படைப்பு…. சமூகத்தின் இணைப்பு. இலக்கியத்துக்கான தனி மேடை. இலக்கியம் என்பது ஒரு சமூகத்தொகுப்பு. உண்மையான இலக்கியம் மக்களுக்கானதாய் மட்டுமே இருக்க முடியும். கலை இலக்கியம் யாவும் மனித மகிழ்ச்சியை தக்கவைத்துக் கொண்டு மனித மனங்களை பக்குவப்படுத்திக் கொள்ளும் ஒருவித உளவியல் ஏற்பாடுதான்.
நினைவுகளுக்குள் ஓசையின்றி அவிழ்ந்து விழும் புன்னகையும் கண்ணீருமே இலக்கியத்தின் கருப்பொருளாய் இருக்கிறது. இருப்பினும் கலையும் இலக்கியமும் எங்கோ தூரத்தில் இருப்பதாய் கருதுவோரே இங்கு அதிகம்.
சாதாரண வாசகனுக்குள் எட்டாத உயரத்தில் இருப்பதாய் கட்டமைக்கப்பட்டிருந்த இலக்கிய பீடங்களின் மாயத்தோற்றங்களை விலக்கி கடைக்கோடி எழுத்தாளனும் தன் படைப்புகளை சுதந்திரமாய் வெளிப்படுத்திட களம் அமைத்துக் கொடுக்க உருவாக்கப்பட்டதுதான் படைப்பு இலக்கியக் குழுமம்.
நண்பர்களின் ஒரு தேநீர் சந்திப்பில் உதயமான படைப்பு குழுமத்தின் சிறு சிந்தனைப் பொறி இன்று இலக்கிய வானத்தில் அடர் மழையை பொழிந்துகொண்டிருக்கிறது.
முகநூல் தளத்தில் முகங்களற்று எழுதிக்கொண்டிருந்தவர்களுக்கு முகவரியாய் இருப்பதும் சிறந்த படைப்புகளை இலக்கியத்தின் முகமாய் தரவேண்டுமென்பதே படைப்புக் குழுமத்தின் நோக்கமாய் இருக்கிறது.
கவிதைகளுக்கான இலக்கிய மேடையுடன் துவங்கிய படைப்பு குழுமத்தின் பயணம் இன்று இயல் இசை நாடகமென கலைகளின் அத்தனை வடிவங்களையும் தன்னுள் ஏந்திக்கொண்டு இலக்கிய தாகத்துடன் பயணித்து வருகிறது.. வெறும் கலை இலக்கியங்களுடன் மட்டும் நின்றுவிடாமல் மக்களுக்கான அறச் சேவையிலும் தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டு பயணித்து வருகிறது.
எளிதில் சிக்காது என்று நினைத்துக்கொண்டிருந்த இலக்கிய பீடத்தின் எழுத்தாணிகளை திறமை இருக்கும் கடைக்கோடி படைப்பாளனின் விரல்களும் பிடித்து மண் வாசனையுடன் கலந்து எழுதும் பக்குவத்தை உருவாக்கும் முயற்சிகளின் வழியே படைப்புக் குழுமமும் இடம் பெற்று நிற்பதில் மகிழ்சியடைகிறது.
படைப்பு குழுமத்தின் தொடர் இலக்கியச் செயல்பாடுகளும் சமூகத்தின் மீதான அதன் பங்களிப்பும் தமிழகத்தில் உச்சத்திலிருக்கும் ஊடகங்களையெல்லாம் உற்றுப் பார்க்க வைத்து உச்சி முகர்ந்து பாராட்ட வைத்திருக்கிறது.
ஒரு இலக்கியக் குழுமத்தினால் சமூகத்தை ஒன்றிணைத்துவிட முடியுமா என்று எழும் சந்தேகத்தை அகற்றி முடியும் என்று சாத்தியமாக்கி காட்டியிருக்கும் படைப்புக் குழுமம் இன்று லட்சம் உறுப்பினர்களை நெருங்கியபடி ஒரு இலக்கிய குழுமத்திற்கு இத்தனை முகங்களா என எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.
கவிதைகளை முன்வைத்து உருவாக்கப்பட்ட படைப்புக் குழுமம் தனது அடுத்தடுத்த திட்டங்களால் கலை இலக்கியத்தின் அத்தனை வடிவங்களையும் தனது ஒற்றை மேடைக்குள் சிறைபிடித்துக் கொண்டுவந்திருக்கிறது.
படைப்பு கல்வெட்டு கவிதை மின்னிதழில் மாதந்தோறும் புதிய புதிய கவிதைகளையும் கவிஞர்களையும் அறிமுகம் செய்து வரும் படைப்புக் குழுமம். பல்வேறு தளங்களை உருவாக்கி தமிழ் இலக்கிய மேடையை விரிவுபடுத்தி தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் இன்முகத்துடன் சேவையாற்றி வருகிறது.
படைப்பு மேடை.
1) படைப்பு மேடை எனும் பன்முகத்தன்மை கொண்ட கலை இலக்கிய மேடையை உருவாக்கி அதற்குள் ஓவியம் பாடல் இசை கட்டுரை சிறுகதை என பலருக்குள்ளும் வெளிப்படுத்த முடியாமல் உறங்கிக் கிடந்த பன்முகத் திறன்களை வெளிக்கொண்டு வந்து கலைகளுக்கான வாசல் திறந்து வைத்திருக்கிறது படைப்புக்குழுமம்.
படைப்பு தகவு.
2) படைப்பு தகவு இலக்கிய திங்களிதழ் வழியே இலக்கியத்துறையில் முன்னணி எழுத்தாளர்கள் கவிஞர்கள் கலை விமர்சகர்களின் நேர்காணல்களுடன், திறனாய்வுகள், நூல் விமர்சனம், கவிதைகள், சிறுகதைகள், உலக இலக்கியங்கள் என பன்முகத் தன்மைகளை உள்ளடக்கி வாசகர்களின் பெருத்த ஆதரவோடு இணைய இதழ்களில் தனித்த அடையாளமாய் மின்னிகொண்டிருக்கிறது தகவு இலக்கிய மின்னிதழ்.
படைப்பு பதிப்பகம்.
3) மிகச் சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளை அடையாளங் கண்டு… படைப்பு பதிப்பகம் மூலம் நூல் வடிவம் தந்து படைப்பு விழாவில் இலக்கிய ஆளுமைகளின் திறானாய்வுடன் நூல் வெளியீடுகளை நிகழ்த்தி கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் கெளரவப்படுத்தி வருகிறது படைப்புக்குழுமம்.
படைப்பு வாழ் நாள் சாதனை அங்கீகாரம்.
4) மூத்த படைப்பாளிகள் இலக்கியத்துக்காற்றிய சேவைகளை நினைவில் நிறுத்தி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதளித்து வருவதில் படைப்புக்குழுமம் பெருமிதம் கொள்கிறது. வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பெருந்தகைகள் 1. ஈரோடு தமிழன்பன் 2.மு.மேத்தா 3.வண்ணதாசன் 4. யூமா வாசுகி 5.பொன்னீலன்
படைப்பு வலையொளி.
5) யூ டியூப் வலையொலியில் வாசக நெஞ்சங்களை கொள்ளை கொண்ட படைப்புக்குழுமத்தின் ஒலியும் ஒளியும் கவிதைத்துளியும், தினம் ஒரு தினம், உங்கள் குரலில் உங்கள் படைப்பு, காஃபி வித் கவிதை போன்ற எண்ணற்ற இலக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறது வலையொளி குழு
படைப்பு மீடியா.
6) படைப்பு டிஜிடெல் சினிமா தளத்திலும் கலை வடிவங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி பாடல் இசை இயக்கங்களுக்கான தளம் அமைத்துத் தருகிறது.
படைப்பு பசுமை திட்டம்…
7) மலடாக்கப்பட்ட நிலத்தையும் வளமாக்கும் நோக்கத்தில் பசுமைக்காடுகளை உருவாக்கி பூமியை மீட்கும் பயணத்தில். சிறந்த விதைப் பண்ணைகளில் தேர்வு செய்த வீரியம் மிக்க மரக்கன்றுகளை ஆயிரக்கணக்கில் நட்டும் வேளாண் காடுகளை உருவாக்கியும் செயல் பட்டு வருகிறது படைப்பு பசுமை திட்டம்.
படைப்பு விருதுகள்.
8) சிறந்த படைப்புகளை தேர்வு செய்து மாதாந்திர படைப்பாளி விருது கவிச்சுடர் விருது சிறந்த வாசகர் விருது பிற பதிப்பகங்களில் வெளியான சிறந்த நூலுக்கான படைப்பு விருது என பல்வேறு விருதுகளை ஆண்டு தோறும் படைப்பு குழுமத்தின் பிரம்மாண்டமான இலக்கிய விழாவில் புகழ் பெற்ற ஆளுமைகளின் கரங்களால் வழங்கி படைப்பாளிகளை பாராட்டி கெளரவித்து வருகிறது.
படைப்பு அறக்கட்டளை
9) இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுடன் நின்றுவிடாமல் அறம் சார்ந்த பணிகளிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு வருகிறது படைப்புக்குழுமம். புயல் மழை பேரிடர்களில் வாழ்வை இழந்து தவிக்கும் மக்களை தேடிச்சென்று அவர்களுக்கு அடிப்படைத்தேவைகளையும் அவசரகால உதவிகளையும் தனது தன்னார்வலர்களைக் கொண்டு படைப்பு அறக்கட்டளையின் மூலம் நிறைவேற்றி வருகிறது. தென் தமிழகத்தை சிதைத்துப்போட்ட பெரும் புயலின் போது களத்தில் நின்று கைகொடுத்து உதவிய படைப்புக்குழுமத்தின் சேவை எல்லோராலும் போற்றப்பட்டதை படைப்புக்குழுமம் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறது. மனிதனை மனிதன் பார்க்கவும் தீண்டவும் பயந்த கொரானா பெருந்தொற்றின் அலையடித்த காலத்தில் வீதிகள் தோறும் ஆதரவற்று நிர்கதியாய் நின்றவர்கள் கைவிடப்பட்டவர்கள் மனநலம் பிறழ்ந்தவர்கள் என ஒவ்வொருவராய் தேடியலைந்து நாளொன்றுக்கு ஆயிரத்து ஐநூறு பேர்கள் என இலக்கு வைத்து அறுபது நாட்களுக்கு தொண்ணூறாயிரத்துக்கும் மேலானவர்களுக்கு உணவளித்தும் முகக்கவசங்கள் அளித்தும் ஆதரவற்று அலைந்தவர்களை அன்புடன் அணைத்துக்கொண்டது படைப்புக்குழுமம். முகக்கவசங்கள் புழக்கத்துக்கு வராத காலத்தில் விலை கொடுத்து வாங்க தயங்கிய நேரத்தில் முகக்கவசத்தின் அவசியத்தை எளியவர்களுக்கு உணர்த்தி சென்னை முழுக்க பல ஆயிரக்கணக்கில் முகக்கவசங்கள் வழங்கி அரவணைத்தது படைப்புக்குழுமம்.
கவிஞர் காப்பீட்டு திட்டம்:
இலக்கிய வெளியில் இதுவரை யாரும் செய்திராத கவிஞர் காப்பீட்டு திட்டத்தை கொண்டுவந்து எல்லோரும் பாராட்டும் விதத்தில் செயல் படுத்தியும் வருகிறது படைப்புக்குழுமம்… பொருளாதாரத்தில் நலிவுற்ற கவிஞரை தத்தெடுத்து ஆயுள் முழுவதும் அவருக்கான உணவு உறைவிடம் என அவரது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி அரவணைத்துச் செல்கிறது.
குடும்ப நலநிதி, மருத்துவ நலநிதி, கல்வி நலநிதி என மூன்றாய் பிரித்து காலச்சூழல்களால் பாதிக்கப்பட்டு இயலாமையில் தவிக்கும் கவிஞர்களை அடையாளங்கண்டு அவர்களின் துயரங்களை துடைக்கும் முன் முயற்சியே இந்த கவிஞர் காப்பீட்டு திட்டம்.
கவிஞர்களின் குடும்பங்களை பொருளாதார சிக்கல்களிலிருந்து தூக்கி விடுவது. பெரிய அளவில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும்போது அவரது மருத்துவ செலவினங்கள் மொத்தத்தையும் ஏற்பது குழந்தைகளின் கல்விச்செலவுகள் அனைத்தையும் கடைசிவரை தாமே ஏற்று செயல் படுத்தவது என செயல் படுத்தப்பட்டு வருகிறது.
கவிஞர் காப்பீட்டு திட்டத்தின் முதல் பயனாளராக தமிழகத்தின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராய் அறியப்பட்டு சமீபத்தில் மறைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபா அவர்களை தேர்வு செய்து அவரது அடிப்படை செலவினங்களை ஏற்று அவர் மறையும் வரை செயல் படுத்தி வந்ததும் அடுத்தடுத்து கவிஞர்கள் இத்திட்டத்தில் இணைக்கப்படுவதும் படைப்பு குழுமம் பெருமிதமாய் கருதுகிறது.
கவிதைகளுக்கான மேடையுடன் துவங்கப்பட்ட படைப்புக் குழுமம் இன்று ஓவியம் இசை பாடல் என கலைகளை உள்ளடக்கிய படைப்பு மேடை, படைப்பு தகவு இலக்கிய திங்களிதழ், படைப்பு பதிப்பகம், படைப்பு அறக்கட்டளை, படைப்பு வலையொளி, படைப்பு கல்வெட்டு மின்னிதழ், படைப்பு சினிமா, படைப்பு கவிஞர் காப்பீடு திட்டம், வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரம், படைப்பு பசுமை திட்டம், படைப்பு விருதுகள், படைப்பு சமூக சேவை என தன் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே சென்றாலும் படைப்பு குழுமத்தின் அடிப்படை நோக்கம் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் உலக அரங்கில் உயர்த்திப்பிடித்து தமிழின் இலக்கிய நிறத்தை உலகறியச்செய்வதேயாகும்…
படைப்புக் குழுமத்தில் படைக்கப்படும் கலை இலக்கிய படைப்புகள் அனைத்தும் வேறுபாடுகளற்ற புதிய சமூகத்தை படைத்து மானுடப் பண்புகளை மேலும் வளர்க்கும் உன்னத நோக்கத்தில் உருவாக்கப்பட்டதேயாகும்.
துவங்கப்பட்ட நாள் முதல் தமிழ் இலக்கியத்துக்கான தனி மேடையாய் மக்களோடு மக்களாக கைகோர்த்து வலம் வரும் படைப்புக் குழுமத்தை ஒவ்வொருவரும் தங்களுடைய அடையாளமாய் எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.