“விமர்சனங்கள் அறிவுப்பூர்வமாக இருக்கமுடியும். ஆனால் வாய்மொழி தாக்குதல்களால் வேற்று ஆபாசமாக மாறுகின்றன.”
– இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன்
கடந்த சில ஆண்டுகளாக வெற்றி தோல்வி எனக் கலவையாக எதிர்கொண்டு வருகிறார் இயக்குனர் பி. உன்னிகிருஷ்ணன். விஷால் மேனனுக்கு அளித்த பேட்டியில் தனது தோல்விகளையும் அதன் கூடவே எதிர்கொண்டுவரும் விமர்சனங்களையும் மனதார ஏற்றுக்கொள்வதாக சொல்கிறார். குறிப்பாக மோகன்லால் நடிப்பில் இவர் இயக்கி, சினிமா விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற ஆராட்டு (2022) படத்தைக் குறிப்பிடுகிறார்.
‘என் படங்களோட தோல்விக்கு முழுபொறுப்பு நான் மட்டும்தான். வேறு யாரும் கிடையாது,’ என்கிறார் உன்னிகிருஷ்ணன். ‘தவறுகளோடுதான் நாம் பயணம் பண்ண வேண்டியிருக்கு. விமர்சனத்தை பற்றியோ சமூக ஊடகங்கள் பற்றியோ நான் கவலைப்படலை. ஆனா அதுல கொஞ்சம் ஜனநாயகமும் நாகரிகமும் இருக்கணும்னு நினைக்கிறேன். விமர்சனத்தை எதிர்கொள்கிற காரணத்தால நான் பெரிய மனுஷன்னு அர்த்தம் ஆகிடாது.’
1999ல் வெளிவந்த டி.கே. ராஜீவ் குமாரின் ஜலமர்மரம் படத்துக்கு திரைக்கதை உருவாக்கியதிலிருந்து உன்னிகிருஷ்ணனின் திரைப்பயணம் தொடங்கியது. அப்படத்துக்காக சிறந்த திரைக்கதைக்கான கேரள அரசின் திரைப்பட விருதை உன்னிகிருஷ்ணன் பெற்றார். அங்கிருந்து ஆரம்பித்து பல வெற்றிகளைக் கடந்து வந்தவர், மூத்த இயக்குனர்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகளைப் பற்றி மனம் திறக்கிறார். இணையத்தில் அதிகமான வெளிச்சம் கிடைக்கக்கூடிய காரணத்தால் வன்மத்தோடு மற்றவர்களை தாக்கும் நபர்களையும் எதிர்க்கிறார். ‘உங்களோட உண்மையான அடையாளத்தை சமூக ஊடகங்கள் காட்டிக் கொடுக்காது. இதுவும் ஒரு விதத்தில் கொரில்லா யுத்தம் மாதிரிதான். நீங்க யாரைப் பற்றி, என்ன வேண்டுமானாலும் பேசலாம். சமூக ஊடகங்களுக்கு உண்டான வரமும் சாபமும் இதுதான். வெறுப்பைக் காட்டாதவரை நாம யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். விமர்சனத்திலிருந்தும் உங்களை விமர்சிப்பவரிடமிருந்தும் நீங்க நிறைய கற்றுக்கொள்ளலாம். அப்போ அது ஜனநாயக கருத்துப் பரிமாற்றமா ஆகிடுது. ஆனா அதுவே உருவ கேலியாகவோ, வாய்மொழி தாக்குதலாகவோ இருந்தா அந்த விமர்சனம் வெற்று ஆபாசமாகத்தான் இருக்கும்.’
இயக்குனரும் திரைக்கதை ஆசிரியருமான உன்னிகிருஷ்ணன் சர்ச்சைகளுக்கு புதியவர் அல்ல. அவருக்கு சற்றும் தொடர்பில்லாத விஷயங்களுக்காக பலமுறை சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். ‘யாருக்கு எதிராவும் செயல்படுவது என் வேலை கிடையாது,’ என்கிறார் இவர். ‘ நான் அப்படிப்பட்டவனா இருந்திருந்தா ஆராட்டு வெளிவந்த சமயத்திலேயே அதை காண்பித்திருப்பேன். படத்தோட தயாரிப்பாளர்களுக்கு ‘ஆடியன்ஸ் ரிவியூஸ்’ சம்பந்தமா சில பிரச்சனை இருந்தது. அதனால அதை தடுத்தாங்க. எனக்கோ என் நிறுவனத்துக்கோ அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. இதே மாதிரிதான் என்னோட அடுத்த படம் கிறிஸ்டோபர் வெளிவந்த சமயத்திலும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தில் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச்சு எழுந்தது. பிரச்சனை என்னவோ தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும்தான் ஆனால் மொத்த பழியும் விழுந்தது என் மேல,’ என்கிறார் உன்னிகிருஷ்ணன்.
பேட்டி முழுக்க விமர்சனம் தொடர்பாக பேசும் போதெல்லாம் ‘ஜனநாயகம்’ என்ற சொல்லை இவர் அடிக்கடி பயன்படுத்துகிறார். ‘அதையெல்லாம் கேட்டு நான் ஏன் உணர்ச்சிவசப்படணும்? விமர்சனங்கள் அறிவுபூர்வமா, கூர்மையா அதேசமயம் ஜனநாயகப்பூர்வமாகவும் இருக்கணும்,’ என்று சிறு புன்னகையோடு முடிக்கிறார் உன்னிகிருஷ்ணன்.
************
அங்கமாலி டைரிஸின் கிளைமாக்ஸ் காட்சியை ஒரே டேக்கில் படமாக்கியது எப்படி?
– இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி
அங்கமாலி டைரிஸுக்கு வயது ஆறு. அட்டகாசமான அந்த கிளைமாக்ஸ் காட்சி பற்றிய நினைவுகளை அதன் இயக்குனர் பகிர்ந்து கொள்கிறார்.
மலையாள சினிமாவின் தற்போதைய ‘ட்ரெண்ட்’ – இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி! இவரின் சமீபத்திய படம் நண்பகல் நேரத்து மயக்கம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பலத்த வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஓடிடியில் வெளிவந்தது முதலே இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் முக்கியக் காட்சிகள் பற்றிய விளக்கங்களை சமூக வலைதளங்களில் ஆராய்ந்து வருகிறார்கள். இவரின் அங்கமாலி டைரிஸ் (2017) வெளிவந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட இந்த வாரம் பெல்லிசேரியின் ரசிகர்களுக்கு டபுள் உற்சாகம்.
எதார்த்தமான கதைக்களம், பார்வையாளர்களைக் கட்டிப்போட்ட காட்சி அமைப்புகள் எனப் பல காரணங்களுக்காக இந்த படம் கொண்டாடப்பட்டாலும், 11 நிமிடங்கள் ஓடும் இதன் பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சியை ஒரே டேக்கில் எடுத்ததுதான் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, அந்தக் கிளைமாக்ஸ் காட்சியைச் சாதித்தது குறித்த அனுபவங்களைப் பகிர்கிறார் பெல்லிசேரி.
காட்சியின் எதார்த்தத்தில் பார்வையாளர்களை சுண்டியிழுப்பதற்காக ட்ராலி கேமராவைப் பயன்படுத்தி கிளைமாக்ஸின் ஆரம்பக் கட்டங்களை வேண்டுமென்றே லாங் டேக்காக எடுத்திருக்கிறார். “சீனோட ஆரம்பத்துல கவனிச்சீங்கன்னா ஒரு வண்டியிலிருந்து பட்டாசுகளை எடுத்து வைப்பாங்க. வழக்கமா சர்ச் திருவிழாக்களின்போது அங்கமாலியில இருக்குற கிளப்புகள் வானவேடிக்கைக்கு ஏற்பாடு பண்ணுவாங்க. அந்த சீன்ல வானவேடிக்கை ஆரம்பிக்கப் போகுதுன்னு தெரியும். லாங் டேக்கா எடுத்ததற்கு காரணம் பார்க்கிற ஆடியன்ஸ்க்கு சினிமா பாக்குற ஃபீல் வரக்கூடாது, அதுக்கு பதிலா சீனுக்குள்ள அவங்களை கவர்ந்திழுக்கணும்.”
நடிகர்கள், ஒளிப்பதிவாளர் என சம்பந்தப்பட்ட அனைவரும் காலையிலிருந்து பலமுறை ஒத்திகை பார்த்திருந்தாலும், உண்மையான சவால் அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் அதைப் படமாக்குவதில் இருந்தது. “நாங்க ரிகர்சல் பார்த்தது எல்லாமே பகல் டைம்ல. எங்களோட ஆக்டர்ஸ், கேமராமேன் அப்புறம் டீம்ல இன்னும் சில முக்கியமான பேர் மட்டும் இருந்தாங்க. காலை நேரத்துல தெருக்களில் ஆள் நடமாட்டமே இல்லை. நாங்களும் ஒட்டுமொத்த சீனையும் பிளான் பண்ணிட்டோம்.” என்கிறார் இயக்குனர் பெல்லிசேரி. அதன் பிறகு நடிகர்களை வைத்து அனைத்தையும் மெருகேற்றி இருக்கிறார்கள். “ரிகர்சல் பண்ணும் போது மக்கள் கூட்டம் இல்லை, அதனால கூட்டத்தோடு எடுக்கும் போது எப்படி வரும்னு எங்களுக்கு தெரியாது. அப்படியேதான் பிராக்டிஸ் பண்ணோம். கேமரா மூவ்மண்ட்டுக்காக சாதாரண மொபைல் கேமராவைத்தான் யூஸ் பண்ணோம். ஆனா சாயந்திரம் கூட்டம் வந்தப்போ ஒட்டுமொத்த சீனோட பாரம் எங்களுக்கு புரிஞ்சது. பிராக்டிஸ் பண்ணதை விட பல மடங்கு ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தோம்.”
கதாபாத்திரங்கள் தாறுமாறான அடிதடிக்குள் முழுமையாக இறங்குவதற்கு முன்பு நடக்கும் நிகழ்வுகளில் ஒரு தெளிவான காட்சியோட்டம் இருக்கிறது. காட்சியின் தொனி மாறுகின்ற அந்தக் கட்டத்தைப் படமாக்கும்போது மிகுந்த சிரமத்துக்கு உள்ளானதாக லிஜோ சொல்கிறார். அத்தனை அமளிதுமளிக்கு மத்தியில் அனைத்து கதாபாத்திரங்களையும் கேமரா ஃபிரேமுக்குள் கொண்டுவர படாதபாடுபட்டிருக்கிறார்கள். “முதல் பத்து நிமிஷம் சாதாரணமா போகும். ஆனா திடீர்னு அடிதடி ஆரம்பிச்சு எல்லாரும் ஓடுவாங்க. இருப்பதிலேயே கஷ்டமான விஷயம் இந்த இடம்தான், காரணம் கதாபாத்திரங்களை ஃபாலோ பண்ணனும். யாரும் ஃபிரேமை விட்டு வெளியே போயிடக்கூடாது. இதுக்கு நடுவுல கூட்டம் வரும் போகும். ஒரு இடத்துல பாத்தீங்கன்னா கேமரா யாரு மேலயோ மோதி டிஸ்டர்ப் ஆகியிருக்கும். கேமராவை நடுவுல கட்டி தொங்க விட்டிருந்தோம். எதுகூட மோதினாலும் அது திரும்ப பேலன்ஸ் ஆகுறதுக்கு கொஞ்சநேரம் ஆகும்.”
அந்த சமயத்தில் காட்சி படமாக்கப்பட்டவிதம் திருப்தியை கொடுத்திருந்தாலும், இப்போது கூட அதில் சில குறைகளைக் காண்பதாக.இயக்குனர் தெரிவிக்கிறார். “இப்போ நிறைய குறைகள் கண்ணுக்கு தெரியுது. ஆனா அன்றைய நாள்ல எங்களால் செய்ய முடிஞ்சது இதுதான்.” என்று லிஜோ ஒப்புக்கொள்கிறார். பிறகு மிக்க மகிழ்ச்சியோடு சொல்லியிருக்கிறார், “கிரேட், டேக் ஓக்கேன்னு நினைக்கிறேன்.”
************
உதவிய இணைப்புக்கள்:
- https://www.filmcompanion.in/interviews/malayalam-interview/criticism-can-be-insightful-but-with-verbal-attacks-it-becomes-pure-abuse-b-unnikrishnan-aaraattu-christopher-mammootty-mohanlal
- https://www.filmcompanion.in/interviews/malayalam-interview/lijo-jose-pellissery-on-how-he-filmed-the-single-take-climax-of-angamaly-diaries-netflix-malayalam-films