கல்விக்கூடங்களில் ஆசிரியர்-மாணவர் உறவு நிலையும் உளவியலும்

ஒரு மனிதன் உன்னதமான நிலையை அடைவதற்கு அடிப்படையாக அமைவது குடும்பம் மற்றும் கல்விக்கூடமாகும். ஒருவனின் புகழ் அழியாமல் நிலைத்திருப்பது, அவனது உறவுநிலைகள், அறிவுத்திறமை ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.  இன்றைய இயந்திர வாழ்க்கையில் கல்விநிலைகளிலும், குடும்பங்களிலும் நாகரிகம் என்ற பெயரில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  இயந்திரமயமான வளர்ச்சியால் மாணவர்கள், குழந்தைகள் சில வழிகளில் நற்பலன்களை அடைந்தாலும் பல வழிகளில் தீங்குகளையே அடைகின்றனர்.  காலச்சூழலில் ஏற்பட்ட சமூக மாறுபாடுகளால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள உறவுகளும், பெற்றோர்-குழந்தைகளுக்கு இடையிலுள்ள உறவுகளும் சுருங்கிவிட்டனவென்றே கூறலாம்.  இவ்விரு உறவுமுறைகளை ஊக்குவிக்கப் பல மாற்றங்களை ஏற்படுத்தினால் தான் நிலைத்த வாழ்வினை இச்சமுதாயம் பெறமுடியும்.  

1. கல்விக்கூடங்களில் ஆசிரியர்மாணவர் உறவுகளை மேம்படுத்தல்:-

மாபெரும் மாளிகை கட்டுவதற்கு அடித்தளம் எவ்வளவு இன்றியமையாததோ, அதனைப் போன்று கல்விக்கு ஆசிரியர் அடித்தளமாக உள்ளார்.  ‘கட்டாயக்கல்வி அவசியம்’ என்று அரசு சட்டம் இயற்றுமளவிற்கு வாழ்க்கைக்குப் பயனளிக்கும் கல்வி இன்று ஓரளவிற்கு பரவிவிட்டது.  கல்வி என்பது எது? என்று அறியாமலேயே பலர் உயர்கல்வியை முடித்துவிடுகின்றனர்,  கல்வி என்பதனைப் பற்றி முதலில் நன்கு அறிதல் அவசியம்.

1.1. கல்வி:-

“கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு” என்பர்.  கல்விக்குக் கரையே கிடையாது என்று கருதுமளவிற்கு முடிவற்றது.  “கல்வி என்ற தமிழ்ச் சொல்லே ‘கல்’ என்னும் பகுதியினடியாய் பிறந்தது.  ‘கல்’ என்றால் ‘தோண்டு’ என்று பொருள்.  எனவே, தோண்டத் தோண்ட மணற்கேணி சுரப்பது போல் அறிவின் துணையால் தோண்டத் தோண்ட வளர்வது கல்வியாகும்.  பிரித்துப் பார்க்கும் அறிவு கல்வியிலிருந்து கிடைத்தது”.  எனவே தான் வள்ளுவர், பொருள்களின் புறவடிவத்தைக் காண்கின்ற கண்களும், அகவடிவை ஆராய்கிற கண்களும் ஒன்று என திருக்குறள் ஆசான் கூறினார். ‘இசையமுதில்’, பாரதிதாசன்,

“செல்வம் பிறர்க்கு நாம் தந்திடில் தீர்ந்திடும்

கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும்.”

என்று கல்விச் செல்வத்தைப் புகழ்ந்து பாடுகின்றார். அழியாத செல்வம் கல்வியே ஆகும்.  கல்வி என்பது கற்பகத் தருவினைப் போன்றது.  கல்விக் கடலின் கரை கண்ட சுவாமி விவேகானந்தர், “மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்தை வெளிப்படுத்துவதே கல்வி எனப்படும்.  கல்வி என்பது மாணவனின் தலைக்குள் தகவல்களைத் திணித்து வைப்பது அல்ல.  அந்தத் தகவல்கள் அங்கே குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு மாணவனின் வாழ்நாள் முழுவதும் சீரணம் ஆகாமலேயே இருந்துவிடும்.  குணநலன்களை உருவாக்குதல், மன பலத்தை அதிகரித்தல், அறிவை விரிவாக்குதல், தன் காலில் நிற்கக் கற்பித்தல் ஆகியவற்றை ஏற்படுத்துவதே கல்வியெனக்” கருதுகிறார்.

கல்வி என்று கூறும்பொழுது ஏட்டுக்கல்வியை மட்டும் குறிப்பிடக்கூடாது.  அனுபவத்தால் பெறப்படும் கல்வியும்., கேள்வி ஞானத்தால் பெறுகின்ற கல்வியும், அக உணர்வுத் தூண்டலால் பெறப்படுகின்ற கல்வியும் கல்வியே.

ஏட்டுக்கல்விகேள்விக்கல்விஅக உணர்வுக் கல்வி

முதல் இரு கல்விமுறையும் இல்லாமல் நேரடியாக அக உணர்வுக் கல்விமுறையை அறிந்து கொண்டவர்கள் இயேசுகிறிஸ்து, இராமகிருஷ்ணர் போன்ற மகான்கள்.  நம் நாட்டில் மிக உயர்ந்த மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதே இல்லை.  இன்றைய கல்விமுறை முழுவதும் எதிர்மாறாகவே உள்ளன; “எதிர்மறை உணர்ச்சியை ஏற்படுத்தும் கல்வி மரணத்தை விடக் கொடியதாகும்.  ஒரு குழந்தை பள்ளிக்குச் சென்றதும் அதன் தகப்பனார் ஒரு முட்டாள் என்று முதற்பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.  இரண்டாவது அதன் பாட்டனார் பைத்தியக்காரர் என்றும், மூன்றாவது ஆசிரியர்கள் வெளிவேஷக்காரர்கள் என கற்பிக்கப்படுகிறது.  நமது சொந்த மூதாதையர்களைப் பற்றி அறிய அக்கறையின்றி ஆங்கிலேயர்களின் மூதாதையர்களின் முழு விபரங்களை அறியத்துடிக்கிறோம்.

பாண்டிய மன்னன் அதிவீரராமன்,

“கல்லா ஒருவன் குல நலம் பேசுதல்

நெல்லினுள் பிறந்த பதராகும்மே.”

என்கிறார்.  கல்வியின் சிறப்பினை ஒரு மாணவன் தெளிவாக உணர வேண்டும்.  அதில் தெளிவடைந்த பின் கற்றல் என்பது மாணவர்களுக்கு இனிதாக அமையும்.

முற்காலத்தை விட இப்பொழுது படிக்கும் பழக்கம் அதிகமாகவே உள்ளது.  அச்சு வசதி, மின் வசதி போன்ற காரணங்களால் நூல்களின் எண்ணிக்கையும், படிப்பவர்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு உயர்ந்து விட்டது.  ஆனால் மனப்பக்குவம் இல்லாததால், எளிதில் கிடைத்தும் இந்த அறிவு சல்லடையில் ஊற்றிய தண்ணீர் போல் நிலைக்காது போய் விடுகிறது.  ஆகவே பாரதி, பல கற்றும், கேட்டும் பயனில்லையடி என்று முத்து மாரியிடம் சலித்துக் கொள்கிறார்.

திரிபுரா உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமிடம், ‘எங்கிருந்து நமக்கு ஒரு முன்மாதிரி கிடைக்கும்? எப்படி முன்மாதிரியைப் பெறுவது?’ எனக் கேட்டனர்.  அதற்கு அவர், “15 வயது வரையிலும் உங்களுடைய அம்மா, அப்பா, ஆசிரியர் ஆகியோரே மிகச் சிறந்த முன்மாதிரிகளாக இருக்க முடியும்.” என்றார்.  முன் மாதிரிகளான ஆசிரியர்கள், மாணவர்களுடன் உறவினை பலப்படுத்த முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும்.

1.2. மாணவர்களுடன் உறவு மேம்படுவதில் ஆசிரியரின் பங்கு:-

கற்றுக் கொள்வதற்கும், அறிவு பெறுவதற்கும் குழந்தையின் சாளரமாகத் திகழ்பவர் ஆசிரியர்.  பெற்றோர்க்குப் பின்னணியாகப் பள்ளியும், பள்ளிக்குப் பின்னணியாக வீடும் பக்கபலமாக உள்ளன.  கல்வியையும், ஆசிரியர் – மாணவர் உறவையும் வியாபாரக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், தேசத்தின் வளர்ச்சிக்கான அடிப்படையில் பார்த்து, கவனம் செலுத்த வேண்டும்.  மாணவர்களின் தவறுகளைக் கடுமையாக விமர்சிக்காமல், மென்மையாகச் சுட்டிக் காட்ட வேண்டும்.

கற்றலின் சிறப்பினைப் புகட்டுதல்:-

இன்றைய கல்வி முறையினைக் கவிஞன் பாரதி, ‘அற்பர் கல்வி’ என்றும், ‘பேடிக்கல்வி’ என்றும், ‘அல்லல் மிக்க மண்படு கல்வி’ என்றும் தம் சுயசரிதையில் கடுமையாகச் சாடுகிறார்.  இன்றைய கல்வி உண்மையான அறிவைப் புகட்டவில்லை.  மனப்பாடத்திற்கும், நினைவாற்றலுக்குமே முதலிடம் தருகின்றது.  இன்றைய மாணவர்கள் ஆசிரியர்களை நம்வி இல்லை; ‘நோட்ஸ்’ என்றும் துணைநூல்களையே வழிகாட்டியாகக் கொள்கின்றனர்.  இந்நிலையை கவிஞர் அப்துல் ரகுமான் நகைச்சுவையுடன் எடுத்துறைக்கிறார்.

“வள்ளுவரும் மாணவராய் ஆனார்

திருக்குறளில் தேர்வெழுதப் போனார்

முடிவு வெளியாச்சு

பெயிலாகிப் போச்சு

பாவம், அவர் படிக்கவில்லை கோனார்”

உரைநூல்களால் இன்று சிந்திக்கும் திறமை மாணவர்களிடையே குறைந்து விட்டது.  இதன் காரணம் கல்வியின் சிறப்பினை உணராமையே ஆகும்.  பக்குவமாக கல்வியின் பக்கமாக மாணவர்களை இழுப்பதில் ஆசிரியரின் பங்கு குறைந்து விட்டதே இந்நிலையின் முழுக்காரணமாகும்.

கல்வியின் சிறப்பை மாணவர்களுக்கு உணர்த்த சுவாமி விவோகனந்தர் ஒரு கதையை உணர்த்தினார்.  “சுவாமிஜி ஒரு மாமுனிவரை சந்தித்துப் புனித நூல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.  முனிவர் ஒரு பஞ்சாங்கத்தை எடுத்து சோதிடம் பற்றி படிக்குமாறு கூறினார்.  ஆந்த ஆண்டு மழை பெய்வது குறித்து சுவாமிஜியும் படித்தார்.  ‘புத்தகத்தை முறுக்கிப் பிழி’ என முனிவர் கூறினார்.  அவ்வாறே சுவாமிஜியும் செய்தார்.  ‘புத்தகத்தை பிழிந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வரலில்லையே,’ அது வெறும் வறட்டுப் புத்தகம் தான்.  அது போலவே உன்னுடைய சமயமும்.  கடவுளை அடைய புத்தகத்தைப் படிப்பவன், சர்க்கரை மூட்டையை சுமந்துபோன கழுதை, அதன் இனிய சுவையை அறிந்து கொள்ளாமல் இருப்பது போன்றது தான்” என முனிவர் கூறினார்.  இது போன்று மாணவர்களும் இல்லாமல், கற்றதனாலாகும் பயனை புரிந்து கொண்டு கல்வியை கற்கவேண்டும்.

எழுத்தெனும் விதைகளை இதயங்களில் தூவுதல் வேண்டும்.  பேருந்து எந்த ஊருக்குச் செல்கிறது? என்று தெரியாத அளவிற்கு படிப்பறிவு இல்லை.  கி.பி.2000 ஆண்டு கணக்குப்படி, 50 கோடி பேர் படிப்பறிவற்றோராக உள்ளனர்.  ‘கண்ணுடையோர் என்போர் கற்றோர்’ என்றார் வள்ளுவர்.  ‘கல்லாதவன் வாழும் வீடு வெளிச்சமில்லா வீடு’ என்றார் பாரதிதாசன்.

வகுப்பறையில் ஒரு மாணவன் தவறு செய்தால், அனைத்து மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் கடிந்து கொள்ளுதல் கூடாது.  தண்டனை கொடுக்கவும் கூடாது.  முதல்வரிடம் அழைத்துச் செல்லவும் கூடாது.  அவனைத் தனிமையில் அழைத்து, தவறு செய்ததன் காரணத்தை அறிய வேண்டும்.  அவனது வீட்டுச் சூழலை உணர்ந்து, வாழ்க்கைக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்த வேண்டும்.  அம்மாணவனுக்கு மீண்டும் தவறு செய்யாமலிருக் மென்மையாக அறிவுரை கூறினால் ஆசிரியர் மீது அவனுக்கு மதிப்பு மிகுதியாகும்.  அந்த ஆசிரியர் வகுப்பில் ஒழுங்காக இருந்து பாடத்தையும் கவனிப்பான்.

இன்றைய காலத்து மாணவர்களைக் கடிந்து பேசினால் தவறுகளை மிகுதியாகவே செய்கின்றனர்.  உலக நடப்புகளையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் மிகுதியாக விரும்புகின்றனர்.  அவர்க்ள விருப்பத்திற்கேற்ப சிரிக்க வைப்பதுடன் பாடத்தை நடத்தி மனதில் பதிய வைத்தல் வேண்டும்.

பொறிபுலன்கள் (கண்,மூக்கு,காது,வாய்,தோல்) சுறுசுறுப்பாக உள்ள இளமைக்காலத்தில் கல்வியை மேற்கொள்வதை விடச் சிறந்த காலம் வேறில்லை.  சாந்துணையும் கற்க வேண்டும் என நம்முடைய பெரியோர்கள் கூறியுள்ளனர்.  என்றாலும் அதனைத் தொடங்குவதற்குரிய நேரம் இளமையே.  வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் படித்துத் தேர்வுகளில் வெற்றி பெறுவது தான் குறிக்கோள் என மாணவர்கள் நினைக்கக் கூடாது.  தேர்வில் வெற்றி பெறுவது போல முக்கியமானது இளமையில் நிரம்பக் கற்றுப் பிற்கால வாழ்க்கைக்குத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆலோசனைகளை நட்புணர்வுடன் ஆசிரியர் கூறினால் மாணவர்கள் கட்டாயமாக ஏற்றுக்கொள்வர்.

கல்வியின் சிறப்புணர்ந்த ஆசான், ‘மாணவர்க்கு எழுச்சி’ என்ற பாடலில், 

“நிற்கையில் நிமிர்ந்து நில்

நடப்பதில் மகிழ்ச்சி கொள்

கற்பதில் முதன்மை கொள்

காண்பதைத் தெரிந்து கொள்

எப்பொழுதும் மெய்யுரைக்க அஞ்சாதே!

சுற்றித் திரிந்திடும் துஷ்டர் சிநேகம்

தொல்லை என்பதில் என்ன சந்தேகம்”

என அறிவுறுத்துகிறார்.

கல்வி கற்காமல் பின்னால் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் நலிவுற்றவர்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.  பாடத்திட்டத்தை மட்டுமே வகுப்பில் பேசக்கூடாது.  பாண்டியன் நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பை,

“——–

 ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,

 ‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்

 அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;

 வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,

 கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

 மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே.”

என புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடுகின்றான்.  கையில் இருக்கின்ற பொருள்களைக் கொடுத்தும், முயன்ற உதவிகளைச் செய்தும் கல்வி கற்றல் வேண்டும்.  ஒரு குடும்பத்தில் பெரியவன் கல்லாது, சிறியவன் கல்வி கற்றால் அவர்களது தாய் மூத்தவனை விட சிறியவனையே விரும்புவாள்.  நாட்டை ஆள்பவனும் சிறியவனாயினும் கற்றவனையே மதிப்புடன் நோக்குவான் என அப்பாடல் கருதுகிறது.  எனவே கல்வியின் சிறப்பைச் சில சான்றுகளுடன் அறிவுறுத்தும் போது மாணவர்கள் ஏற்றுக்கொள்வர்.

1.3. கற்பித்தல் பயிற்சி தேவை:-

ஆசிரியர் வகுப்புகள் பெரும்பாலும் இன்று சொற்பொழிவு மண்டபமாகவே உள்ளது.  பொதுக் கூட்டத்தில் பேசுபவருக்கும், கேட்பவருக்குமிடையே எந்தவித பந்தமும் இருப்பதில்லை.  இது மேடை நிகழ்வுக்குப் பொருந்தும்.  வகுப்பறையில் சொற்பொழிவு முறை மாற்றப்பட்டுக் குழுக் கலந்துரையாடல் இடம் பெற வேணடும்.  விவாதத்தின் மூலம் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதால் பல நன்மைகள் விளையும்.  இதனால் ஆசிரியர் மாணவர்க்கிடையே உள்ள இடைவெளி குறைகிறது.  உறவு மனப்பாங்கு செழிக்கிறது.  பகை உணர்வு குறைந்து கூட்டுணர்வு வளரும்.  எனவே வகுப்பறையில் பயிற்று முறையை மாற்றிக் கொள்ள ஆசிரியர்கள் முயல வேண்டும்.

ஆசிரியருக்குக் கற்பித்தல் பயிற்சி இல்லையெனில் வகுப்பறையில் கேட்போருக்கும் சங்கடமே ஏற்படும்.  மாணவனின் முயற்சி எளிமைப்பட வேண்டுமெனில், இருவருக்குமிடையில் நல்ல உறவு இருத்தல் வேண்டும்.  எந்தப் பாடத்தைப் படிப்பதாக இருந்தாலும் ஆசிரியரிடம் மாணவர்களுக்கு வெறுப்போ, அச்சமோ ஏற்படக் கூடாது.

முதியவர் – சிறுவர் என்னும் உறவுநிலை மாறுபட்டு ஆசிரியருடன் சமமாகப் பழகும் தோழமை உறவு நிலைக்கும். வகுப்பறையில் வசதிபடைத்த குழந்தைகள் சிலர் இருப்பர்.  அவர்கள் தேர்ந்தெடுத்த சிலருடன் மட்டுமே பழகுவர்.  இச்சிக்கல்களை ஆசிரியர் நன்கு புரிந்து கொண்டு, ஒருவர் மேல் மற்றவர்க்குப் பற்று உருவாகும்படிச் செயல்பட வேண்டும்.  மாணவர்கள் ஒதுங்கிப் போகும் தன்மையை உதறிவிட்டு முழுப்பங்கேற்க முன்வர வேண்டும்.  குருட்டுத் தனமான கீழ்ப்படிதலும், கடுமையான கட்டுப்பாடும் நல்ல விளைவைத் தராது.  வகுப்பறை நடவடிக்கைகளைத் திட்டமிட மாணவர்களை ஆசிரியர்கள் அழைப்பதே முறையாகும்.

ஒரு இலக்கியம் என்பதைப் படித்தால் மனமகிழ்ச்சிக்குரிய பொழுதுபோக்கு என மாணவர்கள் உணருமாறு ஆசிரியர் செய்துவிடுவாராயின் பள்ளியை விட்டு நின்ற பின்பும் மாணவர்கள் இலக்கியம் பயில்வர்.  இலக்கியம் என்றால் ஏதோ பெரிய மலை என்ற மருட்சியை ஆசிரியர் நுட்பமாக அகற்ற வேண்டும்.  எல்லாவற்றையும் படித்து முடிப்பது நோக்கம் அல்ல.  தொடர்ந்து படிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆசிரியர் கடந்த காலத்துக்கும், தற்காலத்துக்கும் பாலமாக இருக்க வேண்டும்.  “கடந்த காலம் சிறந்தது.  கிடைத்தற்கரியது.  அதனை இழந்து விட்டோம்” என்ற எண்ணத்தை உருவாக்காமல் கடந்த காலத் தொடர்ச்சியே தற்காலம் எனக் கூற வேண்டும்.  கடந்த காலப் படைப்புகள் தற்காலச் சூழலுக்கு ஒத்து வராது என்ற நிலையை ஏற்படுத்தக் கூடாது.  அக்காலத்திலேயே வெளியிட்ட ஆழ்ந்த கருத்துக்கள் இன்று எப்படிப் பொருந்துகிறது என்பதை மாணவர்களைக் கொண்டு கண்டுபிடிக்கச் செய்வது ஆசிரியர்களின் கடமை.

கன்ஃபூசியஸ் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருக்கலாம்.  எல்லாப் பொருள்களைப் பற்றியும் இவர் மாணவர்களுடன் விவாதிப்பார்.  “கல்வி என்பது ஒரு குருவின் போதனையாக இருக்க முடியாது.  அது சிந்திக்கத் தூண்டும் ஒரு சாதனமாக மட்டுமே இருக்க முடியும்” என்பது அவரது கருத்து.  மாணவர்களை இடைவிடாது கேள்வி கேட்பது அவரது பயிற்சி முறையாக இருக்கும்.  விவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.  அதனால் மாணவர்கள் போற்றி மதித்தனர்.  அதிகாரத்தில் இருந்தவர்கள் அவரைப் புறக்கணித்தாலும் மாணர்களும், சீடர்களும் சேர்ந்து கன்ஃபூசியஸ் பெயரால் ஒரு மதத்தையே நிறுவினர்.  இவருடைய கொள்கை ‘லி’ என்பதாகும்.  சீனமொழிச் சொல், தமிழில் உள்ள ‘சான்றாண்மை’ என்ற சொல்லைப் போன்றது.  நேர்மை, நற்பண்பு, மரியாதை, மனக்கட்டுப்பாடு, நல்ல பழக்கவழக்கங்கள், என்ற பல பொருள்களை உள்ளடக்கிய ஒரே சொல் சான்றாண்மை.

1.3.1. மாணவர்களே குருமார்கள்:-

அறிஞர்களுள் சிறந்தவரும், பல்கலைச் செல்வருமான தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பள்ளி, மாநிலக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்களின் வாயிலாக மாணவ சமுதாயத்துடன் நெருங்கிய உறவும், தொடர்பும் கொண்டிருந்தார்.  எவ்வளவு நேரம் வகுப்பு எடுத்தாலும் அவருக்கு அயர்வு தோன்றாது.  சுருங்கக் கூறினால் மாணவர்களையே தனது குருவாகக் கண்டார்.  சிலப்பதிகார ஆய்வு நூலான ‘கானல் வரி’ நூலின் முன்னுரையில் அவர் பின்வருமாறு கூறியுள்ளார்.  “இலக்கியத்தை நானே ஓதும் போது பெருவிளக்கம் ஒன்றும் நான் பெறுவதில்லை.  மாணவரிடையே ஓதும்போது சில இடத்திலே புது விளக்கம் மின்னிப் பொலியும்.  இலக்கியக் கூட்டுணவின் சிறந்த பயன் இது.  தனியே ‘அரகர’ என்று சொல்லும்போது பெறும் உணர்ச்சியை விடத் திருவண்ணாமலைக் கார்த்திகை விளக்கீடடின் போது கூட்டமாக ‘அரகர’ என்று கூறினால் ஒரு வித உணர்வு ஏற்படுகிறது.  இலக்கிய அனுபவம் எனக்கு வகுப்பிலும், கூட்டங்களிலுமே உண்டாயிற்று.  ‘குடிமக்கள் காப்பியம்’ என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையிலும் தம் மாணவர்களைப் பாராட்டியுள்ளார்.

அறிஞர்களாயினும், மாபெரும் ஆசிரியராயினும் ஏற்றத்தாழ்வு கருதாமல் மதிப்புடன் மாணவர்கள் கருத்தை ஏற்றுக்கொண்டு திகழ்வது, மாணவர்களிடையே ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துவதுடன், ஆசிரியர் மீதும் ஈடுபாட்டினை உருவாக்கும்.

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ஹாரோ பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்தார்.  நல்ல திறமையான சர்ச்சிலுக்கு பள்ளியில் படிக்கும் போது எந்தக் குறிக்கோளும் கிடையாது. அவரைக் கண்டாலே மாணவர்கள் பயப்படுவராம்.  வகுப்பில் கடைசி பெஞ்சில் தான் அமர்வாராம்.  தினமும் பள்ளிக்குத் தாமதமாக வருவாராம்.  அவரது தலைமையாசிரியர், ‘அவனிடம் நல்ல திறமைகள் உண்டு.  ஆனால் அலட்சியத்தால் அந்த திறமைகள் வீணாகிவிடும்.  என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை’ என்றார்.  ஆனால் எதிர்காலத்தில் அவரே பிரதமரானார் என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது.

மாணவர்களை என்றும் இகழ்ச்சியாக எண்ணுதல் கூடாது.

1.4. மாணவர்களின் வெற்றியில் ஆசிரியர்:-

மாணவர்கள் கல்வித்துறையில் வெற்றி பெற சுமூகமான உறவினை மேற்கொள்ள வேண்டும்.  வெற்றிக்கு வழிகளான சில யோசனைகளைக் கூறுவது ஆசிரியரின் பொறுப்பு.  அவைகளாவன;

1. தன்னம்பிக்கையூட்டல்

2. நற்பண்புகளைக் கற்பித்தல்

3. நல்லவற்றைக் காட்டுதல்

4. பணிவுடைமையைக் கூறுதல்

5. ஆற்றலை ஒருமுகப்படுத்தல்

6. வறுமையை மிதித்தெறியச் செய்தல்

1.4.1. தன்னம்பிக்கையூட்டல்:-

இன்றைய இந்தியாவின் முதல் தேவையாக இருப்பது தன்னம்பிக்கையே.  உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ஏ.எல்.பாஷம், “பாரத நாட்டு மக்களின் தன்னம்பிக்கையை உயர்த்தியது, விவேகானந்தர் மேலை நாடுகளில் பெற்ற வெற்றி தான்.’ என்கிறார்.  “உன்னால் எதையும் சாதிக்க முடியும்.  அளவற்ற சக்தி உனக்குள் இருக்கிறது.  அதை வெளிக்காட்ட, போதுமான அளவு உழைக்காவிட்டால் தான் தோல்வி வரும்.  ஒரு மனிதனோ, ஒரு தேசமோ தன்னம்பிக்கையை இழந்து விட்டால் அதற்கு மரணம் தான் ஏற்படும்.” எனக் குரல் கொடுத்தார்.  மாடுகள் வண்டி இழுக்கும் போது, ஒரு கட்டு வைக்கோலை ஒரு குச்சியில் குத்தி மாடுகளுக்கு முன் தொங்க விடுவர்.  மாடுகள் அந்த வைக்கோலைத் தின்ன, தொடர்ந்து முயலும்.  அதற்காக அவை முன்னால் அடியெடுத்து வைக்கும் போது வண்டி இழுக்கப்பட்டு நகரும்.  ஆனால் வைக்கோல் எட்டாது.  நமக்கு வெளியிலிருந்து வரும் உதவியின் தன்மை இப்படித் தான்.  பிறரிடம் உதவி கேட்காதீர்கள்.  தன் கையே தனக்குதவி என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.  விவேகானந்தரின் தன்னம்பிக்கைப் பற்றிய கொள்கைகளாக இவைகள் இருந்தன.

பாடச் சுமைகளைப் பற்றியே அச்சுறுத்தாமல், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வேண்டிய கடமைகளையும் சில நிமிடங்கள் விவாதித்தலுடன், எளிமையுடன் வாழ்ந்த மூத்தத் தலைவர்களான காந்தி, நேரு, அப்துல்கலாம் போன்ற பெரியோர்களின் மாணவப் பருவங்களைப் பற்றி வகுப்பில் கூற வேண்டும்.  இயந்திரமயமான வாழ்க்கை முறையைப் போன்று வகுப்பறை இல்லாமல், இயல்பானதாக இருக்க வேண்டும்.  வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவது போல அறிவுறுத்த வேண்டும்.

1.4.2. நற்பண்புகளைக் கற்பித்தல்:-

ஒருவன் ஒவ்வொரு வகுப்பாகப் படித்து உயர உயர அவனுடைய பண்பும் உயருதல் வேண்டும்.  இவ்வுயர்வு பழங்காலக் கல்வியில் இந்தியரிடையே படிந்து இருந்தது.  அது குருகுலக்கல்வியாகவும், திண்ணைப் பள்ளிக் கல்வியாகவும் இருந்தமையால் ஆசிரியர்க்கும், பயிலும் மாணாக்கர்க்கும் குருசீட உறவும் உரிமையும் இருந்தன.  இவை தற்கால நாகரிக் கல்வி முறையில் முழுவதும் விடை பெற்றுவிட்டன. கலாச்சார வளர்ச்சி என்ற போர்வைக்குள் சிக்கி அயல் நாட்டுக் கல்வி முறையை நாமும் பின்பற்றுகிறோம்.  கல்வியின் அடிப்படை நோக்கம் மாணவனைப் பக்குவப்படுத்துவதாகவும், பண்பை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.  இதனை ஆசிரியர் நீதி இலக்கியங்கள் வழி போதனை செய்வதுடன் நிறுத்தி விடக் கூடாது.  ஆசிரியர் கூறுவதற்கேற்ப சிறந்த மனிதனாக இருக்க வேண்டும்.  நபிகள் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு நிகழ்வினை இங்குக் கூறலாம்.

“ஓர் அம்மையார் மகனை அழைத்துக் கொண்டு நபிகளை நேரில் சந்தித்தார்.  மகன், அளவிற்கு அதிகமாக இனிப்புப் பண்டங்களைத் தின்கிறான் என்றும், அறிவுரை கூறுமாறும் வேண்டினாள்.”  நபிகள் மூன்று நாட்கள் கழித்து அழைத்து வருமாறு வேண்டினார்.  மூன்று நாட்கள் சென்ற பின் காரணத்ததைக் கூறினார்.  முன்பே சொல்லாததன் காரணத்தை அந்த அம்மையார் கேட்டார்.  அப்போது நபி, “மூன்று நாட்களுக்கு முன்பு வரை நானும் அளவிற்கு அதிகமாக இனிப்புப் பண்டங்களை விரும்பித் தின்றேன்.  அறிவுரை சொல்ல வேண்டியவன் அதனை முதலில் பின்பற்ற வேண்டும்.  மூன்று நாட்களாக இனிப்பு சாப்பிடவில்லை” என்றார்.

எனவே நம் நாட்டில் வாழ்க்கைக்கும், வார்த்தைக்கு இடையே உள்ள இடைவெளி முற்றுமாக நீக்கப்படுதல் வேண்டும்.  இளைஞர்களை உருவாக்கும் பேராசிரியரிடம் இச்செயல் கட்டாயமாக இருக்க வேண்டும்.  வருங்காலம் அவர்களுக்கப் பொற்காலமாக அமையும்.

1966 ஆம் ஆண்டில் சென்னை ஐ.ஐ.வு. பட்டமளிப்பு விழாவில் சர்.சி.வி. இராமன் பேசும் போது, “இளைஞர்களே, உங்கள் கல்வி முழுமையானது அன்று.  வாழ்க்கை என்பது உணவு, உடை உறையுள் ஆகியவற்றைப் பெறுவதால் மட்டும் முழுமை அடைவதில்லை.  உணவை மட்டும் கொண்டு வாழ முடியாது.  கல்வி என்பது மூளையின் ஒரு பகுதியை மட்டும் செழிக்கச் செய்வதன்று.  அறிதிறன், கலைத்திறன் இரண்டையும் செழிக்கச் செய்யும்.  இளைஞனை நல்லவனாகவும், வல்லவனாகவும் ஆக்க வேண்டும்.” என்றார்.

கல்வி என்பது வேலைவாய்ப்பிற்காகவும், பெருமைக்காகவும், வாழ்க்கைக்காகவுமே இன்றைய நடைமுறையில் உள்ளது.  இன்றைய மாணவர்களிடையே, ‘பெயருக்குப் பின்னால் போட ஒரு டிகிரி’ என்ற நிலையிலேயே கல்வி உள்ளது.  பொழுதுபோக்கு ஸ்தலமாகவும் கல்விக்கூடம் மாறிவிட்டது.  இன்றைய மாணவர்களின் நிலையை கவிஞர் வைரமுத்துத் தெளிவாகச் சித்தரிக்கிறார்.

“ அடி தடி பார்த்தோம்; மாய 

அதிசயம் பார்த்தோம்; காதல் 

சடுகுடு பார்த்தோம்; பொய்யின்

சரித்திரம் பார்த்தோம்; ரத்தம்

துடிக்கின்ற காமம் பார்த்தோம்

தொலையட்டும் திரையில்; இன்னும்

நடிகரைப் பார்க்க வேண்டாம்

நம்மையேப் பார்க்க வேண்டும்.”

உண்மையிலேயே சினிமா மோகம் மாணவர்களிடையே மிகுதியாக உள்ளது.  முதலாமாண்டு கல்லூரி மாணவர்கள் புதிதாக வகுப்பறைக்கு வந்தனர். அவர்களின் அறிமுகத்திற்குப் பின்னர், கல்லூரி வாழ்க்கை எப்படி உள்ளது?  என்று கேட்டேன்.  உடனே மாணவர்களிடையே ஒரு சலிப்பான முணுமுணுப்பு.  ஒரு மாணவனைக் குறிப்பாக கேட்கையில், ‘நாங்கள் நினைத்து வந்தது ஒன்று.  நடந்தது ஒன்று.  கல்லூரி என்றால் சினிமாவில் காட்டப்படுவது போல் ஜாலியாக இருக்கலாமென்று வந்தோம்.  எங்கள் பள்ளிக்கூடம் இதை விட பரவாயில்லை.  செம ஆட்டம் ஆடினோம்’ என்றான்.  அந்த மாணவனின் பள்ளிப்பருவமே சரியான பாதையில் கொண்டு செல்லப்படவில்லை.  அவனது கற்பனையில் நடிகையே வந்து செல்கிறாள்.  கையில் வைத்திருக்கும் நோட்டுப் புத்தக அட்டையை ரசித்து நேரத்தைப் போக்குகின்றனர்.  வகுப்பறையில் பாடம் எடுக்க வேண்டுமென்றால், சினிமாக் கதைகளைப் பேசினால் வகுப்பை உற்றுநோக்குகிறான்.  இதற்கெல்லாம் காரணமென்ன?  சமுதாயத்தைத் திருத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களான திரைப்படம், தொலைக்காட்சி, கணிப்பொறி போன்றவை பாலியல் ரீதியான செயல்களை வெளிப்படையாகக் கூறுவதே.  கல்லூரி என்றால் வகுப்பறை மாணவி ஒருத்தியை மாணவன் காதலிப்பான்.  இதே மையக் கருத்துக்கள் மீண்டும் மீண்டும் திரைக்காட்சிகளில் வந்து செல்வது அவர்களின் அடிமனதில் படிந்து விட்டது.  மாணவிகளும் இதற்கு விதி விலக்கல்ல.  வெளிப்படையாக எதையும் அவர்கள் காட்டிக்கொள்வதில்லை.

முந்தைய சமுதாயத்தைச் சுட்டிக் காட்டினால், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பு தானே’ என்கிறான் மாணவன்.  உடனே அவனை வகுப்பை விட்டு வெளியே செல் என்று கூறுதல் தவறு.  அவனது பின்னணிச் சூழலை உணர வேண்டும்.  அவ்வாறு கூறிய மாணவன், வீட்டின் ஒரே பிள்ளை.  தந்தை அரிசி வியாபாரம்.  கல்லூரி விட்டதும் கடையின் பொறுப்பு இவனிடம்.  எப்படிப் படிப்பான்?  கல்வி என்பது பிழைப்புக்காக என பயிலுவிக்கப்படுகிறது.  அவனுக்கு வயிற்றுக்கு உணவிட வியாபாரம் இருக்கிறது.  மூன்று வருடத்தை இன்பமாகக் கழிக்க அவன் வருகிறான்.  அவனைச் சுற்றி ஐந்து பேரும் எப்பொழுதும் திரிவர்.  அவர்கள் படித்தால் தான் முடியும் என்ற நிலையில் வந்திருப்பர்.  வகுப்பறையில் அவனுடன் சேராதீர்.  அவன் பணக்காரன்.  நீங்கள் படித்தால் தான் முடியும் என்று சுட்டிக்காட்டினால் ஆசிரியர் மீதான மதிப்பு குறைந்து விடும்.  அவனுடன் சேராதே என்றால் வேண்டுமென்றே சேருவான்.  அவனது தனித்திறமையால் வியாபாரத்தில் சிறந்தவனாகத் திகழ்கிறான் எனக் கூறவேண்டும்.

ஒருவனுக்கு நல்ல பண்பினை வளர்ப்பது கல்விக் கூடமே.  அதற்கு முழுப்பொறுப்பாவது ஆசிரியரே.  மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடும் போது, அவர்களைக் கண்டிப்பவர்கள் ஆசிரியர்கள்.  மாணவர்களைக் கண்டித்த ஆசிரியர்களே ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.  அவன் எப்படி பண்புடையவனாவான்?  எனவே குரு, மாணவனுக்கு முன் மாதிரியானவராக இருக்க வேண்டும்.  வகுப்பில் ‘பேசாதே’ என்றால் பேசுவான்.  அவனாக பேசாமல் இருக்க வேண்டும்.  அது ஆசிரியரின் போக்கிலேயே உள்ளது.

1.4.3. நல்லவற்றைக் காட்டுதல்:-

எதிரிகளை எரிக்கும் கவிதை வரிகளைப் பாடிய பாரதி,

‘காலா உன்னை நான் சிறுபுல்லென மதிக்கிறேன்  

– என்றன்

காலருகே வாடா! சற்றே உன்னை மிதிக்கிறேன்’

என எமனையும் எள்ளி நகையாடினார்.  ஆனால் இன்றைய இளைஞர்களின் கோபம் தேவையற்ற காரியங்களில் ஏற்படுகிறது.  கல்லூரி விடுதியில் சாம்பார் தண்ணீராக உள்ளதென ஆத்திரமடைகின்றனர்.  மாணவர்களின் கோபம் அர்த்தமுள்ளதாக இருக்கட்டும்.  கால் ஊனமுற்றவனைத் தாக்கித் திருடுபவனை கோபத்தோடு தாக்குவதில் தவறில்லை.  ‘எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும் வரை நில்லாதே’ என்ற விவேகானந்தரின் வீரமிக்க வரிகளை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.

நல்ல சிந்தனை இருந்தாலே ஒருவன் நல்லவனாகிறான்.  மாணவர்களிடம் நல்ல சிந்தனைகள் ஏற்படவேண்டுமெனில், மனதை ஒருமுகப்படுத்தச் செய்தல் வேண்டும்.  ‘அமைதியாக தியானம் செய்தால் உலகமே உன் கையில்’ என்பதை வலியுறுத்துவதுடன், உடல் நலம் பெறலாம.;.  ஆயுள் கூடும்.  அழகும் ஏற்படும்.  என்று கூறினால் உறுதியாக அதனை ஏற்கும் மனப்பக்குவம் மாணவன் பெறுவான்.

நல்ல குணங்களுக்கு வலிமை உண்டு.  நல்லவராக வாழ்பவர்க்கு உதவி செய்ய வேண்டும்.  பொறாமைப்படக் கூடாது என்பவற்றை எடுத்துக் கூற வேண்டும்.

‘இரு கல்லூரி மாணவர்கள், இரவு முழுவதும் மது அருந்தி சிற்றின்பத்தில் திளைத்தனர்.’  மறுநாள் அவர்களுக்குப் பரீட்சை.  தேர்வறைக்குள் நுழைந்ததும், ஒருவன், ‘சார் நேற்று வீட்டிற்குச் செல்லும் போது நாங்கள் சென்ற காரின் டயர் வெடிச்சு, நடுக்காட்டில் மாட்டிக்கிட்டதால் படிக்க முடியல’ என்றான்.  நீங்கள் மட்டும் நாளை எழுதலாம் நல்லா படியுங்கள் என்றார் ஆசிரியர்.  மறுநாள் இருவரும் பரீட்சைக்குச் சென்றனர்.  வினாத்தாளில் இருந்த முதல் கேள்வி: உணவை சீரணிக்க வைப்பதில் உடல் இயக்கத்தின் பங்கினை விவரி? (5 ஆயசமள).  இரண்டாவது கேள்வி: நேற்று முன்தினம் காரின் எந்த டயர் வெடித்தது? (இருவரின் விடையும் பொருந்த வேண்டும் – 95 ஆயசமள).  மாணவர்கள் உறைந்து போய் இருந்தனர். 

மாணவர்களின் வாழ்க்கை நிலை இன்று இப்படித் தான் உள்ளது.  ஆக்கப்பூர்வமான பயனுள்ள திடமான சிந்தனைகள் குழந்தைப் பருவத்திலிருந்தே மனதுக்குள் நுழைய வேண்டும்.

மாணவர்களை வழி நடத்திச் செல்லும் ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருத்தல் வேண்டும். பெற்றோர், ஆசிரியர் , மாணவன் கூட்டம் என அனைவரும் கூடிப் பேசுதல் பலன் தராது.  ஒவ்வொரு மாணவனின் பெற்றோரையும் தனியாக அழைத்து மாணவனையும் உடன் வைத்துப் பேச வேண்டும்.  மாணவனைப் பற்றி முழுமையாக அறியும் வாய்ப்பும், ஆசிரியரைப் பற்றி மாணவன் புரியும் சூழலும் ஏற்படும்.  மாணவனின் குறைகளை எளிதாகத் திருத்தலாம்.

ஒரு பெரிய நதியில் ஒரு படகு சென்று கொண்டிருந்தது.  அதில் விஞ்ஞானி, பண்டிதர், வரலாற்றுப் பேராசிரியர் ஆகியோர் பயணம் செய்தனர்.  விஞ்ஞானி, படகோட்டியிடம் வானிலை சாஸ்திரம் உனக்குத் தெரியுமா?  என்றார். படகோட்டி ‘தெரியாது’ என்றதும், ‘உன் வாழ்க்கையில் 25 சதவீதம் வீணாகிப் போச்சு’ என்றார்.

பண்டிதர் படகோட்டியிடம், ‘உனக்கு இலக்கணம் தெரியுமா? என்றார்.  ‘தெரியாது’ என்றதும் ‘உன் வாழ்க்கையில் 50 சதவீதம் வீண்’ என்றார்.  வரலாற்றாசிரியர் ‘உனக்குப் பழங்கால நாகரீகம் பற்றித் தெரியுமா? என்றார்.  இல்லை என்றான் படகோட்டி.  அந்த நேரம் படகிலே ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்தது.  “படகோட்டி நீந்தத் தெரியுமா? படகு மூழ்கப் போகுது’ என்றான்.  மூவரும் தெரியாது என்றனர்.  ;உங்கள் வாழ்க்கை 100 சதவீதம் வீண்’ என்ற படகோட்டி” நீந்தித் தப்பித்தான்.

பள்ளிப் பாடங்களுடன் அனுபவத்தையும் மாணவர்களிடையே வளர்க்க வேண்டும்.  காமராஜர், விவேகானந்தர், பாரதி போன்றோர்களின் வாழ்க்கைச் சிறப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

1.4.4. பணிவுடைமையைக் கூறுதல்:-

பணிவு என்பது ஆசிரியர்களிடையே தவறாக கருதப்படுகின்றது.  மாணவன் தன்னைக் கண்டவுடன் எழுந்து நிற்பதையும், ‘செய்யாதே’ என்றவுடன் அவன் கேட்பதையும் ‘பணிவு’ என்கிறோம்.  மாணவர்கள் அவ்வெதிர்ப்பார்ப்பை வெறுக்கின்றனர்.  மாணவன் நம்மைப் பார்த்தவுடன் மதிப்பு என்பது அவன் மனத்திலிருந்து தானாக வருவதே பணிவு.  பணிவை நாமாக எதிர்பார்க்கக் கூடாது.  பணிவினை அவன் மனத்தில் ஏற்படுத்த வகுப்பு நடத்தும் முறையைத் திட்டமிட வேண்டும்.

ஒரு பாடத்திற்கு ஒரு மணிநேரம் வகுப்பு எனில்,

  • ½ மணி நேரம் — பாடத்தை நடத்துதல்
  • 10 நிமிடம் — முந்தைய நாள் நடத்தியதை விவாதித்தல்.
  • 10 நிமிடம் — குழுக்களாகப் பிரிந்து விவாதம்  செய்யல்.
  • 10 நிமிடம் — பொதுஅறிவு பற்றிப் பேசல்.

என்று வரையறை செய்து கொள்ள வேண்டும்.  மாணவர்களிடம் இடையிடையே வினா எழுப்புதல் வேண்டும்.  மாணவர்கள் கேட்கும் வினாக்களுக்கும் விடை கூற வேண்டும்.  மாணவர்களிடமிருந்து புதிய தகவல்களும் ஆசிரியர்க்கு கிடைக்கும்.  ஏற்கனவே நடத்தியதை சுருக்கமாக மீண்டும் கூறுவதால் நினைவில் தங்கும்.

குழு விவாதம் என்பது மிக முக்கியமானது.  மாணவர்களிடையே சுமூகமான உறவினை ஏற்படுத்தும்.  ஏற்றத்தாழ்வுகள் குறையும்.  புதிய கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

பொது அறிவு பற்றிப் பேசும் போது எல்லாத் துறையைப் பற்றியும் பேச வேண்டும்.  சினிமா, டி.வி., நாட்டியம், உலகச் செய்திகள் என்பவை பற்றி ஆசிரியர் பேசுவதுடன், மாணவர்கள் கருத்தையும் கேட்க வேண்டும்.  வகுப்பறை சுமூகமாக அமைய வேண்டும்.  இவ்வாறன்றி, ஒரு மணி நேரமும், நேராக நிமிர்ந்து இருந்து ‘பாடத்தைக் கேள்’ என கூறுவது வெறுப்பையே ஏற்படுத்தும்.

அடுத்ததாக, கட்டாயமாக ‘இதைப் படி’ என வலியுறுத்தக் கூடாது.  ஒவ்வொருவருக்கும் எந்தத் துறையில் விருப்பம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஒருவன் விளையாடுவதில் ஆர்வமுடையவன் என்றால் அந்தத் துறையில் அவனை/அவளை வளர்க்க வேண்டும்.  அவ்வாறு செய்யாமல், ‘விருப்பமில்லாததைப் படி’ என்றால் வெறுப்பே ஏற்படும்.  நாட்டியத்தில் ஈடுபாடு என்றால் அந்தக் கலை குறித்து விளக்க வேண்டும்.  அவன் உயர்ந்த பின் ஆசிரியரை நினைத்துப்பார்ப்பான்.  அதுவே பணிவுடைமை.  தாய், தந்தையர் பற்றியும் மாணவருக்கு அறிவுறுத்த வேண்டும்.  ஆசிரியர் வகுப்பறையில் நடக்கும் முறைகளைக் கொண்டே பணிவுடைமையை மாணவரிடம் எதிர்பார்க்க வேண்டும்.

ஆற்றலை ஒருமுகப்படுத்துதல்:-

சிந்திக்க நேரத்தை எடுத்துக்கொண்டால் சக்தியின் ஊற்றாக அமையும்.  படிக்க நேரத்தை ஒதுக்கினால் அது அறிவின் வாயிலாக அமையும்.   நல்லவை புரிய நேரத்தை ஒதுக்கினால் இன்பத்தின் பாதை எளிதில் கிடைக்கும்.  இராமகிருஷ்ண பரமஹம்சர், “பாதையில் நடப்பட்டிருக்கும் கைகாட்டி மரம், நாம் போக விரும்பும் இடத்திற்கான வழியை மட்டுமே காட்டும்.  அந்த இடத்திற்கு நம்மைக் கொண்டு போய்ச் சேர்க்காது.  அதே போல் ஒருவன் படித்தறியும் ஏடுகளும், புத்தகங்களும் அவனுடைய முன்னேற்றத்திற்கு ஓரளவிற்கு செய்யும்.  மிகுதியுள்ளதை அனுபவ வாயிலாகவே அறிந்து கொள்ள வேண்டும்” என்கிறார்.  ஆற்றலை வீணாக்காமல் செயல்படுத்த ஊக்குவிப்பவர் ஆசிரியர்.

வறுமையை மிதித்தெறியச் செய்யல்:-

வறுமையை தடையாக மாணவர்கள் கருதக்கூடாது.  கல்லூரி மாணவியிடம் ஆசிரியர் கேட்ட கேள்வி:-

எதற்காக இங்கே வந்திருக்கிறாய்?

படித்துப் பட்டம் வாங்குவதற்கு சார்.

அதற்குப் பிறகு,

ஆபிஸில் வேலைக்குப் போவேன்.

எப்படி இவ்வளவு தெளிவாகச் சொல்கிறாய்?

தீப்பெட்டி ஆபீசுக்கு சார்.

நினைப்பதாவது பெரிதாக நினைக்க வேண்டாமா?  கேட்பதாவது பெரிதாக கேட்கக் கூடாதா?  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,

“வறுமை நிலைக்குப் பயந்து விடாதே!

திறமை இருக்கு மறந்து விடாதே!”

என்று பாடினார்.  ‘வியப்புக் குறியைப் போல் நிமிர்ந்து நிற்க வேண்டியவர்கள், வினாக்குறியைப் போல் வளைந்து கொண்டிருக்கிறீர்கள்.  புகழின் மயக்கத்தில் மாலைகளைச் சுமக்க வேண்டியவர்கள், மதுவின் மயக்கத்தில் மற்றவர்களின் கைகள் சுமக்கும்படி மயங்கிக் கிடக்கிறீர்கள்’ என்று ஒரு ஆசிரியர் மனம் குமுறுகிறார்.  அறிவைக் கொண்டு வறுமையை எளிதில் வீழ்த்தி விடலாம்  வெற்றி உறுதியாகும்.

மாணவர்கள் மனதில் நட்புணர்வுடன் மேற்குறிப்பிட்டவற்றை நிலை நிறுத்தச் செய்தால் உறவு மேம்படும்.

உறவினை மேம்படுத்துவதில் மாணவரின் பங்கு:-

பெற்றோருக்கு அடுத்த இடத்தில் மாணவர்களின் மீது ஆசிரியருக்கே உரிமை உள்ளது.  அத்தகைய ஆசிரியர்களிடம் மாணவர்கள் மிகுந்த மரியாதையும், பாசமும் உடையவர்களாக இருக்க வேண்டும்.  ஆசிரியர்களை இழிவாகப் பேசக் கூடாது.  ‘ஆசானை ஈசனெனப் போற்று’ என்றார் விவேகானந்தர்.

விவேகானந்தரின் குருவாக இருந்தவர் இராமகிருஷ்ணர்.  “குருவின் பணியைச் செய்வதைத் தவிர தன் வாழ்க்கையில் வேறு இலட்சியம் எதுவும் தனக்குக் கிடையாது.  என்று எண்ணி விவேகானந்தர் பணிபுரிந்தார்.  அவருடைய போதனைகளை உலகெங்கும் பரப்பினார்.  விவேகானந்தரின் வாழ்க்கையில் மையக் கருத்தாகிய ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பது இராமகிருஷ்ணரால் கற்றுக் கொடுக்கப்பட்டதே ஆகும்.  குருநாதரைப் பற்றி விவேகானந்தர், “ராமகிருஷ்ணர் என்னுடைய ஆசிரியர்.  என்னுடைய ஆண்டான்.  என்னுடைய லட்சியம்.  என்னுடைய கடவுள்.  உலகில் எங்காவது நான் பேசியதில் ஒரு சத்தியச் சொல் இருக்குமானால், அதற்குக் காரணம் என் குருநாதரே.  அவற்றில் இருக்கும் தவறுகள் மட்டுமே என்னுடையவை” என்றார்.

ஆசிரியர்களின் உறவினை வளர்க்க மாணவர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் விவேகானந்தரே.  ஆசிரியர்களுக்கு முதலில் மதிப்பு கொடுக்கப் பழகினால் மாணவர்களின் திறமை வளரும்.  இவர்கள் சொல்லிக் கேட்பதா?  என நினைத்தல் கூடாது.  திறமையை வெளிக் கொண்டு வர வேண்டுமெனில், கடினமாக உழைக்க வேண்டும்.  அதற்கு ஆசிரியர்கள் கூறுவனவற்றைக் காற்றில் பறக்க விடக் கூடாது.  உலகப் புகழ் பெற்ற கவிஞர் பைரன், கால் ஊனமுற்றவர்.  ஆனால் அவருடைய பாடல்களுக்கு ஊனம் முட்டுக்கட்டையாக அமையவில்லை.  வலிமை தான் வாழ்வு என உணர வேண்டும்.  யானைக்குக் குறி வைத்து முயலைப் பிடிக்கக் கூடாது.  முயற்சியில் உறுதியாக இருக்க வேண்டும்.  மாணவர்கள் தங்களுக்குரிய காரியங்களில் சரியாக இருந்தாலே ஆசிரியர்களுக்கும் – மாணவர்களுக்கும் இடையே பண்பட்ட உறவு இருக்கும்.

கல்லூரி மாணவர்கள், கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தினைச் சுருட்டி வைத்துக் கொண்டு, பேருந்தின் வாசலில் தொற்றிக் கொண்டு நின்றாலே கல்லூரிக்குச் செல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.  இன்று பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், கல்லூரி மாணவர்களாக மாறி விட்டனர்.  ஒரே நோடடில் எல்லா பாடங்களையும் கிறுக்கிவிட்டுச் செல்கின்றனர்.  ஆசிரியர் நடத்தும் பாடத்திற்குரிய புத்தகத்தையே எடுத்துச் செல்லாமையால் மாணவன் வகுப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறான்.  அதிலிருந்து இருவருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்படுகிறது.  அவன் இறுதிவரை ‘ஒழுக்கமற்றவன்’ என்ற முத்திரையிடப்படுகிறான்.

இது போன்ற வரைமுறைகளை உருவாக்கிக் கொண்டால் மாணவர்களின் வாழ்க்கைப் பிரகாசமாக அமையும்.

ஒரு பள்ளிக்கூட ஆய்விற்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார்.  மாணவர்களிடம் செய்யுள் வினாக்களைக் கேட்டார்.  மாணவர்களும் தவறின்றி பதில் கூறினர்.  இவர்களிடம் குற்றம் காண முடியவில்லையே என்று எண்ணி ஆசிரியரை பாடம் நடத்தச் சொன்னார்.  ஆசிரியர் உடனே கதை கூறத் தொடங்கினார்.  இன்ஸபெக்டர் ஆசிரியரை நோக்கி, ‘பாடத்தைப் பற்றிப் பேசாது, கதை கூறுகிறீர்’ எனக் கடிந்து பேசினார்.  உடனே மாணவர்கள், ‘ஆறுவது சினம்’ என்றனர்.  இன்ஸ்பெக்டருக்கு ஒன்றும் புரியவில்லை.  ஒரு மாணவன் எழுந்து நின்று, ‘எங்கள் ஆசிரியர் பாடம் நடத்தும் முறையைக் கவனியுங்கள்.  கதையைக் கூறி அதன் மூலம் பாடக் கருத்துக்களை விளக்குவார்.  நாங்களும் தெளிவாகப் புரிந்து கொள்வோம்.  இதுவே எங்கள் கல்விக்கூடச் சிறப்பு’ என்றான்.

மாணவர்கள் தைரியமுடன் இருக்க வேண்டும்.  அனைவருக்கும் இயற்கை அன்னை பகுத்தறிவை வழங்கியுள்ளாள்.  அதன் நோக்கம், அறிவின் துணை கொண்டு அவன் தெய்வநிலை அடைய வேண்டும் என்பதே. எல்லா நற்குணங்களையும் உடைய மாணவனையே இச்சமூகம் விரும்பும்.  அவனையே ஆசிரியரும் விரும்புவார்.  சிறந்த ஆசான் வழி நடந்தால் நாளைய தலைவனாக மாணவன் உயர்ந்து நிற்பான்.  அதற்கு ஆசிரியருடன் உள்ள உறவை வளர்த்துக் கொள்ள மாணவர்கள் விருப்பப்பட வேண்டும்.  பேச்சுத்திறமை, எழுத்துத்திறமை உள்ள ஒருவன், ஆசிரியரின் அறிவுரைகளை நாட வேண்டும்.  சில பள்ளி, கல்லூரிகளில் வகுப்பறையில் மட்டுமே ஆசிரியர் – மாணவர் என்ற உறவு முறை உள்ளது.  ஓய்வு நேரங்களில் புதிய துறைகளை நாடுவதில் அவ்வுறவு முறைகள் பலப்பட வேண்டும்.  வேண்டாத வீண் பேச்சுக்களைக் குறைத்தால் உறவுகள் மேம்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *