மலையாள சினிமாவும் திரை மொழியும்

திரைப்படம் என்பது எந்த பிரிவினைவாதத்திற்கும் உட்படாத ஒரு கலை வடிவம். கலை எல்லோருக்குமானது. தற்காலத்தில் எடுக்கப்படும் இந்திய திரைப்படங்களில் பெரும் கவனத்தை ஈர்க்கக்கூடிய வெகு சில மொழி படங்களில் மலையாள சினிமா ஒரு முக்கியமான அங்கம் வகிக்கின்றது.

சமகால மலையாள சினிமா.

ஒரு திரைப்படம் அது உருவான நிலப்பரப்பின் மொழி, மனித மனம், அரசியல், கலாச்சாரம், உணவு, இருப்பிடம், காலநிலை மாற்றங்கள் இவை அனைத்தையும் பேசக் கூடியதாக இருப்பின் அது ஒரு முக்கியமான பதிவாக கலையாக மாற வாய்ப்பு உள்ளது. அப்படி இந்திய மண்ணில் எடுக்கப்படும் மொழி சார்ந்த திரைப்படங்களில் மலையாள சினிமா கவனிக்கத்தக்க ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. அதன் சாட்சி பிற மொழியாளர்கள் மலையாள சினிமாக்களை கொண்டாடுவதுதான்.  அப்படி நான் கொண்டாடிய சில சமகாலத்து மலையாள சினிமாவும் அதன் தனித்துவமும் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பகிர்ந்துள்ளேன்.

ஒரு திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறுவது அது ஒரு சக மனிதனின் வாழ்க்கையோடு ஏதோ ஒரு வகையில் உறவு கொள்ளும் பொழுது தான். அப்படி மலையாள சினிமாவில் வரும் எல்லா திரைக்கதைகளிலும் கதாநாயகன் அதை சுற்றி உள்ள கதாபாத்திரங்கள் எல்லாம் ஒரு சாதாரண மனிதர்களாகவே இருக்கின்றன. இது ஒரு வகையில் அந்த நிலப்பரப்பின் கம்யூனிச அரசியலையும் பேச முற்படுகிறது. கதாநாயகர்கள் யாரும் அசாதாரண மனிதர்களாக இருப்பதே இல்லை. ஒரு கடையில் வேலை செய்யும் ஊழியன், ஒரு தொழில் தொடங்க முற்படும் தொழிலாளி, பக்கத்து வீட்டுக்காரன், சலூன் கடைக்காரன், சீரியல் செட்டு வியாபாரி இப்படித்தான் அங்கே கதாபாத்திரங்கள் இருக்கின்றன. இதுவே மலையாள சினிமாவை பிற இந்திய சினிமாக்களிலிருந்து வேறுபடுத்தும் முதல் காரணியாக இருக்கின்றது.

இரண்டாவது

பெரும்பாலும் இந்திய திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரம் ஒரு ஆணாகவே வடிவமைக்கப்படுகின்றது. மாறாக மலையாள சினிமாக்களில் பெண்களின் கண்களின் வழியே வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒரு பெண்ணின் கண்களின் வழியே இந்த வாழ்க்கை எவ்வளவு அழகானது, கொடுமையானது, தனிமையானது, சுதந்திரமானது என எல்லாக் கோணங்களிலும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அங்கே திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு அந்த நிலப்பரப்பில் பிறந்த பெண்கள் சுமந்து வரும் வலிகள் ஒரு முக்கியமான காரணமாக அமைகின்றது.

மூன்றாவது

ஒரு நல்ல படைப்பிற்கு பணம் தடையாக இருக்க வாய்ப்பில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது தான் மலையாள சினிமாக்கள். பணம் எங்கே அதிகமாக செலவிடப்படுகிறதோ அங்கே கலை வடிவம் குறையவே செய்கிறது. ஏனென்றால் அது பெருவாரியான மக்களை அடைய உருவாக்கப்படுகின்றவை. தனித்தன்மை வாய்ந்த சினிமாக்கள் பெருவாரியான மக்களை சென்றடைய வாய்ப்பே இல்லை. இந்த அடிப்படை அறிவில் தான் மலையாள சினிமாக்கள் தங்களின் செலவினங்களை குறைத்து, ஒரு குறைந்தபட்ச செலவில் தங்கள் சினிமாக்களை பிரம்மாண்டமான கலை நுட்பத்துடன் படைத்தளிக்கின்றன.

நான்காவது

கதை திரைக்கதை இவை இரண்டும் ஒன்று அல்ல. கதை எழுதுபவர்களுக்கு கதை சொல்லத் தெரிந்தால் போதும். ஆனால் ஒரு திரைக்கதை எழுத்தாளனுக்கு எடிட்டிங் தெரிந்திருக்க வேண்டும். ஒரு நல்ல எடிட்டரால் மட்டுமே ஒரு நல்ல திரைக்கதையை எழுத முடியும். திரைக்கதை எழுதுபவர்களுக்கு இசை தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் சினிமா என்பது 50 சதவீதம் காட்சி, 50 சதவீதம் ஒலி என்றாவது புரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட தெளிவுடன் தான் அங்கே திரைக்கதை எழுத்தாளர்களும் இயக்குனர்களும் வேலை செய்கின்றார்கள். அங்கே எடுக்கப்படும் படங்களில் பிரம்மாண்டமாக என் கண்ணுக்கு தெரிவது அவர்கள் ஒவ்வொரு கலை நுட்பத்தையும் கையாளும் விதம்தான். எல்லோராலும் கடந்து செல்லக்கூடிய ஒரு உணர்வை அவர்களால் அற்புதமாக திரைப்படமாக மாற்ற முடிகிறது என்றால் அவர்கள் கலை நுட்பம் தெரிந்தவர்களாகவே இருக்க வேண்டும். திரைப்படங்களை பொருத்தவரை எது எளிமையானதோ அது பிரம்மாண்டமானது. இங்கே பிரம்மாண்டமாக பணம் செலவிட்டு எடுப்பது எளிது. ஆனால் எளிய முறையில் ஒரு உணர்வை பார்வையாளனுக்கு கடத்துவது கடினம். அதற்கு ஒரு திரைக்கதை எழுத்தாளனும் இயக்குனரும் அந்த திரைப்படத்தில் பணியாற்றிய எல்லா கலைஞர்களும் தங்கள் உள்ளங்களை அக்கதையில் வைத்து பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்படித்தான் அங்கே சில படங்கள் உருவாகின்றன என்று நான் நம்புகிறேன். இந்திய அளவில் வெகு சில படங்கள் மட்டுமே அப்படி வெளி வருகின்றன. ஆனால் மலையாளத்தில் மட்டும் ஏறக்குறைய எல்லா திரைப்படங்களிலுமே அது வெளிப்படுகிறது. இது அங்கே உருவாகின்ற கலைஞர்கள் தங்கள் படைப்பின் மீது வைத்திருக்கும் நேர்மையை உணர்த்துகிறது. சினிமா எடுப்பதற்கு நான் மேலே சொன்ன எதுவுமே தேவையில்லை, நேர்மை இருந்தால் போதும் ஒரு நல்ல சினிமா உருவாக அதுவே அடிப்படை காரணமாக அமைகிறது.

ஐந்தாவது

எனக்குத் தெரிந்து மலையாள சினிமாக்களில் மட்டுமே நிலப்பரப்பையும் சிறுபொழுது, பெரும்பொழுது இவை இரண்டையும் கதை சொல்லலுக்கு பயன்படுத்துகின்றனர். ஒரு நிலப்பரப்பு அங்கே வாழும் மனிதர்களின் மனதை எவ்வளவு ஆக்கிரமித்து இருக்கும் என்பதை உணர்ந்த சினிமாக்கள் அங்கே உருவாகின்றன. கதை என்பது ஏதோ ஒரு கதாபாத்திரம் சிக்கிக்கொண்ட சூழலில், அக்கதாபாத்திரம் குணம் பொருத்து அது எடுக்கும் முடிவுகளால் ஏற்படும் அகப்புற விளைவுகளின் அடுக்குகளே. எனவே ஒரு கதாபாத்திரத்தின் குணம் என்னவென்று தெரியாமல் கதையின் போக்கு கோணலாகிவிடும். குணம் என்பது பொதுவானது. ஆனால் அதை வெளிப்படுத்தும் தன்மை ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். எடுத்துக்காட்டாக, மலை உச்சியில் இருப்பவனுக்கு கீழே குதித்து விட வேண்டும் என்று தோன்றும், ஆனால் தரையில் நிற்பவனுக்கு அது தோணாது. ஆக, குறிஞ்சி நிலப்பரப்பில் சொல்லப்படும் கதைகளிலும் மருத நிலத்தில் சொல்லப்படும் கதைகளிலும் கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவு மாறுபடும். இதை நன்கு உணர்ந்து அங்கே திரைக்கதைகள் அமைக்கப்படுகின்றன. முக்கியமாக மலையாள சினிமாக்களில் வரும் கதைகள் எழுத்தாளர்களிடமிருந்து வருவதால் அவை தனித்தன்மையுடன் வலம் வருகின்றன. அங்கே கதை ஆசிரியரும் திரைக்கதை ஆசிரியரும் தனியாக எதையுமே செய்து விட முடியாது சினிமா என்பது கூட்டுத் தொழில். இங்கே எல்லோரும் சமம். இந்த மனப்பான்மை இல்லாத இடத்தில் நல்ல சினிமா உருவாக வாய்ப்புகள் குறைவு.

இனி ஒரு சில சினிமாக்களை எடுத்துக் கொண்டு அதில் நான் மேலே குறிப்பிட்ட ஐந்து தன்மைகளும் எவ்வாறு இடம் பெற்றிருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

Ja. E.Man

கதைச் சுருக்கம் : கனடாவில் பணிபுரியும் ஒரு இளைஞன் தனிமையில் நனைந்து கொண்டிருக்கும் பொழுது அவன் பிறந்த நாளை கொண்டாட அவன் சொந்த ஊருக்கு பயணித்து வருகிறான். அங்கே அவன் நண்பன் வீட்டில் மாடியில் அன்று இரவு அவன் பிறந்த நாளை கொண்டாட எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. அதற்கு எதிர் வீட்டில் ஓர் மரணம் நிகழ்கிறது. ஏற்கனவே இரண்டு வீட்டிற்கும் இருந்த பகை பூதாகரமாகி வெடிப்பது இடைவேளை. அந்த இரண்டு வீட்டாரும் சேர்ந்து அந்த இறந்தவர் சடலத்தை கொண்டாட்டத்துடன் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று புதைப்பது கிளைமேக்ஸ்.

ஒரு கதை என்பது சுவாரசியமாக மாறுவது சிக்கல் ஏற்படும் போது தான். சிக்கலை எப்படி ஏற்படுத்துவது? முரண் உள்ள இரண்டு கதாபாத்திரங்களை ஒரு சூழல் கொண்டு இணைத்தோமேயானால் அங்கே சிக்கல் எளிதில் உருவாகும். ஆனால் அந்த சிக்கலின் வீரியத்தை அதிகப்படுத்துவது எப்படி? முரணுள்ள இரண்டு கதாபாத்திரங்களும் தங்களை சுற்றி உள்ள கதாபாத்திரங்களுடன் ஏதோ ஒரு முரணில் சிக்கிக் கொண்டு தவிக்கும் போது, அது இயல்பாகவே தன்னிலை மறந்த ஒரு குணத்திற்கு செல்லும். அப்பொழுது அந்த இரண்டு கதாபாத்திரங்களும் சந்திக்கும். ஆனால் அங்கே அந்த சிக்கலின் வீரியம் அதிகமாக இருக்கும்.

நான் மேலே குறிப்பிட்டுள்ள அந்த படத்தில் ஒருவன் கனடாவில் இருந்து தன் பிறந்தநாளை கொண்டாட நண்பன் வீட்டிற்கு வருகிறான். அந்த நண்பனுக்கு அவன் பிறந்த நாளை கொண்டாடுவதில் துளியும் விருப்பமில்லை. அங்கே முதன்மை கதாபாத்திரத்திற்கும் நண்பன் கதாபாத்திரத்திற்கும் ஒரு முரண் ஏற்படுகிறது. அதற்கு எதிர் வீட்டில் இறந்து போன தாத்தாவின் பேரன் ஒரு குடிகாரனாக வருகிறான். அவன் குடிகாரனாக இருப்பதினாலேயே அந்த வீட்டாரால் மிகவும் வெறுக்கப்பட்டவனாக இருக்கிறான். அப்பொழுது இயல்பாகவே அந்த குடும்பத்திற்கு இடையே மரண வீட்டில் ஒரு முரண் உலா வருகிறது. இந்த இரண்டு வீட்டாருக்கும் ஏற்கனவே இருந்து வந்த சில சிக்கல்கள், பிறந்தநாள் கொண்டாட வந்த அந்த கனடா நண்பனால் பூதாகரமாக வெடிக்கிறது.

இங்கே இந்த கதையை சொல்வதற்கு அவர்களுக்கு தேவைப்பட்டது இரண்டு வீடுகள் மட்டுமே. இங்கே கதையின் நாயகனாக வருபவர்கள் நாம் வாழ்க்கையில் தினம் எதிர்கொள்ளும் சவால்களை அவ்வண்ணமே எதிர்கொள்ளும் இயல்பான மனிதர்கள் தான். எல்லா வீட்டினருக்கும் தன் பக்கத்து வீட்டுக்காரர்களுடனோ எதிர் வீட்டுக்காரர்களுடனோ, இல்லை தெருவில் வசிக்கும் ஏதோ ஒரு நபருடன் எப்பொழுதும் ஒரு முரண் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் எல்லா மனிதர்களின் மனதிலும் ஏற்படும் தனிமை. அதன் பாடு இந்த படத்தின் முதல் 15 நிமிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வெறுமை சூழ்ந்த ஒரு உலகத்தில் தான் அவர்கள் அங்கே வாழ்கிறார்கள். இது எல்லா மனிதர்களாலும் கடந்து செல்லக் கூடிய ஒரு உணர்வு தான். ஆனால் அதை ஒரு கதையாக்க முயற்சித்தது, அதையே அடிப்படையாகக் கொண்டு ஒரு முரணுக்கு வித்திட்டது இந்த கதையின் சிறப்பு.

நான் மேலே குறிப்பிட்ட அந்த பிரதான கதாபாத்திரங்களை தாண்டி இந்த கதையில் முக்கியமான கதாபாத்திரமாக வருவது ஒரு சீரியல் செட்டு வியாபாரி. அவன் எவ்வளவு லாபகரமாக பிறந்தநாள் கொண்டாடப்படும் வீட்டிற்கும் இறப்பு நிகழ்ந்திருக்கும் எதிர் வீட்டிற்கும் விளக்கு போட்டு அழகு படுத்துகிறான் என்பது சிறப்பு. இங்கே அந்தத் தொழிலாளியின் பாடு நாம் கதைக்குள் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் கேரளத்தில் பிறந்து, கம்யூனிச வாடை படிந்த மக்களிடம் இருந்து எழும் கதைகளில் இது போன்ற கதாபாத்திரங்களை நம்மால் உதறித் தள்ளவே முடியாது. இது அந்த நிலப்பரப்பில் பேசப்படும் அரசியலின் ஓர் மறைவான வெளிப்பாடு. கடைநிலை ஊழியன் பணம் சம்பாதிக்க என்ன பாடு படுகிறான் என்பது நகைச்சுவையாக கடத்தப்பட்டிருக்கிறது.

முக்கியமாக இந்தியாவில் வெளியாகும் பிற மொழி படங்களுக்கும் மலையாள சினிமாக்களுக்கும் இருக்கும் ஒரு வேறுபாடு, அவர்களின் ஆடை வடிவமைப்பு. அங்கே கதைகள் ஒரு சக மனிதனை அவன் வீட்டுக்குள் இருக்கும் ஒரு சாதாரணமான உணர்வை வெளிப்படுத்துவதால் உடைகள் அவ்வண்ணமே அமைகின்றன. அங்கே எந்த கதாநாயகனும் ஜீன்ஸ் பேண்ட் உடன் ஒரு டீசர்ட் அணிந்து சட்டை பட்டன் போடாமல் திரிந்ததே இல்லை. கதாநாயகிகள் அரை நிர்வாண உடைகளுடன் ஐட்டம் சாங் ஆடியது குறைவு. அங்கே இயல்புக்கு மிஞ்சிய எதையுமே திரையில் காண்பது அரிது.

இந்த Ja. E. Man படத்தில் கையாளப்பட்டிருக்கும் திரைக்கதை வடிவம் தி ஆர்ட் ஆஃப் டிரமாட்டிக் ரைட்டிங் என்ற புத்தகத்தில் யூனிட்டி ஆஃப் ஆப்போசிட் என்ற ஒரு திரைக்கதை வடிவ முறை. எனக்குத் தெரிந்து அதை இவ்வளவு நேர்த்தியாக கையாண்ட திரைப்படங்கள் மிகக் குறைவு அவ்வண்ணம் மலையாள சினிமாக்களில் உள்ள படைப்பாளிகள் எவ்வளவு கைதேர்ந்தவர்களாக உள்ளனர் என்பதும், அவர்கள் பணத்தை பெருமளவு செலவிட்டு அதற்காக ஊடகத்தின் இடையே பல நாடகங்களை அரங்கேற்றி செலவிட்ட பணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்பவர்கள் அல்ல. உண்மையான கலை நுட்பத்தை அறிந்து தன் படைப்பின் உருவாக்கத்தில் இன்பம் காணும் சொற்பமான கலை தாகம் கொண்ட மனித கூட்டத்தில் சிலராக இருக்கின்றார்கள்.

தி கிரேட் இந்தியன் கிச்சன்

கதைச் சுருக்கம்: கதாநாயகி திருமணமாகி தன் கணவன் வீட்டிற்கு செல்கிறாள். அந்த வீட்டின் சமையலறை அவள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற, அதற்கு முன் அதை ஆட்சி புரிந்த மாமியார் தன் பெண்ணின் பிரசவத்திற்காக அந்த வீட்டை விட்டுக் கிளம்ப முழுமையுமாக அந்த சமையலறையை கையாள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறாள். அங்கே தன் கணவனை மட்டுமல்லாமல் தன் மாமனாரையும் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் நிகழ்கிறது. இதனால் அவளுக்கும் அவர் கணவனுக்கும் இடையே ஒரு முரண் உருவாகின்றது. இதற்கு இடையில் அந்த கணவர் சபரிமலைக்கு மாலை இடுகிறார். இவள் மாதவிடாய் காரணமாக ஒரு அறையில் பூட்டி வைக்கப்படுகிறாள். இதன் விளைவாக முரண் பெருகி இறுதியில் அவர்கள் பிரிந்து விடுகின்றனர்.

ஆக ஒரு பெண் திருமணமாகி அவள் கணவனிடம் இருந்து பிரிந்து வாழ முடிவெடுப்பது தான் கதை.

இந்தப் படத்தை எடுப்பதற்கு அவர்களுக்கு தேவைப்பட்டது ஒரு வீடு. நான்கு கதாபாத்திரங்கள் அதை ஒட்டிய சில உதிர் கதாபாத்திரங்கள். ஆனால் அவர்கள் இந்த கதை கொண்டு விவாதித்த உணர்வு, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க வாழும் அனைத்து பெண்களுக்கும் பொதுவானதே. அந்த ஒரு வீடு, அந்த ஒரு சமையலறை, இறுதியிலே கணவர் முகத்தில் வீசி எறியப்படும் அந்த ஒரு கழிவு நீர், எல்லாம் எல்லா வீடுகளிலும் இருப்பவைகள்தான். நான் மேலே குறிப்பிட்டது போல அவர்கள் இங்கே பிரம்மாண்டமாக நம் கண் முன் நிறுத்தி வைப்பது நம் கூடவே வாழும் ஒரு பெண்ணின் மனநிலையை தவிர வேறு எதுவும் இல்லை. அந்த படத்தை பார்த்து விட்டு வீட்டுக்குச் செல்லும் யாராக இருந்தாலும் ஒரு நிமிடம் தன் மனைவியை பார்த்து என்னை சகித்துக் கொண்டதற்கு மிக்க நன்றி என்று சொல்வதும் உண்டு. சிலர் மனைவியின் கண்களை பார்க்காமல் வெட்கத்தில் தலை குனிந்து ஒரு மணி நேரம் அவளிடம் எதுவும் பேசாமல் கனத்த இதயத்துடன் இருந்தவர்களும் உண்டு. ஆனால் எந்த ஒரு எதிர்வினையுமாற்றாமல் அந்தப் பாடத்தை பார்த்து விட்டு நகர்ந்து சென்றவர்கள் மனிதர்களாக இருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. நான் மேலே சிலாகித்து பேசிய எல்லா வார்த்தைகளுக்கும் என்ன அர்த்தம் என்று இனி விவரிக்க உள்ளேன்.

இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால் இதிலே அசாதாரண கதாநாயகன் கதாநாயகி இல்லை. பெருமளவில் பணம் செலவிடப்படவில்லை. கதையில் ட்விஸ்ட் என்று எதுவுமே இல்லை. ஆனால், ஒரு சக மனிதனின் வாழ்வியல் இருக்கிறது. ஒரு பெண்ணின் கண்களின் வழியே இல்லற வாழ்க்கையின் சுக துக்கங்கள் இருக்கின்றன. கேரள வாழ்வியல் இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் தலையாக அதை உருவாக்கிய கலை வடிவம் உயர்ந்து நிற்கின்றது.

கலை வடிவம்

Repetition is not repetition… The same action makes you feel something different at the end.

– Pina Bausch

Pina Bausch என்ற ஜெர்மனை சேர்ந்த ஒரு நடன இயக்குனர் திரும்பத் திரும்ப செய்தல் என்பது முடிவிலே நம்மை வேறொரு ஆளாக மாற்றுகிறது என்று குறிப்பிடுகிறார். இதுதான் தெரிந்தோ தெரியாமலோ இந்த படத்தில் கையாளப்பட்டிருக்கும் நுட்பம். அது என்னவென்றால் ஒரு பெண் சமையலறைக்கு செல்கிறாள், அவள் சமைப்பது மீண்டும் மீண்டும் திரையில் வந்து கொண்டே இருக்கிறது. திரைக்கதை எழுத்தாளர்கள் இதை ரிபிடேஷன்ஸ் ஆஃப் பீட்ஸ் என்று குறிப்பிடுவார்கள். கதை நகராமல் ஒரே காட்சி திரும்பத் திரும்ப வருவது. அப்படி காட்சிப்படுத்துவது இல்லை எழுதுவது தவறு என்று எல்லா புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதையே இங்கு திரைக்கதை ஆசிரியர் தன் கதாபாத்திரத்தின் உணர்வை வெளிப்படுத்த பயன்படுத்திக் கொள்கிறார் இது அறிவின் உச்சம். 

நம் வீட்டு சமையலறையில் பெண்கள் வருடக்கணக்கில் திரும்பத் திரும்ப சமைப்பது அவர்களுக்கு எவ்வளவு சலிப்பாக இருக்குமென்று,  நமக்கு அதை திரும்பத் திரும்ப திரையில் காட்டி நம்மை சலிப்படையை வைத்து உணர்த்துகிறார் இயக்குனர். அவள் சமைக்கிறாள் வியர்க்கிறது. அவள் சமைத்த சாப்பாடு நன்றாக இருக்கிறது இல்லை உப்பு குறைவாக இருக்கிறது என்று கருத்து சொல்ல கூட அங்கே யாருமே இல்லை. எல்லா பெண்களும் அம்மாக்களும் சமைத்துவிட்டு நம் அருகே வந்து அமர்வது, நம்மிடம் உரையாடுவதற்கு அல்ல. நான் சமைத்தது உனக்கு பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்று தெரிந்து கொள்வதற்காக தான். அந்தப் பெண் டைனிங் டேபிளை மெல்ல தேய்த்து அவன் பக்கத்தில் நின்று கொண்டிருப்பது அதற்காகத்தான் என்பது அவனுக்கு புரியவில்லை. ஆனால் இயக்குனர் அதை பார்வையாளர்களுக்கு அழகாக கடத்துகிறார்.

Pina Bausch அவர்களின் நடனத்தில் ஒரு பகுதியில் ஒரு பெண் ஓடிவந்து தன் கணவனின் கைகளில் ஏறி அமர்கிறார். கணவன் அந்த பெண்ணை இறுகப்பற்றிக் கொள்கிறான். சிறிது நேரம் கழித்து கீழே விட்டு விடுகிறான். இப்படி திரும்பத் திரும்ப அவள் ஓடி வந்து அவன் மீது ஏறி அவனைப் பற்றிக் கொள்கிறாள். அவன் மீண்டும் மீண்டும் அவளை கீழே உதறி விடுகிறான். அவன் அவளைத் தாங்கி நிற்கும் நேரம் குறைகிறது. அவள்  மீண்டும் அவனிடம் வந்து சேருகிற வேகம் கூடுகிறது. அப்படி அந்த வேகம் கூடும் பொழுது நமக்கு பதட்டம் ஏற்படுகிறது. இது ஒரு வகை உவமை. ஆண் பெண்ணை கைவிடுகிறான். பெண் அதை மன்னித்து அவனோடு சேர்ந்து வாழ்கிறாள். மீண்டும் ஆண் அவளை கைவிடுகிறான். மீண்டும் அவள் சேர்ந்து வாழ்கிறாள். இந்த மீண்டும் மீண்டும் நடக்கும் நிகழ்வு ஒரு கட்டத்தில் பிரிய முடியா ஒரு பந்தத்தை அவனுக்கும் அவளுக்கும் இடையில் ஏற்படுத்துகிறது .

ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை அவள் ஆரம்ப கட்டத்திலேயே அவனை விட்டு விலக முடிவெடுக்கிறாள். அப்படி அவள் எடுக்கும் அந்த முடிவில் அந்த படத்தை பார்க்கும் எல்லா பெண்களுக்கும் தன்னால் எடுக்க முடியாத ஒரு முடிவை திரையில் அந்த கதாநாயகி எடுக்கும் போது, அந்த கதாபாத்திரம் அசாதாரண கதாபாத்திரமாக மாறி, அவர்கள் மனதில்  நிற்கிறது. இதுவே அந்த படத்தின் இயக்குனரின் மனவெளிப்பாடு. அவர்கள் ஆழமாக நம்பியது பெண்களால் தனியாக வாழ முடியும். ஆனால் ஆண்கள் தனியாக வாழ பயம் கொள்கிறார்கள் என்பதுதான். அப்படி இல்லை என்றால் அவர்கள் பிரிந்தவுடன் அந்த கதை முடிந்திருக்கும். ஆனால் அவர்கள் பிரிந்த பிறகு அந்தப் பெண் ஒரு நடன பயிற்சியாளராக மாறுகிறார். ஆனால் அந்த ஆண் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.

இந்த கதையில் இன்னும் ஆழமாக சென்று பார்த்தால் இங்கே மதமும் கலாச்சாரமும் பெண்களின் உடல்களை அவர்களுக்கு எதிராகவே எவ்வாறு மாற்றி பலவீனமாக வைத்திருக்க செய்கிறார்கள் என்பது நமக்கு புரியும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இந்த கதாநாயகியின் பார்வையில் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு அந்த படத்தில் ஒரு காட்சி அமைந்திருக்கிறது. ஒரு நாள் ஆண்கள் எல்லாம் சேர்ந்து சமைப்பது என்று முடிவு எடுப்பார்கள். அவர்கள் சமைத்துவிட்டு உணவு அருந்திவிட்டு அந்த சமையல் கட்டை விட்டு வெளியே வந்து சீட்டு அடுக்க தொடங்குவார்கள். அப்பொழுது கதாநாயகி எழுந்து உள்ளே செல்வாள், அவளிடம் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஒருவர் எங்கே செல்கிறாய் ? என்று கேட்பார். அவள், சமையலறைக்கு வேலை இருக்கிறது என்பாள். அதற்கு அவர் நாங்கள் தான் எல்லா வேலையும் செய்து விட்டோமே, இன்னும் அங்கே என்ன வேலை இருக்கிறது என்று சிரித்துக்கொண்டே விளையாட தொடங்குவார். கதாநாயகி ஒன்றும் பேசாமல் திரும்பி சமையலறைக்கு வரும்பொழுது அந்த சமையலறை தலைகீழாக எலியும் பூனையும் சண்டையிட்டது போல் எல்லா பொருள்களும் கலைக்கப்பட்டு கீழே சிதைந்து கிடந்திருக்கும். அப்படித்தான் எல்லா பெண்களின் வாழ்க்கையையும் இந்த ஆண்கள் கையாள தெரியாமல் கையாள்கிறார்கள் என்பது அந்த கலைக்கப்பட்ட சமையலறையில் ஒரு உவமையாக நின்றது. அவள் அதை சுத்தம் செய்து விட்டு அன்று இரவு உறங்க வெகு நேரம் ஆகிவிடும். பல நேரங்களில் எங்கள் வீட்டில் அது நடந்தது என்று நானே உணர்ந்துள்ளேன்.

சமைப்பதற்கு ஒரு பொறுமை, பக்குவம், சுத்தம் தேவைப்படுகிறது. அதே போல் சமைத்ததை பரிமாற ஒரு மரியாதையான உடல்வாகு தேவைப்படுகிறது. இரண்டுமே ஆண்களுக்கு சொல்லித் தரப்படவே இல்லை. அவர்கள் கம்பீரமாக நடப்பதற்கும் எதையும் வேகமாக செய்து முடிப்பதற்கும் சொல்லித் தரப்பட்டு, அதுவே அவர்களுக்கு இலக்கணமாக வர்ணிக்கப்பட்டு இருக்கிறது. இது வரலாற்றின் தவறும் கூட. எல்லா ஆண்களும் ஒரு பெண்ணுக்கு தான் பிறக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் கூட அந்த ஆணுக்கு பெண்மையின் உன்னதங்களை கடத்துவதே இல்லை என்பது கலாச்சாரத்துக்கு ஏற்பட்ட ஒரு தோல்விதான். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இவ்வளவு நேரம் மலையாள சினிமாவில் இருக்கும் எல்லா சிறப்பையும் விவரித்தோம். அதேபோல் அங்கே சில கோளாறுகளும் இருக்கின்றன. அவர்கள் இப்பொழுதெல்லாம் பிறமொழி படங்களின் வியாபார உச்சங்களை பார்த்து மாஸ் என்று சொல்லப்படக்கூடிய சில கமர்சியல் யுக்திகளை தங்கள் திரைப்படங்களில் கொண்டு வரச் செய்கின்றனர். இது பெரும்பாலும் அங்கே உள்ள உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் தான் நிகழ்கிறது. ஒரு நேர்காணலில் துல்கர் சல்மான் குறிப்பிடுகிறார், அவர் தந்தை மம்முட்டி அவர்கள் கலைநயமிக்க படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அது அழகாகத் தான் இருக்கிறது என்றாலும் கூட அவர் மாஸ் படங்களில் நடிக்க வேண்டும். ஏனென்றால் மலையாளத்தில் ஏற்கனவே நிறைய கலைநயமிக்க இயல்பு வாழ்க்கைக்கு மிகாமல் படங்கள் அதிகம் இருக்கின்றன. எனவே அவர் கொஞ்சம் தன் போக்கை மாற்றி மாஸ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை என்று குறிப்பிட்டு இருந்தார். இது அங்கே உள்ள இன்றைய தலைமுறையின் ஒரு கருத்து. என்னை பொறுத்தவரை அரிசி விளைகிற மண்ணில் சவுக்கு மரம் நட்டால் விளைவது கடினம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *