மாற்றத்தின் அச்சில் நிரந்தரமாகச் சுழலும் உலகில் கல்வி, வேலை மற்றும் சுற்றுலாவுக்காக பயணம் செய்வது என்பது தவிர்க்க முடியாததாகி வருகிறது. அறிவியல் வளர்ச்சியால் எல்லைகள் குறுகி, பயணம் செய்வதென்பது சுலபமாகி வருவதால், தனிநபர்கள் தங்கள் வழக்கமான வேலைகளில் இருந்து விடுபட்டு புதிய அனுபவங்களை தேடுகிறார்கள். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு மற்றும் நீரோட்டம் போல் எப்போதும் இரு என்ற முன்னோர்களின் வாக்குகளுக்கேற்ப வெவ்வேறு காரணங்களுக்காக தங்கள் பயணத்தை முன்னெடுக்கிறார்கள். இது போன்ற பயணங்களினால் உலகின் மூலைகளில் உறங்கிக் கிடக்கும் பொருளாதார வாய்ப்புகளை தேடி கண்டறிவது மற்றும் அவற்றை தனதாக்கி கொள்வது என்பது சுலபமாகிறது. இந்தப் பயணம் ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகை அல்லது தொழிலுக்கு மட்டும் அல்ல; மாறாக, இது கனவு காண்பவர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஆய்வில் ஆர்வம் உள்ளவர்களை வெவ்வேறு நாடுகளில் கொண்டு சேர்க்கிறது. மேலே சொன்ன பல்வேறு காரணங்களுக்காக தமிழர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்கள். சில காலங்களுக்கு முன்பு தமிழர்கள் தொழிலுக்காக அரேபிய நாடுகளுக்கு அதிகமாக பயணம் செய்தார்கள். அந்த பயணம் என்பது தற்போது உலகம் முழ்வதுமாகி நீண்டு வருகிறது. இவ்வாறான பயணங்களில், தமிழ்நாட்டு ஆராச்சியாளர்களின் முதல் தேர்வாக இருப்பது தென்கொரியா. அதுமட்டுமல்லாமல் பல்வேறு வகையான பொறியியல் துறைகளில் வேலை செய்யும் தமிழர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகம். ஆராய்ச்சிளர்களுக்கான மேம்பட்ட ஆய்வகங்கள் , ஊதியம், வாழ்க்கை முறை மற்றும் ஒய்வு ஊதியம் போன்ற பல சிறப்பம்சங்கள் ஆராய்ச்சியாளர்களை தென்கொரியா பக்கமாக ஈர்க்கிறது. பல்வேறு கலைகள் மற்றும் பாரம்பரியத்தோடு அறிவியல் வளர்ச்சியும் மிக வேகமாக இருப்பதால் இந்தியா மட்டுமல்ல பல்வேறு மேற்கத்திய நாடுகளின் மக்களும் தென்கொரியாவிற்கு தற்போது பயணப்படுகிறார்கள். தென்கொரியா அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழர்களுக்கான கொரியா தமிழ் சங்கமும் இங்கு செயல்படுகிறது. இவ்வாறான இந்த நாட்டில் தென்கொரியா மக்களின் பழக்க வழக்கங்கள், அறிவியல் வளர்ச்சி, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்வது என்பது அவசியமாகிறது. அதை பற்றிய சிறு பார்வை இது.
கல்வியை பொறுத்தவரை தென் கொரியா மிகவும் போட்டி மற்றும் அன்றாட வாழ்க்கை முறைக்கான கல்வி முறையைக் கொண்டுள்ளது. இது கல்வி சாதனைகளுக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. இங்கு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியை உள்ளடக்கிய ஒன்பது ஆண்டுகள் கல்வி கட்டாயமாகும். இந்த கட்டாய கல்வியானது தொடக்கப் பள்ளி ஆறு ஆண்டுகள் மற்றும் நடுநிலைப் பள்ளி மூன்று ஆண்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. உயர்நிலைப் பள்ளிக் கல்வியானது பொதுவாக 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை மூன்று வருடங்கள் நீடிக்கும். உயர்நிலைப் பள்ளியின் பிற்பகுதியில் மாணவர்கள் தங்கள் கல்வி ஆர்வங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட துறையை தேர்வு செய்கிறார்கள். இதன்பின் இளங்கலை மற்றும் முதுகலை கல்வி என நீள்கிறது. பின் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி என செல்கிறது .. இங்கு முனைவர் பட்டதிற்கென ஆராய்ச்சி செய்யும் கொரியா மாணவர்கள் மிக குறைவாகும். ஏனென்றால் முதுகலை கல்வியின் போதே அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிடுகிறது. பல மாணவர்கள் முனைவர் பட்டத் திற்கென பல நாடுகளுக்கு செல்கிறார்கள். தென் கொரிய பல்கலைக்கழகங்கள் சர்வதேசமயமாக்கலில் அதிக கவனம் செலுத்துகின்றன. பல நிறுவனங்கள் ஆங்கிலத்தில் திட்டங்களை வகுத்து சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை ஈர்க்கிறது. இந்தியாவில் இருந்து இங்கு முதுகலை மற்றும் முனைவர் ஆராய்ச்சிக்கென பல மாணவர்கள் வருகிறார்கள். வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு வகைகளில் முதுகலை மற்றும் முனைவர் ஆராய்ச்சிக்கென உதவித்தொகை தருகிறார்கள்.. சிறிது கொரியன் மொழி தெரிந்திருந்தால் முதுகலை முடித்தவுடன் நல்ல கம்பெனிகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை கிடைக்கிறது.
இப்போது இங்கே படிக்க வருவது எப்படி என்று பார்ப்போம்.. தென் கொரியா நிறைய சர்வதேச மாணவர்களை அவர்களின் இளங்கலை, பட்டதாரி மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஈர்த்து வருகிறது. சுமார் 400 தேசிய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன மற்றும் சில பல்கலைக்கழகங்கள் பல புதிய மற்றும் வளர்ந்து வரும் அறிவியல் துறைகளில் அதிநவீன ஆராய்ச்சி வசதிகளைக் கொண்டுள்ளன. சர்வதேச மாணவர்களை நோக்கிய பல்கலைக்கழகங்கள் 30% விரிவுரைகளை ஆங்கில மொழியில் நடத்துகின்றன. இளங்கலை படிப்புகளை விட முதுகலையில் ஆங்கில விரிவுரைகள் அதிகமாக உள்ளது. சில பல்கலைக்கழகங்களில் அனைத்துப் படிப்புகளும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகின்றன. கல்வி அமர்வுக்கு முன் கொரிய மொழி பாடத்தில் சேருவது மற்றொரு விருப்பம். கல்வி ஆண்டு பொதுவாக மார்ச் மாதத்தில் வசந்த காலத்திலும், செப்டம்பரில் இலையுதிர்காலத்திலும் தொடங்கும். ஒரு வருங்கால மாணவர், ஒரு வருடத்திற்கு முன்பே இங்கு வருவதற்கான தயாரிப்புகளைச் செய்யத் தொடங்க வேண்டும். கல்விக் கட்டணம் பல்கலைக்கழகத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, தேசிய பல்கலைக்கழகங்கள் தனியார் பல்கலைக்கழகங்களை விட மலிவானவை. கொரியாவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள படிப்புகள், தங்குமிடம் போன்றவை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை பார்க்கவும். (https://www.studyinkorea.go.kr/en/sub/overseas_info/request/universityList.do). இளங்கலை மற்றும் முதுகலை படிப்பதற்கான சில கல்வி உதவித்தொகை மற்றும் அவற்றின் இணைப்புகள் கீழே கொடுப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வெளிநாட்டவர்களுக்கான கல்வி உதவி தொகைகளாகும். Global Korea Scholarship Program ( https://www.studyinkorea.go.kr/en/sub/gks/allnew_invite.do), Korean Government Support Program for Foreign Exchange Students (https://www.studyinkorea.go.kr/en/sub/gks/allnew_exchange.do), Support Program for Self-financed Students (https://www.studyinkorea.go.kr/en/sub/gks/allnew_excellentMercy.do), GKS (Global Korea Scholarship) Invitation Program for Students from Partner Countries (https://www.studyinkorea.go.kr/en/sub/gks/allnew_majorNation.do) மற்றும் GKS for ASEAN countries’ Science and Engineering Students (https://www.studyinkorea.go.kr/en/sub/gks/allnew_GKSforASEAN.do) அதுமட்டுமில்லாமல், பல கொரிய பல்கலைக்கழகங்கள் அவர்கள் பல்கலை நிதியில் இருந்து சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அத்தகைய உதவித்தொகை விண்ணப்பதாரரின் GPA நிலைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. கொரியாவில் ஆங்கிலத்தில் படிக்க, நீங்கள் TOEFL அல்லது IELTS இல் முறையே 7.1 மற்றும் 5.5 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். முனைவர் பட்டத்திற்கு TOEFL இல் 7.9 மற்றும் IELTS இல் 6 குறைந்தபட்ச மதிப்பெண் தேவை. இந்த மதிப்பெண்கள் KAIST போன்ற உலக தரமான பல்கலை கழகங்களுக்கு மட்டுமே தேவை படுகிறது. மற்ற பல்கலை கழகங்கள் மற்றும் தனியார் பல்கலை கழகங்களுக்கு இந்த ஆங்கில புலமை தேர்வுகள் தேவை படுவதில்லை. நீங்கள் ஆங்கிலத்தில் படிக்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் கொரிய மொழித் தேர்வை எடுக்க வேண்டிய அவசியமில்லை.நீங்கள் கொரிய மொழியில் படிக்க விரும்பினால், கொரிய மொழியில் தேர்ச்சிக்கான தேர்வில் (TOPIK) குறைந்தபட்ச மதிப்பெண் நிலை 3 பெற்றிருக்க வேண்டும். நீங்கள் கொரிய மொழி திட்டத்தில் பட்டம் பெறுவதற்குள் குறைந்தபட்சம் TOPIK நிலை 4 ஐ முடித்திருக்க வேண்டும். கடவுச்சீட்டு (visa), பாஸ்போர்ட், புகைப்படம், படிப்பு சான்றிதழ்கள், ஆங்கிலம் அல்லது கொரிய மொழி சான்றிதழ், தனிப்பட்ட அறிக்கை, வங்கி அறிக்கை/நிதி ஆதரவு உறுதிமொழி, பரிந்துரை கடிதம், தற்குறிப்பு (Cv or Resume) விண்ணப்ப படிவம் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட்/ஐடி ஆகிய ஆவணங்களை நீங்கள் இளங்கலை படிப்பிற்கான ஆவணங்களாக சமர்ப்பிக்க வேண்டும். இளங்கலை படிப்பிற்கு நீங்கள் நேரிடையாக பல்கலை கழகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். முதுகலை படிப்பிற்கு நீங்கள் நேரிடையாக பல்கலை கழகத்திற்கு விண்ணப்பிக்கலாம் .. அப்படி விண்ணப்பிக்கும் பொது உங்களுக்கான கல்வி உதவித்தொகையை நீங்களாகவே விண்ணப்பித்து இருக்க வேண்டும். அல்லது நீங்கள் நேரிடையாக பல்கலை கழக பேராசிரியர்களுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் ஏற்கனேவே கல்வி உதவித்தொகைக்கான திட்டம் (project) வைத்திருப்பது நல்லது. அவர்கள் உங்கள் விண்ணப்ப நடைமுறைகளை கவனித்து கொள்வார்கள். முனைவர் படிப்பிற்கும் நீங்கள் நேரிடையாக உங்கள் ஆர்வமுள்ள துறை சார்ந்த பேராசிரியர்களை இமெயில் மூலமாக தொடர்பு கொண்டு அவர்கள் கீழ் சேரலாம் . முனைவர் படிப்பிற்கு இதுதான் சரியான வழியாக இருக்கும். உங்களுக்கான கல்வி உதவித்தொகைகளை அவர்கள் உங்களுக்கு தருவார்கள். மேலும் அவர்கள் உங்கள் விண்ணப்ப நடைமுறைகளையும் கவனித்து கொள்வார்கள். சென்னையில் இருந்து விசா எடுப்பதற்கு குறைந்த விலையில் ஏகப்பட்ட நிறுவனங்கள் (Agency) உள்ளன.
வேலையை பொறுத்த வரை தென் கொரியா பல்வேறு துறைகளில் வாய்ப்புகளுடன் மாறுபட்ட மற்றும் ஆற்றல்மிக்க வேலை சந்தையைக் கொண்டுள்ளது. மேலும் தென்கொரியா உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தொழில்களுக்கு தாயகமாக உள்ளது. தென் கொரியாவில் வேலைகளைத் தேடும்போது, மொழித் தேவைகளைக் கருத்தில் கொள்வது முக்கியம், ஏனெனில் கொரிய மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியமாகும், குறிப்பாக உள்ளூர் வாடிக்கையாளர்கள் அல்லது சக ஊழியர்களுடன் தொடர்பு கொள்ளும் வேலைகளுக்கு கொரியா மொழி மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் ஆராய்ச்சி சம்பந்தமான வேலைகளுக்கு ஆங்கில மொழி தெரிந்திருந்தாலே போதுமானது . சில விசா நடைமுறைகளால் அரேபியா நாடுகளுக்கு செல்வதை போல தொழிலாளர் விசா இங்கு இந்தியர்களுக்கு தரப்படுவதில்லை. ஆனால் மற்ற ஆசியா நாடுகளான சிறிலங்கா, பாக்கிஸ்தான், நேபால், பிலிபின்ஸ் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாட்டு மக்களுக்கு இங்கு தொழிலாளர் விசா தரப்படுகிறது. குறைந்து வரும் பிறப்பு விகிதத்தால் தொழிற்சாலைகளுக்கு வேலையாட்கள் கிடைப்பது சிரமமகி வருகிறது. அதனால் அதிகமான தொழிற்சாலை சம்பத்தப்பட்ட வேலைகளுக்கு வெளிநாட்டவர்களை நம்பியே தென்கொரியா இருக்கிறது. வரும் காலங்களில் வேலைக்கென அதிக வெளிநாட்டவர்களை தென்கொரியா தங்கள் நாட்டிற்கு அழைக்க இருக்கிறது. தகுதியான படிப்பும் அதை சார்ந்த அனுபவமும் இருந்தால் வேலை பெறுவது என்பது இங்கு மிக சுலபமாகும்.
முதலில் முனைவர் பட்டம் முடித்தபின் எவ்வாறு இங்கு வேலை பெறுவது (Postdoctral Fellow) என பார்ப்போம்.. நீங்கள் உங்கள் துறை சார்ந்த பேராசிரியல்களை ஈமெயில் மூலமாக தொடர்பு கொள்ளலாம். ஈமெயில் விலாசத்தை அவர்கள் இணைய தளத்திலிருந்து எடுக்கலாம் . ஏனெனில் இங்கு அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையத்தளம் உள்ளது. நீங்கள் நேரிடையாக பல்கலை இணையதளத்திற்கு சென்று நீங்கள் அதை பார்க்கலாம். அப்படி இல்லை எனில் அவர்கள் ஆராய்ச்சி இதழ்களில் அவர்கள் ஈமெயில் எடுத்து விண்ணப்பிக்கலாம். தொழில்துறை சார்ந்த வேலைகளுக்கு நீங்கள் நேரிடையாக அவர்களது இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். Albamon, JOBKOREA, LinkedIn, மற்றும் Saramin போன்ற வேலை சம்பந்தமான இணைய தளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆனால் கொரியா நிறுவனங்கள் இந்தியர்களை வேலைக்கு எடுப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதுவுமில்லாமல் உங்களக்கு கொரியா மொழி தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். கொரியாவில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அவ்வாறு எதிர் பார்ப்பதில்லை. கொரியாவிற்கு வெளியில் இருந்து நீங்கள் விண்ணப்பிபதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே உங்களுக்கு மிக தோதானதாக இருக்கும். இந்த சிக்கல்களை தீர்க்க இளம் தலைமுறை வேறு சில வழிகளை கையாள்கிறார்கள். முதலில் அவர்கள் இளங்கலை அல்லது முதுகலை படிப்பிற்கு இங்கு வருகிறார்கள். பின் அவர்கள் கொரியா மொழியில் தேர்ச்சியடைகிறார்கள். பின் இங்கு இருக்கும் கொரியா நிறுவனங்களில் மிக சுலபமாக வேலை வாய்ப்பை அடைகிறார்கள். இரண்டாவது வழி என்பது இந்தியர்களுக்கு மிக சுலபமாக வேலை வாய்ப்பை பெறும் வழியாகும். தென் கொரியா 2024 ஆம் ஆண்டுக்கான நாடு தழுவிய குறைந்தபட்ச ஊதியத்தை 2.5% உயர்த்தி ஒரு மணி நேரத்திற்கு 9,860 KRW ($7.80) தர இருக்கிறது. அதாவது இந்தியா மதிப்பில் ஏற குறைய 620 ரூபாயில் இருந்து 640 ரூபாயாக ஒரு மணி நேரத்திற்கு ஊதியம் தருகிறார்கள். ஒரு நாளைக்கு உத்தேசமாக 7500 ரூபாயில் இருந்து 7800 ரூபாய் வரை தருகிறார்கள். இது அடிப்படை வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான ஊதியமாகும். படித்துவிட்டு வேலைக்கு செல்லும்போது இது இன்னும் அதிகமாக இருக்கும். மதிய உணவு என்பது தனியாக தருகிறார்கள். இங்கு வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்கள் பல்வேறு இடங்களில் நடத்துகிறார்கள்.
தென் கொரியா பாரம்பரிய மற்றும் நவீன நாகரிகத்தின் கலவையுடன் துடிப்பான மற்றும் ஆற்றல்மிக்க சமூக வாழ்க்கையை கொண்டிருக்கிறது . தென் கொரியா மக்களின் சமூக வாழ்க்கை என்பது நகரமயமாக்கல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றோடு அவர்களின் பல்வேறு கலாச்சார நடைமுறைகளும் கலந்தே இருக்கிறது. இவர்கள் குழுவாக சேர்ந்து செய்யும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது சக பணியாளர்களாக இருந்தாலும் அவர்களின் சமூக வாழ்க்கை என்பது பெரும்பாலும் குழுக்களில் நிகழ்கிறது. சமூகக் கூட்டங்கள் மற்றும் இன்னபிற பண்டிகை நாட்களை கொரிய மக்கள் பெரும்பாலும் குழுவாகவே கொண்டாடுகின்றனர். சமூக கூட்டங்களில் உணவை எல்லோருக்கும் பரிமாறுவது என்பது கொரியா கலாச்சாரத்தின் இன்றியமையாத பகுதியாக இருக்கிறது. முக்கியமாக , நிறுவனத்திற்கு வேலைக்கு வரும் பணியாளர்களுக்கு இலவச மதிய உணவு என்பது கட்டாயமாக கொரியா மக்கள் பின்பற்றுகிறார்கள். இரவு வாழ்க்கை என்பது தென் கொரியாவில் , குறிப்பாக சியோல் போன்ற நகரங்களில், இரவு விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் மிக பொழுதுபோக்காக இருக்கும். மக்கள் சந்தித்து உரையாடுவதற்கு பல்வேறு வகையான காபி கடைகள் வைத்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கான மரியாதை என்பது கொரியா கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. முற்றிலுமாக உடம்போடு குனிந்து வணக்கம் சொல்கிறார்கள். நாம் உதவி செய்தால் புன்முறுவலோடு அந்த வணக்கத்தை சொல்கிறார்கள். மேலும் சாலையில் பெரியவர்களுக்கு வழிவிட்டு நடந்தாலே வயது வித்தியாசம் இன்றி அவர்களும் குனிந்து நன்றி சொல்கிறார்கள். இது நான் எங்கும் பார்க்காத நடைமுறை. ஏதாவது குடியிறுப்பு பகுதிகளில் நடந்து செல்கையில் வாகனங்கள் வந்தால் வாகனத்தின் சத்தம் எழுப்பாமல் நம் பின்னே பொறுமையாக வருகிறார்கள்.. நாம் பார்த்து வழிவிட்டால் புன்முறுவலோடு வணக்கம் சொல்லி கடக்கிறார்கள். பெரும்பான்மையாக சாலைகளில் இவர்கள் ஒலி எழுப்புவதில்லை. சூசோக் மற்றும் சியோலால் என்ற இரண்டு வகையான விடுமுறை நாட்கள் கொரியா மக்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். சூசோக் திருவிழா என்பது விவசாய சமூகமாக கொரியா மாறியதிலிருந்து அவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் அவர்கள் முன்னோர்களுக்கு குடும்பமாக நன்றி செலுத்துகிறார்கள்.மேலும் தாத்தா, பாட்டி மற்றும் வயதானவ்ர்களை சந்திப்பதற்கான நேரமாக இந்த விடுமுறையை பயன்படுத்திகிறார்கள். சியோலால் என்பது கொரியர்களின் புது வருடமாக கொண்டாடப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களிலும் குடும்பமாக சேர்ந்து விழாவை கொண்டாடுகிறார்கள். கொரியாவில் மக்கள் பல்வேறு வகையான மதங்களை பின்பற்றுகிறார்கள். நாத்திக்கத்தை பின்பற்றுவர்களும் இருக்கிறார்கள்.
மிக சுவையான தென்கொரியா உணவுகள் நாட்டின் உணவு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் புதுமைகளின் சமநிலையை பிரதிபலிக்கிறது. கொரியா உணவுகள் பலவிதமான கூட்டு பொரியல்களோடு பரிமாறப்படுகிறது. புளிக்கவைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், முட்டைக்கோஸ் அல்லது கொரிய முள்ளங்கி, மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவை கிம்ச்சி என்ற பெயரால் ஊறுகாயாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இறைச்சிகள், பிபிம்பாப்,கிம்பாப், ஜாப்சே, தஃபோக்கி, சுந்துபு, ஹேமுல் பஜியோன், மியோக்-குக், ஹோடியோக், ஜஜாங்மியோன், சூண்டே மற்றும் சீக்யே போன்ற உணவு வகைகள் வெவேறு முறைகளில் சமைக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன. இந்த உணவு வகைகள் சமைப்பதில் நூடுல்ஸ் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள படுகிறது. தென் கொரியாவில் நவீன மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் நன்கு வளர்ந்த சுகாதார அமைப்பு உள்ளது. இங்கு மருத்துவ சுற்றுலா மிக பிரபலம். ஆனால் விலை நம் ஊரை ஒப்பிடும்போது மிக அதிகம். மருத்துவ காப்பீடு வேலை செய்யும் எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது. மற்றவர்கள் நம் ஊரை போலவே பணம் கொடுத்து பெறுகிறார்கள். மருத்துவம் பார்த்து முடித்துவிட்டு கட்டண தொகையை கொடுக்கும்போதே காப்பீடு தொகையை கழித்துவிட்டுத்தான் நம்மிடம் இருந்து பணத்தை வசூலிக்கிறார்கள். மேற்சொன்ன இந்த வசதிகளால் இங்கு மருத்துவ கட்டமைப்பு என்பது மேலோங்கி இருக்கிறது. மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் கொரியா சிறந்தோங்குகிறது. தென் கொரியா நன்கு வளர்ந்த மற்றும் திறமையான போக்குவரத்து உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது, இது குடியிருப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நாட்டிற்குள் பயணிப்பதை எளிதாக்குகிறது. சின்ன கிராமத்தை கூட இணைக்கும் பாதைகள் , அதிவேக இரயில்கள், பேருந்துகள் மற்றும் உள்நாட்டு விமானங்கள் என மிக சிறப்பான போக்குவரத்தை தென்கொரியா பெற்றுள்ளது. மேலும் மிக குறைவான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இங்கு வெளிநாட்டில் இருந்து வரும் பெண்களுக்கு மிக சரியான பாதுகாப்பை அளிக்கிறது. இளம் தலைமுறையினர் Bulletproof Boy Scouts (BTS), K-pop மற்றும் கொரிய நாடகம்
ஆகியவைகளின் கவர்ச்சியால் இழுக்கப்பட்டு இங்கு வர வேண்டும் என ஆசை படுகிறார்கள். 2023 மே மாதத்தில் ஊருக்கு சென்று உறவினர் வீட்டுக்கு செல்லும்போது அங்கு இருக்கும் இளம் தலை முறையினர் குறிப்பாக பெண்கள் என்னிடம் அதை பற்றி மட்டுமே பல கேள்விகள் கேட்டார்கள். உண்மையில் கொரிய நாடகத்தில் காட்டப்படுவதற்கும் இங்கு அவர்கள் வாழும் வாழ்க்கை முறைக்கும் அதிகமான வித்தியாசம் இருக்கிறது. அதை போன்றே இருக்கும் என நம்பி இங்கு படிக்க வந்த சிலர் இரண்டு மாதங்களில் படிப்பை விட்டு வீட்டிற்கு சென்ற நிகழ்வுகள் பல இருக்கின்றன. தென் கொரியா மக்கள் கடின உழைப்புக்கு பேர் போனவர்கள். கடின உழைப்பு இருந்தால் மட்டுமே நீங்கள் இங்கு தொடர்ச்சியாக வாழ முடியும்.
தென் கொரியா பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தை தடையின்றி ஒருங்கிணைக்கும் ஒரு ஆற்றல்மிக்க மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடாக நிற்கிறது. தொழில்நுட்பம் முதல் பொழுதுபோக்கு வரையிலான பகுதிகளில் அதன் உலகளாவிய தாக்கம் உலக அரங்கில் அதன் செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. எந்தவொரு நாட்டையும் போலவே, தென் கொரியாவும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. அதன் பல்வேறு சவால்களை உறுதியுடன் எதிர்கொள்கிறது. வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உலக அரங்கில் மிக வேகமாக ஏற்படுத்தி பல்வேறு நாட்டவர்கள் படிப்பு மற்றும் வேலைகளுக்காக வந்து தஞ்சமடையும் ஒரு நாடாக இருக்கிறது. எதிர்காலத்தில் இந்தியர்கள் தங்களை இந்த நாட்டில் நிலை நிறுத்தி கொள்ள அணைத்து வகையான வாய்ப்புகளும் இங்கே அதிகம். பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களுக்கு செல்ல இந்த நாட்டை ஒரு மையமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இனம் மற்றும் நிறம் சம்பந்தமான சில நிகழ்வுகள் இருந்தபோதும் அது பெரிதாக வெளிநாட்டவர்களை பாதிப்பதில்லை.
தென் கொரியா எப்போதும் இந்தியர்களை இருகரம் விரித்து வரவேற்றுக்கொண்டே இருக்கிறது.
Good and comprehensive elaboration Dr.Yesuraj.
Thank you
Dear Yesuraj, Really you covered all necessity information about South Korea, it will be very useful to those who are planning to come there.. Nice narration.. All the best and Expecting more & more like this..
Thank you
Dear Dr. Yesuraj, I red this article each and every line, quite impressed that I couldn’t stop reading it since you wrote such an amazing lines about South Korea and I really interested to get a job there.
Thank you
Nice article about south Korea. He elaborated what makes people move towards south Korea.
Congratulations💐 Dr. Yesuraj for briefly and nicely narrative South korea life’s style, tradition, cultural, opportunity and so on. Excited to read it. I hope this will help for the young generation for getting loop for their expertise. Many congrats for publishing this article by “PUZHUTHI ” and team👏👏
With love..
Dr. Thangavelu Dhanasekaran
Poat-doc fellow
Harbin, P. R.China.
Sir very informative and interesting narration of South Korea, many people will get inspired and feel comfortable by reading your article for doing higher education in South Korea.