எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!

குழந்தை வளர்ப்பு – Parenting என்ற வார்த்தைகள் தற்போது அதிகம் பேசப்படுகிறது. எல்லா காலத்திலும் இருந்த, இருக்கும் ஒரு இயல்பு தற்போது ஏன் பேசுபொருளாக மாறியுள்ளது? இதை வைத்து நிறைய கார்ப்பரேட் மற்றும் வியாபார துறையாக மாறி உள்ளது. அதிலும் குறிப்பாக Gentle Parenting எனும் ஒரு நிலைப்பாடு அதிகம் முன்னிறுத்தப்படுகிறது.

   மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக்கட்டத்தை கடந்து வருகையில் ஒழுக்கம் கல்வி வேலை வாய்ப்பு பொருளாதார முன்னேற்றம் திருமணம் என்ற நிலைகளை கடந்து பெற்றோர் எனும் நிலையை அடையும்போது  தன்னைப்போல் அல்லது தன்னைவிட சிறப்பாக தன் குழந்தை இருக்க வேண்டும் என்று பொறுப்பும் வரையறையும் வகுத்துக் கொள்கின்றனர்.

  நம் தாத்தா பாட்டி நம் அம்மா அப்பாவை எப்படி வளர்த்தனர் என்று பார்த்தால் சில நேரங்களில் வியப்பாக இருக்கிறது. பெரும்பாலும் அந்த காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்று நான்கு குழந்தைகள் அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர். அது  கூட்டுக் குடும்ப அமைப்பு போலவே இருந்தது. வீட்டில் சமைக்கப்படும் உணவு எல்லோரும் பகிர்ந்து உண்ணும் படி இருந்தாலும் அன்றைய வழக்கத்தில் அப்பா அல்லது சம்பாதிக்கும் ஆண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதில் முக்கியத்துவமும் மீதம் இருப்பதை பெண் குழந்தைகளுக்கு பகிர்ந்து அளித்தது போக உணவு இருந்தால் அம்மா மற்றும் வீட்டில் உள்ள பெண்கள் சாப்பிடுவதாக இருந்த நிலையில் குழந்தை வளர்ப்பு என்பது ஆணை சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் பிள்ளைகளின் கல்வி உடல் நலம் ,மன நலம் வீட்டின் வரவு செலவு எல்லாம் பெண் பொறுப்பில் இருந்தது. குடும்ப உறுப்பினர் அனைவரும் பெரும்பாலும் ஒன்றாக இருந்தனர். அதனால் மூத்த மகன் அல்லது மகள் பெற்றோரால் அதிகம் கவனம் மற்றும் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர்களுக்கு கீழ் உள்ள தம்பி தங்கை அனைவரும் அண்ணன் அல்லது அக்காவை பின்பற்றி வளர்த்தனர். இதை நம் முன்னோர்கள் ஒரு சொலவடை மூலம் எளிதாக கூறிச் சென்றனர். 

 ” முன் ஏர் எப்படியோ பின் ஏரும் அப்படியே” இது உழவை மட்டும் குறிக்காமல் குழந்தை வளர்ப்பையும் குறிக்கிறது.

அந்த காலத்தில் குழந்தை வளர்ப்பு எளிதாக இருந்ததா என்றால் தெளிவாக கூறமுடியவில்லை. ஆனால் அது தனியான ஒரு செயலாக அல்லது கடமையாக பார்க்கப்படவில்லை. என் சிறு வயதில் என் தாத்தா பாட்டி கதை சொல்லும் போது உன் அப்பா/ அம்மா வளர்ந்ததே தெரியாமல் வளர்ந்தனர். அவர்களாக ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டனர். அவர்களாகவே படித்து முடித்து வேலையில் சேர்ந்து விட்டனர் என்று கூறுவர். உண்மையில் Gentle Parenting என்பது அந்த காலத்தில் இருந்தே இருக்கிறது. இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த தலைமுறையில் நிறைய பேர் குடும்பத்தில் ஒருவராவது பல்வேறு வகையான அரசு பணிகளில் இணைந்தனர். அதிலும் குறிப்பாக முதல் தலைமுறை பெண்கள் அதிகம் கல்வி வேலை என்று சுயமாக முடிவெடுக்கும் நிலையை அவர்களின் பெற்றோர் ஆதரித்துள்ளனர். இன்றைய இளைய தலைமுறையினருக்கு இது தெரியாமல் கூட இருக்கலாம்.

  தாத்தா பாட்டிக்கு அடுத்த தலைமுறையின் குழந்தை வளர்ப்பு எப்படி இருந்தது இன்னும் எளிதாக இருந்ததா அல்லது முந்தைய தலைமுறையை விட சிறப்பாக இருந்ததா அவர்களின் கல்வி பணிச்சூழல் உதவியதா என்று பார்த்தால் குடும்ப அமைப்பில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்ட காலக்கட்டம் அது. 

  ஆண் பெண் இருவரும் கல்வி கற்றல் வேலைக்கு செல்வது என்று பரவலாக வாழ்வியல் மாற்றம் ஏற்பட்ட காலக்கட்டம். வீட்டு நிர்வாகம் வயல் மாடு கன்று வளர்ப்பு என்ற நிலையில் இருந்து வீட்டில் இருந்தே சிறு தொழில்கள் மூலம் பெண்கள் சுயமாக சம்பாதித்து குழந்தை வளர்ப்பில் அவர்களுக்கு தேவையானதை நிறைவேற்றும் நிலை வந்தது. அதே நேரம் ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு குழந்தைகள் போதும் என்று அரசாங்கம் வலியுறுத்தியது. அதனால் குழந்தை வளர்ப்பு என்பது கூடுதல் கவனம் மற்றும் இயல்பை மீறி தன் பிள்ளையை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்ற நோக்கம் ஏற்பட்டது.

    நிறைய தனியார் பள்ளிகள் சில தனியார் கல்லூரிகள் என்று தொழில்நுட்ப கல்வி அறிமுகம் குழந்தை வளர்ப்பில் ஒரு மாற்றத்தை முன்னெடுத்தது. கல்விக்காக பணம் செலவு செய்தல் மற்றும் கூடுதலாக டியூஷன், சிறப்பு வகுப்புகள் என்று குழந்தைகளின் நேரம் பெற்றோரால் நிர்ணயிக்கப்பட ஆரம்பித்தது. இயல்பான ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளும் நிலை இதை இப்படி இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் மேலும் அதில் சிறப்பாக செயல்பட வேண்டும் மற்றும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று குழந்தைகளுக்கு மன நெருக்கடி ஆரம்பித்தது. மேலும் குழந்தைகள் இடையே கல்வி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்க்கப்பட்டது. சில குடும்பங்களில் உறவினர்  குழந்தைகள் மற்றும் அக்கம்பக்கத்து குழந்தைகள் உடன் ஒப்பீடு என்று மாறியது. குடும்ப அமைப்பு குழந்தை வளர்ப்பு அடிப்படையில் என்று மாறியது. இதிலுள்ள சாதக பாதகம் அன்றைய காலகட்டத்தில் பெரிதாக உணரப்படவில்லை . என் பிள்ளை நன்கு படித்து நல்ல வேலைக்கு குறிப்பாக அரசு உயர் அதிகாரியாக வந்தால் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் எங்களுக்கு பெருமையாக இருக்கும் என்ற மனநிலை அதிகம் காணப்பட்டது. அதிலும் சில வணிகர்கள் குடும்பங்களில் ஆண் குழந்தையை விட பெண் குழந்தை கல்வியறிவில் சிறப்பு பெற வேண்டும். ஆண் குடும்ப தொழிலை கவனித்துக் கொண்டால் பெண் குடும்ப நிர்வாகம் மற்றும் குழந்தை வளர்ப்பில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. 

    குழந்தை வளர்ப்பு என்பது அவர்களுக்கு சிறந்த கல்வி என்று மட்டும் இல்லாமல் அவர்களின் தனித்திறமை விளையாட்டு நாட்டுப்பற்று நல்ல பழக்க வழக்கங்கள் பெரியவர்களுக்கு மதிப்பு அளித்தல் என்பதுடன் அதிகாலை எழுவது பெரும்பாலான இடங்களுக்கு நடந்து செல்வது வீட்டிற்கு தேவையான சிறு உதவிகள் செய்வது தனக்கு அடுத்து உள்ள தம்பி தங்கையை பார்த்துக் கொள்வது பக்கத்தில் உள்ள கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவது தேவைப்பட்டால் சமையலில் உதவி செய்வது அனைவரும் சேர்ந்து அமர்ந்து உணவு உண்பது பண்டிகை திருவிழா நாட்களில் அனைவரும் வேலையை பகிர்ந்து செய்வது உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வது அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது மற்றும் வீட்டில் ஏற்படும் சிறு பழுதுகளை நீக்குதல் என்று பல விடயங்களை இயல்பாக பயில்வித்து பிற்காலத்தில் அவர்கள் ஒரு முழுமையான மனிதராக சிறப்பாக செயல்பட  ஏதுவாக வளர்த்தனர். இன்றைய ஐம்பதுகளில் உள்ளோரிடம் இதை காண முடியும். 

   இதை மேலோட்டமாக பார்க்கும் போது குழந்தை வளர்ப்பு எளிதாக இருந்திருக்கிறது என்று தோன்றினாலும் உண்மையில் பெற்றோர் வாழ நிர்ணயித்த வாழ்க்கையைத் தான் அந்த குழந்தைகள் வாழ்ந்தனர். உணவு உடை படிப்பு வேலை திருமணம் வரை பெரும்பாலும் பெற்றோர் எண்ணப்படியே இருந்தது. குடும்பம் என்ற அமைப்பு வலிமையானது. அது எவ்வளவு முரண்பாடு கொண்டதாக இருந்தாலும் நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்தே தீர வேண்டும் என்று வளர்த்தனர். இதன் காரணமாக இந்த தலைமுறையினர் பெற்றோராக இருக்கும் போது காணப்படும் ஒரு சிறப்பம்சம்  இக்கட்டுரையில் வேறு ஒரு இடத்தில் குறிப்பிடுகிறேன்.

    இதிலும் சில விதிவிலக்குகள் இருந்தன. செல்வந்தர் வீட்டு குழந்தைகள் அந்த சூழ்நிலைக்கேற்ப குறிப்பிட்ட சில விடயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வளர்க்கப்பட்டனர். அதே போல தொழிலாளர் வர்க்க ஆண்கள் பெரும்பாலும் தங்கள் வருமானத்தை வீட்டிற்கு தராமல் குடித்து சீரழிந்த நிலையில் அந்த வீட்டு குழந்தைகள் வளர்ப்பு பொருளாதாரம் எல்லாம் அம்மாவை சார்ந்தே இருந்தது. பெரும்பாலும் அந்த குடும்பங்களில் மூன்று நான்கு குழந்தைகள் என்றும் இருந்தனர். பற்றாக் குறை வாழ்க்கையில் மூத்த குழந்தை தன் குழந்தைமையை தொலைத்து அம்மாவுடன் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் அவர்களின் கல்வி மனநலம் பாதிக்கப்பட்டது. எப்போதும் ஒரு சோகமும் ஏக்கமும் நிறைந்த குழந்தைகளும் இருந்தனர். ஆனால் ஒரு தெருவில் குடியிருக்கும் மக்கள் தம் அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு உணவு இல்லை என்று அறிந்தால் உடனே தங்கள் வீட்டு உணவை கொடுத்து பசியாற்றும் நிலை இருந்தது. அதை அந்த குழந்தைகள் மனதை பாதிக்காத வகையில் உறவு முறை வைத்து அத்தை-மாமா பெரியம்மா-பெரியப்பா அக்கா-அண்ணா தாத்தா-பாட்டி என்று சாதி இனம் தாண்டி ஒரு சமூக குழந்தை வளர்ப்பு எளிதாக கடைப்பிடிக்கப்பட்டது. 

 அந்த காலத்தில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்பட்டும் அனாவசிய தேவைகள் என கருதப்பட்டவை தவிர்க்கப்பட்டும் வளர்ந்த குழந்தைகள் நவீன தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெறத் தொடங்கிய காலக்கட்டத்தில் பெற்றோராகிய தருணம் குழந்தை வளர்ப்பு புதிய பரிமாணத்தில் மாறியது.

       2k – Gen Z எனப்படும் மில்லினிய காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோராய் இருப்பது என்பது பலவித சவால்கள் நிறைந்தது. சிறப்பாக குழந்தை வளர்ப்பு என்ற நிலை சிறந்த பெற்றோராய் இருப்பது எப்படி என்று கற்றல் நிலையில் தொடங்குகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் நல்ல கல்வியறிவு இரண்டு மூன்று டிகிரி படித்தவர்களாக பல்வேறு உயர் பதவிகள் கணிப்பொறி முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை பல்வேறு பணிகளில் திறமையாக இருக்கின்றனர். பணி நிமித்தம் கூட்டுக்குடும்ப அமைப்பு தனிக்குடித்தனம் என்றாகிவிட்டது. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என்று எல்லாம் திட்டமிடப்பட்டு தொடங்கப்படுகிறது. 

    குழந்தை பிறந்தவுடன் மிகவும் பிரபலமான பள்ளியில் தன் குழந்தையை சேர்க்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். பலருக்கு அது அவர்களின் பொருளாதார நிலைக்கு மீறியதாக கூட இருக்கலாம். கல்வி தவிர பல்வேறு வகையான திறன்கள் வளர்க்க பல ஆயிரங்கள் செலவு செய்யவும் தயாராக இருக்கின்றனர். ஒரு ஆடம்பர வாழ்க்கையை – தேவைக்கு அதிகமாக கொடுப்பது குழந்தைகள் எது கேட்டாலும் மறுப்பு சொல்லாமல் செய்வது குழந்தைகளுக்கு பிடித்தவைகள் என்று உணவு உடை உட்பட அலைபேசி முதல் அல்ட்ரா மாடர்ன் லேப்டாப் வாகனம் வாங்கிக் கொடுப்பது தான் சிறந்த பெற்றோர் எனக் காட்டும் என்று வரையறுத்துக் கொண்டுள்ளனர். மேலும் குழந்தைகள் தவறு செய்தாலும் கண்டிக்காமல் தனக்கு கிடைக்காத எல்லாம் தான் அனுபவிக்க நினைத்ததை தன் பிள்ளைகளுக்கு வழங்குவது தான்  gentle parenting என்று நினைத்து வாழ்கின்றனர்.

   அதாவது பெற்றோர் எண்ணப்படியே வளர்ந்தவர்கள் தம் குழந்தைகள் எண்ணப்படியே வளர்வது என்ற நிலையே உள்ளது. அதனால் பொருளாதார நெருக்கடி உடன் பணிபுரிவோர் மற்றும் உறவுகளிடம் இருந்து விலகி அவர்களை விட தான் சிறப்பாக குழந்தை வளர்க்க வேண்டும் என்ற peer pressure – ச(மூ)க அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ்கின்றனர்.

  அதை அப்படியே தங்கள் குழந்தைகளுக்கும் கடத்துகின்றனர். தான் மட்டுமே சிறந்தவர் தனக்கு பிடித்ததை செய்ய எதுவும் செய்யலாம் என்ற பிடிவாத மனநிலையில் சில குழந்தைகள் வளர்கின்றனர். அதனால் பதின்பருவ குழந்தைகள் எவ்வளவுக்கு திறமைசாலிகளாக இருக்கின்றனரோ அவ்வளவுக்கு மன அழுத்த பாதிப்பிலும் இருக்கின்றனர்.

 குழந்தைகளுக்கு பிடித்ததை செய்யும் பெற்றோர்கள் செய்யத் தவறும் சில விஷயங்கள் அந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு சில நேரங்களில் பாதகமாக மாறிவிடுகிறது. சில குடும்பங்களில் தன் குழந்தையிடம் தன் கணவரோ அல்லது மனைவியோ – அந்த குழந்தையின் அம்மாவோ அப்பாவோ யாரேனும் ஒருவர் கொஞ்சம் கண்டிப்பாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அதனால் அந்த‌ குழந்தை அவர்களை எதிரியாக நினைத்து வெறுக்கும் சூழ்நிலையும் கண்கூடு. இது பெற்றோர்கள் இடையே ஒப்பிட்டு பார்க்கும் பழக்கத்தை உருவாக்குகிறது. 

  அந்த காலகட்டத்தில் இருந்தே சில குடும்பங்களில் ஏதாவது ஒரு குழந்தையை அதிகம் செல்லம் கொடுத்து போற்றி வளர்ப்பது எது கேட்டாலும் உடனே செய்வது மற்ற குழந்தைகள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது உணவு உடை படிப்பு சொத்து என்று நிறைய ஏற்றத்தாழ்வுகள் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த 2k kids பெரும்பாலும் சமமாக நடத்தப்படுவதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் அதில் உங்கள் திறைமையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஆதரவு தரும் பெற்றோர் சிறப்பு.

   அதேபோல இன்றைய நவீன யுகத்தில் நிறைய புதிய புதிய விஷயங்கள் வளர்த்து கொண்டே இருக்கிறது. எனவே குழந்தையை பள்ளியில் சேர்த்தவுடனே பெற்றோர்கள் மீண்டும் கற்றல் நிலைக்கு தயாராகி விடுகின்றனர். பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். அவர்களுக்கு பள்ளியில் அளிக்கும் projects  செய்ய வேண்டும். பல்வேறு கலாச்சார கலவை நிறைந்த சமூகத்தில் அதற்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்கின்றனர். தங்களைவிட தங்கள் குழந்தைகள் அனைத்து வகையிலும் சிறந்த விளங்க வேண்டும் என்று வாழ்வது சிறப்பு. அதிலும் சில குடும்பங்களில் கணவன் மனைவி உறவில் புரிதல் இல்லாமல் நிறைய மனக்கசப்புகள் இருந்தாலும் தங்கள் குழந்தைகளுக்காக அனைத்தையும் சகித்துக் கொண்டு பிரியாமல் ஒரே வீட்டில் வாழ்வதும் கவனிக்கத்தக்கது. இங்கு இரு தலைமுறையினரின் குழந்தைவளர்ப்பு சிறப்பு பெறுகிறது.

 இவ்வளவும் தங்கள் குழந்தைகளுக்காக எத்தகைய துன்பத்தையும் தாங்க தயாராக இருக்கின்றனர். தங்கள் பொருளாதார நிலை குழந்தைகளுக்கு தெரிய கூடாது என்று சில நேரங்களில் கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கையை தருகின்றனர். ஆனால் இது குடும்ப அமைப்பின் அடிப்படையை உருவாக்காமல் போக காரணமாகலாம். குடும்ப சூழ்நிலை அம்மா அப்பாவின் உழைப்பு வருமானம் அவர்கள் செய்ய வேண்டிய பிற கடமைகள் அவர்களின் உடல் நலம் இவை எல்லாம் தங்கள் பொருளாதார வாழ்வியலில் அடங்கியுள்ளன என்று குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். 

 இதைப் புரிந்து கொண்ட குழந்தைகள் தங்கள் கல்வியில் மேம்பாடும் கொண்ட குறிக்கோளை அடைவதற்கு ஆடம்பரம் அவசியம் இல்லை என்பதை உணர்ந்து தங்கள் பெற்றோரை தொல்லைப்படுத்தாமல் நல்ல குடிமக்களாக வளர்வர். இந்த குழந்தைகள் வளர்ந்து பெற்றோர்களாகும் போது மேலும் சிறப்பாக செயல்படுவர்.

   சமீப பத்தாண்டுகளில் நம் வாழ்வியல் சார்ந்த மாற்றங்கள் சமுதாயத்தின் எல்லா அங்கங்களிலும் பிரதிபலிக்கின்றன. அதிலும் குறிப்பாக வளர் இளம் பருவத்தில் வயதிற்கு மீறிய உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள் குறிப்பிடத்தக்கன. 

   நாம் வசிக்கும் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப உணவு உடை வாழ்வியல் என்பவை வெறும் கலாச்சார பண்பாட்டு அடையாளம் மட்டும் அல்ல. அப்பகுதியில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியம் பொருளாதாரம் கல்வி எல்லாம் உள்ளடக்கியது. ஆனால் இன்று உள்ளங்கையில் உலகம் என்ற நவீனத்துவம் ஆரோக்கிய வாழ்வியலின் ஆதாராமான கிராமங்கள் மற்றும் வீட்டு அடுக்களையிலும் அசுர வேகத்தில் நுழைந்து விட்டது. குழந்தைகளுக்கு பிடித்த உணவு – விலை அதிகம் இருந்தாலும் உடல் நலம் குறித்த கவனமின்றி எந்த நாட்டு உணவாக இருந்தாலும் தருவது சிறந்த பெற்றோராக காட்டும் என்று செயல்படுகின்றனர். இதை எப்போதாவது ஆசைக்கு கொஞ்சமாக தரலாம் ஆனால் கேட்கும் போதெல்லாம் நேரம் காலம் இல்லாமல் தருவது என்பது நம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் விலையாகும். 

    தற்போதைய நவீன வாழ்வியல் மாற்றங்களால் (Lifestyle Changes) குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. ஒரு காலத்தில் பெரியவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட நாள்பட்ட நோய்கள், இன்று தவறான உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் அதிக திரை நேரம் (Screen Time) காரணமாகக் குழந்தைகளுக்கும் ஏற்படுகின்றன.

 .  சிறு பசிக்கு நொறுக்குத்தீனி என்ற பெயரில் பெரும்பாலும் பிஸ்கட் சிப்ஸ் சமோசா முதல் பிட்சா பர்கர் வரை விதவிதமான தின்பண்டங்கள் 

   துரித உணவுகள் (Junk foods), பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு பானங்கள் ஆகியவற்றை அதிகமாக உண்பதாலும், ஓடி ஆடி விளையாடாததாலும் உடலில் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் ஏற்படுகிறது.

   குழந்தை பருவ உடல் பருமன் (Childhood Obesity) இதுவே மற்ற அனைத்து வாழ்வியல் நோய்களுக்கும் முதன்மைக் காரணியாக அமைகிறது.

  உணவில் அதிக அளவு உப்பு மற்றும் கொழுப்பு சேர்த்துக் கொள்வது, மன அழுத்தம் மற்றும் உடல் உழைப்பின்மை காரணமாகச் சிறு வயதிலேயே உயர் இரத்த அழுத்தம் (High BP) மற்றும் பிற்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகரிக்கின்றன.

   முன்பெல்லாம் குழந்தைகளுக்கு மரபணு ரீதியான type 1 Diabetes – நீரிழிவு நோய் மட்டுமே காணப்பட்டது. ஆனால், தற்போதைய மோசமான வாழ்வியல் மாற்றங்களால், இன்சுலின் எதிர்ப்புத் திறன் (Insulin Resistance) ஏற்பட்டு, சிறு வயதிலேயே type 2 Diabetes – நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினித் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதால், குழந்தைகளுக்குக் கிட்டப்பார்வை (Myopia), கண்கள் வறண்டு போதல், கண் எரிச்சல் மற்றும் தலைவலி போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.

  குழந்தைகள் வெயிலில் விளையாடுவதை அறவே தவிர்ப்பதால், உடலில் வைட்டமின் டி (Vitamin D) பற்றாக்குறை ஏற்பட்டு எலும்புகள் பலவீனமடைகின்றன. 

  மேலும் மலச்சிக்கல் முதல் குடல்வால் அழற்சி- appendicitis, பெண் குழந்தைகள் 8-10 வயதிற்குள் பருவமடைதல், ஹார்மோன் பிரச்சினைகள் என்று பாதிக்கப்பட காரணமும் குழந்தை வளர்ப்பு முறையே.

   முந்தைய தலைமுறைகளில் கர்ப்பம் உறுதியானதும் அதை பெரிதாக கொண்டாட்டமோ மற்றவர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்துவது என்றோ இருக்காது. அது நம் வம்சம் விருத்தியாகிறது என்ற இயல்பான மன நிலையில் கடந்து செல்வர். குடும்பத்தினரின் வழிகாட்டல் உணவு பத்தியம் என்று இருக்கும். அதேபோல கணவன் மனைவி வெளிப்படையாக தங்கள் அன்பை அக்கறையை பெரும்பாலும் வெளிப்படுத்த முடியாத நிலையில் ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்தபின் தங்கள் பெற்றோரின் எண்ணங்களை உள்வாங்கி கொள்கின்றனர்.

     வேலை நிமித்தமாகவோ தங்கள் விருப்பத்திற்கு ஏற்பவோ பெற்றோரை விட்டு தனியாக வசிக்கும் அவர்கள் இரவு நேரங்களில் தாமதமாகத் தூங்குவது மற்றும் படுக்கைக்குச் செல்லும் முன் மொபைல் திரைகளைப் பார்ப்பதால் மெலடோனின் ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்பட்டு, தூக்கமின்மை ஏற்படுகிறது. இது நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதுடன் 

ஆரோக்கிய உணவிற்காக மெனக்கெடுவதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இளவயதில் அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாடு, கல்விச் சுமை மற்றும் வெளிப்புற விளையாட்டுகள் இல்லாததால் ஏற்பட்ட தனிமை உணர்வு, மன அழுத்தம் (Stress), பதற்றம் (Anxiety), மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற மனநலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்த ஆழி சூழ் உலகில் மாயை போன்ற  வலைதளமும் குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு வகிக்கிறது.

   அந்த Gen Z குழந்தைகள் பெற்றோர்களாக மாறுகையில் அடுத்த பரிமாணம் உருவாகிறது. அவர்களின் வாழ்வியல் புரிதல் என்பது கரு உருவானதில் இருந்து உணவு உடற்பயிற்சி மருத்துவ ஆலோசனை இயற்கை சூழல் குறிப்பிட்ட நேரத்தில் தூங்குவது என்று ஒருவருக்கொருவர் ஆதரவாக  ஒவ்வொரு நாட்களையும் அழகுற வாழ்வது பாராட்டும் விதமாக இருக்கிறது. அதே போல் அந்த gentle parenting என்பதில் மிக அதிக கவனமாக இருக்கின்றனர். இவர்களும் தங்கள் குழந்தை தங்களைவிட சிறப்பாக வளர வேண்டும் என்று செயல்பட்டாலும் தாங்கள் தொலைத்த‌ சில இயற்கையுடன் இணைந்த அதிக கட்டுப்பாடுகள் இல்லாத வாழ்க்கையை தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்கின்றனர். பிடித்ததை செய்ய ஆதரவும் பிடிக்காததை கட்டாயப்படுத்தாத பெருந்தன்மையும் இவர்களிடம் காணப்படுகின்றது. அதேபோல உணவு மற்றும் பாரம்பரிய வாழ்வியலின் மகத்துவத்தை  புரிந்து அதை தங்கள் குழந்தைகளுக்கு தர முன்னெடுப்பதும் சிறப்பு. 

     ஆனால் சில அதீதங்களால் சில பிரச்சினைகளும் பிரிவுகளும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். சில நேரங்களில் என்னால் தனியாக குழந்தையை வளர்க்க முடியும் என்று குடும்ப அமைப்பில் இருந்து எளிதாக வெளியேறுகின்றனர். ஆனால் அது குழந்தை வளர்ப்பில் – குழந்தையின் உடல் மன நலனை பாதிக்கும் என்று யோசிக்க மறந்து விடுகின்றனர். பொருளாதாரம் நவீன வாழ்வியல் எதுவும் தவறில்லை என்ற சில முரண்பாடுகள் தனிப்பட்ட மனிதராக வெற்றியை அளித்தாலும் பெற்றோரறம் என்ற நிலையில் தோல்வியுறுகின்றனர். முந்தைய காலக்கட்டம் போல் ஒரு சமுதாயத்தில் வசிக்கும்  ஒருவருக்கொருவர் இணைந்து குழந்தைகளை வளர்ப்பது என்பது வாழ்வியல் மாற்றங்களால்  முடியாததாகிறது.

  குழந்தை வளர்ப்பு என்பது சிறப்பு குழந்தைகளை பெற்றவர்களிடம் தனிச்சிறப்புடன் இருக்கிறது. அவர்கள் மற்ற பிள்ளைகளைப் போல் தங்கள் பிள்ளைகளை வளர்க்க பலப் போராட்டங்களை சந்தித்தாலும் நாளும் தீவிரமாகும் தங்கள் மன உறுதியை பிள்ளைகளுக்கும் கற்றுத் தருகின்றனர். கடவுளின் குழந்தைகளை பார்த்துக்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை வலி மறைக்கும் புன்னகையால் மற்றவர்களின் கழிவிரக்கம் தவிர்ப்பது போற்றுதலுக்குரியது.

 “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; நல்லவராவதும் தீயவராவதும் அன்னை(பெற்றோர்) வளர்ப்பதிலே.” கவிஞர் புலமைப்பித்தன் வரிகள் நினைவுக்கூறத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version