கேரளா கடவுளின் தேசம். தேவதைகளின் பூமி. கேரளா என்றதும் நினைவுக்கு வருபவை முண்டு கட்டிய அழகிகள்,கதக்களி,இயற்கை, அரபிக்கடல்,ரப்பர்,பலா மரங்கள், ஜிமிக்கிப் பெண்கள்,குருவாயூர்,தாசேட்டன்,புட்டு,பயறு,பப்படம்,கடலைக்கறி,அவியல், உண்ணி அப்பம்…. சொல்லிக் கொண்டே போகலாம்.
சிறு வயதில் பெற்றோருடன் கேரளா முழுக்க சுற்றி இருக்கிறோம். இத்தனை நினைவுப் பிம்பங்களுடன் மலையாளப் படங்கள் பார்த்த அனுபவங்கள் இதோ. பிரேம் நசீர் ஷீலா நடித்த செம்மீன் படப் பாடல்கள் பிரசித்தம். அதில் வரும் கடலினக்கர போனோரே பாடல் பள்ளி ஆண்டு விழாக்களில் ஆடப்பட்டது.
ஈநாடு என்ற திரைப்படம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதன் வசனங்கள் கூட குமுதத்தில் தொடராக வந்தது. மம்முட்டி நடித்திருப்பார். அதன்பின் அரசியல் சார்ந்த மலையாளப் படங்கள் நிறைய வர ஆரம்பித்தன.
சின்ன வயதில் அவளுடே ராவுகள் என்ற சீமா நடித்த படம் வந்தது. அதன் வெற்றிக்குப் பிறகு மாமனாரின் இன்ப வெறி போன்ற தலைப்புகளில் விளம்பரங்கள் கண்ணில் படும். அந்த சமயம் மலையாளப் படங்கள் என்றால் பலான செக்ஸ், கவர்ச்சி கலந்த படங்கள் தான் என்ற பேச்சு இருந்தது.
மதுரையில் சித்திகள், மாமாவுடன் தியேட்டரில் மஞ்ஞில் விரிஞ்ச பூக்கள் பார்த்தேன். ஃபாசிலின் முதல் படம். பூர்ணிமா ஜெயராம், மோகன்லாலுக்கும் முதல் படம். ஒரு தலை ராகம் சங்கரும் நடித்திருப்பார். அடுத்தடுத்து குடும்பப் பாங்கான நிறைய படங்கள் மதுரை திரையரங்குகளில் வர ஆரம்பித்தன.
மாலைமதியில் வாசந்தி எழுதிய புகழ் பெற்ற நாவல் மூங்கில் பூக்கள் கூடவிடே என்று வந்தது. சுஹாசினி, மம்மூட்டி, ரகுமான் நடித்த வெற்றிப் படம். அதில் உள்ள ஆடி வா காற்றே என்ற எஸ். ஜானகி பாடிய பாடல் இனிமையாக இருக்கும்.
1984-85 களின் வீடியோ கேசட் பிளேயர்களின் வரவு படம் பார்க்கும் அனுபவத்தை இன்னும் நெருக்கமாக்கியது. பொதிகை தொலைக்காட்சியில் அவார்ட் வாங்கிய படங்கள் வர ஆரம்பித்தன.
மம்மூட்டி, மோகன்லால் என நூற்றுக்கணக்கான மலையாளப் படங்கள் வீட்டில் வீடியோ கேசட்டில் பார்க்கும் சுவையான அனுபவங்கள் கிட்டின. மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் படம் தச்சோளி அம்பு 78, 79 களில் வெளியானது. சிவாஜி கணேசன் எல்லாம் நடித்திருப்பார். இந்தியாவின் முதல் 3D படம் மை டியர் குட்டிச்சாத்தான் வெளியாகி சிறப்பைப் பெற்றது.
என்டெ மாமாட்டிக்குட்டி அம்மாவுக்கு தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என வந்தது. நோக்கத்தே தூரத்து கண்ணும் நட்டு பூவே பூச்சூடவா என மலர்ந்தது. 70 களின் இறுதியில் கமல் நடித்த கன்யாகுமரி என்ற மலையாளப் படத்தைத் தேடித்தேடிப் பார்த்தோம். லாரி என்ற படத்தில் இப்போதைய டிவி சீரியல் நடிகை நித்யா சிறு பெண்ணாய் கவர்ச்சி காட்டி நடித்திருப்பார். அரவிந்தனின் சிதம்பரம் திரைப்படம் ஸ்மிதா பாட்டில் நடித்ததற்காக விரும்பிப் பார்த்தோம்.
அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், ஜான் ஆபிரஹாம், பரதன், சிபி மலயில், எம். டி. வாசுதேவன் நாயர், லோகிததாஸ், பத்மராஜன், ஐ.வி. சசி, சேது மாதவன், சத்யன் அந்திக்காட், ஸ்ரீனிவாசன், கே. ஜி. ஜார்ஜ், ஃபாசில், பிரியதர்ஷன் மிகப் பிரபலமானவர்கள்களின்
எலிப்பத்தாயம், முகாமுகம், தனியாவர்த்தனம், தாழ்வாரம், அம்ம அறியான், கள்ளன் பவித்ரன், தூவானத் தும்பிகள், பஞ்சாக்னி, ஒன்னு முதல் பூஜ்யம் வரை, சாணக்யன், மணிச்சித்ரதாளு, ஷாலினி என்டெ கூட்டுக்காரி, மதிலுகள், லேகாவிட மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, பரதம், கிரீடம், ஓரிடத்து, பால்யகால சகி, ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு, ஒரு வடக்கன் வீரகதா என ரசித்து ரசித்துப் பார்த்த திரைப்படங்கள் நினைவில் இனிமையாய் உள்ளன.
குடும்பச் சூழல், குழந்தைகள் வளர்ப்பு எனப் பல வருடங்கள் ரொம்பப் பார்க்க முடியவில்லை. அங்கும் குடும்பப் படங்கள், ரொமான்ஸ், அரசியல், த்ரில்லர், ஷகிலா படங்கள் என திரைப்படங்கள் ஒவ்வொரு வடிவங்கள் எடுத்தன.
சிடிக்கள், பென் ட்ரைவ், யூ ட்யூப் காலத்தில் மறுபடியும் தேடிப் பார்க்கும் ஆர்வம் துளிர்த்தது. கோவிட் காலமும், OTT க்களின் படையெடுப்புகளும் திரை உலகிற்குப் புதுப் பாய்ச்சலைக் கொடுத்தது. அன்றைய பிரேம் நசீர் காலத்தில் இருந்து மம்மூட்டி, மோகன்லால், முகேஷ் க்குப்பின் இன்றைய ஃபஹத், துல்கர், திலிப், ப்ரித்விராஜ் என மலையாளத் திரைப்படங்களின் நேர்த்தியும், மெனக்கெடலும், ஒரு சிறிய சம்பவம், விஷயத்தைக் கூட ரசிக்கும் படி படமெடுப்பதும் உலகளாவிய கவனத்தைப் பெற்றன.
கடந்த நான்கைந்து வருடங்களாக மக்களைக் கவர்ந்த மலையாளப் படங்களைப் பற்றி எழுதினால் அதுவே பல பக்கங்களைத் தாண்டும். நண்பகல் நேரத்து மயக்கம் வரை மம்மூக்கா அசர வைக்கிறார்.
கனவுப் பாட்டிற்காக மட்டும் வரும் நாயகிகளாய் இல்லாமல் மலையாள நாயகிகள் படித்த, வேலை பார்க்கும், சுதந்திரமான, தங்கள் சுயம், லட்சியத்தை இழக்காமல், அதற்கு பாதிப்பு வந்தால் போராடத் தயங்காத அற்புதப் பெண்களாய் இருக்கின்றனர். கலையும் வணிகமும் எந்த இடையூறுமின்றி இருக்கும் படங்களில் திரை நாயகிகள் நம் மரியாதைக்குரியவர்கள்.
கலை நுட்பங்களிலும், கதை வடிவங்களிலும், காலத்திற்கேற்ப மெருகேறும் மலையாளத் திரைப்படங்கள் இன்று அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. பெண்களின் நிலை நாயகர்களுக்கு சரிசமமாய் இருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களிலும் இந்நிலை எப்போது வரும் என ஏக்கமாக இருக்கிறது. அமைதி, எளிமை, இனிமை , அற்புதம், ஆச்சரியம் என ஒரு திரை ரசிகரின், ரசிகையின் ஆன்மாவில் நுழைந்து ரசனையான ஆத்ம அனுபவத்தைக் கொடுக்கின்றன.