“நாம் ஏன் திருப்பி அடிக்கவில்லை”

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே”

எப்பொருளும் நிலையில்லாத இந்த உலகத்தில் நிலைபெறக் கருதினோர் தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர் என்று புறநானூற்றில் பாடிச் சென்றார் பெருந்தலைச் சாத்தனார்.

தொன்மம்  நிறைந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக, தங்களை தம் இனத்தின் சுதந்திரம் நிறைந்த வாழ்விற்காக வரலாற்றின் கரங்களில் தியாகப் பக்கங்களாக அளித்துவிட்டு நம் ஆன்மாவில் என்றும் சுடர்விடும் ஒளியாய் நிறைந்திருக்கும் மாவீரர்களின் நினைவினை வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உலகத் தமிழர்கள் ஒரே அலை வரிசையில் திரண்டு போற்றிய படம் தான் கிட்டுவின் “மேதகு”

கலை வடிவில் எத்தனை காலம்மென்றாலும் தமிழர் வரலாற்றை கடத்துவோம் அதன் அவசியமே “மேதகு” என்பதை படைப்பின் அறிமுகத்தில் தெருக்கூத்து மூலம் பேசப்படுவதாக படம் தொடங்குகிறது.

ஒரு இனம் வீழ்வதும், பிறகு வீழ்ச்சியினைக் கடந்து மீள்வதும் உலகத்தியற்கை. சிங்கள பேரினவாதத்தால் வீழ்த்தப்பட்ட தமிழினம் மீண்டெழுந்து போராடிய வரலாறும் காலம் ஒருவரை எப்படி போராளியாக மாற்றுகிறது என்பதை பேசும் படமே “மேதகு”.

சிறுவயதில் நாம் ஏன் திருப்பி அடிக்கவில்லை “என்ற கேள்வி மேதகு-வை அறிமுகப்படுத்தினாலும் கடற்கரையில் நான்கு இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள் அவர்களிடம் பிரபாகரன் நானும் விளையாட வருகிறேன் என்பார், அவர்கள் நீ சிறுபிள்ளை அதனால் அங்கே ஊஞ்சல் கட்டி விளையாடு என்பார்கள் அதே நேரத்தில் அந்த

மரபொம்மையை அவர்கள் குறிப்பார்த்து அடிக்க முடியாமலும் இருப்பார்கள், அப்போது பிரபாகரன் அவர்களை விட பத்து அடி பின்னால் சென்று அந்த மரபொம்மையை சரியாக குறி வைத்து அடிப்பார். அந்த இடத்தில் “தம்பி” சிறுவன் தான் ஆனால் அனைத்து பெரியவர்களையும் கடந்து செல்வான் என்பதை இயக்குனர் பதிவு செய்த விதம் படத்தின் மையப்புள்ளி மட்டும் அல்ல வரலாற்றின் மையப்புள்ளியும் அதுவே என சொல்லத் தோன்றுகிறது.

அதுபோலவே இயக்க ஆலோசனைக் கூட்டம் ,அதன் பிறகு துப்பாக்கி பிரித்து பயிற்சி எடுப்பது ,வேணுகோபால் மாஸ்டர் மாணவன் என்று படம் நேர்த்தியாக வரலாற்றை பேசிக்கொண்டு போகிறது.

தமிழர்கள் எவ்வளவு ஒடுக்குதலில் இருந்தாலும் தமிழ் வளர்ச்சிக்குரிய பணியை செய்தார்கள் என்பதை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வடிவிலும் அதில் தமிழர் பாரம்பரிய கலைகளான பறை இசை, சிலம்பம் மற்றும் வாள் சண்டை என்று அனைத்தையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை பொன். சிவக்குமரன் காவல்துறை அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததையும், மேதகு துரையப்பாவை கொலை செய்ய முடிவு செய்ததையும் ,அடுத்தடுத்து வைத்து தமிழர் மனதில் வீரத்தை விதைத்துள்ளார், ஆம் சிவக்குமாரன் மற்றும் பிரபாகரன் இருவருமே எதிரியை விட துரோகி ஆபத்தானவன் அவனை முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள்,காலத்திற்கும் அந்த செய்தியை விட்டுசென்றார்கள்.

பண்டாரநாயகா, சிறிமாவோ, ஆல்பர்ட் துறையப்பா ,பொன் சிவகுமரன், தந்தை செல்வா மற்றும் பார்வதி அம்மா என்று வரலாற்று நூல்களில் பார்த்த முகங்களை உருவத்தோற்றம், உடல் மொழி என்று கண்முன்பாக கொண்டு வந்து காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.

மேதகுவை கடத்தி செல்லும்

கதைச்சொல்லியாக கூத்து  இசை கலைஞர்களான ராஜவேல் மற்றும் பெருமாள் இருவரும் சிறப்பாக தங்கள் பணியை செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் பிரவீன் குமார் மூத்த இசையமைப்பாளர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு புதுவை இரத்தினதுரை மற்றும் பாவேந்தரின் வரிகளுக்கு அழகான இசையை வெளிப்படுத்தியுள்ளார்.

வசனங்களை இசை மறிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், மேதகுவை அவர் தந்தை குழந்தையாக கையில் ஏந்தும் இடம், கடற்கரையில் சிறு பிள்ளையான பிரபாகரன் குறி பார்த்து அடிக்கும் இடம், நாம் “ஏன் திருப்பி அடிக்கவில்லை” என்று கேட்குமிடம், இடைவேளை பேருந்து எரிப்பு, துரையப்பா கொலை என்று பல இடங்களில் இசையால் ஆட்சி செய்துள்ளார்.

அடுத்தது ஒளிப்பதிவு ஒரு திரைப்படத்தின் காட்சிகள் எவ்வளவு நேர்த்தியாக படமாக்கினாலும் அதை கண்கள் வழியாக மக்கள் நிறுத்துவது ஒளிப்பதிவு, இப்பணியை நேர்த்தியாக செய்திருக்கிறார் ரியாஸ்.

இன்றைய இளைஞர்களை பொறுத்தவரை பிரபாகரன் பாகுபலி பிரபாஸ் போன்று 500 பேரை ஒரே நேரத்தில் அடிப்பார், அட்டை கத்தி கதாநாயகர்கள் போல் நான்கு பக்க வசனங்களை மூச்சு விடாமல் பேசுவார் அவரைப் பார்த்தாலே அனைவரும் நடுங்குவர் என்று எண்ணிக்கொண்டு இருக்கையில் அமைதியான ஆளுமையான அவதாரம் ,எங்கள் “மேதகு” என்பதை காட்சிக்கு காட்சி வெளிப்படுத்தி உள்ளார். மேதகு-வாக வாழ்ந்த குட்டிமணி ,இவர் தலைவரை அவராகவே வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் கதாப்பாத்திரங்கள் தேர்வு, இசை ,ஒளிப்பதிவு ,கத்தரிப்பு என்று அனைத்திலும் இயக்குனர் கிட்டு தன்னை முழுமையாக நிலை

நிறுத்தியுள்ளார் ,ஒரு வரலாற்று ஆவணத்திற்கு இவ்வளவு சிரத்தை எடுத்தது பெரிய விடயம்.

உலகில் தன் இனத்திற்காக, மொழிக்காக தன்னைத்தானே தனிமனிதனாய் எரித்துக் கொண்டும் வெடித்துக் கொண்டும் இறந்த தமிழின இளைஞர்கள் தன் இனத்தின் அறவுணர்ச்சி மூலமாகவே ஆன்ம பலம் அடைந்தார்கள்.

வரலாற்றின் நெடிய பக்கங்களை பார்க்கும்போது வேறு எந்த இனத்தினை காட்டிலும் தன் மொழிக்காகவும், தன் இனத்திற்காகவும் கரும்புலிகளாக, மொழி போராட்ட வீரர்களாக திகழ்ந்து தான் வீழ்ந்து, இனம் செழிக்க களம் புகுந்த மாவீரர்கள் உடைய ஒரே இனம் நம் தமிழினம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

நம் முன்னோர்களின் வழித்தோன்றலாய் தோன்றி ,உலகினை ஒற்றை இயக்கத்தின் வாயிலாக எதிர்த்த அத்துனை மாவீரர்களுக்குமான காணிக்கையாகவே இப்படத்தை நாம் பார்க்க வேண்டும்.

“மேதகு” படம் அல்ல ஒவ்வொரு தமிழர்களும் கற்க வேண்டிய பாடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *