தொல்காப்பியம் வேர் முதல் கிளை வரைசொல்லிய முறையில் சொல்லவந்த பனுவல்

எழுத்தாளரும், தமிழ் ஆய்வாளருமான முனைவர் ரா.சிலம்பரசன் எழுதிய “சொல்லிய முறையால்” என்னும் நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் டிசம்பர் 2025இல் முதல் பதிப்பாக வெளியிட்டது. தொல்காப்பியத்தை வெறும் இலக்கணச் சட்டகமாகப் பார்க்காமல், தமிழரின் வாழ்வியல், அறிவியல் மற்றும் சமூகப் படிநிலைகளைப் பதிவு செய்த ஓர் அறிவுப் பெட்டகமாக இந்நூல் முன்வைக்கிறது. தொல்காப்பியர் ஏன் இப்படி எழுதினார்? என்னும் நுண்மையான தேடலின்வழி, இந்நூலாசிரியர் தொல்காப்பியத்தைப் புதியதொரு நவீனப் பார்வையில் அணுகியுள்ளார். இருபது ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட இந்நூல், தொல்காப்பியத்தின் பன்முகத்தன்மையை ஆழமாகப் பதிவு செய்கிறது.
தொல்காப்பியரை ஓர் இலக்கண ஆசிரியர் என்ற வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது என்பதை இந்நூல் அழுத்தமாகப் பதிவு செய்கிறது. அவர் கவிஞராகவும், ஆய்வாளராகவும், தீர்க்கதரிசியாகவும், திறனாய்வாளராகவும், தத்துவவாதியாகவும் பன்முக ஆளுமையுடன் திகழ்ந்திருக்கிறார் என்பதை இந்நூல் பல சான்றுகளோடு மெய்ப்பிக்கிறது.
கவிஞர்: “வண்டு இழையே வள்ளி பூவே” என அழகியல் உணர்வோடு படைப்பைப் பார்க்கிறார்.
ஆய்வாளர்: “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு” என இயற்கைக்கும் மொழிக்கும் இடையிலான தொடர்பை நுட்பமாக ஆய்கிறார்.
திறனாய்வாளர்: “மாத்திரை முதலா அடிநிலைகாறும் நோக்குதற் காரணம் நோக்கெனப்படுமே” எனக் கவிதையை அணுகும் முறையையும், திறனாய்வுக்கான இலக்கணத்தையும் வகுக்கிறார்.
தத்துவவாதி: “காமம் சான்ற கடைக்கோட் காலை” என வாழ்வின் உச்சகட்ட தத்துவத்தைப் பதிவு செய்கிறார்.
தீர்க்கதரிசி: மொழியின் நுணுக்கங்களை எதிர்காலச் சந்ததியினரும் உணரும் வண்ணம் விதிகளை வகுத்திருக்கிறார்.
இப்படியாக, தொல்காப்பியர் வெறுமனே சொற்களைக் கையாளவில்லை, மாறாக வாழ்வியலின் அனைத்துக் கூறுகளையும் ஒரு தர்க்கச் சங்கிலியால் பிணைத்திருக்கிறார் என்பதை இந்நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.
பன்னிருபடலத்திற்கும் தொல்காப்பியருக்கும் இடையேயான தொடர்பு குறித்து நிலவும் வரலாற்றுச் செய்திகளை இந்நூல் விமர்சனப் பூர்வமாக அணுகுகிறது. பன்னிருபடலத்தின் முதல் படலமான வெட்சிப் படலம் தொல்காப்பியரால் செய்யப்பட்டது என்பது தமிழ் உலகில் வழங்கும் ஒரு நம்பிக்கையாகும். ஆனால், நூலாசிரியர் இதிலுள்ள தர்க்க ரீதியான முரண்பாடுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார்.
தொல்காப்பியர் வெட்சித் திணையை, “வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்” என்று வரையறுக்கிறார். இதன்படி, வேந்தனின் கட்டளைப்படி வீரர்கள் ஆநிரைகளைக் கவர்கின்றனர். ஆனால், பன்னிருபடலமோ, “தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று அன்ன இருவகைத்தே வெட்சி” எனக் கூறி, வேந்தனின் ஏவல் மட்டுமல்லாது, வீரர்கள் தாமாகச் சென்று ஆநிரைகள் கவர்தலையும் வெட்சி என விவரிக்கிறது. இவ்வாறு கருத்து முரண்பாடு இருப்பதால், பன்னிரு படலத்தின் வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியர் இயற்றியிருக்க வாய்ப்பில்லை என்பதை நூலாசிரியர் நிறுவுகிறார். இது தொடர்பான மேலும் பல ஆய்வுக் கருத்துகள் தொல்காப்பியத்தின் தனித்தன்மையையும், முந்தைய அல்லது பிந்தைய நூல்களோடு தொல்காப்பியத்தை ஒப்பீடு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய நுணுக்கங்களையும் இந்நூல் விளக்குகிறது.
தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்பது நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு புனைவு. சிறப்புப் பாயிரங்கள் பலவும் இதனை வலியுறுத்தினாலும், வரலாற்று அடிப்படை மற்றும் கால அடிப்படையில் இது ஏற்புடையதன்று. அகத்தியம் என்ற முதல் சங்க இலக்கணத்திற்கும், தொல்காப்பியத்திற்கும் இடையே மிக நீண்ட கால இடைவெளி உள்ளது. இருவரும் சமகாலத்தவர் என்பது வரலாற்றுச் சான்றுகளுக்குப் புறம்பானது. நூலாசிரியர் இதனை மறுப்பதற்கான வலுவான காரணங்களை முன்வைக்கிறார். தொல்காப்பியர் அகத்தியத்தை நன்கு அறிந்தவராக இருக்கலாம். ஆனால், தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்பதற்கு எந்தவிதச் சான்றும் தொல்காப்பியத்தில் இல்லை. தொல்காப்பியத்தின் பாயிரத்தில் அகத்தியர் பற்றிய செய்திகள் இல்லை. நூலின் குறிப்புகளிலும் அகத்தியரைப் பற்றியோ அல்லது தனது ஆசிரியர் பற்றியோ தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. எனவே, ஆசிரியர் – மாணவர் என்ற உறவு வெறும் கதைகளே தவிர, அறிவார்ந்த உண்மையன்று என்பதை இந்நூல் வலுவாகப் பதிவு செய்கிறது.
தொல்காப்பியர் ஒரு சிறந்த அறிவியலாளர் என்பதற்கு இந்நூலிலுள்ள “அறிவியல் கூறுகள்” எனும் கட்டுரை சான்றாக அமைகிறது. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்னும் ஐம்பூதங்களின் தர்க்கத்தோடு, நிலவியல் (நிலம், பொழுது), வானியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் உளவியல் எனத் தனது காலத்திலேயே முற்போக்கான அறிவியல் பார்வையைத் தொல்காப்பியர் முன்வைத்துள்ளமையை இந்நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார். மேலும், புலவர் குழந்தையின் உரையை முன்னிறுத்தி, அக்காலச் சமூகக் கட்டமைப்பில் நிலவிய அந்தணர், ஐயர், பார்ப்பார் மற்றும் ஆரியர் மணமுறை குறித்த கருத்தாக்கங்களை விமர்சனப் பூர்வமாக இந்நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார்.
‘சொல்லிய முறையால்’ என்னும் இந்த நூல் தொல்காப்பியத்தை வெறும் பழைய இலக்கண நூலாகப் பார்க்காமல் பண்பாடு, அறிவியல், சடங்கு, வாழ்வியல் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஒரு தற்கால அறிவுப் பேழையாக மாற்றிக் காட்டுகிறது. தொல்காப்பியத்தின் வேர்களில் தொடங்கி அதன் கிளைகளைப் பிரித்துப் பார்க்கும் இந்நூல், நவீனத் தமிழ் ஆய்வுகளில் சிறப்புடையதாக அமைகிறது. “எப்படிச் சொல்லப்பட்டது?” என்பதைவிட, “எதன்பொருட்டு இவ்வாறு சொல்லப்பட்டது?” என்னும் இந்நூலின் மையநோக்கு வாசகர்களைத் தொல்காப்பியத்தின் புதிய பரிமாணங்களுக்கு அழைத்துச் செல்கிறது. தொல்காப்பியம் குறித்துத் தமிழுலகில் எத்தனையோ நூல்களும், விமர்சனக் கட்டுரைகளும் இருந்தாலும் அந்தவரிசையில் தனித்துவமான நவீனமுறையில் தொல்காப்பியத்தைப் புரியவைக்கிறது சொல்லிய முறையில் சொல்லவந்த இப்பனுவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!