தடை, தடம் , பெண்

“பெண்கள்அறிவைவளர்த்தால் – வையம்

பேதமை யற்றிடும் காணீர் “

 பாரதியின் சத்திய வாக்கு இது. பலித்துக் கொண்டிருக்கிறது.

பெருமைப் பட்டுக்கொள்வோம். கரண்டியைத் தூக்கிப்போட்டு கல்வியைக் கைக்கொண்டபோதுதான் இத்தனை அசுர வளர்ச்சி பெண் சமுதாயத்தில். ஆணிவேர் ஆழ ஊனறியிருப்பின் அசையாது நிற்கும் விருட்சத்தின் திடம் ,கல்வி கற்றிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இயல்பாகவே ஒட்டிக் கொள்ளும். அது மட்டுமல்ல ஐந்துக்கும் பத்திற்கும் ஆடவனின் முகம் பார்த்து, மனம் தெரிந்து யாசகனைப் போல தயங்கி நிற்றல் கல்விக்குப் பின் அவளுக்கு அவசியப்படவில்லை. அவளுக்குத்

தானே தனித்தியங்கும் புது உலகு படைக்கவும் தெரியும். அதன் எல்லை விரிவு கொள்ளவும் விவேகம் அறிந்திருப்பாள். அடிமையிலிருந்து மதிப்புமிக்க இடம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அற்புதம் அவள். ஆணோ?  பெண்ணோ?  பதின்ம வயதுக்குமுன் அவர்கள் குழந்தைகள் என்று அழைத்தே கொண்டாடிக் கொஞ்சி மகிழ்வோம். பருவ நிலைக்கு ஏற்ப வளரும் பயிர்களைப் போல் வயது ஏற ஏற ஆண் பெண் இருபாலரிடமும் ஏற்படும் மாற்றங்கள் வெவ்வேறானவை.  உடல் மற்றும் உள்ளம் சார்ந்த வளர்ச்சியோடு படிப்படியாகத் தன்னை மெருகேற்றிவரும் பெண் நாளுக்கொரு சவாலும் பொழுதுக்கொரு தீர்வுமாக வாழ்வின் படிநிலை ஒவ்வொன்றிலும் அவளின்  தடம் பதித்து முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறாள்.

“ பெண் மனம் அறிவு பெறுவதைப் பொறுத்தே மனித சமுதாய‌ம் அறிவும் வளர்ச்சியு‌ம் பெறுகிறது “

:- ஹெரிடனின் இந்தக் கூற்று மெய்ப்பிக்கும் விதமாக,

பூக்கள்,  நிலா,  நதி இப்படியான மென்  அழகியல் சார்ந்தோ அல்லது அன்பு, கருணை, பாசம் போன்ற  மென்னுணர்வோடு மட்டுமே தொடர்பு படுத்திப் பார்க்கப்பட்ட பெண்ணினம் இன்று பேதமை வென்று சாதனை கொண்டுள்ளது.

மாற்றமென்பது பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.வெறும் விடியலின் கணக்காக மட்டும் பொழுதுகள் இருப்பதில்லை.நேரத்திற்கொரு அனுபவங்களால் இனித்துக் கொண்டிருக்கிறது மனித வாழ்வு.

நிலையாக இருத்தல் ரசிக்கப்படுவதில்லை மாறாக ஒதுக்கப்படுகிறது எனலாம்.

ஆம், அப்படித்தான் சமையலறையும், பள்ளியறையும் விட்டு வெளிவர அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுகள் தினமும் ஆயிரம் தற்கொலைகளை தனக்குள் ஏற்படுத்தி வதைத்திருக்கக்கூடும்.

இப்படியான சமூக ஏற்றத்தாழ்வுகளை தகர்த்தெறிய சிறு பொறியாக அவசியமாகப்பட்டது கல்வி.முதன் முதலாக அடக்குமுறைப் பெண்களின் கல்விக் கண்களை திறந்துவிட வேண்டுமென்று  மாற்றத்திற்கு ,  

சாவித்திரி பாய் ஃபுலே அவர்களின் எண்ணத்தில் வித்தாக ,அன்றிலிருந்து பலித்துக்கொண்டிருக்கிறது பாரதியின் கனவுகளும், பாரதிதாசனின் புரட்சியும் நற்றிசை நோக்கி நயம்பட உலகில்.

பொதுவாக மாற்றத்தை நோக்கி சிந்திக்க நினைப்பது, தன் அறியாமையிலிருந்து பெற்றுக் கொண்ட விடுதலை எனலாம்.

நன்மை, தீமை என்ற இரு காரணிகள் கிளைகளாக விரிந்திருக்க எது நம் தேர்வென்று முடிவுசெய்தல் அவசியமாகப்படுகிறது, இருப்பு நிலையில் ஏற்படும் மாற்றம்.

ஒரு நாள் மாலை பள்ளியிலிருந்து வந்த மகள் “ அம்மா,  இங்க பார்த்தியா இது எனக்கு “ அவள் கையில் நான்கு மாதவிடாய் அட்டைகள் அடங்கிய ஒரு பாக்கெட் இருந்தது. அதிர்ச்சியாக இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “ இது என்னன்னு நினைச்சி வாங்கிட்டு வந்திருக்க?  ஏன் பாப்பா “ வெடுக்கென்று அவளிடமிருந்து பிடுங்கி, வீட்டுக்குள் ஒளித்து வைக்கப் போனேன். ஏனென்றால் அவள் அப்போது பூப்பெய்திருக்கவில்லை. அவளுக்கென்ன தெரியும் என்றோ? அல்லது அவளுக்கு இதுபற்றிய விளக்கத்தை என்னால் சொல்ல இயலாது என்பதைவிட வெட்கம் என்பதுதான்  என் நிலை.

“ அய்யய்யே, நீ எந்தக் காலத்துல இருக்க ?” என்ற கேள்வி என்னை நோக்கித் திருப்பப்படும் தான். ஆனாலும் எந்த இரு தலைமுறைகளுக்குள் இடைவெளி உண்டு என்பதை நீங்கள் மறுக்கமுடியுமா? . என் காலத்தில் என் அம்மா “ உங்கள்  மகளின் பாவாடையின் பின்புறத்தில் கரை இருக்கிறது “ என்று பள்ளித் தோழிகளோ அல்லது பக்கத்து வீட்டு மனிதிகளோ சொன்ன பிறகுதான் , பொறுப்பாக மூலையில் ஐந்தேழு  நாட்கள்,  உட்கார வைத்தாளே தவிர “ அடியே, இந்த வயசுலயிருந்து இந்த வயசுக்குள்ள, உன் உடம்புல இந்தந்த மாற்றமெல்லாம் வரும், உன் மார்பு முன்தள்ளும்,  அந்தரங்க உறுப்புகள், கம்புக்கூட்டுல மயிர் வளரும், என்னைக்காவது ஒருநாள் உள் உடுப்புல இரத்தக் கரை தெரிஞ்சதுனா, பயப்படாத,  அதுதான் ஒவ்வொரு பெண்ணினது முக்கியமான வளர்ச்சின்னு  “ சொல்லிக் கொடுத்து வளர்த்தாளாயென்ன? . அப்பாவுக்கு எடுபிடி வேலை செய்யவும்,  மாமியாருக்குக் கரிச்சட்டிக் கழுவிக்கொடுக்க,நெல்லு குத்த, ஆட்டுரல் ஆட்ட என்று அதுதான் அவளது ஒருநாளின் முக்கியமான பணியாக இருக்கும் .மிஞ்சி மிஞ்சிப்போனால் தட்டுல சோற்றைப்போட்டு தானாத் திங்கட்டுமென்று ,  குழந்தைகளின் முன்னால் வைப்பாள் அவ்வளவுதானே. அதுவும் பெண் பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டும்தான் தெரியும், அடுத்தடுத்துத் தான் பெற்றுப்போடும் பிள்ளைகளுக்கு அவளே அம்மாவாகத் தொடர்வாள் என்பதும். இப்படியாக இருந்த அம்மாக்களின் பிள்ளைகளான இன்றைய அம்மாக்களில் மனத்தெளிவு சதவிகிதத்தில் முழுமையடைந்துவிட்டது என்று சொவ்வதற்கில்லை. ஆனால் நல்ல வேளையாக அந்த அம்மாக்களின் பொறுப்பை பள்ளிகள் எடுத்துக்கொண்டுள்ளது வரவேற்கத் தக்கது.

அப்படியொரு முன்னெடுப்பு நிகழ்ந்த நாளில்தான் நாப்கினோடு வந்த மகள் “ இன்று எங்க ஸ்கூல்ல வெளியிலயிருந்து நான்கு  மேடம் வந்தாங்க , உடல் மற்றும் உள்ளத்தில் இந்த வயதில் என்னென்ன மாற்றங்கள் வரும்னு சொன்னாங்க. ஹார்மோன் , கருப்பை, பிறப்புறுப்பு இதெல்லாம் பற்றி அவங்க சொல்லும் போது, அசிங்கமாவும் வெட்கமாகவும் தோணுச்சி.அவஅவ தலையைக் குனிஞ்சிக்கிட்டு சிரிச்சிட்டு இருந்தாளுக, இதெல்லாம் நீங்க நினைச்சி வெட்கப்படுற மாதிரி இல்ல. எல்லாமே நல்லா தெரிஞ்சிக்கிடனும்னு அவங்க விளக்கமா சொன்னபிறகு ,ரொம்ப சாதாரணமா மட்டுமில்ல அவசியமானதுன்னும் புரிஞ்சிக்கிட்டோம் “ கைகளையும் கண்களையும் விரித்து விரித்து அழகாக அவள் பேசப்பேச “ ஷ்ஷப்பாடா, பெரிய பாரம் குறைந்தது  “ என்றுதான் எனக்கு மனதுக்குள் எண்ணத் தோன்றியது.

ஆக இன்றைய பெண் குழந்தைகள் தன் உடல்வளர்ச்சி மாறுபாட்டினை  எளிதாக அணுகுதற்குத் தயாராக இருக்கின்றனர்கள் என்பது மிகச் சரிதான்.

மற்றுமொரு நிகழ்வு.

சமீபத்தில் கண்முன் கண்ட நிகழ்வொன்று தங்கள் பார்வைக்கு.நாற்பது வயது தந்தை திடீரென மாரடைப்பில் இறந்துவிடுகிறார் .பதினாறாவது நாள் காரியத்தில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வயதிருக்கும் தன் அம்மாவின் சுமங்கலிக் கோலம் சீர்குலைக்கப்படுவதைக் கண்ணால் கண்ட பெண்மகள் கதறித் துடிக்கிறாள்.ஆனாலும் பாருங்கள் ஈவு, இரக்கமற்ற செயலாகவே அரங்கேறிக் கொண்டிருக்கிறது அங்கு நடைபெறும் பல சடங்குகளும், சம்பிரதாயங்களும்.

அவை யாவற்றையும் கண்ணுற்ற மகள் ஒரு கட்டத்தில் பெருங்கோபமெடுத்தக் குரலால் அச்செய்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாள்.

ஏற்றுக் கொள்ளவில்லை யாரும். மறுக்கிறார்கள்.வசை பாடுகிறார்கள்.காலங்காலமாக நம்மிடையேயிருக்கும் இந்த வழக்கம் மாற்றுதல் தெய்வக் குற்றமெனச் சொல்லி அவளோடு போராடுகிறார்கள்.ஆனால் எதற்கும் மசியவில்லை மகளின் மனம்.இறுதியில் தன் மகளுக்காக வளையல், பொட்டு, மூக்குத்தி நீக்கும் சடங்குகளுக்கு உடன்பட மறுக்கிறாள் அம்மா.

ஒரு ஆண்மகன் அவ்வளவு உன்னிப்பாக தன் தாயைப்பற்றி நினைத்திருப்பானா? என்பது சந்தேகம்தான் இல்லையா.

வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கையில் புதிது புதிதாகும் மாற்றங்கள் சிலரால் ஏற்கப்படும். ஆனால் பலரால் மறுக்கவும் படக்கூடும்.ஆனாலுமென்ன அக்கறையுள்ளவர்களின் தொடர் முயற்சியில்  அதன் சதவிகிதத்தில் உயர்ந்துகொண்டேதான் இருக்கும்.

வனங்களில் தன் வாழ்வியலைத் தொடங்கியவன். இன்று சிறிது சிறிதாக காடுகளை அழித்து நாடுகளை நட்டு வைத்திருக்கிறான்.இது சரியா? தவறா? என்ற கேள்விகளுக்கு அப்பால் மனிதனின் பகுத்தறிவுப்  பயன்பாடென்றே தேற்றிக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

ஆனாலும் காடு அழித்ததின் பிராயச்சித்திற்காக தன் பிள்ளைகளின் பிறந்தநாளுக்கெல்லாம் மரக்கன்று நடச்சொல்லி பழக்கித் தருகிறார்கள் பல அம்மாக்கள்.

உடலுக்கு நன்மை பயக்கும் இயற்கை விவசாயம்,குடும்பத் தலைவி ஏற்றுக்கொண்டால் மட்டுமே வீட்டில் உள்ளோர்க்கு கிடைக்கப்பெறும்.ஆகவே மாற்றமென்பது அவள் கையில் அமர்ந்திருக்கும் பலாச்சுளை.

வேறுபாடுகளில் தான் தனித்துத் தெரிகிறது அடையாளங்கள்.

ஆதியில் பெண் வழிகாட்டலைப் பின் தொடர்ந்தவன் ஆண்.பின் தலைகீழ் மாற்றமாகி இன்று சரிநிகரான மாறுதலுக்கு பெண் முழுமையாக தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளதோடு மட்டுமில்லாமல் தனித்துவமாகவும் மிளிர்கின்றாள் என்பது எத்தனை பெருமைக்குரிய விடயம்.

மாற்றுச் சிந்தனைகள் ஆணுக்கும் எழலாம். ஆனால் அதனை நடைமுறைப்படுத்துதலில் பெண்ணின் ஆதரவு அவசியமாகப்படுகிறது.

ஒவ்வொரு  வெற்றி மனிதனுக்குள்ளும் மாற்றத்தை உருவாக்குபவள்

மகள், காதலி, மனைவி, அம்மா என்ற அவதாரங்களில்  பெண்தான் இருக்கிறாள்.

செயலாளன் ஆண் என்றாலும்  பின்னிருந்து இயக்குபவள் பெண் .அவள் தரும் அன்பும், ஆதரவும் மட்டுமே தூண்டுகோலாகச் செயல்பட அற்புதங்களாலும், அதிசயங்களாலும் வசீகரித்துக் கொண்டிருக்கிறது இவ்வுலக வாழ்வு.

இல்லறத்தின் ஆணிவேர் பெண்.அவள் நல்லறத்தாலே மாற்றங்களை ஏற்படுத்தி அல்லது ஏற்றுக்கொள்கிறாள்.  அரியப் மனிடப் பிறவியில் புனிதமாய் தன்னையும் காத்து தன் குடும்பத்தையும் ஒழுங்குபடுத்த இயல்பாகவே சிறந்து திகழ்கிறாள் மாற்றத்தின் வித்தான மகத்துவப் பெண்.

ஒரு பெண்ணுக்கு என்ன வேண்டும்?” என்பதுதான் இன்னமும் கண்டறியாத ஒன்றென்று சிக்மண்ட் பிராய்ட் கூறியிருப்பது காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் உண்மை.

தேவையை நோக்கி தேடலை முடுக்கிவிடத் தொடங்கிவிட்டாள் அவள். இனி அவள் வழி அவள் தேர்வு. வானம் வாழ்த்தும் பூமி தாங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *