
இன்றைய உலகம் இன்னொரு மனிதனை எவ்வாறு உருவாக்குவது (குளோனிங்), தகவல் தொழில் நுட்பத்தில் 5ஜி, வாழ்வியலின் அனைத்து நிலைகளிலும் செயற்கை நுண்ணறிவு என்றவாரெல்லாம் இயங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் இதே பூமியில் சத்தம் இல்லாமல் இயற்கையோடு இணைந்து நாகரிகத்தின் சிறு வாசனைகளை முகர்ந்தும், கல்வி உள்ளே நுழைந்தும் எவ்விதமான அதிகாரத்திலும் அமராமல் அதிகாரத்தின் பிடியில் சிக்கியும் கூட தங்கள் வாழ்வியலை செம்மையாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இருளர்களைப் பற்றிய ஒரு மிகச்சிறந்த நாவலே ஊத்தாம்பல்லா. சேலம் பகுதியில் பல் விளக்காதவர்களை ‘ஊத்தப்பல்லா’ என்று குறிப்பிடுவார்கள் அவ்வாறே நினைத்து நூலை படிக்க தொடங்கிய எனக்கு இது ஒரு எலி பிடிக்கக்கூடிய இருளர்களின் மிக முக்கியமான வேட்டை கருவி என்பதை அறிமுகப்படுத்தியதிலிருந்து ஆச்சரியம் தொடங்கியது. இந்த நாவலை படிக்கும் பொழுது வேட்டையாடும் சமுதாயத்தை மிக நெருக்கமாக காணமுடிகிறது. அதிகாரம் என்பது அவர்களுடைய வாழ்வில் எவ்வாறெல்லாம் ஊடுருவி அலை கழிக்கிறது என்பதில் இந்த நாவல் தொடங்குகிறது. அந்த அதிகாரத்தை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? அரசியல் எவ்வாறு அவர்களுடைய வாழ்வில் உள்ளே நுழைய முற்படுகிறது?பெண்ணியம் பேசக்கூடிய படித்தவர்கள்(? ) மத்தியில் இதில் வரும் மலையனூர் அம்மா எவ்வாறு தன்னை அறியாமலேயே பெண்ணியவாதியாக திகழ்கிறார்….. என்பதை பற்றி எல்லாம் நூலை வாசிப்பவர்கள் மிக அருமையாக உணர்ந்து கொள்வர்.திருமணமே செய்து கொள்ளாமல் வாழும் சேட்டு, சாஞ்சகாலன், இல்லூட்டா பேரழகியான அல்லி அல்லிக்காக அந்த ஊரையே விட்டு செல்லக்கூடிய அவளின் பெற்றோர், ஒரு திருவிழாவை அவர்கள் கொண்டாடும் விதம் ( 188 முதல் 304 பக்கம் வரை )என புதினம் முழுவதும் இருளர்களின் அன்றாட தற்போதைய வாழ்க்கையை ஒரு தேர்ந்த நிழற்பட கலைஞன் போல போல படம்பிடித்து காட்டியுள்ளார். மானுடவியல் ஆய்வுகளும் இன வரைவியல் ஆய்வுகளும் மேற்கொள்ள ஏதுவான களம் அமைத்து தரும் புதினம் இது…
டிசம்பர் 2024 ஆம் ஆண்டு வேரல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது தமிழகத்தின் மிக முக்கிய அமைப்புகளில் பரிசுகளை வென்ற வண்ணம் உள்ளது. ஊடக மொழியில் சொல்வதென்றால் ஜெய் பீம் 2 எடுப்பதற்கான அத்துணை செய்திகளும் உள்ள புதினம். இதில் கதாநாயகனாக சூர்யாவோ எவருமோ வர தேவையில்லை அவர்களே அவர்களின் வாழ்வினை பார்த்துக் கொள்வது அம் மக்களின் சிறப்பு என்பதையெல்லாம் வெளிப்படையாக எடுத்துக்காட்டி இருக்கக்கூடிய செஞ்சி தமிழினியன் ஐயா அவர்களுக்கு அன்பும்
வாழ்த்தும்…….