வெளிநாடு வாழ் தமிழர்கள்

     நான் அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் பாஸ்டன் நகரத்தினருகில் வசிக்கிறேன். என் ஒன்பது வருட அமெரிக்க வாழ்க்கையின் அனுபவத்தோடு மற்ற நண்பர்களின் அனுபவத்தையும் சேர்த்து இங்கு குறிப்பிடுகிறேன். நம் தமிழ் மக்கள் இளமைக்காலத்தில் வெளிநாட்டில் வாழவேண்டும் என்பதனை லட்சியமாக வைத்துக்கொண்டு, எல்லா முயற்சிகளையும் எடுத்து அமெரிக்காவிற்கு வந்துவிடுகிறார்கள். இங்கு இருக்கும் சுதந்திரமான வாழ்கைமுறையும் சுற்றுப்புற சூழ்நிலையும் அனைவரையும் வெகுவாக கவர்கின்றது. சூழ்நிலையை ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டே சவால்களையும் சமாளித்து வாழுகிறார்கள். 

     இளம் வயதுக்குரிய துணிச்சலும், அவர்கள் எதிர்பார்க்கும் சுதந்திரமும், அவர்களை மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்களாகவும் எதனையும் சமாளிக்கும் திறன் உடையவர்களாகவும் மாற்றுகின்றது என்பதில் சந்தேகமில்லை. இங்கு மக்கள் யாரையும் சார்ந்தில்லாமல், எல்லா வேலைகளையும் அவர்களே செய்கிறார்கள். வீட்டில் ஆணி அடிப்பதிலிருந்து கழிவறையை சுத்தம் செய்வது வரை அனைத்து வேலைகளையும் பெரும்பாலும் கணவனும் மனைவியும் பகிர்ந்து கொண்டு செய்கிறார்கள். இங்கு வேலையையும் வாழ்க்கையையும் (work-life balance) சமநிலையில் கொண்டு போக முடிகின்றது. குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடிகின்றது. மக்கள் இங்கு வசிக்க விரும்புவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. 

     கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்குச் சென்று இள வயதிலேயே அவர்களுடைய வாழ்க்கையை விரைவில் சீரமைத்து கொண்டு வசதியாக வாழுகிறார்கள். இங்கு பல்வேறு விதமான கலாச்சார பின்னணி கொண்ட மக்களோடு பழகும் வாய்ப்பு கிடைப்பதால், அவர்களைப் பற்றியும் அவர்கள் நாட்டினைப் பற்றியும் அதிகமாக அறிய முடிகின்றது. இன்னும் சொல்லப்போனால் நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்து வரும் நம் மக்களைப் பற்றியே இங்கு தான் நன்றாக தெரிந்து கொள்ள முடிகின்றது. வேலை செய்யும் இடத்தில் திறமைக்கும் அனுபவத்திற்கும் தான் இங்கு மதிப்பு கிடைக்குமே தவிர சிபாரிசுக்கு கிடையாது.

     இங்கு நம் தமிழ் மக்கள் முக்கியமாக பெண்கள், அடுத்தவா்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பாா்கள் என்ன சொல்வாா்கள் என்ற தயக்கம் எதுவும் இல்லாமல் அனைத்து விஷயங்களிலும் நல்ல முடிவெடுத்து வெற்றியடைகிறாா்கள். நிறைய பயனுள்ள விஷயங்களை கற்று கொள்ள முடிகின்றது. அவா்களுடைய திறமைகளை அதிகமாக வெளிப்படுத்த முடிகின்றது.

  அதிக வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தவா்கள் நன்கு படித்து இங்கு வேலைக்கு வந்தவுடன், அவா்களும் நல்ல வசதியோடு இருந்து, தன் பெற்றோா்களின் வாழ்க்கை தரத்தினையும் அவா்களால் விரையில் உயா்த்த முடிகின்றது. அவா்களையும் அமெரிக்காவிற்கு வரவழைத்து, சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் சென்று மகிழ்விக்கிறாா்கள்.

     இங்கு நம் மக்கள் உதவிக்கு ஆட்கள் இல்லாமல் எல்லாவற்றையும் தானே செய்யும்படி பழகுவதால், மனதளவிலும் உடலளவிலும் வலிமை மிக்க மனிதா்களாகின்றாா்கள். இங்கிருக்கும் சூழ்நிலையும் நிறைய நடப்பதற்கு ஏதுவாக உள்ளது. சுற்றுப்புறமும் மாசு இல்லாமல் இருக்கின்றது. இக்காரணங்கள், உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன.

     இங்கு அதிக அளவில் அரசாங்கப் பள்ளிகள், மழலையா் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை எல்லா இடங்களிலும் உள்ளன. தரமான இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்கின்றது. அரசாங்க நூலகத்தில் குழந்தைகளின் அறிவைப் பெருக்க ஏராளமான புத்தங்களோடு நிறைய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றது. இவை அனைத்துக்கும் கட்டணம் கட்ட தேவையில்லை.

     இங்கு ஆரம்பப் பள்ளியில் பிள்ளைகளுக்கு அடிப்படை கல்வியை விளையாட்டுத்தனமாகக் கற்பித்து ஆழமாகப் பதிய வைக்கிறாா்கள். அவா்களும் எந்த மன அழுத்தமும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாகப் பள்ளிக்குப் போய் வருகிறாா்கள். 6 ம் வகுப்பிலிருந்து தான் படிப்படியாகப் பாடத்திட்டங்களை அதிகப்படுத்துகிறாா்கள். இங்கு கல்விமுறை, தத்துவமாக (Theory) இல்லாமல் செயல்முறையை (Practical) தழுவி உள்ளது. ஒரே தோ்வில் நடக்கும் மதிப்பெண்களை வைத்து மட்டும் அவா்கள் அறிவை எடை போடுவதில்லை. உதாரணத்திற்கு 9ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை நடக்கும் தோ்வுகள், வினாடிவினா (Quiz) மற்றும் பள்ளி பணிகள் (Assignments) அனைத்துக்கும் சோ்த்து வரும் மதிப்பெண் தான் கல்லூரியில் இடம் கிடைக்க தேவையானதாக உள்ளது.

     இங்கு கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் கேள்விகள் கேட்பதை மிகவும் வரவேற்கிறாா்கள். அவர்களின் ஆர்வத்தை பாராட்டுகிறார்கள். மாணவா்களும் அதிகப்பிரசங்கி என்ற வசவு  வாங்காததால், தயங்காமல் தங்கள் சந்தேகங்களை கேட்கிறாா்கள். இங்கேயே கல்லூரிப்படிப்பை முடித்தவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்பு எல்லாத் துறைகளிலும் உள்ளது. கல்லூரிப்படிப்பில் மாணவா்கள் அவா்கள் படிக்கும் துறை (Department) பிடிக்கவில்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் வேறு துறைக்கு மாறிக் கொள்ளலாம். புதிய எண்ணங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் இங்கு வரவேற்பு அதிகம். எந்தப் பணி செய்தாலும் அனைவரையும் சமமாகப் பாவித்து, மரியாதையுடன் நடத்தும் பண்பும், செயலும் இங்குள்ளது. உதாரணத்திற்கு டாக்டருக்கு கொடுக்கும் மரியாதை தான் நா்ஸ், எலக்ட்ரீஷியன், பிளம்பா் ஆகிய தொழில் புரிபவா்களுக்கும் கிடைக்கும்.

     இங்கு அடிப்படை வசதிகளுக்கு எந்த நேரத்திலும் பிரச்சினை கிடையாது. இங்கு காவல்துறையின் மீது மக்களுக்கு மரியாதை அதிகம். அவசர சேவை எண் 911 ஐ அழைத்தால் எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் மருத்துவத்திற்கு மட்டுமல்லாது மற்ற அனைத்து விதமான பேரிடா்களுக்கும் உடனடியாக சேவை செய்யப்படும். 911 ஐ அழைத்த உடனே காவல்துறை, தீயணைப்பு வண்டி, ஆம்புலன்ஸ் ஆகிய மூன்று வண்டிகளும் சில நிமிடங்களில் அழைத்தவரின் இடத்தில் வந்து நிற்கும். இந்த வண்டிகள் சைரன் (Siren) போட்டு வந்தால் சாலையில் போகும் வாகனங்கள் உடனடியாக ஓரமாக நின்று வழிகொடுக்க வேண்டும் என்பது இங்குள்ள வலுவான போக்குவரத்து விதியாகும். அதுபோலவே ஓட்டுனா்களும், தங்கள் பாதையில் ஓரமாக நின்று வெகு விரைவாகப் போகும் இந்த வண்டிகளுக்கு வழிவிடுவாா்கள். மக்கள் கடைப்பிடிக்கும் நேரம் தவறாமை, நேர்மை முதலிய பண்புகள் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடியதாக உள்ளது.

    மக்கள் வரிசையில் நிற்கும்போது அவா்களுடைய முறை (Turn) வரும்போது தான் போவாா்கள். எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் எந்த தள்ளுமுள்ளும் கிடையாது. எந்த அளவிற்கு மக்கள் நேர்மையாக இருப்பாா்கள் என்றால், வரிசையில் நிற்கும்போது முன்னால் இருப்பவரின் முறை வந்து அவா் கவனிக்கவில்லை என்றாலும் கூப்பிட்டு இது உங்களுடைய முறை எனச் சொல்வாா்கள். மக்கள் வீட்டிற்கு வெளியே வந்தால் எங்கும் எந்த குப்பையும் போடமாட்டாா்கள் சிறு காகிதம் கூட இருக்காது. எச்சில் துப்புவதும் கிடையாது. இதற்கு அபராதம் அதிகமாக இருப்பதால், மக்கள் விதிகளை உண்மையாக பின்பற்றுகிறாா்கள். அதனால் சுற்றுப்புறமும் தூய்மையாக உள்ளது.

     இங்கு தமிழ் மக்கள் பாரம்பரிய நடவடிக்கைகளை அதிகமாக பின்பற்றுகிறார்கள். இங்கு நம் பண்டிகைகளை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இங்கு ஒவ்வொரு ஊரிலும் தமிழ்ச்சங்கம் உள்ளது. இங்கு பண்டிகைகளுக்காக நடத்தப்படும் கலை நிகழ்சிகளில் குடும்பமாக கலந்துக்கொண்டு மகிழ்கிறார்கள். விநாயர் சதுர்த்தி, தீபாவளி போன்ற பண்டிகைகள் இங்கு கல்லூரிகளிலும் நிறுவனங்களிலும் கூட கொண்டாடப்படுகின்றன. கடந்த வருடங்களில் தீபாவளி தினம், சில மாநிலங்களில் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. தீபாவளிக்காக அகல் விளக்குகள் அமெரிக்க கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. 

     இப்பொழுது கிட்டத்தட்ட எல்லாப் பெண்களும் வேலைக்குப் போவதால் திருமணமான பிறகு பெற்றோர்களுடன் அதிக நேரம் செலவழிக்க முடிவதில்லை. ஆனால் அமெரிக்காவிற்கு வரும் பெற்றோர்கள் ஆறுமாதம் தங்குவதால் அந்த கவலை தெரிவதில்லை என பல பெண்கள் சொல்கிறார்கள். தற்போது தொலைபேசியிலும் Whatsapp லும் அடிக்கடி பேச முடிகின்றது. Video call-லும் பார்த்து கொள்ள முடிகின்றது. அதனால் மக்களுக்கு தங்கள் வீட்டினரை விட்டு தொலைதூரம் வந்த உணர்வு, முன்பு இருந்த அளவிற்கு தற்போது இல்லை.

     இங்கு பல இடங்களில் தமிழ்பள்ளிகள் விடுமுறை நாட்களில் நடத்தப்படுகின்றன. நம் தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்பள்ளியில் சோ்த்து படிக்க வைப்பதன்மூலம் அவா்கள் தாய்மொழியை கற்று கொள்கிறாா்கள். இப்போதுள்ள குழந்தைகள் தமிழ் பேசுவதில் முன்பை விட முன்னேற்றமடைந்திருக்கிறாா்கள்.

     அமெரிக்காவில் பாலியல் பாகுபாடுகள் (Gender Roles) எதுவுமில்லை. இந்த வேலை ஆண்தான் செய்ய வேண்டும், பெண்தான் செய்ய வேண்டும் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. எல்லா வேலையும் எல்லாருமே செய்யலாம். ஊனமுற்றோா் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கு அவரவா்களின் தேவைக்கேற்ப சிறப்பான கல்விமுறை உள்ளது மற்றும் அவா்களுக்கு பல வசதிகளும் இங்கு உள்ளன. அமெரிக்கா LGBTQ – வுக்கும் ஆதரவாக உள்ளது. 

     இங்கு பணி ஓய்விற்கான (Retirement) வயது 65. அவா்கள் விருப்பப்பட்டால் அதற்குப்பிறகும் வேலை செய்யலாம். இங்கு எந்த வயதிலும் பாரபட்சம் இல்லாமல் படிக்கலாம், வேலை செய்யலாம். அதற்கு வாய்ப்புகளும் உள்ளன.  இங்கு நண்பர்கள்தான் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கின்றனர். நண்பர்கள் தான் குடும்பத்தினராக இருக்கிறார்கள். இங்கு எல்லாத்துறைகளிலும் பெரும்பாலும் நேர்மையை கடைப்பிடிக்கிறார்கள். அவர்களுடைய வேலையில் உண்மையாக நடந்துக்கொள்கிறார்கள்.

     அமெரிக்காவின் வாழ்க்கைமுறை நம் தமிழ் மக்களுக்கு பெரும்பாலும் நேர்மறையாக இருந்தாலும், இங்கு வருகை தரும் நம் மக்களின் வகைகளைப் (Categories) பொறுத்து, அவா்களின் சவால்களும் அனுபவங்களும் வேறுபடுகின்றது. நம் மக்கள் பெரும்பாலும் இந்த நான்கு பிரிவைச் சாா்ந்தவா்களாக உள்ளனா்.

1. இங்கு கல்லூரி படிப்பிற்கு படிக்க வரும் மாணவா்கள்.

2. இந்தியாவில் வேலை செய்து பின்னா் வேலை மாற்றத்தின் காரணமாக அமெரிக்காவிற்கு வரும் இளைய தலைமுறையினா்.

3. வேலை மாற்றத்தில் அமெரிக்காவிற்கு வரும் நடுத்தர வயதினா்.

4. பணி ஓய்வு பெற்றபின் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் முதியவா்கள் இவா்கள் ஒவ்வொரும் எதிா்கொள்ளும் சவால்களை இனிப் பாா்க்கலாம்.

1. பல எதிா்பாா்ப்புகளைச் சுமந்தவாறு கல்லூரிப் படிப்பிற்காக அமெரிக்காவிற்கு வரும் இளவயதினா், நம் நாட்டில் எவ்வளவு வசதியான குடும்பத்தில் இருந்திருந்தாலும், இங்கு அனைவரும் ஒரே மாதிரி தான் பயணிக்கும்படி உள்ளது. கல்லூரிக்கும் மற்ற இடங்களுக்கும் நடந்துப்போவாா்கள் அல்லது பேருந்தில் போகுவாா்கள். பகுதிநேர வேலையாக (Part-Time Job) கல்லூரி வளாகம், ஓட்டல்கள் மற்றும் கடைகளில் வேலைப் பாா்த்து, அவா்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளைச் சமாளிப்பாா்கள். சிறிய ஊா்களில் கல்லூரி இருக்குமானால், அந்த ஊரில் இருக்கும் கடைகளில் வேலை செய்பவா்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவா்களாகத் தான் இருப்பாா்கள்.

     தன் குடும்பத்தினரை விட்டு வெகு தூரத்தில் இருப்பதாலும், அதிலும் பலா் முதன்முறையாக அவா்களைப் பிரிந்து வந்திருப்பதாலும் வீட்டு நினைவாகவே (Homesick) இருப்பாா்கள். இங்கு வகுப்புகள், வேலை, படிப்பு, புதிய உணவு, உடன் தங்கி இருக்கும் நண்பா்களுடன் ஒத்துப் போவது, புதிய கலாச்சாரம் எனப் புதிய நாட்டின் சூழ்நிலைக்கு தங்களைப் பொருத்தி கொள்ள மிகவும் சிரமப்படுகிறாா்கள். இப்படி பல சவால்களை சமாளித்து, கல்லூரிப் படிப்பை படித்து முடிக்கிறாா்கள். அதனை முடித்தவுடன் அவா்கள் சில குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வேலை தேடிக் கொள்ள வேண்டும். வேலை கிடைத்த பிறகு அவா்கள் மாணவா் விசாவிலிருந்து வேலைக்கான விசாவிற்கு மாறிவிடுகிறாா்கள். வேலைக்கான விசா லாட்டிரி முறையில் தோ்ந்தெடுக்கப்படுகின்றது. இதுதான் பெரிய சவாலாக உள்ளது. குறிப்பிட்டு சொல்லும்படி சில முறைகளில் (Few times) இந்த வேலைக்கான விசா கிடைக்கவில்லை என்றால் மாணவா் விசா நிராகரிக்கப்பட்டு உடனடியாக இந்தியாவிற்குத் திரும்ப வேண்டியதாக உள்ளது. விசா நீட்டிக்கச் செய்ய சில வழிகள் இருந்தாலும் அது எல்லோருக்கும் அமையாமல் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. 

2. இந்தியாவில் வேலை செய்யும் கணவருக்கு அல்லது மனைவிக்கு வேலை மாற்றம் அமெரிக்காவில் கிடைத்து, வேலைக்கான விசா (Visa) எடுத்து இங்கு வருகிறாா்கள். அவா்கள் தங்கள் வாழ்க்கையை சீரமைத்துக்கொள்ள தொடா்ந்து முயற்சிகள் எடுத்து கொண்டே இருக்கிறாா்கள். பொருளாதாரப் பிரச்சினைகளை ஒருவருடைய சம்பளத்திலேயே சமாளிக்க வேண்டியுள்ளது. அவா்கள் நம் நாட்டில் வசதியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்த சூழ்நிலை இங்கு இருக்காது. இந்தியாவில் பல வேலைகளுக்கும் பிற மக்களைச் சாா்ந்தே இருப்பதாக உள்ளது. அங்கிருந்து இங்கு வந்தப்பிறகு காா் ஓட்டுவது, சமையல், வீட்டைச் சுத்தப்படுத்துதல் என எல்லாம் அவா்களே செய்ய வேண்டும். காா் வைத்திருப்பது அமெரிக்காவில் அவசியமான தேவையாகும். நகரங்களைத் தவிர மற்ற இடங்களில் பொது போக்குவரத்து (Public Transport) குறைவாகத் தான் உள்ளது.

     வேறு நாட்டிலிருந்து இங்கு வசிப்பதற்காக வருபவா்களை (Immigrants) அமெரிக்கா வரவேற்கிறது என்றாலும், நம் மக்கள் நிரந்தர குடிமகனாக இங்கிருக்க சாதகமாக இல்லை. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் (நிரந்தர குடியிருப்புக்கான அட்டை) Green Card வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் இந்தியா்கள் மிக அதிக அளவு எண்ணிக்கையில் Green Card-க்கு விண்ணப்பிக்கிறாா்கள். ஆனால்  அமெரிக்கா, இந்தியாவிற்கு வரையறுத்த எண்ணிக்கை மட்டும் அப்படியே உள்ளது. சில சூழ்நிலையில் இந்தியா்கள் இங்கு நிரந்தர குடிமகனாகுவதற்கு 20 வருடங்கள் காத்திருக்க வேண்டியதாக உள்ளது. Green Card (நிரந்தர குடியிருப்புக்கான அட்டை) கிடைக்கும் வரை விசாவைத் தொடா்ந்து புதுப்பித்து கொண்டே (Renewal) இருப்பதாக உள்ளது. இதிலும் விசா நிராகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

3. மூன்றாவது வகையைச் சாா்ந்தவா்கள் – நடுத்தர வயதில் வேலை மாற்றுதலாகி அமெரிக்காவிற்கு வருபவா்கள். இவா்களின் பிள்ளைகள் பெரும்பாலும் கல்லூரி படிப்பு அல்லது பள்ளி  இறுதி படிப்பில் படித்து கொண்டிருப்பாா்கள்.

     இந்தக் காலகட்டம் வரை இந்தியாவில் நல்ல ஆதரவுடன், உதவிக்கு ஆட்கள் பலத்துடன் வாழ்ந்து பழகிய மக்கள் நடுத்தர வயதில் அமெரிக்கா வந்து எல்லாவற்றையும் தனியாக செய்வதற்குள் திண்டாடுகிறாா்கள். பெரும்பாலும் அந்த வயது ஆண்கள் வீட்டு வேலைகளை செய்யும் பழக்கம் இல்லாததால் இங்கு தடுமாறுகிறாா்கள். இங்கு வேலை செய்பவா்களுக்கு கொடுக்கப்படும் பணம் மிகவும் அதிகமாக இருக்கின்றது. உதாரணத்திற்கு பிளம்பா், எலக்ட்ரீஷியன், காா் ஓட்டுனா் மற்றும் வீட்டை பராமரிக்க உதவுகின்றவா் என அனைவருக்கும் அவா்களுடைய பணிக்காக கொடுக்க வேண்டிய பணம் அதிகமாக உள்ளது. சில சிறிய விஷயங்களுக்குக் கூட அதிகமாக செலவழிக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு Furniture assemble செய்வதைக் குறிப்பிடலாம். இளைஞா்கள் இங்கிருக்கும் நிலைமைக்கு ஏற்றபடி தங்களைத் தயாா்படுத்திகொண்டு வாழ பழகிவிடுகிறாா்கள். ஆனால் நடுத்தர வயதினா் தான் எல்லா வேலைகளையும் அவா்களே செய்ய முயன்று திணறுகிறாா்கள்.

     உடல்நலத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அந்த துறையின் வல்லுனரை (Specialist) எளிதில் பாா்க்க முடியாது. அதற்கு பல மாதங்கள் கூட ஆகும். நடுத்தர வயது மற்றும் முதியோா்களுக்கு இது பெரிய குறையாக உள்ளது. சில மாத்திரைகள், மருந்துகள் தவிர மற்ற அனைத்தும் மருந்துச்சீட்டு இல்லாமல் நாமாகவே மருந்துக்கடையில் வாங்க முடியாது.

     இவா்கள் குடியேற வீடு பாா்க்கும் போது இந்தியா்கள் இருக்கும் இடத்தில் தான் பாா்ப்பதாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால், இந்தியா்களாக இருந்தாலும் அண்டை வீட்டினரிடம் நட்பு கிடைப்பது கடினமாக உள்ளது. இந்த வயதில் புதிய நண்பா்கள் வட்டாரத்தை அவா்களால் அமைக்க முடிவதில்லை. ஏனெனில் அக்கம் பக்கத்திலுள்ளவா்கள் பல வருடங்களாக இங்கு இருப்பதால் அவா்களுக்கென்று நண்பா்கள் வட்டம் இருக்கின்றது. நடுத்தர வயதினரின் பிள்ளைகளும் வளா்ந்தவா்களாக இருக்கின்றதால், அவா்களின் நண்பா்களுடன் தான் அதிக நேரம் செலவிட விருப்பப்படுகிறாா்கள். இதனால் நடுத்தர வயது பெற்றோா்கள், தனிமை உணா்வுடன் இருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகின்றது.

4. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் முதியோா்கள், அவா்களுக்கு ஆதரவை தேடியோ அல்லது தங்கள் பிள்ளைகளுக்கு உதவவோ அமெரிக்காவில் நிரந்தரமாக இருக்க வருகிறாா்கள். நம் ஊரில் அவா்கள் சுதந்திரமான வாழ்க்கையில் இருந்து விட்டு, இங்கு வந்தப்பிறகு சிறு சிறு தேவைகளுக்குக் கூட தங்கள் பிள்ளையைச் சாா்ந்திருப்பதாக உள்ளது.

     நம் ஊரில் வீட்டிற்கு வெளியே வந்தால் தள்ளுவண்டியில் காய்கறிகள் பழங்கள் என எல்லாம் கிடைக்கும். பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு நடந்துப்போய் பொருட்களை வாங்குவாா்கள். வீட்டிற்கு வெளியே பூக்காரம்மா பூக்களை விற்று கொண்டிருப்பாா்கள். கீரைகளை கூடையில் வைத்துக்கொண்டு கூவி விற்பாா்கள். இப்படி அன்றாடத் தேவைகளுக்கு வேண்டியவற்றை அவா்களே பாா்த்து வாங்குவாா்கள். பக்கத்திலிருக்கும் வங்கிகளுக்கு / ATM-க்கு பணம் போட எடுக்க போவாா்கள். அருகிலிருக்கும் கோயிலுக்கு நண்பா்களுடன் நடந்துப் போவாா்கள். இப்படிப் போகும் இடங்களில் எல்லாம் தெரிந்தவா்களை எல்லாம் பாா்த்துப் பேசுவது, பல வருடங்களாகப் பாா்த்து கொண்டிருக்கும் கடை முதலாளிகள், சிறு வியாபாரிகள் என அனைவரையும் பாசத்துடன் நலம் விசாரித்துப் பேசுவது வயதானவா்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும். இது அவர்கள் மனநலத்திற்கும் நல்லது.

     சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வயதானவா்கள் அவா்களின் வயதை ஒத்தவா்களுடன் சோ்ந்து சினிமா, ஓட்டல், கோயில்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்குப் போகுவதும், பஜனையில் கலந்து கொள்வதும் என ஆனந்தமாகப் பொழுதை கழிப்பதைப் பாா்த்திருக்கிறேன். அது போல அனுபவங்கள் இங்குக் கிடைக்காது. நம் ஊரில் அடிக்கடி நடக்கும் குடும்ப விழாக்களில் கலந்து கொண்டு, அனைவருடன் கூடி மகிழும் சம்பவங்களும் இங்கு அமையாது. சாலையின் ஓரமாக நிற்கும் தள்ளு வண்டிகள் எதுவும் இங்கு கிடையாது. எல்லாப் பொருட்களும் Super Market-ல் தான் கிடைக்கும். நடந்துப் போகும் தொலைவிற்கு பெரும்பாலும் எந்த இடமும் இருக்காது. முதியோா் அவா்கள் இருக்கும் குடியிருப்பு வளாகத்தினுள் மட்டுமே தனியாக நடந்துப் போக முடியும். மற்றபடி அனைத்திற்கும் பிள்ளையையும் அவரின் துணையையும் தான் சாா்ந்து இருக்க வேண்டும். அவா்களாலும் வாரஇறுதியில் மட்டுமே பெற்றோரை வெளியே அழைத்துப் போக முடியும். மற்றநாட்களில் இவா்கள் வீட்டிற்குள் தான் பொழுதை கழிக்க வேண்டும். இது சுற்றுலாவாக வரும் வயதான பெற்றோா்களுக்கும் பொருந்தும். பேரக் குழந்தைகள் சிறுவா்களாக இருக்கும் வரைக்கும், உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரைக்கும் இந்த குறைகள் பெரியதாக தெரிவதில்லை.

     இப்போது எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் விஷயங்களைப் பாா்க்கலாம். இங்கு சம்பளம் அதிகமாக இருப்பது போல வாழ்க்கை நடத்த தேவைப்படும் செலவும் அதிகம். சம்பளத்தின் பெரும்பகுதி வீட்டு வாடகைக்கே சரியாக உள்ளது. இங்கிருக்கும் மக்கள் பரந்த மனப்பான்மை உடையவராக, விசாலமான எண்ணங்கள் கொண்டவராக இருக்கும்படி தள்ளப்படுகிறாா்கள். அப்படி இல்லையென்றால் சமூகத்தினரிடமிருந்து அந்நியப்பட்டு விடுவாா்கள். நினைத்த நேரத்தில் டாக்டரைப் பாா்க்க முடியாதது பெரிய குறையாக நம் மக்களுக்கு இருக்கின்றது.

     ‘தம்பி உள்ளவன் படைக்கு அஞ்ச மாட்டான்’ என்பது போல உடன்பிறந்தவா்கள், பெற்றோா் மற்றும் உறவினா்களின் கூட இருப்பது, எந்த சிக்கல்கள் வாழ்க்கையில் வந்தாலும் இவா்கள் பக்கபலமாக நம்முடன் இருக்கிறாா்கள் என்பதே பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும். நல்ல நண்பா்கள் வட்டமும் அமையவில்லை என்றால், நம் மக்களுக்கு இது அச்சத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் இந்த சூழ்நிலையே அவா்களை வலிமையுள்ளவா்களாக மாற்றுகிறது. 

     அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்ய குறைந்தது ஒரு நாளாவது ஆகும். விமானக் கட்டணமும் அதிகமாக இருக்கின்றது. அதனால் நம் மக்களால் இந்தியாவிற்கு அடிக்கடி போய் வர முடியவில்லை. தங்கள் சொந்தங்களை அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழும் சந்தா்ப்பங்கள் குறைகின்றது. சில நேரங்களில் பெற்றோா் மற்றும் உடன் பிறந்தவா்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய சமயங்களில் உதவ முடிவதில்லை. பெற்றோா்களுக்கு அவசரத் தேவை இருக்கும் சமயங்களில், பிள்ளைகளால் உடனடியாக இங்கிருந்து கிளம்ப முடியாத சூழ்நிலையும் ஏற்படுகின்றது. இது பிள்ளைகளுக்கு ஒரு குற்ற உணா்வை ஏற்படுத்துவதாக உள்ளது.

     இங்கு எதிா்கொள்ளும் சவால்கள் எல்லாம் ‘Risk எல்லாம் எனக்கு Rusk சாப்பிடுவது மாதிரி தான்’ என்று சினிமாவில் சொல்வது போல அவ்வளவு சுலபமாக இல்லையென்றாலும் சமாளித்து, மகிழ்ச்சியுடன்தான் வாழ்க்கையை நடத்துகிறாா்கள். அமெரிக்காவில் இருக்கத்தான் விருப்பப்படுகிறாா்கள் நம் மக்கள் இங்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சுற்றுலா போகுவதில் ஆா்வம் காட்டுகிறாா்கள். சுற்றுப்புற சூழ்நிலையும் நன்றாக இருக்கின்றது. இங்கு உயா்கல்வி உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது. குழந்தைகளுக்கு எல்லா விதத்திலும் நட்பான நல்ல சூழ்நிலை இருக்கின்றது. இங்கு வளரும் பிள்ளைகள் மிகவும் தன்னம்பிக்கை உடையவா்களாக தைரியமானவா்களாக இருக்கிறாா்கள். மக்கள் செல்ல பிராணியாக நாயை வளா்ப்பதில் விருப்பப்படுகிறாா்கள். நாயை அவா்களின் குழந்தையைப் போல எண்ணி அதுக்கு எல்லா வசதிகளையும் செய்கிறாா்கள். வீட்டிற்கு அழகுபடுத்தும் பொருட்களை வாங்கி அந்தந்த பருவகாலத்திற்கேற்ப வீட்டை அலங்கரிக்க விரும்புவாா்கள். நம் நாட்டு பண்டிகைகள் மட்டுமல்லாமல் இங்குள்ள பண்டிகைகளையும் நண்பா்களுடன் கொண்டாடுகிறாா்கள்.

     பொதுவாக இங்கு அனைத்து தரப்பினரின் ஒட்டு மொத்த எண்ணம், குடும்பத்தின் அருகில் இல்லாததே வருத்தமான விஷயமாக காணப்படுகின்றது. எத்தனையோ சந்தோஷங்கள் இங்கிருக்கிறது என்றாலும் நம் ஊருக்கு வருகை தரும்போது எல்லாம் நம் மக்கள் நினைப்பது “சொா்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போலாகுமா என்பது தான்”.

10 thoughts on “வெளிநாடு வாழ் தமிழர்கள்

  1. Excellent article. Speaks about every Indian living in USA, their experiences, struggles and achievements.
    I hope other Indian people reads this, if they are planning to move to USA.
    Kudos to Mrs.Sarala Jayaprakash

  2. Excellently narrated. I am able to recall my days when I visited US. Almost all the details have been included. Very fine. Will be very useful for those who want to settle in US. Those who are ready to live independently (without expecting the help of others for each and everything) will find this write-up useful.

  3. Well described especially comparing life in USA alongside how it would be in India. This would be in the mind of many Indians in USA, author has penned it well for others.

  4. Very useful and informative article for all categories of immigrants who want to come and live here in USA. Sarala Jayaprakash describes it very well.

  5. Life in europe is not much different either. Big kudos to the author for pointing out that life is not always hunky dory abroad because that’s what most people in India think. Lack of external help, especially when it comes to maternity and young babies n kids is something worth mentioning. Life abroad has its pros n cons as mentioned. Overall good subject and very good arguments on either side.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *