வடுக்களால் வரையப்பட்ட ஓவியங்கள் நிறைந்த கதை

ஒரு இலக்கிய படைப்பு காலம் கடந்து நிலைத்து நிற்பதற்கு பல வேறு காரணங்கள் இருக்கலாம்.அதன் வடிவம் , களம் , மொழி , புதிய முயற்சி என காரணங்கள் ஏராளம் . ஆனால் , அந்த படைப்பில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களின் வீரியம் காலம் எனும் நீரோட்டத்தால் கரைந்து காணாமல் போக வாய்ப்பு உள்ளது . மறுபுறம் அதே கருத்துக்கள் காலங்கள் கடந்தும் அது எழுதப்பட்ட காலத்தில் ஏற்படுத்திய அதே தாக்கத்தை ஏற்படுத்துமாயின் இவ்வுலகம் அக்கருத்துக்கள் சார்ந்து பெரிதாக முதிர்ச்சியடைந்து உணர்ந்து முன்னேற்ற பாதையில் செல்லவில்லை என்றுதான் அர்த்தம் . இதன் மறுவடிவமாக ஒரு படைப்பு அது எழுதப்பட்ட காலத்தில் தான் விவாதித்த கருத்தால் ஒரு பெரும் மாற்றத்தையோ , அதிர்ச்சியயையோ ஏற்படுத்தியிருக்கலாம் ,ஆனால் அதே படைப்பை காலம் கடந்து வாசிக்கும்பொழுது அதில் விவாதித்த கருத்துக்களுக்கு நாம் முரண்படலாம் , பெரிதாக எடுத்துக்கொள்ளாமலும் போகலாம் . இவையெல்லாம் ஒரு படைப்பு எடுத்துக்கொள்ளும் சமூக கருத்துக்களை மட்டுமே சார்ந்தது . இதை கடந்தும் பல படைப்புகள் அதன் வெவ்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து வாசிக்கப்பட்டு வந்தாலும் அவை  கருத்துக்களில் இருந்து வாசகன் விலகி செல்லாமல் பல ஆண்டுகள் கழித்தும் நமக்குள் ஒரு விவாதத்தையோ , எழுச்சியயையோ , விடையில்லா வினாக்களையோ எழுப்புமாயின் நம் சமூகம்  இன்றும் அந்த கருத்துக்களுக்கு செவி சாய்க்க தொடங்கவில்லை என்றுதான் அர்த்தம் . இப்படி 1970-80களில் நிகழ்வதாக இருந்தாலும் இந்த persepolis எனும் புத்தகம் பேசும் கருத்துக்களும் , எழுப்பும் கேள்விகளும் இன்றைக்கும் ஏற்புடையதாகவும் , விடையில்லாதவையாகவும் இருப்பதால் இப்படைப்பு இன்றைய வாசிப்பிலும் வடிவம், மொழி ,களம் தாண்டி கருத்தியல் ரீதியாக  ஒரு அதிர்ச்சியை கொடுக்கத்தான் செய்கிறது .

ஒரு சுயசரிதையை முழுக்க முழுக்க காமிக் வடிவில் கொடுத்த புத்தகம் எனக்கு தெரிந்த  வரை இந்த persepolis மட்டும்தான் என்று நினைக்கிறன் . அதிலும் தன்னுடைய சுயசரிதையை தானே ஒரே காமிக் வடிவில் கொடுக்க வேண்டும் என்ற அந்த சிந்தனையே மிக சிறப்பு . இந்த புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் எனக்கு எழுந்த முதல் கேள்வி இதனை ஏன் ஒரு காமிக் வடிவில் எழுத நினைத்தார் இதன் ஆசிரியர் . காமிக் வடிவம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ஒரு வடிவமாக இருந்தாலும் தீவிர இலக்கியத்திலிருந்து விலகியல்லவா நிற்கிறது என்பதை அறிந்திருந்தும் ஏன் இந்த வடிவம் தேர்ந்தெடுக்க பட்டிருக்கும் ? அரேபிய நாடுகளில் பெண்களின் மேல் நடத்தப்படும் ஒடுக்கு முறைகளை உரைநடை வடிவில் உருக உருக படைத்திருக்கலாம் . தன்னுடைய மொழியாளுமை , கவி நடை , தத்துவப்பார்வை , உலக இலக்கிய ஞானம் என அனைத்தையும் இந்த படைப்பிற்குள் செலுத்தியிருக்கலாம் . ஆனால் MARJANE SATRAPI   அவ்வாறு செய்யாமல்  தன் வாழ்வில் கண்டு , அனுபவித்த , உணர்ந்த வாழ்க்கையை தன்னுடைய கண்களாலேயே இதனை வாசிக்கும் அனைவரும் காண வேண்டும் என்று நினைத்திருந்தால் மட்டுமே இந்த காமிக் வடிவை தேர்ந்தெடுத்திருக்க முடியும் . மேலும் MARJANE SATRAPI போன்ற அதீத கற்பனை மனம் படைத்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை வெறும் எழுத்துக்களால் மட்டுமே கூறிவிட முடியும் என்று தோன்றவில்லை . தன்னுடைய 9 வயது தொடங்கி 27 வயது வரையிலான வாழ்க்கையில் இத்தனையும் நடந்துவிட்டதா என்பது அவருக்கே இதனை எழுதி முடித்த பின் தோன்றியிருக்கலாம் . சமீபத்தில் எஸ் ரா அவர்களின் வாழ்வின் வரைபடம் என்ற உரையில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய வாழ்வின் வரைப்படம் என்ற ஒன்று உள்ளது , சிலருக்கு அது வெறும் புள்ளியாக இருக்கலாம் சிலருக்கு அது நீண்ட நெடிய முடிவற்ற பாதையாக இருக்கலாம் என்றும் கூறுவார் . அதுபோல இந்த persepolis புத்தகம் MARJANE SATRAPI என்ற பதின் பருவ பெண்ணின் வாழ்க்கையின் வரைபடம் .

அரசியல் என்ற சொல்லிற்கான அர்த்தமும் அதனை நாம் புரிந்துகொள்ளும் விதமும் கால மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் . 20 – 30 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கும் மக்களுக்கும் இருந்த இடைவெளி நீண்டது ,அது தேர்தல் நேரம் மட்டுமே அருகே வந்து செல்ல கூடிய ஒன்று . அதுவே இன்றைய சூழல் குறிப்பாக தமிழகத்தில் அந்த இடைவெளி வெகுவாக குறைந்துள்ளது . அதற்கு காரணம் இளைய தலைமுறையினர் அரசியலுக்கு நெருங்கி வர தொடங்கிவிட்டனர் . தங்களுடைய அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயலும் சொல்லும் எதிர்வினையும் ஏதாவதொரு அரசியல் சார்பு நிலையை சார்ந்ததே என்பதை புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர் . இந்தியா ஒரு குடியரசு நாடாக இருந்ததனால் என்னவோ இந்த புரிதல் வர இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டன , அல்லது அடக்குமுறைகள் தலைதூக்கியதால் அதனை எதிர்க்க அரசியல் கற்றுக்கொள்ள தொடங்கினரோ தெரியவில்லை . இந்த புத்தகத்தில் 9 வயது சிறுமியின் வீட்டில் அரசியல் சொல், செயல், வினை ,எதிர்வினை, அடக்குமுறை , என எல்லா வடிவிலும் அவளுக்கு அறிமுகமாகிறது . ஒரு பதின் பருவ பெண் மார்க்சிய சிந்தனையால் ஈர்க்கப்படுகிறாள் , தெருவில் இறங்கி உரிமைகளுக்காக போராட துடிக்கிறாள் , நாட்டின் வராலற்றை விருப்பத்துடன் வாசிக்கிறாள் , நாட்டின் அடக்குமுறை ஆட்சியில் எங்கே தவறு நடக்க தொடங்கியது என்பதை அறிந்துகொள்கிறாள் , நாட்டின் சர்வாதிகாரியை ஆட்டிவைக்கும் கயிறு எங்கிருந்து நீள்கிறது என்ற அனைத்தையும் அறிந்துகொள்ளும் சூழலில் வளர்கிறாள் . இத்தகைய அடக்குமுறை நிறைந்த சூழலை பகடி செய்யவும் – அதே நேரத்தில் வலிமையாக எதிர்க்கவும் – அழுத்தமாக உலகிற்கு எடுத்துக்கூறவும் காமிக் தவிர வேறு வடிவத்தால் சாத்தியமில்லை .

இந்த புத்தகம் ஒரு kaleidoscope போல ஒவ்வொரு முறை வாசிக்கும்பொழுதும் வேறு வேறு புரிதல்களை கொடுக்கக்கூடியது . அதே போல வாசிக்கும் நபர் பொருத்து , அவருடைய அரசியல் நிலைபாடு பொருத்து , சமூகம் சார்ந்த சிந்தனை பொருத்து வேறு வேறு புரிதல்களை கொடுக்கக்கூடிய ஒன்று . இந்த புத்தகம் காமிக் வடிவில் உள்ளதால் இதில் வெறும் கதாபாத்திரங்களின் வசனங்கள் – முக பாவனைகள் மட்டுமல்லாமல் , marjane satrapi அவர்களுடைய நேரடியான கருத்துக்கள் அவரே கூறுவது போல ஆங்காங்கே வருவது சிறந்த இலக்கிய படைப்பிற்கு ஈடான ஒன்றாகத்தான் தோன்றுகிறது . ஏனெனில் அவையனைத்தும் உண்மையின் மொழியில் எழுதப்பட்டவை . குறிப்பாக ” ஒரு பெண் தன்னுடைய 30-40 வயதுகளில் அடையும் மாற்றங்களை விட 14- 18 வயதுகளில் தான் அதிகம் மாற்றம் அடைகிறாள் ” என்ற வரியாகட்டும் . “ஓரளவிற்கு மேல் பொறுத்த பிறகு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றை தாண்டி செல்ல உதவுவது சிறு புன்முறுவல் மட்டுமே ” என்ற வரியாகட்டும் கற்பனையிலிருந்து புனைவெழுத்தின் வழி ஏற்படுத்தியிருக்கக்கூடும் தாக்கத்தை விட இங்கு உண்மையின் மொழியில் சற்று ஆழமாக நமக்குள் பதிந்து விடுகிறது .

புத்தகம் முழுக்க இளவயது பெண்ணின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது என்றாலும் என்னுடைய பார்வைக்கு அவளுடைய பெற்றோர்களின் விவரிக்கப்படாத வாழ்க்கை கண்முன்னே விரிய தொடங்குகிறது . போர் சூழலில் அடக்குமுறை நிறைந்த ஒரு சர்வாதிகார ஆட்சியின் பிடியில் உள்ள நாட்டில் தன்னுடைய மகளை அவளுக்கான முழு சுதந்திர உணர்வோடும் , அரசியல் அறிவோடும் , ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியையும் கற்றுக்கொடுக்கும் முனைப்போடும் , கல்வியிலும் சிறந்து விளங்கும்படியும் மிகுந்த சிரத்தையோடு அவளை இந்த புத்தகத்தில் நாம் புரிந்துகொள்வது போல ஒரு ஆளுமையாக மாற்றியதற்கு எப்பாடு பட்டிருப்பார்கள் என்பது அவர் கூறாமலே புரிந்துவிடுகிறது . போர் வீரியமடைந்த காலகட்டத்தில் தன்னுடைய மகளின் பாதுகாப்பிற்கும் , கல்வி கற்பதற்கும் எந்த பாதிப்பும் வந்துவிட கூடாது என்று அரும்பாடுபட்டு அவளை ஐரோப்பா அனுப்பிவைப்பது தொடங்கி , தன்னுடைய துணையை தேர்ந்தேடுப்பது ,பின் அவளே பிரிந்து செல்வது என அவள் வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் அவளிடமே கொடுத்து அதன் ஏற்ற தாழ்வுகளை அவளே உணரும்படி செய்து வாழ்க்கையின் படிப்பைனையை எந்தவித கட்டுப்பாடுமின்றி  தூய அன்பினால் மட்டுமே உணர்த்திய marjane satrapi உடைய பெற்றோர்களே ஆசிரியரை விட என் மனதில் நீங்க இடம்பிடித்ததோடு எப்படி நம் பிள்ளைகளை நாம் வளர்க்க வேண்டும் என்பதை செய்துகாட்டியுள்ளனர் .

பாட்டியிடம் கதை கேட்டு , பாட்டியால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளே எழுத்தாளர்களாகவும் , சிந்தனையாளர்களாகவும் வளர்ந்துள்ளனர் . இதற்கு marjane satrapi மட்டும் விதிவிலக்கல்ல . பாட்டியே அவளுடைய முதல் சூப்பர் ஹீரோ . நாம் இந்த புத்தகத்தின் மூலம் marjane satrapi என்ற ஆளுமையை உருவகித்து பார்க்கிரோமேயானால் அதற்கான முதல் புள்ளியை வைத்தவர் அவளுடைய பாட்டி தான் . ஒரு காட்சியில் தான் தப்பிப்பதற்காக தனக்கருகே இருந்த ஒரு அப்பாவி பையனை காவலர்களிடம் காட்டிக்கொடுத்துவிட்டு தப்பித்து வந்து அதனை ஆனந்தமாய் தன் பாட்டியிடம் முறையிட்ட வேளையில் அவளுடைய செயலுக்காக அவளை திட்டிதீர்த்து விடுகிறாள் . நேர்மையின் அர்த்தம் குறித்தும் தன்னுடைய குடும்பத்தில் மக்களுக்காக உயிரை மாய்த்துக்கொண்டவர்களை சற்று சிந்தித்து பார் என்று பேத்தியை திருத்துபவளாகவும் அதே பாட்டி இருக்கிறாள் .

The hero with thousand faces – இல் joseph campbell கூறுவது போல ஒரு நாயகன் உருவாவதற்கான முதல் படி அவனுடைய பயணம் தான் . அதிலும் அவனுடைய வீடு, நாடு , குடும்பம் , மக்கள் என தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் துண்டித்து தொலைதூர தனிமையான ஒரு பயணமே ஒரு சிறந்த நாயகன் உருவாவதற்கான முதல் படி என்கிறார் . இதுவே  marjane satrapi வாழ்விலும் நிகழ்கிறது . முதல் பிரிவு அவள் விரும்பாமல் அவளுடைய புற உலகின் சூழலால் , குடும்பத்தின் உந்துதலால் நிகழ்கிறது அதுவே தன்னுடைய 27 ஆம் வயதில் தான் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு பிரிவு அவளுக்கு வாழ்க்கை கொடுத்த அனுபவத்தின் பால் நிகழ்கிறது . இரண்டு பயணத்திற்குமான வேறுபாடுகள் புத்தகம் வாசிக்கும்பொழுது நமக்கு ஒன்றை சொல்லிக்கொடுக்கிறது பிரிவு தற்காலிகமானது பயணம் மட்டுமே நிரந்தரமானது . பயணம் காட்டும் வெவ்வேறு  நிலம் – மனிதர்கள் – பண்பாடு இவையெல்லாம் நம்மை நம் வாழ்க்கையின் நாயகனாக நிச்சயம் மாற்றும் என்பதற்கு இந்த persepolis மூலம் MARJANE SATRAPI ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!