பதினெட்டு வருடங்களுக்கு முன்பு வெய்யில் முற்ற ஆரம்பித்த ஜூன் மாதத்தின் நடுவாக்கில் நான் வாழும் இந்த தேசத்தை வந்தடைந்தேன். துபாய் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த உடன் முதலில் உறைத்தது வெய்யிலின் தகிப்புதான். திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவன், மதுரை, சென்னை, புதுவை போன்ற வெப்ப மண்டலங்களில் அலைந்திருந்தவனுக்கு அசலான தகிப்பு என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள இருபத்தாறு வருடங்கள் தேவைப்பட்டது.
இரண்டாவதாக, வானம் என்கிற ஒன்றைப் பார்க்க முடியவில்லை. அண்ணாந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய வரை புழுதியாகத் தெரிந்தது. மேகம் என்கிற சொல்லையாவது இந்த நாட்டின் வானம் அறிந்திருக்குமா என்கிற சந்தேகங்களும் எழுந்தன. தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டோமா என்கிற பயமும் உடன் எழுந்தது. ஆனால் ஓரிரு நாட்களில் எல்லாமும் மாறியது. இந்த நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள், எனக்கு வழங்கப்பட்ட அடுக்ககம், எங்கு சென்றாலும் ஏந்திக் கொள்ளும் குளிரூட்டப்பட்ட அறைகள், நவீன வாகனங்களென இந்த நாடு இயற்கையை ஏற்கெனவே தகவமைத்திருந்தது. அதன் செளகர்யங்களில் சுலபமாகப் பொருந்திப் போனேன்.
துபாய் என நம்மவர்களால் அழைக்கப்படும் இந்த நாட்டின் பெயர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பதாகும். அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மன், ராஸ்அல்கைமா, உம்ம்அல்க்வைன், ஃபுஜைரா என்கிற ஏழு தனித்தனி சின்னஞ்சிறு நாடுகள் கூட்டாக ஐக்கியஅரபு எமிரேட்ஸ் என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி அரசர்கள், அரசாங்கங்கள், பரிபாலனைகள் இருந்தாலும் கூட்டாகவும் இணைந்து செயல்படுவார்கள். இந்த ஒற்றுமை இருப்பதால் எங்கெல்லாம் எண்ணெய் வளங்களும் இயற்கை வளங்களும் கொட்டிக் கிடக்கிறதோ அங்கெல்லாம் சென்று தங்களின் பெரியண்ணன் வேலையைக் காண்பிக்கும் அமெரிக்காவின் மனித குலத்திற்கு எதிரான விஷச் செயல்கள் இங்கு எடுபடாமல் போயின. இந்த நாடு மிகத் திறமையாக உலக நாடுகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உலக அரங்கில் தனித்துவமிக்க நாடாக முன்னேறிச் செல்கிறது.
முதல் இரண்டு வருடங்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தேன். பிறகு துபை அரசாங்கத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. துபை அரச குடும்பத்திற்குத் தேவையான வசதிகளை செய்து கொள்ள அவர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனமொன்றில் பொறியாளராக இணைந்தேன். ராஜாங்க வாழ்வையும் அரசியலையும் நெருக்கமாகப் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் இந்த வாய்ப்பு ஏதுவாக அமைந்தது. கூடவே பொருளாதாரம் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் மேம்படவும், எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குப் பிடித்த துறையில் இயங்கவும் முடிந்தது. பணிபுரிந்த பதினைந்து வருடங்களில் நிறைவாக வாசிக்கவும், நிறைய எழுதவும் முடிந்தது. இலக்கியம், திரைப்படம், மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கவும் முடிந்தது. சர்வ நிச்சயமாக இவை அனைத்தையும் இந்த நாடுதான் எனக்குத் தந்தது.
அளவில் மிகச்சிறிய நாடு இது. பரப்பளவில் தமிழ்நாட்டில் பாதியளவே இருக்கும். மொத்தமே முப்பதாயிரம் சதுர மைல்கள்தாம். அறுபதுகளில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட பின்புதான் இந்நாடு வளம் கொழிக்கும் நாடாக மாறுகிறது. அதற்கு முன்பு ஏனைய பின் தங்கிய நாடுகளைப் போன்றே வாழ்வாதாரச் சவால்களை எதிர் கொண்டிருந்தது. அலைகள் குறைவாக இருக்கும் அராபியக் கடல் இவர்களுக்கு மீன்களையும் முத்துக்களையும் தந்து கொண்டிருந்தது. பாலையின் கொடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க மண் வீடுகளை நேர்த்தியாகக் கட்டிக் கொண்டனர். பேரீச்சையும் ஒட்டகங்களும் இவர்களின் வாழ்வாதாரங்களாக இருந்தன. வேட்டைக்கும், கொள்ளைக்கும் பருந்துகள் உதவியாக இருந்தன. இவர்கள் பயன்படுத்திய சாக்குப் பை விசிறிகள், மண்பாண்டங்கள், பழைய கலன்களை எல்லாம் அருங்காட்சியகங்களில் இப்போதும் காணலாம்.
எண்ணெய் வளம் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டது. பாலை நிலம் மிகப்பிரம்மாண்டமான கனவு நகரமாக வடிவம் கொண்டது. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் உருவாகி வந்தனர். இவர்களின் சிந்தனைகள் மொத்த நாட்டையுமே மாற்றியமைத்தது. இப்போது நாம் பார்க்கும் இந்த நாடு – இந்திய, ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் முக்கிய வியாபாரத் தலமாகவும் சுற்றுலாப்பயணிகளை வசீகரிக்கும் நாடாகவும் உருவாகி வந்திருக்கிறது. மேலும் இந்த நாட்டின் வரைபடம் ஒவ்வொரு நாளும் மாற்றமடைகிறது. வியக்க வைக்கும் சாலை மற்றும் வாகன வசதிகள், பொழுது போக்கு அம்சங்கள், உலகிலேயே உயரமான கட்டிடங்கள், உலகின் முதன்மையான வணிக வளாகங்கள் என உட்கட்டமைப்பு வசதிகள் பெருகியபடியே இருக்கின்றன. கூடவே பாதுகாப்பான நாடாகவும் இருப்பதால் இந்திய மற்றும் உலகப் பணக்காரர்களின் ஓய்விடங்களாகவும், சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் நாடாகவும் உருமாறியிருக்கிறது. அவர்களின் வியாபாரங்களை விஸ்தரிக்கும் நாடாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருக்கிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சியை உடன் இருந்து பார்ப்பது நல்லதொரு வாய்ப்பாகும். உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, துபை மெட்ரோ, உள்ளிட்ட பல்வேறு அடையாளங்கள் உருவான காலகட்டத்திலிருந்து இந்த நாட்டில் வசித்து வருகிறேன். நான் வந்த புதிதில் துபையின் இதயமான ஷேக் ஸாயித் சாலையில் மால் ஆஃப் எமிரேட்ஸிற்குப் பிறகு பெரிய கட்டிடங்கள் இருக்காது. ஆனால் இன்றோ புது துபாய் எனச் சொல்லப்படும் ஒரு பெரிய நகரமே உருவாகியிருக்கிறது. அவை ஐரோப்பியர்களுக்கான அல்லது மிக வசதி படைத்தவர்களுக்கான இடமாகவும் மாறியிருக்கிறது. மிகச் சிறப்பான குடியிருப்பு வசதிகளைக் கொண்ட லிவிங் கம்யூனிட்டிகள் ஏராளமாக உருவாகியிருக்கின்றன. வெளிநாட்டவர்களுக்கு தரமான வாழ்வை அமைத்துக் கொடுக்கும் நாடாக துபை இருக்கிறதுதான் என்றாலும் அதற்கான சரியான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். வருமான வரி கிடையாது என்றாலும் வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்வி, உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கு அதிகமான பணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்தோடு இந்த நாட்டில் வாழ அதற்கேற்ற பொருளாதாரப் பின்புலம் இருக்க வேண்டும்.
இந்த நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட நாற்பது சதவிகிதம் வரை இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் மலையாளிகள் முதன்மையானவர்கள். திரளான தமிழர்களும் உண்டு. சதவிகித அடிப்படையில் குடும்பத்தின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றப் பெரும்பாலான ஆண்கள் இங்கு தனியாகத்தான் வசிக்கிறார்கள். சமீப காலமாகப் பெண்களும் வேலை தேடி வந்து தனியாக வசிக்கும் சூழலும் உருவாகியிருக்கிறது. திறமையும் உழைப்பும் இருந்தால் அங்கீகாரம் நம்மைத் தேடிவரும். மலையாளிகளின் ‘டாமினேஷன்’ இருந்தாலும் தமிழர்கள் எல்லாத் துறைகளிலேயும் மின்னுகிறார்கள். மிக உயர்ந்த பதவிகளையும் வகிக்கிறார்கள். முதலீட்டார்களாவும் முதலாளிகளாகவும் இருக்கிறார்கள்.
பாலை தனித்துவமான நிலம். நெடுங் கோடையையும் குறுகிய குளிர்காலத்தையும் கொண்டது. சரியாக சொல்லப்போனால் எட்டு மாதங்கள் வெயில் காலம் நான்கு மாதங்கள் குளிர் காலம். மழைக்காலம் என்ற ஒன்றே கிடையாது. டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் ஓரிரு நாட்கள் ஒரு செண்டி மீட்டருக்கும் குறைவான மழை பெய்யும். ஆனால் அதற்கே இந்த நகரம் தாங்காது. போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடிப் போகும். இந்த நாடு மழைக்கு ஏற்றதில்லை. இங்கு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் உச்சகட்ட வெப்பநிலை பதிவாகும். அவை பள்ளிக்கூடங்களுக்கான விடுமுறைக்காலமாகவும் அமையும். நேரெதிராக குளிர் காலம் அவ்வளவு அற்புதமாக இருக்கும். வானத்தில் மேகங்கள் திரண்டிருக்கும் காலையின் வானமும் அந்தியின் வானமும் பல்வேறு வண்ணங்களால் நிறையும். பாலைவன மணற்துகளெல்லாம் பொன்மஞ்சளாக மின்னும். இரவுகளில் மக்கள் பாலையில் கூடாரம் அமைத்து தங்கிவிடுவார்கள். இந்த நாடு இரவு வாழ்விற்கும் ஏற்றது. வீதிகளெங்கும் ஒளிவெள்ளத்தில் மிதக்க உலகின் அனைத்து விதமான உணவையும், கலாச்சாரத்தையும், மனிதர்களையும் இங்கு பார்க்க முடியும். கூடுதலாக குளிர் காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்து வலசைப் பறவைகள் இங்கு வரும். அபூர்வமான பறவைகளையும் இந்தக் காலங்களில் பார்க்க முடியும். ஒருபக்கம் தொழில்நுட்பமும் கட்டுமானமும் விரிவடைந்து கொண்டே போனாலும் அரசு இயற்கையிலும் கவனம் கொண்டிருக்கிறது. ஏராளமான மரங்கள் நடப்பட்டு கவனமாக வளர்க்கப்படுகின்றன. உள்நாட்டு விவசாயத்தை ஊக்குவிக்கிறது. செயற்கை ஏரிகளும், பூங்காக்களும், தோட்டங்களும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அரசு பெரிய முதலீட்டை இயற்கைக்குத் தருகிறது.
நம்முடைய தமிழ் வாழ்வுக்கும் ஒரு பங்கமும் வராது. தமிழ்நாட்டில் இருப்பது போலவே எல்லா வகை உணவுப் பொருட்களும் இன்னும் தரமாகக் கிடைக்கும். நண்பர்கள் சரியாக அமைந்துவிட்டால் ஒன்றுகூடல்கள், ஊர் சுற்றல்கள், பொங்கல் கொண்டாட்டங்கள், கலை, இலக்கியச் செயல்பாடுகள் என எல்லாமும் இங்கே சாத்தியம். ஆனால் மிக நுட்பமான கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்கும். அது இருப்பதால் குற்றச் செயல்களின் சதவிகிதமும் மிக மிகக் குறைவாக இருக்கும். நாமும் சற்று மனிதர்களைப் போலவே நடந்து கொள்வோம். போக்குவரத்து விதிகள் கடுமையானவை. மீறல்களுக்கு ஏராளமான பணத்தை தண்டம் கட்ட வேண்டியிருக்கும்.
தனிப்பட்ட வகையில் இந்த நாடு எனக்கு சகலத்தையும் தந்தது. இங்கும் அங்குமாக சில இழப்புகள் இருக்கின்றனதாம் என்றாலும் ஒப்பீட்டளவில் வாழ்வு அள்ளிக் கொடுத்திருக்கிறது. இத்தனை வருட அந்நிய நில வாழ்வில் நான் இழந்தவை குறைவுதாம். சிக்கலான தருணங்களில் உறவு மற்றும் நட்புகளுடன் இருக்க முடியாமல் போனது, சொந்த ஊரின் பொது நிகழ்வுகளையும், கோவில் திருவிழாக்களையும், இந்திய நிலத்தின் நான்கு பருவங்களின் தனித்துவ அழகையும் காண முடியாமல் போவது போன்றவற்றைக் குறிப்பிடலாம். வெகு குறிப்பாக மழைக்காலத்தையும் தமிழ் வாழ்விற்கே உரிய பண்டிகைகளையும், திருநாள்களையும், நட்பு மற்றும் உறவுகளில் நடக்கும் சுப/துக்க நிகழ்வுகளில் பங்கு கொள்ள முடியாது போவதும் முக்கியமான இழப்பாகும். ஆனால் இங்கிருக்கும் செளகர்யங்கள் சகலத்தையும் சமன்படுத்தி விடுகின்றன.
இந்த நாடு இந்தியத் தொழிலாளர்களை நம்பியிருக்கிறது. நம்முடைய கொத்தனார்களும், ஆசாரிகளும், சாலைப் பணியார்களும் இந்த நாட்டுக்கு பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். உழைக்கும் மக்களின் ஆத்மார்த்தமான பங்களிப்பு இந்த நாட்டின் மிளிர்வுக்கான முக்கியக் காரணமாக அமைகிறது. ஆனால் அந்தத் தொழிலாளர்களுக்கு வேண்டிய சரியான அடிப்படை வசதிகளை இங்கே அவர்களைப் பணியிலமர்த்தும் பெரும்பாலான நிறுவனங்கள் செய்து தருவதில்லை. பெரிய நிறுவனங்கள் நல்ல வசதிகளை செய்து கொடுக்கின்றன என்றாலும் ஏராளமான சிறு நிறுவனங்கள் ஏமாற்றவும் செய்கின்றன. வேலை வாய்ப்பு மோசடிகளும் ஆங்காங்கே உண்டு. ஏஜெண்ட்களிடம் பணம் கட்டி ஏமாறும் நிலை இன்னமும் இருக்கிறது. வீட்டு வேலைக்கு வரும் பணிப்பெண்கள் சிக்கிக் கொண்ட கதைகளும் உண்டு. வெளிநாட்டு வேலைக்கு வருவதற்கு முன்பு சரியான புரிதலும் விழிப்புணர்வும் தேவை. இந்த நாட்டைப் பொறுத்தவரை சட்ட திட்டங்கள் பணியாளர்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. நமக்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இணையத்தில் கிடைக்கும். நம்முடைய அறியாமையை சில முதலாளிகள் பயன்படுத்திக் கொள்வார்கள். அது நிகழாமல் இருக்க நாம் சரியாக இருக்க வேண்டும். மற்றபடி சிறந்த கல்வி மற்றும் அனுபவப் பின்புலத்தோடு இந்த நாட்டிற்கு வந்து பணிபுரிவது சிறந்த தேர்வாகும். வேலை தெரிந்த நுணுக்கமான கைவினைஞர்களுக்கும் இங்கே நல்ல தேவை எப்போதும் இருக்கிறது. திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பது நம் மூதாய் அவ்வையின் வாக்கு, அது பொய்க்காது.