அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF)

உழைப்புதான் செல்வத்தை உருவாக்குகிறது. அந்த செல்வ உற்பத்தியில் இளைஞர்களின் பங்களிப்பு தான் அதிகம். உரிமைக்கான போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகிப்பவர்களும் இளைஞர்களே. இளைஞர்களின் உழைப்பு சக்தி பயன்படுத்தப்படாத போது வளர்ச்சி, முன்னேற்றத்தில் தடை ஏற்படுகிறது. வரலாறு நெடுகிலும் இளைஞர்களின் பங்களிப்பு மகத்தானது. இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு,தொழில், வணிகம், மருத்துவம், விளையாட்டு, பொழுதுபோக்கு, காதல் மற்றும் கலாச்சார உரிமைகள் அவசியமானவை. இவை மறுக்கப்படும் போது போராட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அரசாங்கங்களும், சமூக பொருளாதார அமைப்பு முறைமைகளும் இளைஞர்களின் நலன் பற்றி அக்கறை இல்லாத போது இளைஞர்கள் ஒன்று திரள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

 நமது முன்னோர்களின் அளவிட முடியாத போராட்டம், அர்ப்பணிப்பு, சிறை, தூக்கு உள்ளிட்ட பெரும் தியாகத்தால் 1947 ஆம் ஆண்டு நமது நாடு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.இந்த விடுதலைப் போராட்டத்தில் மாணவர்களை அணிதிரட்டி பங்கேற்க 1936 ஆம் ஆண்டு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) தொடங்கப்பட்டது.விடுதலைக்குப் பிறகு இளைஞர்களின் உரிமை குரல் எழுப்ப இளைஞர்களுக்கு என்று ஒரு தனி அமைப்பு தேவைப்பட்டது. அதுவரை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும், வட்டார அளவிலும் செயல்பட்டு வந்த பல்வேறு சிறு சிறு இளைஞர் அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு 1959 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்(AIYF)டெல்லியில் தொடங்கப்பட்டது. இதுதான் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் அகில இந்திய அளவிலான இளைஞர் அமைப்பு.

இளைஞர்களை அணி திரட்ட, அரசியல்படுத்த,சாதி, மதவாத சக்திகளின் பிடியில் சிக்காமல் நல்வழிப்படுத்த தொடர்ந்து இளைஞர் பெருமன்றம் பணியாற்றி வருகிறது.

  எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை என்ற முழக்கத்தோடு ஆரம்பத்தில் இருந்தே போராடி வருகிறது. விடுதலைப் போராட்ட நட்சத்திரங்களாக இருக்கிற பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரையும் உலக புரட்சிகர நட்சத்திரமாக விளங்கும் சேகுவேராவையும் ஆதர்ஷ நாயகர்களாக ஏற்றுக் கொண்ட அமைப்புதான் இளைஞர் பெருமன்றம். மாபெரும் திரை கலைஞர் பால்ராஜ் சஹானி, சாரதா மித்ரா, பி.கே.வாசுதேவன் நாயர் (கேரள மாநில முன்னாள் முதலமைச்சர்) போன்ற தலைவர்கள்தான்  இதன் ஆரம்ப கால தலைவர்கள் ஆவார்கள்.

 இந்தியாவில் 1950 களில் மொழி வழி மாநிலம் அமைக்க வலியுறுத்தி நடந்த இயக்கங்களிலும், புதுச்சேரி விடுதலைப் போராட்டத்திலும் இதன் தலைவர்கள் பங்கேற்றவர்கள் ஆவார்கள். அமைப்பாக உருவாக்கப்பட்ட பிறகு கோவா விடுதலை போராட்டத்தில் இளைஞர் பெரு மன்றத்தின் தலைவர்கள் தீவிரமாக பங்கேற்றார்கள். 

18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை என்ற முழக்கத்தை முதன் முதலில் எழுப்பி அதற்காக தொடர்ந்து இயக்கம் நடத்தி வந்த அமைப்பு இளைஞர் பெருமன்றம். இதன் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் பணியாற்றிய தோழர் சி.கே.சந்திரப்பன்தான் முதன் முதலில் நாடாளுமன்றத்தில் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை என்ற தனிநபர் மசோதாவை கொண்டு வந்தார்.

1959-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பஞ்ச காலத்தில் உணவுக்கான போராட்டம் நடைபெற்றது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவு தானியங்களை கைப்பற்றி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. சமூக உணவுக்கூடங்கள் உருவாக்கப்பட்டு மக்களுக்கு உணவு  விநியோகிக்கப்பட்டது. காவல்துறை தடியடி,துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது.இதில் பலர் தங்கள் உயிரை இழந்தனர்.இதில் AIYF முன்னணியில் பங்கேற்றது.

பொதுவாக மக்களின் பிரச்சினைகளுக்காகவும், குறிப்பாக இளைஞர்களின் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுக்கிற அதே நேரத்தில் நேரடியாக மக்கள் பணியிலும் இளைஞர் பெருமன்றம் தன்னை ஈடுபடுத்தி வந்திருக்கிறது. வறட்சி வெள்ளப்பெருக்கு, பூகம்பம் போன்ற பேரிடர் காலங்களிலும், சாதி, மத, இன கலவரங்களின் போதும் AIYF நேரடியாக மக்களிடையே பணியாற்றி வந்திருக்கிறது. 

1960 இல் பஞ்சாபில் ஹோஷியர்பூர் என்ற ஊரில் சுமார் 2000 இளைஞர்களை திரட்டி 12000 அடி நீளமும், 40 அடி அகலமும், 5 அடி ஆழமும் கொண்ட கால்வாய் அமைத்துக் கொடுத்தது. இதனால் சுமார் 4000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. 1962 ல் இந்திய எல்லையில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக இளைஞர்களை அணி திரட்டியது. அப்போது இளைஞர்களிடையே சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டன. அதற்கு எதிராக கருத்தியல் போராட்டம் நடத்தியது. 1970களில் முதன் முதலாக இந்தியா முழுவதும் பல்லாயிரம் இளைஞர்களை திரட்டி டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தியது. இந்தியாவில் இதுதான் முதன்முதலாக நடத்தப்பட்ட இது போன்ற போராட்டமாகும். பிறகுதான் பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் டெல்லி பேரணி என்ற முழக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். 1980 களில் இந்தியாவை காப்போம் இந்தியாவை மாற்றுவோம் என்ற முழக்கத்தோடு தேசம் முழுவதும் பிரச்சார நடை பயணம் நடைபெற்றது. இதுபோன்ற பிரச்சார இயக்கங்கள் தொடர்ந்து தேசம் தழுவிய முறையிலும் மாநில அளவிலும் தொடர்ச்சியாக இயக்கமாக நடத்தி வந்திருக்கிறது இதுவரைக்கும் தேசம் தழுவிய முறையில் பத்துக்கும் மேற்பட்ட பிரச்சார இயக்கங்களையும் மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட பிரச்சார இயக்கங்களையும் நடத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் 1987 ஆம் ஆண்டு இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக “தமிழகத்தை பாலைவனமாக்காதே” என்ற முழக்கத்துடன் மாபெரும் பிரச்சார பயணம் நடைபெற்றது.அதனுடைய நிறைவாக சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இயற்கை வளம் சுற்றுச்சூழல் குறித்து மாபெரும் விழிப்புணர்வை முதன்முதலாக இளைஞர் பெருமன்றம் எழுப்பி இருக்கிறது. இதுபோலவே வன்முறைக்கு எதிரான பிரச்சார இயக்கம், போதை, குடி கலாச்சாரத்திற்கு எதிரான பிரச்சார இயக்கம், குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை என்ற பிரச்சார இயக்கம், எங்கே எனது வேலை என்ற முழக்கத்தோடு சமீபத்தில் நடந்த நான்கு முனையிலிருந்து நடத்தப்பட்ட பிரச்சார இயக்கம் என்று பல இயக்கங்களை நடத்தி இருக்கிறது.

வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு சட்டம் (BNEGA- Bagat Singh National Employment Guarantee Act),தேர்தல் சீர்திருத்தம்,தனியார் துறையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2017 ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் பகத்சிங் நினைவிடம் அமைந்திருக்கிற பஞ்சாப் மாநிலம் உசைனிவாலா வரைக்கும் சுமார் 14,000 கிலோ மீட்டர் 60 நாட்கள் மாபெரும் நெடும் பயண இயக்கம் நடத்தப்பட்டது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றமும் அனைத்திந்திய மாண மாணவர் பெருமன்றமும் இணைந்து இந்த இயக்கத்தை முன்னெடுத்தது. இதுபோன்று இருபதுக்கும் மேற்பட்ட தேசிய அளவிலான இயக்கங்களையும் 50க்கும் மேற்பட்ட மாநில அளவிலான இயக்கங்களையும் நடத்தி இருக்கிறது இளைஞர் பெருமன்றம்.

மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற பல போராட்டங்களில் பல தோழர்களை பலி கொடுத்திருக்கிறது.

1980 களில் பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதம் ஏற்பட்டபோது அதற்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடியது. இதில் 200க்கும் மேற்பட்ட தோழர்கள் களப்பலி ஆனார்கள் அப்போது தன் கண்முன்னே அப்பா அம்மா உள்ளிட்ட தனது குடும்பத்தினர் சுட்டுக் கொல்லப்படுவதை பார்த்து தானும் குண்டடிப்பட்டு உயிர் தப்பிய சிறுமி நரேந்திர சோகல் பின் நாட்களில் இளைஞர் பெருமன்றத்தின் பஞ்சாப் மாநில தலைவர்களில் ஒருவராக பணியாற்றினார்.புதுச்சேரியில் தோழர் கருணாஜோதி வெட்டிக் கொல்லப்பட்டார். திருவாரூர் மாவட்டத்தில் மணலி கருணாகரன் வெட்டிக் கொல்லப்பட்டார். மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடியதற்காக திருநெல்வேலி சுடலைமுத்து வெட்டிக் கொல்லப்பட்டார். கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராடியதற்காக சேலம் சிவக்குமார்,திருவாரூர் ஜெயக்குமார் வெட்டி கொல்லப்பட்டனர். மதவெறியர்களால் கோவை சதீஷ்குமார் வெட்டி கொல்லப்பட்டார். இப்படி நாடு முழுவதும் பல நூறு தோழர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். கல்குவாரி,மணல்குவாரி மாபியாக்களை எதிர்த்து போராடியதற்காக காவல்துறையால் ஒடிசா மாநில செயலாளர் அபகாஷ் சாகு ஐந்து மாதத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். மோடி அரசின் தவறான கொள்கைகளால் வேலையில்லா இளைஞர்கள் பீகாரிலும் உத்தரபிரதேசத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராடியதற்காக அவர்களை தூண்டி விட்டதாக கூறி பீகார் மாநில செயலாளர் தோழர் ரோஷன் குமார் சின்கா UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாகப்பட்டினத்தில் விசாகப்பட்டினம் இரும்பு தொழிற்சாலை நிறுவனத்தை பாதுகாக்க கோரி ஆயிரம் நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் இளைஞர் பெருமன்றம் தொடர்ந்து முன்னணியில் இருந்து போராடி வருகிறது. பிஜேபி மோடி அரசாங்கம் கொண்டுவந்த மூன்று விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் இளைஞர் பெருமன்றம் அவர்களுக்கு ஆதரவாக இருந்ததோடு முன்னணியில் இருந்து பணியாற்றியது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்களை அணிதிரட்டியது. 

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உலக அளவில் இருக்கக்கூடிய உலக ஜனநாயக இளைஞர் பேரவையின்( WFDY-World Federation of Democratic Youth) ஒரு உறுப்பினராக உள்ளது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், யுத்தத்திற்கு எதிராகவும், மதவாத,இனவாத பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகவும், ஜனநாயகம், சோசலிசத்திற்காக பணியாற்றக்கூடிய உலகம் முழுவதும்,நூற்றுக்கும் மேற்பட்ட  நாடுகளில் செயல்பட்டு வரும் 150 க்கும் மேற்பட்ட இளைஞர் மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பாகும் இது.இதன் ஆசியா பசிபிக் பகுதியின்  ஒருங்கிணைப்பாளராக இளைஞர் பெருமன்றம் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறது. 

அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும், பன்னாட்டு ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களும் உலகம் முழுவதும் தங்கு தடை இல்லாமல் கொள்ளையடிப்பதற்கான புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும்,போர்களை எதிர்த்தும் தொடர்ந்து இளைஞர் பெருமன்றம் பணியாற்றி வருகிறது.

 அமெரிக்க தலைமையிலான வல்லாதிக்க நாடுகள் ஈரான், ஈராக்,கியூபா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான், வியட்நாம், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில அவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்திருக்கிறது.அந்த நாட்டு மக்களோடு ஒருமைப்பாட்டுடன் ஆதரவளித்து வருகிறது.

ஈழத் தமிழினப் படுகொலைக்கு எதிராகவும், ஈழத் தமிழர் உரிமைகளுக்கான அவர்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவாகவும் தொடர்ச்சியாக இளைஞர் பெருமன்றம் போராடி இருக்கிறது. தற்போது பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்து வரும் இனப்படுகொலைக்கு எதிராகவும் இயக்கங்களை நடத்தி வருகிறது.

சமூக நீதி கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக ஆரம்பத்திலிருந்தே இளைஞர் பெருமன்றம் ஆதரவாகவும் போராடி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பதற்காகவும் போராடி வருகிறது. 

தேர்தலில் பண ஆதிக்கம்,அராஜகவாதம், சாதி ஆதிக்கம், மதவாதம் இவை இல்லாத உண்மையான ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு தேர்தல் சீர்திருத்தம் மற்றும் விகிதாச்சார தேர்தல் முறை கொண்டு வர வேண்டும் என்று போராடி வருகிறது. அவை மட்டுமல்லாமல் விலையேற்றம், ஊழல் மற்றும் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான இயக்கங்களை நடத்தி வருகிறது.காதல் என்பது இயற்கையானது. ஆனால் இந்திய சமூகத்தின் மிக மோசமான நோயாக  சாதி இருப்பதால்  இங்கு திருமணங்களும் சாதி அமைப்பு முறைக்குள்ளாகவே  நடத்தப்படவேண்டும்  என நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இதனால்  காதல் வயப்பட்டு சாதிமறுப்பு திருணம் செய்பவர்களை  அவர்களது குடும்பத்தினரும் 

சாதிவெறிஅமைப்புகளும்  சாதி ஆணவப்படுகொலை செய்வது  தொடர்ந்து  தமிழ்நாட்டில் நடந்துவருகிறது.

இதனை எதிர்த்து இளைஞர் பெருமன்றம்  வலுவாக போராடிவருவதோடு  காதல் தம்பதிகளுக்கு பாதுகாப்பும் கொடுத்து வருகிறது.

மேலும் சாதி ஆணவப்படுகொலையை தடுத்திட தனிச்சட்டம் இயற்றவேண்டும் எனவும்  போராடிவருகிறது.இளைஞர் பெருமன்றம்  கலை மற்றும் கலாச்சாரங்களை போற்றும் வகையில் இளைய தலைமுறைக்காக கலை இலக்கிய போட்டிகளையும் நடத்துகிறது. மேலும் விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதோடு இளைஞர்  உடல்திறனை மேம்படுத்துவதற்கான உடற்பயிற்சி நிலையங்களை நடத்துவது போன்ற பணிகளிலும் ஈடுபடுகிறது

இந்தியா முழுவதும் சுமார் 300 மாவட்டங்களில் 40 லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள். அனைத்து மாநிலங்களிலும் இளைஞர் பெருமன்ற அமைப்பு இயங்கி வருகிறது.இன்னும் பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.சில மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்களை திரட்ட கூடிய சக்தியோடு இருக்கிறது.

இந்தியாவில் சாதியற்ற மத வேற்றுமை இல்லாத ஒரு சமத்துவ சோசலிச குடியரசை உருவாக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நாம் நடந்து வந்த பாதை அதிகம்.நாம் நடக்க வேண்டிய தூரம் மிக அதிகம். நம்பிக்கையோடு நடப்போம். இறுதி வெற்றி மக்களுக்கே.

இரா.திருமலை, பொதுச்செயலாளர்,AIYF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *