நமது நிலம்-நமது எதிர்காலம்

பப்புவா நியூகினியில் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு கிராமமே மண்ணுக்குள் புதைந்ததில், ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கக் கூடும் என்ற அச்சமிகு சூழலில் இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் நாள் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் ஐந்தாம் நாள் உலக சுற்றுச்சூழல் நாளாக பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்துவமான கருப்பொருள் மையநோக்கம் அறிவிக்கப்பட்டு பரவலாக்கப்படுவதுண்டு. 2024 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக “நிலவளம் மீட்பு, பாலைவனமயமாதல் மற்றும் நிலச்சரிவு” அறிவிக்கப்பட்டு, ”நமது நிலம்-நமது எதிர்காலம்” என்ற முழக்கத்தையும் முன்வைத்துள்ளது ஐக்கியநாடுகள் சபையின் சூழலியல் திட்டக்குழு. 

உலகின் முதல் உயிர், நீர்ப்பரப்பில் உருவானதாக அறிவியல் சொல்கிறது. ஆனால் உலகில் உயிர்கள் நிலைத்து தழைத்து வாழ்வது நிலத்தில் தான். சுமார் 30% உள்ள இந்த நிலப்பரப்பில் தான் கோடானுகோடி மனிதர்களும், உணவு, உறைவிடம் என அவர்களுக்கான அத்தனை வசதிகளும், அதனினும் மிகப்பெரும் அளவிலான விலங்கினங்களும், தாவரங்களும் வாழ்கின்றன. கடலை மாசுபடுத்தும் நமது கைங்கர்யத்துக்கு பதில் கிடைப்பதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். ஏனெனில், கடல் மிகப்பெரியது. ஆனால் நிலம் அப்படியல்ல. ஒப்பீட்டளவில் மிகக் கொஞ்சமே உள்ளது. அதிலும் மனிதன் உள்ளிட்ட எந்த உயிர்களும் அற்ற பெரிய நிலப்பரப்புகள், இன்னும் உள்ளன. ஆக, நாம் மிகக்குறைந்த அளவிலான நிலத்தையே நமக்கும், இன்னுமுள்ள உயிர்களுக்கும் ஆதாரமாகக் கொண்டுள்ளோம். அப்படியான நிலத்தில் நாம் செய்யும் மாசுபாடு நேரடியான, உடனடியான எதிர்விளைவுகளைக் கொடுக்கக் கூடியது. 

அனைத்து நகரங்களும் கட்டடங்களால் நிரம்பியுள்ளன. சாலைகள், வீடுகள் தொழில் நிறுவனங்கள் என்று, நகரங்களின் மண் உள்ள தரையைப் பார்ப்பதரிது. காடுகளை அழித்து காப்பி, தேயிலை, வாசனைப் பொருட்களை விளைவித்து வருகிறோம். நிறைய நாடுகளில் பாலைவனங்கள் விரிவாகிக்கொண்டே வருகின்றன. நிலச்சரிவுகள் அனைத்து மலைப்பகுதிகளிலும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இந்தச் சூழலில், நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க அல்லது குறைந்த பட்சம் எதிர்காலம் என்ற ஒன்றைப்பற்றி யோசிக்க நாம் நமது மண்ணைக் காக்க வேண்டியுள்ளது. மண்ணை மீட்க வேண்டியுள்ளது. மண்ணை செழிக்கவைக்க வேண்டியுள்ளது. 

சீனா, வளைகுடா நாடுகள் சிலவற்றில் மற்றும் இந்தியாவிலும், புதுமையான வழிமுறைகள் மூலமாக, பாலைவனங்களில் விளை நிலங்கள் உருவாக்கப்படுகின்றன. பாலைவனங்கள் விரிவாக்கத்தை தடுக்கும் முகமாக சீனா செய்து வரும் சூழலியல் சார்ந்த முன்னேற்பாடுகள் அறிவியல் உலகில் சாதனையாக பார்க்கப்படுகிறது. காய்ந்த வைக்கோல்களை குறிப்பிட்ட முறையில் பாலைவன மணலில் அடுக்கி வைப்பதன் மூலமாக காற்றின் மூலம் ஏற்படும் மண் அரிப்பு அல்லது நகர்வைத்தடுத்துள்ளார்கள்.  புற்கள், சிறிய வகைச் செடிகள், வறட்சியைத்தாங்கும் மரங்கள் போன்றவற்றை நட்டு, மக்களின் பங்களிப்புடன் பராமரிப்பு செய்ததன் மூலமாக மிகப்பெரும் அளவிலான பாலைவனமாக மாறும் அபாயமுள்ள நிலப்பரப்பு மீட்கப்பட்டுள்ளது. பசுமைக்கான விதை என்ற பெயரில் 2000 ஆம் ஆண்டு முதலாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், பொருளியல் ரீதியாக பாரதூரமான விளைவுகளை உருவாக்க்கியிருப்பதாக ஒரு விமர்சனம் வைக்கப்பட்டாலும், முன்னோடித் திட்டம் என்பதில் ஐயமில்லை. அதைப் போலவே, வளைகுடா நாடுகளில், பன்னெடுங்காலமாக பாலையாக இருக்கும் நிலங்களில், நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலமாக, பயிர்கள் வளர்க்கப்படுவதையும் காண்கிறோம். 

நிலவளம் மீட்பு என்ற மட்டில், பல்வேறு நாடுகளும், தொழில்நுட்பங்கள் மூலமாகவோ அல்லது மரபார்ந்த வழிமுறைகள் மூலமாகவோ, மக்களின் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. களர் நிலங்கள் எனப்படும் உப்புநிலங்களை மேலும் விரிவடையாமல் தடுத்தல், கடல்நீர் நிலத்தடி நீரோடு கலக்காமல் தடுத்தல், தரிசு நிலங்களில் மரங்கள் வளர்ப்பதன் மூலமாக மண் வளத்தை மேம்படுத்துதல் எனப் பலவகைகளில் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இப்படியான பார்வையில் மிக ஆபத்தான திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. அப்படியான ஒன்றை, அண்ணா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு முன்மொழிந்துள்ளார்கள். சில காடுகளில் உள்ள மண்ணில் கார்பன் சத்து குறைவாக உள்ளதாகவும் சரிந்து கொண்டே வருவதால் வனவளம் குறைவதாகவும் கண்டறிந்து அதற்கு உபாயமாக, நகர்ப்புறங்களில் பயோமைனிங் எனப்படும் முறையில் கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மக்கிய மண்ணை அத்தகையக வனப்பகுதிகளில் தொடர்ச்சியாக சில ஆண்டுகளுக்கு கொட்டுவதன் மூலம் வனப்பகுதிகளின் வளத்தை மீட்கலாம் என்று அரசுக்கு யோசனை கூறியுள்ளார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் நல்ல திட்டமாகத்தோன்றும் இத்திட்டம் மிக அபாயகரமானது. பயோமைனிங் என்பது நகர்ப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மை மையங்களில் செய்கிறார்கள். திடக்கழிவு என்பது இங்கே தனியாக எடுக்கப்படுவதில்லை. பிளாஸ்டிக் பைகளில்தான் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கிடங்குகளில் கொட்டப்படுகின்றன. வீடுகளில் இருந்து சில இடங்களில் தனியே சேகரிக்கப்பட்டாலும் பெருங்குடி உள்ளிட்ட குப்பை கொட்டும் வளாகங்களில் அதாவது திடக்கழிவு மேலாண்மை மையங்களில் மலைபோல குவிந்திருக்கும் குப்பைகளை பார்க்கும் போதே பிளாஸ்டிக் பைகள் எத்தனை அளவுக்கு இருக்கும் என்பது தெரியும். இந்த பாலித்தீன் அல்லது பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆண்டுகள் பல ஆகும். ஆனால் வெயிலில் பிளாஸ்டிக் இற்றுப் போய் உதிர்ந்து மைக்ரோபிளாஸ்டிக் என்னும் வடிவை அடைகிறது. இந்த மைக்ரோபிளாஸ்டிக்குகள் அளவில் மிக நுண்ணியவை. அவை நிலத்தடி நீரில் எளிதாகக் கலக்கக் கூடியவை. நீரில் மைக்ரோபிளஸ்டிக்குகள் இருந்தால் கண்ணுக்குத் தெரியாது. வெளிநாடுகளில் மைக்ரோ பிளாஸ்டிக்கின் அபாயங்கள் குறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்தியாவில் அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. பூச்சிக்கொல்லிகளைப் போல மைக்ரோபிளாஸ்டிக்க்குகள் ரத்தம், தாய்ப்பால், சதை எலும்பு என எங்கெங்கும் படிவதற்கு வாய்ப்புள்ளது. அப்படியான அபாயத்தை நாம் இன்னும் சரியாக உணரவில்லை. திடக்கழிவு மேலாண்மை மையங்களில் பயோமைனிங் முறையில் எடுக்கப்படும் மண்ணில் அதிகம் மைக்ரோபிளாஸ்டிக்குகள் இருக்கும். இவற்றை வனப்பகுதிகளில் கொட்டுவது தாய்ப்பாலில் நஞ்சு கலந்து குழந்தைக்கு புகட்டுவதற்கு ஒப்பானது. இதுகுறித்த முறையான ஆய்வுகள் இல்லாமல் இந்த அபாயகரமான திட்டத்தை அரசு கையிலெடுக்கக் கூடாது. 

1950-களில் பிளாஸ்டிக் உற்பத்தி தொடங்கியதிலிருந்து, தற்போது வரை பிளாஸ்டிக்குகள் மாபெரும் சூழலியல் சவாலாக உருமாறியுள்ளன. நமது கடல்களில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் எட்டு மில்லியன் டன்கள்  அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் சென்று சேர்வதாக ஆய்வுக்குறிப்புகள் சொல்கின்றன.  பிளாஸ்டிக் கழிவுகளின் அபாயத்தை பள்ளிக்குழந்தைகள் கூட அறிவர். ஆனால் மைக்ரோபிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு இன்னும் கூடுதலாக தேவைப்படுகிறது. அரசுகளும் ஆய்வாளர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. புகையிலைப் பயன்பாடு குறித்த மட்டில், விழிப்புணர்வு மற்றும் தீவிரமான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் காரணமாக பொது இடங்களில் புகைப்பிடிப்பது கட்டுக்குள் உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் அபாயத்திலும் அப்படியான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும், பரவலான விழிப்புணர்வும் தேவை. பிளாஸ்டிக்குகளை தவிர்ப்போம். குறைப்போம். மீள் உபயோகம் செய்வோம். ”நமது நிலம்-நமது எதிர்காலம்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *