புலப்படாத ஒரு DYSTOPIAN உலகம்

நிழல் பொம்மை நூல் பற்றி

காலம் கடந்து செல்லும்பொழுது அதன்  மாற்றங்களுடன் சேர்ந்து மனிதர்களின் புரிதல்களும் , உணர்வுகளும் , உணர்ச்சி வெளிப்பாடும் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது அதனுடன் இந்த சமூகமும் மாற்றம் கொள்கிறது . மனிதனால் கட்டமைக்கப்பட்டதுதான் இந்த சமூகம் என்றாலும் , சமூகம் தன்னிச்சையாக சில மாற்றங்களை தனக்குள் மேற்கொண்டு அதனை மனிதர்களின் மேலும் அவர்களின் மாற்றங்களின் மேலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருகிறது . இதனை உற்று நோக்கும் கடமை எந்த நாட்டின் இலக்கியத்திற்கும் உண்டு . இந்த மாற்றத்தை இலக்கியம் தன்னுடைய வடிவத்தின் வழியாக மட்டுமின்றி கருத்தியல் ரீதியாகவும் தனக்குள் புகுத்திக்கொள்ளும் கடமை உண்டு . இதற்கு பல்வேறு நாடுகளின் , மொழிகளின் பண்பாட்டு பரிமாற்றமும் , சமூக நடைமுறைகளின் பரிமாற்றமும் , மனிதர்களின் உணர்வுகளின் பரிமாற்றமும் நிகழும் வழிகள் கலையும் இலக்கியம் மட்டுமே . இலக்கியம் தன்னுடைய சிறந்த படைப்புகளின் வழி இந்த பரிமாற்றம் நிகழ வழிவகுக்கிறது . நவீன தமிழ் இலக்கியத்தின் வடிவம் ரீதியாகவோ , கருத்தியல் ரீதியாகவோ  நிகழும் மாற்றங்களுக்கு  உலக இலக்கியங்களின் பங்களிப்பு அலாதியானது . நவீன தமிழ் இலக்கிய படைப்பாளிகள் இந்த மாற்றத்திற்கு தங்களை உட்படுத்தி தங்களுடைய படைப்பை மெருகேற்றுவது தமிழ் இலக்கிய உலகை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல உதவுகிறது . சமகாலத்தின் நவ நாகரிக  உலகின் மக்களின் வாழ்க்கையை ஒரு சரடாக வைத்து அதன் மீது தன் புனைவுலகை வடிவமைத்துள்ளார் அபிலாஷ் .

kafka -வின் விசாரணை நாவலின் உலகம் இங்கு ஒரு களமாக இடம்பெற்றாலும் ,இந்த நாவலின் ஒட்டு மொத்த உலகம் அதுவல்ல . விசாரணை நாவலின் கதை மாந்தரான கே விற்கும் நிழல் பொம்மையின் ரகுவிற்கும் பல வேற்றுமைகள் இருந்தாலும் இருவரும் ஒரே விதமான அலைக்கழிப்புகளுக்கும் , குழப்பங்களுக்கும் , தனிமையின் இரைச்சல்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர் . தொடர்ந்து அவர்கள் இருளுக்குள்ளும் – ஒளிக்கீற்றுக்குள்ளும் மாறி மாறி தள்ளப்பட்டும் – இழுக்கப்பட்டும் தத்தளிக்கின்றனர் . ஏனோ அவர்கள் இருவருக்கும் இருள் பிடித்து விடுகிறது  – தன்  மீது அதிகாரம் செலுத்த அனுமதிக்கின்றனர் – எங்கோ ஒரு மூலையில்  ஒடுக்கி ஒளிந்துகொள்ள நினைக்கின்றனர் . எங்கு இவர்கள் மாறுபடுகின்றனர் ? கே விற்கு தான் செய்த தவறு என்னவென்று தெரியாமலேயே அலைக்கழிக்க படுகிறான் . ஆனால் , ரகுவிற்கு தான் செய்த தவறு தெரியும் , அதன் விளைவுகளும் தெரியும் , இருந்தும் தன்னுடைய இருப்பை பெரும்பாண்மை சாதாரண மக்களின் மத்தியில் நிலைநாட்ட பெண்களை ஒரு கருவியாகி கொண்டு செயல்படுத்த தொடங்கி இந்த இருள் சுழலுக்குள் சிக்கிக்கொண்டு இறுதியில் அதே பெண்களின் துணைகொண்டு  மீட்டெடுக்கப்பட்டு தன்னுடைய குற்றவுணர்ச்சிக்குள் தள்ளப்பட்டு இறுதியில் பௌத்தத்திடம் தஞ்சம் புகுந்து விடுகிறார் . இந்த முடிவு இந்த படைப்பை நமக்கு நெருக்கமாக்குகிறது  .

நிழல் பொம்மையின் உலகம் பின்தொடர்வதற்கோ – பிடி படுவதற்கோ ஒரு வாசகனுக்கு சற்று கடினமாக இருந்தாலும் , அந்த உலகம் பிடிகொடுத்த பிறகு மொத்த உலகமும் நம் கண்முன்னே விரியத்தொடங்குகிறது . ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக இந்த உலகம் விரியலாம் . எனக்கு சற்று வித்தியாசமாக ஒரு இறுக்கத்தை – ஒவ்வாமையை கொடுக்கும் உலகமாக தோன்ற தோன்ற இது ஒரு dystopian உலகமாக விரிய தொடங்கியது . இந்த பின்னனியில் நான் நாவலை தொடர்ந்து வாசிக்கும்பொழுது அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வந்து சேர்ந்தது . dystopian உலகத்தின் அனைத்து விதிகளையும் மிகச்சரியாக இந்த நிழல் பொம்மையின் உலகம் பின்பற்றுகிறது . முதல் விதி – அடக்குமுறை – சர்வாதிகாரம்  – எந்த அளவிற்கு என்றால் அரசியல் – சமூக கட்டமைப்பு தொடங்கி  தனி மனித  எண்ணங்கள் வரை தன்னுடைய அதிகாரத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது .( லோகாஸ்)

இரண்டாவது சாராம்சம் – தனி மனிதன் தன்னுடைய சுயத்தை இழந்து அதிகாரத்தின் சாட்டைக்கு நடைபோட தொடங்கும் ஒரு மந்தை மாந்தர் கூட்டமாக மாறுவது . இந்த சாராம்சம் இந்த நாவலின் உலகில் வெகு நேர்த்தியாக அதே நேரத்தில் புதுவிதமாக உபயயோகப்படுத்தப்பட்டுள்ளது. லோகாஸ் உலகில் தொடர்ந்து அதன் ஊழியர்களுக்கு அறிவுசார்ந்த போதனைகள் வழங்கப்பட்டு அவர்கள் எவ்வாறு ஒரு அதிமனிதனாக உயர வேண்டும் என்ற மாயை- யை அவர்கள் முன் உருவாக்கி அதன் பிடியிலே தொடர்ந்து அவர்களை அறிவிழந்து ஒரு ஆட்டுமந்தை கூட்டமாக ஒற்றை நோக்குடன் ஓடவைப்பதின் வழி அவர்களை தங்களுடைய சுயத்தை இழக்க வைக்கிறது லோகாஸ் .

மூன்றாவது சாராம்சம் – தொழில்நுட்பங்கள் மனிதர்களை கட்டுப்படுத்துவது அல்ல அடிமையாக்குவது . இங்கு சுவாமிஜி என்ற செயலி மூலம் அந்த மொத்த லோகாஸ் உலகமும் கண்காணிக்க படுகிறது . அவர்களின் செயல்கள் – பேச்சுகளோடு அது நிற்காமல் செயற்கை நுண்ணறிவின் துணையோடு  அவர்களின் எண்ணங்களையும் கண்காணிக்கிறது .  அவர்கள் எக்காரணம் கொண்டும் சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்து நழுவ விடாமல் பார்த்துக்கொள்கிறது . ஒரு கட்டத்தில் அந்த செயற்கை நுண்ணறிவே தன்னிச்சையாக செயல்பட்டு தானே சில முடிவுகளை எடுக்குமாறும் கூறப்படுவது அந்த செயலியின் கதாபாத்திரத்தோடு மிகவும் பொருந்தியுள்ளது .

நான்காவது சாராம்சம் – பயம் – நம்பிக்கையின்மை – விரக்தி . லோகாஸில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் , மாணவர்களுக்கும் தங்களுடைய நிலையை தக்க வைக்க எவ்வளவு போராடியும் தொடர்ந்து ஒரு வித பதற்றமான மன நிலையே அவர்களுக்குள் தொடர்கிறது . அவர்களுக்கு தொடர்ந்து ஓட்டமும் – புது புது இலக்குகளும் – தெளிவில்லாத பாதைகளும் கொடுக்கப்பட்டு ஒரு வித நிலையற்ற மனநிலையில் வைத்து அவர்களை அந்தரத்தில் ஊசலாட வைத்த வண்ணம் உள்ளது . இந்த நிலை ஒரு சர்வாதிகாரத்தின் அடக்குமுறைகளை செயல்படுத்த ஏதுவான ஒரு நிலை என்பதால் அது தடைபட்டுவிடாமல் பார்த்துக்கொள்கிறது அந்த உலகம் .

kafka வின் உலகத்திற்குள் ரகு உலாவுவது போல வெளித்தோற்றத்திற்கு தோன்றினாலும் – சற்று உற்று கவனித்தோமேயானால் ரகு kafka வாகவே உலாவருகிறார் அபிலாஷின் இந்த dystophian உலகத்திற்குள் . kafka வின் உருமாற்றம் கதையின் Gregor samsa போல இங்கு ரகு குள்ளனாக இருக்கிறார் . kafka வின் அந்த இருண்ட வாழ்வின் ஆதிபுள்ளியாக இருக்கும் அவர் தந்தை போல இங்கு ரகுவின் தந்தையும் அவரை வெறுத்து ஒதுக்குகிறார் . இருவரும் அன்னையால் வளர்க்கப்பட்டவர்கள் . பெண்களை நேசிக்க விருப்பப்பட்டு நேசிக்க தெரியாமல் போனவர்கள் . நீதிக்காக காத்திருந்து அந்த காத்திருப்பினால் காவுவாங்கப்பட்டவர்கள் . நீதியை கடந்து தண்டனையை நோக்கி – ஈர்க்கப்டுகின்றவர்கள் . இருளுக்குள் பழகி தற்காலிக ஒளியினால் ஏமாற்றப்பட்டு மீண்டும் மீண்டும் இருளுக்குள் தள்ளப்பட்டு இருள் தான் உண்மை என்ற பெரும் தத்துவத்தை உணர்ந்தவர்கள் . தங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நிஜமா நிழலா என்ற குழப்பத்திலிருந்து தப்பிக்க பல வழிகளை தேடுகின்றனர் – சாக்ரடீஸ் – பிளாடோவின் குகை கைதிகளின் நிழல் பொம்மைகளிடம் அதற்கான விடையை தேடுகின்றனர் – பெண்களின் ஆதிக்கத்தில் , அணைப்பில் , மனதில் விடையை தேடுகின்றனர், மரணத்திடமும் ஒரு கட்டத்தில் விடை தேட எத்தனிக்கும் தருணம் அங்கு KAFKA ரகுவை விட்டு விலகிச்சென்று மரணத்திடம்  தஞ்சம் புகுந்துகொள்கிறார் . ரகுவோ அந்த மரணத்தாலும் ஏமாற்றப்பட்டு தனிமையின் சிறையில் சிக்கி இறுதியில் பௌத்தத்தின் நிழலில் தன்னுடைய உண்மையான உயரத்தை உணர்கிறான் .

சுருங்க சொல்வதானால் அபிலாஷ் உருவாக்கிய சமகாலத்தை ஒட்டிய ஒரு dystopian உலகில் kafka வை ரகுவின் உருவத்தில் ஒரு பொம்மையாக வைத்து விளையாடும் ஒரு நிழல் விளையாட்டு தான் இந்த நிழல் பொம்மை .

பெண்கள் இந்த புத்தகத்திற்கு எப்படி எதிர்வினையாற்ற போகிறார்கள் என்பது என்னுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு . முழுக்க ஒரு ஆணின் மனக்கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு புனைவு அதிலும் முற்றிலும் ரகுவின் பார்வையில் மட்டுமே கதை நகர்கிறது . அதனால்தான் என்னவோ மாதா ராதாவையோ – ஜனனியையோ – மார்த்தாவையோ- சஹிதாவையோ நம்மால் புறிந்துகொள்ள முடியாத இருளுக்குள் இருக்கின்றனர். ஒரு பிரதான கதாபாத்திரத்தின் சிந்தனையை – என்ன ஓட்டங்களை – மனசாட்சியின் வெளிப்பாட்டை  இத்தனை வெளிப்படையாக கூறிய படைப்பு அரிதானது . ரகு வாசகர்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்திற்கு உள்ளாவான் – அதுவே இந்த படைப்பின் வெற்றி என்று நான் கருதுகிறேன் . ரகு ஒரு உயிருள்ள மனிதன் என்பதை தாண்டி நவநாகரிக நகரத்தின் பெரும்பான்மையான மனிதர்களின் ஆழ்மனதின் வெளிப்பாடாகத்தான் நான் பார்க்கிறேன் , அதன் அளவு வேண்டுமென்றால் கூடி குறையலாம் ஆனால் முற்றிலுமாக மறுக்க முடியாத ஒன்று .

இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்த இடம் – ரகு – சஞ்சய் சந்திப்பு . சஞ்சயை இரண்டு முறை பார்க்கும்பொழுதும் இருவரும் வேறு வேறு மனநிலையில் சந்தித்து கொள்கின்றனர் . முதல் சந்திப்பு இருவரின் குரூரம் வெளிப்பட்டாலும் இருவருக்குள்ளும் அதற்கான காரணம் இருப்பினும் அவை இருவராலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை . அதுவே கதையின் முடிவில் இருவரும் தங்கள் வினைகளின் காரணங்களை  கண்கூட பார்த்து புரிந்துகொள்ளும் தருணம் இருவருமே மன்னிப்பின் கரங்களின் வழி பேரன்பின் தொடுதலை உணர்ந்துவிடுகின்றனர் , அதோடு தங்களுடைய குற்றவுணர்விலிருந்து விடுதலையடைகின்றனர் . சஞ்சயின் தம்பியின் நிலையை பார்த்த ரகு விற்கு அதுவரை பாரமாக இருந்த அவன்  உடல் இலகுவாகி சாதாரணமாகிறான் . சாதாரணம் பெரும் கனவாக இருக்கும் ரகுவிற்கு அது ஒரு தற்காலிக இளைப்பாறலாக இருக்கலாம் .

உண்மையை சற்று மிகையுடனும் – மீறலுடனும் கூறும்பொழுது ஒரு சிறந்த புனைவுலகம் உருவாகிறது . அந்த வகையில் நிழல் பொம்மை ஒரு அடர்த்தியாயன – விவாதத்திற்கு ஏற்ற கருத்தியல் பின்னனியில் நிகழ் காலத்துடன் நெருக்கமான , ஆழமான சிந்தனைகளுடன் , பல சிறந்த தத்துவ கோட்பாடுகளின் நடுவே ஒரு அசாதாரண மனிதனின் வாழ்வின் கனவான சாதாரணத்தை நோக்கி நகரும் அகம் சார்ந்த ஒரு வாழ்வியல் பயணத்தை சுற்றி உருவாக்கிய ஒரு மாறுபட்ட புனைவுலகம் .

நிழல் பொம்மைநாவல்
எழுத்து பிரசுரம்
450 பக்கங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!