
செழியன் : இன்று என்ன படிக்கலாம்?
திகழன் : திருக்குறள்
செழியன் : திருக்குறள் என்பது பொதுக்களம், அதில் எதைப் படிக்கலாம்?
திகழன் : கல்வி அதிகாரம்
செழியன் : சரி. கல்வி பற்றி வள்ளுவர் என்ன சொல்கிறார் பார்ப்போமா?
கற்க கசடு அற கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
இதற்குப் பொருள் பார்ப்போமா,
திகழன் : கற்க – கசடு அறக் கற்க –– கற்ற அதற்குத் தக – கற்றவை பின் நிற்க
செழியன் : இதை எப்படி புரிந்துகொள்வது?
திகழன் : கற்றலின் பயன் கசடை அறிதல் – அறிந்த பின் கசடை நீக்கல் – கசடு நீக்கி
கற்றவற்றைப் பின்பற்றி நடத்தல் என்று வள்ளுவரின் குறளை வாசிக்கிறோம்.
1
செழியன் : கசடை நீக்கி, கற்றவை போற்று என்று உரை சொல்கிறோம். சரியா?
திகழன் : ஆமாம்
செழியன் : கசடு என்றால் என்ன?
திகழன் : கழிவு – அழுக்கு – குற்றம் – தேவையற்ற பகுதி
செழியன் : பொதுவாக எப்போது கசடு என்றோம்?
திகழன் : ஒரு சாற்றுப்பிழிவின் மீதியான திடம் அல்லது சக்கை
செழியன் : கசடு அற என்ன செய்வோம்.?
திகழன் : வடிகட்டுவோம்,
செழியன் : எதை வடிகட்டுவோம்.?
திகழன் : பொருளை வடிக்கட்டுவோம்.
செழியன் : அதாவது, இதற்குமுன் கசடு எதனைத் தன்னுள் பொதித்து
பாதுகாத்து வைத்திருந்ததோ அந்தப்பொருளை வடிகட்டுவோம். சரி கசடு
என்னவாகும்?.
திகழன் : கசடு மேலே தங்கிவிடும்.
செழியன் : கசடினை என்ன செய்வோம்.?
திகழன் : இனி தேவையில்லை என்று வீசிவிடுவோம்.
செழியன் : ஏன் கசடு தேவையில்லை?.
திகழன் : ஏனென்றால் இதற்கு மேல் அதனால் பயனில்லை.
செழியன் : அதாவது, நமக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டபின் அது
இனி பயனற்றது என்கிறாய். விளக்க முடியுமா?
திகழன் : சான்றாக, தேன் இருக்கிறது. தேனைத் தந்தது தேன்கூடு.
பாதுகாத்தது தேன்கூடு. தேனைப் பிழிந்தபின் அந்தக் கூடாகிய அடைதான் கசடு. தேனை எடுத்தபின் அடைசக்கை பயனற்றதுதானே.
ஒரு பழம் இருக்கிறது. பழத்தின் சுவைதரும் சதைப்பகுதி பழத்தின் தோலுக்குள் இருக்கிறது. சதைக்குள் விதை இருக்கிறது. சதைப்பகுதியைச் சுவைத்தபின் தோலும் விதையும்தானே கசடு.
செழியன் : அதாவது நமக்கு உண்ண பழத்தைத் தந்தது என்று அந்தத்
தோலைப் போற்றுவதில்லை..கரும்பு பிழிந்து சாறு எடுக்கிறோம். சாறு எடுத்தபின், சாற்றைத் தந்த அந்த சக்கையை வைத்திருப்பதில்லை.
திகழன் : அதன் பயன்தான் முடிந்துவிட்டதே
செழியன் : அதன் பயன் முடிந்து போயிற்று என்று எப்படி முடிவு செய்கிறாய்?
திகழன் : எனக்கு அது வேலையுமில்லை. தேவையுமில்லை.
செழியன் : அப்படியென்றால் பயனைத் தந்தபின் பொருள் எதற்கு? அப்படித்தானே.
திகழன் : ஆம்.
செழியன் : கல்வியும் அப்படியானால் கசடின் பயனாகும் உறுப்புதானே.
திகழன் : புரியவில்லை.
செழியன் : சான்றாக, நமக்கு அறிவைத் தருவது ஒரு பாடம். அந்தப்
பாடத்திற்குள்தான் அறிவு நிறைந்திருக்கிறது..அந்தப் பாடத்தைக் கற்றதன் வழி நாம் அறிவைச் சுவைக்கிறோம். அந்த அறிவைச் சுவைத்தபின் அந்தப்பாடம் தேவையற்றதுதானே.
திகழன் : ஆம்
செழியன் : அப்புறம் எதற்கு அந்தப் பாடத்தை மனப்பாடம் செய்யச் சொல்கிறது
கல்வி?. மனப்பாடம் செய்து, பார்க்காமல் ஒப்பிக்கவேண்டும்; எழுத வேண்டும் என்று வற்புறுத்துகிறதே, அது கசடு அற்ற கல்வியா அல்லது கசடு அறாக் கல்வியா? சான்றாக, ஒரு கணிதச்செயல்பாட்டை நாம் அறிந்து கொண்டபின் அந்தச் செயல்பாட்டை மனப்பாடமாக எழுதச்சொல்லி ஏன் வற்புறுத்த வேண்டும்? கசடைச் சுமப்பது அறிவின்மை ஆகாதா? இது கசடறக் கற்றலா அல்லது கசடு அறாக் கற்றலா?
திகழன் : அப்படியானால், பயன் நீங்கி, கசடான பின்னும் நீக்காமல் கற்பது
எதற்காக என்ற கேள்வி எழுகிறது. பிறகு கசடற கற்க என்று ஏன் சொல்ல வேண்டும்? அப்படியானால் எது கற்றல்? எது கசடு? கசடு அற என்றால் கசடை நீக்குவதா? அல்லது சுவை சத்தின் இறுதித்துளி முடியும்வரை கசடைப் பிழிந்துகொண்டே சுவைப்பதா? எப்படிப் புரிந்துகொள்வது?
2
செழியன் : இதற்கு இணையாக இரண்டு செய்திகளைப் பார்ப்போம்.
ஒரு சென் கவிதை.
புத்தர் சிலை
உடைந்தது
புத்தர் சிரித்தார்.
சிலை என்பது அறிவை உணர்த்துதலுக்கான குறியீடு. உணராத வரை அது ஆழந்த பொருண்மைuள்ள சிலை. அதனுள் புத்தர் உணர்த்த முயலும் வாழ்வியல் கோட்பாட்டை உணர்ந்தபின் அது வெறும் பொருள். புத்தர் சிலையில் இல்லை. புத்தர் என்பது கோட்பாட்டின் குறியீடு. அதனை உணர்தலில் வியாபித்திருக்கிறார். புத்தரை சிலையிலிருந்து விடுதலை செய் என்று புரிந்துகொள்ளலாம். புத்தரை உணர்ந்தபின் புத்தர் சிலை வெறும் கசடுதானே.
திகழன் : புத்தரை உணர்த்திய சிலை உணர்த்திக்கொண்டேதானே இருக்கும். எப்படி
கசடு ஆகும்?
செழியன் : இப்போதுதான் நீ கல்விக்குள் வருகிறாய். ஒன்று தனக்குள் பயனை அடக்கி
வைத்திருக்கும் வரை கசடு ஆகாது. அதாவது, அந்தப் பயன் முற்றிலும் நீங்காத வரை கசடு ஆகாது. பயன் முற்றிலும் அற்றுப் போன நிலையிலேயே அது கசடு ஆகிறது. எனவே உணர்ந்தபின்னும் பொருளைச் சுமப்பது அறிவின்மை. புத்தர் எனும் அறிவு முழுமையுற்றதும் அதை உணர்த்த வந்த பொருள் கசடாகி உடைந்தது.என்றால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அல்லவா?
திகழன் : இன்னும் புரியும்படி விளக்கமுடியுமா?
செழியன் : சரி, இன்னொன்றைப் பார்ப்போமா? ஒரு பிரதியை எழுதி முடித்ததும்
ஆசிரியர் இறந்து போகிறார் என்பது ஒரு கோட்பாடு. அந்த அனுபவத்தை வழங்கி முடித்ததும் ஆசிரியர் தேவையில்லாமல் போகிறார். ஏனென்றால், அந்த அனுபவம் அவர் தனக்குள் வைத்திருந்தவரை அவருடையது. அதனைப் பிரதியாக வழங்கியபின் அது அவருடையது அன்று. அவரை அதனுடன் இணைத்துச் சுமந்தால் அதன் மானுடப் பொதுமைப் பண்பு வெளிப்படாமல், அவருடையதாகவே சிறைபட்டுவிடும். எனவே, ஆசிரியன் விலகியபின் அது வாசிப்போர் அனைவருக்கும் அவரவருடையதாக இயங்கத் தொடங்கி விடுகிறது. அந்த ஆசிரியர் கசடாக ஒதுங்கிவிடுகிறார். வேறுவகையில் சொன்னால். ஒரே சூழலின் வெவ்வேறு நபர்களின் ஒரே மாதிரியான அனுபவம், பகிரப்படாதவரை, அவரவர் உணர்தலில் அவரவருடையதாக – காற்றடைத்த பலூனாக ஊதிப்பெருகுகிறது. பகிர்தலுக்குப்பின் மானுடவாழ்வின் சூழல்களில் அனைவருமே கடக்கின்ற அனுபவங்களில் அதுவும் ஒன்று என்று ஊசியால் குத்தி உடைக்கப்படுகிறது. எல்லா பலூன்களிலும் அடைபட்டிருந்தது ஒரே காற்று என்ற உண்மை உரைக்கிறது. ஆசிரியர் கசடாகி விலகிவிடுகிறார்.
திகழன் : ஆசிரியர் எப்படி கசடாக முடியும்? ஒவ்வொரு முறை உணரும்போதும்
அவர் முகம் தோன்றும்தானே. ஆசிரியரே கசடு என்றால் அப்படியானால் உணர்த்திய பிரதியும்தானே கசடு. ஒன்றை மட்டும் எப்படி நீக்க முடியும்?
செழியன் : இப்போதுதான் நீ கல்வியின் – கற்றலின் திசை நோக்கிப் பயணிக்கிறாய்..
தேவை கருதி ஒன்றை ஏற்றுக்கொண்டு, தேவை நிறைவில், நமக்குத் தேவையானதைத் தந்த அந்த ஒன்றைக் கற்பித்தல் கருவியாக ஏற்கச் செய்வது கல்வியாகுமா அல்லது கசடு என ஒதுக்கக் கற்பது கல்வியாகுமா? இப்போது புரிகிறதா?
திகழன் : புரிந்தது.
செழியன் : என்ன புரிந்தது.?
திகழன் : பொருளும் பயனும் இணைந்தே இருப்பது.. பயன் முழுமையாக
உரியவருக்குச் சென்று சேர்ந்தபின் சுமந்தபொருள் கசடாகிறது. எனவே, பொருள் கசடாகும் வரைப் பயன்கொள்ளப்பட வேண்டும். பொருளில் பயன் எது? கசடு எது? என்பதை அறிவதுதான் கல்வி. பயனை முற்றிலும் உணரும்வரை பொருளின் தேவை இருந்துகொண்டே இருக்கும். சரிதானே. உணர்தல் என்பது தலைமுறை தேடல். அந்த உணர்தல் முடிவற்றது. தலைமுறைதோறும் பொருள் உணர்த்திக்கொண்டே இருக்கும். இதைத்தான் கல்வி கரையில என்பார்களோ.
3
செழியன் : இப்போது உன் ’புரிதல் சரியான திசையில் பயணிக்கிறது.
இப்போது சொல் எது பொருள்? எது கசடு? பொருளே கசடு. கசடே பொருள் எனலாமா?
திகழன் : அது எப்படி? பொருள்தானே கசடாகும். கசடு எப்படிப் பொருளாகும்?
செழியன் : சான்றுக்கு வருவோம், தேனடை பொருள். தேன்நீங்கிய பின் கசடு
என்பார்கள். தேனை விட தேனடை மருத்துவப் பண்பு உடையது. கரும்பு பொருள். சாறு அற்றபின் அதன் சக்கை கசடு. என்பார்கள். கரும்புச் சக்கையிலிருந்து தாள் தயாரிக்கப்படுகிறது. நெற்பயிர் பொருள். நெல் அறுத்தபின் அது அழி. அழி மாட்டுக்கான உணவு. நெல் பொருள். அரிசியை பயனாகப் பிரித்தபின் அது உமி. உமி தவிடு என்ற பெயரில் மாட்டுக்கு உணவு. மருத்துவத்திற்கும் உதவும். பயன்தரும் இவை எப்படி கசடு ஆகும்? இயற்கையில் ஒரு பொருள் அழிவில் இன்னொன்றாக ஆக்கம் பெறும். ஆக்கப் பண்புடைய எதுவும் கசடு ஆகாது.
திகழன் : அப்படியானால் எதைக் கசடு என்கிறார் வள்ளுவர்? ஒருவருக்கு
கசடாகத் தெரிவது. இன்னொருவருக்கு அல்லது இன்னொன்றுக்குப் பொருளாகிறது. சான்றாக மரம் உயிரற்றநிலையில் அதனுள் செல் புற்று வைத்து வாழ்கிறது. இறந்தமரம் உயிர்களுக்குக் கூடாகிறது. மனிதர்களுக்கு வீடாகிறது. அப்படியானால் கசடுஅற என்பதை எப்படி ’புரிந்து கொள்வது?
செழியன் : இப்படிப் பொருள் கொள்ளலாமா? ஒருவனுக்கு ஒருபொருளின் பயன்
எதுவரை நீள்கிறதோ அதுவரை பொருள். எப்போது அந்த நீட்சி முடிகிறதோ, அப்போது அது கசடு.
திகழன் : பயன்தரும் பொருளாயினும் அப்பயன் தேவைப்படாத இடத்தில் அது
விலக்கப்படும் தேவையற்ற பொருளாகும்போது கசடாகிவிடுவதற்கு வாய்ப்புள்ளதுதானே.
செழியன் : அதாவது நீ பயிர் – களை என்ற சூழல் களத்திற்குள் வருகிறாய்.
சான்றாக, எல்லாச் செடிகளும் பயிர்கள்தான். ஆனால் நாம் பயன்கருதி ஒரு செடிவகைக்கென்று நட்டு வளர்க்கும் பாத்தியில் மற்றொரு செடி பயனுடையதாக இருந்தாலும் களைதானே. மனிதர்கள் அமைதியாகக் வாழும் சமூகத்தில் சகமனிதனை வாழவிடாமல் துன்புறுத்தும் அல்லது கொலையுறுத்தும் ஒருவன் மனிதனாக இருந்தாலும் அமைதியான சமூகத்திற்குக் களைதானே என்கிறாய்.
திகழன் : இதுவும்
கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட்டு அதனோடு நேர்
என்ற வள்ளுவர் குறள்தானே.
செழியன் : ஆமாம். இந்தக் குறளின் வழியிலேயே சிந்திப்போம்.
சீவக சிந்தாமணியில் களையெடுக்க நெல்வயலில் இறங்கிய ஆடவர் அங்கு
பூத்திருந்த தாமரையை காதலியர்முகம் என்றும் குவளையைக் காதலர்கண் என்றும் அழகில் மயங்கி அழகியல் நோக்கில் களையாகாது என்று வெட்டாமல் விட்டு விடுகிறார்கள். அதுவே, அறுவடை நாளில் தொழில் நோக்கில் அழகைக் கருதவில்லை. தாமரையும் குவளையும் தண்டறுந்து கரையில் வாடிக்கிடந்தன என்கிறார் திருத்தக்க தேவர். அப்படியானால் ஒன்றைக் களையெனத் தீர்மானிப்பதில் பயன் மட்டுமின்றி காலமும் சூழலும் காரணியாகிறது என்பதைப் புரிந்துகொள்வாயா?
திகழன் : அப்படியானால் கசடு என நினைப்பது பொருளாகவும் இருக்கலாம் என்பதைக்
காலமும் சூழலும் தீர்மானிக்கின்றன என்கிறீர்கள்.
செழியன் : அப்படியே கொலையில் கொடியாரை ஒறுத்தல் களைகட்டுதலுக்குச் சமம் என்ற பகுதிக்கு வருவோம். வள்ளுவர் சொன்னதுதான். ஆனால் உடைமைச்
சமூகத்தால் வஞ்சிக்கப்படும் ஒரு எளியவனின் கோபம் அந்த உடைமைச் சமூகத்தின் அமைதியைக் குலைக்கும்போது அவனைக் களை என்று அறத்தின்பேரால் அதிகாரம் சுட்டிக் காட்டினால் மரணதண்டனையைச் சரி என்று ஏற்றுக்கொள்ளலாமா?
திகழன் : எதைச் சொல்கிறீர்கள்?
செழியன் : கொன்றச் சிலம்பு கொணர்க என்ற பாண்டியனின் நீதி பைங்கூழ்
களைகட்டதனோடு நேர் ஆகுமா?
தனக்கு நேர்ந்த நீதிப்பிழையின் கொடுமைக்கு ஈடாக, மன்னரின் மரணமும் தேவியின் மரணமும் போதாதென்று கண்ணகி மதுரையை எரித்தது இக்குறள் சொல்லும் களையெடுத்தல் என்னும் பொருளுக்குப் பொருந்துமா?
திகழன் : அது அரைசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றான கதை. . எப்படி
களையெடுக்கும் செயலாகும்?
திகழன் : களையும் பயிரும் எது என முடிவு செய்வது காலத்தின் சூழலிலா அல்லது
தனிமனிதர்களின் தீர்மானத்திலா என்ற வினா புதிதாக எழுகிறதே..அப்படியானால் வள்ளுவர் எதனைக் கற்கச் சொல்கிறார்? பொருளைக் கற்கச் சொல்கிறாரா? கசடைக் கற்கச் சொல்கிறாரா?
4
செழியன் : சரியான பார்வைக்கு வந்திருக்கிறாய். இதனை இப்படி கேட்டுப்பார். பொருளை
முழுமையாக நோக்காது, தேவை கருதி பயன் என்றும் கசடு என்றும் பிரித்து நோக்குவது வள்ளுவருக்கு அறமாகுமா? பயன் தந்த பொருளை கசடு என்று விலக்கும் அறிவின்மையும் கசடுதான் என்பதுதானே வள்ளுவரின் அறமாக இருக்க முடியும்.
திகழன் : ஆமாம். அப்போதுதானே வள்ளுவரின் குறளும் பொருள் தந்த பின்னும்
கசடாகாமல் இன்றும் வாழ்வதற்குப் பொருள் இருக்கும்.
செழியன் : அதைத்தான் ஏற்கெனவே, உணர்தல் என்பது தலைமுறை தேடல்..எனவே
உணர்த்தியபின்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் என்ற முடிவைக் கண்டடைந்து விட்டோமே. இதுவேறு. நிச்சயமாக. வள்ளுவர் பொருளின் பயனும் வாழ்வும் முழுமையாக அறிந்தவர். எனவே, நிச்சயம் பொருளைக் கசடு எனச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.
திகழன் : அப்படியானால் எதனைக் கசடு என்கிறார். ஒரு பொருளைக் கசடு எனக்
கருதும் எண்ணம் அற்றுப்போகும் வரை என்று கொள்ளலாமா?
செழியன் : ஒரு பழம் என்பது அதன் தோலுடன் சேர்ந்த வாழ்வு.. கரும்பு என்பது அதன்
கணுவும் சதையும் சேர்ந்த வாழ்வு. அதன் மூலம்தானே அது பொருளாக அறிமுகமாகிறது. எனவே, கசடு என்பது பயனை நல்குவதற்காக வாழும் பொருளின் சிறந்த கூறு. மேலும் கசடு என ஒதுக்குவது மீண்டும் பொருளாகப் பயன் நோக்கி எழுகிறது. எனவே அதனைக் கசடாக அறிமுகம் செய்யும்போது அதனில் தோன்றும் கசடு என்ற எண்ணம் அற – அதன் வாழ்ந்த முழுமையை முன்னோக்கியும் அதன் தொடரும் பயனைப் பின்தொடர்ந்தும் சிந்தித்து ஆராய்ந்து – அந்தக் கசடின் பொருண்மையை உயிரும் சதையுமாக உணர்ந்து பின் விலக்குவன விலக்கிக் கற்கச் சொல்வது என்று கொள்ளலாம் அல்லவா? அப்படிக் கொண்டால் கசடு உயிர்பெற்று பொருளாகும், கல்வி கசடு அற முழுமையாகும்.
திகழன் : ஒரு ஐயம், கேட்கலாமா? மலம் சிறுநீர் இரண்டும் கழிவுதானே. அது நீங்கிய
பின் வெறுப்புக்குரியதாக இழிவாகப் பார்க்கிறோம். அப்புறம் அவற்றை எப்படி முழுமையின் பகுதி என்பீர்கள். அவை கசடுதானே.
செழியன் : நல்ல வினா? சரி மலம் சிறுநீர் மனிதனுள் முற்றிலும் நீங்கிய பொருளா?
நாளும் தொடரும் பொருளா? இப்படி மாற்றுக்கேள்வி எழுப்பிப் பார்ப்போமா? மலம் ஒருவனுக்கு வெளியேறவில்லை. சிறுநீர் ஒருவனுக்கு வெளியேற வில்லை. என்று வைத்துக் கொள்வோம். அவன் என்ன சொல்லிக் கலங்குவான். கழிவுக்காக ஏங்குவான் அல்லவா. வேறு வகையில் சொன்னால் மலமும் சிறுநீரும்தான் ஒருமனிதனின் நாளைப் புதுப்பிக்கின்ற பொருள்கள் என்பதுதானே உண்மை. ஒருபுறம் வெளியேறினால் மறுபுறம் உருவாகும் பொருளாகத்தானே மனிதனுள் மலமும் சிறுநீரும் தொடர் செயல்பாட்டில் இயங்குகிறது. அவனுடைய நலமும் வளமும் மலமும் சிறுநீரும் தரும் வாழ்வல்லவா. இப்போது சொல். மலமும் சிறுநீரும் கழிவாகலாம். ஆனால் அவைதான் வாழ்வாகவும் இயக்குகின்றன. ஐயம் தீர்ந்ததா?
திகழன் : எப்படிப் பார்த்தாலும் வெளியேறியது கழிவுதானே?
செழியன் : மலமும் சிறுநீரும் கழிவானாலும் பொருள்தான். வெளியேறிய
கழிவு பின் எருவாகிறது. மண் தந்த உணவுக்குக் கடனாக மனிதன் மண்ணுக்குத் தருவது என்ற பொருளில் நாட்டுப்புறத்தில் காலைக்கடனுக்குப் பெயர் பூமிக்கடன் என்ற பெயரில் பொருளாகிறது தெரியுமா?
திகழன் : நீங்கள் சொல்வது புரிகிறது. அதனால், வள்ளுவர் குறளை இப்படி நோக்கலாம்.
(ஒரு பொருளைக்) கற்க – (அப்பொருளின்) கசடு கற்க – கசடு அற, அதாவது பிரித்து நோக்காமல்,பொருளோடு இணைத்து நோக்கி முழுமையாக உணர்ந்து கற்க. சரிதானே.
செழியன் : நன்று. நன்று.
5
திகழன் : இப்போது இன்னொரு கேள்வி எழுகிறது. அப்படியானால் வள்ளுவர் கசடு
என்ற சொல்லையே கையாண்டிருக்க வேண்டாமே? ஏன் கையாண்டார்?
செழியன் : மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் கல்வியின் அடுத்த பகுதிக்குப் பயணிக்கத்
தொடங்கியிருக்கிறோம். கல்வி அதுவாகவே நம்மைப் புரிதலின் தொடர்சங்கலியில் இணைத்து அழைத்துச் செல்கிறது.
திகழன் : கசடு என்ற ஒரு பகுதி அல்லது நிலை பொருளோடு இணைந்து இருக்கிறதா?
இல்லையென்றால் வள்ளுவர் சொல்லியிருப்பாரா?
செழியன் : இதுதான் அடுத்த உங்கள் கேள்வி. அப்படித்தானே?
திகழன் : சரியாகப் புரிந்துகொண்டீர்கள் ஐயா!
செழியன் : நல்லது ஆசிரியரை மாணவனாக்கி இணைந்து கற்கிறீர்கள்.
திகழன் : நன்று.
செழியன் : நாம் ஒளி இருள் கொண்டு நாள் பகல் என்று காட்சி கண்டு, இன்பம்
துன்பம் என்ற உணர்வில் நின்று வாழ்வு மரணம் என்னும் நிலையில் நின்று இருமையாகவே அனைத்தையும் பார்க்கக் கற்றுக்கொண்டோம். அதன் விளைவாக காணும் பொருளிலும் ,நன்மை தீமை – உண்மை இன்மை – பெருமை சிறுமை – மெய் பொய் – விருப்பு வெறுப்பு – ஆக்கம் கழிவு என்ற வரிசையில் வகைப்படுத்திப் பார்க்கத் தொடங்கிவிட்டோம். அதன் தொடர்ச்சியில் உருவானதுதான் சாரம் கசடு என்ற இருமை நோக்கு.. இவை எல்லாம் உள்ளது என்றால் சாரமும் கசடும் என்பது உள்ளதுதானே. ஆகவே கசடு என்று வள்ளுவர் இருப்பதைக் குறிப்பிட்டுத்தானே ஆக வேண்டும்.
திகழன் : இப்போதுதானே கசடு அற முழுமை என்றீர்கள்.. மீண்டும் கசடு என்று ஒரு
நிலை உள்ளது என்கிறீர்கள். எப்படிப் புரிந்துகொள்வது?
செழியன் : இவை எல்லாம் மனிதத் தேவையில் உருவான உணர்வு ஆக்கங்கள். உணர
முடியும். அவ்வளவுதான்.
திகழன் : எப்படி உணர்வின் ஆக்கங்கள்.
செழியன் : இப்போது பொய் என்கிறோம். மெய் என்கிறோம். எது மெய் எது பொய்.
இரண்டையுமே அறச்சான்றின் வழிதான் உணர முடியும். இருவர் மனத்திலும் அறம் செயல்பட்டால்தான் தன்முன் வைக்கப்பட்ட காட்சிவழியல்லாத சொல்லையோ செயலையோ மெய்யென்றோ பொய்யென்றோ நிறுவமுடியும். அறத்தைக் கருதாத இடத்தில் கண்டறிய வாய்ப்பில்லை.
திகழன் : ஆமாம். வள்ளுவர் கூட, பொய்யும் மெய்யாகும் இடமுண்டு என்கிறாரே.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
செழியன் : நன்று. இப்போது நம் முன்னே இருக்கும் கேள்வி. கசடு என்பது பொருளா?
அல்லது பொருளின் பிழிவின் மிச்சமா? அல்லது அதனைக் கசடாகப் பார்க்கும் மனித எண்ணமா? அந்த எண்ணம்தான் கசடா? இதனை விளக்க மற்றொரு இணைவினாவுக்குள் பயணிக்கலாம். அழகு என்பது பொருளா, நிலையா? அது காணும் பொருளில் இருக்கிறதா? பார்க்கும் புலனில் இருக்கிறதா?
திகழன் : அழகு என்பது ஒரு நிலை.. அது காணும் பொருளில்தான் இருக்கிறது.
செழியன் : பொருளில் இருந்தால் ஏன் ஒருவருக்கு அழகாகத் தோன்றும் பொருள்
இன்னொருவருக்கு அழகாகத் தெரிவதில்லை.
திகழன் : உண்மைதான். அழகு என்பது உணர்வில் உருவான கருத்தாக்கம். அவரவர்
உணர்வுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அழகு குறித்த ஓரு கருத்தாக்கம்
அவரவர் எண்ணத்தில் இருக்கிறது என்பதை ஏற்கெனவே படித்திருக்கிறேன்.
செழியன் : அப்படி வா. அவரவருக்குள் உறைந்திருக்கும் எண்ணம் எப்படி அவரவர்
பார்வையில் அழகைத் தீர்மானிக்கிறதோ, அப்படித்தான் கசடு என்பதும்
அவரவர் எண்ணத்தில் குடியிருக்கும் கருத்தாக்கம். அவரவர் எண்ணம் சார்ந்து அமைகிறது.
திகழன் : இப்போது நன்றாகப் புரிகிறது. கசடு என்பது ஒருபொருளின் பயன் பயனின்மை
என்றவாறு, ஒவ்வொருவரும் மனதில் உருவாக்கி வைத்திருக்கின்ற கருத்தாக்கம். புரிகிறது. நன்றி ஐயா.
6
செழியன் : பொறு பொறு. இதுவரை படித்தது பாடமல்ல. பொருள் விளக்கம்.
இப்போதுதான் பாடமே தொடங்குகிறது.
திகழன் : உண்மைதான். இந்தக் குறளின் பொருளை உணர்ந்து விட்டோம். இதன் மூலம்
உணர்த்தும் உண்மையான பாடம் என்ன என்பதை உங்கள் பார்வையிலிருந்து தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்.
செழியன் : கசடு என்பது கருத்தாக்கம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம் அல்லவா? அந்த
முடிவிலிருந்து தொடங்குவோம். அது ஒரு சாராரின் தம்முடைய உடைமையை அதனால் உருவான மேட்டிமையைத் தற்காத்துக்கொள்ள தக்கவைத்துக்கொள்ள உருவாக்கப்பட்டது. தேவை கருதி உண்மையை மறைத்துப் இன்மையைப் பொருளாகத் திரித்து திணிக்கப்படுகிறது. அதாவது கசடைப் பொருள் எனப் பாடம் சொல்கிறது.
திகழன் : அதனை எப்படி இனம் காண்பது?
செழியன் : அறிவின் துணைகொண்டுதான். புலன்களால் உணர முடியாத எதுவும் அல்லது
புலன் காட்சி மெய்மைகளால் நிறுவமுடியாத எதுவும் ஒருபோதும் பொருளாகாது, கசடாக உணர்ந்து விலக்கப்பட வேண்டியது என்று உணர்ந்து அடிப்படை இல்லாத அந்தப் பொய்மாயக் கசடுகளைக் கட்டவிழ்த்து அடையாளப்படுத்த வேண்டும். அந்தக் கசடுகளை விலக்கி புலன்காட்சிகளால் உண்மையான பொருளை நிறுவி உணரச்செய்து படிப்பதே கசடறக் கற்றல்.
திகழன் : எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. அதுதானே ஐயா.
செழியன் : அதுதான் அறிவின் செயல்பாடு. இதற்கும் வள்ளுவரின் ஒரு குறள் வழியே
நாம் பயணிக்க வேண்டும்.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
உலகத்தின் இயற்கை இருவேறு பட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும் ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும். என்பது உரை.
திகழன் : இந்தக் குறளை வள்ளுவர் ஊழியலில்தானே வைத்திருக்கிறார்.
ஊழிற்பெருவலி யாவுள என்கிறாரே. இந்தக் குறளுக்குக் கூட ஊழின் காரணத்தால் இவ்வுலகம் இருவேறு இயற்கையதாக உள்ளது. செல்வம் உடையவராதல் வேறு. அறிவுடையராதல் வேறு என்றுதானே பொருள்.
செழியன் : தான் சார்ந்த சமயத்தால் தெய்வத்தை ஏற்றுக்கொள்ளும் வள்ளுவர்தான்
அறத்தின் முன் மெய்யாக நின்று
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்த கூலி தரும் என்கிறார். அப்படித்தான் விதியைக் காட்டிலும் வலியது எது என்று சமயத்தின் சார்பில் நின்று மொழிந்த அதே வள்ளுவர்தான் அறத்தின் முன் மெய்யாக நின்று
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
தாளாது உஞற்று பவர் என்கிறார்.
திகழன் : செல்வத்தை ஏன் அறிவுக்கு எதிராக நிறுத்துகிறார்?
செழியன் : செல்வத்தை அல்ல. செல்வத்தை உடைமையாகக் குவித்துவைக்கும்
செல்வரைத்தான் எதிராக நிறுத்துகிறார். புரியும்படி சொன்னால் செல்வம் உழைப்பு இரண்டும் இணை. உடைமை அறிவு இரண்டும் முரண். உழைப்பால் விளைவது செல்வம். அந்தச் செல்வத்தை உழைப்பவருக்கும் முதல் போட்டவருக்கும் சமப்பங்காகப் பிரித்து வழங்கச் சொல்வது அறிவு. ஆனால், பேராசையோடு உழைப்பவரை வறுமையில் வீழ்த்தி, செல்வம் முழுமையையும் தானே உரிமையாக்கிக் கொள்வது உடைமை. அறிவை மறுத்தோ மறைத்தோ அடகுவைத்தோ இயங்குவதுதான் உடைமை. முரண் புரிகிறதா?
திகழன் : சரி, இருவேறு உலகத்து இயற்கைக்கும் கசடு அறுவதற்கும் என்ன
தொடர்பு .இருக்கிறது?
செழியன் : இருக்கிறது. இந்த உலகத்தில் உருவான அனைத்துமே மனித உழைப்பால்
ஆனவை. அந்த உழைப்பின் பயன் செல்வமாக மாறும்போது அந்தச் செல்வம் உழைத்தவருக்குச் சென்று சேராமல் அதனைத் தொகுத்தவரிடமே குவிந்துவிட்டது. உழைப்பவர் ஏங்க தொகுத்தவர் ஓங்கிவிட்டனர். உடைமைக் குவிப்பால் தமக்குக் கிடைத்த மேட்டிமையை இழந்துவிடாமல் காக்க, உழைப்பவர் தம் உரிமை கேட்டால் அவர்களை ஒடுக்கி அடிமையாக்கத் தலைபடுகின்றனர். உழைப்பவர் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் அவர்களை வறுமையிலேயே. தம்மிடம் கையேந்துபவர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
திகழன் : அதாவது, உழைப்பவர்களிடம் செல்வம் சேர்ந்துவிட்டால், தம்மைப்போல்
நுகர்வோராக மாறி உழைப்பதை நிறுத்திவிட்டால், தமக்கு உடைமை சேராமல் போய்விடும் என்பதோடு அவர்கள் ஒன்று சேர்ந்து சிந்திக்கத் தொடங்கிவிட்டால் தமக்கு சமமாகி விடுவார்களோ என்ற அச்சம்.
செழியன் : அதற்காக அவர்களை ஒன்றிணைய விடாமல் சாதி மதப் பிரிவினைகளால்
வேறுபடுத்தி மோதவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றனர். அவர்களுக்குக் கல்வியை மறுத்து, கடவுள், விதி, வருணம், பிறவி என்ற பொய்யான கருத்தாக்கங்களை உருவாக்கி மெய்யென நம்பவைத்துச் சிறைப்படுத்துகின்றனர். அவர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள உருவாக்கிய உடைமை பாதுகாப்பு ஒழுக்க விதிகளையே அறம் என்று நிலைநிறுத்தப் பார்க்கின்றனர். உழைக்கும் வர்க்கமும் அறியாமையில் வீழ்ந்து, அறம் என்றால் பொதுதானே என்று இவர்கள் சொல்வதை ஏற்று, .அவர்கள் உருவாக்கிய அறத்துக்கும் கடவுளுக்கும் விதிக்கும் கட்டுப்பட்டு உழைப்பிலும் வறுமையிலுமே வீழ்ந்து கிடக்கின்றனர்.
7
திகழன் : வள்ளுவர் கூறும் இருவேறு உலகம் இதுதானா?
அப்படியானால் இந்நிலை மாற வழியில்லையா?
செழியன் : ஏன் இல்லை. இதனை மாற்றும் வல்லமை இந்த இருவேறு பேராற்றல்களுள்
ஒன்றான அறிவுக்கு உண்டு. அடிப்படையில்லாத பொய்யான கற்பிதங்களை உடைத்து மெய்யான அறத்தை நிலைநிறுத்தி, உண்மையை வெளிக்கொணரும் பேராற்றல் பெற்றது அறிவு. அதற்குச் சார்பு கிடையாது.
திகழன் : ஆம் ஐயா வள்ளுவரே சொல்லியிருக்கிறாரே.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
செழியன் : ஆமாம். மெய்ப்பொருளை நாடுவதே அறிவு, அந்த அறிவை வழங்கும் கருவியே
கல்வி. அறிவைக் கல்வியால் பரவலாக்கினால் உடைமைக் குவிப்பின் அதிகாரக் கற்பிதங்கள் அனைத்தும் உடையும். உழைப்பின் பலன் உழைப்போருக்குச் சேரும். மற்றொரு பேராற்றலான செல்வம் பொதுவாகும். மனித வாழ்க்கை எளியோர் வலியோர் என்று இல்லாமல் சமத்துவமாகும். மனிதர்களைப் பிரிக்கும் சாதி மத ஏற்றத்தாழ்வுப் பிரிவினைகள் மறைந்து ஒன்றே மானுடம் என்றநிலை உருவாகும்.
திகழன் : அதற்கு என்ன செய்ய வேண்டும்.
செழியன் : அறிவை விரிவு செய்ய வேண்டும். அதற்குத் தடையாகப் பல கற்பிதங்கள்
உள்ளன. அவை கடவுளால் வழங்கப்பட்டவை என்று நம்ப வைக்கப் படுகின்றன. அவற்றையே கல்வியாக வழங்குகின்றன. உழைக்கும் வர்க்கமும் அறியாமையால் அவற்றையே கல்வி என்று நம்புகின்றன.
திகழன் : அதாவது மெய்யான அறிவை எளியோர் பெறுவதற்குத் தடையாக உள்ள
கற்பிதங்கள் உடைமை வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட கசடுகள். இந்தக் கசடுகளே கல்வியாக வழங்கப்படுகின்றன. இந்தக் கசடுகளை அறிந்துகொண்டு அவை அற எது உண்மைக் கல்வியோ அதனைக் கற்க வழிகாண வேண்டும். அப்படியானால் கசடு என்பது பொருள்போலத் தோற்றமளிக்கும் கற்பிதம் என்பதை நிறுவவேண்டும் அல்லவா?
செழியன் : மனிதகுலம் ஒன்றே என்பது கல்வி, இங்கு மனிதப்பிறப்பு என்பது படிநிலை
வேறுபாடுஉடையது என்கிறது வருணக் கோட்பாடு. எல்லோரும் ஒரே மாதிரியான பிறப்பும் உறுப்பும் மொழியும் சிந்தனையும் உள்ள மனிதர்கள்தானே. எப்படி வெவ்வேறு ஆவர் என்ற கேள்வி எழவிடாமல் இந்தக் கோட்பாடு அறிவை மறைக்கிறது. இது,கல்வி என்ற பெயரால் அமைந்த கசடு. இதனை உடைக்கும் அறிவின் குரலே
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் என்ற குறள்.
மனிதர்கள் யாவரும் தாய்தந்தை உறவால் தாயின் வயிற்றில் கருவாகி உருவாகிப் பிறப்பார்கள் என்பது மெய்க்காட்சி இதற்கு மாறக, மனிதப்பிறப்பு நால்வகை தலையில் பிறப்பது. தோளில் பிறப்பது, தொடையில் பிறப்பது காலில் பிறப்பது என்ற வருணக் கோட்பாடு மெய்க்காட்சி இல்லாதது. நிறுவிக் காட்டச் சொன்னால் நிறுவ முடியாதது. மனிதர்களைப் படிநிலையில் வேறுபடுத்தி அதை நியாயப்படுத்த உருவாக்கப்பட்ட கற்பிதம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது இக்கற்பிதத்தை உடைக்கும் அறிவுக்கோட்பாடு. இப்போது சிந்தித்துப் பார், மனிதனின் பிறப்புக்கொள்கை என்பது கல்வி. அதில் வருணக்கோட்பாடு என்பது கசடு. பிறப்பொக்கும் என்பது அறிவார்ந்த கோட்பாடு. இரண்டும் கலந்து பாடமாக முன்வைக்கப்படுகிறது. இதில் கசடை உணர்ந்து கசடு எது என்பதை அடையாளப்படுத்தி, அக்கசடு அற, மெய்க்கோட்பாட்டை உணர்ந்து தேர்ந்து கற்றலே கல்வி.. அந்தக் கசடைக் கற்பது நாம் எவ்வாறு அறிவுமுடக்கம் செய்யப்படுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவதற்காக. . பொருளைக் கற்பது என்பது பிறப்பால் அனைவரும் சமம் என்ற உண்மையைப் உணர்ந்துகொள்வதற்காக. மனிதர்களைச் சிந்திக்க விடாமல் வீழ்த்தும் கடவுள், சாதி மதம் நம்பிக்கை முதலான ஏற்றத்தாழ்வுகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காக. இதனால் விளையும் பயன் அல்லது பெறும் அறிவு மனிதகுலம் யாவும் ஒன்றே என்பது ஆகும். இதுதான் கசடறக் கற்றல்.
திகழன் : கற்பிதங்களை எவ்வாறு கசடுகளாக அடையாளம் காண்பது?
செழியன் : புலன்வழிக் காட்சியின் மெய்த்தன்மை இல்லாத எதுவும் கற்பிதமே
என்பதை உணர்ந்து ஆராய வேண்டும். இங்கு, ஏனென்று கேளாமல் ஏற்கும் வண்ணம் கல்விக்கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன. அவையே இங்கு கல்வியாக – பாடத் திட்டமாக – பாடநூல்களாக – அறிவை அளக்கும் வினாக்களாக உருவாக்கப்படுகின்றன. சட்டங்களாலும் விழிப்புணர்வுகளாலும் அரசின் செயல்பாடுகளாலும் எல்லோருக்கும் உரியதாக கல்வி சென்று சேரும் சூழலில், எங்கே கல்வியால் சமத்துவம் உருவாகிவிடுமோ என்ற அச்சத்தால், அதிகாரவர்க்கம், கல்வியின் நோக்கத்தை மடைமாற்றிவிடுகிறது. அதாவது, கல்வி அறியாமையைப் போக்கி அறிவைப் பெற்று தனக்கான வாழ்க்கையைத் தன் சுயத்தில் வாழவைப்பது என்ற இயல் நோக்கத்தை மடைமாற்றி, கல்வியை வயிறு வளர்ப்பதற்காக என்றும் வேலைக்காக என்றும் செயல் நோக்கத்த மாற்றிக் கொடுக்கின்றனர். பசியிலும் வறுமையிலும் அன்றாடப் பிரச்சனைகளிலும் வீழந்து கிடப்பவன் சிந்திக்க மாட்டான் என்ற இறுமாப்போடு அவர்களைச் சிந்திக்கவிடாமல் தேர்வுக்கு விடைகாணும் வகையில் கற்பிதங்களையே பாடமாக்கி, கல்வியாக வழங்கப்படுகின்றன.
திகழன் : என்னென்ன விதமான கற்பிதங்களில் கல்வி சிக்கிக் கிடக்கிறது?
செழியன் : சான்றாக, அறிவு பிறப்பிலேயே இருப்பது. உனக்கு வராது என்ற கற்பிதம், உன்
வறுமைக்குக் காரணம் விதி. நீ இன்று அனுபவிக்கும் துன்பத்திற்குக் காரணம் உன் முன்பிறவி வினைகள். கடவுள் அருள் இருந்தால்தான் வாழமுடியும். என்றெல்லாம் கற்பிதக் கசடுகள் தொடர்கின்றன. இவற்றுக்கு எதிராக, எல்லோருக்கும் பிறப்பு ஒன்றே. மூளையின் அளவு அனைவருக்கும் ஒன்றே, அறிவில் வேறுபாடு இல்லை, விதியென்று ஏதும் இல்லை. பிறவி என்றெல்லாம் கிடையாது, வறுமையையும் அறியாமையையும் கடவுளால் மாற்றமுடியாது, கல்வி ஒன்றே மாற்றும் என்ற மெய்க் கோட்பாடுகளை எதிர்நிறுத்தி கசடுஅற கல்வியை வழங்க வேண்டியுள்ளது.
திகழன் : இந்த கசடு அற கற்கும் கல்வி எப்போது நிறைவுறும்?
செழியன் : மனிதகுலம் ஒன்றே. உலக மானுடம் பொதுவும் சமத்துவமானதும்
அகும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது மானுடத்தின் உலகளாவிய நோக்கமும் அடைதலுக்கான குறிக்கோளும் ஆகும். கல்வி எல்லையற்றது.. இதைத்தான் வள்ளுவர்
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு என்கிறார்.
இருவேறு உலகமாக இருக்கும் இந்த மனித வாழ்க்கையை ஒரே சமத்துவ
உலகாக – எல்லா உயிர்க்குமானதாக – மாற்றுவதற்கான போர் உலகெங்கும்
நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. உடைமை வர்க்கத்தின் இறுகிய
அதிகாரப்பிடிக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் தன் உரிமைக்காகவும்
சமத்துவத்துக்காகவும் போராடிக்கொண்டேதான் இருக்கிறது. அந்தப் போரில்
அதிகாரவர்க்கம் முன்னிறுத்தும் எத்தகைய பொய்யான கற்பிதங்களையும்
கட்டுடைத்து வீழ்த்த அறிவு துணைநிற்கிறது. கற்பிதங்களால் வீழ்த்த
முடியாதபோது ஆயுதங்களையும் மருந்துகளையும் கட்டவிழ்க்கின்றன. சக
மனிதரை சுயநலத்தோடு பகையாக்கி மகிழும் இவற்றுக்கு எதிராக அறிவைத்
துணையாகக் கொண்டு அன்பையும் அமைதியையும் உலக மானுடத்தையும்
கற்பிக்க வேண்டிய அவசியம் எள்ளது. இவ்றா’று அந்த அறிவைக் கல்வியாக்கி
உடைமை வர்க்கத்தின் அதிகாரம் கட்டவிழ்க்கும் ஒவ்வொரு கற்பிதங்களையும்
கட்டுடைத்து அடையாளப்படுத்தி கசடறக் கற்றல் கற்பித்தல் தொடர்ந்து
கொண்டே இருக்கிறது.
திகழன் : இதற்கு முடிவு கிடையாதா!
செழியன் : கசடுகள் புதிது புதிதாக எழுந்தோறும் கசடறக் கற்றலும் கற்பித்தலும்
கரையிலவாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும்
திகழன் : ஆகவே, கல்வி கரையில. கசடறக் கற்றலும் முடிவில. நன்றி ஐயா!
செழியன் : .இன்றைய பாடம் இதனோடு முடிந்தது. நாளை சந்திப்போம். நன்றி!