இயற்கையின் மீது அளவு கடந்து ‘வளர்ந்துவிட்ட’ மாந்த குலம் நடத்தும் போர் புவியின் இருப்பைச் சிக்கலுள்ளாக்கிறது. புவியின் அடிப்படையில் ஓர் உயிரினமே. வேறு சொற்களில் சொல்வதனால் அவள் நமது புவித்தாய். இயற்கை அன்னையின் பிள்ளைகளில் ஒன்றான மாந்தன் அதுவும் முன்னேறிய மாந்தக் கூட்டம், நடத்தும் தாக்குதலால் புவியன்னை நோய்வாய்ப்பட்டு வருகிறாள். அவள் தன்னைச் சரிசெய்ய முயற்சிக்கும்போது பல மாற்றங்கள் புவிக்கோளத்தில் ஏற்படுகின்றன. அதையே காலநிலை மாற்றம் என்கிறோம். இது எப்படி ஏற்பட்டது, ஏன் ஏற்பட்டது என்பது நுட்பமான கேள்வி.
உலகின் போக்கை போர்களும் தொழில்நுட்பங்களும் மற்றும் மாற்றிவிடுவதில்லை, கருத்தியல்களும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன, குறிப்பாக கருத்தியல் என்பது குறிப்பான விழுமியங்களையும், நம்பிக்கைகளையும் முன்னிறுத்துவதாக உள்ளன. எடுத்துக்காட்டாக மரத்தை வளர்ப்பதன் மூலம் மழை பெறலாம் என்ற உண்மையானது, ஒரு கருத்தாக உருவெடுக்கிறது. மழை என்பது உயிர்களுக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கின்ற காரணத்தால் மரத்தின் மீதான மதிப்பு உருவாகிறது, அதைப் பெருமையாகப் பார்க்கத் தோன்றுகிறது. எனவே மரம் என்ற ஒன்று ஒரு சமூகத்தில் மாண்புக்கு உரியதாக ஆகிறது. மரங்களைக் காப்பது ஒரு சமூகத்தின் விழுமியங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. ஆகவே மரங்களைக் காப்பது என்பது அந்தச் சமூகத்தின் கருத்தியலாக (idealogy) மாறுகிறது. ஆகவே மரங்களைப் போற்றும் ஒரு மரபு உருவாகிறது. இது ஏரிகளுக்கும் குளங்களுக்கும் பொருந்தும்.
அதே மரத்தை வெட்டி விற்பனை செய்யலாம் என்ற உண்மையானது ஒரு கருத்தாக மாறுகிறது, ஆங்கிலேயர்கள், இந்தியா போன்ற நாடுகளுக்கு வரும்போது இங்கிருந்த மரங்கள் அவர்களுக்கு மிகப்பெரிய வளமாகத் தெரிந்தது, ஒரு மாபெரும் சந்தை கண் முன் விரிந்தது, வீடுகள் கட்டவும், தொடர்வண்டிப் பாதைகளுக்கும், கப்பல் கட்டவும் தேக்கு மரங்கள், மருத மரங்கள் வெட்டப்பட்டன. அங்கு மரங்கள் மாண்புக்கு உரியனவாக இல்லை. இரண்டு உண்மைகளுக்கும் பின்னர் இருந்த விழுமியங்கள், நம்பிக்கைகள் வேறானவை. மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்து பணத்தாள்களாக மாற்றுவதே ஒரு சமூகத்தின் நம்பிக்கை ஆக எப்படி சிறப்பாக, விரைவாக மரத்தை வெட்ட முடியும் என்ற எண்ண ம் மேலோங்குகிறது, அதற்கான முன்னெடுப்புகள் தொழில்நுட்ப வளர்ச்சியாக உருப்பெறுகிறது. ஆகவே தொழில்நுட்பமே சிறந்தது என்ற விழுமியம் உருவாக்கப்படுகிறது. அதுவே ஒரு கருத்தியலாக மாற்றம் கொள்கிறது. இதுதான் இன்று ஏரிகளையும் குளங்களையும் அழித்து, கட்டடம் கட்டுவது மாந்தகுலத்தின் உச்சகட்ட நாகரிக விழுமியம் என்று தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் உட்கார்ந்து கொண்டு பேசச் சொல்கிறது. இதுவே ஒரு அரசியலாக உருவெடுக்கிறது.
பொருளாக்கத்தில் உழைப்பின் இடம் மிக அடிப்படையானது என்ற கருத்து முதன்மையாக இருந்தபோது, தொழிலாளர் நலன் என்ற விழுமியம் போற்றப்பட்டது. ஆனால் இன்று உலகம் முழுமைக்கும் முதலீட்டின் பங்குதான் முதன்மை என்ற எண்ணம் வலுப்பெற்று வருவதால், தொழிலாளர் நலன் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இதன் காரணமாக 140 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் நேரடி அயலார் முதலீட்டிற்கு நாம் அழைக்கின்றோம். இதுதான் கருத்தியல் மாற்றம் என்பதாகும்.
பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு, மேலைச் சிந்தனை மரபில், தெகார்தேயின் (René Descartes 1596 – 1650) ‘கார்டீசிய’ மெய்யிலான எந்திரவியல் (mechanical) உலகம் முழுமைக்கும் ஆளுமை பெறத் தொடங்கியது. இது எல்லாவற்றையும் பகுதி பகுதியாகப் பார்க்கச் செய்தது. (பல்லுக்கு ஒரு மருத்துவர், மூக்குக்கு ஒரு மருத்துவர் என்றபடி) இந்த வகையான பகுதிப் பார்வைக்கு நியூட்டன் போன்றவர்களின் கண்டுபிடிப்புகள் மறுமலர்ச்சிக் கால வேதியியல் அறிவுகள் கோபர்நிகஸ் கண்டுபிடிப்புகள் யாவும் மிகவும் உதவின. மாந்த குலத்தை மட்டுமே நடுவாகக் கொண்ட சிந்தனை மரபுகள் பெரிதும் மேலைச் சிந்தனை மரபுகளை ஆட்டிப் படைத்தன.
மாந்தர் நடுவியம் (Anthropocentrism) அல்லது மானுடமேலாதிக்கவியம் அல்லது மாந்தரியம் என்பதைப் பற்றி டேவ் ஃபோர்மேன் (Dave Foreman) என்பவரும் கிறிஸ்டோபர் மானெஸின் (Christopher Manes)) தங்களது நூல்களில், குறிப்பிடும்போது மனிதநேயம் அல்லது மாந்தநேயம் என்ற கருத்தாக்கம் எப்படி இந்தப் பூமியை ‘மேம்படுத்தும்’ வேலைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறினார்கள். 1
(Val Plumwood – Environmental Culture: The Ecological Crisis of Reason – ISBN 9780415178778. Retrieved 12 June 2013.)1
மாந்தரியம் என்பது சூழல் மெய்யியலில் மிகுந்த சிக்கலுக்குரியதாக காணப்படுகிறது. ஒரு காலத்தில் மாந்தநேயம் என்பது முற்போக்கான கருத்தாக இருந்தது. ஆனால் அதுவே இன்று மனிதனைத் தவிர மற்ற யாவற்றையும் அழித்தொழிக்கும் நிலைக்கு இட்டுச் செல்வதாக உள்ளது. காலங்காலமாக முறைப்படுத்தப்பட்ட மேற்கத்திய சிந்தனைகள் மனிதரல்லாத உலகத்தை பொருட்டாகப் பார்ப்பதில்லை என்று ஆர்னிநாட்ச் முறையிடுகிறார்.
(The Selected Works of Arne Naess, Deep Ecology of Wisdom – By Springer,The Netherlands-ISBN-10 1-4020-3727-9)2
மாந்தநேயம் மனிதனையும் அவனது அடையாளத்தையும் மட்டுமே வரையறுக்கிறது.
மாந்தரியச் சிந்தனை மரபான மேற்கத்திய சிந்தனையின் தாக்கம் சூழலியல் சிந்தனை உலகத்திலும் பரவலாகக் காணப்படுகிறது என்று சில்வன் ரவுட்லி விளக்கினார். அவர் மாந்தப் பேரினவியம் (human Chauvinism) என்ற ஒரு கருத்தை முதன்மைப்படுத்தினார். அதாவது மனிதர்கள் மட்டுமே இந்த உலகில் வாழ உரிமையுள்ளவர்கள், மற்ற உயிரினங்கள் மனிதர்களுக்குப் பின்னரே தகுதியுள்ளவர்கள் என்ற பார்வைதான் மாந்தப் பேரினவியம் என்பதாகும்2
(Richard Sylvan – Stanford Encyclopedia of Philosophy)3
மற்றொரு புறம் உண்மையாக சூழலியல் மீது அக்கறை கொண்டவர்கள், நெருக்கடிகளைக் களைய வேண்டும் என்று எண்ணுகிற சிலரும் கூட மாந்தரியத்தை ஏற்பவர்களாக இருக்கின்றனர். இவர்கள் நலமான, நல்ல சூழலைப் பராமரிப்பது மனித நல்வாழ்வுக்காகவே என்று கூறுகின்றனர். இப்படியான மேலோட்டச் சூழலியல் பார்வை கொண்ட சிந்தனையாளர்கள், மாசுபாட்டை நுட்பவியல் அறிவு கொண்டு நீக்குவது, குப்பைகளை அகற்றுவது, கானுயிர்களைப் பாதுகாப்பது போன்ற செயல்பாடுகளை மட்டுமே ஆதரிப்பவர்களாக இருக்கின்றார்கள்.
1970களில் நார்வே தத்துவஞானி ஆர்னேநாஸ் சுற்றுச்சூழல் சீரழிவை வழக்கமாகக் கையாளும் மலினமான மாசுபாட்டு எதிர்ப்பு, சூழல் பாதுகாப்பு இயக்கங்களின் கருத்துக்களை கூறாய்வு செய்தபோது பல இயக்கங்கள் மேம்போக்கான சூழலியல் பார்வையைக் கொண்டதாக இருப்பதாகக் கருதினார்.
சூழலியல் சிக்கல்களின் அடிப்படைக் காரணங்களை ஆணிவேர் என்ன என்று புரியாமல், நுட்பவியல் எந்திரங்களைக் கொண்டு சிக்கலகளைக் களைந்துவிடலாம் என்று மேலாட்டமான பார்வையை பலர் கொண்டுள்ளதாக நாஸ் விளக்கினார். இயற்கையின் போக்கில் மனிதனின் பங்காக்கம் என்ன என்பதை உற்று நோக்க வேண்டினார்.
மாந்தரியப் பார்வைகள் வலுவடைந்துள்ள காரணத்தால் மனிதர்கள் இயற்கையிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டனர், இயற்கையையும் தங்களையும் போட்டியாளர்களாக மனிதர்கள் கருதிக்கொள்கின்றனர். ஆண்டாண் அடிமை இயங்கு முறையை பின்பற்றி வருகின்றனர். இயற்கை தனக்கான ஓர் அடிமை என்று கருதுகின்றனர். தங்களின் இன்பத்திற்காக எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டிக் கொள்ளலாம் என்றும் எண்ணுகின்றனர். அந்தச் சுரண்டலால் ஏற்படும் மாசுபாட்டையும் வளங்களில் அழிவையும் எதிர்த்து நடக்கும் பகட்டான போராட்டங்களில் ஆழமான புரிதல் இல்லை என்பதே அவரின் கருத்து.
சூழலை மாசுபடுத்தும் சேதாரங்களைக் குறைத்தால்போதும், இப்போதுள்ள வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை என்று மேலோட்ட சூழலியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
அறிவியல் கண்டுபிடிப்புகள், சூழலியல் சிக்கல்களுக்குத் தீர்வாகும் என்று கருத்து அரைகுறையானது. இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே நன்கு வளரமுடியும். மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு அனைத்துலக மக்களையும் உந்தித் தள்ளும் கோட்பாடாக மேலோட்டச் சூழலியல் கோட்பாடுகள் அமைந்துள்ளன.
இவர்கள் மாந்தவியப் பார்வை கொண்டவர்களாகவும் சூழல் மேம்பாட்டை வலியுறுத்துபவர்களாக இருந்தாலும் மனிதர்களை மட்டுமே மையப்படுத்திச் சிந்திப்பவர்கள்.
ஆனால் சூழலியல் மீது ஆழமான அக்கறை கொண்டவர்கள் இயற்கையுடன் மனிதர்கள் கொள்ளும் இன்றைய உறவுமுறை மாற வேண்டும் என்று கருதுகின்றனர். ‘இந்த உலகம் மனிதர்கள் மட்டும் வாழ்வதற்கான இடம்’ என்ற பார்வையில் இருந்து மாறுபடுகின்றனர். அனைத்து உயிர்களுக்கும் இங்கு வாழும் உரிமை உண்டு என்பது அவர்களது பார்வை.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கருத்தை முன்னிறுத்துவதே உண்மையான சூழலியல் ஆகும். டார்வின் கூறிய ‘தகுதியானவை தப்பிக் பிழைக்கும்’ என்ற கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துப்படுகிறது.
தகுதி என்பது கூட்டுறவு, இணக்கமும் கொண்ட வாழ்வாக வேண்டுமேயல்லாது, போட்டியால் உருவாவது அல்ல என்றும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
மனிதனை மையமாக வைத்துச் சிந்திப்பவர்கள், பிற உயிர்களை தகுதி அடுக்கில் கீழே வைக்கின்றார்கள். அதேபோல பொருளியல் முறையில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளை, அடுக்கில் கீழாக வைக்கின்றனர்.
உலக மக்கள்தொகையில் ஐந்து விழுக்காடு மட்டுமே கொண்டிருந்தாலும், உலகின் 17 விழுக்காடு ஆற்றல் நுகர்வினை அமெரிக்கா செய்கிறது. உலகின் இரண்டாவது பெரிய மின்சார நுகர்வோர் நாடாகவும் அமெரிக்கா உள்ளது.
இதேபோல வளரும் நாடுகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை பதிவு செய்திருந்தாலும், பெரும்பாலான கார்பன் உமிழ்வுகளுக்கு பணக்கார நாடுகளே பொறுப்பு.
நாடுகளுக்கு இடையில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதுபோல நகரங்களும், ஊரகங்களுக்கும் இடையில் ஏற்றத்தாழ்வு உள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் நகரங்களில் வாழும் மக்களுக்கு ஆளுக்கு நாளைக்கு 135 லிட்டர் நீர் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஊரகங்களில் வாழும் மக்களக்கு ஆளுக்கு நாளைக்கு 55 லிட்டர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
(www.indiawaterportal.org) 4
அத்துடன் நகரங்களில் வாழும் பணக்காரர்களும், சேரி வாழுநர்களுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு உள்ளது. சேரி வாழ் மக்களுக்கு ஆளுக்கு நாளைக்கு 20 லிட்டருக்கும் குறைவாகவே நீர் கிடைக்கிறது, ஆனால் நகரத்து வசதியான விடுதிகளில் ஆளுக்கு நாளைக்கு 1600 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார்கள்.4
(Sainik School Entrance Exam. (For Class IX) – Page 255) 5
இந்த வேறுபாடுகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் மூலமாக இருப்பது மனித மையச் சிந்தனை என்றால் அது மிகையாகாது.
இதற்கு மாற்றாக ‘பழங்குடிச் சிந்தனை மரபு’இருக்கிறது. ‘மனிதர்கள் பூமிக்குச் சொந்தமானவர்கள், ஆனால் பூமியோ மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல’ என்ற புகழ் பெற்ற கருத்தை வெளியிட்ட சியாட்டல் தலைவர் ஓர் அமெரிக்கப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.
(Earth Democracy: Justice, Sustainability & Peace, Vandana Shiva – Zed Books )6
ஆஸ்திரேலிய பழங்குடிகள் இந்த உலகம் வானவில் பாம்பில் இருந்து தோன்றியது. நாம் அனைவரும் அதன் குழந்தைகள் என்ற பார்வையைக் கொண்டவர்கள்.
பொதுவாக பழங்குடிகள் அனைத்து வளங்களையும் அழித்து அல்லது சுரண்டி சந்தைக்கு அனுப்பும் பழக்கம் இல்லாதவர்கள். ஆனால் இப்போது நகர்புறங்களில் இருந்து சந்தைக்காகச் செல்பவர்கள், பழங்குடிகளை இதற்காகப் பழக்குகின்றனர்.
மனித மையப் பார்வையின் தோற்றம் எங்கிருந்து தொடங்குகிறது என்று பார்த்தால் இது வரலாற்றுக்கு முன்பற்ற காலத்தில் இருந்தே தொடங்குகிறது.
‘படைக்கப்பட்டவை அனைத்தும் மனிதர்களுக்கே’ என்ற கருத்தியலே வடக்குலக மதங்கள், மெய்யியல்களில் காணப்படுகின்றன.
குறிப்பாக யூதர்கள். கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய மூவருக்கும் மூல மறை நூலான ஆதியாகமத்தில் வருவதாவது,
”…பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் ” (ஆதியாகமம் 1:26-29) பைபிள்
(Tamil Bible, Black and White Version,New Life Assembly of God)7
இதே போன்று நடு ஆசியப் பகுதியில் உருக்கொண்டு வந்த வேத நெறிகளும் மாந்தனை மையமாகக் கொண்டே வடிவம் கொண்டன.
புருசசூக்தம் (ரிக் வேதம் :10:90 1-16) பின்வருமாறு கூறுகிறது,
‘ஆயிரம் தலைகள், ஆயிரம் கால்கள், ஆயிரம் கண்களைக் கொண்டவர் புருசன். தன்னுடைய பத்து விரல்களால் பூமியின் எல்லாப் பகுதிகளையும் நிரப்பியுள்ளார். புருசனே இதுவரை இருந்தவையாகவும், இனி இருப்பவையாகவும் இருக்கிறார். அனைத்து உயிர்களும் அவருடைய நான்கில் ஒரு பங்காகும்’.
இதன் பின்னர் 8 முதல் 16 வரையான பாடல் புருசனிடம் இருந்து அனைத்து உயிர்களும் பொருள்களும் உருவானதைக் கூறுகின்றன. தலையில் இருந்து பிராமணனும், தோளில் இருந்து சத்திரியனும், தொடையில் இருந்து வைசியனும், காலில் இருந்து சூத்திரனும் தோன்றியதாகக் கூறுகின்றன.
(The Sacred Books of the East: Shatapatha Brahmana, xiv. 4, Max Muller)8
இப்படியாக மேற்கத்திய மதக்கோட்பாடுகள் மனிதர்களை மையமாகக் கொண்டு உருவான காரணத்தால் இயற்கையின் மீதும் பிற உயிர்களின் மீதுமான பார்வையானது ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.
மனித மையக் கருத்துகளை திறனாய்வுக்குப்படுத்தி உலகத்தின் பல பகுதிகளில் இருந்து கட்டுரைகள், நூல்கள், போராட்டங்கள் என்று தொடங்கப்பட்டன. இதன் விளைவாக இயற்கையை மையமாக வைத்துப் பார்க்கும் கருத்தியல்கள் உருவாயின. அதைப் பற்றிய கட்டுரைகள், நூல்கள் வரத் தொடங்கின. குறிப்பாக சைன்ஸ் இதழில் வெளிவந்த ‘திணையியல் நெருக்கடிகளுக்கான வரலாற்று வேர்கள்’ (The Historical Roots of our Ecological Crisis, Science 155 (10 March 1967) என்ற கட்டுரை பெரும் தாக்கதை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக இயற்கையின் அழிவு பற்றிய கருத்துகள் மக்களிடமும் ஆய்வாளர்களிடமும் பரவலாக அறியப்பட்டன. வேதியியல் வேளாண்மை, தொழிற்சாலைக் கழிவுகளின் பெருக்கம், புவி வெப்பமயமயமாக்கல் போன்ற நெருக்கடிகள் உந்தித் தள்ளின.
மெய்யறிவியல் முறையிலும் (மெட்டாபிசிகல்) அறிவறிவியல் முறையிலும் (எபிஸ்டெமோலாஜிக்கல்) நோக்கினால் கார்ட்டீசியனிசம் என்பது பகுத்தாய்வியத்தின் ஒரு வகையாகும், ஏனெனில் கார்ட்டீசியர்கள் உண்மை அறிவை பெறப்படும் கருத்துக்களிலிருந்தும் காரணங்களில் இருந்தும் பெறலாம் என்று நம்புகிறார்கள். ழான் தெக்கார்டே என்ற அறிஞர் இந்தக் கோட்பாட்டை உருவாக்கினார். இவரது பெயரின் லத்தீன் சொல்லடியாக கார்டீசியன் என்பது அறியப்படுகிறது. தெக்கார்தேயின் வரையறுப்பே கார்டீசிய மெய்யியல் என்று அறியப்படுகிறது.
கார்டீசிய மெய்யியல் என்பது அரிஸ்டாட்டில் (கி.மு. 384-322) கூறிய பட்டறிவியத்திலிருந்து மாறுபட்டதாக உள்ளது. பட்டறிவியத்தின்படி அனைத்து அறிவும் புலன்களின் மெய்ப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது, எனவே அனுபவம் இல்லாத அறிவு சாத்தியமில்லை என்பது அரிஸ்டாடில் கருத்து.
கார்ட்டீசியன்கள் இருமையியம் என்ற இரட்டைத் தன்மையை வரையறுக்கிறார்கள். அதாவது மனம், பருப்பொருள் அல்லது உயிர், மெய் என்ற இரண்டு தன்மைகள் உள்ளன என்று விளக்குகிறார்கள்.
உலகின் இயக்கவியல் பார்வை பதினேழாம் நூற்றாண்டில் கலிலியோ, டெஸ்கார்தே, நியூட்டன் மற்றும் பிறரால் உருவாக்கப்பட்டது.
டெஸ்கார்தேயின் இயற்கை குறித்த பார்வையானது மனம், பருப்பொருள் இரண்டும், தனித்தனியான சுதந்திரமான அடிப்படைப் பகுதிகளாக இருக்கும் என்பதாகும். பருப்பொருளால் ஆன புடவி (பேரண்டம்) ஓர் எந்திரம் ஆகும். அதற்கு மேல் புடவிக்கு வேறு எந்த முகமையும் இல்லை. எந்திரவியல் விதிகளின்படி இயற்கை செயல்படுகிறது.
பருப்பொருள் உலகில் உள்ள அனைத்தையும் அதன் பாகங்களின் ஒழுங்கமைப்பு அவற்றின் இயக்கம் இவற்றின் அடிப்படையில் விளக்கிவிட முடியும். இப்படியாக எந்திரவியல் அடிப்படையில் அனைத்தையும் பார்க்க முடியும் என்று விளக்கினார் டெக்கார்தே, அத்துடன் இந்தக் கோட்பாட்டை உயிரினங்களுக்கும் விரிவுபடுத்தினார். தாவரங்களும் விலங்குகளும் எந்திரங்களாகக் கருதப்பட்டன. மனிதர்கள் பகுத்தாய்வு மனத்தினால் இயங்கி வந்தனர்.
காரண காரியங்களைக் கொண்டு அலசி ஆராயவ்து மூலமே அறிவைக் கண்டறிய முடிவும் என்பதே டெகார்தே அணுகுமுறையின் சாரமாகும். சிக்கல்களையும், எண்ணங்களையும் துண்டு துண்டாகப் பகுத்து தர்க்க முறையில் அவற்றை அடுக்கிப் பார்ப்பது அவருடைய பகுத்தறிவு முறை.
அந்த அணுகுமுறை நவீன அறிவியல் சிந்தனைகளில் இன்றியமையாத கூறாக மாறிவிட்டது. பிற்கால அறிவியல் கோட்பாடுகளின் வளர்ச்சியில் மிகவும் பயனுள்ளதாக இது நிறுவப்பட்டது
அதேசமயம் இந்தக் கோட்பாடு பொதுவான சிந்தனைகளிலும் கல்வியியல் துறைகளிலும் பெரிய அளவில் துண்டிப்புகளை நிகழ்த்தியது. அதன் காரணமாக அறிவியல் குறைப்பியம் என்ற ஒன்று உருவானது. அதாவது சிக்கலான நிகழ்வுகளின் பல கூறுகளை பாகங்களாக துண்டித்துவிட்டு அவற்றில் சிலவற்றை விட்டுவிட்டு ஆராய்வதன் மூலமும் உண்மைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்பதே குறைப்பியம்.
