உயிர் சுமப்பவளின் கதை

ஏழு கோடி கருமுட்டைகளோடு பிறக்கின்றாள் பெண். அவள் தன் வாழ் நாள் முழுவதும் ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் , மன அளவில் பல்வேறு சவால்களை எதிர் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

*வாழ்க்கைப்பருவங்கள்*

பெண்களின் வாழ்க்கைப் பருவத்தை ஏழாகப்பிரித்துப் பெயர் வைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். அப்பெயர்கள் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை பேரிளம் பெண் என்று நமக்கு மனப்பாடமாகத் தெரியும். ஆனால் ஒவ்வொரு பருவத்திலும் பெண்களின் உடலில் ஏற்படக்கூடிய இயக்குநீர் (ஹார்மோன்) மாற்றங்கள், அதனால் ஏற்படும் சிக்கல்கள் அதற்கான தீர்வுகள் இவை குறித்து போதுமான புரிதல் பெற்றிருக்கிறோமா என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

பிள்ளைத் தனங்கள் நிரம்பியவளாக பேதை, பெதும்பை பருவங்களில் ஓடியாடியவள் மங்கை பருவத்தில் அடியெடுத்து வைக்கையில், அது பூப்பெய்தும் பருவம் என்பதால் ஒருவித அச்சமும் தயக்கமும் மேலோங்கி நிற்கும். ஆண் பிள்ளைகளோடு சரியான விளக்கங்கள் மற்றும் சத்தான உணவும் இக்காலகட்டத்தில் பெரிதும் துணைநிற்கும்.

சங்க இலக்கியங்களில் புறநானூற்றில் ஒரேயொரு பாடலில் பூப்பெய்துதல் பற்றிய தகவல் உள்ளது.

“பாரி பறம்பின் பனிச்சுனை போல காண்டற்கரியளாகி மாண்ட

பெண்மை நிறைந்த பொலிவோடு

மண்ணிய

துகில்விரி கடுப்ப நுடங்கி  தண்ணென அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு மனைச் செறிந்தனளே வாணுதல்”

புறநானூறு( 337)

பெயர் குறிப்பிடப்படாத ஒரு மறக்குடிச் சிற்றரசரின் மகள் பூப்படைந்ததால் பிறரால் காண்பதற்கு அரியவளாக பெண்மை நிரம்பிய பொலிவோடு நன்கு

வெளுத்து மடித்த துகில் போல அகிலின் நறும்புகை கமழும் வீட்டிற்குள்

மனைச் செறிக்கப்பட்டாள் என்ற கருத்தை

இப்பாடல் பதிவு செய்துள்ளது.

ஆதியில் பூப்பெய்துதல் சடங்காகக் கொண்டாடப்பட்டு கால மாற்றத்தில்  ‘தீட்டு’  என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கற்பு என்ற எல்லைக் கோட்டிற்குள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் பெண்ணுக்கு எல்லாக்காலங்களிலும் தொடர்கிறது என்பதே உண்மை.

*மாதவிலக்கும் கருத்தரிப்பும்*

மாதவிலக்கிலிருந்து கருத்தரித்தல் வரை ஒரு பெண்ணின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

பெண்ணின் சினைப்பையில் உள்ள பிரிமார்டியல் ஃபாலிக்கிள் என்ற கருவணுக் கூடுகள் மாதத்திற்கு ஒன்றாக முதிர்ச்சி அடைந்து சினைப்பையின் மேற்பகுதிக்கு வருகின்றன. இந்த கூட்டில் இருந்து ஒரு முதிர்ச்சியடைந்த முட்டைவிடுபடும்.  முட்டையானது கருப்பைக் குழாயின் வெளிப்புறத் திறப்பு வழியாகச் சென்று காத்திருக்கும் போது கருப்பைக் குழாய் அதை மெல்ல மெல்ல உள்ளிழுத்துத்துக் கொள்கிறது. கருப்பைக் குழாய்க்குள் முட்டை உயிரணுவின் வருகைக்காக காத்திருக்கும். உயிரணு வந்தால் அதனோடு இணைந்து கருவுறுதலை உண்டாக்கும். இல்லாவிட்டால் இறந்துவிடும்.   கருமுட்டைகளின் கதை இதுதான். வயிற்றில் கருவளரும் போதும், பேறு காலத்திலும் அதனைத் தொடர்ந்து பாலூட்டும் வேளையிலும் பல்வேறு இயக்குநீர்களின் ஆதிக்கத்தால் ஏற்படும் உடல், மன மாற்றங்களை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

*மாதவிடாய்நிறுத்தம்* (மெனோபாஸ்)

அதிகப்படியான சோர்வு மாதவிடாய் நிறுத்தத்தின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று.

மாதவிடாய் நிறுத்தத்தின் தொடக்கத்தில் அதாவது பெரிமெனோபாஸ் காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.  ஈஸ்ட்ரோஜன் சமநிலையின்மை போன்ற இயக்கநீர் மாற்றங்கள் மூளையின் செயல்பாட்டை பாதிக்கின்றன. இதுகுழப்பம், சோர்வு, மனத்தடைகள், தூக்கமின்மை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு பெண்ணும் தன் இயல்பு வாழ்க்கையின் தொடர் செயல் பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய இக்கட்டான காலகட்டத்தைக் கடந்துவர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

பணியிடங்கள்

பேறுகால விடுப்பு, அதன்பிறகான குழந்தைப் பராமரிப்பு போன்றவற்றை முறையாகத் திட்டமிட வேண்டியது அவசியமாகிறது. பாலின சமத்துவம் முழுமைப் பெறாத சமுதாயத்தில் பெண்கள் போராட்டங்களோடு தான் தங்கள் வாழ்க்கையை நகர்த்த வேண்டியுள்ளது. பூப்பெய்துதல், மாதவிடாய் நிறுத்தம் போன்றவை குறித்து போதுமான விழிப்புணர்வை பெண்கள் மட்டுமன்றிகுடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெறுதல் வேண்டும். உடலாலும் உள்ளத்தாலும் பெண்கள் அல்லலுறுவதை இச்சமுதாயம் உணர்ந்தால் மட்டுமே வன்புணர்வுகள்குறையும். பெண்ணை போகப் பொருளாகக் கருதாமல் சகமனுசியாக பாவிக்கும் நிலை உண்டாகும்.  அப்படியானதொரு நாளுக்காக நாமும் காத்திருப்போம்.

3 thoughts on “உயிர் சுமப்பவளின் கதை

  1. Menstrual cycle in a woman’s life and the need for people to understand it well is well explained in simple terms. 👍

  2. Very useful and educative article. Everyone should know about the changes in women’s life cycle and respect, treat them equally.

    Congrats Vidya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *