வரலாறு என்பதே புனைவற்ற கற்பனைகளற்ற உண்மை என்பதாகும். அந்த வகையில் “பகிர்வு அறக்கட்டளை”யின் வரலாற்றுக்கு எளிய ஆனால் ஆழ்ந்த பின்னணி உண்டு.
1990 – 93 காலகட்டத்தில் பகிர்வு அறக்கட்டளையின் நிர்வாகியான செல்வகுமார் தன் நண்பர்களோடு இணைந்து தனது கல்லூரிக் காலத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்பு எடுக்கத் தொடங்கினர். அப்போது ஏழை எளிய மாணவர்களிடம் எந்தக்கட்டணமும் பெற்றுக்கொள்ளாமல் ஆரம்பித்ததுதான் இந்த விருட்சத்தின் விதையென யாருக்கும் தெரியாது. 2018 ல் பதிவு செய்து பகிர்வு அறக்கட்டளையாக வேரூன்றியுள்ளது. வருமான வரிவிலக்கும் பெற்றுள்ளது.
பத்தாயிரம் ரூபாய் இருந்திருந்தால் கல்வியியல் கல்வி படித்திருக்கலாம். அன்றைய நாளில் அரசு வேலையும் உறுதியாகியிருக்கும். கல்விகற்றலில் பணம் ஒரு தடையென்பது மனம் அறுக்கும் வலி. அதை உணர்ந்தவர்க்கே தெரியும். வாழ்ந்துகெட்ட குடும்பத்தார் எப்படி யாரிடம் போய்க் கேட்பது?
இப்படி வருடங்கள் கடந்து போகையில் நண்பர் ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் மேடையிலேயே தான் இரண்டு பெண்பிள்ளைகளின் கல்லூரிப் படிப்பிற்கான செலவை ஏற்றுக்கொழ்வதாகச் சொல்லிவிட்டு பிறகு தொடர்பைவிட்டே போய்விட்டார். அந்த மாணவர்களோ அவரைப் பற்றி எங்களிடம் விசாரித்தும் எங்களாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான் நாங்களே அந்த மாணவர்களைப் படிக்க வைப்பதென்று முடிவு செய்தோம். படிக்கவும் வைத்தோம். நினைத்துப் பார்த்தால் மனதுக்கு மிக மகிழ்வாய் இருந்தது. இரண்டு பெண்பிள்ளைகளின் கல்லூரிப் படிப்பிற்கு துணையிருந்து அவர்களின் குடும்பத்திற்கு அடுத்தகட்ட நகர்விற்கான வழியானதை அந்த மாணவர்களின் வேலை வாய்ப்பினால் பொருளாதார முன்னேற்றமும் கண்கூடாகப் பார்த்து மகிழ்ந்தோம். 2015-ல் இராஜபாளையம் முகநூல் நண்பர்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதுவே பின்னர் பகிர்வு அறக்கட்டளையாக முறையாகப் பதிவுசெய்யப்பட்டது.
கொரோனோ இடர் காலத்தின் களச் செயல்கள் மனதுக்கு நிறைவைத் தந்தாலும் மிக முக்கியமான நிகழ்வொன்று என்னவென்றால் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் பழங்குடியினருக்கு உதவ வாய்த்ததுதான். அவர்கள் மலைமீதேறி தேனெடுத்து இன்னபிற மலைப் பொருட்களை சேகரித்து ஊருக்குள் வந்து விற்பனை செய்து அந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்துவர். நாடடங்கில் அவர்களுக்கென்ன வழி? என்று யோசித்து அரிசி மளிகைப் பொருட்கள் தந்ததோடு. நேரில் நானே சென்று பெண்கள் ஆண்கள் எத்தனை பேர் குழந்தைகள் ஆண் பெண் வயதுவாரியாகக் குறித்து வந்து அவர்களுக்காக ஆடைகள் வாங்கித்தந்ததோம் . பெண்களுக்கான புடவைகளை மருத்துவர் சாந்திலால் தந்துதவினார். ஆண்கள் மற்றும் நாற்பது குழந்தைகளுக்கான ஆடைகளையும் கடைக்காரர் விலையில் சகாயம் செய்தது நல்லனவற்றுக்கு தானாகவே சேரும் கரங்கள் என்று மனம் நிறைந்தது. ஆடைகளை பழங்குடியின மக்களுக்குத் தந்தோம்.
வளரிளம் குழந்தைகளுக்கான பயிற்சி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாசித்தலை மேம்படுத்தும் விதமாக புத்தகங்கள் வழங்குவது, சீருடைகள் வழங்குவது, மருத்துவ உதவி என அவர்கள் எல்லைக்குட்பட்ட அளவில் உதவிக் கொண்டிருக்கிறது பகிர்வு.
லட்சக் கணக்கில் மரங்களை நடுவதல்ல பகிர்வு அமைப்பினரின் லட்சியம். நான்கு மரமானாலும் நட்டு பாதுகாப்பாக வளர்த்து அந்தந்தப் பகுதி மக்களிடம் ஒப்படைப்பதே நோக்கம். மேலும் பள்ளி கல்லூரி வளாகங்கள், குடியிருப்புப்பகுதிகள், ஓடை, கண்மாய்க்கரைகளில் நட்டுவைப்பதும் உண்டு. நேரம் கிடைக்கும்போது ஏற்கனவே வளர்ந்த மரங்களில் விளம்பரத்திற்காக அடித்த ஆணிகளையும் அகற்றுவதுண்டு. மரங்களும் உயிர்தானே?
எல்லா அமைப்புகளும் கையிலெடுக்கும் ஒரு சேவை இரத்தம் வழங்குதல். ஆனால் பகிர்வு கேட்போருக்கெல்லாம் உடனே தந்துவிடுவதல்ல. உண்மையாகத் தேவைப்பட்டவர் குடும்பத்தில் யாரும் அந்த ரத்தவகையில்லை. அல்லது ரத்தம் தரயியலாத நிலை எனும்போது உடனடி ஏற்பாடு செய்து தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அப்படியாக ஒருமுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகளின் பேறுகாலச் சிக்கல் காரணமாக ரத்தம் கேட்டுவந்தனர் கிராமத்துத் தகப்பனும் அவளின் கணவனும். உடனடியாக விசாரித்து ரத்தம் வழங்க ஆவன செய்துவிட்டு எங்கள் வேலையில் மறந்துவிட்டோம். ஆனால் பிரசவம் நல்லபடியாக நடந்தது, நீங்கள் ஏற்பாடு செய்த ரத்தம்தான் மகளைக் காப்பாற்றியது என்று கண்கலங்கி நன்றி தெரிவிக்க மீண்டும் நேரில் வந்த தகப்பனுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் கண்ணில் நீர். இப்படியெல்லாம் மறக்காமல் நன்றி தெரிவிப்பது ஒரு சிலர் மட்டுமே. அதையெல்லாம் அமைப்பினர் கவனத்தில் கொள்வதேயில்லை. கடமையை மட்டும் செய்துவிட்டு நகர்ந்து விடுவோம்.
2015-ல் சென்னை பெருவெள்ளம் எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்தது. ஆங்காங்கே உதவிகள் பெற்று ஏராளமான பொருட்களை அனுப்பிவைத்து நாங்கள் இருக்கிறோம் என்று கரம்கோர்க்க முடிந்தது. கடைக்கோடி கிராமங்களுக்கு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் எப்படிச் சென்றடைவதில்லையோ அல்லது தாமதமாகுமோ அதுபோல கஜா புயலால் சின்னாபின்னமாகிப்போன டெல்டா மாவட்டங்களின் கடைக்கோடி கிராமங்களைத் தேடிக் கண்டடைந்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்களின் வழிகாட்டலில் அந்த மக்களின் தேவைகளான உணவு உடை போர்வை மளிகை என மூன்றுமுறை சில லட்சங்கள் மதிப்பிலான பொருட்களோடு பயணப்பட்டது. மிக முக்கியமாக உடல் மற்றும் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்த அம்மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி மருந்துப் பொருட்களையும் தந்தது.
அருகாமையில் உள்ள ஒரு சிற்றூரில் இயங்கிவரும் ஆதரவற்ற முதியோருக்கான இல்லத்தின் கட்டுமானப்பணியில் பெரும்பங்கு வகித்தது. அது மட்டுமின்றி அவர்களுக்கு எப்போதைக்குமான சிறப்பு உதவிகளும் நண்பர்களின் இல்ல சிறப்பு தினங்களின் உணவளித்தலுமாக கரம்கோர்க்கிறது பகிர்வு.
உலகிலேயே தீராப்பிணி பசிப்பிணிதான். அது எல்லா உயிர்களையும் பீடித்த பெரும்பிணி. எந்த மருத்துவனாலும் நிரந்தமாக நீக்க இயலாத பிணி.
பெண்ணாகிய மணிமேகலையே முதன்முதலாக பசிப்பிணி போக்கும் அறப்பணி செய்தவள். அதனால்தான் வள்ளலாரும் அணையா அடுப்பேற்றி பசிநோய் தீர்த்தார். அந்த அறப்பணி இன்றுவரை தொய்வின்றி தொடர்கிறது.
“தனியொருவனுக்கு உணவிலையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று மகாகவி பாரதி பாடியுள்ளார்.
அந்தவழியில் பகிர்வு அறக்கட்டளை மூலம் தினமும் வறியோர்க்கு எளியோர்க்கு உணவு வழங்கும் நிகழ்வு இரண்டாயிரத்து சொச்சம் நாளைக்கடந்து தொடர்கிறது.
இரண்டாயிரத்தைக் கடந்த நாளென்பது கொரோனா காலத்தையும் சேர்த்தே தொய்வின்றி தொடர்ந்த பணி. காவல் துறை சிறப்பு அனுமதி பெற்று நம்மைப் போல அவர்களுக்கும் பசிக்கும் தானே? அந்த எளியோரை எப்படிக் கைவிடுவது என்ற எண்ணத்தில் உயிர் அச்சுறுத்தல் தீநுண்மி பற்றிய கவலையின்றி நண்பர்கள் செய்த பணி மகத்தானது.
இரண்டாயிரத்துச் சொச்சம் தினங்களைக் கடந்து ஆதரவற்ற எளியோர்க்கு உணவு வழங்குகிறது பகிர்வு அறக்கட்டளை. அதாவது ஆலயங்களுக்கோ வேறெங்கிலுமோ சென்று கிடைக்கும் உணவைப் பெற இயலாத உடல் சவால் உள்ளவர்களைத் தேடிச் சென்று உணவு தருவதே பகிர்வோடு இணைந்து பயணிக்கும் தோழமைகளின் வேலை.
இவையெல்லாவற்றிற்கும் மேலான ஒரு மகத்தான பணி என்னவென்றால் கல்வி கற்க வழியற்ற பொருளாதார வசதியில்லாத குழந்தைகளுக்கு குறிப்பாக அதிகப்படியாக பெண் குழந்தைகளுக்கு கற்க உதவி செய்கிறோம். இதுவரை 200 குழந்தைகளின் கல்விக்கு பொறுப்பேற்று கல்வி உதவி செய்துள்ளனர்.
இப்படியெல்லாம் சொல்வதற்கு ஒரே ஒரு நம்பிக்கை ….நண்பர்கள்தான். நண்பர்களாகளின் பங்களிப்பன்றி வேறில்லை. பொருள் தந்தால் சரியான நபருக்குச் சென்று சேருமா? என்ற ஐயப்பாடின்றி அணுகுவதே பகிர்வு பெற்ற பெரும் நம்பிக்கை. அதே போல சரியான நபருக்கு உதவ, நேரில் அவர்களின் நிலையை அறிந்து தீர விசாரித்த பிறகே செயல்படுத்துகிறார்கள். இவையெல்லாமும் அமைப்பின் நண்பர்களால் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பால் ஊர்கூடித் தேர் இழுத்தல் போல நிகழ்கிறது.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
என்ற குறளின் வரிகளுக்கொப்ப பகிர்வுக்கு இடப்பட்ட திருப்பணியாக 1990-களிலிருந்தே செய்தாலும் முறையாகப் பதிவுபெற்று செயல்படுவதையும் அறியத் தருகிறோம்.
இயக்கங்கள் என்பதோ அமைப்பு என்பதோ மக்களின் இயல்பு வாழ்க்கையின் போதாமையால் உருவாகின்றவை. இயக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சமூகச் சூழல் கெடுகிறது என்பதே பொருள்.
அரசும் அதிகாரமும் அனைத்துத்தரப்பு மக்களின் வாழ்வாதாரத்திற்கான நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும்பட்சத்தில் சமூகத்தில் சமநிலை நிச்சயமாகும். நாளுக்கு நாள் அதிகமான அமைப்புகளும் இயக்கங்களும் அதிகரிப்பதென்பது சமூகத்திற்கு தற்காலிகத் தீர்வாகத்தான் இருக்கும். தவிர நிரந்தர நிச்சயமான சமூக, பொருளாதார, கல்வி, நீதி என எல்லாத்தளங்களிலும் சமநிலை உருவாக அதிகாரத்தில் இருப்பவர்கள் சரியாகச் செயல்பட்டால் மட்டுமே சாத்தியம்.