும் செயல் பாடுகள். இவை முதிர்ச்சி அடைய 23 வயதாகிவிடுகிறது.

   இதற்கும் பெற்றோர் ஆவதற்கும் சம்பந்தம் இருக்கிறதா?. குழந்தை பெறும் /தரும் உயிர் ஆற்றல் இளம் வயதிலேயே , பருவம் எய்தவுடன் (puberty) வந்து விடுகிறது. ஆனால் பெற்றோர் ஆவதற்கு, செயல் ஆற்றல், நிதானம், முடிவெடுக்கும் திறன், உணர்ச்சிக் கட்டுப்பாடு என்று பல ஆற்றல் /திறன்கள் தேவைப்படுகிறது.

இந்த இதழ் பெற்றோர் அறம் பேசுவதால், இந்த திறன்கள் ஏதேனும் ஒருவர்க்கேனும் இருப்பின், பெற்றோர் ஆகலாம். தனி பெற்றோருக்கும் இது பொருந்தும். தன்னை சுய ஆய்வு செய்து கொண்டு, இத்திறன்கள் இன்னும் தேவைப்படின் வளர்த்துக் கொண்டு, பெற்றோர் ஆவதே அறம். information age எனப்படும் இக்காலக் கட்டத்தில், இன்ஸ்டாவும், இன்னும் பிறவும், வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட இக்காலத்தில், இது நம்முடைய பொறுப்பு ஆகிவிடுகிறது. எனக்கு தெரிந்த சிறந்ததை செய்வது, சாலச் சிறந்தது. எனக்கு இதுதான் தெரியும் .என் பெற்றோர்கள், நான் பார்த்த பெரியவர்கள் இப்படித்தான் இருந்தனர், எனவே அப்படி வளர்க்கக்கூடாது, அல்லது அப்படித்தான் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இன்னொன்றும் சொல்ல வேண்டும். முடிந்தால் ஒரு மருத்துவ பரிசோதனை, ஏதேனும் மரபணு நோய் நம்மூலம் குழந்தைக்கு வரக்கூடும்?, அல்லது நம் பழக்கம், உணவு, மருந்து, புகை, ஆல்கஹால், அல்லது வேறு ஏதேனும், குழந்தையை பாதிக்கும் எனில், அதற்கு மாற்று, பாதுகாப்பு, சிகிச்சை எடுத்துக் கொள்வது அறம்.

கர்ப்பம் தரிக்க, முடிவு செய்யும்போதே இதற்கான திட்டமிடுதல் அவசியம், குடும்ப மனநிலை, புறச்சூழல், நம் உடல், மனம் , அனைத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளும் செய்ய வேண்டும்.

குழந்தைகள் உரிமை , வயது வந்தோர் நமது அனைவரின் கடமை எனின், பெற்றோருக்கும் அது நிறைய பொருந்தும். எதெல்லாம் குழந்தைகளின் உரிமையாக கருதலாம்? UNCRC சொல்வது என்ன? வாழ்வதற்கான உரிமை: (Right to Survival) வளர்ச்சி உரிமை: (Right to Development) ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர்வாழவும், உடல் நலம் பேணவும் உரிமை உண்டு. ஆரோக்கியமான சூழல் மற்றும் போதுமான ஊட்டச்சத்து பெற உரிமை உண்டு.(முறையான மருத்துவ வசதி, ஊட்டமான உணவு, நல்ல குடிநீர், பாதுகாப்பான தங்குமிடம் ).

கல்விக்கான உரிமை உண்டு.

பாதுகாப்பு உரிமை: (Right to Protection) பங்கேற்பதற்கான உரிமை: (Right to Participation)வன்முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, மற்றும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்துவதில் இருந்து பாதுகாப்பு, குழந்தைகளை பாதிக்கும் குடும்ப,சமூக முடிவுகளில், தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்கவும், அதற்குரிய மதிப்பை பெறவும் உரிமை உண்டு. பாதுகாப்பான பிரசவ முறையை பெற்றோர் பின்பற்ற வேண்டும். அதற்கான மருத்துவ வசதியை பயன்படுத்தி கொள்ள ஏதுவான வகையில் முன்கூட்டியே திட்டமிட்ட வேண்டும். தாயின் மனநிலை, உடல்நிலை பராமரிக்கப் படவேண்டும். வரப்போகும் குழந்தைக்கான இடம், கவனிக்கும் பொறுப்புகளை யார் யார் பகிர்ந்துகொள்வது? , முடிந்தவரை தாயையும் சேயையும், தேவையான ஓய்வில் வைத்திருக்க திட்டமிட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமமே வேண்டும். அதாவது குழந்தை வளர்ப்பில் சமூகத்திற்கு சம அளவில் பொறுப்பிருக்கிறது. உதவி கேட்பதில் தயக்கம் வேண்டாம். உதவி செய்பவர்களையும் மதித்து நடத்த வேண்டும். சம்பளம் கொடுத்து வைத்துக் கொள்ளும் உதவியாளர் என்றாலும் கூட , மரியாதையுடன், உரிமைகளை மதித்து நடத்த வேண்டும். கண்காணிப்பும் இருக்க வேண்டும். erik erikson (எரிக் எரிக்சன்), Piaget (பியாஜே ), போன்ற உளவியலாளர்கள் குழந்தை வளர்ச்சி நிலைகள் குறித்து நமக்கு நிறைய வழிகாட்டுதல்கள் கொடுக்கின்றனர். அதை புரிந்து கொண்டால், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி கொடுக்க முடியும். இருக்கிற பொருளாதார, சமூக, சூழலையே சிறந்ததாக வடிவமைத்து கொடுக்க முடியும். பிறப்பு முதல் ஒன்றரை வயது வரை: அன்பு, தொடர்பு பரிமாற்றம், (பார்வை, தொடுதல்), தேவையான அளவு கிடைக்கும்பொழுது குழந்தை நம்பிக்கையை ( வாழ்வின் மீது, மனிதர்கள் மீது) வளர்த்துக் கொள்கிறது. பராமரிப்பு தேவையான அளவு இல்லாதபொழுது, அவநம்பிக்கை உருவாகிறது. இதை அம்மா மட்டுமே செய்ய வேண்டும் என்றில்லை. அக்கறையுடன் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் consistency இருக்க வேண்டும் .

ஒன்றரை முதல் மூன்று வயது வரை: தற்சார்பு, (தானே உணவு எடுத்துக்கொள்வது, தானே உடை அணிவது, மல சலம் கட்டுப்பாடு). குழந்தை இதை செய்ய முயற்சி செய்யும்போது, ஆதரவாக அதை அனுமதிக்க வேண்டும். கொஞ்சம் சிந்தி தான் சாப்பிடும். கொஞ்சம் தவறுதான் செய்யும் , அப்பொழுதுதான் சுயமாக ஒரு விஷயத்தை செய்யும் தன்னம்பிக்கை ஏற்படும். அதை அனுமதிக்காமல், நாமே செய்து கொண்டிருந்தால், தன்னால் எதுவும் செய்யமுடியாது என்ற சந்தேகமும், அவமானமும் சிறு வயதிலேயே தொற்றிக் கொள்ளும்.சுதந்திர உணர்வை , உதவியை, வழிகாட்டலை, ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையையும் பெற வாய்ப்புண்டு. நமக்கு நேரமாகிறது, சுலபம் என்று நம் சௌகரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பின், குழந்தைகள் வளர்ச்சி தடையாகலாம். சில பெற்றோர், குழந்தைகளுக்கு திரை ( டி.வி, tab, மொபைல்)அறிமுகம் செய்வது தங்கள் வேலையை சுலபமாக்குகிறது என்று கருதினால் , அது தவறான கருத்தாகும். மனிதர்களின் தொடர்பு, சுற்று சூழல் தொடர்பே, குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கு சரியான வழியாகும்.

பியாஜே கோட்பாட்டின்படி புலன் இயக்கப் பருவம் (0-2வயது) தனது உணர்வுகள் (பார்த்தல், கேட்டல்,நுகர்தல், சுவைத்தல்,தொடுதல் ), மற்றும் இயக்கம் மூலம் குழந்தைகள் இந்த உலகத்தை , தனது பார்வையில் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றனர். பெற்றோர்கள் அதற்கு உறுதுணையாகவும் , பாதுகாப்பு அளிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். நெருப்பை தொட்டுப் பார்த்து அறிய விரும்பும் குழந்தையை முறையாக பாதுகாக்கவும், ஆனால் அவர்கள் ஆர்வத்தை குறைக்காமல், வாயில் போட்டு சுவைத்து பார்ப்பதை கெட்ட விஷயமாக தடுக்காதவர்களாகவும், அதே சமயம், விழுங்கி விடாமல் பார்த்துக் கொள்ளக் கூடிய, கவனமும் வேண்டும்.

மூன்று வயது முதல் ஐந்து வயது வரை: குழந்தைகள் தனக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்வதை கற்றுக்கொள்ளும் வயது. L KG சேர்க்கும் வயது. தன்னால் என்னென்ன செய்யமுடியும் என்பதை பரீட்சித்து பார்க்கும் வயது. பெற்றோர் சரியான செய்கையை , தேர்வு செய்யும் வாய்ப்பை ஊக்குவிக்க வேண்டும். தவறான செய்கைக்கு நோ சொல்ல வேண்டும். தன் முனைப்பு அதாவது எதையும் தானாகவே துவங்கி செய்யும் மனநிலை உருவாவது இந்த வயதில்தான். அதை ஊக்கப்படுத்தவேண்டும். சைக்கிள் ஓட்டுவது, வரைவது, தன்னை சுற்றி உள்ள அனைத்து செய்கைகளையும் செய்து பார்ப்பது, சரி, தவறு எல்லாம் தெரியாது, எனவே நாம் அனைவரும் தான் அவர்களுக்கு ரோல் மாடல். நாம் என்ன செய்கிறோமோ அதை செய்து பார்க்க முயற்சி செய்வார்கள். எனவே நாம் அவர்கள் பார்க்க என்ன செய்கிறோம், என்ன வார்த்தை பேசுகிறோம், எப்படி குடும்பத்தினரிடம், உதவியாளர்களுடன், உறவினர்களுடன் நடந்து கொள்கிறோம் என்பது முக்கியம். அனைவரையும் பால், இன, மத, பேதமற்று நேசிக்கும் சூழலை உருவாக்க வேண்டும். தன் விருப்பங்களை குழந்தைகள் பரீட்சித்துப் பார்க்க விடாவிட்டால், குற்ற உணர்வு பெருக வாய்ப்புண்டு. வாழ்வில் விருப்பம் கொள்வது இந்த வயதில் தொடங்குகிறது. ஒரு அர்த்தத்தையும் கொடுக்கிறது. அவர்களின் முக்கியத்துவத்தை, அவர்களுக்கான இடத்தை கண்டு கொள்ளும் வயது இது. அதற்கு பெற்றோர் ஆதரவாக இருப்பது தன்னம்பிக்கையை வளர்க்கும்.

பியாஜே கோட்பாட்டின்படி பாவனை விளையாட்டுக்கள், மொழி வளர்ச்சி, நிறைந்த பருவம் (2-7வயது) , வீட்டில் எத்தனை மொழி பேசினாலும் சுலபமாக குழந்தை கற்றுக்கொள்ளும். நிறைய விளையாட்டுக்கள், சமைப்பது, டீ போடுவது, மார்க்கெட், டீச்சர், போலிஸ், போன்ற பாவனை விளையாட்டுக்கள், மூலம் குழந்தை கற்றுக் கொள்கிறது. பெற்றோர் சரியான நடத்தையை இந்த மாதிரி விளையாட்டுக்கள் மூலம் சுலபமாக சொல்லிக் கொடுக்கலாம். விளையாட்டு தான் முதல் கல்வி. உடை, வேலைகள் இதில் பால் பேதம் இன்றி, உணவு, பழக்கங்கள், இதில் இன, மத பேதமின்றி விளையாட்டுகள் அமையட்டும். டீ போடுவது ஆணாக இருக்கலாம், வெஜ்ஜோ நான் வெஜ்ஜோ அந்த விளையாட்டு உணவகத்தில் அனைத்து உணவுகளும் இருக்கட்டும்.  concrete thinking எனப்படும், கண்கூடாக பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம் (7-11 வயது), அளவுகள், பொருட்களின் மாறாத்தன்மை, மாற்றங்கள் போன்றவற்றை குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.

ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயது வரை: குழந்தைகளின் முயற்சி, கற்பனை ஓங்கி வளரும் வயது. சமூக உறவுகள், நண்பர்கள், விதிகளை மதிப்பது, போன்ற விஷயங்கள், போட்டி போடும் மனப்பான்மை, வளரும் வயது. பெற்றோர்கள் அதை ஊக்குவிக்கும் போது தன்முனைப்பு, தன்னம்பிக்கை பெருகுகிறது. இல்லையெனில் தாழ்வு மனப்பான்மை உருவாகிறது. அவர்கள் திறனுக்கேற்ப சிறு சிறு வெற்றிகளை பெற வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். விளையாட்டு, கலைகள், படிப்பு, பால் பேதமின்றி சிறு சிறு வீட்டு பொறுப்புகள் (பாத்திரம் எடுத்து வைத்தல், செடிக்கு தண்ணீர் விடுதல், கடையில் பொருட்களை வாங்க உதவுதல், பயணங்களை திட்டமிட உதவி செய்தல்) என்று நிறைய வாய்ப்புகள் கொடுக்க, அவர்கள் அதை செய்து முடிக்கும்பொழுது தன்னம்பிக்கை வளர்கிறது. அவர்கள் திறனுக்கு மீறி சவால்கள் கொடுத்து தொடர்ந்த தோல்விகளை சந்திக்கும்பொழுது, தாழ்வு மனப்பான்மை வளர்கிறது. பெற்றோர் மட்டுமல்ல பள்ளிக்கும் இந்த கடமை உண்டு. பதட்டம், பயம் போன்ற உணர்வுகளை எதிர்கொள்வது பற்றிய அடிப்படை பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்பட்டால், பல மன நல சிக்கல்களை, செயல்பாட்டு பிரச்னைகளை தவிர்க்கலாம்.

பியாஜே கோட்பாட்டின் படி concrete thinking எனப்படும், கண்கூடாக பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம் (7-11 வயது), அளவுகள், பொருட்களின் மாறாத்தன்மை, மாற்றங்கள் போன்றவற்றை குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.

பன்னிரண்டு வயது முதல் பதினெட்டு வயது வரை: தனக்கான அடையாளத்தை தேடும், உருவாக்கி கொள்ள முனையும் வயது. தனது பலம், பலவீனம், இலக்கு, தொழில், பாலினம், என்பதை கண்டறியும் வயது. உடல் மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், மனவெழுச்சி, நெருக்கடி, குழப்பம்,சூழல் சிக்கல்கள், என பல்வேறு விஷயங்களை கடக்கும் வயது. கிட்டத்தட்ட ஒரு சூறாவளியை கடப்பது போல. இந்த வயதில் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து விலகி நண்பர்களுடன் இணக்கமாவர். அது இயற்கையானது என்பதை புரிந்து கொண்டு, பெற்றோர் detachment parenting பழக வேண்டும். நமது உதவி அவர்களுக்கு தேவை ஆனால் அதை திணிக்க கூடாது. நமது வழிகாட்டுதல் தேவை, அறிவுரை லெக்சர் அல்ல. அவர்களுடன் உரையாடுவது என்பது தொடர்ந்து இருக்க வேண்டும். பல்வேறு மனநல பிரச்சினைகள் உருவாவது இந்த வயதில்தான். ஆன்க்ஸைட்டி ,ஸ்ட்ரெஸ், டிப்ரஷன், (anxiety,stress,depression) ஆகியவற்றை எதிர்கொள்ளும் பயிற்சிகளை பயிற்றுவித்தல் நலம். naming emotions, helpful thoughts, relaxation exercises, போன்றவை சில. உளவியல், பாலியல்,உடல்நல கல்வி, மிகவும் அவசியம். addiction (ஸ்க்ரீன், சப்ஸ்டான்ஸ்), உருவாகும் வாய்ப்புகள் கொண்ட வயது. அதை தவிர்க்க, விழிப்புணர்வு கல்வி, அவசியம். பாதுகாப்பு வழிமுறைகள், நோ சொல்வது தவறில்லை என்னும் மனநிலை,பிரச்னைகளை பகிர்ந்து கொள்ளும் சூழல், அவசியம். நாம் நமது பிரச்னைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோமா?, நாம் எவ்வாறு நம் பிரச்னைகளை கடக்கிறோம் என்பதையும் பகிர்ந்து கொள்ளுதல் அவசியம். quality time முக்கியம். எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதை விட, எப்படி செலவிடுகிறோம் என்பது முக்கியம். முழு கவனமும் கொடுக்கும் வண்ணம் செலவிட வேண்டும். சவால்களை விரும்பும் ஆற்றலை சரியான வகையில் வெளிப்படுத்தும் சூழல்களை உருவாக்கித் தர வேண்டும். பால் ஈர்ப்பு இயற்கையானது. இந்த கால கட்டத்தில், தன் பாலினம் குறித்த குழப்பங்கள் மேலோங்கி வருகின்றது. அனைத்து பாலினத்தவரையும் மதிக்கும் சூழலை, உரையாடலை, உருவாக்க வேண்டும். அப்பொழுது தன் அடையாளம் குறித்த குழப்பங்கள் இருக்காது. எந்த அடிக்ஷனிலும், தேவைற்ற பழக்கங்களிலும் சிக்கிக் கொள்ளாமல் இந்த வயதில் தன் திறமையை வளர்த்துக் கொள்ள, கற்றுக் கொள்ள ஊக்கம் தர வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை கொடுக்க வேண்டும். உடலும், மூளையும், வளர்ச்சி காலத்தில் இருப்பதால், நிறைய தூக்கம், உணவு, தேவைப்படும். அவர்கள் தூக்க நேரம் அதிகமாக இருக்கும். உணர்வெழுச்சிகளும் அதிகமாக இருக்கும். இதை புரிந்து கொண்டு ஆதரவாக இருக்க வேண்டும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு, அவர்கள் தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மெனக்கெடுதல், உடல் தோற்றம் குறித்த கவலை, என்று ஆயிரம் கவலை இருக்க, வெறும் படிப்பு சார்ந்த, உணவு சார்ந்த உரையாடல் என்பதாய், பெற்றோர் இருப்பின், விலகுதல், தனிமையை விரும்புதல் சுலபமாகி விடுகிறது.

அவர்களுக்கு விருப்பமான ரசனைகளை ( கேம்ஸ், k pop, இன்ஸ்டா, கே ஸ்கின், கே லுக், ) பெற்றோர்களும் அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். குடும்ப நேரம் என்பது மிகவும் அவசியம். பியாஜே கோட்பாட்டின் படி abstract thinking வயது (12 இலிருந்து), பிறர் என்ன நினைப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய சிந்தனை திறன், மனக்கணக்கு, எதிர்காலம் குறித்த புரிதல், எல்லாம் வளரக் கூடிய வயது. ஆனால் எல்லாக் குழந்தைகளும் ஒன்று போலவே வளர்வார்களா என்றால் இல்லை. அவரவருக்கான தனிக்காலம், தனித்திறன் மேலோங்கி இருக்கும். குறிப்பாக சில குழந்தைகள் உடல் வளர்ச்சிக் குறைபாடுகளோ, சிந்தனை வளர்ச்சி குறைபாடுகளோ, உணர்ச்சி கட்டுப்பாடு குறைபாடுகளோ இருப்பின், அது அவர்களது சமூக உறவு, படிப்புத்திறன், போன்றவற்றை பாதிக்கலாம்.

நுண்ணறிவுக் குறைபாடு இருப்பின் அதுவும் அவர்களது வாழ்வை பாதிக்கலாம். ஆனால் எவ்வளவு சீக்கிரம் அதை கண்டறிந்து, புரிந்து கொண்டு, அதற்கான வாய்ப்புகளை, திறன்களை, பெற்றோராகவும், ஆசிரியராகவும்,சமூக ரீதியாகவும், நாம் கொடுக்கிறோமோ, அப்பொழுது குழந்தைகளின் வாழ்வு, வளர்ச்சி, பாதுகாப்பு, பங்கேற்பு உரிமைகளை பாதுகாப்பவர்களாக நாம் மாறுகிறோம்.

பாலன் தி பாய், என்ற திரைப்படம், ஜெயிலில் பிறந்த ஒரு குழந்தை, சமூக சூழலில், தனிப் பெற்றோரின் வளர்ப்பில், என்னென்ன சிரமங்களை தாண்டி, தன் அடையாளத்தை தேடி, குழப்பங்களோடு, சமூக குற்றங்களில் மாட்டிக்கொண்டு, மீண்டு வர முயற்சிக்கிறது என்பதை உளவியல் பார்வையோடு முன் வைக்கிறது . முடிந்தால் பாருங்கள்.

ஹோவர்ட் கார்டனர், எட்டு விதமான தனித்திறன்களை சுட்டிக் காட்டுகிறார். அவர் சொல்படி, எந்தக் குழந்தையும் திறனுள்ள குழந்தைதான். picture smart , சவுண்டு smart, வேர்ட் smart, மேத்ஸ் smart, body smart, people ஸ்மார்ட், self smart , nature smart, என்று நுண்ணறிவை வகை பிரிக்கிறார். இதை அடையாளம் கண்டு கொண்டால், அனைவரும் வெற்றியாளர்கள் தான். அதற்கேற்ற கற்றல் வழிமுறைகள், வேலைகள், என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால், தன் குழந்தைகளை யாரோடும் ஒப்பிட மாட்டார்கள்.

கலீல் ஜிப்ரான் சொல்வது போல.

“உங்களின் அன்பை அவர்களுக்கு கொடுக்கலாம்.

ஆனால் உங்களின் எண்ணங்களை அவர்களின் மேல் திணித்து விடாதீர்கள்.

ஏனென்றால் அவர்களுக்கு என்று தனியாக சிந்தனைகள் உண்டு.

பாயக் காத்திருக்கும் அம்புகள் குழந்தைகள்.

அம்பைக் குறி பார்க்கும் ஆண்டவன் கைகளின் வில்தான் நீங்கள்.

அம்புக்காக வளைந்து கொடுப்பதில் வில் என்றும் மகிழ்ந்திருக்கட்டும்.

பாய்ந்து செல்கின்ற அம்பின் மீது மட்டும் அல்ல., கைகளில் தங்கி விடுகின்ற

வில்லின் மீதும் ஆண்டவனுக்கு அன்பு உண்டு.”

குழந்தைகள் பிறக்கும்போது தான் பெற்றோர்களும் பிறக்கிறார்கள். எனவே அவர்கள் வளரும்போது கற்றுக் கொள்வதைப்போல, பெற்றோர்களும் வளரவும், கற்கவும் தயாராகுங்கள். நான் உன்னை இப்பொழுது பார்த்துக் கொள்கிறேன், நீ என்னை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற குற்ற உணர்வு பந்தம் வேண்டாம். அவர்கள் வளர்ச்சிக்கு உதவியாய் இருங்கள். பால் பேதமின்றி, தன்னை நேசிக்க, உலகத்தை நேசிக்க, தன்னை பாதுகாத்துக்கொள்ள, சமூகத்தை பாதுகாக்க சொல்லிக் கொடுங்கள்.அதுவே பெற்றோர் அறம். நல்ல மன நல்ல சமூகத்தின் அடையாளம். அது போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version