வாழ்க்கையில் நமக்கு பலம் நாம்தான்

( கீதா இளங்கோவன் அவர்களுடன் ஓர் நேர்காணல்)

நேர்கண்டவர் : விஜயராணி மீனாட்சி

குறிப்பு:

கீதா இளங்கோவன்,  பத்திரிகையாளர், எழுத்தாளர்  சமூக மற்றும் பாலின அடிப்படையிலான பிரச்சினைகளை கையாளும் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களின் திரைப்பட தயாரிப்பாளர,   பெண் பஞ்சாயத்து தலைவர்கள் பற்றிய அவரது கட்டுரை, தமிழ் இதழான அவள் விகடனில் வெளியிடப்பட்டது , 2005 இல் பஞ்சாயத்து ராஜ் ( பசி திட்டம் -இந்தியாவிலிருந்து) பெண்களின் சிறந்த அறிக்கைக்காக சரோஜினி நாயுடு விருதையும் 200,000 ரொக்கப் பரிசையும் வென்றது.  மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றிய குறும்படமான ‘லிட்டில் ஸ்பேஸ்’ (2007) SCARF இந்தியா விருதை வென்றது. 2014 இல், சென்னை மகளிர் சர்வதேச திரைப்பட விழாவில் 2வது சிறந்த ஆவணப்படம் வென்றது .  அவரது 2010 திரைப்படமான அக்ரினைகள் (2010) கண்ணியமான வேலைவாய்ப்பைக் கண்டறிய திருநங்கைகளின் போராட்டத்தைப் பற்றியது. அவர் 2018 இல் ‘ ஆணவக்கொலை கொலை உட்பட , மாதவிடாயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் சிக்கல்கள் மற்றும் சாதிப் பாகுபாடுகள் தொடர்பாக குழந்தைகளுக்காக மூன்று உரையாடல் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிட தகுந்தது

1.வாழ்வில் எந்த புள்ளியில் உங்களின் இணையரை சந்தித்திர்கள் அந்த அனுபவம்  பற்றி?

வாழ்க்கையில் கல்லூரி காலத்தில்தான் என்னுடைய இணையர் இளங்கோவன் அவர்களை சந்தித்தேன்.  அவர் என்னுடைய சீனியர் மாணவராக இருந்தார்.  நாங்கள் இருவரும் வெவ்வேறு துறையில் பயின்றோம். நல்ல நண்பர்களாக இருந்தோம்.  அவர் ஏற்கனவே விகடன் மாணவர் பத்திரிக்கையாளராக  outsanding மாணவர்.

எனக்கும் பத்திரிகை துறையில் தான் கெரியர்  இருக்கணும் என்ற முடிவெடுத்ததால்  அவருடன் சேர்ந்து அவர் assignmentக்கு போறப்ப எல்லாம் நானும் உதவிக்காக  போனேன். நல்ல நண்பர்களா இருந்தோம். அப்புறம் ஒரு கட்டத்தில் தான் வாழ்க்கையிலும் இணையலாம் என்ற முடிவெடுத்தோம்.

2.எதிர்ப்புடன் திருமணம் செய்த பிறகு நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் ?

வாழ்க்கையில் நாங்க ரெண்டு பேருமே பொருளாதார ரீதியிலும் சரி மனதிடத்திலும் சரி சுயசார்போடு இருக்கணும் என்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தோம் அதனால் பெற்றோரை சார்ந்திருக்கணும் என்ற நிலை இல்லை.  எங்க வீட்டில் ஆரம்பத்தில் எதிர்ப்பாகத் தான் இருந்தாங்க.  அவங்க வீட்டில் ஆதரவாகத்தான் இருந்தாங்க. எங்க வீட்டில் இரண்டு மூன்று ஆண்டுகள் எந்த தொடர்பும் இல்லாம இருந்தாங்க. அதன் பிறகு அம்மா அப்பா பெரியப்பா பெரியம்மா எல்லாம் வந்தாங்க, அந்த கால கட்டத்தில் எங்க வாழ்க்கையும் இப்படிதான் இருக்கும் அவங்க எதிர்ப்பாங்க என்பதை ஏற்கனவே நாங்க எதிர்பார்த்தது தான் அதனால நாங்க வந்து எங்க வாழ்க்கையை அமைச்சிக்கிட்டோம்.  பொருளாதார ரீதியிலும் சரி சமூகம் சார்ந்தும் நாம எப்படி போகணும்னு  முதலிலேயே திட்டமிடல் இருந்ததால பெரிதாக சவால்கள் இல்ல. எங்க வீட்டையும் எங்க வாழ்க்கையும் எங்க  வேலையையும் நாங்க பார்த்துக்கிட்டு அது எந்த போக்கில் போகணும்னு நாங்களே முடிவு செய்துக்கிட்டோம்.

3.காதலும் சாதியும் இந்த சமூகத்தில் எவற்றை நிகழ்த்துகிறது?

இந்திய சமுதாயம் சாதிய சமுதாயம், சாதிய வேறுபாடுகளாலும் தீண்டாமைக் கொடுமையாலும் தான் இந்த சமுதாயம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.

அப்போ இந்த சாதி தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. சாதிதான் வந்துட்டு என்ன சாப்பிடணும் எங்க வாழணும் யாரை திருமணம் செய்யணும் எல்லாத்தையும் தீர்மானிக்குது. அதற்கு எதிராக இருப்பது தான் காதல். காதல் வந்து சாதியை உடைக்குது சாதி மறுப்பை பேசுது ஒருத்தருக்கு ஒரு காதல் என்பது அவங்க சாதிக்குள்ள அவங்களோட மதத்திற்குள்ள தான் வரணும்னு இல்ல. இயல்பா ஒரு பெண்ணுக்கு ஆணின் மீது ஈர்ப்பு வந்தாலும் அவங்க எந்த சாதியா இருந்தாலும்  அவங்களோட இணையணும் திருமணம் செஞ்சிகணும் அப்படிங்கறதால  இந்த சாதிய ஒழிக்க காதல்கள் பெருகணும். அப்படி தான் நான்  பார்க்கறேன்.

4.திருமணத்திற்கு பிறகு ஆணும் பெண்ணும் காதலின் புள்ளியில் இருந்து விலகாமல் இருவரும் சேர்ந்து சமூக பணியில் ஈடுபடுவதற்கான சூழல் எப்படி அமைந்தது ?

இந்தக் கேள்வி எங்களப் பத்தி தனிப்பட்ட முறையில் கேக்குறீங்க அப்படின்னா எங்க ரெண்டு பேருக்குமே சமூகம் சார்ந்த ஒரு அக்கறை இருந்தது காதல் என்பது எங்க ரெண்டு பேரையும் இணைக்கிற பந்தமா இருந்தது. அதுக்காக வந்து ரெண்டு பேருக்குள்ள கருத்து வேறுபாடு இருக்காதா சண்ட வராதா அப்படின்னா இல்ல வரும் டெய்லி வரும் ஆனா அதையும் தாண்டி ஒரு புரிதல் இருக்கிறதுனால சமூகப் பணிகளை செய்ய முடிஞ்சது. இணைந்தும் செய்கிறோம் தனித்தனியாகவும் செய்கிறோம்.

சோ அப்படித்தான் நான் பார்க்கிறேன்

அடிப்படையில் வந்து ஒரு புரிதல் வேண்டும்.  காதல்கிறது நம்மள ஒரு புள்ளியில் இணைக்கும் அப்புறம் வந்து இணையருக்குள்ள ஒரு பாஸ்பர புரிதலும் ஒருவர் மேல் ஒருவரோட விருப்பங்களிலும் கனவுகளிலும் ஒருத்தரின் மரியாதையும் அவங்களோட ஆளுமைய மதிக்கறதும்  அவங்களுடைய சுயத்திற்கான இடம் (Space) தருவதும் தான் முக்கியமாக நான் பார்க்கிறேன். so அவங்களோட விருப்பங்கள் வேறுவேறாக இருக்கலாம்.  என்னோட விருப்பங்கள் வேறுவேறாக இருக்கலாம்.  ஆனா அத மதிக்கிறோம் இல்ல அந்த இடத்தில் நாங்க இணையிறோம் அப்படித்தான் எங்களோட புரிதலும் பணிகளும் அமைந்தது.

5.ஆணவக்கொலை என்றவுடன் நினைவுக்கு வருவது?

ஆணவக்கொலை அப்படினு சொன்னவுடனே நினைவுக்கு வருவது சாதிதான். ஏன் வந்துட்டு குழந்தைகள் மீது குறிப்பா பெண் குழந்தைகள் மீது சமுதாயம் பெற்றோர் காட்டுகிற பாசம் என்பது நிபந்தனைக்கு உட்பட்டது

நீ என்னோட மதத்தில் சாதியில் கல்யாணம் பண்ணிகிட்டனா நான் ரொமப பாசமா உயிரா இருப்பேன் அப்படினு பெற்றோர்கள் தங்களுக்குள்ளே ஒரு கட்டுபாட்டை குழந்தைகள் மேல விதிக்கிறாங்க அப்படி இல்லனா உன்னை கொலை செய்யக்கூட தயங்க மாட்டேன் இப்படி தான் இருக்கு  ஒரு பெண் குழந்தைய தான் உயிரா வளர்த்த பெண் குழந்தைய  அடிக்கக்கூட மாட்டேன்.  என் கை மேல கூட பட்டதில்ல ஒரு தகப்பனாலும் தாயாலும் வளர்ந்து தன்னோட சாதில் இல்லாம இன்னொரு சாதியில இணையர தேர்ந்தெடுத்து திருமணம் செய்யறப்ப கொலை செய்யற அளவுக்கு எப்படி வன்மம் வருது என்ற கேள்வி வந்து நாம எழுப்பிகிட்டே இருக்க வேண்டியிருக்கு.

ஆணவக் கொலையால் பெண்கள் ரொம்ப பாதிக்கப்படுகின்றனர்  ஆண்களும் ரொம்ப பாதிக்கப்படுகின்றனர்  ஏன்னா ரெண்டுபேரையும் கொலைசெய்ய  இந்த சாதிய அமைப்பும்  பெற்றோரும் தயங்குவதில்லை  அப்ப சாதி எங்க எங்க எல்லாம் இருக்கு என்ற கேள்விகள் இன்னைக்கும் மேலோட்டமாக எழுப்பப்படுது  சாதி எங்க இருக்கு என்ற கேள்விக்கு  முகத்தில் அறையும் பதிலா தான் நான் ஆணவக் கொலையை பார்க்கிறேன்  இன்னைக்கு வரைக்கும் இது நடந்துகிட்டே தான் இருக்கு இத நம்மால் முழுக்க நிறுத்த முடியல.

அப்ப அந்த சாதித கட்டமைப்பு அந்த கொடுமையான கட்டமைப்பில் இருந்து விடுபட்டால் ஒழிய  இந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா என்று தெரியல  இன்னொரு விஷியமாக ஆணவக்கொலையை தடுப்பதற்கான சிறப்புச் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் அத ரொம்ப முக்கியமான பணியாக நான் பார்க்கிறேன்

6.பெண்ணின் மீது சமூகம் கட்டமைக்கும் கௌரவம் எது?

பெண் மீது சமுதாயம் ஒரு கௌரவத்தை ஏன் கட்டமைக்கணும் என்கின்ற கேள்வி எனக்குள் இருக்கு அவள் இயல்பாகப் பிறந்து அவளுடைய வாழ்க்கையை வாழ்வதுதான். அதுதானே மனித உரிமை ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறக்கிறது என்றால் தன்னோட விருப்பப்படி தனக்கு எப்படி வாழணும்னு தோணுதோ அப்படி விடுவது தான் மனித உரிமையாக நான் பார்க்கிறேன்.

ஆனால் இங்க பெண்ணோட கௌரவம் பெண்ணோட கௌரவம் இல்லை நாட்டோட கௌரவமா ஒரு சமுதாயத்தோட கௌரவம்  ஒரு ஊரோட கௌரவம்  ஒரு குடும்பத்தோட கௌரவம்  இதுமொத்தத்தையும் போய் பொண்ணோட கர்ப்பப்பையில் தான் வச்சிருக்காங்க இப்படி சொல்றது வந்து ரொம்ப க்ரூடாக்கூட இருக்கலாம்  உண்மை வந்து என்னவென்றால்  தன்னோட சாதியில் இருக்கற  தன்னோட மதத்தில் இருக்கற  குழந்தைதான் தன் குடும்பத்தில் பெண்ணோட வயிற்றில் வளரணும்  அந்த குழந்தை தான் தன் பெண்ணுக்கு பிறக்கணும் தன் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு அப்படிங்கறத நினைக்கிறதால எல்லாவித கட்டுப்பாடுகளும் பெண்மீது பெண்ணின் உடல் மீது விதிக்கப்படுது  அவளுடைய உடல் அவளுடையதில்லை அவளுக்கு சொந்தமானதில்லை  ஏன் என்றால் யாரை கல்யாணம் பண்ணிக்கணும் யார்கூட குழந்தை பெத்துகணும் என்கின்ற எல்லாத்தையுமே சாதிய சமுதாயமும்  சாதிய குடும்பமும் தான் தீர்மானிக்குது அதில் இருந்து பெண்ணை விடுவிக்கனும் என்றால் அவளுடைய இணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை பெண்ணுக்கு தரவேண்டும்  So, தேவையற்ற கௌரவத்தை பெண்ணோட சேர்ப்பதை மிகப்பெரிய வன்முறையாக நான் பார்க்கிறேன்.

7.அரசு பணியில் இருந்துகொண்டு சமூகப்பணி செய்ய பல்வேறு அழுத்தமும் நெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறதா? அப்படி ஏற்பட்ட போது அவற்றை எப்படி எதிர்கொண்டீர்கள்?

இல்லை. பெரிய அளவில் எங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படவில்லை. ஏன் நாங்க செய்யற சமூகப்பணி எல்லாமே  அண்ணல் அம்பேத்கர் ஏற்படுத்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது. Indian constitutionக்கு உட்பட்டு தான் செய்தோம் செய்து கொண்டிருக்கிறோம்.  இதில் பெரிய சவாலும் நெருக்கடியும் வரல. சட்டத்திற்கு உட்பட்டதா  எந்த பிரச்சனயுமில்ல

8.துப்பட்டா போடுங்க தோழி என்ற முழக்கம் எப்படிப் பார்க்கப்பட்டது?  எப்படியான எதிர்வினைகளை பெற்றது? எப்படியான மாற்றத்தைக் கொடுத்தது?

துப்பட்டா போடுங்க தோழி என்பது என்னுடைய நூலுடைய தலைப்பு அவற்றை முழக்கமாக பார்க்கவில்லை  எதைப்  பேசுதுன்னா பெண் உடல் மீதான அரசியலையும்  பெண்ணியத்தையும் பேசுது  துப்பட்டான்னு மட்டும் எடுத்துகிட்டா அவற்றை போடுவதும் போடாததும் பெண்ணோட அடிப்படை உரிமை அதை தீர்மானிப்பதும் பெண் தான். இல்ல அத கண்டிப்பாக போடணும் போடக்கூடாதுனு சொல்றதுக்கு யாருக்கும் உரிமையில்லை போட்டுத்தான் ஆகணும் என்ற நிர்பந்தம் பெண்மீது அதிகமா வைக்கப்படுகிறது.  அப்படிங்கறப்ப இந்த நூல் வந்து அதன் பின்னாடி இருக்கிற உளவியலையும் அதனால் ஏற்படுகிற சிரமங்களையும் சவால்களையும் அவளுக்கு ஏற்படுகிற உரிமை மீரல்களையும் தான் பேசுகிறது. இவை எப்படியான எதிர்வினையை பெற்றது என்றால் பெண்களும் சரி நிறைய ஆண்களும் சரி  நிறைய புரிதலைக் கொடுத்தது என்று சொன்னார்கள்  பெண்ணிய பார்வையில் அன்றாடம் சந்திக்கிறது பிரச்சனைகளையும் சவால்களையும் எப்படி எதிர்கொள்வது என்று கோடிட்டு காட்டியிருக்கு அதை எப்படி கையாள்வது என்றும் சொல்லியிருக்கு   இன்னொரு எதிர்வினை வந்து

இவை தேவையில்லை இவை பெண்களை தவறாக வழிநடத்தும் என்றும் நிறையபேர் சொன்னார்கள்.  இப்படியான இரண்டு எதிர்வினைகள் வந்தது.  இதைப்படித்ததற்கு பிறகு துப்பட்டா போடணும்னு தோன்றவில்லை என்றும் நிறைய பேர் சொன்னார்கள். நான் போடாம இருப்பது தான் வசதி என்று ஏற்கனவே நான் உணர்ந்திருக்கேன். ஆனா அப்படி போடாம இருக்கறதிற்கான தைரியத்தை இந்த நூல் தந்திருக்கு என்று சொன்னார்கள்

9.உங்கள் வாழ்வில் இதுவரை இந்த விஷயம் ஜீரணிக்கவே முடியாத விஷயம் என்று எதைச் சொல்வீர்கள்?

அப்படி அஜீரணக்கோளாறு ஏற்பட்டதாக எனக்கு தோன்றவில்லை ஏன் என்றால் நிறைய சவாலானவற்றை எதிர் கொண்டிருக்கேன்.  ஆனால் வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டு அதற்கு நாம எப்படி ரியாக்ட் பண்ணனும்னு கத்துக்கிட்டு இருக்கேன்

ஒரு விஷயம் நமக்கு நடக்குது சவாலான விஷயத்தை நாம எதிர் கொள்றோம் அந்த விஷயம் நடக்கணுமா நடக்கக்கூடாதா என்பது நம்ப கையில் இல்ல. ஆனா அந்த விஷயத்தை நம்ம எப்படி எடுத்துகிறோம் ரியாக்ட் பண்றோம் என்பது நம்ம கையில் இருக்கு.  So, அதனால வந்துட்டு இது இப்படி இருக்கா அடுத்து அதனை நோக்கி போறதால. ஜீரணிக்கவே முடியாத விஷயம்னு எதுவுமே இல்ல. பொதுவாவே வந்துட்டு பழச தூக்கி சுமக்கறதில்லை. புத்தர் சொல்வார் இல்லையா  தேவையற்ற அந்த பேக்கேஜஸ்ஸை கேரி பண்றதில்ல அதனால அப்படி எதுவும் இருக்கறதா எனக்கில்லை .

10.ஒரு பெண்ணுக்கு ஒரு பெண்ணைக் காட்டிலும் ஒரு ஆண் பக்கபலம் என்ற சமூக பார்வையை எப்படி பாக்கறீங்க?

இந்த பார்வை ஆரோக்கியமானதில்லை. ஏன்னா ஒரு பெண்ணுக்கு ஒரு பெண்ணும் பக்கபலமா இருக்கலாம் ஆணும் பக்க பலமா இருக்கலாம். எந்த உறவாக்கூட இருக்கலாம் அவங்களோட புரிதலுக்கு ஏற்ற  அவங்களுக்கு யாரப்புடிக்குது  அவங்க வாழ்க்கையில் யாருடன் இணைகிறாங்க இல்ல யாரோட வாழ விரும்பறாங்க அப்படிங்கறத அவங்க தான் தீர்மானிக்கணும்  அதனால இது தனிப்பட்ட உரிமைதான்  இன்னார்தான் பக்கபலம் என்று ஒரு எழுதப்படாத விதியை சமுதாயம் வச்சிருக்கு.  அதை வந்து மாற்ற வேண்டும் அப்படி மாற்றுபவர்களை புரிந்து கொண்டு மரியாதையுடனும் மாண்புடனும் நடத்தணும்  இன்னொண்ணு  அவரவர்களுக்கு அவர்கள் தான் பக்கபலமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் முதலில் நமக்கு பலம் நாமதான். Self love சுய பரிவு என்று சொல்வாங்கயில்லையா  அப்படிங்கறதும் நமக்கு தேவை.

11. உங்களை மிகவும் புரட்டிப்போட்ட சம்பவங்கள் , புத்தகங்கள் இப்படி எவையேனும்?

அப்படி எல்லாம்  மாத்திச்சினு வாழ்க்கையில் ட்ராமாட்டிக்கா எதும் நடக்கல.  அப்படி ஒண்ணுனு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.  சின்ன சின்னதா  அப்பப்ப என்னை பாதிச்சிகிட்டு தான் இருக்கு. சில முக்கிய முடிவுகளை எடுக்க வச்சதுனு சொல்லலாம். அப்படி ரொம்ப புரட்டி போட்ட சம்பவங்கள்னு சொல்ல முடியாது. அன்றாடம் பெண்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் இருக்கு இல்ல குடும்ப வன்முறைகள் சமுதாயத்தில் நிகழ்கின்ற வன்முறையாலும்  பெண்கள் எதிர்கொள்கின்ற துயரங்கள் அந்த சவால்கள் என்னை பாதித்துக் கொண்டே இருக்கு. அதுதான் என்னுடைய படைப்பிலும் வெளியவருகிறது என்று நான் நினைக்கிறேன்  அதுக்காக நாம ஏதாவது செய்யணும் அவங்க வாழ்க்கையை மாற்றுகிற  Transform பண்ணக்கூடிய விஷயம் எல்லாம் படைப்புகளில் வரணும் என்பது தான் என்னுடைய விருப்பமாவும் இருக்கு. புத்தகங்கள்னு ஒன்றை குறிப்பிட்டு சொல்ல முடியாது  தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்  அண்ணல் அம்பேத்காரின்  சாதியை அழித்தொழிக்கும் வழி  என ரெண்டுமே வந்துட்டு வழிகாட்டுபவையாக  தான் இருக்கு  நிறைய ஆழமாக யோசிக்க வைத்தது நிறைய சமுதாய பணிக்கான இலக்கை தீர்மானிக்க வைச்சது  இந்த மாதிரி நிறைய புத்தகங்கள் இருக்கு. குறிப்பிட்டுக் கேட்டதால்  இந்த இரண்டு புத்தகத்தைச் சொல்கிறேன்

12. இவ்வளவு பணிக்கு மத்தியிலும் வீட்டில் ஒரு தோட்டம் வைத்துள்ளதாக கேள்விபட்டோம் அங்கு செலவிடும் நேரம் மற்றும் மனநிலை பற்றி…

செடிகள் வளர்ப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும் எவ்வளவு ஒரு சின்ன இடம் இருந்தாலும் அங்க ஒரு மணி பிளாண்ட்டோ அல்லது எளிதாக வளரக்கூடிய செடியோ நான் வளர்ப்பேன் தோழர் வந்து ரயில்வே அதிகாரியாக இருப்பதால், ஏற்கனவே தோட்டம் இருந்தது so, அததான் நாங்க பராமரிச்சிட்டு வந்திருக்கோம்.  குட்டி குட்டியா கீரைகள் போடறது புதினா, மல்லி அப்புறம் வீட்டுக்குத் தேவையான  காய்கறிகள் போடறதுனு பண்ணிகிட்டிருக்கேன். மற்றபடி முழுமூச்சோட ஒரு தோட்டத்த பராமரிக்கறது இல்ல. இயல்பா இந்த மண்ணுக்கு என்ன என்ன செடிகள் வளர்ந்திட்டு இருக்கோ அது வளர்ந்திட்டு இருக்கு. அதில் நிறைய மூலிகைகளும் இருக்கு பிரண்டை, கற்பூரவள்ளி, துளசி, அப்புறம் வந்து வில்வம் இருக்கு  இப்படி சில மூலிகைகள் இருக்கு அவற்றை சமையலுக்கும் பயன்படுத்துவோம் so, எங்களோட வீட்டு தோட்டம் வந்து அந்த மாதிரிதான் இருக்கு.

பெரிதாக நேரம் ஒன்றும் செலவிடறதில்ல. வாரம் இரண்டு முறையோ மூன்றுமுறையோ செடிகளை கவனிப்பதுண்டு. உதவியாளர் இருக்கிறார்.  அவர் செடிகளை பார்த்துக் கொண்டு தண்ணீர் ஊற்றுவார். செடிகளை வைப்பது மண்ணோடும் செடியோடு செலவிடுவது தியானம் போன்ற மனநிலையைக் கொடுக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும்  அதனால அத நான் அப்பப்ப செய்வேன்.

13. இந்த இதழ் மாதவிடாய் சிறப்பிதழ் என்பதால் உங்கள் பார்வையில் மாதவிடாய் பற்றி இருபாலருக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது?…

மாதவிடாய் என்பது பெண்ணின் உடலில் நடைபெறும் இயற்கையான ஒரு நிகழ்வு. இதபத்தின அறிவியல் ரீதியான புரிதலை பெண்களுக்கும் ஆண்களுக்கும் நாம தரவேண்டியிருக்கு.  நிறைய பேருக்கு அந்த புரிதல் இல்லை.  நாம அத தரணும்.  இத அசிங்கமா அருவருப்பா தீட்டா பார்க்கக்கூடாது. அது நிறுத்தப்படணும்.  மாதவிடாய் தொடர்பான வசதிகள், குறிப்பாக நாப்கின், வாங்கக்கூடிய affordable விலையில் கிடைக்கணும்.

வசதியில்லாத பெண்களுக்கு கட்டணம் இல்லாமல் தரப்படணும்.  அதன் பிறகு அவற்றை டிஸ்போஸ் பண்ற வசதியும் செய்து தரவேண்டும். எந்த முறை படுத்தினாலும் அதன் வசதிகளை உள்கட்டமைப்புக்களை பொதுவெளியிக் நாம் உருவாக்க வேண்டும். நல்ல கழிவறை வசதியில்  அவற்றை டிஸ்போஸ் செய்யும் வசதி  அவர்களுக்கு முடியாத போது ஓய்வெடுப்பதற்கான வசதி என எல்லாம் அலுவலங்களில்  பொதுவெளியில் பெண்கள் வேலை செய்யும் எல்லா  இடங்களில்  கட்டிடவேலை செய்யும் இடங்களில்  வயல் வேலை செய்யும் இடம்  என பெண்கள் வேலை செய்யும் எல்லா இடங்களிலும் அதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

14. முன்பெல்லாம் இல்லாத அளவுக்கு  செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகிப்போனதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

இதற்கு முக்கியமான காரணமாக நான் பார்ப்பது தாய்மை என்பது ரொம்ப கொண்டாடுவதாக நான் பார்க்கிறேன் தாய்மை என்பது ஒரு இயற்கையான உணர்வு நிலை biological ஆக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தா தான் இந்த உணர்வு நிலை வரும் என்ற கருத்தை தவறானதாக நான் பார்க்கிறேன். தாய்மை என்ற உணர்வு உடல் ரீதியா குழந்தை பெற்றெடுக்காத ஒரு பெண்ணுக்கும் இருக்கும் ஆண்களுக்கும் இருக்கும். ஆனால் நமது சமுதாயம் என்ன சொல்கிறது என்றால் குழந்தை பெற்றால் தான் ஒரு பெண் முழுமையான பெண் என்கின்ற தவறான ஒரு கருத்தை கட்டமைத்து வைத்துள்ளார்கள்.

ஏனென்றால் அவர்களின் மதத்தில் அவர்களின் ஜாதியில் குழந்தை பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தத்தை பெண்கள் மீது சுமத்துகிறார்கள் அப்படிங்கிறப்ப அதற்கு  அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து

இயற்கையிலே ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியா குழந்தை பெறுவதற்கான சூழல் அற்று இருக்கும் நிலையில் கூட

அவற்றை மாற்றுவதற்காக பலவிதமான சிகிச்சை முறைகளை செய்து எப்படியாவது குழந்தை பிறக்க வேண்டும் என்கின்ற நிலையை சூழ்நிலைக்கு அழுத்தப்படுகிறார்கள்

இப்படியான சூழ்நிலைக்கு பெண்களும் ஆண்களும் தள்ளப்படுவதனால் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு செல்கிறார்கள் ஆணுக்கு ஏதாவது சிக்கல் இருந்தாலும் எப்படியாவது நீ குழந்தை பெற்று ஆக வேண்டும் என்று ஆணையும் இந்த சமுதாயம் நிர்பந்திக்கிறது கட்டாயத்திற்குள் அழுத்துகிறது அப்படிங்கறப்ப அவங்களுக்கு நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றது.  சரி அப்படியே அவர்களுக்கு குழந்தை வேண்டாம் என்று மனநிலையில் அவர்கள் இருந்தால் கூட குடும்பமும் சமுதாயமும் அவர்களை விடுவதாக இல்லை.  வாரிசு வேண்டும் என்று இந்த சமுதாயம் நிர்பந்திக்கிறது

இந்த வாரிசு என்பது தன்னுடைய ஜாதியை தன்னுடைய மதத்தை தன்னுடைய குடும்ப பெருமையை சமுதாயப் பெருமையை நிலைநாட்டுவதற்காக அந்த வாரிசு தேவைப்படுகிறது.

தனிச்சொத்துரிமை என்று காரல் மார்க்ஸ் சொல்லி இருக்கிறார் அல்லவா அவற்றிற்குத் தான் இவை வழி வகுக்கிறது வேறு எதற்கும் கிடையாது.  ஆகையால் இவற்றையெல்லாம் நாம் யோசித்து முடிவெடுக்க வேண்டும் குழந்தை என்பது மிக அற்புதமான ஒரு விஷயம் அதை பெற்றெடுக்க வேண்டும் என்று அவசியம் இருக்கிறவர்கள் அதற்காக முனையலாம்.  ஆனால் உடலியலாக சிக்கல்கள் இருப்பவர்களை நிர்பந்திப்பதில் தான் சிக்கல் இருப்பதாக நான் பார்க்கிறேன்.

15. பெண் உடல் அரசியலாக்கப்படும் சூழலில் அதை அவளே ஆயுதமாக்க (தவறான வழிமுறையாகாதவாறு) என்ன செய்யலாம்?

பெண் தன் உடலின் மீதான உரிமையை தனக்கு உள்ளது என்று உணர வேண்டும் இவற்றைப் பற்றி சொல்வது என்பது என்னடா இது  அவங்களுக்குத் தெரியாதா என்பது போன்று கூட தோன்றலாம் ஆனால் நிறைய பெண்களுக்கு தன் உடலின் மீதான உரிமை என்னவென்று அவர்களுக்கு தெரியாமல் இருக்கிறார்கள் முதலில் அவர்கள் அவர்களின் உடலின் உரிமை தனக்குத்தான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.  அவற்றை வலுப்படுத்த வேண்டும் நல்ல சத்தான உணவு முறை உடற்பயிற்சி இவற்றை மட்டுமல்ல தன்னுடைய அறிவையும் பலப்படுத்த வேண்டும் தன் உடலை பாதுகாக்கிற அறிவையும் பலப்படுத்தி தன் வாழ்வில் எடுக்கிற முடிவுகளை தெளிவை கண்டறிய அறிவையும் பலப்படுத்த வேண்டும் இவையெல்லாம் இருந்தால் தான் அவள் தன் உடலை ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்பது என்னுடைய பார்வை.

16. ஒட்டுமொத்தமாக இதற்காக அதாவது பெண்களின் மாதவிடாய் தொடர்பாக அரசு என்ன முன்னெடுப்புகளை செய்யவேண்டும். அமைப்புகளாக எப்படிக் கையாளணும்னு நினைக்கிறீங்க?

மாதவிடாய் தொடர்பான வசதிகளை அரசும் பொது நிறுவனங்களும் முன்னெடுக்க வேண்டும் உதாரணத்திற்கு நாப்கின்.

நாப்கினை எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில் விநியோகிக்க வேண்டும்.

ஏனென்றால் இந்தியாவில் நாப்கின் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது நாற்பதில் இருந்து 50% பெண்கள் தான் பயன்படுத்துகின்றனர். மீதம் இருக்கும் பெண்களுக்கு அது கிடைக்கவில்லை.  இவற்றை சுகாதாரமாக மாதவிடாயைக் கையாள்வதற்கான வசதிகளை செய்துதர வேண்டும். அதற்கு போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

நல்ல கழிவறைகளைக் கொடுக்கணும் . அதேவேளையில் அவற்றை அகற்றுவதற்கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இவற்றை அரசும் செய்யணும்.  சிவில் அமைப்பும் செய்யணும்.  உதாரணத்திற்கு ஒரு கட்டிடம் கட்டும் இடத்தில் நாப்கின்களை அகற்றுவதற்கான ஒரு ஏற்பாடு இருந்தால் தான் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படும் என்று அரசு அறிவிக்க வேண்டும்

கட்டிடம் கட்டுபவர்களும் அதற்கான வசதிகள் வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டும்.

அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் இவை போன்ற வசதிகள் இருந்தால் தான் அந்த பகுதிக்கு நாங்கள் குடிவருவோம் என்று ஒரு அழுத்தம் கொடுக்க வேண்டும். நாப்கின்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை அகற்றுவதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சிவில் அமைப்பு சார்ந்தவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் அதிகமாக நாப்கின்களை தயாரிக்கிறது அவர்கள் நாப்கின் வெண்டிங் மெஷின் வைத்திருப்பதைப்போல நாப்கின் டெஸ்ட்ராயர்  (அகற்ற அல்லது அழிக்க) போன்ற உபகரணங்களையும் வைத்திருக்க வேண்டும்.  இவை குறித்து நிறைய பேசவேண்டியது இருக்கு. சுருக்கமாச் சொல்லணும்னா  இவைதான் சொல்ல முடியும்.

17. மக்களுக்கு பணத்தின் மீதும் பதவி மீதும் அதிகரிக்கும் மோகம் எதனால் என்று நினைக்கிறீர்கள்? இதை எப்படி சரி செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

பணம் வாழ்க்கைக்கு முக்கியமானது தான்.  ஒரு கொள்ளகை முடிவு எடுக்கணும்னா பதவியும் முக்கியம். இது ரெண்டையுமே நான் நெகட்டிவ் ஆக பார்க்கல. ஆனா அதுதான் வாழ்க்கைல முக்கியம்னு நினைக்கிறதுதான் சரிசெய்யப்படணும்.  என்னன்னா உடல் மன ஆரோக்கியம் ரெம்ப ரெம்ப முக்கியம்.  பதவி இருக்கு நல்ல பணவசதி இருக்கு. ஆனா உடலௌ ஆரோக்கியம் இல்லைன்னா வாழ்க்கை  மகிழ்ச்சியா இருக்காது.  அதனால் உடல் ஆரோக்கியம் ரெம்ப முக்கியம். வாழ்க்கைல நாம எதை நோக்கிப் போறோம்னு தெளிவு வேணும்.

Let go ன்னு சொல்வாங்கள்ல இதுவும் கடந்து போகும்னு அது போல வாழ்க்கைல எதுவும்  நிரந்தரம் கிடையாது. எல்லாமே தற்காலிகம்தான். ஒருஒரு விஷயமுமே கடந்து போகும்தான்.  அந்தப் புரிதல் இருந்துட்டாலே ஒவௌவொருத்தரும் தன்னோட வாழ்க்கையை சரியாதான் அமைச்சிக்கிடுவாங்க அப்டீன்றது என்னோட கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *