அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த விடுதலைப் போராட்டக் களத்தில் 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று தொடங்கப்பட்ட அமைப்பு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ALL INDIA STUDENTS’ FEDERATION – AISF). தேசப்பிதா காந்தியின் வருகைக்குப் பின்னரும், தொழிற்சங்கம் வலிமை பெறத்  தொடங்கிய பின்னரும், பகத்சிங்கின் வீரமரணத்தால் இளைஞர்களின் இதயங்களில் விடுதலை வேட்கை பற்றிக்கொண்ட பின்னரும் விடுதலைப் போராட்டம் பல பரிணாமங்களை எதிர்கொண்டது.  இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக மாணவர்களையும் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுக்க வைக்க தொடங்கப்பட்ட அமைப்புதான் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம். 

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நசுக்க பிரிட்டிஷ் காலனிய அரசு ராணுவத்தினரை ரயிலில் அனுப்பியது. அந்த ரயில் தன்னுடைய நகரத்தின் வழியாக செல்வதை அறிந்த ஹேமு கலானி என்கிற 19 வயதே நிரம்பிய மாணவர் பெருமன்றத்தைச் சார்ந்த இளைஞன், அந்த ரயிலை கவிழ்க்க திட்டமிட்டார். இதை முன்கூட்டியே அறிந்து கொண்ட பிரிட்டிஷ் அரசு, திட்டம் நிறைவேறும் முன்னரே ஹேமு கலானியை கைது செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கி தூக்கு மேடை ஏற்றினர். 

இவரைப்போல் நாடு முழுவதும் எண்ணற்ற மாணவர்களின் ரத்தமும் உயிர்த் தியாகமும் மாணவர் பெருமன்றத்தால் விடுதலைப் போராட்டத்திற்கு பங்களிக்கப்பட்டிருக்கிறது. 

298957101_446795320817238_122380399592809994_n.jpg
341873155_2264111990448796_8988336848779753142_n.jpg

1943ல் வங்கப் பஞ்சம் ஏற்பட்ட போது நாடு முழுக்க நிதி, உணவு பொருட்களை திரட்டி பல நிவாரண முகாம்களை அமைத்து மக்களுக்கான சேவையில் பெரும் பங்களிப்பைச் செய்தது.

1947 ஆகஸ்ட் 15 இந்திய விடுதலையின்  பொழுது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் உலக வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் எண்ணிக்கையில் இடப்பெயர்வு நடைபெற்றது. தீவிரமான மதக் கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர்ப்பலிகள் ஏற்பட்டது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண முகாம்களை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல சேவைகளை  செய்தது. நிவாரண முகாம்களுக்கு உள்ளே இஸ்லாமியர்கள் போல் உடை அணிந்து இந்த அடிப்படைவாதிகளே மதக் கலவரத்தைத் தூண்ட பல முயற்சிகள் மேற்கொண்டனர். அம் முயற்சிகளை மாணவர் தோழர்கள் முறியடித்து மதக்கலவரம் உருவாகாதவாறு மக்களை ஒற்றுமைப்படுத்தினர்.

விடுதலைக்குப் பின்னர் அமைதி, முன்னேற்றம், விஞ்ஞான சோசலிசம் என்கிற முழக்கத்தை முன்வைத்தும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அரசே கட்டணம் இல்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்கிற கொள்கையை முன்வைத்தும் போராடி வருகிறது. கல்வி வளாகங்களில் சாதி, மத உணர்வுகளைக் கடந்து மாணவர்களை ஒற்றுமைப்படுத்தி அரசியல் ரீதியாக பயிற்றுவிப்பதில் மாணவர் பெருமன்றம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 

விடுதலைக்குப் பின்னர் தொடக்கத்தில் 21 வயது நிரம்பியவருக்கு மட்டுமே வாக்குரிமை என்று இருந்தது. இதனை எதிர்த்து 18 வயது நிரம்பிய உடனே வாக்களிக்கும் உரிமை வேண்டும் என போராடி வெற்றியை பெற்றுக் கொடுத்ததில் முக்கிய பங்கு மாணவர் பெருமன்றத்திற்கு உண்டு.361937847_685162450313856_7408039674681258739_n.jpg361945632_685162416980526_592081280686227217_n.jpg375858283_714858837344217_1107702957990915067_n.jpg

தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராக பல மாநாடுகளை, போராட்டங்களை நடத்தியது. சமூக நீதிக் கொள்கையான இட ஒதுக்கீட்டை பாதுகாக்க, வலுப்படுத்த பல போராட்டங்களை நடத்தியுள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், விடுதிகள் தொடங்கப்பட வேண்டுமென்பதற்கான போராட்ட வரலாறுண்டு. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிப் பெற்று தந்ததில் மாணவர் பெருமன்றத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்வதற்கு தடை செய்து சட்டத்தை கொண்டு வர பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது.

அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக மாற்றும் முயற்சியை தமிழ்நாடு அரசு எடுத்தது. அதனை எதிர்த்து மாநிலம் முழுவதும் மாணவர்களை அணிதிரட்டி வலுவான போராட்டங்களை முன்னெடுத்து தமிழ்நாடு அரசின் முடிவை திரும்பப் பெற வைத்தது. பன்னிரண்டாம் வகுப்பை முடித்து பட்டப் படிப்பை மேற்கொள்ள கல்லூரிக்கு வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல போதுமான அரசு கல்லூரிகள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே இருக்கக்கூடிய அரசு கல்லூரிகளில் காலை, மாலை  என சுழற்சி முறையில் இரண்டு வேளைகளில் கல்லூரிகள் இயங்க தொடர்ந்து போராடி இன்று அதுபோல் இரண்டு பாட வேளைகளாக இயங்குகின்றன.

1.jpg

அனைவருக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்ட சமச்சீர்க் கல்வி முறையை வலியுறுத்தி 2009 ஆம் ஆண்டு மதுரையில் மூன்று நாள் மாநாடு நடைபெற்றது. முதல் நாளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டாம் நாள் மாநாடு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதே அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் சமச்சீர் கல்வியை திட்டமாக அறிவித்தார். 

இந்திய நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதத்திற்கு குறைவில்லாமல் கல்விக்கு ஒதுக்க வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றோம். ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிற பொழுது கல்விக்கான நிதியை 6 சதவீதமாக உயர்த்தி வழங்க நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை டெல்லியில் நடத்தி வருகின்றோம்.

297366180_439606638202773_5139266948791802516_n.jpg

2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்டப் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர். போரில் சிங்கள பேரினவாத அரசிற்கு இந்திய அரசு உதவக்கூடாது, போரை உடனடியாக நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகத்தில் இருந்து இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களைத் திரட்டி “கண்ணீர் தூதுவன்” என்கிற சிறப்பு தனி ரயிலை ஏற்பாடு செய்து டெல்லி நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது, மாணவர் பெருமன்றம்.

கடந்த 75 ஆண்டுகால இந்திய வரலாற்றில் பொதுக் கல்வி கட்டமைப்பை வலுப்படுத்த எண்ணற்ற போராட்டங்களை மாணவர் பெருமன்றம் முன் நின்று நடத்தியுள்ளது. ஆனால், கடந்த 9 ஆண்டு காலத்தில் பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசு கடைபிடிக்கும் தீவிர மத அடிப்படைவாத வலதுசாரி கொள்கையினால்  நாம் இதுவரை போராடிப்பெற்ற கல்வி உரிமை மெல்ல மெல்ல பறிபோய்க் கொண்டு இருக்கிறது.

298753319_446794964150607_5244518616771667705_n.jpg

நம் நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கு மாறாக குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு போட்டித் தகுதி தேர்வு என்கிற அடிப்படையில் நீட் தேர்வை நடத்தி ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வருகிறது.

வணிகமயம், காவிமயம், ஒன்றியமயம் என்கிற அடிப்படையிலேயே தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியை பரவலாக்கி அனைவரையும் கல்வி கட்டமைப்பிற்குள் கொண்டு வருவதற்கு மாறாக, வெளியேற்றும் கல்விக் கொள்கையாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்தும், பொதுக் கல்வி கட்டமைப்பை பாதுகாக்க, அரசியல் அமைப்பை ஜனநாயகத்தை பாதுகாக்க நடைபெறும் தீவிரமான போராட்டக் களத்தில் முன்னணியில் நின்று போராடி வருகிறது.

விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கும், நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்திலும், மக்கள் பிரச்சனைகளுக்கு மாணவர்களை அரசியல் படுத்தியும், அரசியலை ஜனநாயகப்படுத்துகிற போராட்டத்திலும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் முன்னணியில் நின்று போராடி வருகிறது.

தினேஷ் சீரங்கராஜ், பொதுச் செயலாளர்,

 

One thought on “அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்

  1. அருமை தோழர்.அணைத்திய மாணவர் பெருமன்ற வாழ்க வரலாறு பேசட்டும் எனது பங்களிப்பு இருக்கும் என அன்போடு உறுதியளிக்கிறேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *