நான் படிக்காத நூல் ஒன்றை எனக்கு தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் –
என்று சொன்னவரை உங்களுக்கு பிடிக்குமா…?
" Government of the people: By the people, for the people " - என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தியவரைப் பற்றி நாம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
1809 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள கெண்டக்கி மாநிலத்தில் உள்ள ஹார்டின் என்ற ஊரில் அடர்ந்த காட்டில் எங்கோ ஒரு மூலையில் மரத்தால் ஆன குடிசை ஒன்றில் வறுமை மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர்.
ஜனநாயகம் என்பதற்கு தெள்ளத் தெளிவான விளக்கம் அளித்த இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே தன் தாயை இழந்தாலும் மாற்றாந்தாயின் அன்பில் வளர்ந்தது இவரது அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.
தனது 19ஆவது வயதிலேயே வாழ்க்கையின் மேடுப் பள்ளங்கள் என்னவென்று உணர தொடங்கி விட்டவர், நிலத்தை அளக்கும் சர்வேயராகவும் மளிகை கடைக்காரராகவும் கிராமத்து தபால்காரராகவும் பல பணிகள் செய்தவர், அதனால் பாமர மக்களோடு நெருங்கி பழகியவர்.
அவர் அழகானவர் இல்லை ஆனால் மிகவும் அன்பானவர்.
இவர் வறுமையில் வாடிய போதும் வருமானம் குறைந்த போதும் கற்பதை மட்டும் நிறுத்தவில்லை.
நாமும் நம் பிள்ளைகளும் சிறுவயதில் நம்மை ஆசிரியராக பாவித்து கொண்டு நம் நண்பர்களை மாணவர்களாக்கி விளையாடி இருக்கிறோம்.
ஆனால் இவர் சிறு வயதில் நீதிபதியாகவும் இவரே வக்கீலாகவும் மாறி மாறி நடித்து, விளையாடி தானும் மகிழ்ந்து சுற்றி இருப்பவர்களையும் மகிழ்வித்து இருக்கிறார்.
அந்த ஆர்வதில் கிட்டத்தட்ட 12 மைல்கள் தூரம் வெறும் காலோடு நடந்து போய் ஒரு வழக்கறிஞரிடம் சில சட்ட புத்தகங்களை இரவல் வாங்கி வந்து தாமாகவே பயின்று சட்டம் பற்றிய நுணுக்கங்களையும் தாமாகவே கற்று தன்னை ஒரு வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டவர்.
ஏழை மக்களின் நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக பல வழக்குகளில் வாதாடி வெற்றிப் பெற்றுள்ளார்.
" உன் எண்ணம் எதுவாக இருக்கிறதோ நீ அதுவாகவே மாறுகிறாய் "
என்ற வாக்கின்படி சிறு வயது முதல் தான் ஒரு நாள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக மாறுவேன் என்று சொன்ன அவரது வாக்கின்படி அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர். ஆம். 04/03/1861 முதல் 15/04/1865 வரை அமெரிக்காவின் 16 வது குடியரசு தலைவராக பதவி வகித்தவர் தான் இந்த ஆபிரகாம் லிங்கன்.
மாணவப் பருவத்தில் ஆபிரகாம் லிங்கனுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம் சொந்தமாக புத்தகம் வாங்குவது அவரால் முடியாத காரியம் என்பதால் நீண்ட தூரம் நடந்து சென்று நகரங்களில் வசிப்பவர்களிடம் கெஞ்சி கேட்டு புத்தகம் வாங்கி வந்து படிப்பாராம்.
சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து எளிமை, நேர்மை, உழைப்புக்கு உதாரணமாக திகழ்ந்து, பல போராட்டங்களைக் கடந்து, பல அவமானங்களைத் தாங்கி, அடிமைத்தனத்தை அறுத்தறிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்து வெற்றி கொடி நாட்டிய ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு நாம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
எனக்கு ஒரு மரத்தை வெட்ட எட்டு மணி நேரம் கிடைத்தால் அதில் 7 மணி நேரத்தை கோடாரியை கூர்மையாக்க செலவிடுவேன்_
லிங்கன்
நூல் : ஆப்ரஹாம் லிங்கன்
ஆசிரியர் : முரளி பாலன்
விலை : ₹ 38
பதிப்பு : கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்.