கொத்தடிமை தொழிலாளர் முறை அல்லது கடன் அடிமைத்தன முறை என்பது இந்தியாவில் பரவலாகக் காணப்படும் நவீன அடிமை முறையின் ஒரு வடிவம்.இதில், ஒரு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, தனிநபர்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்கோ ஊதியமே இல்லாமலோ வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சட்டத்தின் மூலம் இது அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்டிருந்தாலும், வறுமை, சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் சட்ட அமலாக்கத்தின் பலவீனம் போன்ற சமூகப் பொருளாதாரக் காரணிகளால் இம்முறை இன்றும் தொடர்ந்து நிலவி வருகிறது.
2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 10.1 (குழந்தைத் தொழிலாளர் மற்றும் பிணைத் தொழிலாளர் )மில்லியன் மக்கள் நவீன அடிமைத்தனத்தில் உள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.இது உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
கொத்தடிமைத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர், வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட பட்டியல் சாதியினர் (தலித்துகள்), பட்டியல் பழங்குடியினர் (ஆதிவாசிகள்) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் (ஓபிசி) சேர்ந்தவர்கள் ஆவர்.
பாரம்பரியமாக விவசாயத்துடன் தொடர்புடையதாக இருந்தபோதிலும், கொத்தடிமை முறை தற்போது செங்கல் சூளைகள், கல் குவாரிகள், நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் வீட்டு வேலைகள் போன்ற அமைப்புசாரா நகர்ப்புற மற்றும் கிராமப்புறத் துறைகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
இந்தியாவில் உள்ள குழந்தைகள், செங்கல் சூளைகள், கல் குவாரிகள், ஆடை உற்பத்தி மற்றும் வணிக ரீதியான பாலியல் சுரண்டல் உள்ளிட்ட—சில சமயங்களில் மனிதக் கடத்தலின் விளைவாக ஏற்படும்—மிகவும் மோசமான வடிவங்களிலான குழந்தைத் தொழிலாளர் முறைக்கு ஆளாகின்றனர்.
குழந்தைத் தொழிலாளர்களின் பெரும்பகுதியினர் (சுமார் 70%) விவசாயத் துறையிலேயே ஈடுபட்டுள்ளனர்; இதில் பண்ணைகள் மற்றும் தோட்டங்களில் செய்யப்படும் பணிகளும் அடங்கும். உற்பத்தித் துறை (ஆடை தயாரிப்பு, செங்கல் சூளைகள், கம்பளம் நெய்தல் போன்றவை), வீட்டு வேலைகள் மற்றும் தெருவோரப் பணிகள் ஆகியவை குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் காணப்படும் பிற முக்கியத் துறைகளாகும்.
இந்தச் சூழலில் மான்விழி ரஞ்சித் அவர்கள் உற்பத்தித் துறையான ஆடை தயாரிப்புக்குத் தேவையான பஞ்சு உற்பத்திக்கான மூலமாக விளங்குகின்ற பருத்திக் காட்டில் நிகழ்கிற கொத்தடிமை முறை (Slavery) ,பிணை தொழிலாளர் முறை (Bonded Labour ),குழந்தை தொழிலாளர் முறை (Child Labour ) ஆகிய சுரண்டல்களைத் தமது “வண்டுகள் “நாவல் மூலமாகத் தமிழ் நவீன இலக்கியப் பரப்பிற்குப் பங்களித்துள்ளார்.
லெச்சுமி என்ற மாதர் கதாபாத்திரம் தனது குடும்பத்தைப் பராமரிக்க ,பெண் குழந்தைகளைக் கரைசேர்க்கப் பாடுபடும் துயர வாழ்வே கதைக்களம் .நிலமற்ற ஏழைகள் நிலமுடையோரின் வயல்களில் கூலிக்கு மாரடித்துத் தம் அன்றாடங்களைப் பூர்த்தி செய்துகொள்ளும் அவல நிலை இன்னும் தொடரும் நவீன காலமே நாவலின் காலம் .
வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் பருத்திச் செடிகளில் பூச்சிகள் அல்லது வண்டுகளால் மகரந்தச் சேர்க்கை இயற்கையாக நிகழும் .இங்கே விரைவான மற்றும் அதிக அளவிலான உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் பருத்தி மொக்குகளை மெல்லிய விரல்களைக் கொண்ட குழந்தைகளின் விரல்களால் அவிழச் செய்து மகரந்தத்தை எடுத்து வேறு பருத்திப் பூவில் தடவும் செயற்கை மகரந்தச் சேர்க்கையைச் செய்யும் தொழிலை மேற்கொள்ள கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் நிலையை பருத்திக்காட்டின் நில உடைமையாளர் மீனாட்சி மேற்கொள்கிறார் (இவரும் மாதரே).
இச்செயல்பாட்டில் பங்குபெறும் குழந்தைகளின் அவல வாழ்வும் .பாலியல் வன்முறையும்,அதனால் பாதிக்கப்படும் எளிய பெண்ணின் குமுறல்களும் நாவல் நெடுகிலும் விரவியுள்ளன.திக்கற்றவர்க்குத் தெய்வம் துணை.இங்கே பொடறாயி என்ற குல தெய்வம் கதை மாந்தர்களை ஆற்றுப்படுத்துகிறார்.குறிப்பாக லெச்சுமியை.நாட்டுப்புற சிறு தெய்வ வழிபாடு ,வேண்டுதல் நேர்த்திக் கடன்,நாட்டுப்புற பாட்டி வைத்திய முறைகள் போன்றவை குறைந்த அளவே என்றாலும் நேர்த்தியாகச் சொல்லப்படிருக்கின்றன.
இத்துயர வாழ்விலும் பருத்திக்காட்டில் சிறுமிகளுக்கிடையே நிகழும் பகடிப் பேச்சுகளும் குழந்தைமையான உரையாடல்களும் வாசகருக்கு ஒரு மெல்லிய ஆசுவாசத்தைத் தரலாம்.அதிகாலையில் பருத்திக் காட்டுக்குச் செல்லும் வழியிலும் ,பணி முடிந்து குடிசைக்குத் திரும்பும் போதும் அவர்களுக்கேயான சின்னஞ் சிறு சந்தோஷங்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் .அவை கோணக்கா பொறுக்குதல் ,கொய்யாக்காய்ப் பறித்தல் நீராடுதல் போன்ற எளிய விஷயங்களால் நிறைவேறுகின்றன .
தன் மகளைப் பாலியல் வன்முறை செய்த முதலாளி அதற்கு ஈடாக வெறும் பத்தாயிரத்தைக் கொடுக்கும்போது அதைப் பெற்றுக்கொள்ளும் தாயைப் பார்க்கின் நமக்குக் கோபம் வருகிறது இருவரின் மீதும் .ஆனால் அப்படி நடக்கத்தானே செய்கிறது .
எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைமையில் வறுமை தலைவிரித்தாடும் குடும்பங்களில் குழந்தைகள் அதிகளவில் பிறப்பதும் அவர்களைப் பராமரிக்க பெற்றோர்கள் அவதியுறுவதும் இப்போதும் கண்கூடு.அதிலும் கணவன் ஊதாரியாக இருந்துவிட்டால் தாயின் நிலை அந்தோ பரிதாபம் .அத்தகய நிலையிலுள்ள குடும்பத்தைப் பராமரிக்க தனியொருத்தியாய் அல்லலுறும் தாயின் துயரை ‘வண்டுகள்’ நாவல் மௌன வலியுடன் பேசுகிறது.பருத்திக் காட்டுக்கு வேலைக்குப் போகும் சிறுமிகளின்,பெண்களின் கிழிந்த உடைகள் மற்றும் உடல் சார்ந்த ஆண்களின் பார்வை வக்ரம் அதைக் கடந்து போகச் செய்யும் அம்மாவின் சேச்சு,பல நாட்களாக எண்ணெய் காணாத தலைகளில் முடி விரிந்து கிடப்பதைச் சப்பிப் போட்ட பனம்பழத்தோடு ஒப்பிட்டமை போன்ற நுட்பமான படைப்புச் செயல்பாட்டைப் பாராட்டாமல் இருக்க இயலவில்லை.
நாட்டுப்புற இலக்கியங்களுக்குப் பிரத்யேக அந்தஸ்தைக் கொடுப்பது வட்டார வழக்கு மொழிதான்.அந்த வகையில் இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கும் சொல் மொழியும் அதுதான் .சில வட்டார வழக்கு நாவல்களில் வரும் பாத்திரங்களின் உரையாடல்கள் மட்டும் வட்டார பேச்சு மொழியில் இருக்க கதை சொல்லி சாதாரண இலக்கிய மொழியில் விவரணைக் குறிப்புகள் மூலம் கதையை நகர்த்துவார்.ஆனால் வண்டுகளில் எல்லாமும் வட்டார மொழியில்தான்.கதை சொல்லி இதற்கெனவே மெனக்கிட்டிருக்கக் கூடும்.தமிழ் நாட்டின் எல்லாப் பகுதியினரும் எளிதில் வாசித்துக் கடந்து விட முடியாத எழுத்து.தமிழ் நாட்டின் நடு நாட்டுப் பகுதியும் மேற்கு நாட்டுப் பகுதியும் தொடங்கும் நிலப்பரப்பில் உள்ளோரின் எளிய வாழ்வியல் மொழி..நாவலாசிரியர் சில பக்கங்களில் கலைச் சொல்லகராதியைப் பயன்படுத்துவதுபோல புரியாச் சொற்களுக்குப் பொருள் தருகிறார்.
தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் நாட்டுப்புற நாவலாசிரியர் வரிசையில் கரிசல் பகுதியில் கி .ரா,பூமணி ,டெல்டா பகுதியில் சோலை சுந்தர பெருமாள,சி .எம் .முத்து ,கொங்கு பகுதியில் ஆர் ,ஷண்முக சுந்தரம் ,பெருமாள் முருகன் நடுநாட்டுப் பகுதியில் ,இமையம் ,கண்மணி குணசேகரன் ,தங்கர் பச்சான் போன்றோரின் நாவல்கள் பொருளாதார ரீதியில் எளியோர் -உடையோர் ஆகியோருக்கிடையேயான ஏற்றத்தாழ்வு ,உழைப்புச் சுரண்டல்,அதிகாரத்திற்கெதிரான எதிர்க்குரல் மற்றும் பெண்கள் நிலை குறித்து எழுதியுள்ளதைப்போலவே மான்விழி ரஞ்சித்தும் தனது வண்டுகள் நாவலில் பதிவு செய்கிறார்.
ஆண் பெண் பேதம் ,ஆணாதிக்கம் ,முதலாளித்துவம், பெண்ணின் அடிமை வாழ்வு பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டல், பாலியல் அத்து மீறல் என எல்லா வகையிலும் பெண்கள் படும் அல்லல்களை மௌனமாகப் பேசும் பிரதியாக வண்டுகள் நாவல் தமிழிலக்கியப் பரப்பில் வெளிவந்திருக்கிறது.
வாழிய நலம்!