பின்னர் கலிலியோ, பருப்பொருள்களின் அடிப்படைப் பண்புகளை ஆய்வு செய்வதில் அறிவியல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்வைத்தார். குறிப்பாக வடிவங்கள், எண்கள் மற்றும் இயக்கம் போன்றவை மதிப்பிடப்பட்டு அளவிடப்படலாம். நிறம், ஒலி, சுவை மணம் போன்ற பண்புகள், வெறும் அகநிலை மனக் கணிப்புகள், அவை அறிவியலின் களத்திலிருந்து விலக்கப்பட வேண்டும் என்றார் கலிலியோ. இந்த உத்தி நவீன அறிவியலில் முழுவதுமாக வெற்றிகரமாக நிறுவப்பட்டது, ஆனால் இதற்காக ஒரு பெரிய விலை கொடுக்க வேண்டியதாயிற்று. ஒரு அறிவியல் சம்பந்தப்பட்டது
வெறும் அளவு மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் அறிவியலைக் கணிப்பதன் மூலம் பட்டறிவு, தரம், விழுமியங்கள் போன்றவற்றைப் புறந்தள்ளும் நிலைக்கு ஆக்கப்பட்டது.
கலிலியோ போன்ற அறிஞர்கள் அறம், நெறிமுறைகள் போன்றவற்றை நிராகரித்ததன் பேரழிவு விளைவுகள் இப்போது உருவாகி வருகின்றன.
கலிலியோ, டெகார்தே ஆகியோரால் உருவாக்கப்பட்ட கருத்தியல் கட்டமைப்பை நியூட்டன் வெற்றிகரமாக முடித்தார். இயற்கையை எந்திரவியல் பார்வையில் அணுகும் ஒரு திடமான கணித சூத்திரத்தை அவர் உருவாக்கிவிட்டார். பதினேழாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை உலகம் முழுமையும் நியூட்டனின் மாதிரியே அனைத்து அறிவியல் சிந்தனைகளிலும் ஆதிக்கம் செலுத்தியது.
இயற்கை அறிவியல், மனிதநேயவியல், சமூக அறிவியல் யாவும் செவ்விய இயற்பியலின் எந்திரவியல் கோட்பாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டன.
இந்தத் துறை அறிஞர்கள் அதற்கேற்ப தங்கள் சொந்தக் கோட்பாடுகளை வடிவமைத்துக் கொண்டனர். உளத்தியலாளர்கள், சமூகவியலாளர்கள் பொருளியல் வல்லுநர்கள் ‘அறிவியல் அடிப்படையில்’ இருக்க விரும்பினர், அந்த அறிவியல் நியூட்டனின் இயற்பியலின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது என்பதுதான் உண்மை.
இயற்பியலாளர்கள் மிக முன்னேறிய கண்டு பிடிப்புகளைத் செய்துவிட்டபோதும் மற்ற துறையினர் அதைப் பின்பற்ற முன்வரவில்லை.
உயிரியலில், கார்ட்டீசியன் பார்வையில் அனைத்து உயிரினங்களும் தனித்தனி பாகங்களாக கட்டமைக்கப்பட்டிருக்கின்ற எந்திரங்களே. இந்தக் கருத்துதான் இன்றும் மேலோங்கிக் காணப்படுகிறது. இந்தக் உயிரியல் குறைப்பியக் கருத்துகள் மருத்துவ உலகில் செல்வாக்குப் பெற்றுவிட்டதால் விளைந்ததே இன்றைய உயிரியமருத்துவ மாதிரி என்றால் அது மிகை¬யாகாது. இது நவீன அறிவியல் மருந்துகளின் கருத்தியல் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. மனித உடல் என்பது ஓர் எந்திரம், அந்த எந்திரத்தை அதன் பாகங்களை அலசி ஆராய்வதன் மூலம் நோய்களைக் கண்டறிய முடியும். பாகங்களை ஆராய்ந்தால் போதுமானது. நோய் என்பது பாகங்களின் உயிரியல் எந்திர செயல்மைக்கோளாறு. ஒரு குறிப்பிட்ட பொறிமுறையின் செயலிழப்பை சரிசெய்ய உடலியல் வழியிலோ அல்லது வேதியியல் வழியிலோ தலையிட்டு பல்வேறு உடல்பாகங்களின் அடிப்படையில் பல்வேறு சிறப்பு மருத்துவ வல்லுநர்களால் மருத்துவம் அளிக்கப்படுகிறது.
நவீன அறிவியல் மருத்துவம் இந்த குறைப்பியல் அணுகுமுறையை மிகைப்படுத்தி தனித்தனியான சிறப்புத் துறைகளை உருவாக்கியுள்ளது. மருத்துவர்கள் பெரும்பாலும் நோயை உயிரினத்தின் முழுமையான உடல் துன்பம் என்று பார்ப்பதில்லை, முழுமையான உடல் துன்பம் நீக்கும் மருத்துவம் அளிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட உறுப்பு அல்லது திசுக்களுக்கு மட்டுமே மருத்துவம் செய்ய முனைகிறார்கள்.
மனித உடல் என்பது உயிர், மனம் போன்ற கூறுகளை உள்ளடக்கியது என்ற ழுமுமைப் பார்வை இன்மையால், அதாவது குறிப்பியல் பார்வை உள்ளதால் அவர்களால் ஒரு நோயாளியின் உளத்தியல், சமூகவியல் காரணிகளைக் கவனம் கொள்வதில்லை.
பிற அறிவியல் போலவே உளத்தியல் (psycology) துறையும் கார்ட்டீசியன் அணுகுமுறையாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. உளத்தியல் அறிஞர்கள் டெகார்தேயின் கோட்பாட்டைப் பின்பற்றி மனதுக்கும் பொருளுக்கும் இடையே உறுதியான பிளவை ஏற்றுக்கொண்டனர்.
மனித ஆன்மாவின் ஆய்வுக்காக உருவாக்கப்பட்டது, இதனால் உளவியல் சிந்தனையின் மூன்று முக்கிய நீரோட்டங்களை உருவாக்குகிறது.
இருபதாம் நூற்றாண்டு உளத்தியல் அறிஞர்கள் ஆழ் மன உணர்வையும் நடத்தையும் பிரித்தே அணுகினர்.
நடத்தையியல் அறிஞர்கள், நடத்தை சார்ந்த ஆய்வுகளிலேயே கவனம் செலுத்தினர். மனத்தின் உள் உணர்வுகளைக் கணக்கில் கொள்ளத் தவறினர், இது மனதின் இருப்பை முற்றிலும் புறக்கணிக்க அல்லது மறுக்க வழிவகுத்தது.
சிக்மண்ட பிராய்ட் உருவாக்கிய புரட்சிகரமான ஆய்வு முறையாக, மனித மனம், உளத்தில் பகுப்பாய்வு என்ற முறை அமைந்திருந்தது. ஆனால் அவரது கருத்துகளும் நியுட்டனின் எந்திரவியல் முறையாகவே ஆகிப்போனது.
இன்றைய பொருளியல் துறையும் மற்ற பெரும்பாலான அறிவியல்களைப் போலவே, துண்டு துண்டாகவும் குறைப்பியல் பார்வை கொண்டதாகவும் அமைந்துள்ளது. பொருளியல் என்பது சூழலியல், சமூகவியல் கூறுகளை உள்ளடக்கியது. ஆனால் இவற்றை முற்றிலும் புறக்கணித்துவிட்டு எந்திரவியல் பார்வை கொண்ட வல்லுநர்கள் பொருளியலைப் பிரிக்க முனைகின்றனர். பொருளியலை திறன்மை, விளைமானம்
அவற்றின் பெரும்பாலான அடிப்படைக் கருத்துக்கள் – செயல்திறன், உற்பத்தித்திறன், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முதலிய. ஒன்றிரண்டு அளமானங்களை மட்டும் வைத்துக் கொண்டு, பரந்துபட்ட சூழலிய, சமூகவியல் கூறுகளைக் கணக்கில் கொள்ளாமல் பொருளியியல் சிந்தனைகள் கட்டமைக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட குறுகிய, குறைப்புக் கட்டமைப்பின் காரணமாக உருவாக்கப்படும் வழக்கமான பொருளியல் பார்வை, இயல்பாகவே சூழலியலுக்கு எதிரானதாக அமைந்துவிடுகிறது. முழுமைப் பார்வைக்குப் புறம்பான குறுமைப் பார்வையால் கட்டற்றுச் செய்யப்படும் பொருளியல் நடவடிக்கைகளால் உருவாக்கப்படும் சமூக மற்றும் சூழலியல் சேதாரங்கள் கணக்கில் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. எனவே குறைபாடுடைய பொருளியல் பார்வையால் அடிப்படைச் சிக்கலைகளை இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
வேறுபடுத்தப்படாத பொருளியல் வீக்கம், தொழில்நுட்ப மற்றும் நிறுவன வளர்ச்சி என்பமே நலமான பொருளியல் என்று பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இவர்கள் குறிப்பிடும் “நலமான” பொருளியல் நடவடிக்கைகளால்தான் சூழலியல் பேரழிவு, பரவலாகும் பெருநிறுவனக் குற்றங்கள், சமூகச் சிதைவுகள், போர்வெறி ஆகியவை வளர்ச்சியடைந்துள்ளன.
இன்றைய பொருளியல் அளவுமுறைகளில் விழுமியங்களுக்கான இடம் இல்லை, அறம் பற்றிய சிந்தனைப் பார்வை இல்லை, வெறும் வங்கி வரவு செலவுகளை மட்டும் வைத்துக் கணிக்கப்படும் வரையறுப்புகள் கடுமையான நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றன.
இந்த மாந்தநடுவக் கருத்தியலுக்கு மாற்றாக இயற்கை நடுவக் கருத்துக்களுக்கான இடம் பழங்குடிகளின் வாழ்வொழுங்குகளில் இருந்து பிறக்கின்றது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ முதலிய பார்வைகள் அனைத்து உயிர்களையும் சமமாகவும், அனைத்து உயிர்களின் மீது நேயம் கொண்டு இருக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றன. இந்த இரண்டு பார்வைகளின் அடிப்படையில் கருத்தியல்கள் அமைகின்றன.
மக்கள் முழு மரத்தையும் வெட்டி மருந்து எடுக்க மாட்டார்கள், முனிவர்கள் கூட உயர் தவத்திற்கான அனைத்து வலிமைகளையும் இழக்கமாட்டார், மன்னர்கள் நாட்டு வளத்தை இழந்து பணம் செய்ய மாட்டார்கள் என்ற கருத்துள்ள பாடலை நற்றிணை பதிவு செய்கிறது
”மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர்…” (நற்: 226)
‘என்னோரும் அறிப இவ் உலகத்தானே’ அதாவது நாம் வாழுகின்றன சமூகத்தின் இயல்பே இதுதானே என்று கூறுகிறது.
ஆகவே இப்படியான உயிர் நேயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக ஒழுங்கு இருந்ததை அறிய முடிகிறது. அதுவே அன்றைய கருத்தியலுக்கும் அடிப்படையாக இருந்துள்ளது. இதற்கான அடிப்படை யாதெனவென ஆய்ந்தோமாயின் தெளிவாக அது திணை வாழ்வியல் சமூக ஒழுங்கே என்று கண்டறிய முடியும்.
திணைக் கோட்பாடு இன்றைய சூழலியல் நெருக்கடியில் தொடங்கி, சமூகவியல், பொருளியல் நெருக்கடிகளுக்கும் தீர்வை முன்வைக்கின்றது. இது ஒரு கவிதை அல்லது செய்யுள் கோட்பாடு அல்ல. மிக ஆழமான அறிவியல் முறைப்பட்ட வாழ்வியல் கோட்பாடு
பொதுவான ஐந்திணை என்று கருதப்படும் திணை ஐந்து மட்டுமல்ல, அகத்திணை ஏழு, புறத்திணை ஏழு என்று விரிவானது. ஆக திணை என்றே நாம் கூற வேண்டுமேயன்றி ஐந்திணை என்று குறுக்கலாகாது. அப்படியானால் திணைக் கோட்பாடு என்பது யாது என்ற கேள்வி எழும்.
திணை என்ற சொல்லை விளக்குவதாயின், ஓர் உயிரினம் தனக்குரிய முதல், கரு, உரி என்ற முப்பொருள்களுடன் கொண்டுள்ள ஒழுகலாறு என்பதே திணையாகும்.
திணை மெய்யியயிலின் சாரம் ‘இயற்கையை வெல்ல முடியாது, அதனுடன் இணக்கமாக இயங்க வேண்டும். இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு நேயமுடன் இருக்க வேண்டும்’ என்பதாகும்.
திணைக் கோட்பாடு என்பது மனிதன் இயற்கையின் ஒரு கண்ணி. தெய்வம் உலகத்தைப் படைக்கவில்லை. ஐம்பூதங்களின் உறவே இயற்கை அல்லது உலகம்.
முதற்பொருள் என்பது நிலமும் பொழுதும் ஆகும்.
தெய்வம், உணவு, மனிதன், மரம். விலங்குகள் யாவும் கருப்பொருள்கள்
முதற்பொருள்களுடனும் கருப்பொருள்களுடனும் கொள்ளும் உறவால் உரிப்பொருள்கள் உருவாகின்றன. இந்த மூன்றும் கொள்ளும் உறவால் வாழ்வியல் அமைகிறது.
வரலாறு முழுமையும் இயற்கையுடன் மனித சமூகம் மட்டுமல்லாது பிற யாவும் கொண்டிருக்கும் ஒழுகலாற்றின் அடிப்படையில் அமைகின்றது.
உயிரின் தோற்றம் மெய்யில் இருந்து ஏற்படுகிறது, அதாவது பருப்பொருளில் இருந்து உயிர்ப் பொருள் தோன்றுகிறது.
மெய்யின் வழியது உயிர்தோன்று நிலையே. (தொல். எழு: 18)
உயிர்களின் அடிப்படை நோக்கு அன்பு செய்தல் ஆகும். உயிரின் இயக்கம் அன்பின் அடிப்படையில் அமைகிறது. ஒரு குட்டியை ஈன்ற விலங்குகூட தன்னுடைய அன்பால் வளர்க்கிறது. அதற்கு யாரும் வெளியில் இருந்து அன்பைச் சொல்லித் தரவில்லை.
‘அன்பின் வழியது உயிர்நிலை’ (குறள்: 80)
திணைச் சிந்தனை மரபு மிகவும் பழமையானது, தொல்காப்பியர் ஐந்திரம் எனப்படும் ஐம்பூதக் கோட்பாட்டை நன்கறிந்தவர். அவர் உருவாக்கிய திணைக் கோட்பாடு முன்னவே புழக்கத்தில் இருந்தததை தொல்காப்பிய வரிகளில் இருந்தே காண் முடிகிறது.
‘இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே’ என்ற வரிகள் இதை உறுதி செய்கின்றன.
திணையியல் சிந்தனைப் பள்ளி இயங்கிய காலத்தில் வேறு சிந்தனை மரபுகளும் தமிழகத்தில் இருந்துள்ளதை மறுக்க முடியாது. மணிமேகலையில் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் இருந்ததை விளக்கமாகக் காண முடிகிறது. தமிழ்த் திணை மரபு தனக்கே உரிய தனித்தன்மையுடனும் சமயம், நம்பிக்கைகள் போன்றவற்றைத் தாண்டி ஏரணம், சான்றுகள், நுணுகுதல் என்று பல அறிவியல் வகைப்பட்ட தன்மைகளுடனும் இயங்கி உள்ளது. அது மட்டுமல்லாது பல சிந்தனைப் பள்ளிகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐம்பூதங்களின் சேர்க்கையே உலகம் என்று விளக்கிய திணையியல், ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்கிறது. நாம் வெளிப்படையாகப் பார்த்தோமாயின் நிலம் என்கின்ற மண்ணை எப்படி உணவாகக் கொள்ள முடியும் என்ற வினா எழும்பும். ஆனால் நிலம் என்கின்ற ஒன்றோடு, நீர் என்கின்ற ஒன்று உறவு கொண்டு, உயிர்கள் உண்ணக் கூடிய உணவு என்ற ஒன்றைப் படைக்கின்றது என்பதே பொருள். உணவு தோன்றுகின்ற அறிவியலை திணையியல் ஒரு மெய்யிலாகச் சுட்டுகிறது.
கணியன் பூங்குன்றன் திணையியல் சிந்தனையின் மூலவர்களில் ஒருவரான கணியன் பூங்குன்றன் மிக ஆழமாக விளக்குகிறார்.
‘யாதும் ஊரே யாவதும் கேளிர்’ என்ற வரிகள் உலகம் என்பது தனித்து இயங்கக் கூடியதல்ல, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. பூவுலகப் பந்தில் எங்கோ ஓரிடத்தில் வெட்டப்படும் காடுகளால் வேறொரு இடத்தில் புயல் தோன்றுகிறது என்பதை இன்று நாம் நவீன அறிவியல் கொண்டு ஆய்கிறோம். ஆனால் ஒரு கோட்பாட்டு முறையில் அனைத்தும் அனைத்துடனும் இணைந்துள்ளன என்ற கருத்தை விளக்கும் வரிகள் விரித்து விளக்கப்பட வேண்டியவை. அதேபோல
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன’ (புறம்: 192)
என்ற வரிகளை உற்று நோக்கினால், இது ஏதோ ஒருவன் செய்த நவினை, தீவினைப் பயன்களால் மட்டுமே ஒருவனது வாழ்க்கை நிலையிடப்படும் என்பதான கருமக் கோட்பாட்டுச் சிந்தனை போல் தோன்றும். ஆனால் ‘தீது’ ‘நன்று’ ஆகிய வினைகள் ஒருவன் மற்றொருவனுடனோ இந்த குமுகத்துடனோ கொள்கின்ற உறவால்தான் ஏற்படுமே தவிர அதுவாக ஏற்படா. அதுபோல நோய் வருவதும் நீங்குவதும் அவன் எவ்வாறு தனது உடலோடும் மருந்தோடும் உறவாடுகின்றானோ அதைப் பொருத்தே அமையும். இவ்வாறு விளங்கிக் கொண்டால் இந்தப் பாடலின் உண்மையான பொருள் கிடைக்கும். அதுமட்டுமன்று,
‘நீர் வழிப்படூஉம் புணை போல ஆருயிர் முறை வழிப்படூஉம் என்ற இடத்தில் நன்றாகவே புலவர் விளக்குகிறார். அதாவது புணை என்பது துடுப்பை வைத்து நீரிலே இயக்கப்படுகின்ற கட்டுமரத்தில் ஒரு வகை. அந்தப் புணையை எவ்வாறு துடுப்பால் இயக்குகிறோமோ அதற்கேற்றவாறு அதன் போக்கு அமையும். ஆற்றின் போக்கில் அப்படியே போவதாகக் கணியன் கூறவில்லை. அப்படி நினைத்திருந்தால் துரும்புபோல என்று கூறியிருப்பார். ஆற்றின் வேகத்திற்கும் துடுப்பின் இயக்கத்திற்கும் இடையேயான உறவு அங்கே புணையின் போக்கைத் தீர்மானிக்கிறது. இதைத்தான் அவர் ‘உயிர் முறை வழிப்படூஉம்‘ என்கிறார். ‘முறை’ என்பதற்கு ‘உறவொழுங்கு’ என்று பொருள் கூறுகிறது கழக அகராதி. ஆகத் தெள்ளத் தெளிவாகத் திணையியல் கோட்பாட்டைக் கணியன் பூங்குன்றன் பதிவு செய்கிறார்.
இவரே நற்றிணையில் 226ஆம் பாடலான ‘மரம்சா மருந்தும் கொள்ளார்’ என்ற சீரிய திணையியல் பாடலை இயற்றியவர்.
திணைக்கோட்பாட்டின் நான்கு அடிப்படைகளாக இயற்கை உறவாண்மை, பன்மயம், உயிர்ம நேயம்,தற்சார்பியம் ஆகிய நான்கும் உள்ளன.
இயற்கை உறவாண்மை என்பது முதல், கரு, உரி ஆகியவற்றின் உறவொழுங்குகளே இயற்கை உறவாண்மையாகும். இவற்றின் காரணமாகவே உலகம் இயக்கம் பெறுகிறது. இந்த உறவின் ஏற்படும் சிக்கல் வாழ்வியல் சிக்கல்களாக மாறுகின்றன.
பன்மயம் என்பதன் பொருள் ஓரிடத்தில் வெவ்வேறு தன்மை கொண்டவை இருப்பதாகும். வெவ்வேறு தன்மை கொண்ட உயிர்கள் ஓரிடத்தில் இருந்தால் அதற்கு உயிரியல் பன்மயம் என்று பெயர். பல்வேறு பண்பாடுகள் இருந்தால் அதற்கு பண்பாட்டுப் பன்மயம் என்று பெயர். அதாவது பன்மயம் என்பது ஒற்றை மயத்திற்கு எதிரானது.
ஒரு காடு காலங்காலமாக நீடித்து இருக்க வேண்டுமாயின் அது பல்வகைப்பட்ட மரங்கள், செடிகள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என்று எண்ணற்ற உயிரினங்களுடன் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையாயின் கடும் நோய்களோ பெரும் பூச்சித்தாக்குதலோ ஏற்பட்டு காடு அழிந்து போகும். இது காட்டிற்கு மட்டுமன்று அனைத்து வகையான அமைவுகளுக்கும் பொருந்தும்.
உயிர்ம நேயம் என்பது மாந்த நேயத்தையும் தாண்டிய விரிவான பொருளைக் கொண்டது. ‘வாடிய பயிரைக் கண்டபோது வாடிய’ வடலூர் வள்ளல் பெருமகனாருக்கு முந்தைய சிந்தனை மரபு இதுவாகும். முல்லைக் தேர் கொடுத்த பாரி முதலாக ஏராளமான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.
தற்சார்பு ஒரு திணை மண்டிலத்தின் தேவைகள் அந்தத் திணை மண்டலத்திலேயே பெரிதும் நிறைவு செய்யப்பட வேண்டும். அனைத்தும் தேவைகளும் வெளியில் இருந்து வருமாயின் அது விரைவில் அழிந்துவிடும். உயிர்ம நேயமும், பன்மயமும் தற்சார்புக்கான முன்நிபந்தனைகள் அல்லது அடிப்படைக் காரணிகள் என்று கூறலாம். பாரியின் பரம்பு மலை தற்சார்பிற்கான சிறந்த எடுத்துக்காட்டாக கபிலர் மொழிகிறார். உயிர்ம நேயமும் பன்மயமும் பறம்புமலையின் சிறப்புகள்.
‘அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவ ருழாதன நான்குபய னுடைத்தே
ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க்கும்மே
நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே
(புறம் – 109)
எதிர்காலத்திற்கான அறமாகவும் திணையியல் உள்ளது. இன்றைய வறட்டு அறிவியல் அறமற்றதாக மாறிவருகிறது. இயற்கையான உலகும் அதன் விதிகளும் கைவிடப்பட்டுள்ளன. செயற்கைத் தன்மையான, பொருளற்ற வாழ்வையும் விண்வெளித் துணைகோள்களில் வாழ்கையை அமைத்துக் கொண்டு இந்தப் பூவுலகை சாகடித்து புறந்தள்ளிவிடலாம் என்று இன்றைய அறிவியல் உலகம் கருதுகின்றது.
‘அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின்நோய்
தன்னோய்போல் போற்றாக் கடை’ என்கிறார் திருவள்ளுவர்.
பண்டைய மக்களின் நம்பிக்கை சார்ந்த உணர்வுகளும் அனைத்து உயிரினங்களையும் மதித்துப் போற்றுகின்ற மாண்பும் இல்லாமல் போனால் இன்றைய வாழ்க்கை மட்டுமல்லாது எதிர்காலமும் இழந்து போகக்கூடும்..
இதுவரை நமது ஆய்வாளர்கள் இந்தச் சிந்தனையை சூழலியல் நோக்கில் ஆராயாமல் விட்டுவிட்டனர். பூசாரியம் சார்ந்த மூடநம்பிக்கைக்கு அப்பாற்பட்டும், வறட்டுத்தனமான எந்திரத்தன்மை கொண்ட பகுத்தறிவில் சிக்கிக் கொள்ளாமலும் அறத்தை உள்ளடக்கிய ஓர் அறிவியலாக தமிழ்த் திணையியல் மலர்கிறது. இதுவே உலக எதிர்காலத்திற்கான அறமாகவும் உள்ளது.
இலக்கியப் படைப்புகளில் இருந்து இந்தக் கோட்பாடு வெளிப்படுத்தப்படுமேயானால் தமிழர்களின் தனித் தன்மையான கோட்பாடாக உலகிற்கு வழிகாட்டும்.
- (Val Plumwood – Environmental Culture: The Ecological Crisis of Reason – ISBN 9780415178778. Retrieved 12 June 2013.)
2 (The Selected Works of Arne Naess, Deep Ecology of Wisdom – By Springer,The Netherlands-ISBN-10 1-4020-3727-9)
3 (Richard Sylvan – Stanford Encyclopedia of Philosophy)
4 (www.indiawaterportal.org)
5 (Sainik School Entrance Exam. (For Class IX) – Page 255)
6 (Earth Democracy: Justice, Sustainability & Peace, Vandana Shiva – Zed Books )
7 (Tamil Bible, Black and White Version,New Life Assembly of God)
8 (The Sacred Books of the East: Shatapatha Brahmana, xiv. 4, Max Muller)8