
‘Parenting’ என்ற தலைப்பை முதன்முதலில் கண்டவுடன், இத்தலைப்பைப் பற்றி எழுதுவதற்கான முழுத் தகுதியும் இரு குழந்தைகளின் தாயாகிய எனக்கு உள்ளது என்ற பெருமிதத்துடன் இக்கட்டுரையைத் தொடங்கக் கடமைப்பட்டுள்ளேன். இந்த உலகில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அங்கு குழந்தை மட்டுமே பிறப்பதில்லை; ஒரு தாயும் பிறக்கிறார், ஒரு தந்தையும் பிறக்கிறார். அதுவரை தங்களுக்காக மட்டுமே வாழ்ந்த இருவரின் வாழ்க்கையை மேலும் வலிமையாக இணைக்கும் பாலமாகக் குழந்தைகள் அமைகின்றனர். குழந்தைகள் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் அடித்தளமாகத் திகழ்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளின் பங்கு அளப்பரியது. சில நேரங்களில் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்குக் காரணமாக அவர்கள் இருக்கலாம்; ஆனால், பல பிரச்சினைகளையும் மறக்கச் செய்யும் தீர்வாகவும் அவர்களே அமைகின்றனர். அவர்களின் மழலைச் சிரிப்பும், குறும்புகளும், அன்பான அரவணைப்புகளும் பெற்றோரின் மனக்கவலைகளை மறக்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை.
என்னைப் பொறுத்தவரையில், குழந்தையை வளர்ப்பது என்பது அதனுடன் சேர்ந்து நம்மையும் வளர்த்துக்கொள்வதாகும். ஒரு குழந்தைக்குச் சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டால்கூட, தாய் மிகுந்த அக்கறையுடன் அதன் நலனைக் கவனிக்கிறார். குழந்தைகளுக்குப் பள்ளியில் திட்டப்பணிகள் வழங்கப்படும்போது, அதுவரை முயற்சி செய்யாத பல புதிய விஷயங்களையும் கற்றுக்கொள்கிறார். ஓவியம் வரைவது, கைவினைப் பொருட்கள் தயாரிப்பது, புதிய தகவல்களைத் தேடுவது எனப் பல திறன்களை வளர்த்துக்கொள்கிறார்.
இவ்வாறு, குழந்தைகளுக்காகப் புதியவற்றைக் கற்றுக்கொண்டு தன்னையும் மெருகேற்றி, குழந்தைகளின் வளர்ச்சிக்கும் துணைநிற்கிறார். எனவே, குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் ஒரு கற்றல் பயணமாகும், நல்ல பெற்றோர் என்பவர்கள் குழந்தைகளிடம் ஒருபோதும் கோபப்படாதவர்கள் அல்ல; குழந்தைகளை ஒருபோதும் கண்டிக்காதவர்களும் அல்ல. மாறாக, குழந்தைகள் தவறு செய்யும்போது அந்தத் தவறைச் சுட்டிக்காட்டி, அதன் விளைவுகளைப் புரியவைத்து, அவர்கள் திருந்துவதற்கு வழிகாட்டுபவர்களே சிறந்த பெற்றோர்.
குழந்தைகள் தவறு செய்யும்போது அவர்களைப் பிறருடன் ஒப்பிட்டுக் குறை கூறாமல், பொறுமையாக எடுத்துரைக்க வேண்டும். அவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைக்காமல், எது சரி, எது தவறு என்பதைப் புரியவைக்க வேண்டும். கண்டிப்பு என்பது குழந்தைகளிடம் பயத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல; அவர்களிடம் பொறுப்புணர்வை வளர்ப்பதற்காக இருக்க வேண்டும். குழந்தைகளின் வெற்றிக்குப் பின்னால் நின்று பாராட்டுவதும், தோல்வியின்போது அவர்களுக்குத் துணையாக இருந்து மீண்டும் முயற்சி செய்ய ஊக்கமளிப்பதும் சிறந்த பெற்றோரின் அடையாளமாகும். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் உரையாடல் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தைகள் பேசும்போது அவர்களின் கருத்துகளுக்குச் செவிசாய்த்து, உணர்வுகளைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
பெரியவர்களுக்குச் சிறியதாகத் தோன்றும் பிரச்சினைகள்கூட குழந்தைகளுக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கலாம். எனவே, அவர்களின் கவலைகளை அலட்சியப்படுத்தாமல், பொறுமையாகக் கேட்டுப் புரிந்துகொள்ள வேண்டும்.
தவறு செய்துவிட்டாலும் தங்களுடைய பெற்றோர் தங்களைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். தங்களுடைய மகிழ்ச்சியையும் கவலையையும் தயக்கமின்றிப் பகிர்ந்துகொள்ளும் சூழலை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய நம்பிக்கையே பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும். நாம் அனைவரும் பெற்றோராகக் குழந்தைகளுக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்க முயல்கிறோம். ஆனால், அவர்களோ நமக்கு அன்பு, அக்கறை, பாசம், பொறுமை, விட்டுக்கொடுத்தல் போன்ற பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் மறைமுக ஆசிரியர்களாகத் திகழ்கின்றனர்.
குழந்தைகள் ஒரு சிறிய பரிசைப் பெற்றால்கூட அளவில்லாத மகிழ்ச்சி அடைகின்றனர். சிறிய நிகழ்வுகளைக்கூட ஆச்சரியத்துடன் ரசிக்கின்றனர். அன்பு செலுத்துவதற்குக் காரணங்கள் தேவையில்லை என்பதைத் தங்களுடைய செயல்களின் மூலம் உணர்த்துகின்றனர்.
குழந்தைகளை வளர்க்கும்போது பொறுமையாக இருக்கவும், நமது நேரத்தைப் பகிர்ந்துகொள்ளவும், பிறருடைய தேவைகளைப் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்கிறோம். எனவே, பெற்றோரியம் என்பது குழந்தைகளுக்கு மட்டுமே கற்றுக்கொடுக்கும் பயணமல்ல; பெற்றோரும் தங்களை மேம்படுத்திக்கொள்ளும் வாழ்க்கைப் பயணமாகும். இன்றைய நவீன உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக ஊடகங்கள், கல்விப் போட்டிகள் போன்றவை குழந்தைகளின் வளர்ச்சியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. எனவே, குழந்தைகளின் மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், அவர்களின் மனநலம், உணர்வுகள், தனித்திறமைகள் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. எல்லாக் குழந்தைகளும் ஒரே துறையில் சிறந்து விளங்குவதில்லை. சிலர் கல்வியில் சிறந்து விளங்கலாம்; சிலர் விளையாட்டு, இசை, ஓவியம் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டிருக்கலாம். எனவே, குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடாமல், அவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்காகப் பெற்றோர் நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியம். குடும்பமாக உரையாடுவது, ஒன்றாக உணவருந்துவது, விளையாடுவது போன்ற செயல்கள் குடும்ப உறவுகளை வலுப்படுத்துகின்றன. அன்பும் வழிகாட்டுதலும் நிறைந்த சூழல் குழந்தைகளின் தன்னம்பிக்கையையும் பொறுப்புணர்வையும் வளர்க்கிறது. குழந்தைகளுக்கு நாம் வழங்கும் மிகப்பெரிய சொத்து பணமோ, பொருளோ அல்ல; அன்பு, நல்லொழுக்கம், தன்னம்பிக்கை, சுயமரியாதை மற்றும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையே!
நல்ல பெற்றோராக இருப்பது என்பது தவறுகளே செய்யாத மனிதர்களாக இருப்பதல்ல; நமது தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டு, குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக வாழ்வதாகும்.
இரு குழந்தைகளின் தாயாகிய எனது அனுபவத்தில், குழந்தைகள் வளர வளர அவர்களுடைய உலகம் விரிவடைகிறது; அதே நேரத்தில், அவர்களுடன் சேர்ந்து நமது உலகமும் விரிவடைகிறது. அவர்களின் மகிழ்ச்சியில் நமது மகிழ்ச்சியைக் காண்கிறோம்; அவர்களின் முன்னேற்றத்தில் நமது வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டடைகிறோம்.
எனவே, குழந்தைகளை வளர்ப்பதை ஒரு கடமையாக மட்டும் கருதாமல், அவர்களுடன் இணைந்து நம்மையும் வளர்த்துக்கொள்ளும் அரிய வாய்ப்பாகக் கருதுவோம்.
வாருங்கள்! குழந்தைகளின் கைகளைப் பிடித்து அவர்களை வழிநடத்துவதோடு, அவர்களிடமிருந்து வாழ்க்கையைக் கற்றுக்கொண்டு நாமும் வளர்வோம்! குழந்தைகளையும் நல்வழியில் வளர்த்து, அன்பும் அறமும் நிறைந்த அடுத்த தலைமுறையை உருவாக்குவோம்!