க்வாண்டம் கோட்பாடும் நனவுநிலையும்

க்வாண்டம் இயற்பியல் என்பது பொருள், ஆற்றல் ஆகியவற்றின் அடிப்படை மட்டத்தைக் குறித்த ஆய்வாகும். இயற்கையைக் கட்டமைக்கும் அம்சங்களின் பண்புகளையும் நடத்தைகளையும் அறிவதற்கான கல்வியாக, க்வாண்டம் இயற்பியல் விளங்குகிறது. க்வாண்டம் சோதனைகள் பெரும்பாலும் எலக்ட்ரான்கள், ஃபோட்டான்கள், க்வாண்டா அலகுகள் போன்ற மிகச்சிறிய துகள்கள் கொண்டு நடத்தப்படுகின்றன. இருந்தாலும், இவற்றைப் பெரிய பரப்புகளில் அறிவது சிரமமாகும். அன்றாட நடவடிக்கைகளில் க்வாண்டம் இயற்பியலின் பங்குப் பெருமளவு இருப்பதைக் குறித்து அறிவது அறிவியலில் இருக்கும் இடைவெளிகளை நிரப்புவதாக உள்ளது. க்வாண்டம் இயற்பியல் மூலம்தான் மனிதனின் நனவுநிலை குறித்த பல மர்மங்கள் தெரியவரும் என உயிரி அறிவியல் சார்ந்த நிபுணர்கள் நம்புகிறார்கள். அதனால் க்வாண்டம் கோட்பாட்டை அறிந்து கொண்டு அது எவ்வாறு மனித இயக்கத்தில் குறிப்பாக, நனவுநிலையில் பங்களிக்கிறது என்பதை அறிவது நனவுநிலை பற்றிய ஒரு தெளிவான விளக்கமாக இருக்கும். நனவுநிலை பற்றி அறிவியல் ஒரு நிலையான விளக்கத்தை இன்னும் தரமுடியாத நிலையில் க்வாண்டம் கோட்பாடு மனித உடலில் குறிப்பாக மூளையில் நடக்கும் செயல்பாடுகளை அறிய உதவுகிறது. இந்தக் கட்டுரையில் க்வாண்டம் கோட்பாட்டை விளக்கி அது எப்படி நனவுநிலையின் செயல்பாடுகளுக்குக் காரணமாக அமைகிறது என்று பார்க்கலாம். 

க்வாண்டம் கோட்பாடு

ஒளியும் பருப்பொருளும் அலை, துகள் என்ற இரு வகையான பண்புகளைக் கொண்டிருக்கின்றன. அதாவது ஒளி அலை போலவும் உள்ளது. துகள் போலவும் உள்ளதாகும். ஒளி எப்படி அளக்கப்படுகிறதோ அதைக் கொண்டு அது அலையாக இருக்கிறதா துகளாக இருக்கிறதா என்பது தெரியவரும். ஆனால் அவை தற்காலத்து ஆய்வுகளின் படி அலையும் இல்லை, துகளும் இல்லை என்று கொள்ளப்பட்டிருக்கின்றன. அவை க்வாண்டம் பொருள்களாகும். அவற்றை இன்னதென்று அறிவது மிகவும் கடினமானது. க்வாண்டம் கோட்பாட்டின் சில இன்றியமையாத கூறுகள் உள்ளன. அவை: இரட்டைத் துளை பரிசோதனை, மீநிலைப்பாடு, பின்னல்.

இரட்டைப் பிளவு செய்முறை (Double slit experiment)

க்வாண்டம் கோட்பாட்டை விளக்கிய முக்கியமான செய்முறை இரட்டைப் பிளவு செய்முறையாகும். இதில் ஓர் ஒளிக்கற்றை இரண்டு குறுகிய நெருக்கமான பிளவுகளுள் செலுத்தப்பட்டு ஒரு திரையில் விழவைக்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்றால் ஒளியிலுள்ள ஃபோட்டான்கள் துகள்களாக திரையில் ஒளியாகவும் இருளாகவும் இருக்கும் நீளக் கற்றைகளை ஏற்படுத்துகின்றன. இந்த இரண்டு துளைகள் வழியாக உட்புகும் ஒளியானது நீரில் கல்விழுந்தால் ஏற்படும் அலைகள் போல் பிரிகிறது. அப்படிப் பிரிவதில் முகடுகள் மட்டும் திரையை அடைகின்றன. அவைக் கற்றையாகத் தெரிகின்றன. இதிலிருந்து ஒளி அலையாகவும் துகளாகவும் உள்ளதாகத் தெரிகிறது. படம் 1 அதைக் காட்டுகிறது.

அடுத்து இரு துளைகளில் ஒன்றை மூடிவிட்டு மற்றொன்றில் மட்டும் ஒளிக்கற்றையைச் செலுத்தினால் ஒரே ஒரு நீளக்கற்றை மட்டும் திரையில் விழும். ஆனால் இரு துளைகள் இருந்தால் பல நீளக்கற்றைகள் உருவாகின்றன. இதற்குக் காரணம் அவை அலை போல் பரவுகின்றன. இப்போது ஒவ்வொரு ஃபோட்டானாக இரு துளைகளைத் திறந்திருக்கும் வழியில்விட்டாலும் அதே போல் நீளக்கற்றைகள்தான் திரையில் உருவாகிறது. படம் 2 அதைக் காட்டுகிறது.

அடுத்து ஒவ்வொரு ஃபோட்டானாக அந்தத் துளைகள் வழியாக விடுவதைக் கண்காணித்தால் அவை வெறும் இரண்டு நீளக்கற்றைகளை மட்டும் உருவாக்குகின்றன. படம் 3 அதைக் காட்டுகிறது. அவற்றைக் கண்காணிக்காமல் இருந்தால் அவை பல நீளக்கற்றைகளை உருவாக்குகின்றன. இதுதான் க்வாண்டம் மாயமாகவும் க்வாண்டம் புதிராகவும் உள்ளது.

மீநிலைப்பாடு (superposition) 

ஒரே நேரத்தில் ஒரே பொருள், ஒரே அணு, ஒரே துகள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிலைகளில் இருப்பதைக் குறிக்கிறது. 

நிலையற்றது பற்றிய கோட்பாடு(Uncertainty Principle)

 ஒரு பொருள் இருக்கும் நிலையும் அதன் வேகமும் ஒரே சமயத்தில் அறிந்துகொள்ள முடியாதபடி இருக்கும். எடுத்துக்காட்டாக, ஓர் எலக்ட்ரானின் நிலையை அளந்தால் அதன் வேகம் என்னவென்று தெரியாது. அதே போல்தான் அதன் வேகத்தை அளந்தால் அது எங்கிருந்தது என்ற நிலையை அறிய முடியாது. 

பின்னல்(entanglement)

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டப் பொருள்கள் குறிப்பிட்ட வகைமையில் பின்னிக் கொண்டிருந்தால் அவை எத்தனை தொலைவு இருந்தாலும் அவை ஓர் அமைப்பாகவே இருக்கும். அதாவது இரு ஃபோட்டான்கள் எனப்படும் அணுவின் உறுப்புகள் பின்னல் பிணைப்பைக் கொண்டிருந்தால் அவற்றைப் பிரித்து ஒன்றை எத்தனைத் தொலைவு கொண்டு சென்றாலும் இரண்டும் பிணைந்தே இருக்கும். ஒன்று இல்லாமல் மற்றொன்றின் பண்பைக் கூறமுடியாது. அதே போல் ஒன்றைப் பற்றி அறிந்தால் மற்றொன்றின் பண்பும் தெரிந்துவிடும். 

செவ்வியல் கோட்பாடும் புதிய அறிவியலும்

செவ்வியல் இயற்பியல் எனப்படும் தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்பியலில் பொதுப் புத்திச் சார்ந்த உடன்பாடு ’புறவய’ உலகுடன் இணைந்துள்ளது. அது தெளிவான, தீர்மானமான வழியில் உருவாகியதாகும். அது மட்டுமல்லாமல் சரியாகக் கட்டமைக்கப்பட்ட கணித சூத்திரங்களில் இயங்குவதும் ஆகும். மேக்ஸ்வெல், ஐன்ஸ்ட்டீன் போன்றவர்களின் கோட்பாடுகளுக்கும் அசலான நியுட்டோனியன் அடிப்படையிலான கோட்பாடுகளுக்கும் அது பொருந்துகிறது. மேலும் அந்தப் புறவய உலகத்தைச் சார்ந்தவைதான் மனித உடலும் மனமும். அவையும் செவ்வியல் சமன்பாடுகளால்தான் உருவாகி வளர்ந்திருக்கின்றன. நாம் விரும்பி நடக்கும் நடத்தைகள் எப்படி இருந்தாலும் நம் எல்லாச் செயல்பாடுகளும் இந்தச் சமன்பாடுகளால் தாக்கம் கொண்டவை. இந்த வகையான விளக்கங்கள்தான் பெரும்பாலும் இயற்கையின் இயல்பு, நம் விருப்பு வெறுப்புகள், கட்டிலா சித்தம் போன்ற அனைத்துக்கும் தீவிரமான தத்துவங்களின் பின்புலமாக உள்ளன. 

க்வாண்டம் கோட்பாடும் புரிதலும்

ஆனால் பலருக்கும் க்வாண்டம் கோட்பாடுகளையும் இந்த அடிப்படை அமைப்புக்குள் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து செவ்வியல் இயற்பியலுக்கும் உலகத்தின் இயல்புக்கும் இருக்கக்கூடிய வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கியதிலிருந்து இந்த எண்ணம் தத்துவவியலாளர்களுக்கும் தோன்றியது. ஆனால் அணுக்கள், மூலக்கூறுகள், துகள்கள் நிலையில் க்வாண்டம் கோட்பாடு துல்லியமானதாகத்தான் இருந்தது. ஆனால் நிலையற்றத் தன்மை எங்கு ஏற்பட்டது என்றால் பெரிய பரப்பிலான செயல்பாடுகளிலும் அதுவும் செவ்வியல் விளக்கங்கள் சார்ந்த உலகத்தைக் குறித்த வரையறையிலும்தான் ஏற்பட்டது. ஏனெனில் க்வாண்டம் கோட்பாடு இயற்பியலின் உண்மையை மாற்றி அமைத்தது. தத்துவத்தின் பல கேள்விகளுக்கு ஆழமாக விடை காண விழையும் மாயத்தன்மை பொருந்திய துல்லியமான கோட்பாடாக க்வாண்டம் கோட்பாடு உள்ளது. உலகம் எப்படி இருக்கிறது, ‘நம்’முடைய ‘அறிவை’ எது கட்டமைக்கிறது என்பதை அது கூறுகிறது.

நனவுநிலை குறித்த நம்பிக்கைகள்

ஒரு வகையில் சொன்னால், நனவுநிலை என்பது ஒரு பெரிய உடல் என்ற அமைப்பின் உட்கூறாகவும் அது தானாகவே சுயமாக எதுவும் ‘செய்வதில்லை’ எனவும் நம்பப்படுகிறது. இதற்கு மாறாக, நனவுநிலையின் பண்பு இறை சார்ந்ததாகவும் அல்லது மாயத்தன்மை உள்ளதாகவும் கொள்ளப்படுகிறது என்ற ஊகம் உள்ளது. மேலும் அது இன்னும் மனித இனத்திற்கு வெளிப்படுத்தப்படவில்லை என்றும் இயற்கையின் தேர்வின் மூலம்தான் அதன் பண்பு தெரியவருகிறது என்றும் ஊகிக்கப்படுகிறது. அப்படி ஊகித்தால் அதை அறிவது பற்றிய ‘நோக்கம்’ முழுமையாகத் தவறிவிடும். எனவே நனவுநிலை என்பது விழிப்புணர்வு என்ற சொல்லுடன் இணைத்துப் புரிந்துகொள்ளப்படக்கூடியது. 

நனவுநிலை விளக்கங்கள்

தற்கால அறிவியல், நனவுநிலையைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது. உளவியலாளர்களும் உயிரியலாளர்களும் நினைவு, மொழி, அறிதல் கொண்டு உருவாகும் திறமையையும் மனித அனுபவத்தையும் நனவுநிலை என்ற தவறான புரிதலில் இருந்திருக்கிறார்கள். சமீபகாலம் வரை நனவுநிலை என்றால் என்ன என்ற கேள்விக்கு விடை காணும் ஆய்வு தொடங்கவில்லை. நனவுநிலை அனுபவம் குறித்த செவ்வியல் தத்துவத்தின் கேள்வி உளவியலிலும் உயிரியலிலும் மறைக்கப்பட்ட ஒன்றாகவே இது நாள் வரை இருந்திருக்கிறது. அறிவுப்புலத்தைக் குறித்து ஆய்வு செய்த அறிவியலாளர்களும் நரம்புமருத்துவர்களும் நனவுநிலை என்றால் என்ன என்ற கேள்வியைப் புறக்கணித்தார்கள். அந்தக் கேள்விக்கான பதில் ‘தத்துவரீதியிலானது’ என நினைத்தார்கள். அனுபவப்பூர்வமாக விடைகாண அவர்கள் முயலவே இல்லை. 

நனவுநிலையும் மனமும்

நனவுநிலை மூளையில் செயல்படுகிறது. அல்லது தூண்டப்படுகிறது அல்லது எழுப்பப்படுகிறது எனலாம். இது எப்படி நடக்கிறது என்ற விவாதம் தொடர்கிறது. நனவுநிலை புற உலகத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது என்ற விவாதமும் தொடர்கிறது. மனமும் உடலும் வேறுவேறு என்ற இருமையின் நேர்மறையான, எதிர்மறையான சிக்கல்களாக இந்த விவாதங்கள் உள்ளன. அதாவது நம் ‘மனதில்’ (அல்லது நனவுநிலையில்) இன்னதென்று அடையாளம் காணமுடியாத, ஸ்தூலமற்ற, இதுவரை பெயரிடப்படாத ‘ஒன்றை’க் கொண்டிருக்கிறோம். அந்த ஒன்று புறஉலகத்தால் தூண்டப்படுகிறது. அதே போல் புறஉலகமும் அந்த ‘ஒன்றால்’ தாக்கம் பெறும். இப்படி நனவுநிலையின் பண்பை விளக்கினால் அது தத்துவத்தின் சிக்கல்களாகிவிடும்.  இதனை ரோஜர் பென்ரோஸ், ‘முதலாவது, நனவுநிலை அறிவியல் மூலம் விளக்கப்படக்கூடிய ‘ஒன்று’ என்று ஊகிக்கலாம். இந்த ‘ஒன்று’ ‘ஏதோ ஒரு செல்பாட்டைச் செய்கிறது என்ற ஊகம் அடுத்து உள்ளது. அப்படி அந்த நனவுநிலைச் செய்யும் செயல்பாடு அதைக் கொண்டிருக்கும் உயிரிக்கு உதவுகிறது. அதனால் நனவுநிலை இல்லாத உயிரி செயல்திறன் மிக்கதாக இருக்காது” என்று விளக்குகிறார்.

நனவுநிலையின் செயல்பாடு

மூளையில் நடக்கும் பல்வேறு அளவீடுகளின் உபவிளைவுதான் நனவுநிலை என்ற கருதுகோளை வைத்துக் கொண்டு அறிவியல் அதனை அணுகுகிறது. பெரும் ஆறாய் ஊற்றெடுக்கும் தகவல்களை மூளை ஒன்றிணைக்கிறது. அது மட்டுமல்லாமல் புலன்களிலிருந்து பெறும் தகவல்களைப் பிரித்தறியும் அறிவு கொண்டு வலைப்பின்னல் போல் மூளைக்குள் இருக்கும் அனுபவம் நனவுநிலை சார்ந்த அனுபவமாகிறது. இந்த அனுபவம் நினைவில் தங்கிவிடுகிறது. அல்லது படிந்துவிடுகிறது. அதிலிருந்து எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது அதனை ஒலிபரப்புவதுதான் நனவுநிலையின் வேலை என்று சில அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

நனவுநிலையும் க்வாண்டம் கோட்பாடும்

பென்ரோஸின் கருத்துப்படி மனிதனின் நனவுநிலை அளவீட்டிற்கு அப்பாற்பட்டது. எந்தக் கணினி மூலமும் அதன் முழுமையான பண்பைச் சொல்ல முடியாது என்கிறார். மூளையில் நடக்கும் மாற்றங்களை க்வாண்டம் கோட்பாட்டினால் விளக்கலாம். அதன் மூலம் நனவுநிலையை விளக்குவதாகக் கொள்ள முடியாது. மேலும் உடலும் அறிவும் பிளவுபட்டிருப்பதாகக் கொண்டு இதனை ஆராய முடியாது. அறிவியிலிலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் மெய்யியல் துறை சார்ந்த விளக்கமாகத்தான் நனவுநிலை குறித்த விளக்கம் உருவாகிறது. அதை அறிவியலுடன் இணைக்க இன்னும் ஆழமான ஆய்வு தேவைப்படுகிறது. க்வாண்டம் கோட்பாட்டை மூளையின் செயல்பாட்டுடன் இணைப்பது குறித்துத்தான் ரோஜர் பென்ரோஸ் ஆய்வு செய்கிறார். க்வாண்டம் கோட்பாட்டைக் கொண்டு இந்தச் செயல்பாடு விளக்கப்படாவிட்டால் அறிவியல் முழுமை பெறாது. அதனால்தான் ரோஜர் பென்ரோஸ் நனவுநிலை க்வாண்டம் கோட்பாட்டின் மூலத்தைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறார். எல்லா இயந்திரங்களும் எப்படி வேலை செய்கின்றன என்பதற்கான கையேடு கொண்டிருப்பதைப் போல் நனவுநிலை என்பது விழிப்புணர்வு என்பதை மட்டும் கொண்டு விளக்கப்பட முடியாதது. எனவே க்வாண்டம் கோட்பாட்டின் ஆழமான அறிவைக் கொண்டுதான் நனவுநிலை விளக்கப்பட முடியும் என பென்ரோஸ் நினைக்கிறார்.

நனவுநிலையும் நரம்பணுக்களும்

நரம்பணுக்களில் உள்ள நுண்குழல்கள் க்வாண்டம் செயல்பாட்டினை வழிநடத்தும் உறுப்புகள் என பென்ரோஸும் ஸ்டூவர்ட் ஹேமர்ஆஃப்பும் ஒரு கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். நுண்குழல்களில் ஏற்படும் அதிர்வு க்வாண்டம் கோட்பாட்டின் அடிப்படையில் அளந்தறியத் தக்கது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.  சீனாவில் நடைபெற்ற ஓர் ஆய்வில் நரம்பணுக்களில் க்வாண்டம் கோட்பாட்டின் சில கூறுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. மூளையிலுள்ள நரம்பணுக்களில் நுண்குழல்கள் ஜியோமிதி பின்னம் அல்லது பகுவல் அல்லது அரிலி (fractal) போன்ற அமைப்பில் உள்ளன. அதனால் அவை க்வாண்டம் செயல்பாட்டிற்கு உகந்தவையாக இருக்கின்றன என்று சீனாவில் நடைபெற்ற ஓர் ஆய்வின் சோதனை சொல்கிறது. 

நுண்குழல்களின் ஜியோமிதி பின்னம் இருமைப் பட்டகமாகவோ முப்பட்டகமாகவோ இருக்காது. இரண்டுக்கும் இடையில் இருக்கும். இதற்கு இயற்கையில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. காலிஃப்ளவர் பூக்கள் திரும்பத் திரும்ப ஒரே அமைப்பில் உருவாகும் ஜியோமிதி பின்னம் போன்ற வடிவத்தைக் கொண்டவை. நரம்பணுக்களும், நுரையீரலில் உள்ள அமைப்பும் இது போன்ற ஜியோமிதி பின்னம் அமைப்பைக் கொண்டவை. இதே போன்ற அமைப்புகளை ஆய்வுக் கூடத்தில் வைத்துக் கொண்டு அவற்றில் க்வாண்டம் செயல்பாட்டை அளக்க முடிந்திருக்கிறது. எனவே க்வாண்டம் செயல்பாடு மூளைக்குள் நடப்பதை இந்த ஆய்வும் நிரூபித்திருக்கிறது. 

மூளையும் க்வாண்டம் செயல்முறையும்

மூளைக்குள் க்வாண்டம் செயல்பாடு இருக்கிறதா என்பதை வெளிப்படுத்துவது கண்ணிலிருக்கும் ஒளித்திரைதான். எடுத்துக்காட்டாக பார்வையில்படும் ஒரு செய்தி மூளையை எப்படி செயல்பட வைக்கிறது என்பதற்கு க்வாண்டம் நிலையில் இந்தச் செயல்பாட்டைக் காணலாம். பார்வையின் தகவல் அதாவது ஒளியாக உள்ள ஒரு துகள் (ஃபோட்டான்) கண்ணின் ஒளித்திரையை எட்டும் போது என்ன ஆகிறது என்றால் (இந்தத் துகள் முன்பே சொன்னது போல அலையாகவும் துகளாகவும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்) அலையின் ஒரு முகடு கண்ணின் திரையைத் தொட்டு திரும்பிவிடும். மற்றொரு முகடு நரம்பணுவைத் தூண்டும். இப்போது கண்பார்த்தத் தகவல் என்ற (ஒளியில் இருக்கும்) துகள், அலையாக இருப்பதால் ஒன்று மூளையின் ஆய்வுப் பரப்பைத் தூண்டும். மற்றொரு அலைமுகடு எதிர் திசையில் அதாவது கண்திரையின் எதிர் திசையில் பயணிக்கும். எனவே இப்போது அந்தத் துகளின் மீநிலைப்பாடு க்வாண்டம் நிலையில் இருக்கிறது. அதே போல அதன் மீநிலைப்பாட்டைத் தூண்டப்பட்ட நரம்பணுவும் புரிந்துகொள்கிறது.  அது மூளையின் மற்ற நரம்பணுக்களைத் தூண்டி வந்தத் தகவல் எத்தகையது என்பதையும் அதற்கு எப்படிப்பட்ட எதிர் வினையை ஆற்றவேண்டும் என்பதையும் நிர்ணயிக்க வைக்கிறது. இந்தச் செயல்பாடு முழுமையும் க்வாண்டம் நிலையில்தான் நடந்திருக்கிறது.

மூளையின் செயல்பாடும் நனவுநிலையும்

நனவுநிலை என்ற புலப்பாடு மூளையில் அளவீடற்ற அல்லது திட்டமிடாத உடலியல் செயல்பாடாக நடக்கும் போது எழுகிறது என்று பென்ரோஸ் விவாதிக்கிறார். எனவே இந்த வகையான திட்டமிடாதச் செயல்பாடு உயிரற்ற பருப்பொருளுக்குள்ளும் நடப்பதாகவே ஊகிக்கவேண்டியிருக்கிறது. ஏனெனில் மனித மூளையும் அது போன்ற உயிரற்ற பருப்பொருள்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அது மட்டுமல்லாமல் அண்டத்திலுள்ள அந்த உயிரற்றப் பருப்பொருள் இயற்பியல் விதிகளைத் திருப்திப்படுத்துவது போல் மூளைக்குள் இருந்தும் அவை அதே இயற்பியல் விதிகளைப் பின்பற்றுகின்றன என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். மூளையின் அமைப்பு திட்டமிடப்படாத, இயற்பியல் விதிகளையும் வெளிப்படுத்தக்கூடியதாகவே உள்ளது. அது போன்ற அமைப்பு மற்ற சாதாரண பொருள்களில் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நரம்பணுக்களும் வேதியியல்வினையும்

நனவுநிலை என்பதை ‘எழுச்சியுறும் நிகழ்வு’ அல்லது தேர்ந்த செயல்பாடு என அழைக்கலாம். அதற்குக் குறிப்பிடத்தக்கப் புதிய இயற்பியல் விதிகள் தேவை இல்லை. உயிரற்றப் பருப்பொருள்களுக்குரிய நாம் அறிந்திருப்பது போன்ற இயற்பியல் விதிகள் நனவுநிலைக்கு இல்லை. எனவே மூளையில் உள்ளார்ந்த ஓர் அமைப்புத் திட்டமிடப்படாத இயற்பியல் விதியைப் பின்பற்றுகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. 

அணுக்களையும் மூலக்கூறுகளையும் கட்டுப்படுத்தும் வேதியியல் விசைகள் க்வாண்டம் எந்திரவியலைச் சார்ந்த மூலத்தைக் கொண்டவையாக உள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நரம்பு மண்டலத் தகவல்களும் ஒரு நரம்பணுவிலிருந்து மற்றொரு நரம்பணுவுக்கு இணைக்கும் கண்ணிகளில் பரிமாறப்படுவது வேதியியல் வினைகள் மூலமாகத்தான் என்பதைக் கவனத்தில் எடுத்துப் பார்க்கையில் அதுவும் க்வாண்டம் எந்திரவியலின் மூலத்தைக் கொண்டிருப்பதாகவே அணுகவேண்டியுள்ளது. பிரபல நரம்பியல் மருத்துவர் ஜான் ஈக்கிள்ஸ் நரம்பணுக்களின் தகவல் பரிமாற்றத்தில் க்வாண்டம் விளைவுகள் இருப்பதாகவே வாதிடுகிறார். அதே போல் இன்னும் பலர் (பென்ரோஸ் உட்பட) க்வாண்டம் விளைவுகள் மூளையில் இருப்பதற்கான ஆதாரத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். 

மூளைக்குள் க்வாண்டம் செயல்பாடு

மூளைக்கும் நடக்கும் வேதியியல் விசைக்கு க்வாண்டம் இசைவிணக்கம் (coherence) என்பது தேவைப்படுகிறது. ஃப்ராலிக் என்ற அறிவியலாளர் மீகடத்தும்திறன் (superconductivity), மீபாய்திறன் (superfluidity) குறித்து ஆய்வு செய்கையில் சாதாரண தட்பவெப்பநிலையில் க்வாண்டம் விளைவுகள் நடக்கின்றன என்பதை நிரூபித்தார். அது மட்டுமல்லாமல் உயிரியல் அணுக்களும் மின்காந்தப் புலத்தின் நுண் அலை கதிர்வீச்சின் அளவான பத்தாயிரம் கோடி ஹெட்ஸுடன் ஒத்திசைகின்றன என்பதையும் அவர் கண்டறிந்தார். இதுதான் மூளையில் க்வாண்டம் விளைவுகள் இருப்பதற்கான அறிகுறிகளைக் கொடுக்கும் ஆய்வுகளுக்கு இட்டுச் சென்றது. 

நரம்பணுக்களும் தகவல் கடத்தலும் 

நரம்பு அணுக்களுக்குள் நுண்குழல்கள் ’கடத்தி இல்லாமலேயே மின்காந்தப் புலங்களை எடுத்துச் செல்லும் அலைச்செலுத்திகளாக’ இருக்கின்றன என்ற கருத்தை ஹேமர்ஆஃப் (1974) முன்வைத்தார். இயற்கை இது போன்ற உயிரியல் அணுக்களிலுள்ள நுண்குழல்களைச் சில நல்ல நோக்கங்களுக்குப் பயன்படுத்துகிறது என்பதை நம்பவேண்டும். இந்த நுண்குழல்கள் அவற்றின் சூழலுடன் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை பிணைந்து கொள்ளாமல் மின்காந்தப் புலங்களைக் கடத்துவதில் க்வாண்டம் கதி அந்த நுண்குழல்களுக்குள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

நரம்பணுக்களிலுள்ள நீரின் பண்பு

அடுத்து மிக முக்கியமான ஓர் அம்சமும் உள்ளது. அது தண்ணீரின் பண்பு. நரம்பணுக்களிலுள்ள நுண்குழல்கள் உள்ளீடில்லாதவையாக வெறுமையானவையாகத் தோற்றம் தருகின்றன. க்வாண்டம் அலைவுகளுக்கு உரிய கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளைக் கொண்டவையாக அவை இருக்கின்றன. அவை ‘உள்ளீடற்று’ ‘வெறுமையாக’ ‘காலியாக’ இருக்கின்றன என்பதற்குப் பொருள் அவை தண்ணீரை மட்டுமே கொண்டிருக்கின்றன (அந்த நீரில் கரைந்த அயனிகள் கூட இல்லை) என்பதாகும். 

நரம்பணுக்களின் அசையா நீரின் தகவல் கடத்தல் பண்பு

’நீர்’ இருப்பதாகச் சொன்னால் வேகமாக இயங்கும் மூலக்கூறுகளைக் கொண்ட சரியாகக் கட்டமைக்கப்படாத அமைப்பு கொண்ட க்வாண்டம் இசைவிணக்கம் நடைபெற வாய்ப்பற்ற ஒன்று எனக் கருதிக்கொள்வோம். ஆனால் இந்த உயிரியல் அணுக்களிலுள்ள நுண்குழல்களில் காணப்படும் நீர் சாதாரண நீரைப் போல் கடலிலுள்ளதைப் போல் ஒழுங்கற்றதாக, மூலக்கூறுகள் இசைவிணக்கம் இல்லாமல் நகருவதாக உள்ளதல்ல. ஆனால் நுண்குழல்களிலுள்ள நீர் ஒழுங்கான நிலையில் உள்ளது. (அதனை ‘அசையா’ நீர் என்று ஹேமர்ஆஃப் குறிப்பிடுகிறார்). அந்த நீர் 3 நானோமீட்டர் அளவுக்கு உயிரியல் அணுக்களின் கூழில் உள்ளது. உயிரியல் அணுக்களிலுள்ள நுண்குழல்களிலும் காணப்படும் இந்த நீர்தான் க்வாண்டம் இசைவிணக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது என்பதை ஏற்பதற்கு எந்தத் தடையும் இல்லை (ஜிபு, பிறர் 1994).

  • நனவுநிலை என்பது விழிப்புணர்வைச் சுட்டுகிறது. உள்ளார்ந்தும் புறத்திலும் நிகழும் உலகத்தின் அகநிலை அனுபவங்களை உணர்த்துவதாக நனவுநிலை உள்ளது. நனவுநிலை புரிதலுக்கும், பொருளாம்சத்திற்கும் விருப்பமான தேர்வுக்கும் சுதந்திரமான அனுபவத்தைச் சார்ந்து இயங்குவதற்கு மையமாக உள்ளது. அண்டத்தைப் பற்றிய உண்மை, நம்மைப் பற்றிய உண்மை போன்றவை நனவுநிலையைச் சார்ந்திருக்கின்றன. நம் இருப்பை நனவுநிலை விளக்குகிறது. அண்டத்தில் தோற்றமெடுத்து நிலைகொண்டிருக்கும் நனவுநிலை குறித்து மூன்று வகையான சாத்தியக்கூறுகள் பொதுவாக வெளிப்படுகின்றன. நனவுநிலை தற்சார்புள்ள பண்பல்ல. மூளையும் நரம்பு மண்டலங்களையும் உள்ளடக்கிய உயிரியல் தகவமைத்தலின் விளைவாக எழும் இயல்பான பரிணாமம். பரிணாமத்தின் ஓட்டத்தில் நிகழ்ந்த அளவீடுகளில் உயிரியலின் சிக்கலான கூறாக வெளிப்பட்டது நனவுநிலை என்று அறிவியலின் பிரபலமான கருத்து சொல்கிறது. எங்கிருந்து எப்போது, எப்படி நனவுநிலை தோன்றியது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மனிதர்களிடத்தில் சமீபகாலத்தில்தான் வந்தது என்றும் அல்லது தொடக்கநிலையிலுள்ள உயிரினங்களிலேயே இருந்தது என்றும் பல்வேறு கருத்துகள் உள்ளன. நனவுநிலை என்ற பண்பு எப்போதும் அண்டத்தில் இருப்பதாகும். ஆன்மீக, மத அணுகுமுறைகள் நனவுநிலை அண்டத்தில் இருந்து வருவதாகவே ஊகித்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக ‘அப்பாலை கடவுள்,’ ‘படைப்பவர்’ அல்லது எங்கும் நிறைந்திருக்கும் ‘கடவுளின்’ கூறு என்று நனவுநிலை விளக்கப்படுகிறது. அகண்டமன ஆய்வாளர்கள் நனவுநிலை எல்லாப் பருப்பொருளிலும் இருப்பதாகக் கூறுகிறார்கள். கருத்து முதல்வாதிகள் பருப்பொருளைக் கொண்ட உலகத்தில் நனவுநிலை ஒரு மாயையாக இருக்கிறது என்கிறார்கள். நனவுநிலையின் மூலங்கள் எப்போதும் அண்டத்தில் இருந்திருக்கின்றன. உயிரியல் அந்த நனவுநிலையின் மூலங்களை நடைமுறை சார்ந்த நனவுநிலையாக மாற்றியிருக்கிறது.

பயன்பட்ட நூல்கள்

1.Chamcham, Khalil. “Consciouness in the Universe,” PENSAMIENTO, vol. 67 (2011), núm. 254, p. 867

2.Joseph, Rhawn. “Quantum Physics of God: How Consciousness Became the Universe and Created Itself,” Cosmology.com. December 1, 2015.

3.Penrose, Roger and Hammeroff, Stuart. “Consciousness in the Universe: Neuroscience, Quantum Space-Time Geometry and Orch OR Theory,” Journal of Cosmology, 2011, Vol. 14.

4.Penrose, Roger. Shadows of the Mind- A Search for the missing science of Consciousness, Oxford University Press, 1984.

5.Penrose, Roger. The Emperor’s New Mind-Concerning Computers, Minds and the Laws of Physics,” Oxford University Press, 1989.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *