இந்நிலை மாறும் நாள் எந்நாளோ?

அங்கிங் எனாதபடி எங்கும் நிறைந்து இருப்பன குப்பைகளே..  குப்பைகளோடு இருப்பதால்தான்” சுத்தமான இந்தியா” என்ற திட்டம் நம் மத்திய அரசாலும் “கட்டுமான  தமிழகம் “என்ற திட்டம் மாநில அரசாலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பனிக்கட்டி நம் கைகளில் இருக்கும் பொழுது நீராக மாறுவது போல இத்திட்டங்கள் எல்லாம் நீர்த்துப் போவதால் குப்பைகள் ஆங்காங்கே நம்மை முகம்  சுளிக்க வைக்கின்றன. குப்பைகளை சரியான முறையில் பிரித்து மறுசுழற்சி செய்ய முடியுமா? .

.        மேலைநாட்டினரை போல உடைகள் ஆடல்கள் பாடல்கள் முதலியவற்றை கடைபிடிக்கும் நாம் குப்பை மேலாண்மையில் ஒரு சதவிகிதம் கூட அவர்களைப் போல இல்லை.இன்று வெளிநாட்டில் வாழக்கூடிய தமிழர்களின் ஏக்கம் அங்கிருக்கும் சுத்தம் எப்பொழுது இங்கிருக்கும்?என்பதுதான் …..

“குப்பை என்பது கழிவல்ல 

கையளவான பொக்கிஷம்தான்! என்பது மேலைநாட்டினரின் அனுபவ உண்மை… அவர்கள் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்து பயனற்றவற்றை பயனாக மாற்றி தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்கிறார்கள்…

 தமிழகத்தில் குப்பைகளால் வாழும் எளிய மனிதர்கள் உண்டு.குப்பைகளை சரியாக பராமரிக்காமல் அதனாலேயே  பணம் பார்க்கும் கொழுத்த மனிதர்களும் உண்டு.  

“குப்பைகளிலிருந்து

கவிதைகளைச் சேகரிக்கும்

சிறுவன் நான்.  ……….

             என்று தொடங்கி 

பால்கனியிலிருந்து

எறியப்படும் உலர்ந்த

மலர்ச்சரங்களை

குழந்தைகளின் ஆடைகளை

தலை உடல்

தனியாக பிய்க்கப்பட்ட பொம்மைகளை

விரலில் சுற்றி வீசப்பட்ட கூந்தல் கற்றையை

ரத்தம் தோய்ந்த மருந்து ஊசிகளை

சுமந்து செல்லும்போது

பூமியின் பாரத்தை

உடைந்த சிலம்புகளை

சுமக்கும்

புனித துக்கம் எனக்கு… 

 என்று முடியும் ஷங்கர் ராம சுப்பிரமணியன் அவர்களின்

குப்பை சேகரிப்பவன் என்ற கவிதை என்  நினைவிற்கு வந்தது. குப்பை ஒரு மனிதனை இந்நிலைக்கு ஆட்படுத்தி உள்ளது.

 சரி சங்க தமிழர்கள் எவ்வாறு இருந்தனர்?

“ குறை நறைக் கறி குப்பை “

 இச்சங்க பாடலில் குப்பை என்னும் சொல் (குவை )குவியல் என்னும் பொருளில் வந்துள்ளது.

 குப்பு-. குப்பல். -குப்பை- குவியல் -குப்பை என்றவாறு குப்பு என்னும் சொல்லிலிருந்து குப்பை குவியல் என்னும் சொற்கள் வந்ததாக சொற்பிறப்பியல் அகராதியில் பாவாணர் குறிப்பிடுகிறார்  

       மொழியியல் வல்லுனரான  சக்திவேல் குவை அதாவது குவிக்கப்பட்டவை என்னும் பொருளில் வழங்கி வந்த குப்பை என்னும் சொல் முன்பு உயர்ந்த பொருளில் வழங்கி இன்று இழிந்த பொருளை வழங்கி வருவதால் (பயன்படாதவை கழிவுகளின் அடையாளமாக குப்பை என்னும் பொருளில் வழங்கி வருவது)” இழி  பொருட் பேறு “ என்கிறார்.

.   குப்பையின் தெய்வமாக இன்று  கருதப்படுபவள் மூதேவி என்று அழைக்கப்படும் தவ்வை..

 இவள் திருமகளின் தமக்கை அதனால்  தவ்வை….

 மூதேவியின் நிலை இன்றைய குப்பைகளை போலவே துரதிஷ்டவசமானது ஆரம்ப காலங்களில் குறிப்பாக வடநாட்டில் வர்ணனின் மனைவியாகவும் ஜேஷ்டா தேவியாகவும் தூங்குற காலியாகவும் சக்தியின் 10 வடிவங்களில் ஒருவளாக தூமாவதி புகை தேவதை என்றும்  கொண்டாடப்படுகிறாள் 

.  தமிழகத்திலும் கூட ஆதியில் தவ்வை செல்வத்தின் குறியீடாக உள்ளாள். தொண்டரடி பொடியாழ்வார் “திருமால் இருக்க தவ்வியிடம் ஏன் செல்வத்தை எதிர்பார்க்கிறீர்கள்? என்று பக்தர்களிடம் கேட்கிறார்.”

 உத்திரமேரூரில் அவ்வையின் சிற்பம் பூமியை பார்த்தபடி மூடி வைக்கப்பட்டுள்ளது செல்வத்தின் நாயகி இன்று அமங்கலத்தின் குறியீடாக நிற்கிறாள். குப்பைகளின் நிலையும் இது தான் செல்வத்தின் குறியீடாக இருக்கும் குப்பைகள் நம் நாட்டில் இன்று அமங்கலத்தில் குறியீடாக தெருக்கள் தோறும், ஊரின் எல்லைகள் தோறும் இருந்து நீர் நிலம் காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி சுற்றுப்புற சூழலை மோசமான நிலையில் வைத்துள்ளன.

 கேரள மலைகளில் ஏறும் பொழுது பிளாஸ்டிக் பொருள்களுக்கு கடுமையான தடை உண்டு தமிழகத்தின் குற்றாலத்தில் ஷாம்பு போட்டு தாராளமாக குளித்து ஷாம்பு கவரை தண்ணீரிலேயே விட்டுவிட்டு வரலாம்.

 இந்நிலை மாறும் நாள் எந்நாளோ?

  குறிப்பாக சங்ககாலத்தில்  கழிவுகளை மக்கள் எவ்வாறு கையாண்டனர் என்பதை ஆராயும் பொழுது  அவ்வபோது தூர்வாரி மக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நீர் நிலைகளை மன்னர்கள் வைத்திருந்தனர் என்பதற்கு  பாடல் ஒன்று சான்றாக அமைகிறது

 மூவேந்தர்களும் பாதியை தந்திரமாக கொன்ற பின்னர் அவனுடைய மலைநாட்டில் உள்ள குளம் பாழ்பட்டு நிற்கின்றது என்பதை கபிலர்  வேதனையோடு பதிவு செய்துள்ளார்

“தெண்ணீர் சிறு குளம் கீள்வது மாதோ   கூர் வேல் குவை இய மொய்ம்பின்”

.        எட்டாம் பிறை போன்ற சிறிய வளைந்த கரை கொண்ட குளம் இன்று பாழ்பட்டு நிற்கிறது என்பது  இதன் பொருள்.

       நீர் நிலைகளை உருவாக்குவதும் அதனை பாதுகாப்பதும் மக்களுக்கு வழங்குவதும் அரசனுடைய பணி. ஒரு நாட்டில் வெற்றி பெற்ற அரசன் யானைகள் உள்ளிட்ட விலங்குகளை வைத்து அந்த நாட்டினுடைய குளங்களை பாழ்படுத்தி அந்நாட்டு மக்களுக்கு பயன்படாத வகையில் செய்வது என்பது  போர் நெறிகளில் ஒன்றாக இருந்திருக்கிறது 

 இதுபோன்ற பல சான்றுகளால் மன்னர்கள் காலத்தில் நீர் நிலைகள் சுத்தப்படுத்தப்பட்டு கழிவுகள் தேங்கா வண்ணம் அவற்றில் குப்பைகள் அகற்றப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன 

.     நீரில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு தூம்பு என்னும் கருவியினை பயன்படுத்தி வந்துள்ளனர் இது  சிறிய துளை உள்ள கருவி இதனுடைய வேறு பெயர் சுருங்கை.மூங்கில் மற்றும் பனையினால் இக்கருவி  உருவாக்கப்பட்டுள்ளது.  நீரில் உள்ள குப்பைகளை முன்னோர்கள் அகற்றி  தங்கள் நீர் நிலையினை சுத்தமாகவும் வைத்துள்ளனர் 

 சுத்தமாக வைப்பதோடு மட்டுமில்லாமல் அவற்றை கொண்டாடும் வகையில் 

“முந்நீர் விழவு”என்னும் பெயரில் நீருக்கு விழா எடுத்துள்ளதாக நீர் பண்பாடு என்னும் நூலில்தொ. பரமசிவம்  குறிப்பிடுகிறார்.

 நிலக்கழிவுகளை அகற்றுவதற்கு காட்டெரிப்பு முறையினை பயன்படுத்தி உள்ளனர். குறவர்,காடவர், புனவன்,நாடன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற குறிஞ்சி நிலத் தலைவர்கள் நிலத்தில் ஏற்படக்கூடிய கழிவுகளான சருகுகள்,காய்ந்த இலைகள் இவற்றை எரித்து  குப்பைகளை மறுசுழற்சி செய்து எருவாக்கி  அந் நிலத்தில் மறு  வேளாண்மையினை துவங்கி உள்ளனர். இதனை,

.    “ எறி புன குறவன் குறையலன்ன “

 என்று காட்டெரிப்பு வேளாண் முறையினை குறவர்கள்  கையாண்டதை புறநானூறு பதிவு செய்கிறது.

 விலங்குகளின் கழிவுகளை எருவாக பயன்படுத்தி இன்று போலவே அன்றும்(?) (அன்று போலவே இன்று ) வேளாண்மை நடைபெற்றுள்ளது. இதனை,

.       “தாது  எரு மருங்கின்”என்று புறநானூறு குறிப்பிடுகிறது 

“ தாது எருமறுத்த கழி அழி மன்றத்து “என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது 

 விலங்குகளின் கழிவை எருவாக பயன்படுத்துதல் என்பது அக்காலத்தில் இருந்து தொடர்கிறது. (நல்லவேளை நம் முன்னோர்கள் எருவினை பயிர்களின் உரமாக்கினார்கள் இல்லையெனில் அந்த குப்பைகள் எல்லாம் தனியாக வந்து மலை போல் குவிந்து நகர குப்பைகளை விட மோசமான குப்பைகளாக மாறியிருக்கும்.)

“ தா தெரு மன்றம்” என்ற என்ற பெயரில் உள்ள இடம் குப்பை கூலங்களை எல்லாம் ஒன்றாக கொட்டி அவற்றை எருவாக மாற்றும் இடமாக பயன்பட்டுள்ளது.

 இல்லத்திலிருந்து வெளியேறும் அரிசி கழுவிய நீர் அவர்களின் வீட்டு தோட்டத்தில் பாய்வதாக இராமாயணத்தில் கம்பர் பதிவு 

செய்துள்ளார். இதிலிருந்து இல்லத்தின் நீரை மிகச் சரியாக திட்டமிட்டு மறுசுழற்சிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளமை தெளிவாகிறது

 நாம் குப்பையினை மிக சரியாக பயன்படுத்தி வந்ததை இன்னும் பிற்கால இலக்கியங்களும் சுட்டி நிற்கின்றன விரிவஞ்சி அவற்றை விடுக்கிறேன்  குப்பை மேலாண்மையில் கறை இல்லாமல் கரை  கண்டவர்களாக நாம் மாற வேண்டும் அதற்கு நாம் மனம் வைக்க வேண்டும் மனம் வைப்போமா?மணம் பெருக??????

apj
aruna
gandh
sundar lal
sunitha
vanthana
previous arrow
next arrow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *