
உயிருள்ளவற்றிற்கும் உயிரற்றப் பொருட்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு, தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் திறனில் தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கல்லை அடிக்கும்போது அது அசையாமல் எதிர்க்கும். அடியின் விசை அதிகமாக இருந்தால், கல் சிறிய துண்டுகளாக உடைந்து போகும். ஆனால் தன்னை மாற்றிக்கொள்ளவோ அல்லது தனது இருப்பை வளமாக்கிக் கொள்ள, அந்த அடியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவோ உயிரற்ற கல்லுக்குத் தேரியாது.
ஆனால் உயிருள்ளவை, பலவீனமான நிலையில் இருந்தாலும், எதிராக செயல்படும் ஆற்றல்களை தமக்கு சாதகமாக மாற்றி, உயிர்வாழவும் வளர்ச்சியடையவும் முயற்சிக்கின்றன. உயிருள்ளவை இதைச் செய்ய தவறிவிட்டால், கல்லைப் போல துண்டுகளாக உடைவது மட்டும் இல்லாமல், தமக்கே உரிய தன்மையை இழந்து, அதன் உயிர் நிலையே காணாமல் போய்விடும். தமக்கானத் தேவைகளை பூர்த்தி செய்யதுகெள்ளும் சூழலை அமைத்துகெள்வது தான் உயிரின் தன்மை. இந்தத் திறமைகளைப் பிரதிபலிப்பது தான் – கல்வி.
ஒரு சமூகங்கத்திற்கான அறிவு, பழக்கவழக்கங்கள் மற்றும் அதன் மதிப்புகளை முன் தலைமுறையினர் அடுத்த தலைமுறைக்கு கடத்தி, அதன் தொடர்ச்சியை நிலைநிறுத்துவதை நாம் கண்டுவருகிறோம். எந்த ஓரு சமூகத்திற்கும் அடிப்படையான தூணாக விளங்குவது கல்வி தான். தனிநபரின் அறிவு மற்றும் நடைமுறை செயல்களை வடிவமைத்து, அந்தச் சமூகத்தையும் தனிநபர்களையும் முன்னேற்றுவது கல்வி தான்.
“கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு,
புண்ணுடையார் கல்லா தவர்.”
திருவள்ளுவர் இந்த உவமையின் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கல்விக்கு “கண்” என உவமையிட்டுள்ளார். கல்வியறிவு பெற விரும்பாத ஒருவருக்கு, முகத்தில் இருப்பது கண்கள் இல்லை, அவற்றின் இடத்தில் இரண்டு புண்களே உள்ளன என்று அவர் குறிப்பிடுகிறார். கல்வியால் மட்டுமே அத்தகையப் புண்களை கண்களாக மாற்ற மூடியும்.
இங்கே, “கண்கள்” என்பது தெளிவு, ஆழ்ந்த பார்வை, மற்றும் வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான திறன்களாகும். கண்கள் இல்லாமல் இருப்பது ஒருவரின் கல்வி பற்றாக்குறையால் உலகத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத நிலையை வரையறுக்கிறது.
கல்வியால் பல்வேறு அறிஞர்களின் பார்வைகளையும் வரலாற்று உண்மைகளையும் தெரிந்து கொண்டு, நமது பார்வையையும் எண்ணங்களையும் விரிவுபடுத்திக் கொள்ளலாம். எது தவறு, எது சரி என்ற அடிப்படையை உணரத்த, கல்வி உதவும்.
தந்தை பெரியார், பெண்களின் கல்வி மற்றும் சுயமரியாதைக்காகப் போராடிய முன்னோடி சமூக சீர்திருத்தவாதி. பெண்களுக்கு கல்வியை மறுப்பது, அவர்களை அடிமையாக, பிறரை சார்ந்தவர்களாக வைத்திருக்க திட்டமிட்ட செயலே என்பதை உணர்த்தினார். “கல்வி மட்டுமே பெண்களை சமத்துவத்திற்கு உயர்த்தும். பெண்கள் கல்வியடைவதன் மூலம், அவர்கள் தங்களை மட்டுமல்ல, எதிர்கால சந்ததியையும் மேம்படுத்த முடியும்” என அவர் வலியுறுத்தினார்.
வெறும் எழுத்தறிவு மட்டுமல்ல, பெண்கள் பல்வேறு துறைகளில் அறிவை வளர்த்து, அடிமைப்படுத்தும் சமூக மரபுகளைக் கடந்து, முடிவெடுக்கும் திறனை வளர்துக்கெள்வதை தான் பெரியார் கல்வி என்றார். பெண்களுக்கு மட்டுமல்ல, இது அனைவருக்குமான கருத்து. ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.
வாசிப்புப் பழக்கத்தை மாணவர்களிடைய வளர்க்க வேண்டியது மிக அவசியம். பல இலக்கியங்களை வாசித்து, அதைப் பற்றிய விவாதங்கள் ஒவ்வொரு வகுப்பறையிலும் நடத்தி, அதற்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். பன்முகப் பார்வையுடன் சிறந்த அனுபவங்களைப் பெற, கற்ற கல்வி உதவ வேண்டும். இதனால் மாணவர்களின் உலகளாவிய விழிப்புணர்வை மேம்படுத்த முடியும்.
பாரம்பரிய மனப்பாடக் கல்வி முறைகள் இனி போதாது. விமர்சன சிந்தனையை வளர்த்து, சூழ்நிலைகளை ஆய்வு செய்யவும், ஆதாரங்களை மதிப்பீடு செய்யவும், அறிவுபூர்வமான முடிவுகளை எடுக்கவும், கல்வி உதவ வேண்டும். உதாரணமாக, மாணவர்கள் சமூகத் திட்டங்களை வரையறுக்கவும், கள ஆய்வுகளை மேற்கொள்ளவும் கற்க வேண்டும். மாணவர்களே கேள்வி எழுப்பி, பதில்களைத் தேடி , திறந்த மனதுடன் சிக்கல்களை அணுகும் விதமாக (Inquiry-based Learning) கல்வி அமைய வேண்டும்.
தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் இன்றைய உலகில், எழுத்தறிவும் வாசிப்பறிவும் போலவே, டிஜிட்டல் கல்வியறிவும் அடிப்படையான தேவையாக மாறியுள்ளது. கோடிங், செயற்கை நுண்ணறிவு போன்ற கருவிகளை நவீன தொழில்முறைக்கு ஏற்ப பயிற்சி பெறுவது மாணவரகளின் இன்றையத் தேவையாகும். டிஜிட்டல் கல்வியறிவு என்பது வெறும் தொழில்நுட்ப அறிவை வளர்ப்பது மட்டுமில்ல. அதில் நெறிமுறைகளைப் பின்பற்றி, இணைய நடத்தை, தரவுக் காப்பு போன்ற பொறுப்புணர்வும் அடங்கும். இணையதளத்தில் தவறான தகவல்கள் (misinformation) குறித்து மாணவர்களுடன் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அவர்களை பொறுப்புள்ள டிஜிட்டல் குடிமக்களாக உருவாக்கும் பொறுப்பும் இன்றைய கல்விக்கு உண்டு.
உலகளாவிய மாற்றங்களால் இன்றைய சூழலில் மாணவர்கள், வறுமை, சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். சார்பற்ற தன்மையுடன், மாணவர்களுக்கு உலகளாவிய கோணத்தில் தீர்வுகளைத் தேடும் மனப்பாங்கை இன்றையக் கல்வியாளர்கள் கற்றுத்தர வேண்டும். இவ்வகை உலகளாவிய விழிப்புணர்வு, மாணவர்களிடையே கலாச்சார உணர்வை மேம்படுத்தி, பல்வேறு கலாச்சாரங்களை மதித்து வாழக் கற்றுக் கொடுக்கும்.
பலவிதமான கவர்ச்சிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், மாணவர்களிடையே நாம் அதிகம் கேட்கும் வார்த்தை, மன அழுத்தம். அடுத்து, போதைப் பொருள் உபயோகிப்பது. போதைப் பொருட்கள் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, தனிநபர் முன்னேற்றத்தையும் குலைக்கிறது. முயற்சித்துப் பார்க்கலாமே எனத் தொடங்கி, நாளடைவில் அடிமைத்தனமாக மாறிவிடுவதை நாம் காண்கிறோம். இதனால் பல மாணவர்கள், உறவுகளிடம் நன் மதிப்பை இழந்து, வாய்ப்புகளை இழந்து, காணாமல் போய் விடுகிறார்கள். போதை பொருள் விற்பனையாளருக்கோ அது பணம் சம்பாதிக்கும் உத்தி. பயண்படுத்தும் மாணவ சமுதாயத்திற்கு இதனால் என்ன பயன்? இழப்பு மட்டுமே மிஞ்சும். அந்த மாணவன் தன் வாழ்க்கையை இழந்து, விற்பனையாளருக்கு உதவி செய்து வருகிறார்.
மாணவர்கள் இதுபோன்ற ஆபத்துகளுக்கு ஆளாகாமல் இருக்க, அவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் சரியான முடிவுகளை எடுக்கும் அறிவாற்றலை, கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். ஒழுக்கம், விமர்சன சிந்தனை மற்றும் மன உறுதியை வளர்ப்பது தான் தரமான கல்வியாகும். இங்கே தான், கல்வியில் உணர்ச்சி நுண்ணறிவின் தேவையை வலியுறுத்த வேண்டும். உறவுகளை மேலாண்மை செய்யவும், மன அழுத்தத்தை கையாளவும், மனநலத்தை பராமரிக்கவும் இது உதவும். பள்ளிகளில் குழுக் கலந்துரையாடல்கள் நிகழ்த்தி, குழுவாகச் செயல்படுவதற்கும், திறம்பட தொடர்பு கொள்வதற்கும் அவர்களைத் தயார் படுத்த வேண்டும்.
இன்றைய சமுதாயத் தேவைக்கான மாற்றங்களை உள்ளடக்கியதாக, கல்வி இருக்க வேண்டும். காரணம், ஒரு சமுதாயத்தின் கடந்தகாலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலத்தை இணைக்கும் பாலமாக கல்வி விளங்குகிறது. சூழலுக்கு ஏற்ற வளர்ச்சியை ஊக்குவிக்கும் கல்வி முறை தான் இன்றைய அவசியம். இதுவே நாளைய நிலையான மற்றும் செழிப்பான சமுதாயத்தை உறுதிப்படுத்தும்.